கல்விக் கொள்கைக்கு எதிரான எதிர்ப்புக் கவிதைகளின் தொகுப்பு “முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப் பற்கள்” நூலிலிருந்து ஒரு கவிஞரின் எதிர்ப்புக் குரல்

அவர்கள் ஏதோ ஒன்றைக் கொளுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

எங்கோ ஒன்று எரிந்து கொண்டே இருக்கிறது

மஞ்சள் காமாலைக் கண்கள் போல்

இவர்கள் காவிக் கண் கொண்டு

எல்லாவற்றையும் நாறடிக்கிறார்கள்

எல்லாம் நாறி விட்டது

புளுத்தும் விட்டது

கேள்விகள் கேட்கத் தொடங்கினால்

வேள்விகள் செய்யச் சொல்கிறார்கள்.

செய்வோம்!

 கல்விக்கான வேள்வி

நாங்கள் தொடங்கி விட்டோம்

தலை முதல் பாதம் வரை

ஒவ்வொரு உறுப்பும்

ஒவ்வொரு விதம்

நீயோ ஒற்றை பாரதம் கேட்கிறாய்

ஒற்றைக் கல்வி என்கிறாய்

முடியாது..

முடியவே முடியாது!

ஒற்றை இலக்கத்தில் நம்பிக்கை இல்லை

நாங்கள் பலர்!

நீங்கள் பதர்!

பல நூல்  கற்றுத் தேறும் எங்கள்

குழந்தைகளை

ஒற்றை நூலில் கோர்க்க நினைக்காதே

மீண்டும் ஒரு கற்காலத்துக்கு

எங்களைத் தள்ளாதே..

கற்பித்தலே எங்கள் கல்வி

கற்றுக் கொடுப்பதே எங்கள் செவ்வி!

– நறுமுகை தேவி

கல்விக் கொள்கைக்கு எதிரான எதிர்ப்புக் கவிதைகளின் தொகுப்பு “முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப் பற்கள்” நூலிலிருந்து ஒரு கவிஞரின் எதிர்ப்புக் குரல்.