முல்லைவாசன் கவிதைகள்

முல்லைவாசன் கவிதைகள்

 

இட ஒதுக்கீடு
10 சதவீத இட ஒதுக்கீடு என்னானது ...
தொப்புள் மறைக்காத
துணிக்கொன்று
அக்குள் நாற்றத்துக்கு
மற்றொன்று.

உயர்த்திக்கொள்ள
செருப்புக்கொன்று
வளர்ச்சிக்கு
காம்ப்ளான் மற்றொன்று.

வீசி எறியும்
தீட்டுத்துணிக்கொன்று
உதிரும் முடிக்கு மற்றொன்று

முகப்பருவக்கொன்று
சிகப்பழகு இளமைக்கு
மற்றொன்று

விளம்பரங்களில்
உனக்கான இட ஒதுக்கீடு
யார் கண்ணையும் உறுத்தவில்லை
யார் காதையும் அடைக்கவில்லை

கரண்டிகள்
ஓவியம் வரைவதற்கு ஒரு மர கரண்டியின் ...
கரண்டிகள்
உள்ளே இருந்தும் ஆதரிக்கும்
வெளியே இருந்தும் ஆதரிக்கும்
கவிழ்க்கும் வேலை
கரண்டிகளுக்கு தெரியாது.

துழாவவும்
திருப்பிப்போடவும்
துணைப்பாத்திரம் வகிக்கும்
கரண்டிகளை யாரும்
தூக்கிப்பிடிப்பதே இல்லை.

கொள்ளுவன கொள்வதும்
தள்ளுவன தள்ளுவதும்
கரண்டிகள்
காலந்தோறும் கடைபிடிக்கும்
கறாரான உத்திகள்

அள்ளி ஊற்றும் கரண்டிகளுக்குள்
ஆயிரம் கனவுகள்.
எல்லா கனவுகளுமே
கறிவேப்பிலையோடு
இரண்டற கலந்துவிடுகின்றன.

கரண்டிகளின் வாய்
திக்கு வாயாகவோ
ஊமை வாயாகவோ இருந்ததில்லை
பறக்கும் தட்டுகள்
உண்மையோ பொய்யோ தெரியாது.
கரண்டிகள் பேசும்.

மலை
உலகின் நீளமான மலை தொடர்ச்சி - டாப் 10 ...

கவிதையின் அழகை
கவ்விப்பிடித்தபடி
ஓயாமல் நிற்கும்
மலையின் பேரழகில்
பெருமூச்சோடு மிதக்கிறது மேகங்கள்

துடிக்கும் கனவுகளின்
சலங்கை ஒலி.
மலையின் கம்பீரத்தை மொய்த்தபடி
மொண்டு குடிக்கும் காற்று.
அதற்கோ தடுமாறும் கால்கள் இல்லை.

மலையின் அசட்டுத்தனம்
என்னவாக இருக்கும் ?
சூரியனை
தலைப்பாகையில் தடுத்தாட்கொண்ட
ஒரு கிழவனும்
அவன் மாடும்
அசைபோடும் கண்களில்
தவமிருக்கும்.

இப்போது
சுற்றுப்பாதை எங்கும்
அசையும் மலை
பூதவுடலை பிய்த்துப்போட்டபடி
படபடக்கும் வெடியோசை.

புகை கக்கும் லாரிகளில்
பிணமாய் போகும் மணல்.
இப்போது
அசிங்கமாய் இருக்கிறது கவிதை.

மழை

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ...
துருத்திக்கொண்டிருக்கும் கம்பி
குடையின் ஓட்டையில்
குதித்ததும் மழை
விழுந்ததும் மழை
விழுவதும் எல்லாம் அழகா?
விவாதத்தில் விழுந்தேன் நான்.

முதல்மழை தொடும் ஸ்பரிசத்தை
யாரிடம் சொல்வது.?
மழையிடம் சொன்னேன்
இரண்டாவது மழையில்
இப்போது நினைத்தேன்.

மழையில் நனைந்த
செல்போன் பாகங்களை
மளமளவென பிரித்தேன்.
இப்போது மழையின் பாகம் எது?
செல்போனின் பாகம் எது?

பாகப்பிரிவினையற்று
பெய்கிறது மழை.

அழகு
No photo description available.
நடக்கமுடியாதபடி
காலில் ஆணிகள்
நிமிரமுடியாதபடி
நெஞ்சில் ஆணிகள்
பிடுங்கமுடியாத ஆணிகளோடு
போகிறது பொழுதுகள்.

வளைந்து கொடுக்கும் ஆணிகளை
எந்த சுத்தியல்
முகம் கொடுத்து பேசுகிறது?

செருப்பில் இருந்தாலும்
சிலுவையில் இருந்தாலும்
குண்டீசிகளைபுபோல்
வழுக்கையாய் இருக்கும் வருத்தம்
ஆணிகளின் தலைகளுக்கு
வாய்த்ததே இல்லை.

அடிக்கப்படுவதற்காகவே
படைக்கப்படும் ஆணிகளுக்கு
தலை எழுத்து என்று
தனியாக இல்லை.

திருகு ஆணியோ
கம்பி ஆணியோ
வெளியே துருத்திக்கொண்டிருக்கும்
ஆணிகளுக்கு
துளியும் மரியாதை இல்லை.

அடக்கமாய் இருக்கும்
ஆணிகளின் தரிசனமே
அழகுக்கு அழகு.
——

கவிஞர்.முல்லைவாசன்

தமுஎகச
தலைவர்
வேலூர் மாவட்டம்.
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *