’முகிலினி’ இரா.முருகவேளின் சூழலியல் விழிப்புணர்வு குறித்த நாவல் – பெ.விஜயகுமார்நூல்: முகிலினி
ஆசிரியர்: இரா.முருகவேள்
வெளியீடு: ஐம்பொழில் பதிப்பகம்
விலை: ₹333.00 INR*

சூழலியல் குறித்த விழிப்புணர்வு உலகெங்கிலும் பரவி வரும் காலமிது. சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து போராடுவதைப் பார்க்கிறோம். தமிழகத்திலேயே கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை, காவிரிப் படுகையில் மீத்தேன் தொழிற்சாலை இவற்றையெல்லாம் எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவது ஆறுதல் அளிக்கும் செய்திகளாகும். பெருமளவில் விளைநிலங்களை சீரழித்து அமைக்கப்படவிருக்கும் சென்னை-சேலம் எட்டுவழிச்சாலைக்கு எதிராகவும் இதுபோன்று நடக்கின்ற போராட்டங்கள் மக்களிடையே வளர்ச்சி குறித்த சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற செயல்பாடுகளே இந்தியாவில் உள்ள பல ஆறுகளும் பொலிவிழந்து போனதற்கு காரணமாகும். கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னரே ரவீந்திரநாத் தாகூர் ஆற்றின் குறுக்கே பெரிய அணைகள் கட்டி நீரின் இயல்பான ஓட்டத்தைத் தடுப்பது இயற்கைக்கு எதிரான செயல் என்பதை ‘முக்தா தாரா’ என்ற நாடகம் மூலம் பதிவு செய்துள்ளார். நர்மதா நதியின் குறுக்கே சர்தார் சரோவர் அணைத் திட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்தது. இத்திட்டத்திற்கு எதிராக மேதா பட்கர், பாபா ஆப்தே, அருந்ததி ராய் போன்றோர் நடத்திய போராட்டங்கள் வெற்றி பெறாவிட்டாலும் மக்களிடையே சூழலியல் குறித்த சிந்தனைகள் வளர உதவின.
தமிழகத்தில் பாலாறு, காவிரி, பவானி, நொய்யல், தாமிரபரணி, வைப்பாறு போன்ற ஆறுகளும் தொழிற்சாலைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகள் சீரழிக்கப்படும் அவலங்களைச் சித்தரித்து ஏராளமான புனைவிலக்கியங்கள் தமிழில் படைக்கப்படுகின்றன. திருப்பூர் நகரின் பின்னலாடைத் தொழிற்சாலைகளால் நொய்யல் ஆறு பாழடைந்த சோகத்தை சுப்ரபாரதி மணியன் ‘புத்துமண்’, ‘சாயத்திரை’ ஆகிய நாவல்கள் வழியே பதிவு செய்திருக்கிறார். விளாத்திகுளம் பகுதியில் உள்ள வைப்பாறு மணல் கொள்ளையர்களால் அலங்கோலமாக்கப்பட்டுள்ளதை பா.செயப்பிரகாசம் ‘மணல்’ நாவல் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார். வைகை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்விடங்களை இழந்து புலம் பெயர்ந்து சென்ற அவலத்தை வைரமுத்து ‘கள்ளிகாட்டு இதிகாசம்’ எனும் நாவலில் சொற்சித்திரமாகத் தீட்டியுள்ளார். சா.கந்தசாமியின் ‘சாயாவனம்’ நாவல் காட்டை அழித்து சர்க்கரை ஆலை கட்டும் கொடூரத்தைச் சித்தரிக்கிறது. ’காடோடி’ நாவலில் போர்னியா காடு அழிக்கப்பட்டதன் சாட்சியாக இருந்த தன்னுடைய அனுபவத்தை நக்கீரன் எழுதியுள்ளார். ’காடர்’ சிறுகதைத் தொகுப்பில் வே.பிரசாந்த் காடு சார்ந்த வாழ்க்கையில் நாம் பார்த்திராத பக்கங்களைத் திறந்து காட்டுகிறார். நாஞ்சில் நாட்டின் காடுகளுக்குள் நம்மை ராம் தங்கத்தின் ‘ராஜ வனம்’ நாவல் அழைத்துச் செல்கிறது. கானியலாளர் தியோடர் பாஸ்கரனின் பல புத்தகங்கள் சூழலியல் பற்றிய ஆழமான கருத்துகளை விவாதிக்கின்றன.

இந்த வரிசையில் இரா.முருகவேளின் ‘முகிலினி’ நாவல் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி கொங்கு நாட்டை வளப்படுத்தும் பவானி ஆறு அழிந்த அவலத்தை ஆவணப்படுத்துகிறது. பவானி என்பது வடமொழிச் சொல் என்பதால் அதற்கொரு அழகு தமிழில் பெயர் கொடுக்க வேண்டும் என்ற ஆசை மேலிட முகிலினி என்றழைக்கிறார் நாவலாசிரியர் இரா.முருகவேள். மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது படர்ந்து தவழும் முகில்களின் பின்னணியில் கொங்கு நாட்டை வளப்படுத்தி ஓடிய ஆறு என்பதால் அதனை முகிலினி என்றழைப்பது பொருத்தமானதே. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று கோயம்புத்தூரை அழைப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். தொழில் நகரமாக, டெக்ஸ்டைல் நகரமாக கோவை வளர்ந்த கதை மிகவும் சுவாரசியமானது. கோவை நகரின் நூற்றாண்டு கால வளர்ச்சியில் அடங்கியிருக்கிறது இந்த பவானி ஆற்றின் வீழ்ச்சி.1905இல் வெள்ளைக்காரர்கள் ஆட்சியின் போது கோவையில் செயற்கை இழை தயாரிக்கத் திட்டமிட இத்தாலியிலிருந்து பெர்னாடினோ என்ற தொழிலதிபர் ‘இத்தாலியானா விஸ்கோஸா’ என்ற நிறுவனத்தின் தூதுவராக வந்து சேர்வதில் தொடங்குகிறது நாவல். கண்ணம்ம நாயுடு-ரங்கம்மா தம்பதிகளின் புதல்வரான கஸ்தூரிசாமி தன்னுடைய முயற்சியில் கோவையில் செயற்கை இழை தயாரிக்கும் தொழிலைத் தொடங்கிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவருடைய நெருங்கிய நண்பர் ஜனார்த்தனனுடன் இணைந்து எடுக்கும் முயற்சியில் அவர் வெற்றி பெறுகிறார். அன்றிருந்த வெள்ளைக்கார அரசு கொடுத்த ஒத்துழைப்பில் அவருடைய கனவு நனவாகிறது. ‘டெக்கான் ரேயான்’ எனும் மிகப் பெரிய செயற்கை இழை ஆலை கோவையில் உருவாகிறது.

கோவை நகரின் தொடர் தொழில் வளர்ச்சிக்கு செயற்கை இழை தயாரிப்பு எவ்வாறு தவிர்க்க முடியாதது என்பதை கஸ்தூரிசாமி தொழிலதிபர்களின் கூட்டத்தில் விளக்குகிறார். பருத்தி நூலிலிருந்து ரேயான் எனப்படும் செயற்கை நூலுக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அவர் அந்தக் கூட்டத்தில் உணர்த்துகிறார். சூரிய ஒளியைப் போல் மின்னுவதாலும், பருத்தியைப் (காட்டன்) போல் பயன்படுவதாலும் (Sun Rays + Cotton) அந்த செயற்கை இழை ரேயான் என்ற பெயரிட்டு அழைக்கப்படுகிறது. ரேயான் இருவேறு வழிகளில் தயாரிக்கப்படுகிறது. மரத்துண்டுகளைக் கூழாக்கி இழை எடுப்பது ஒரு முறை. பெட்ரோலியப் பொருட்களிலிருந்து தயாரிப்பது இன்னொரு முறை. இந்தியாவின் காடுகளில் விளையும் மூங்கில், யூகலிப்டஸ் போன்ற மரங்களைப் பயன்படுத்தி செயற்கை நூல் தயாரிக்கலாம் என்று முடிவாகிறது. இந்தியாவின் பல காடுகளிலும் மிகப் பெரிய அளவில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. யூகலிப்டஸ் மரங்கள் நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் என்பது அன்று அறியப்படவில்லை. அறிந்திருந்தாலும் தொழிலதிபர்கள் அதைப்பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.
கஸ்தூரிசாமியின் டெக்கான் ரேயான் அசுர வளர்ச்சி பெறுகிறது. அருகமையில் இருக்கும் நீலமலைக் காடுகளில் வெட்டப்பட்ட மரங்கள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. ’டெக்கான் ரேயான்’ ஆலையின் பசியைத் தீர்க்க இன்னும் பல பகுதிகளிலிருந்தும் மரங்கள் கொண்டு வரப்படுகின்றன. ரேயான் தயாரிப்புக்கு வெறும் மரத்துண்டுகள் மட்டும் போதாது. நாளொன்றுக்கு பல லட்சம் கன அடி தண்ணீரும் தேவை. பவானி ஆற்றங்கரையில் உயர்ந்து எழுந்திருக்கும் டெக்கான் ரேயான் ஆலை ஆற்றிலிருந்து அளவின்றி தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. அதே அளவிற்கு சற்றும் குறையாமல் கழிவு நீரை ஆற்றில் கலக்கிறது. தொழில் வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட வேலை வாய்ப்பு இவற்றை மட்டுமே கணக்கில் கொண்ட சமூகம் இவ்வளர்ச்சியின் பின்விளைவுகளைப் பற்றியும், இந்த வளர்ச்சிக்காகத் தரப்படும் மிகப் பெரிய விலையைப் பற்றியும் சிந்திப்பதே இல்லை.

ஆம்: பவானி ஆறு அழிவை நோக்கி விரைந்தது. தொலைதூரம் கடந்த பின்னரே நிலைமை புரிந்தது. மில்லை மூடச் சொல்லி நீண்ட நெடிய போராட்டங்கள் நடக்கின்றன. துப்பாக்கிச் சூடு, உயிர்ப்பலி எல்லாம் நடந்தேறிய பிறகு மில் மூடப்படுகிறது. அது காலம் கடந்து எடுக்கப்படும் முடிவு. ஆங்கிலத்தில் கால இடைவெளியைக் குறிப்பிட “Much water has flown under the bridge” என்று சொல்வார்கள். ஆனால் பவானி ஆற்றுக்கு ஏற்பட்ட அழிவைக் குறிப்பிடும்போது “Much water has been polluted under the bridge” என்று சொல்லிட வேண்டும். முகிலினி நாவலில் ’டெக்கான் ரேயான்’ கதையை மட்டும் ஆசிரியர் முருகவேள் சொல்லிடவில்லை. ஆலையின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் பங்கேற்ற எண்ணற்ற மாந்தர்களின் கதையையும் அவர் சொல்லிச் செல்கிறார். மில் முதலாளி கஸ்தூரிசாமி-சௌதாமினி குடும்பத்திலும் அதன் தொடக்க கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஊழியர் ராஜு-மரகதம் குடும்பத்திலும் நிகழும் சம்பவங்களை சுவைபடக் கூறி நாவலை உணர்ச்சிப் பூர்வமாக்குகிறார்.கோவை நகரின் நூற்றாண்டு கால அரசியல், பொருளாதாரம், சமூகப் பிரச்சனைகளை அலசுகிறார். வெள்ளைக்காரர்கள், காங்கிரஸ்காரர்கள், திராவிடக் கட்சியினர் என்று மூன்று வேறுபட்ட ஆட்சி அதிகாரங்களின் கீழ் தமிழகம் அடைந்த மாற்றங்கள் குறித்துப் பேசுகிறார். ராஜாஜி திணிக்க முயன்ற குலக் கல்வித் திட்டம், 1950-60களில் தமிழகத்தில் பாய்ச்சல் வேகத்தில் நடந்த திமுகவின் வளர்ச்சி, எமர்ஜென்சி கால அடக்குமுறை, வெள்ளித்திரை கதாநாயகன் எம்.ஜி.ஆர் அரசியல் வானில் மின்னியது, 1950களின் தொடக்கத்தில் ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சி கொண்டிருந்த செல்வாக்கு, 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் ஏற்பட்ட அரிசிப் பஞ்சம், ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சியில் ஏற்பட்ட பிளவு, 1990களில் தொடங்கி இன்று வரை கோலோச்சும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, அது உருவாக்கியுள்ள கார்ப்பரேட் கலாச்சாரம் என்று தமிழக அரசியலின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை முகிலினி நாவல் கண் முன்னே கொண்டு வருகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு ராஜு-மரகதம் தம்பதிகளின் அன்னியோன்னியமான வாழ்க்கைச் சித்தரிப்பு நாவலுக்கு மெருகூட்டுகிறது. வெவ்வேறு அரசியல் அடையாளங்களுடன் இருந்தாலும் நட்பிற்கான அடையாளமாகவே நண்பர்கள் ராஜு-ஆரான் திகழ்கிறார்கள். திமுக அனுதாபியான ராஜுவின் ஆர்வமெல்லாம் தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கடவுள் முருகன் என்றிருக்கிறது. ஆரான் பொதுவுடைமை சிந்தாந்தத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக விளங்குகிறார். ராஜு இறந்த பின்னரும் தன்னுடைய நண்பனின் குடும்பத்தினரிடம் பாசத்துடன் பழகி ஆரான் தொடர்பில் இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ராஜு இறந்த நாள் அன்று ஆரான் அழைக்கப்படுகிறார். அவரின் தலைமையிலேயே சடங்குகள் நடக்கின்றன.

ராஜு-மரகதம் தம்பதிகளின் ஒரே மகள் மணிமேகலை, அவளின் மகள் ஆனந்தி, மகன் கௌதம் என்று மூன்று தலைமுறையினரைக் காண்கிறோம். கௌதம்-வர்ஷினி காதல் மென்மையுடன் வர்ணிக்கப்படுகிறது. நண்பன் திருநாவுக்கரசுடன் சேர்ந்து வழக்கறிஞரான கௌதம் இயற்கை வேளாண்மையில் ஈடுபடுகிறான். ஐ.டி. வேலையை விட்டுவிட்டு திருநாவுக்கரசு அர்ப்பணிப்போடு இயற்கை வேளாண்மையில் ஆர்வம் காட்டுவது நண்பன் கௌதமுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்குமே பிரமிப்பூட்டுகிறது. வழக்கறிஞர் தொழிலில் கௌதமுக்கு இருக்கும் திறமையைக் காட்டிட நாவலாசிரியர் சிரமப்பட்டு மெனக்கெடுவது தெரிகிறது. கௌதம் டெக்கான் ரேயான் ஆலையில் நடக்கும் திருட்டு வழக்கில் சிக்கிக் கொண்ட நண்பன் சந்துருவை தன்னுடைய திறமையான வாதத்தால் வெற்றி பெற்று காப்பாற்றுகிறான். காதலி வர்ஷினியின் பாராட்டுதலையும் பெறுகிறான். நாவலின் கதாநாயகன் யார்? டெக்கான் ரேயான் என்ற பிரம்மாண்டமான ஆலையை உருவாக்கிய கஸ்தூரிசாமியா? நாவலின் நூற்றாண்டு கால வரலாற்றுக்கு சிறிது காலம் நேரடி சாட்சியாகவும் பின்னர் மௌன சாட்சியாகவும் இருக்கும் ராஜுவா? அழகும், திறமையும், நேர்மையும் மிகுந்த வழக்கறிஞன் கௌதமா? இவர்கள் யாருமில்லை. முகிழினியே இந்த நாவலின் கதாநாயகி. அவளின் சோக முடிவே நாவலின் கருப்பொருளாகும்.கோவை நகரம் இருபத்தோராம் நூற்றாண்டில் சந்திக்கும் மாற்றங்களையும் நாவல் சுட்டிக் காட்டுகிறது. நம்மாழ்வார் வலியுறுத்திய இயற்கை வேளாண்மை குறித்து இன்றைய தலைமுறையினர் காட்டும் ஆர்வத்தையும் நாவல் குறிப்பிடுகிறது. இயற்கை வேளாண்மையிலும் கார்ப்பரேட் கழுகுகள் நுழைகின்றன. லாபம் கிடைக்குமெனில் முதலாளித்துவம் எதையும் விட்டுவைக்காது என்பதற்கிணங்க இயற்கை வேளாண்மையிலும் ஈடுபட்டு தன்னுடைய வணிகத் தந்திரங்களைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டுவதையும் நாவல் சுட்டிக் காட்டுகிறது.

மூடப்பட்டுள்ள டெக்கான் ரேயான் ஆலையின் தளவாடப் பொருட்கள் எல்லாம் களவாடப்படுகின்றன. ஒருகாலத்தில் பவானி ஆற்றின் கரையில் வளர்ச்சியின் அடையாளமாக நிமிர்ந்து நின்ற டெக்கான் ரேயான் ஆலை இன்று சிதைந்து கிடக்கிறது. ஆலையின் கோரப் பசிக்குப் பலியான பவானி ஆறும் பொலிவிழந்து காணப்படுகிறது. இரண்டுமே வளர்ச்சி குறித்த மனித இனத்தின் தவறான அணுகுமுறையின் அடையாளங்கள்!

— பெ.விஜயகுமார்