முதல் ஆசிரியர் – நூல் அறிமுகம்
முதல் ஆசிரியர் குறுநாவலை வாசிக்க தொடங்கிய போது ஆசிரியர் என்றால் அதிகம் படித்தவராக இருப்பார் என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் இந்த ஆசிரியர் அதிகம் படித்த ஆசிரியர் அல்ல அதிக பேரை படிக்க வைத்த ஆசிரியர்.
ஆம் படிப்பு வாசமே இல்லாத ஒரு கிராமத்தில் வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று படிக்க வைத்தார். அவர் ஒன்றும் படிப்பில் பல பட்டங்களை பெற்றவர் அல்ல. அவருக்கு தெரிந்த அடிப்படைக் கல்வியை இந்த கிராமத்து மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பணியை தொடங்குகிறார்.
ஆனால் அவர் நினைத்தது சுலபமாக நடக்கவில்லை. ஆம் துய்ஷேன் அக்கிராமத்தில் படிப்பு ,பள்ளி போன்றவற்றை பேசியபோது யாருக்கும் புரியாமலேயே இருந்தது.
விவசாயம் செய்யும் நமக்கு எதற்கு படிப்பு .கல்வி எல்லாம் அதிகாரிகளுக்கு தேவையானது. இது போன்று பல குரல்கள் தங்களின் அறியாமையை வெளிப்படுத்தினர் அக்கிராமத்து மக்கள்.
இறுதியாக துய்ஷேன் சோவியத் ஆட்சியின்முத்திரையிடப்பட்ட குழந்தைகளின் படிப்பை பற்றி எழுதப்பட்ட ஒரு தாளை எடுத்து நீட்டுகிறார் .சோவியத் ஆட்சிக்கு நீங்கள் எதிராக இருக்கப் போகிறீர்களா என்று கேட்டபின் மக்கள் அமைதி காத்து அதை வரவேற்றனர்.
இருப்பினும் மக்கள் யாரும் அவருக்கு உதவ முன் வரவில்லை. துய்ஷேன் தன்னந்தனியே குன்றின் மீது கிடந்த ஒரு குதிரை கொட்டடியை பள்ளிக்கூடமாக மாற்றுகிறார். அப்பள்ளியில் லெனின் படத்தை வைத்து முதலில் பாடத்தை ஆரம்பிக்கிறார். இவர் ஒரு முதல் கம்யூனிஸ்ட்டும் கூட.
வீடு வீடாகச் சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைக்கிறார் அதில் அல்தினாவும் ஒருத்தி. அப்பா அம்மா கிடையாது .சித்தப்பா ,சித்தி வீட்டில் வசித்து வருகிறாள். பல எதிர்ப்புகளை தாண்டி பள்ளிக்கூடத்திற்கு செல்கிறாள். ஆனால் அவள் சித்திக்கு அவள் பள்ளிக்கு செல்வது அறவே பிடிக்கவில்லை.
பள்ளி ஆரம்பிப்பது மட்டும் பிரச்சனை அல்ல ஆசிரியர் துய்ஷேன்க்கு .அங்கு வரும் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதும் பெரும் சவாலாக இருந்தது. பெரும் பனி காலம் அது. உறைகின்ற பனியில் குழந்தைகள் தண்ணீரில் நடக்க முடியாது அவர்களை தன் தோள் பட்டையில் சுமந்து பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று மறுபடியும் கரைக்கு மறுபுறம் கொண்டு வந்து சேர்ப்பார்.
பள்ளிக்கு வரும் குழந்தைகளில் சற்று வயது பெரியவள் அல்தினா. ஒரு நாள் வகுப்பில் இருக்கும் போது தன் சித்தி சில அடியாட்களுடன் வந்து ஆசிரியரை அடித்து அல்தினாவை கடத்திச் செல்கிறாள்.
ஆசிரியர் எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் அல்தினாவை காப்பாற்ற முடியவில்லை. தன் சித்தியின் தவறான எண்ணத்தினால் 15 வயதில் அல்தினா தன்னுடைய கற்பை இழக்கிறாள்.
இதற்கு மேல் நாம் அடிமைப்பட்டு இருக்கக் கூடாது .இறந்தாலும் பரவாயில்லை தன்னை சிறைபிடித்த அயோக்கியர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என நினைக்கும் போது ஆசிரியர் துய்ஷேன் காவலாளர்களுடன் வந்து அல்தினாவை காப்பாற்றுகிறார்.
மேலும் அவளை நகரத்திற்கு அனுப்பி வைத்து (கம்யூனிஸ்ட் உதவியுடன்) படிப்பு ,கல்வி என்ற ஆயுதத்தை அவளிடம் புகுத்துகிறார். ஆசிரியர், மாணவி என்ற உறவையும் தாண்டி சொல்ல நினைத்திருந்து ,சொல்ல முயன்று ,முடியாமல் போன ஒரு கதை இவர்களுக்குள் இருந்தது மிக அழகு.
காலங்கள் உருண்டோடுகின்றன. சொந்த கிராமத்திற்கு ஒரு விஞ்ஞானியாக மாறி சிறப்பு விருந்தினராக வருகை தருகிறார் அல்தினா. இங்கே தன்னுடைய முதல் ஆசிரியரை சந்தித்தாரா? இந்த கிராமத்திற்கு தான் என்ன செய்ய நினைக்கிறார் போன்ற இந்த அழகான நினைவுகளோடு இந்நாவலை முடிக்கிறார் ஆசிரியர்.
நூலின் தகவல்கள் :
புத்தகம் : முதல் ஆசிரியர்
ஆசிரியர் : சிங்கிஸ் ஐத்மாத்தவ்
தமிழில் : பூ.சோமசுந்தரம்
வெளியீடு : இந்திய மாணவர் சங்கத்துடன் புக்ஸ் ஃபார் சில்ட்ரன்- பாரதி புத்தகாலயம்
நூலிப் பெற : https://thamizhbooks.com/product/muthal-aasiriyar/
நூல் அறிமுகம் :
நளினி மூர்த்தி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


துய்ஷேனையும் அல்தினாவையும் மட்டுமல்ல அந்த பாப்ளார் மரங்களையும் எத்தனை ஆண்டுகளானாலும் மறக்க முடியாது.