மூதூர்க் காதை - நூல் அறிமுகம் , Mudhoorka Kaadhai Short Stories Book Written By Ayyanar Edadi - Yaappu Publication - https://bookday.in/

மூதூர்க் காதை – நூல் அறிமுகம்

மூதூர்க் காதை – நூல் அறிமுகம்

 

நூலின் தகவல்கள் : 

நூல் : மூதூர்க் காதை
சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர்  : அய்யனார் ஈடாடி

வெளியீடு :  யாப்பு

முதல் பதிப்பு  : ஜூன் 2024

பக்கம் : 84

விலை : ரூ .90

 

கிராமத்துக் காத்து உள்ளே புகுந்து விளையாடுகிறது

புதுப்புது கிராமத்துச் சொற்கள் பேசிப் பேசியே அன்பைப் பெருக்கும் உறவுகள் தொலைந்துபோன உறவு முறைகள் மொழியிலிருந்து தேய்ந்து போன பேச்சு வழக்குச் சொற்கள் திருவிழா கொண்டாட்ட முறைகள் கடவுள் மீதான பக்தியின் காரணமாக மக்களின் மனதில் இன்னும் மிச்சமிருக்கும் பயம் கலந்த மரியாதைத் தருணங்கள் சமூகத்தை முன்னெடுக்கத் தேவையான அறத்தை பறைசாற்றும் எளிய மனிதர்கள் கல்வி அறிவை விட அனுபவத்தின் வழியே சுற்றுப்புறத்தை உணரத் துடிக்கும் பண்பாட்டு அசைவுகள் எல்லா உயிர்களையும் நேசிக்கும் முரட்டுத்தனத்துக்குள் இழையோடும் நேசம் என தான் அனுபவித்த கண்டு ரசித்த கேட்டு இளைப்பாறிய கிராமத்தை உயிர்ப்புடன் நமக்கு படைப்பாக்கி இருக்கிறது மூதூர்க் காதை நூல்.

எல்லா கதைகளிலும் தவறாது இடம்பெறும் திருவிழாக் கொண்டாட்டங்கள் உறவுகளுக்குள்ளான கண்ணுக்கு புலப்படாத அன்பு வலை நாம் மறந்து போன உழவின் கலைச் சொற்கள் நம்மை இன்னொரு கிராமத்தை நோக்கி இழுத்துச் செல்கின்றன. பொறியாளராக வேலை செய்யும் எழுத்தாளரின் மூளைக்குள் கிராமத்தின் அப்பத்தாவோ அமச்சியோ புகுந்து இக்கதைகளை எழுதி இருக்கக்கூடும். தன் மனதுக்குள் மறைந்து போகாத கிராமத்தின் உயிர்ப்பை நமக்குள்ளும் கடத்தி இருக்கும் இந்த கதைகளுக்குள் ஒளிந்து கிடக்கிறது ஒவ்வொருவருக்குமான கிராமத்தின் வாழ்வியல் நினைவுகள்.

இவருக்கு எல்லா கதைகளும் பளார் என விடிந்தது அந்த வெளிச்சத்தில் வசவுகளும் திட்டுகளும் கூட கதைக்கு அடித்தளம் இட்டு விடுகின்றன. கதைகளில் உலவும் பெயர்கள் அனைத்திலும் மண்வாசனை தூக்கலாக வீசுகிறது

நூலில் இடம் பிடித்துள்ள கிராமத்துச் சொற்களுக்கு நாம் கலைக்களஞ்சியத்தில் அர்த்தம் தேடலாம் இத்தகு சொற்கள் இன்னும் எங்கோ ஓர் மூலையில் குக்கிராமங்களில் உழவை மூச்செனக் கொண்ட குடிமக்களிடையே புழங்கியபடிதான் இருக்கின்றன என்று நம்புகிறோம்.

14 கதைகளிலும் கிராமத்தின் எதார்த்தத்தையும் அதையே தங்களின் வாழ்வியலாகக் கொண்டு நடமாடும் எளிய மனிதர்களின் கதைகளையும் வடித்திருக்கும் எழுத்தாளர் ஒவ்வொரு கதையிலும் கிராமத்துப் பண்பாட்டையும் மக்களின் அன்றாட வாழ்வின் உன்னதங்களையும் விவரித்துச் செல்கிறார். தப்பு செய்தால் தண்டனை என்னவென்றால் கண்மாயை சுத்தம் செய்யறதும் வாய்க்கால் வரப்புகளை சுத்தம் செய்வதும் என்ற வரியில் தவறு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது அவருக்கும் அவர் சார்ந்து வாழும் கிராமத்திற்கும் பயன் தர வேண்டுமே ஒழிய பழியைத் தூண்டி விடக் கூடாது என்ற அடிப்படையில் அமையப் பெற்றிருப்பதை இதில் உள்ள கதைகள் சிறப்பாக விவரித்துச் செல்கின்றன.

முதல் கதையான நொண்டி வாத்து கதையில் தவறு என்பதை ஒத்துக் கொள்ளுதல் தவறுக்கு மன்னிப்பு கேட்டல் என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது நொண்டி வாத்துக்காக மகனையே நொண்டியாக்கிவிடும் வைராக்கியம் யாரிடமும் எந்த வசமும் வாங்கி விடக்கூடாது என்ற உழைப்பின் தீவிரம் தனது மகனின் காலை ஒடிக்கும் அளவிற்கு இழுத்துச் செல்கிறது. கிராமத்தின் மனிதர்களுக்குள் ஒளிந்து கிடக்கும் எல்லாப் பக்கங்களையும் வெளிச்சமிடுகிறது இந்தக் கதை. வறுமையைப் போக்கிட வாத்துகள் மேய்க்கும் உழைப்பும் முட்டையை திருடியாவது வாழ்வை ஓட்டியாக வேண்டும் என்ற உயிர் மீதான ஆர்வமும் உழைப்பையும் சோம்பேறித்தனத்தையும் ஒரே புள்ளியில் நிறுத்தி அளவிடப் பார்க்கிறது. தவறுக்கான தண்டனைக்கு பிறகு மீண்டும் தவறின் பக்கம் செல்லக்கூடாது என்ற பாசம் கடவுளின் மீதான பயத்தில், மரியாதையில் மகனை மடைமாற்றம் செய்கிறது

காலம் போடும் தூண்டிலில் யார் எப்போது சிக்கிக் கொள்வார்கள் என்று யாரால் அறிய முடியும்? பயத்தினால் ஒரு மனிதனின் நம்பிக்கையும் உழைப்பும் சிதைக்கப்படலாம். அந்த உணர்வே உயிரின் வளர்ச்சியை அடிமைப்படுத்தி விடுகிறது. எப்படியாவது மீன்பிடித்து சமைத்து விட வேண்டும் என்ற ஆசையில் கால நேரம் பார்க்காமல் பள்ளத்தில் மீன் பிடிக்க சென்ற கிட்டு மணி வீட்டில் படுத்த பின் எழவே இல்லை. அப்பா மகன் என்ற இரு கதாபாத்திரங்கள் மட்டுமே உரையாடிய கதையில் பயத்தையும் நம்பிக்கையையும் இணைத்து எழுதப்பட்டிருக்கும் தூண்டிலில் மாட்டியது மீன் மட்டுமல்ல நம்பிக்கையற்ற மனமே என்பதே நிரூபணம் ஆகிறது.

கடவுள் மீதான கொண்டாட்டங்கள் மக்களின் மகிழ்ச்சி மனநிலையையும் அச்சம் பற்றிய தெளிவு வேண்டியும் தங்கள் சந்ததி தொடர்ந்து சிறப்பான முறையில் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையிலும் நடைபெறுகின்றன. வழி வழியாக கொண்டாடப்படும் சாமி அழைத்தல் சாமி ஆடுதல் ஊர் மக்களுக்கு ஒரே இடத்தில் விருந்து வைத்தல் கடவுள் இட்ட சாபம் மீதான மனித பயம் ஆகியன இக்கதையை முழுமையான கிராமத்திற்குள் வெள்ளந்தி மனிதர்களின் வாழ்க்கை பாட்டுக்குள் அழைத்துச் செல்கின்றன. பொய்கூறலும் புறம் பேசுதலும் எப்போதும் ஆபத்தையே விளைவிக்கும் என்ற பாடத்தையும் நமக்கு வழங்கி செல்கிறது “எதிர்ப்பு “கதை

உழைக்கும் மக்களின் உழைப்பும் வியர்வையும் அறியாத முதலாளிகளின் மனங்களில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தி விடுவதில்லை. தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் முதலாளிகளுக்காக ஒப்படைத்து அவர்களின் தோப்புகளுக்குக் காவல் இருந்தும் தோப்புகளைப் பராமரித்தும் உழைத்துப் போடும் காவல்காரர்களின் நிலை வயதானதும் எவ்வித பலனும் இல்லாமல் துரத்தி அடிக்கப்படுவது மட்டுமே என்பதை இக்கதை தெளிவாக விளக்குகிறது. தனக்குச் சொந்தமான நிலத்திலேயே காவல்காரராக உழைக்கும் நிலை வருகையில் வறுமையின் கோரத்தாண்டவம் மனித வாழ்வை எவ்வளவு பள்ளத்திற்குள்ளும் தள்ளிவிடும் என்பதையும் அடிக்கோடிட்டு செல்கிறது தோப்புக் காவல் கதை.

தன் குடும்பத்திற்காக வாழ வந்தவள் தன் குடும்பத்தின் செல்வாக்கையும் சிறப்பையும் உயர்த்த வந்தவள் துன்ப நிலைக்கு தள்ளப்படும் போது அவளுக்கு கரம் நீட்டி வாழ்வு கொடுத்தலே ஆண்மகனுக்கு அழகு என்பதை கதையின் கடைசி வரியில் திருப்பம் எனச் சொல்லும் அழகே இக்கதையை சிறப்பானதாக மாற்றி விடுகிறது. மடை திறக்கிறதும் பரம்படிக்கிறதும் கட்ட வண்டியில நெல்லு ஏத்துறதும் ரவயில சவடுமண் அள்ளுறதும் மண்ணுளிப் பாம்பை போல உருளுவான் செவனக்குடும்பன் என்ற வரிகளின் மூலம் ஒரு குடும்பத் தலைவனின் ஓயாத உழைப்பு பெருமித்படுத்தப்படுகிறது. அதே தலைவன் தனது மனைவியையும் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு இறந்து விடும்போது அவளின் வாழ்வு என்ன ஆகும் என்பதை கதையின் இறுதிப் பகுதி அழகாக எடுத்த இயம்புகிறது பழி என்ற சிறுகதையில்.

உடலாலும் மனதாலும் பெண்கள் பலவீனமானவர்கள் என்ற மாயையே ஆண்களைப் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரங்கேற்றத் தூண்டி விடுகிறது. கண்களாலோ செயல்களாலோ ஆடவன் ஏதோ ஒரு வகையில் பெண்ணை வீழ்த்தி வெற்றி அடைவதாய் நினைத்து அவளை கைவிட்டு விட்டால் அவளின் நிலை என்னவாகும் என்பதை நிறையப் பேர் உணர்வதில்லை.. ஆனால் தன்னையே இழந்து இரு பெண் பிள்ளைகளையும் பெற்றபின் தனது காதலன் தவிக்க விட்டுவிட்ட நிலையில் தற்கொலை முடிவுக்கு செல்லும் மனம் குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்ற வைராக்கியத்தை வளர்த்துக் கொள்கிறது. அவர்களையே தமது வாழ்க்கை என கொண்டாடி வாழ்ந்து காட்டும் வீரத்தாய் நமக்கெல்லாம் தெம்பூட்டுகிறாள் வாழ்க்கை வாழ்வதற்கே என வழிகாட்டுகிறது தெம்பு சிறுகதை.

பள்ளிப் பருவத்தில் குறும்புத்தனமும் சேட்டைகளும் இல்லாத வாழ்வை யாரும் நினைத்துப் பார்க்க முடியாது அப்படி ஒரு சூழலிலும் தமக்காக தமது ஆசைக்காக வளர்த்து வரும் புறாக்கள் இறந்து போகும்போது அந்த குழந்தைகள் எவ்விதம் துடிதுடித்து போகின்றனர் என்பதை வாழ்வின் ஏதேனும் ஒரு தருணத்தில் நினைவுகள் நமக்குள் எட்டிப் பார்த்து பால்ய காலத்தில் ஈரத்தை கசிய விடும் என்பதை ஏக்கம் சிறுகதை விளக்குகிறது

திருவிழாப் பொழுதில் ஒரே குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் அடுத்தடுத்து மயக்க நிலைக்குச் சென்றால் அவர்களை யார் காப்பாற்றுவது என்பதற்கான விடையே மாயம் சிறுகதை. கிராமங்களில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் அடுத்தவர் மீதான கருணையும் அன்புமே அக்குடும்பத்தை இறுதியில் மூச்சு விட வைக்கிறது.

மனங்களின் விரிசல்களால் நிலங்களை கூறு போட்டு வேலி போடலாம். எனது, உனது என்ற எல்லைக்குள் மனிதன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பறவைகளை, விலங்குகளை நம்மை நாடி வந்து அன்பு பாராட்டும் உயிர்களை எந்த வேலி கொண்டும் அடைத்து விட முடியாது என்பதை காயம் நமக்கு விளங்க வைக்கிறது

வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கதையில் மாடுகளும் மனிதர்களும் ஒன்றென உறவாடும் கிராமத்தின் அன்பு நிலையை எடுத்துச் சொல்கிறது வண்டித்தடம் கதை

நூல் நொண்டி வாத்தில் ஆரம்பித்து முடம் என்ற கதையில் முடிகிறது மூளை வளர்ச்சி குன்றிய சிறுவனை நன்கு புரிந்து கொண்ட வத்சலா டீச்சர்களே இன்றைய உலகத்திற்கு தேவைப்படுகிறார்கள்

உழவுத் தொழிலை பிரதானமாகக் கொண்டு தமது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உழவனின் குடும்பத்தையும் வெளிச்சமிடுக்கிறது மூதூர்க் காதை. வாழ்ந்து முடிந்த முதுமையான அல்லது பழமையான ஊருக்குள் புதைந்து கிடக்கும் அன்றாட நடைமுறைகள் உயிர்பெற்று கதைகளின் வழி உலவுகின்றன

நாம் விளையாடிய நீர்நிலைகள் தோப்புகள் பள்ளங்கள் மந்தைவெளி விளையாட்டுத் திடல்கள் வயல்கள் என எல்லா இடங்களுக்கும் இக்கதைகள் நம்மை அழைத்துச் சென்று நினைவுகளில் சேகரிக்க வைக்கின்றன. வேளாண் மக்களின் அவலங்களையும் உலகத்தை உயிர்ப்பிக்க தம்மையே ஒப்படை க்க காத்திருக்கும் அவர்களின் உழைப்பையும் இக்கதைகள் வெளிச்சமிடுகின்றன.

தனது கிராமத்தின் சித்திரத்தை நகமும் சதையுமென சேறும் சகதியுமென உழைப்பும் வியர்மையுமென திருவிழாவும் கொண்டாட்டமுமென தீட்டி மகிழ்ந்து மூதூர்க் காதை வழியே கிரீடம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார் நண்பர் அய்யனார் ஈடாடி.

 

நூல் அறிமுகம் எழுதியவர் : 

| https://bookday.in/

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *