சா.சமீமா சிரின் எழுதிய "முதியோர்" கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

“முதியோர்” கவிதை – சா.சமீமா சிரின்

“முதியோர்” கவிதை

வாசிக்கப்படாத அறிவுக்களஞ்சியம்!
வார்த்தைகளில்
ஆயிரம் அனுபவப் பாடம்!

அன்பு ததும்பும் கனிந்த நெஞ்சம்!
ஆறுதல் தேடும் வயது கொஞ்சம்!

உயரமான நடை வண்டியாய் ஊன்றுகோல் ஒரு பக்கம்!
இவர்களும் மழலையின் மறுபக்கம்!

தத்தித்தத்தி நடை பழகியதோ
ஒரு காலம்!
தட்டு தடுமாறுது கால்கள் வாழ்க்கையோ வட்டம் போலும்..

முதியோர் நாங்கள்
கோடை விடுமுறைக்குக்
காத்திருப்போம்.
பேரன் பேத்திகளின்
வரவைப் பார்த்திருப்போம்.

பேய்களின் சுண்டுவிரல்களை வெட்டிய
பெரிய மீசை தாத்தாக்களிடமிருந்து
வீரத்தை நன்றே கற்கலாம்.

வெண்மை காகங்களையும்
பாடும் கழுதைகளையும்
பறக்கும் கம்பளங்களையும்
ஆயாவின் கதைகளில்
கேட்டு வியக்கலாம்.

சுருக்குப்பைகளில்
கசங்கிய பணத்தாளும்
சற்று கருத்த சில்லறையும்
அன்போடு பேரன்களின் கைகளில் அடைக்கலமாகும்.

ஆயிரம் ரூபாய் இன்று ஜி பே வில்
அனுப்ப ஆள் இருந்தாலும்
அந்த அன்பின் வாசம்
எதிலும் அடிக்காமலே போகும்.

எண்ணெய் வடிய
அதிரசம் சுடுவாள் ஆச்சி!
அந்த சுவையெல்லாம்
பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் காணாமலே போச்சு..

மொட்டை மாடியில்
நிலா உறங்காது
நித்தம் ஆயாவின் கதைகளில் ஆச்சரியப்படும்.

பாவம்!
நம் தலைமுறை மட்டும்
இப்போது தனிமையில் இல்லை.
நிலாவும்
கதை சொல்லும் ஆயாக்களை தேடி சோர்ந்து போகும்.

அன்று தூக்கி வளர்க்க
பல கைகள் இருந்தன.
அதனால் பிள்ளை வளர்ப்பு
பிரச்சனையாகவே இல்லை

முற்றத்தில் நீ ஓடி விளையாட
உனக்கு சோறு ஊட்டியவளை முதியோர் இல்லத்தில் தள்ளுகிறாய்.

ஆனால் உன் வீட்டுக்கு
அன்னை இல்லம் எனப் பெயர் பலகை இடுகிறாய்.

இக்கட்டான சூழலில்
நீ தீர்வின்றி தவிப்பாய்.
முதியோரை நீ காத்திருந்தால் அவர்களின் ஆலோசனையால்
அதை எளிதில் கடப்பாய்.

சுருங்கிய தோளில்
சுமந்த கதைகள் ஆயிரம்.
கூன் விழுந்த முதுகுகள்
குடும்ப பாரம் தாங்கிய தடயங்கள்.

நீ நடந்த பாதை எல்லாம்
முட்களை அவர்கள் மிதித்தனர்.
நீ உயரே பறப்பதற்காய்
சிறகாய் அவர்கள் தேய்ந்தனர்.

அதையெல்லாம் நினைவில் வைத்திடு!
அன்போடு அவர்களை காத்திடு! முதியோர் இல்லத்தில்
அவர்களை தள்ளாதே!
வாழ்க்கையே ஒரு சகடக்கால்
என்பதை மறவாதே!

****************************************************************

📚 எழுதியவர் : 

✍🏻 சா.சமீமா சிரின்
இராமநாதபுரம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *