நூல் விமர்சனம் : புலியூர் முருகேசனின் மூக்குத்தி காசி (முப்பாலி) நாவல் – விஜயராணி மீனாட்சி

Mukkutthi Kasi (Muppali) Novel by Puliyur Murugesan Bookreview by Vijayarani Meenakshi. நூல் விமர்சனம் - புலியூர் முருகேசனின் மூக்குத்தி காசி (முப்பாலி) நாவல் – விஜயராணி மீனாட்சி
பதின்ம வயதில் வீட்டில் பைண்டிங் செய்து வைத்திருந்த சு. சமுத்திரம் எழுதிய “வாடாமல்லி” வாசிக்கும் வரை மூன்றாம் பாலினம் பற்றி அறிந்திருக்கவில்லை.

படித்து அதிர்ந்ததோடு அவர்களின் துயர்மிகு வாழ்க்கைப்பாடுகளால் இன்றளவும் மனம் துயரப்படும் அதேவேளையில் மெல்லமெல்ல அவர்களுக்கான கல்வி வேலைவாய்ப்பு சமூக அந்தஸ்து என சற்றே அன்றளவு இல்லாவிட்டாலும் இன்று முன்னேற்றம் கண்டிருப்பதும் பரவலாக புரிதலுணர்வு ஏற்பட்டிருப்பதும் மறுக்கயியலாது. தோழர் புலியூர் முருகேசன் எழுதியுள்ள இந்த நாவல் மூன்றாம் பாலின ‘மூக்குத்தி காசி’யின் வாழ்க்கைப்பாட்டினை அன்பிலூறிய தகவல் களஞ்சியமான அவன் மனதோடு சொல்கிறார்.

டீ குடிப்பவர்களின் எச்சில் கிளாஸ் கழுவும் வாழ்க்கை தொடங்கி டீக்கடை வைத்து நல்ல அளவில் வருமானம் ஈட்டும் நிலைக்கு உயர்வது மனதுக்கு மகிழ்வளிக்கிறது. இருந்தபோதிலும் எழுத்தாளர்களைக் கொண்டாடிக் களிக்கிறேன் பேர்வழியென்று தன் வருமானத்தையெல்லாம் வெள்ளந்தியாய் இருப்பதாலேயே கேட்டபோதெல்லாம் கொடுத்துக்கொடுத்தே அழிக்கிறான். நவீனக் கவிஞன் எனும் போர்வையில் காசியிடம் ஒட்டக்கறக்கிறான் அந்த எழுத்தாளன். நமக்கு வாசிக்கும்போதே முட்டாள்தனமாக அத்தனையும் அள்ளிக்கொடுக்கிறானே என்று கோபம்கூட வருகிறது. நீதிமன்றங்களின் இயக்கத்தையும் காவல்துறையின் செயல்களையும் நிதர்சனமாகத் தோலுரிக்கிறது நாவல்.

ஆண்பெண் உறவை பட்டினத்தார் பாடிய “ஊற்றைச் சரீரத்தை” எனத் தொடங்கும் வரிகளைச் சொல்லி தாயைச் சிதைமூட்டுகையில் தவித்து அலறுவதையும் தாரத்தை (பெண்ணை) இழிவுபடுத்தும் வகையிலான மனதை, அதாவது தன் அன்னையை உச்சத்தில் வைத்து பூஜிப்பதும் தன் குழந்தையின் அன்னையை பாவப்பிண்டமாய் எண்ணி அருவருப்பதுமான ஆண் மனம் பிறழ்ந்தவன் சித்தனில்லை என்று அக்னியைக் கக்குகிறார். சாதியைச் சாடுகிறார். புனிதங்களைப் போட்டுடைக்கிறார். போகிறபோக்கில் மூக்குத்திக்காசி கதாசிரியராகி கதை எழுதுகிறார். சமகால நிகழ்வைப் பகடியாடிப் பந்தாடியிருக்கிறார். முகநூலையும் விட்டுவைக்கவில்லை.

ஒரு அத்தியாயத்தில் ‘காற்றுவங்கி’ பற்றியெல்லாம் பீதியைக் கிளப்பி சுஜாதாவின் எழுத்துநடையையும் புனைவையும் நினைவுபடுத்தி விடுகிறார். கூடவே மற்றொரு அத்தியாயத்தில் என் ஜி ஓ. க்களின் முகத்தைத் தோலுரித்துக் காட்டமாகக் காட்டியது மட்டுமின்றி அந்தக் கதாபாத்திரத்திற்கான பெயரே குறியீடாகிறது. இந்தப்பகுதி முழுவதும் வாசித்துத் தெளியவேண்டிய காத்திரமான வரிகள். கம்யூனிசத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் குடம்பாலில் துளிவிசமாகத்தான் ஏகாதிபத்தியம்.

மூக்குத்திக்காசி எழுதிய இரண்டாவது கதை ஐந்தாண்டுகளுக்கு முன்பான அரசியல் அரசியின் கதையில் ஊடாடிய கந்தர கோலத்தை அந்த நிகழ்வின் நிதர்சனத்தைச் சாடுகிறார்.

இறுதியாக மூக்குத்திக்காசி கையிலெடுத்த அறுத்தெறிதல் ஒரு இயக்கமாக நிகழ்த்தப்பட்டால் (இருவேறு நிலைப்பாடுகள் இருப்பினும்) ஆச்சர்யமில்லை. தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும்தானே!?? கூடுதிரும்பிய மூக்குத்திக்காசியை மூன்றாம்பாலினமென்று வேற்றுமைப்படுத்த இயலாத நல்லமனதுக்காரன் அவ்வளவே!!!

மூக்குத்தி காசி (முப்பாலி)
ஆசிரியர் : புலியூர் முருகேசன்,
குறி வெளியீடு (மறுபதிப்பு)
விலை : ரூ.190/-

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.