மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார் இசைக்கலைஞர் ஜெயபிரகாஷ். இசை வாழ்க்கை கட்டுரையைத் தான் இருக்கும் வாட்ஸ் அப் குழுக்கள், நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொண்டுள்ளேன் என்று உருக்கமான குரலில் ஆடியோ செய்தி அனுப்பி இருந்தார். முதல் நாள் திருமண வரவேற்பில் சாக்ஸஃபோன் கேட்க விட்டுப் போயிற்றே என்ற கவலை எனக்கு!

இதனிடையே, கட்டுரைத் தொடரை நிறைவு செய்வதாவது, எங்கள் அனுமதி பெற வேண்டாமா, கொடுத்து விடுவோமா என்று கட்டுரை வாசித்த அடுத்த நொடி குறுஞ்செய்தியை சீறி இருந்தார் என் பெரியப்பா மகள் சரளா. பகிர்வுகள் அனைத்தையும் உடனுக்குடன் வாசித்து, ரசித்து, அனுபவித்துக் கொண்டாடி மறுமொழி அனுப்பும் அவரது ஊக்கம் மறக்க இயலாதது. ‘அக்கா…தொடர் இப்போது முடிக்கல’ என்று பதில் அனுப்பவும், ‘அந்த பயம் இருக்கட்டும்’ என்று பதில் அனுப்பி நெகிழ வைத்தார்.

எங்கள் சொந்த ஊர் சொறையூர். செய்யார் – ஆரணி தடத்தில் மாம்பாக்கத்திலிருந்து கிளை பிரியும் சாலையில் வாழைப்பந்தல் வலது புறம் போகுமெனில் சொறையூர் இடது பக்கம் (அதாவது நம்ம பக்கம்!). என் பெரியப்பா வீட்டில் சனி, ஞாயிறு நிகழ்ச்சிகள் – குறிப்பாக பாப்பா மலர், சிறுவர் பூங்கா எல்லாம் விடாது கேட்டு, விடுகதைகளுக்கு விடை கண்டுபிடித்து வானொலி அண்ணாவுக்கு வாரம் தவறாமல் கடிதமும் எழுதுவார்கள் என் அக்காக்கள். சாந்தா, சந்திரா, சரளா, சரோ, சந்தானி, சம்பகா என்று வானொலியில் அடிக்கடி இசைப் பாடல் போல் ஒலிக்கும் அவர்களது பெயர்கள். ரசனை உள்ள மனிதர்கள் நிரம்பிய வீடு. இப்போதும் பெரியப்பா மகன்களில் ராமன் அண்ணனும், ரமணி அண்ணன் மகன் சுதர்சனமும், சாந்தா அக்கா மகள்கள் வசந்தியும் ஆனந்தியும் விடாது வாசிப்பவர்கள், அருமையான பதிலும் எழுதுபவர்கள்.

அகில இந்திய தொழிற்சங்கத் தலைவர் தோழர் ஏ கே பத்மநாபன், தொடர்ந்து எழுத்துகள் எல்லாம் வாசித்து வாழ்த்தி ஊக்கப்படுத்தி வருபவர், தொடர்க என்ற வியங்கோள் வினைமுற்று வாக்கியம் அனுப்பி இருந்தார். நூலாக்கம் பற்றியும் அன்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர், விரைவில் அந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படும். மிக்க நன்றி எல்லோருக்கும்!

ஆனால், இந்தச் செய்தி பரிமாற்றங்கள் எல்லாம் மெல்லக் கடந்து வரும் நாள் ஒன்றில் அதிர்ச்சியான அந்தத் துயரச் செய்தி வந்து சேர்ந்தது. ஜூன் 27 அன்று மாலை தோழர் ராமு காலமானார். பூ ராமு என்று தான் அவர் திரையுலகில் அறியப்பட்டிருப்பவர். கதாநாயகனின் தந்தை – பேனாக்காரர் ஆக அந்த வண்டியோட்டி பாத்திரத்தில் தமிழ்த் திரையில் ஓர் எதார்த்த சித்தரிப்பு !


ஆனால், ராமுவை திரை நடிகராகப் பார்ப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் உண்டு. சென்னை கலைக்குழுவின் முக்கிய கலைஞரான அவர், பன்முக ரசனையும் தேடலும் நிறைவுறாத மனத்தோடு மாற்றங்களுக்கான கலகக் குரலும் நிரம்பிய மனிதர். ஓடோடிப் போய் அவரைத் தழுவி நெருக்கமாக அறிமுகப் படுத்திக் கொள்ள வைத்தது அவரது குரலில் வெடித்த அந்தப் பாடல்.

1992 டிசம்பர் 31 புத்தாண்டு விடியலை நோக்கி, சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இரவு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களது குரலில் (அமுத மழையில், ஊரடங்கும் சாமத்துல) இரண்டு அருமையான பாடல்களைக் கிறக்கத்தோடு கேட்ட நேரமும் அது. பின்னர் சட்டென்று வேறு ஒரு மனிதர் மேடையில் தோன்றுகிறார்,

விழிகளில் பரிணமிக்கும் வித்தொன்று முத்தம்
அழகு கொலுவிருக்கும் பத்து மாத ரத்தம்
புவியும் கேட்டது பூ விழுந்த சத்தம்
மகவு பெண்ணானதால் மடிந்ததென் சித்தம்….
………………………………………..மடிந்ததென் சித்தம்..

என்ற தொகையறா பாடும்போதே அவரது குரலின் அதிர்வும் அதில் கப்பியிருந்த சோகமும் பிடித்திழுத்து வைத்துக் கொண்டது சலனமற்ற கவனத்தை.

‘பொண்ணு பொறக்குமா…..’ என்ற பல்லவியின் முதல் வரியில் ஆ….ஆ….ஆ…என்ற நீட்டலில் இதயத் துடிப்பு கூடிவிட்டது. ‘இல்ல, ஆணு பொறக்குமா’ என்ற அடுத்த வரியில், ஆணாக எங்கே பிறக்கப் போகிறது என்ற வேதனைப்பாடுகள் மிகுந்த ஓர் இழைப்பு. இரண்டையும் சேர்த்துத் திரும்ப எடுக்கிறார் பாடகர், ‘பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா ….பத்து மாசமாப் போராட்டம், இதுவும் பொண்ணா பொறந்தா கொன்னுடுவேன்னு புருஷன் பண்ணுறான் ஆர்ப்பாட்டம்’ என்கிற இடம் மேலும் அதிர வைக்கிறது. விநாயகம் தான் அன்றும் தவில் வாசித்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும்.

ஏற்கெனவே பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அந்தப் பேதை, மீண்டும் கருவுற்றிருக்கிறாள். இந்த முறை ஆண் குழந்தை தான் பிறக்கவேண்டும் என்பது புருஷன் உத்தரவு. மகப்பேறு மருத்துவர்கள் பேறுக்காலத்தில் உளவியல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதன் தேவையைப் பற்றி நிறைய சொல்வார்கள். பெற்றெடுக்கப் போகும் குழந்தையைப் பற்றிய கனவுகள் அவளை குதூகலமாக வைத்திருக்க வேண்டும். வலுவுள்ள குழந்தையாகப் பெற்றெடுக்கத் தக்க உணவை எடுத்துக் கொண்டாக வேண்டும். ஆனால், பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்கிற கேள்வியில் தொடங்கும் கருவுற்ற காலம் எத்தனை வேதனையானது….அந்தக் கொடுமையை கவிஞர் வையம்பட்டி முத்துச்சாமி எப்படித்தான் கருப்பொருளாகக் கொண்டு எழுதினார் என்பதும் மலைக்க வைப்பது

முதல் சரணத்தில், ‘அருமை மாமி உறுமுறா அம்மிக் குழவியால் அடிக்கிறா …ஆகாசத்துக்கும் பூமிக்கும் அவ எகிறி நின்னு குதிக்கிறா’ என்ற வரியில், அந்த மாமியில் இரண்டாம் முறை போடும் சங்கதிகள், பூமிக்கும் என்பதில் விழும் சங்கதிகள்….’நாத்தி பழிக்கிறா ஏத்தி இறைக்கிறா பரம்பரைய வம்புக்கிழுக்கிறா’ என்ற வரியில் பரம்பரைய என்ற சொல்லில் எதிரொலிக்கும் விசும்பல்….’ஆத்திரம் கோபமா எழுது அவை அத்தனையும் கண்ணீர் விழுது’ என்பதில் வெளிப்படும் இயலாமை …

இப்போது அந்தப் பெண் லேபர் வார்டுக்குள் பிரசவ வலியில் கால்களை உதைத்துக் கொண்டிருக்கிறாள். என்ன நடக்கிறது, ‘மனசில் இருந்த பாரம் மண்ணில் இறங்கிவரும் நேரம் – பொம்புளப் புள்ளன்னு இடியோசை கேட்டா காதோரம்’ என்கிற வரியை ராமு எப்படிப் பாடினார்….அப்புறம் இன்னும் கமறுகிறது குரல், ‘கனவுகள் தூளாச்சு கடவுளும் பொய்யாச்சு மனசே தவுலாச்சு வாழ்க்கையே இருளாச்சு’ ….அடடா..அடடா…ராமு! ராமு! உங்களை இழந்து தவிக்கும் இந்தக் கணத்திலும் எண்ணற்ற தோழர்களது நிலைமை இது தான்….

‘என்ன பண்ணப் போறாளோ…ஏது செய்யப் போறாளோ…எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி வெடிச்சா ஒரு சிரிப்பு…அதிர்வேட்டாகி இதயத்தைச் சுட்டது அந்த நெருப்பு’ என்கிற இடம் உலைக்களத்தில் இரும்பு படும் பாடு. ;அரளிய அரைக்கிறா உமியை நுணுக்கிறா கண்களை மூடிக்கிட்டுப் பாலாகக் கொடுக்கிறா…’ அய்யோ அய்யோ கதற வைத்தார் ராமு, அந்த இடங்களில்…..’ஒம் மனசும் எம் மனசும் கதறித் துடிக்குது பல ஊர்களில் சிசுக்கொல இப்படித் தான் நடக்குது’ என்கிற வரிகளில், இரண்டாம் அடியை மீண்டும் எடுத்துக் கொடுக்கையில் மேலும் வாட்டி எடுக்கும் அந்தத் தீ.

ஆனால், கடைசி சரணத்தில், ‘குழந்தைய கொன்னுப்புட்டா கொடுமைகள் தீருமா கொடுமைக்குக் கொள்ளிவைக்கக் கொதித்தெழ வேண்டாமா?’ என்ற வரிகள் மிக முக்கியமானவை! ‘குழந்தைய வாழ விடு வாழ்வோடு போராடு’ என்கிற நிறைவுப்பகுதி துயரமிகுந்த சூழலில் நம்பிக்கைப் பொறியைத் தூவி நிறைவு செய்வதாக இருக்கும். ஆனாலும் இதயத்தின் பரிதவிப்போடு தான் அவரை நோக்கி ஓடிச் சென்றது. இப்போதும் ஊரப்பாக்கத்திற்குச் செல்கையில் இதயத்தின் பரிதவிப்போடு தான் செல்ல நேர்ந்தது. அவர் கேட்டிருக்கக் கூடிய கேள்விகள் தெரிந்த மனத்திடம் பதில்களும் இல்லாது இருண்டு போயிருந்தது.


‘பரியேறும் பெருமாள் பிஏபிஎல் மேல ஒரு கோடு’ என்ற உச்சரிப்போடு ராமு, பிரின்ஸ்பால் வேடத்தில் அந்தக் காட்சியில் அத்தனை இயல்பாக நடித்திருப்பார். வேறு சில படங்களும் உண்டு தான். ஆனால், நீர்ப்பறவையில் சொல் பேச்சு கேளாது திரியும் மகனுக்காகக் கிடந்து தவிக்கும் பாசக்காரத் தந்தை வேடத்தில் ராமு உள்ளத்தில் ஒன்றிப் போயிருக்கிறார். ஏப்பா அதையே சொல்லினு இருக்கிற என்று கூடச் சென்ற புத்தகக் கண்காட்சியில் சிரித்துக் கொண்டே கேட்டார். அவரது தூய்மை நிறைந்த வெள்ளை மனத்தின் சிரிப்பு யாரையும் கட்டிப்போடுவது.

ராமுவின் குரலில் கிடைக்க வாய்ப்பற்ற அந்தப் பாடலை, ராமுவின் நினைவாகத் தேடவும் சட்டென்று வைகறை கோவிந்தன் குரலில் கிடைத்தது. அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அருமையான கலைஞர்களைப் பறிகொடுக்க நேர்வதும் சமூகத்தின் சாபம் அன்றி வேறென்ன….

பூ படத்தின் ‘ஆவாரம் பூ’ பாடல், காதல் ஏக்கக் கனவின் துயர ஈரத்தோடு எப்போதும் உள்ளூர ஒலித்துக் கொண்டிருப்பது, ராமுவின் பிரிவில் கூடுதலாகக் கேட்கத் தொடங்கிவிட்டது. எஸ் எஸ் குமரன் அப்போது புதிதாக இசையமைத்திருந்த படம் அது.

பாடலுக்கேற்ற உணர்வுகளை மிகவும் நேர்த்தியான விதத்தில் குழைத்து இசைத்திருப்பார் சின்மயி. நா முத்துக்குமார், பல்லவியில் எடுத்துக் கொள்ளும் ஆவாரம் பூவை, அந்தப் பாடல் முழுக்க ஒரு குறியீடாகவே கொண்டு காதலை வளர்த்து நாயகனின் கண்பார்வையில் எப்படி பட வைப்பது என்கிற பரிதவிப்பை வெளிப்படுத்தும் வண்ணம் புனைந்திருப்பார். இளமையில் அப்படியான ஒரு காதலைக் கடக்க நேர்பவர் எல்லோரையும் ஈர்க்கும் பாடல் அது.

‘ஆவாரம் பூ…’ என்ற பல்லவியின் தொடக்கத்தில், பூ என்பது அப்படி பூக்கிறது சின்மயி குரலில்! ஒரு மனத்திலிருந்து இன்னொரு மனத்திற்குச் சொன்னால் போதும் அல்லவா, காதலை அப்படியான மென்குரலில் பல்லவியை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். ‘அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு’ என்பது விடை தெரிந்த சாதாரண கேள்வி, ஆனால், ‘அந்தி பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு’ என்கிற இடத்தில் மின்னுகிறார் கவிஞர். அதிலும், ‘சுமந்தே’, ‘உனக்காக’, ‘பூத்திருக்கு’ என்கிற பதங்களில் உணர்வுகளின் வெளிப்பாடு அத்தனை கற்பனையோடு அமைக்கப்பட்டிருக்க, கேட்பவருக்கும் பாடல் அதைக் கடத்தி விடுகிறது.

நெருங்கிய உறவு முறைக்குள் அரும்பும் காதலை, ‘சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை, அது சொல்லாமல் போனாலும் புரியாதா’ என்று பல்லவியின் நீட்சியில் எப்படி அருமையாகக் கொணர்ந்தார் கவிஞர் என்பது வியப்புக்குரியது.

நேரில் சொல்லத் தயங்கும் காதலை, படத்தின் நாயகி மனத்திற்குள் மட்டும் உரத்த குரலில் சொல்லிச் சொல்லித் தனக்குள் மகிழ்ந்து போயிருக்கும் அப்பாவித் தனத்தை பிரதிபலிக்கிறது சரணங்களில் மேல் தளங்களிலேயே ஒலிக்கும் சின்மயி குரல். அந்த அடுக்குகளை ஏற்ற சொற்களை இயல்பாக வழங்கிப் போயிருக்கிறார் நா.முத்துக்குமார், நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருக்கும்படி!

‘காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையைத் தொடருதடா….’ என்ற முதல் சரணத்தில், அந்தத் ‘தொடருதடா’ என்பதில் எத்தனை தாபத்தைச் சொல்கிறது குரல்! ‘குழந்தைக் கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தே கிடக்குதடா’ என்பதில் ஆவாரம் பூவின் கதையில் இத்தனை காதலா என்று இயற்கையை நேசிக்கும் மனங்களும் துள்ளும். ‘சருகுகள் சத்தம் போடும், தினம் சூழ்நிலை யுத்தம் போடும்’ என்ற விவரிப்பில் இருந்து, ‘அதன் வார்த்தை எல்லாம் மௌனம் ஆகும்’ என்ற இடத்தை எட்டுகையில் எத்தனை துயரத்தைக் கடத்துகிறது பாடல்….

அடுத்தடுத்த வரிகளில் ஏற்படும் அழுத்தத்தில் மேலே மேலே செல்லும் அந்தக் காதல் ஏக்கக் குரல், சரணத்தின் நிறைவில், ‘சொந்த வேரோடு….’ என்று தொட்டுப் பல்லவிக்கு மீளும் இடத்தில் தணித்துக் கொள்ளும்போது தான் தரையில் இறங்கிப் புன்னகைத்துக் கொள்கிறது.

‘ஆயுள் முழுவதும் தவம் கிடந்தே’ என்று தொடங்கும் இரண்டாம் சரணத்தில், ‘பனியில் அது கிடக்கும் நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்’ என்ற வரியை எப்படி வந்தடைகிறார் கவிஞர்! அதையும் கடந்து, ‘வண்ணங்கள் எல்லாம் நீ தான் அதன் வாசங்கள் எல்லாம் நீ தான்’ என்ற இடத்தில் பாடல் தீராக் காதலை இதற்கு மேல் என்ன சொல்ல என்று அழுத்தமாகப் பதிக்கிறது.

‘நீ விட்டுப் போனால் பட்டுப் போகும்’ என்ற இடத்தில் பூவின் கடைசிக்கும் கடைசியான இறைஞ்சுதல் என்னமாக மனத்தை உலுக்கி விடுகிறது. இப்போது மீண்டும், ‘சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை…’ என்று எடுக்கையில் ஒட்டுமொத்தக் கதையை ஒப்படைத்துக் கண்ணீர் பெருக வைத்துவிடுகிறது பாடல்.

படம் முழுக்கவே அந்தப் பாத்திரத்தில் அபாரமாக நடிப்பை வழங்கி இருக்கும் பார்வதி, இந்தப் பாடல் காட்சியில் இன்னும் சிறப்பான பாவங்களை வார்த்திருப்பார். ஒரு சிற்றூரின் வெயிலில் பூத்து வாட்டத்தைக் காட்டிவிடாமல் தத்தளிக்கும் பூவின் பரிதவிப்பு பாடல் முழுவதும் விரிகிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் ஓயாத ஓர் உழைப்பாளியாக அந்த வண்டியோட்டி, மகனின் காதலுக்குப் பச்சைக் கொடி காட்ட மாட்டாத சாபத்தில் படும் பாடுகளை ராமு எத்தனை இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

மிக எளிய மனிதர்களது வாழ்க்கையைப் பேசும் இலக்கியங்கள், கவிதைகள் தனிப்பட்ட கதைகளைப் பேசும் குரலில் ஒரு சமூகத்தின் படத்தைத் தான் வரைகின்றன. அதனால் தான் அவை பரந்துபட்ட மக்களைச் சென்றடைகின்றன. ஓர் இசைப்பாடலும் தனிப்பட்ட வலியை, வேதனையை அல்லது கொண்டாட்டத்தை இசைக்கையில் கேட்பவருடைய அனுபவங்களில் ஒன்றாக மொழி பெயர்த்துக் கொண்டு நெருக்கமான உணர்வுகளை ஏற்படுத்தி விடுகிறது.

ஜூன் 28 அன்று ஊரப்பாக்கத்தில் இளைஞர்களும், அருகமை இல்லங்களின் சிறுவர்களும் (சாக்லேட் தாத்தா, அவர்களுக்கு), ராமுவின் சம வயதினரும், இடது சாரி தோழர்களும், படைப்பாளிகளும், கலைஞர்களும், திரைக் குடும்பத்தாருமாக நிறைந்திருந்தது பெரியார் நகர்.

இரங்கல் கூட்டத்தின் நிறைவாகப் பேசிய அவருடைய மகள் மகாலட்சுமி, “காம்ரேட்ஸ் என்றால் என்ன என்று அப்பாவிடம் கேட்பேன்… எத்தனையோ சொல்லி இருப்பார், அந்தச் சொல்லின் பொருள் எனக்குப் பிடிபடாது…ஒரு முறை சொன்னார், நான் இறக்கும்போது காண்பாய் என்று…இங்கே பார்க்கிறேன்…அந்தச் சொல்லுக்கு அன்பு என்பது தான் பொருள்…அவரது அன்பு தான் உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது …உங்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன், அது சரியாகாது…அவர் இல்லையென்று இனி வரவேண்டாம் என்று நினைத்து விடாதீர்கள்…இந்த வீட்டைத் தோழமைக் குடில் என்று அழைக்க விரும்பினார் அவர். எங்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள்..அவரது தோழர்கள் எப்போதும் வந்துபோகும் வண்ணம் இதை வடிவமைப்போம்” என்று பேசியது தோழர் ராமுவின் வாழ்க்கை நிறைவானது மட்டுமல்ல, அந்தத் தோழமைக்கு முடிவு கிடையாது என்பதாகவும் ஒலித்தது.

‘பொண்ணாப் பொறந்தா கொன்னுடுவேன்னு’ ஆர்ப்பாட்டம் செய்வோருக்குப் பெண் குழந்தைகளின் அருமையை நெத்தியடியாக உணர்த்தியது மகாலட்சுமியின் உரை என்று கூட ஒரு கணம் தோன்றியது. பாலின சமத்துவம் தான் ராமு விரும்பி இசைத்த பாடல் மட்டுமல்ல சமூகத்திற்கான இசை வாழ்க்கை என்றும் புலப்படுகிறது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “இசை வாழ்க்கை 70 : அந்நாளில் இருந்தே…. – எஸ்.வி.வேணுகோபாலன்”
  1. அச்சுருத்தலை தாங்கும் சக்தி பெண்களுக்கு இயற்கையாய் அமைந்ததா? பழக்கத்தில் இயல்பாய் ஆனதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *