மூடிய ரேசன் கடைகளைத் திற! மக்களைப் பட்டினி போடாதே! – ஜி.ராமகிருஷ்ணன், சிபிஎம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேசன் கடைகள் மூடப்பட்டுள்ளன.  இதனால் மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட்டு வந்த அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை. ரேசன் பொருட்களை நம்பி இருக்கும் நிரந்தர வருமானம் இல்லாத ஏழை எளிய மக்களும், நடுத்தர வர்க்க மக்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டில் மத்திய பாஜக ஆட்சி இருந்த காலத்தில் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமி புதுச்சேரியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு மாற்றாக அரிசிக்குப் பதிலாக நேரடி பணப் பட்டுவாடா செய்யும் திட்டத்தை அமல்படுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி போராட்டம் நடத்தியது. அந்தத் திட்டம் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு முன்பு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருந்த கிரண்பேடி, மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி, ரேசன் விநியோகத்திற்குப் பதில் பணம் வழங்கும் திட்டத்தை அறிவித்து, அமலாக்கினார். அரிசிக்குப் பதிலாக பணம் வழங்குவதை மக்கள் எதிர்த்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு எதிராக தொடர்ந்து பல இயக்கங் களை நடத்தியது. இருந்தபோதிலும் வலுக் கட்டாயமாக பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

15 மாதங்களாக பாதிப்பு

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, பணப்பட்டுவாடாவையும் நிறுத்தி விட்டதன்  விளைவாக, கடந்த 15 மாதங்களாக சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு (வறுமைக் கோட்டுக்குக் கீழே) 20 கிலோ அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்ட ரூபாய் 600, மஞ்சள் குடும்ப அட்டைக்கு 10 கிலோ அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்ட ரூபாய் 300 வழங்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு 15 மாதங்களில் கிடைக்க வேண்டிய ரூபாய் 9000, மற்றும் ரூபாய் 4500 இதுவரை கிடைக்கவில்லை. புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை நிலைக்குச் சென்றுள்ளது. அன்றாடம் அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏற்றத்தால் வறுமை நிலையில் உள்ள ஏழை, எளிய மக்களால் தங்களின் உணவுத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இவர்களின் குழந்தைகள்  ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிரந்தர வருமானம் இல்லாத உடல் உழைப்பை நம்பி வாழ்கின்ற மக்கள் அனை வருமே வறுமை நிலையில் உள்ளனர்.  இவர்களுக்கு சிவப்பு குடும்ப அட்டை வழங்கப்படுவதில்லை. சமீபத்தில் செய்தித்தாள்களில் பழங்குடியின மக்களுக்குக்கூட சிவப்பு குடும்ப அட்டை வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில்  அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு சிவப்பு அட்டை வழங்கப்படுகிறது. கொரோனாவுக்குப் பிறகு சிறுகுறு தொழில்கள் நெருக்கடியில் உள்ளன. முறைசாராத் தொழிலாளர் குடும்பங்களும், ஏழை எளிய குடும்பங்களும் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து, வருமானமின்றி விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய அவல நிலைமைக்குப் பிறகும் கூட, பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் ரங்கசாமி, அரிசிக்குப் பதிலான பணப்பட்டுவாடா செய்ய முடியாது என சமீபத்தில் அவரை சந்தித்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலத் தலைவர்களிடம் கூறியிருக்கிறார்.

இத்தகைய நிலைமைக்கு என்ன காரணம்

கடந்த 2017 ஜூலை மாதம் 31 ஆம் தேதி, பிரதமர் தனது உரையில் சண்டிகர் மற்றும்  புதுச்சேரியில் பொருள் விநியோகத் திட்டத்தை முழுமையாக நிறுத்தி, குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியத் தொகையினை நேரடியாக வங்கிக்கணக்கில் போடப்படுகிறது எனக் கூறியிருந்தார். மேலும், இதே முறையினை நாடு முழுவதிலும் எல்லா மாநிலங்களிலும் அமலுக்குக் கொண்டுவரப் போவதாகவும் கூறியிருந்தார். மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்குப் பதிலாக, மானியத்தை வங்கிக்கணக்கில் நேரடியாக அரசு செலுத்தும் திட்டத்தை மோடி அரசு அமலாக்கியது. தற்போது சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியம் முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டது. இத்தகைய முறையில்தான் அரிசிக்குப் பதிலாக பணப்பட்டுவாடா என்று முதலில் கூறி, காலப்போக்கில் பாண்டிச்சேரி மாநில அரசு, அந்தப் பணப்பட்டுவாடாவை யும் நிறுத்திவிட்டது.

ரேசன் அரிசி விநியோகத்தை நிறுத்தி விட்ட மோடி அரசு, வரலாற்றிலேயே இல்லாத  வகையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குக் கூட ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது கொடுமையிலும் கொடுமை. விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரேசன் கடைகள் மூலம் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. ரேசன் கடைகளை மூடு வதன் மூலம் கொள்முதலும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

மத்தியில் பாஜக மோடி அரசு- புதுவையில் பாஜக கூட்டணி அரசு

மத்தியிலும் புதுவை மாநிலத்திலும் அதிகாரத்தில் உள்ள பாஜக, முற்றாக உணவு மானியத்தை நிறுத்தும் தனது மக்கள் விரோதக்கொள்கையை அமலாக்கிட, புதுவை மாநிலத்தை முன்னோட்ட மாநிலமாக, பரிசோதனை எலியாக பயன்படுத்தி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் மக்கள் தொகை 15 லட்சம். அங்கு வழங்கப்பட்டுள்ள மொத்த ரேசன் கார்டுகள் 3,52,382. இவற்றில் 1,60,211 சிவப்பு அட்டைகள் (முன்னுரிமை குடும்பங்கள்-வறுமைக்கோட்டுக்கு கீழ்). 1,66,142 மஞ்சள் அட்டைகள் (வறுமைக் கோட்டுக்கு மேல்).  புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 515 ரேசன் கடைகள் உள்ளன. கடந்த தேர்தலின்போது, ‘ரேசன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்’ என்ற அறிவிப்புடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ரங்கசாமி வெளியிட்டார். நடைமுறையில் ரேசன் திட்டத்தை நிறுத்திவிட்டு ‘நடமாடும் நியாயவிலைக் கடைகள் ஏற்படுத்தப்படும்’ என்ற வாக்குறுதியுடன் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். பாஜக ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கு வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடப்படும் என வாக்குறுதி அளித்து மோடி அரசு ஏமாற்றியதுபோலத்தான், புதுச்சேரியில் பாஜகவும், என்.ஆர்.காங்கிரசும் மக்களை ஏமாற்றிவிட்டன.

காற்றோடு கலந்த ஆளுநரின் வாக்குறுதி

தேசிய கூட்டுறவு அபிவிருத்திக் கழகத்திடம் நிதிஉதவி பெற்று புதுச்சேரி மற்றும்  காரைக்காலில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளை சூப்பர் மார்க்கெட்டுகளாக தரம் உயர்த்துவோம்! என புதுச்சேரியின் தற்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவித்தார். அவர் வாக்குறுதி அளித்து ஏழு மாதங்கள் ஓடிவிட்டன. அவர் அளித்த வாக்குறுதி காற்றோடு கலந்துவிட்டது. கடந்த ஆட்சியின்போது ஆளுநராக இருந்த கிரண்பேடி போட்டி அரசாங்கமே நடத்தி ஒன்றிய அரசின் ஏஜெண்டாகவே செயல்பட்டார். அவர் அரிசிக்கு பதிலாக பணப்பட்டுவாடா என்பதை வலுக்கட்டாயமாக அறிவித்தபோது, காங்கிரஸ் – திமுக கூட்டணியின்  நாராயணசாமி அரசாங்கம் ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் ஒன்றிய  பாஜக அரசு அரிசிக்குப் பதிலாக பணப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு அமலாக்கியது.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில், ஏழைகளிலே பரம ஏழைக்  குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வழக்கமாக கிடைக்கும் மாநில அரசின் உணவு வழங்கல் திட்டத்துடன், கூடுதலாக ஒன்றிய அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின்கீழ் உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 26,000 குடும்பங்கள்  அந்தியோ தயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு,  மாநில அரசு வழங்கி வந்த இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, பாமாயில், சக்கரையுடன், ஏஏஒய் (AAY)  திட்டத்தின் கீழும் கூடுதல் தானி யத்தைப் பெற்று வந்தன. மேலும், கொரோனா காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வருமான வரி விளிம்புக்குள் வராத குடும்பங்களுக்கு மாதம் 7500 ரூபாய் வழங்க வேண்டும்; உணவு தானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துப் போராடியது. சர்வதேச அளவில் பேரிடர் காலத்தில் மக்களுக்கு உணவு தானியங்கள், நேரடி பணப்பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதனால் ஒன்றிய அரசு, கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நபருக்கு தலா 5 கிலோ அரிசி விநியோகத்தைத் தொடங்கியது. புதுவையில் அரிசிக்குப் பதில் பணம் என்ற திட்டம் அமலுக்கு வந்த பிறகு, அந்தியோ தயா அன்னயோஜனா    திட்டம், கரீப் கல்யாண் திட்டத்தைத் தவிர, மாநில அரசின் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. சிவப்பு அட்டை தாரர்களுக்கு தற்போது கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கிடைத்துவரும் ஒன்றிய அரசின் 5 கிலோ அரிசி, வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கிடைக்கும்.

உணவு பெறும் உரிமை மறுப்பு

தேர்தல் அறிக்கையில் ரேசன் பொருட்கள் வழங்குவோம் என வாக்குறுதி வழங்கும் பாஜக-என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசு,  நடைமுறையில் மக்கள் படும் துயரங்களைக் கண்டுகொள்ளாது, அவர்களுடைய உணவு  பெறும் உரிமையைக் கூட மறுத்துவருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் கிரண்பேடி விதி முறைகளை மீறி, பாஜக கட்சியின் மூன்று நபர் களை நியமன உறுப்பினர்களாக்கி சட்ட சபையில் பாஜகவுக்கு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். இந்த உறுப்பினர்களோடு விலைக்கு வாங்கிய உறுப்பி னர்களின் ஆதரவோடு, காங்கிரஸ் ஆட்சியை பாஜக கலைத்தது. காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவரும், சபாநாயகராக இருந்தவரும், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் விலைக்கு வாங்கப்பட்டு பாஜக வில் இணைந்தார்கள். அடுத்து நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலில் பாஜக- என்.ஆர். காங்கிரஸ் 16 சட்டமன்ற இடங்களைப் பெற்ற தோடு, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட மூன்று பாஜக நியமன உறுப்பினர்களோடு பாஜக கூட்டணி அமைச்சரவையை ஏற்படுத்தி ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாகி வருகிறது.

ஒரு புறம் கடந்த  மூன்றாண்டுகளாக ரேசன் கடைகளை மூடிவைத்து, ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, நியாய விலையில் பாமாயில், பருப்பு, சர்க்கரை கிடைக்க விடாமல், பாஜக பட்டினி போட்டு வதைத்து வருகிறது. மறுபுறம் புதுவை முழுக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை  மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.  உணவின்றி மக்கள் தவிப்பதைக் கண்டுகொள்ளாமல் தனது கட்சியை வளர்ப்பதிலேயே பாஜக குறியாக இருக்கிறது.

முற்றாக நிறுத்த சதி 

2018இல் இந்தியாவில் சில மாநிலங்களில் அரிசிக்குப் பதில் நேரடி பணப்பட்டு வாடா என்ற திட்டத்தை பரீட்சார்த்த முறையில் ஒன்றிய அரசாங்கம் செயல்படுத்தத் தொடங்கியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டம் நடத்தியதால் சில மாநிலங்களில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும் சண்டிகர், புதுச்சேரி, தாதர் நாகர் ஹவேலியில் அமலில் உள்ளது. ரேசன் பொருட்களுக்குப் பதிலாக பணப்பட்டுவாடா எனச் சொல்வதன் நோக்கமே உணவு மானியத்தை காலப்போக்கில் முற்றாக நிறுத்துவதே என்பதை சிலிண்டர் விலை மானிய நிறுத்தம், மற்றும் புதுச்சேரி பணப்பட்டுவாடா திட்டம் நிறுத்தம் ஆகியவற்றில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த அதானி ஐந்தாவது இடத்திற்கு வந்து, தற்போது நான்காவது இடத்திற்கும் முன்னேறிவிட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பனிகளுக்கு கோடிகோடியாக சலுகை அளிக்கும் பாஜக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மறுக்கிறது.

ரேசன் கடைகளை திறந்திடுக

1.புதுவையில் மூடப்பட்ட ரேசன் கடைகளை திறந்து, தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை  வழங்க  வேண்டும். 2. முறைசாரா தொழிலாளர்கள், நிரந்தர வருமானம் அற்றவர்கள் உள்ளிட்ட  தகுதி உள்ள அனைவருக்கும் சிவப்பு குடும்ப அட்டை வழங்கிட வேண்டும். சிவப்பு அட்டைக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் அட்டைக்கு மாதம் 10 கிலோ  இலவச அரிசியும் முன்பு போல வழங்கிட வேண்டும். 3.  புதுச்சேரி அரசின் இலவச அரிசிக்கு பணம் வழங்கும் திட்டம் கடந்த 15 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு 9000 ரூபாயும், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4500 ரூபாயும் வழங்கப்படாமல் உள்ளது. இந்தப் பணத்தை வழங்கிட வேண்டும் அல்லது அதற்குப் பதிலாக தரமான உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து, வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி புதுவையில் சட்டமன்ற வளாகத்திற்கு முன்பாக, என்.ஆர் காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காத்திருப்புப் போராட்டத்தை நடத்த இருக்கிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.