இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி (1920-1950) அண்ணல் காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலைப் போரும், பொதுவுடைமை இயக்கத்தின் வீச்சும் வீரியம் பெற்றிருந்த காலம். தத்துவார்த்த விவாதங்களும், அரசியல் இயக்கங்களும் நிறைந்திருந்து மக்களை உணர்ச்சியின் விளிம்புகளில் வைத்திருந்த காலம். ஐரோப்பிய நாடுகள் இரண்டு உலகப் போர்களின் அழிவுகளையும், பாசிசத்தின் இன வெறி கொடூரங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலம்.
சூரியன் அஸ்தமிக்காத பேரரசு என்று கொக்கரித்துக் கொண்டிருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தன் வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருந்த காலம். இரண்டு உலகப் போர்களையும் கடந்து சோவியத் யூனியன் லெனின், ஸ்டாலின் தலைமையில் முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட்ட காலம் இக்காலத்தின் சாட்சியாகவும், இக்காலத்தின் நிகழ்வுகளை தன் எழுத்துக்கள் மூலம் ஆவணப்படுத்தியவராகவும் திகழ்ந்தவர் முல்க்ராஜ் ஆனந்த்.

முல்க்ராஜ் ஆனந்த் 1905இல் இன்று பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவர் நகரில் ஒரு மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக இலண்டன் நகர் சென்று அங்கிருந்த முற்போக்கு சிந்தனையாளர்களுடன் இணைந்து இந்திய விடுதலைக்கான தாகத்தைப் பெற்றவர். இலண்டனில் அன்றிருந்த ப்ளூம்ஸ்புரி க்ரூப் எனப்படும் இலக்கிய வட்டத்தின் உறுப்பினர்களான டி.எஸ்.இலியட், லியோனார்டு- வெர்ஜினியா உல்ஃப் தம்பதியினர், இ.எம்.ஃபார்ஸ்டர், ஜார்ஜ் ஆர்வல், ஜான் ஸ்டெரச்சி ஆகியோருடன் அறிவார்ந்த உறவை வளர்த்திருந்தார். இலண்டனிலிருந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய இடதுசாரி சிந்தனையாளர்களின் நட்பையும் பெற்றிருந்தார்.
அன்று பெற்ற சோசலிச கோட்பாடுகளின் மீதான ஈர்ப்பு வாழ்வின் இறுதிவரை நிலைத்திருந்தது. 1937 இல் அயர்லாந்து சென்று அங்கு நடந்த விடுதலை இயக்கத்தைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டார். அதனை ஆவணப்படுத்திய ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் W.B.ஏட்ஸ் ஆகியோரின் எழுத்துக்களாலும் ஈர்க்கப்பட்டார். 1930 களில் ஸ்பெயின் நாட்டின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றிட ஸ்பெயின் சென்றார். மார்க்ஸ் இந்திய நிலைமை குறித்து எழுதியிருந்த குறிப்புகளை படிந்திருந்த முல்க்ராஜ் ஆனந்த் காலனிய ஆதிக்கம் இந்திய பொருளாதாரத்தை எவ்வாறு சிதைத்திருந்தது என்பதை அறிந்தார். இந்தியாவில் நிலவியிருந்த சாதிய அடுக்குமானத்தின் கீழ் தட்டிலிருந்த தாழ்த்தப்பட்டோர் அனுபவித்து வந்த தீண்டாமைக் கொடுமை குறித்தும் மன வேதனைப்பட்டார்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று ஒரு முறை காவல்துறையின் வன்முறையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அன்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நேரடியான தொடர்பில் இல்லாவிட்டாலும் அவருடைய சிந்தனை முழுவதும் பொதுவுடைமை சார்ந்ததாகவே இருந்தது. இயல்பாகவே அநீதி கண்டு வெகுண்டெழும் போராளியான ஆனந்த் எழுத்தையே ஆயுதமாக்கினார்.
1930இல் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தை (AIPWA) தொடங்கி அதனை நீண்ட காலம் வழிநடத்தினார். இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் எழுதிய முப்பதினாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட இச்சங்கத்தின் அறிக்கையை ஆனந்த் எழுதினார். இச்சங்கம் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துடன் இணைந்து மதச்சார்பற்ற, சோசலிச இந்தியாவை நிர்மானிக்கும் கனவுகளுடன் செயல்பட்டது. 1937இல் மாட்ரிட் நகரில் ஜெர்மனியின் பாசிசத்தைக் கண்டித்து நடந்த உலக எழுத்தாளர்கள் மாநாட்டில் இந்திய எழுத்தாளர்கள் சார்பாகப் ஆனந்த் பங்கேற்றுப் பேசினார்.
1935இல் அவர் எழுதிய ”தீண்டப்படாதவர்” ( Untouchable) நாவல் இந்தியாவின் சாதியக் கொடுமையை உலகறியச் செய்தது. பத்தொன்பது பதிப்பாளர்கள் வெளியிட மறுத்த நாவல் ஆங்கில இலக்கிய ஆளுமை இ.எம்.ஃப்ர்ஸ்டரின் முன்னுரையைப் பெற்ற பின்னரே வெளியானது. ஆனந்தின் தந்தை ராணுவத்தில் பணியாற்றிய போது ராணுவக் குடியிருப்பில் இருந்த தாழ்த்தப்பட்ட குழந்தைகளுடன் எந்தவொரு பாகுபாடுமின்றி பழகி, விளையாடியவர் ஆனந்த். அவரின் தந்தை இந்து மதத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முற்பட்ட ஆரிய சமாஜத்தில் உறுப்பினராக இருந்தார்.

மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்டிருந்த ஆனந்த் ஆரிய சமாஜத்தின் இஸ்லாமிய வெறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். சனாதன இந்து மதம் உயர்த்திப் பிடிக்கும் வர்ணாஸ்ரமக் கொள்கையை அறவே வெறுத்த ஆனந்த் “தீண்டப்படாதவர்” நாவலில் சாதியக் கட்டுமானத்தின் அடிவாரத்தையே கேள்விக்குட்படுத்துகிறார். ’பக்கா’ எனும் சிறுவன் துப்புரவுத் தொழிலாளியாகப் படும்பாட்டை இந்நாவல் சித்தரிக்கிறது. காலம், பொருள், இடம் அனைத்தும் ஒன்றினைந்து ஒரு செவ்வியல் இலக்கியமாக இந்நாவல் பரிணமிக்கிறது. காலையிலிருந்து சொல்லொன்னா துயரங்களைச் சந்திக்கும் சிறுவன் மாலையில் தண்ணீரைப் பாய்ச்சி தானே கழுவிக் கொள்ளும் நவீன கக்கூஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தியைக் கேட்டு நிம்மதியடைவதாக நாவல் முடிவடைகிறது.
அதேபோல் ‘கூலி’ (Coolie) நாவலில் ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவிக்கும் கூலித் தொழிலாளி வாழ்வைத் தேடி ஊர் ஊராக அலைந்து திரிவதைக் காட்சிப்படுத்துகிறார். ஆங்கில நாவலாசிரியர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய ”ஆலிவர் டிவிஸ்ட்” நாவலில் அனாதைச் சிறுவன் அலைக்கழிக்கப்படுவதுபோல் ’கூலி’ நாவலில் முனூ எனும் அனாதைச் சிறுவன் எல்லோராலும் வஞ்சிக்கப்பட்டு இறுதியில் மும்பை நகரில் ஒரு டெக்ஸ்டைல் மில்லில் சேருகிறான். மில் தொழிலாளிகளின் போராட்டத்தை மதவெறியைத் தூண்டி சீர்குலைப்பதைக் காண்கிறோம். வாழ்நாள் முழுவதும் கவலைகளன்றி வேறேதும் அறியாத சிறுவன் முனூ இளம் வயதில் மரணத்தைத் தழுவும் சோகக் கதையைச் சொல்லிடும் காவியமாகிறது ’கூலி’.
”அக்ராஸ் தி பிளாக் வாட்டர்ஸ்” (Across the Blackwaters) என்ற நாவல் முதல் உலகப் போரில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து சென்று மடிந்த இளைஞர்களைப் பற்றியது. அந்நிய மண்ணில், தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத போரில் கலந்து கொண்டு இன்னுயிர் ஈந்த இந்த இந்தியப் படை வீரர்களின் சோக வரலாற்றைச் சொல்கிறது. ‘டூ லீவ்ஸ் அண்ட் எ பட்’ (Two Leaves and a Bud) என்ற நாவல் அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் அடிமைகளாக நடத்தப்பட்ட, புலம் பெயர்ந்த உழைப்பாளிகளின் கதையாகும். கங்கு என்ற ஏழை விவசாயி தேயிலைத் தோட்ட ஏஜெண்டுகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு ஆளாகி குடும்பத்துடன் அஸ்ஸாம் சென்று சீரழிந்த அவலத்தைப் படம் பிடித்துக்காட்டுகிறது.
எந்தவித வசதிகளும் இல்லாத தேயிலைத் தோட்டத்தில் காலரா நோயினால் பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாக தொழிலாளிகள் செத்து மடிந்த போதும் கலங்காதிருந்த வெள்ளைக்கார முதலாளியின் கொடூரத்தை காட்சிப்படுத்தும் நாவல். ஆங்கிலேய தேயிலைத் தோட்ட முதலாளிகளின் சுரண்டலுக்கு ஆளான அப்பாவி மக்களின் இச்சோக நாவல் ’ராஹி’ என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.”தி சோர்டு அன் தி சிக்கல்” (The Sword and the Sickle) நாவல் பொதுவுடைமைத் தத்துவத்தை நேரடியாகப் பேசும் அரசியல் நாவலாகும்.
சோசலிச யதார்த்தவாத சிறுகதைகளையும் நிறைய எழுதிக் குவித்த ஆனந்த் சர்வதேச அமைதிக்கான விருது, சாகித்திய அகாதமி விருது, பத்மபூஷன் விருது போன்ற விருதுகளையும் பெற்று இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் மத்தியில் கம்பீரமாக உலா வந்தார். கலை, சிற்பம், இலக்கியம், வரலாறு என்று பல துறைகளிலும் தடம் பதித்த முல்க்ராஜ் ஆனந்த் தன்னுடைய 98ஆவது வயதில் 2004 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் இன்றைய நேரத்தில் நினைவுகூரப்பட வேண்டிய மிக முக்கியமான எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த்.
– பேரா.பெ.விஜயகுமார்.