அமெரிக்காவில், 1897ஆம் ஆண்டு பிறந்த தான்டெர்ன் ஒயில்டெர், ஆரம்ப காலங்களில், நாடகம் எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவராகயிருந்தார். அவரின், ‘The Bridge of San Luis Ray’ என்ற இந்த நாவல் புக்கர் பரிசு பெற்றதோடு, மூன்று இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. 1975ஆம் ஆண்டில் மரணமடைந்த ஒயில்டெர் நவீன அமெரிக்க இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு, பெரு நாட்டில் தாவரக் கொடிவேர்களால் உருவாக்கப்பட்ட சென் லூயிஸ் ரே பாலம் அறுந்து விழுந்தது. அப்போது, பயணம் செய்த ஐவர் உயிரிழந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில், நூறு ஆண்டுகள் முன்னர் எழுதப்பட்டது இந்நாவல்.
ஐவரின் மரணம் தற்செயலானதா, காரணத்தோடு கடவுளால் நடத்தப்பட்டதா என சகோதரர் ஜூனிப்பரின் ஆய்வே நாவலாக விரிகிறது.
மகளை மட்டுமே தன்னுலகமாகக் கருதும் அழகற்ற டோனோமேரியா, இவளின் அன்பை ஏற்க மறுக்கும் மகள் டோனோகிளாரா, அனாதையாக துறவியம்மையரால் வளர்க்கப்படும் அன்பிற்கு ஏங்கும் சிறுவர்களான
பெபிடா, எஸ்தபென், மான்வெல், நாடக கலையின் மீது தீரா காதல் கொண்ட பயோமாமன், அன்பை உணர முடியாத நாடக காரிகை பெரிசோல், ஆகிய கதாபாத்திரங்களைக் கொண்டு, இந்நூலாசிரியர், மனித இயல்பின் நூதன அடுக்குகளை ஆராய்ந்து, அவர்களின் குணங்கள், ஆசைகள், செயல்பாடுகளை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.
வாழ்வின் அர்த்தம், வாழும்போது நாம் எத்தனை மனங்களில், நம் நற்செய்கையால், நல் வார்த்தைகளால் இடம்பிடித்திருக்கிறோம் என்பதில்தான் அர்த்தம் பொதிந்தாகத் திகழ்கிறதே தவிர பணத்தாலும், பதவியாலும், சாதனைகளாலுமல்ல என்ற பேருண்மையை எடுத்துரைப்பதால்தான், நூற்றாண்டைக் கடந்தும், தலைசிறந்த நாவல்களின் பட்டியலில் இந்நாவல், இன்றும் இடம்பெறுகிறது.
இவர்களின் வாழ்க்கையில், ஒருவரோடு ஒருவர் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை அறியும்போது மனிதனுக்கு ‘சமூக விலங்கு’ என்ற பதம் சாலப் பொருந்துவதோடு, அவனின் தனிப்பட்ட செயல், சமூகத்தின் விளைவுகளுக்குக் காரணியாக உருக் கொள்வதை உணரலாம்.
பாலத்தின் விபத்தில் இறந்தவர்களின், மூன்று உறவினர்கள் சந்திப்பதோடு கதை நிறைவடைகிறது. நாவல் முழுவதும், வாழ்க்கையின் எதிர்பாராதத் தருணங்கள் குறித்த தத்துவார்த்த விசாரணை விரவிக்கிடக்கின்றன. “அன்போடு நாம் எண்ணும் எண்ணங்கள் அவ் அன்புக்குரியவரைப் போய் சேருகின்றன. வாழ்வில் மிஞ்சுவது அன்பே. வாழ்வின் பொருள் அன்புதான்”. என்றும் நிலைத்திருக்கூடிய நாவலின் முக்கிய வரிகள். நன்றி!
நூலின் தகவல்
நூல் : “முறிந்த பாலம்” (மொழிப்பெயர்ப்பு புதினம்)
ஆசிரியர் : தோர்ன்டன் ஒயில்டர்
தமிழில் : ரா. நடராசன்
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்
வெளியான ஆண்டு : டிசம்பர் 2022
பக்கங்கள் : 144 பக்கங்கள்
விலை : ரூ 160/-
எழுதியவர்
பா. கெஜலட்சுமி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறப்பு தோழர். அன்பு தான் வாழ்வின் மையம் என்பதை அழகாக உணர்த்தும் விமர்சனம். மனமார்ந்த வாழ்த்துகள்