மதுரை அருகிலுள்ள அரிட்டாபட்டியைச் சேர்ந்த முத்து மீனாள் என்னும் பெண்மணியின் சுயசரிதை.
ஐந்தாறு வயதில் தொழுநோயின் அறிகுறிகள் தென்பட மதுரையில் ஒரு கிறித்துவ மிஷனரி நடத்திய தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்து மேலே படிக்க விரும்பி கும்பகோணத்தில் கிறித்துவ மிஷனரியால் நடத்தப்பட்ட மருத்துவமனையுடன் கூடிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். மேலும் ஆறாண்டுகள் மருந்து மாத்திரைகள் சாப்பிட தொழுநோயும் பூரண குணமடைந்து தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறார்.
அங்கு பத்து மற்றும் பனிரண்டாம் வகுப்பு வரை பயின்றார். பின் ஆசிரியையாக பணியாற்றி திருமணம் செய்யும் வரையான காலத்திய தனது எளிமையான வாழ்வை எளிய மொழியில் பதிவு செய்துள்ளார் முத்து மீனாள்.
ஹிட்லரின் சுயசரிதை மெயின் காம்ப்.
காந்தியின் சுயசரிதை சத்திய சோதனை.
…..
ஏன் சுயசரிதைகளை மிகப் பிரபலமானவர்கள் மட்டும் தான் எழுத வேண்டுமா?
தற்போது நிறைய எளிய மனிதர்கள் தங்களது சுயசரிதையை எளிமையாக எழுதிச் செல்கிறார்கள். அது தற்போது பலரால் விரும்பியும் வாசிக்கப் படுகிறது.
எடுத்துக்காட்டாக, கேரளாவைச் சேர்ந்த பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலாவின் சுயசரிதை பலராலும் வாசிக்கப்பட்டதைச் சொல்லலாம்.
முள்… இளவயதில் தொழுநோய் தாக்கி மீண்ட, பனிரண்டாம் வகுப்பில் வேதியியலில் தோல்வியடைந்து பின் முயன்று வெற்றிபெற்ற எளிய கிரமாத்துப் பெண் தனது வாழ்வின் சம்பவங்களையும், தன்னைச் சுற்றியுள்ளவர்கள், குறிப்பாக தன்னைச் சுற்றி இருந்த பெண்களின் ஒளி மிகுந்த மற்றும் இருண்ட பக்கங்களை எளிய மொழியில் எழுதிச் சென்றுள்ளார்.
இதில் தன்னைச் சுற்றி இருந்த பெண்களின்,
காதல்கள்
காமங்கள்
கர்ப்பங்கள்
கருக்கலைப்புகள்
விடுதியில் நடைபெறும் ஓரினச்சேர்க்கைகள் என அனைத்தையும் தொட்டுச் செல்கிறார்.
வாசித்துப் பாருங்களேன்.
நன்றி!
இவண்…
இராமமூர்த்தி நாகராஜன்.
நூல் : முள்
ஆசிரியர்: முத்துமீனாள்
வகைமை: சுயசரிதை.
பதிப்பகம்: ஆழி பதிப்பகம்(2009ஆம் ஆண்டு பதிப்பு)
விலை: ரூ.60/-
பக்கங்கள்: 108
அருமை. படிக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது.