45 ஆவது சென்னை புத்தகக் காட்சி புதிய வரவுகள்
முகாமி
தம்பி அய். தமிழ்மணியின் இந்த சிறுகதை தொகுப்பிற்கான விமர்சனத்தை தோழர் ச. தமிழ்ச்செல்வனின் சொற்கள் கொண்டே துவங்க நினைக்கிறேன்…
தமிழ்மணியின் கதைகள் பெரிதும் புறக்காட்சி ரூபமானவை. வாசிக்க சுவையானவை. உள்ளடக்கத்தில் சந்தேகமற்றவை. வாசகரோடு பேசுபவை. பரவலாக கவனம் பெறாத, ஆனால் நடப்பில் உள்ள பிரச்சினைகளை இக்கதைகள் பேசுகின்றன. தோழர் ச. தமிழ்ச்செல்வன்
இதற்கு மேலும் நான் என்ன பெரிதாக சொல்லி விட முடியும்!? ஆயினும், ஆகாயத்தில் அடிக்கடி இறக்கைகளை அசைக்காமல், அலட்டிக்கொள்ளாமல், சீரான வட்டங்களில் பறந்து கொண்டிருக்கும் கழுகு, ஏதேனும் ஓரிரு தருணங்களில் சிறகை சற்றே அசைத்தும், கொஞ்சம் சரிவான கோணத்தில் உடலை சாய்த்தும் பறந்து விட்டு, மீண்டும் சீரான வட்டங்களை அமைக்க துவங்கும்… அப்படியான, அரிதான காட்சிகளையும் விரும்பி கவனித்தவன் என்ற முறையில், இந்த சிறுகதை தொகுப்பில் என் பார்வையில் சிக்கிய சில சிறப்புகளையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஒரு மூன்று விதமான உணவு உண்ணும் காட்சிகளை சொல்கிறேன் பாருங்கள்… பெரும் நட்சத்திர விடுதிகளில் அல்லது அதற்கு நிகரான குளிரூட்டப்பட்ட அரங்கங்களில், வயிறு கொள்ளாத பல்வகை பதார்த்தங்களோடு கூடிய வண்ணமயமான பஃபே விருந்து உணவின் சுவையையும் அல்லது நண்பர்களோடு ஒரு மாடித்தோட்டத்தில் (Roof garden) மதுவுடன் கூடிய கேளிக்கை விருந்தில் கிடைக்கும் அசைவ உணவின் சுவையையும் அல்லது சுனாமி மற்றும் பெரும்புயல் போன்ற பேரிடர்கால பாதிப்பிற்க்குப் பிறகு, வாழ்விடம், வாழ்வாதாரம் அனைத்தையும் தொலைத்த பிறகு, நாம் இருக்கும் முகாமிலோ அல்லது ஒரு வேளை உணவுக்காகவும், நல்ல குடிநீருக்காகவும் தெருவில் அலையும் வேளைகளில் நம் கையில் யாரோ திணித்துப் போகும் உணவுப்பொட்டலமும், குடிநீர் போத்தலும் கொடுக்கும் சுவையையும் ஒப்பிட்டால் எந்த சுவை அனைத்திற்கும் மேலானது என்று நம்மால் உணர முடியும்தானே..!?
கொடுந்துயர் காலங்களில் நமக்கு கிடைக்கும் அந்த பொட்டலங்களில் இருக்கும் எளிய தக்காளி சோறா, தயிர்ச்சோறா அல்லது புளிச்சோறோவென ஏதோவொன்று நாமும், நம் வாரிசுகளும் உயிர் பிழைக்கவும், மீண்டும் தலைநிமிரவும் எத்தனை முக்கியமென நாம் அறிவோம்தானே!?
இந்த மூன்றாவது வகை உணவுதான் தம்பி தமிழ்மணியின் சிறுகதைகள்… உயிரும், இந்த சமூகமும், உயிர்ப்போடும், அன்போடும், அக்கறையோடும், மனிதநேயத்தோடும் தொடர நமக்கு உதவி புரிபவைதான் இந்த கதைகள்… அலங்காரமற்றவை ஆனால் ஆழமானவை. நேரிடையாக நம்மை கதைகளின் உள்ளே இழுத்துப்போய்விடுவார்.. அங்கே சமூக அவலங்கள் புழுக்களாக நெளிந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு கதையை வாசித்தப்பிறகும் நாமும் கைநிறைய புழுக்களை அள்ளிக்கொண்டு போய் வெளியே கொட்டுவோம்.அப்போது நம்மிடையே எந்த அறுவெறுப்பும் இருக்காது, ஆனால், இந்த சமூகத்தின் மீதான அன்பும், அக்கறையும் கூடியிருக்கும்.
சில இடங்களில் ரெளத்திரம் கூடி கத்தியையும் கையிலெடுப்போம். அத்தனை தைரியத்தை நமக்கு அளிக்கும் வீரமான கதைசொல்லியும் கூட தமிழ்மணி.
பின்னே, கருப்பையாவின் கந்துக்கணக்கு கதையில் வரும் எம்எல்ஏ தக்காளிசெல்வத்தின் அருமை, பெருமைகளை புட்டு புட்டு வைப்பதெல்லாம் சாதாரண தைரியமா என்ன!?!
தொகுப்பின் முதல் கதையான கெடாவெட்டே அதகளத்தை கிளப்புகிறது. சக குடிகார ஆண்களைப் போல மாதமொருமுறை குடித்து, கும்மாளமிடும் பெண்கள் கூட்டத்திடம் ஒரு கேள்வியை எழுப்புகிறாள் சக பெண்ணொருத்தி… “அப்ப சரிக்கு சரி நாமளும் குடிச்சா சரியாயிருமா? யென்னக்காவது தெரிஞ்சா..?
“……… யென்னைக்காவது தெரியத்தான் போகுது… அப்ப, ரோசம் வந்து அவிய்ங்க திருந்தனும் இல்லை யேன்னாவது கேட்கனும்… அப்ப இருக்கு மாப்பிள்ளைகளுக்கு…
பொட்டிலறைகிறது இந்த வரிகள்.
பெரிதும் அலட்டிக்கொள்ளாமல், கைலியை மடக்கி பிடித்துக்கொண்டு , நம்மோடு இயல்பாக பேசியபடியே குளக்கரைக்கு வருவாரே ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் ஏதாவதொரு அண்ணன், போகிறபோக்கில் அந்த கிராமத்தின் அவலங்களை, பேராசை மனிதர்களின் முகமூடியை, அவர்களின் போலி கவுரவத்தை கழற்றி எறிந்தபடியே
கதை சொல்லிக்கொண்டும், நம் முதுகில் ஆதரவாக தட்டிக்கொண்டும் வருவாரே ஒரு அண்ணன், அந்த அண்ணன்களை போலவொரு காத்திரமான மற்றும் அன்பான கதைசொல்லியாக இதில் வெளிப்படுகிறார் தமிழ்மணி.
அதற்காக, இதெல்லாம் வெறும் உபதேசக்கதைகள் என கருதிவிட வேண்டாம். நம் அப்பத்தாக்கள் சொல்லும் கதைகளைப்போலவே வெகு சுவாரஸ்யமானவை.
பல கதைகளில் காணப்படும் உவமைகளும் மனதை அள்ளுகிறது.
நனைச்சு அடிச்சா நாலுபக்கமும் தெறிக்கும் என்ற கதையின் தலைப்பும் சரி ; செல்வத்தின் வார்த்தைகள் அறுத்த தண்ணீர்பழத்தின் விதைகள் போல் உதிர்ந்தன என்ற சொல்லாடலும் சரி எத்தனை ஈர்ப்பு பாருங்கள்.
ஆனால், பல கதைகளிலும் காணப்படும் கூறலாயினர், வருந்தலாயினர் போன்ற பழைய நடையிலான சொற்களை தவிர்த்திருக்கலாம். இது வாசிப்பின் வேகத்தை சற்றே பின்னிழுக்கிறது.
மற்றபடி, இந்த தொகுப்பில் உள்ள கதைகளெல்லாம் எங்கள் தேனி மாவட்ட மண் வாசனையை, வட்டார தமிழை சுமந்து கொண்டிருப்பது தேனி பேருந்துநிலையத்தில் அமர்ந்து கொண்டு, சுடச்சுட உளுந்து வடையும், புதுத்தூளில் இறக்கிய தேநீரையும் சுவைத்துக்கொண்டே கதையளக்கும் அனுபவத்தை தருகிறது. மண் மணக்கும் வட்டார வழக்கு கதைகள். ஆனால், சமகால இந்திய வரலாற்றுயும், சமூக அவலங்களையும், பேராசை அரசியல் வியாதிகளையும், சுயநல மனிதர்களையும் சுட்டும் கதைகள்.
#கால்கள் கதையில், இந்திய பேரரசரின் அருமை, பெருமைகள் பணமதிப்பிழப்பிற்கு பிறகான கொரோனா காலகட்டத்தில் தன் சொந்த மாநிலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்த ராம்சிங்கின் காலடிகளின் கீழ் கிடந்து நசுங்குவது வெகுச்சிறப்பு.
முகாமி, தொகுப்பின் கடைசி கதை… இந்த கதையை வாசித்த பின், கண்களில் நீர்திரள நெடுநேரம் அவரவர் அப்பாவின் கைகளை பிடித்தபடியே அமர்ந்திருப்போம்.
மொத்தம் பண்ணிரண்டு கதைகள். அத்தனையும் பாண்டி நாட்டு முத்துக்கள். தொகுப்பை வாசித்து முடித்த பின்பும், பாண்டிய அரசவையில் ஒலித்த கண்ணகியின் காற்சிலம்பு எழுப்பிய ஒலியை, நம் காதுகளில் எதிரொலித்த படியே இருக்கும்.
#முகாமி, இதுவொரு சமூக அக்கறையும், சகமனிதர்களின் பால் உண்மையான அன்பும் நிறைந்த படைப்பாளியின் அலங்காரமற்ற ஆழ்மனக்குரல்.
நல்ல படைப்பாளிக்குரிய கலை நுணுக்கமும், நேர்மையும், மிகுந்த துணிவும் நிரம்பிய ஒரு பன்முக கலைஞனின், கலகக்காரனின் படைப்பை,
வாசிக்க தவறாதீர்கள்.
நூல்: முகாமி – சிறுகதை தொகுப்பு
நூலாசிரியர்: அய். தமிழ்மணி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ₹ 175
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.