அதிகாரம் படைத்தோர் அநீதி செய்தால் என்னவாகும் என்பதற்கு வரலாறு மீண்டும் மீண்டும் உதாரணங்களைக் கொடுத்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளாய்ட் ஒரு போலீஸ்காரனால் கழுத்து அழுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். அது போல் உலகம் முழுதும் ஒடுக்கப்பட்டோருக்காகக் குரல் கொடுப்பவர்கள் பலர் அதிகார வர்க்கத்தால் கொலை செய்யப்படுகின்றனர் அல்லது கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டு வாட விடப்படுகின்றனர். நாம் அறிந்தது தென்னாப்பிரிக்கச் சிறையில் நெல்சன் மண்டேலா 29 ஆண்டுகள் கழித்தார். ஆனால் அமெரிக்காவில் ஒருவர் சுமார் 40 ஆண்டுகளாக வெஞ்சிறையில் மரணதண்டனைக் கைதியாக வெந்து வருகிறார். அவர்தான் முமியா அபு ஜமால். 1981இல் ஒரு போலியான கொலைக்குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டவர் இன்றுவரை சிறையிலேயே கழித்து வருகிறார்.
மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் போன்று அமெரிக்காவில் தமது கருப்பின மக்களின் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் முமியா. 1981ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்பதாக் தேதியன்று அவர் கைது செய்யப்பட்ட போது முன்னோடி வானொலிப் பத்திரிகையாளராகவும், கருப்பினப் பத்திரிகையாளர் சங்கத்தின் பிலடெல்ஃபியா கிளைத் தலைவராகவும் இருந்தார். என்பிஆர், மியூச்சுவல் பிளேக் நெட்வொர்க், நேசனல் பிளேக் நெட்வொர்க், டபிள்யூ.யூ.ஹெச்.ஒய், இன்னும் பல வானொலி நிலையங்களில் அவர் ஆற்றிய பணிக்காக விருது பெற்றவர், பரவலாகப் பாராட்டப் பட்டவர். “குரலற்றவர்களின் குரலாக” இவர் பிலடெல்ஃபியா நகரில் இவர் அறியப்பட்டார்.
முன்பே தனது 14ஆவது வயதிலேயே ஜார்ஜ் வாலசை ஆதரித்து ஊர்வலம் நடந்த போது அதை எதிர்த்ததற்காகக் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார் ஜமால். பின்னர் கருப்புச் சிறுத்தைக் கட்சியில் செயல்பட்டார். பின்னர் ஒரு பத்திரிகையாளர்களாக பிலடெல்பியா காவல்துறையின் மீது கடும் விமர்சனங்களை வைத்தார். விடுமா அதிகார வர்க்கம். அவர் ஒரு போலீசைக் கொன்றதாகக் குற்றம் சாட்டிக் கைது செய்து மரணதண்டனையும் பெற்றுக் கொடுத்தது. ஆனால் பரவலாக எழுந்த கண்டனக்குரலால் 1995இல் நிறைவேற்றப்படவிருந்த மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் தொடர்ந்து இன்றுவரை அவர் மரணதண்டனைக் கைதிகள் வைக்கப்படும் சிறையில் வாடி வருகிறார்.
அவரது சிறை வாழ்க்கை 40 ஆண்டுகளாகத் தொடர்கிறது. நம்மால் இரண்டு மாதங்கள் வெளியே போகாமல் வைக்கப்பட்ட போது எவ்வளவு சித்ரவதையை மனதளவில் அனுபவித்தோம் என்பதை நாமறிவோம். 40 ஆண்டுகள் சிறை வாழ்க்கை, அதுவும் மரணதண்டனைக் கைதியாக என்றால்? நினைக்கவே மனம் நடுங்குகிறது.
ஆனால் அவர் தம்மைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டும், தொடர்ந்து படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும், அதிகார வர்க்கத்தின் மீது தாக்குதலைத் தொடுத்துக் கொண்டும் இருக்கிறார். சிறையில் இருந்து கொண்டே அவர் எழுதிய புத்தகமே அதிகார வர்க்கத்தின் முடியைப் பிடித்து ஆட்டி விட்டது என்றால் அவரது எழுத்து எவ்வளவு வீரியமாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
அவர் எழுதிய சில கட்டுரைகளை புத்தகமாக்கி வெளியிட்டுள்ளது சிந்தன் பதிப்பகம். அமெரிக்கச் சிறையில் வாடும் கருப்பின மக்களைப் பற்றிய பல புத்தகங்கள் வந்துள்ளன. அதில் நான் தற்போது சிந்தன் பதிப்பகத்திற்காக மொழிபெயர்த்து வரும் ‘சோல்டாட் சகோதரர்’ உம் ஒன்று. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் தோழர் மாதவ் இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி என்னிடம் கொடுத்தார். நான் ஏற்கனவே சோல்டாட் சகோதரரின் கட்டுரைகளைப் படித்து சிலிர்த்துப் போயிருந்தேன். இந்தக் கருப்பின மக்கள்தான் எவ்வளவு சிறந்த அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்று வியந்து போயிருந்தேன். எனது எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது முமியாவின் கட்டுரைகள். தனது மரணத்தை எதிர்நோக்கி இருக்கும்போதே கடைசி நிமிடத்தில் கூட லெனினின் ‘அரசும் புரட்சியும்’ படித்து முடித்து விட்டுத் தூக்கு மேடையில் ஏறிய பகத்சிங்கை நாமறிவோம். மரணதண்டனைக் கைதியாக இருந்து கொண்டே முமியா எழுதியிருக்கும் கட்டுரைகளைப் படிக்கையில் மேலும் மேலும் வியப்பு மேலிடுகிறது. வெளியில் இருந்து உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் கூட இவ்வளவு தெளிவாக சிந்திப்போமா என்று தெரியவில்லை.
இந்தப் புத்தகத்தை மூத்த மொழிபெயர்ப்பாளர் வை.கோவிந்தசாமி தமிழில் வழங்கியிருக்கிறார். வழக்கம் போலவே அது மொழிபெயர்ப்பாக இல்லாமல் ’தமிழிலேயே’ எழுதப்பட்டுள்ளது!
இந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தில் இதனை இரண்டே நாட்களில் படித்து முடித்தேன். அதிகார வர்க்கத்தின் கோர முகத்தைக் கிழித்து எறிகிறது அவரது எழுத்துக்கள். குறிப்பாக மதத்தைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரை நிச்சயமாக அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. லெனின் கூறிய ஒரு மேற்கோள் எனக்கு நினைவுக்கு வந்தது: “கடவுள் இருக்கிறார் என்றும், இல்லை என்றும் வாதிட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். இங்கே நிகழ் உலகம் என்று ஒன்று இருக்கிறது”. (மேற்கோள் கொஞ்சம் முன்னே, பின்னே இருக்கும். மன்னிக்கவும்.) முமியா இப்படிச் சொல்கிறார்:
”எதிர்காலம் குறித்தே அவை தீவீரமாகக் கரிசனப்படுவதால் நிகழ்காலத்தை மறந்து விடுகின்றன. இந்தப் பூமியில் தங்கள் உதவியோடு உருவாக்கப்பட்ட கொடிய நரகத்தைப் பார்க்காமல் கண்மூடிக் கொள்வதில் திருப்தி கொள்ளும் அளவிற்கு இந்தப் பிரசுர எழுத்தாளர்கள் சொர்க்கம் குறித்த எண்ணத்தில் மிகவும் போதையேறி இருக்கிறார்கள்.”
வாழ்க்கை மீது அவரது நம்பிக்கை இப்படிப் பேசுகிறது:
”வரலாறு முழுக்க நேர்மையானவர்களே தண்டிக்கப்பட்டு வருகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள விவிலிய அறிஞராக இருக்க வேண்டியதில்லை. கடைசி ஆயிரம் ஆண்டுகளாக பூமியானது அதிகாரத்திலிருப்பவர்களின் முழுச் சொத்தாக இருந்து வர, பணிவானவர்களுக்குக் கல்லறையே மரபுரிமையாகக் கிடைத்து வந்தது என்ற போதிலும் ஒருநாள் “பணிவானவர்களுக்கு” இந்த “பூமி மரபுரிமையாகக்” கிடைக்கப் போகிறது.”
அவரது நிறைந்த அறிவு ஒவ்வொரு கட்டுரையின் முன்பும் அவர் காட்டும் எடுத்துக்காட்டுகளில் சுடர் விடுகிறது.
அவரது ஒரு வாக்கியத்துடன் நிறைவு செய்வோம்:
“அவர்கள் என்னுடைய சாவை மட்டும் விரும்பவில்லை, நான் மௌனமாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.”
கவலைப்படாதீர்கள் முமியா, உங்கள் மௌனம் அதிகார வர்க்கத்தின் பெரும் கூச்சலை விட வலுவானது. அது ஒடுக்கப்பட்டவர்களை மீட்கும்.
கி. ரமேஷ்
புத்தகம்: முமியா – சிறையும் வாழ்வும்
சிந்தன் பதிப்பகம்
பக்கம்: 171
விலை: ரூ.150.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments