ரஷ்யப் புரட்சிக்கு முந்தைய ஜார் மன்னராட்சியின் கீழ் மக்கள் கல்வி மறுக்கப்பட்டும், அறியாமையிலும் அன்றாட வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருந்தனர். மகத்தான ரஷ்யப் புரட்சி மலர்ந்த கையோடு மக்களின் கல்வி மேம்பாட்டிற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையோடு சோவியத் பாட்டாளிகளின் அரசு செயல்பட்டது.
அப்போதைய சோவியத் ரஷ்யாவின் கிழக்காசியப் பகுதியில் ஒரு மலையடிவாரத்தில், பரந்த பீடபூமியில், பல்வேறு கணவாய்களிலிருந்து சலசல வென்று ஒலியெழுப்பியபடி மலையருவிகள் வந்து குவியும் இடத்திலிருந்தது குர்கூரெவு கிராமம். இதன் கீழே மஞ்சள் சமவெளி எனப்படும் பிரமாண்டமான கஸாக் ஸ்டெப்பி புல்வெளி நிலம் பரந்து கிடக்கிறது. இந்த கிராமத்துப் பள்ளிக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பெற்று அங்கு வருகிற கல்வித் துறை அறிஞர் அல்தினாய் சுலைமானவ்னா என்னும் பெண்மணி விழாவிலிருந்து திடீரென குழப்பமும், தடுமாற்றமும் மிக்க மனநிலையுடன் வெளியேறிப் போய் ரயிலேறி விடுகிறார். அதே விழாவிற்கு வந்திருந்த பிரபல ஓவிய ஆசிரியரும், இலக்கியப் படைப்பாளியுமான ஒரு இளைஞர், அல்தினாயின் பதற்றத்திற்கான காரணத்தை அறியத் துடிக்கிறார். நகரத்திற்குத் திரும்பிச் சென்ற சில நாட்களில் அல்தினாய் இந்த இளைஞருக்கு எழுதுகிற தன் வரலாற்றுக் கடிதத்தின் வழியாக இந்த முதல் ஆசிரியர் என்னும் இக்குறுநாவல் எழுகிறது.
பள்ளியாக மாறும் குதிரை கொட்டகை
1924 ஆம் ஆண்டுகளில் சோவியத் அரசால் இந்தக் கிராமத்தின் குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுவிக்க அனுப்பப்பட்ட இளைஞன் தூய்ஷன். இவனும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவன்தான், ஆனால் இவன் தந்தை காலத்திலேயே வேலை தேடி ஊரைவிட்டு வெளியேறியவர்கள். தூய்ஷன் தன் நோக்கம் பற்றி கிராமத்து மக்களிடம் தெரிவிக்க, அதுவரை கல்வியைப் பற்றி அறியாத அந்த கிராமத்தினர் “படிப்பா… பள்ளிக்கூடமா… எங்களுக்கு எதுக்கு இதெல்லாம்?” – எனத் துக்கி எறிந்து விடுகிறார்கள். ஆனால் இதைக்கண்டு தூய்ஷன் சோர்ந்து போய்விடவில்லை.
அந்த கிராமத்தின் மலை மேல் ஒரு குதிரை கொட்டகை இருந்தது, புரட்சியின் விளைவாய் பணக்காரன் ஒருவன் விட்டுச்சென்ற குதிரைக்கொட்டகை அது. பல நாட்கள் அதைச் சீரமைக்கும் பணியில் காலை முதல் மாலை வரை தன்னை தூய்ஷன் ஈடுபடுத்திக் கொள்கிறான். பின் கிராமத்து மக்களிடம் அரசின் ஆணையினைக் காட்டி பிள்ளைகளைப் பள்ளிக்கு வரவழைக்கிறான். அதுவரை ஸ்டெப்பி புல்வெளியில் கால்நடைகளின் எருக்களைச் சேகரித்துக்கொண்டிருந்த அக்கிராமக் குழந்தைகளுக்கு அப்போதுதான் கல்வியின் வாசம் படர்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இத்தனையும் சாதித்துக் கொண்டிருக்கும் தூய்ஷன் முறையாகக் கல்வி பயின்றவரில்ல. குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கும் கல்வி உளவியலும் அறிந்தவரில்ல. ஓரளவுக்கே எழுத்துக் கூட்டிப் படிக்க அறிந்தவர், ஆனால் தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் தன்னிடம் உள்ள குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து அவர்களை உயர்த்துவதற்கு பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டுக் கொண்டிருந்தார் தூய்ஷன். தங்களிடம் அன்பு காட்டிய தனது ஆசிரியரிடம் மாணவர்களும் மிகவும் ஒட்டுதலுடன் இருந்தனர்.
தனது தாய் தந்தையை இழந்தபிறகு தன் சித்தி வீட்டில் வளரும் மாணவி அல்தினாய் சுலைமானாவ் அப்பள்ளியில் பயில்கிறார். கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வமும், வேகமும் மற்றும் அப்பள்ளியிலேயே வயதில் மூத்த மாணவியும் அவராவார். இவ்வாறு நாள்கள் அப்போது அனாதைப் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என அல்தினாயின் சித்தி ஒரு வயதானவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறாள். இதனை அறிந்த ஆசிரியர் தூய்ஷன் அல்தினாயையை அவளின் சித்தியிடம் இருந்து காக்கும் முயற்சியில் கடுமையாகத் தாக்கப்படுகிறார். உடைந்த கையுடன் இரத்தம் வழியக் கடத்திச் செல்லப்படும் அல்தினாயிடம் “ஐயோ சிறு பெண்ணே இந்தக் கழுகுகளிடம் இருந்து உன்னைக் காப்பாற்ற முடியவில்லையே” என மனதால் குமுறும் அவரது சோகம் மனதைப் பிசைகிறது. சில நாட்களில் சோவியத் செம்படையுடன் சென்று சீரழிக்கப்பட்ட அல்தினாய் சுலைமானாவை மீட்டு வருகிறார் தூய்ஷன். பின் அல்தினாய் நகரத்திற்குக் கல்வி பயில அனுப்பி வைக்கிறார்.
நினைவுகளை சுமந்து பயணித்த ரயில்
நகரத்திற்குச் செல்லும் மாணவியான அல்தினாவை மிகச்சிறந்த கல்வி தந்து வளர்த்தெடுக்கிறது சோவியத் பாட்டாளி வர்க்க அரசு. விடாமுயற்சியுடன் உழைத்து கல்வி பயின்று பல்கலைக்கழகப் பட்டம் பெற்று, பின் பேராசிரியரும், துறையின் தலைவரும் ஆகிறார் அல்தினாய். அவள் நகரத்தில் கல்வி பெறும்போதும் கடிதம் மூலம் தனது முதல் ஆசிரியனைத் தொடர்பு கொள்ள முயல்கிறாள். ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒருநாள் அல்தினா அவள் ஆரம்பக் கல்வி பயின்ற கிராமமான குர்கூரெவுக்கு புதிய பள்ளிக்கட்டிடம் திறப்பு விழாவுக்கு அவள் அழைக்கப்படுகிறாள். இப்போது அந்த கிராமத்தில் கல்வி செழித்து வளர்ந்து பல பட்டதாரிகள் உருவாகி இருந்தனர்.
இந்தக் கல்வி வளர்ச்சிக்கெல்லாம் விதை தூவிய தனது முதல் ஆசிரியர் தூய்ஷன் பற்றிய நினைவுகளில் மூழ்குகிறாள். ரயிலில் செல்லும்போது குழந்தை பருவத்தில் தானும் தனது ஆசிரியர் தூய்ஷனும் சேர்ந்து நட்ட பாப்ளர் மரங்களை நினைத்துப் பார்த்து மனமுருகுகிறாள். பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் மேடையில் அல்தினாய் அமர்ந்திருக்கிறாள். அப்போது இந்தப் பள்ளியின் திறப்பு விழாவிற்காகப் பழைய மாணவர்கள் அனுப்பிய தந்திகளை முதியவர் ஒருவர் குதிரையில் விரைவாக வந்து தந்துவிட்டு தனது அடுத்த பணியைக் கவனிக்கச் செல்கிறார்.
அவரைப் பற்றிய பேச்சு அங்கு எழுகிறது. அதிலிருந்து வந்து சென்றவர் இங்கே இத்தனை படித்தவர்கள் உருவாகவும், பிரமாண்டமாக இப்பள்ளிக்கூடம் எழும்பவும் காரணமான தனது முதல் ஆசிரியர் தூய்ஷன் என்பதை உணர்ந்து துடித்துப் போகிறாள். கல்வியின் கதவுகளை குர்கூரெவு கிராமத்திற்குத் திறந்து புதிய உலகத்தைக் காட்டிய தூய்ஷன் , அதே கிராமத்தில் கடமை தவறாத தபால்காரராகப் பணியாற்றி வருவதையும், அவர் இந்நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு முதல் மரியாதை செய்யப்படாததையும் குறித்து மிகுந்த மன வருத்தம் அடைகிறாள். ஆகவேதான் பள்ளி திறப்பு விழா நிகழ்விலிருந்து பாதியிலேயே அல்தினாய் வெளியேறுகிறாள். சீரழிக்கப்பட்ட தன் வாழ்வை மீட்டு நகரத்தில் கல்வி அளித்து புதிய வாழ்வை அளித்த தன் முதல் ஆசிரியன் தூய்ஷனின் நினைவுகளைச் சுமந்து நிற்கிறது இந்நூல்.
இது எண்பது பக்கங்களே ஆன குறு நாவல், ஆனால் இதை படித்து முடித்ததும் என் மனதில் எழுந்த எண்ண அலைகள் அடங்க வெகுநாட்களானது. நீங்களும் படித்துப் பாருங்களேன் என் அனுபவம் பொய்யில்லை என்பதை உணர்வீர்கள்!
புத்தகத்தின் பெயர் – முதல் ஆசிரியர்
ஆசிரியர் – சிங்கிஸ் ஜத்மாத்தவ்.
ஆசிரியர் – பூ. சோமசுந்தரம்
பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் – 80
விலை – ₹50


சிறப்பான பதிவு. சற்றொப்ப 35 ஆண்டுகளுக்கு முன் வாசித்த கதை. மீண்டும் வாசித்த உணர்வை ஏற்படுத்திய கட்டுரை. காரல் சே எழுத்து வசப்பட்டு இருக்கு. தொடர்ந்து எழுதவும்.
சிறப்பான பதிவு. சற்றொப்ப முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வாசித்த புத்தகம். மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் புத்தகம். சோஷலிசப் புரட்சி , புரட்சியின் பண்பாட்டு மேன்மையை அழகாக விவரிக்கும் கதை. காரல் சே எழுத்து மீண்டும் வாசித்த புத்துணர்வை தந்தது. காரல் சே விற்கு எழுத்து வசப்பட்டு இருக்கு. தொடர்ந்து எழுது காரல் சே.