முகாம் (Mukaam) நாவல் – நூல் அறிமுகம்
’முகாம்’- குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்களின் துயர்மிகு வாழ்வினைச் சித்தரிக்கும் நாவல்.
’முகாம்’ நாவல் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் அ.கரீம் குடியுரிமைத் திருத்தச் சட்டம்- 2019இன் அடிப்படையில் தடுப்பு முகாம்கள் (Detention Camps) உருவாகும் பின்னணியில் எழுதிய காத்திரமான படைப்பாகும். தேசிய குடிமக்கள் ஆவணத்தில் (National Register of Citizens) இடம் பெறாதவர்கள் தடுப்பு முகாம்களில் அடைத்திட வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தின் கொடூர அம்சங்களை நாவல் விளக்குகிறது. தடுப்பு முகாமில் அடைக்கப்படும் மக்கள் அனுபவிக்கும் அவலங்களையும் நம் கண் முன்னே நிறுத்தி நெஞ்சைப் பதறச் செய்கிறது. எல்லா மாநிலங்களிலும் இத்தகு தடுப்பு முகாம்கள் வரவிருக்கும் சூழலில் அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம், மட்டியா எனுமிடத்தில் ஏற்கனவே முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் ஆயிரத்துக்கும் மேலானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். முகாமின் மோசமான நிலைமைகள் காரணமாக 28 பேர் இறந்துள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
’முகாம்’ நாவலில் மைமூன் மற்றும் ஷாகிரா எனும் இரண்டு பெண்களின் கதை மூலம் தடுப்பு முகாம்களில் சிக்கிச் சீரழியும் அப்பாவி மக்களின் அவலங்களை கரீம் சித்தரிக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பட்ட பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் இன்று இச்சட்டம் அமல்படுத்தப்படாத நிலையில் உள்ளது. இது அமலுக்கு வரும்போது ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னுடையதுடன் தன் தந்தையின் பிறப்புச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல் தடுப்பு முகாமில் வாழ்நாள் முழுவதையும் கழிக்க நேரிடும்.
1930களில் ஹிட்லரின் இனவெறி ஃபாசிச ஆட்சியின்போது இத்தகு வதை முகாம்களில் லட்சக்கணக்கான யூதர்கள் அடைக்கப்பட்டு சொல்லொண்ணா துயரத்துக்குள்ளாயினர். இத்துயர நிகழ்வுகளை நிறைய எழுத்தாளர்கள் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் என்று பல இலக்கிய வகைமைகளிலும் பதிவு செய்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற எலி வீசல் என்ற எழுத்தாளர் ஆஸ்க்விட்ச் வதை முகாமில் தான் அனுபவித்த கொடூர அவலங்களை ’Night’ எனும் நூலில் சித்தரித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற சோவியத் படை வீரர்கள் முகாம்களில் சிறைப்பட்டிருந்த யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள், நாசிச கொடுகோண்மை ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்கள் என்று அனைவரையும் விடுதலை செய்தனர்.
உலகெங்கிலும் வியாபித்துள்ள ’இஸ்லாமிய ஃபோபியா’ எனும் திட்டமிட்ட சதியும் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் நடைபெறும் பாஜக அரசு மக்களை ‘நாம் – மற்றவர்கள்’ என்று பிரித்து வெறுப்பு அரசியல் நடத்துவது மக்களிடையே ஒருவித அச்சத்தை உருவாக்குகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் சீக்கியர்கள் என்று அனைத்து மக்களும் பங்கேற்றனர். நாவலில் வரும் மைமூன் கதாபாத்திரத்தின் முன்னோர்கள் விடுதலைப் போராட்டத்தில் அளப்பரிய தியாகங்கள் செய்தவர்கள். ஆனால் இன்றைய வெறுப்பு அரசியலின் கொடூரச் சட்டத்தினால் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர். இந்த இந்திய யதார்த்தத்தையே நாவல் பிரதிபலிக்கிறது. நாவலில் வரும் இந்து, இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் பாசத்துடனும், பரிவுடனும் பழகுகின்றனர். சமூகத்தில் ஊடுருவியுள்ள சங்பரிவார உறுப்பினர்கள் மக்களிடையே பிரிவினையைத் தூண்டிவிடுகின்றனர். அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதற்கானத் தடையையும் நீக்கியுள்ளது ஒன்றிய அரசு. அரசின் ஆதரவு பெற்ற திமிரில் சங் பரிவாரத்தினர் ஊரில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுகின்றனர். காவல்துறை இவர்களுக்குக் கட்டுப்பட்டு இருக்கும் அநியாயம் நடக்கிறது.
மைமூன், ஷாகிரா, முகாம் என்று மூன்று பாகங்களாக விரிந்து செல்லும் நாவலைப் படிக்க கனத்த மனம் வேண்டும். அத்துணைத் துயரங்களைச் சொல்லிச் செல்கிறது நாவல். மைமூனின் பிறப்புச் சான்றிதழ் தேடி அவர் கணவர் இப்ராஹிம்; ஷாகிராவின் பிறப்புச் சான்றிதழ் தேடி அவள் வாப்பா முகமதலி இவர்கள் படும்பாடு சொல்லித்தீராதது.
அனாதைச் சிறுமியாக மதரஸாவில் வளர்க்கப்பட்ட மைமூனின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. மதரஸா ஏற்பாடு செய்யும் திருமணத்தின் மூலம் இப்ராஹிமைக் கைப்பிடித்து நல்வாழ்வு வாழும் காலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் வந்து அவள் வாழ்வை சிதைத்துப் போடுகிறது. நதி மூலம், ரிஷி மூலம் காண்பது அரியது என்பார்கள். மைமூனின் மூலத்தை அறிந்திட அவள் கணவன் இப்ராஹிம் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். இறுதியில் அவள் சேலம் மாவட்டத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த காந்தியவாதியும், சுதந்திரப் போராளியுமான மைதீன் பாஷாவின் பேத்தி என்பதறிந்து நெகிழ்ச்சி அடைகிறார். மைமூன் பிறப்பு குறித்த ஆவணத்துடன் மகிழ்ச்சியுடன் ஊர் திரும்புகிறார் இப்ராஹிம். மறுநாள் காலை மைமூன் முகாமில் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
குழந்தைப் பாக்கியம் இல்லாமல் தவித்த முகமதலி-ஜைதூன் தம்பதிகள் ஜைதூனின் தங்கை மகள் ஷாகிராவைத் தத்தெடுத்து பாசத்துடன் வளர்க்கிறார்கள். முகமதலியின் இரும்பு வணிகம் செழிக்கிறது. மகள் ஷாகிரா படித்து எம்பிஏ பட்டம் பெறுகிறாள். அன்பு மகளின் திருமணத்தை கோலாகலத்துடன் நடத்துகிறார். இடியென இறங்குகிறது குடியுரிமைத் திருத்தச் சட்டம். மகளின் பிறப்புச் சான்றிதழ் தேடி அல்லாடுகிறார்.
ஊரெங்கும் கலவரம் வெடிக்கிறது. இஸ்லாமியர்களின் கடைகளும், வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன. முகமதலியின் கடையும் தீக்கிரையாகிறது. அவர் மகள் ஷாகிராவுக்காக ஆசையாகக் கட்டி வரும் வீட்டையும் இடித்து நாசமாக்குகிறார்கள். பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பற்காக ஷாகிராவை அவளின் கைக்குழந்தையுடன் முகாமில் அடைக்கிறார்கள்.
ஊரில் போராட்டம் வெடிக்கிறது. டில்லியில் ஷாகின் பாக் எனுமிடத்தில் நடந்த போராட்டம்போல் இரவும், பகலும் பந்தலில் அமர்ந்து இடைவிடாது அறப்போராட்டம் நடக்கிகிறது. போராட்டத்துக்கு ஆதரவாக இந்துக்களும் நிதியுதவி அளிக்கின்றனர். கலவரம் முற்றுகிறது. முகமதலி, அவர் மனைவி ஜைதூன் மற்றும் நாற்பதுக்கும் மேலானவர்கள் இறக்கிறார்கள். ஷாகிராவை இறுதிவரை முகாமிலிருந்து மீட்க முடியவில்லை. முகாமில் இருக்கும் குழந்தைகளை விடுவிக்கலாம் என்ற சட்டம் வருகிறது. இச்சட்டத்தைக் காட்டி ஷாகிராவின் குழந்தையை அவள் கணவன் ரபிக் மீட்டெடுத்துச் செல்கிறான். ஷாகிராவின் பெற்றோர்கள் கலவரத்தில் இறந்த செய்தியை அவளிடம் சொல்லாமலேயே செல்கிறான்.
நாவலாசிரியர் கரீம் இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் தோன்றியிருக்கும் வஹாபியிசம் எனும் அடிப்படைவாதம் செய்திடும் தீமைகளையும் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. ‘’தர்காவுக்குப் போகாதீங்க, கல்யாணத்துக்கு தானிய பந்தக்கால் போடாதீங்க, வாழை மரம் கட்டாதீங்க, ஃபாத்தியா பண்ணாதீங்க, இதுவெல்லாம் ஹராம், நரகத்துக்குச் செல்வீர்கள்’’ என்று சொல்லி பயமுறுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதியையும் நாவலில் பார்க்கிறோம். நாட்டில் நிலவிடும் வெறுப்பு அரசியலுக்குப் பலியாகாமல் இன்னும் மதநல்லிணக்கம் பேணும் இந்துக்களையும் நாவலில் காண்கிறோம். குமார், பழனிச்சாமி, மூர்த்தி. ஜானகி போன்ற நல்ல மனங்கொண்ட இந்துக்கள் பாதிக்கப்படும் இஸ்லாமியர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள்.
நாவலாசிரியர் கரீம் கடந்த பத்தாண்டுகளில் மோடி ஆட்சியில் நடந்திடும் கொடுமைகள் அனைத்தையும் நாவலில் சொல்லிடத் துடிக்கும் மனோபாவம் வெளிப்படுகிறது. இந்நாவலின் நிகழ்வுகளுக்கு அப்பால் மும்பைச் சிறைச்சாலையில் பாதிரியார் ஸ்டான் சாமியை அநியாயமாகக் கொன்ற அரச பயங்கரவாதத்தையும் நாவலில் குறிப்பிடுகிறார். டில்லியில் படிக்கும் ஆய்வு மாணவி ஷர்மி போன்றோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகிச் சிறையில் வாடுவதையும், நீதி மன்றங்கள் இவர்களுக்கு ஜாமீன் மறுப்பதையும் சொல்லத் தவறவில்லை. அரசின் நற்பெயரைப் பெற வேண்டும் என்பதற்காக தீர்ப்புகளை மாற்றி எழுதும் நீதிபதிகளையும் சாடுகிறார்.
மனித உரிமைப் போராளியான கரீம் தன்னுடைய முதல் நாவலிலேயே சிறந்த எழுத்தாளராகப் பரிணமிக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகியாகவும் உள்ளார். ஏற்கனவே நிறையச் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ’தாழிடப்பட்ட கதவுகள்’, ’சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை’, ’அகல்யாவுக்கு ஒரு ரொட்டி’ ஆகிய இவரின் சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. ’முகாம்’ நாவலைத் தொடர்ந்து கரீம் மேலும் நல்ல நாவல்களை தமிழில் படைப்பார் என்பதில் ஐயமில்லை.
நூலின் தகவல்கள் :
நாவல் : முகாம்
ஆசிரியர் : அ.கரீம்
வெளியீடு: எதிர் வெளியீடு
விலை : ரூ.300/-
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/mugaam/
நூல் அறிமுகம் செய்பவர் :
பெ.விஜயகுமார்
ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர்
மதுரை- 18
Email: vijayakumarmuta@gmail.com
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

