முகமது பாட்சா கவிதைகள்

முகமது பாட்சா கவிதைகள்

குழுவாக அமர்ந்து

பேசிக்கொள்ளத் தொடங்கினோம்

எதிர் வீட்டுப் பிரச்சனைதான் என்றாலும்

ஆகரி

 

தனியாகக் குடிவந்திருக்கும் அவளைப் பற்றியதுதான்

அவள் பெயர் என்னவென்று இதுவரை தெரியாது…

பொதுவில் அவளுக்கு

ஆகரி என்று பெயர் வைத்தவன் ரகுமான் ரசிகன்

இரவில் பாடிக்கொண்டே இருப்பாள்..

வேலை நிமித்தம் வந்தவளாக இருக்கலாம்

ஆனாலும் இரவில் அடிக்கடிக் காணாமல் போகிறாள்…

நுரைத்த மதுவை

தம்பளர்களில் ஊற்றிய இலக்கிய ரசிகன்

அவள் ஒரு படிமக்குறியீடு எனப் பிதற்றத் தொடங்கினான்…

சூர்யாவிற்கு ஏற்ற ஜோடி இவள்தான் என்றவன்

ஓர் உதவி இயக்குனன்

நான்கு வண்ணங்கள் அவசியம் தேவை

அப்போதுதான் அந்த முகத்தின் புன்னகை வெளிவரும்

என்று சிலாகித்தான் ஓவியம் பயில்பவன்…

நானும் கலந்து கொள்ளவா?

என்று அருகில் வந்தவள்

பிரன்ச் நறுமணம் பூசியிருந்தாள்….

ஆச்சரியத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தோம்…

தன் பெயர் ஆகரி என்றவள்

வேலைத்தேடுவதாகச் சொன்னாள்…

குறும்படமொன்றில்

நடிப்பதாகச் சொல்லிவிட்டுப் புன்னகைத்தாள்..

நான்கு வண்ணங்கள்

அவளின் முகத்தில் பிரதிபலித்தது…

அவர்கள் அவளையே பார்த்துக் கொண்டிருக்க

அவள் வீட்டின் சன்னல் திரை

மெல்ல அசைந்து கொண்டிருந்தது

அவளின் நிழல் பாட்டொன்றைப் பாடிக் கொண்டிருக்க…

 

-முகமது பாட்சா*

 

லட்சுமணக்கோடு

 

சீதையை வருத்திய லட்சுமணக்கோடு

நீண்டுகொண்டே செல்கிறது….

அகலிகையின் சாபம் இணையும் புள்ளியில்

மாரீச மோட்சம்

மானின் அம்பை பிடுங்கியெறிய…

விழுந்த இடத்தில் சூர்ப்பனைகையின் துயரம்

தொட்டுத் தொடர்கிறது அசோகவனத்தில்….

நிழலில்லாத் தகிப்பில்

ஜானகி மிதிலையைத் தேடுகிறாள்….

‘பார்த்து நடந்துக்க…

இனி எல்லாமே புகுந்த வீடுதான்’

என்று சொல்லும் அப்பாவின் விரல்கள்

ஒரு நீண்ட கோட்டை வரைந்து செல்ல…

 

-முகமது பாட்சா*

 

காட்சி ஓகே

 

வெள்ளைத் தாளின் அருகில்தான்

அந்தத் தேநீர் கோப்பையும் அமர்ந்திருந்தது

அதுவும் காலியாகத்தான் இருந்தது

அங்கிருந்த நாற்காலி எப்போதோ

இறந்துவிட்டதாக இரண்டும் பேசிக் கொண்டன

எழுதாத பேனா ஈரமிழந்தததால்

அதுவும் அப்போதே இறந்திருக்கலாம்…

நீ எழுதப்பட்டிருந்தால் என்னருகில்

இருந்திருக்க மாட்டாயோ? என்றது கோப்பை

கவனித்தாயா

இன்னமும் அந்த மூச்சுக் காற்று

இங்குதான் சுற்றிக் கொண்டிருக்கிறது

அதனால்தான் இன்னமும் படபடக்கிறேன்

காற்றொன்று சன்னலை தடதடக்க

கோப்பை சிதறிக் கீழே விழுகிறது

பறந்த வெள்ளைத்தாள் சுவரில் ஒட்டிக் கொள்ள

ஒரு பூனை மெல்ல நகர்கிறது

காட்சி ஓகே 

டேக் போகலாம் என்ற போதுதான்

அதுவும் கூட நிகழ்ந்தது

வெள்ளைத் தாளில் யாரோ எழுதியிருந்தார்கள்.

 

-முகமது பாட்சா*

 

Show 2 Comments

2 Comments

  1. கனியமுது

    அப்பாவின் விரல்கள் வரையும் லட்சுமணக் கோடுகளுக்கு ஒரு ஆயுள் நீளம் கவிஞர் முகமது பாட்சா அவர்களே. மூன்று கவிதைகளும் முந்தானவை. வாழ்த்துக்கள்

    • முகமது பாட்சா

      மகிழ்ச்சி சகோதரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *