இசையென்ன சுதியென்ன லயமென்ன அறியேன் 
எஸ்.வி.வேணுகோபாலன்

கடந்த சில நாட்களில் இசை வாழ்க்கை குறித்த நேரடி உரையாடல்கள் வழக்கத்தை விடக் கூடுதலாக அமைந்தது மிகவும் தற்செயலான ஒன்று.

அன்புத் தங்கை ஆண்டாள் (நான் அவளுக்கு வைத்த பெயர் ராதா), தங்கள் மகள் திருமண அழைப்புக்காக அண்மையில் வீட்டுக்கு வந்திருக்கையில், இசை வாழ்க்கை தொடரை முடிக்கலாமா என்றேன். வாக்கியத்தை முடிக்குமுன்பே, ‘ஏன் அண்ணா, எதுக்கு…அதெப்படி…யார் விடுவாங்க உன்னை?’ என்று அடுக்கடுக்காக வந்த அவளது கேள்விகளும், அவளது முகத்தில் பளிச்சிட்ட ஏக்கமும் வாழ்நாள் மறக்க முடியாதது.

‘எலந்தப் பயத்த’ விட்டுடீங்களே சார் என்று எல் ஆர் ஈஸ்வரி கட்டுரையைப் படித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பி அதன் தொடர் கடிதப் போக்குவரத்தில் மிக நெருக்கமான நட்பு பாராட்டும் கோவை லிங்கராசுஅவர்களும் தொடர் பற்றிக் கேட்டார். நேரில் பாராது மூன்றாண்டுகளாக அன்பு கொண்டாடும் கோவையின் மற்றுமோர் அன்பர் முருகானந்தம் கடந்த வாரம் நேரில் பார்க்கும்போது இசை வாழ்க்கை பற்றியே முதலில் பேசினார்.

அதன் அடுத்த சில நாளில் சென்னையில் ஒரு திருமண வரவேற்பில் பார்த்தபோது, சி ஐ டி யு தலைவர் தோழர் அ சவுந்திரராஜன் அவர்கள், இசை வாழ்க்கை தொடரைப் புத்தகமாக எப்போது தருவீர்கள் என்றே கேட்டார்.

இசை எல்லோரது வாழ்க்கையிலும் அவரவர் தேர்வு செய்யும் விகிதத்தில் கலந்திருக்கவே செய்கிறது. இசையே வாழ்க்கையாக இருப்போர், நம் வாழ்க்கையில் இசை நிரப்பித் தருகின்றனர்.

முருகானந்தம் அவர்கள் கோவையில் நான் சென்றிருந்த திருமண மண்டபத்திற்கே தமது கவிதை நூலோடு வந்து பேசிக்கொண்டிருக்கையில், மேலே மண்டபத்திலிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அதுவும் இசை வாழ்க்கை அழைப்பு தான்.

அதற்குச் சற்றுமுன் தான் அருமையான ஒரு திரைப்பாடலைத் தனது இசைக்கருவியின் வழி செவிகளில் பொழிந்து கொண்டிருந்தார் நாதஸ்வரக் கலைஞர், என்னுள், வண்ணதாசனின் நடேசக் கம்பர் மகன் வந்து போனார். ஜெயபிரகாஷ் (அல்லது ஜெய்பிரகாசக் கம்பர்!)தான் அழைத்தது, ‘அந்தப் பாடல் வாசிப்பை அலைபேசியில் பதிவு செய்தீர்களே, எனக்கும் அனுப்புங்கள்’ என்று தான் அவரது அழைப்பு. இதைவிட இசை வாழ்க்கை வேறென்ன என்று ரசித்தார் முருகானந்தம்.

முழு பாடல் கூட அல்ல, இருக்குமிடத்திலிருந்து எழுந்து சென்று நாதஸ்வர இசைக்குழுவினர் அருகே அமர்ந்து தலையாட்டி ரசித்து, இரண்டாம் சரணத்தின் பிற்பகுதியிலிருந்து பாடல் நிறைவு பெறும்வரை தான் பதிவு செய்தது. முதல் நாள் அவரே சாக்ஸஃபோன் வாசித்துக் கலக்கினார் என்றார் மணவீட்டாரான தோழர் மோகன சுப்பிரமணியன்.

இளையராஜா – வாலி – ஜேசுதாஸ் – சித்ரா கூட்டணியில் விளைந்த மனதில் உறுதி வேண்டும் படத்தின், கண்ணா வருவாயா பாடலுக்குத் தங்கள் உடல் பொருள் ஆவி கொடுக்கத் துடிக்கும் கருத்துகள் நிரம்பித் ததும்புகின்றன யூ டியூபில்.

நேரடிக் காதல் பாடல் அல்ல, கண்ணா வருவாயா! நிறைவேறுமா என்ற கலக்கம், கூடிவிடாதா என்ற ஏக்கம், ஒன்று கலத்தலின் தாபம், அதன் நீட்சியான கனவுகளின் பரவச உச்சம். அதனால் தான், கவிஞர் மீராவைத் தேர்வு செய்கிறார். இரு கோடுகளில் வாலி எடுத்துக் கொண்டது ‘பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக’ என்பது. இங்கே ராதையைக் கூட யோசிக்க முடியாது. கண்ணன் வரவேண்டும் என்பதல்ல பல்லவி, கண்ணா வருவாயா என்பது தான்!

கண்ணனின் நினைப்புக்கான குழலோசையும், துயரக் கனவுகளுக்கான வயலின்களும், இரண்டின் இடையே ஊசலாடும் நெஞ்சைத் தாங்கிப் பிடித்துத் தேற்ற அபாரமான வீணையும், இதயத் துடிப்புகளுக்கான அசத்தல் தபலாவுமாக ஓர் அற்புத இசைக்கோவையை வழங்கி இருக்கிறார் ராஜா. கண்ணனின் வசீகரக் கனிவு நாடகத்திற்கான குரலை ஜேசுதாஸ் பொழிகிறார் எனில், மீராவின் பரிதவிப்பும், மோகமும் ஓர் உருக்கமான மொழியில் இசையாகிறது சித்ராவின் குரலில்!

கேட்பவர் மன நிலையைப் பாடல் நிகழும் களத்தை நோக்கி ஈர்ப்பது கூட அல்ல, திரட்டுகிறார் ராஜா. இந்தப் பாடலை கோரஸ் குரல்களில் தொடங்குகிறார்! குழுவினரின் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ….ஹம்மிங், மீராவின் தனிமைத் துயரின் இருளை எதிரொலித்து வெளிச்சம் நோக்கி ஒரு குறும்பயணம் போல் அமைகிறது. அதன் நிறைவில் (மோர் சிங் கூட ஒலிப்பது போல் உணர முடிகிறது), தபலாக்கட்டு சதிர் போல ஒலித்து படிப்படியாக விலகி ஓய்ந்து பாடகிக்கு இடம் கொடுத்து நிற்கிறது.

கண்ணா வருவாயா என்ற பல்லவியின் முதல் வரியைத் தாளக்கட்டு இன்றித் தான் இசைக்கிறார் சித்ரா. ஒற்றை அழைப்பில் வருபவன் அல்ல என்பதால், தாளத்தோடு இயைந்து மீண்டும் அதே வரியை இசைக்கிறார் சித்ரா. அடுத்த வரியை மீரா கேட்கிறாள் என்று வாலி எழுதுகிறார், ‘மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்’ என்று கண்ணன் வருகையை மேலும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்குகிறார். எங்கே இருந்து எப்படி வெளிப்படுவான் கண்ணன் என்பதன் இலக்கியக் காட்சிப்படுத்தலாக அமைகிறது அவரது அடுத்த வரி: ‘மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து’.

பல்லவியில் ஒவ்வொரு சொல்லுக்கும் அத்தனை சங்கதிகள்….. அதிலும், ‘மாலை மலர்ச்சோலை’ என்ற இரண்டு சொற்களில் அத்தனை மயக்க விசைகள் முடுக்குவார் சித்ரா. நதியோரம் என்பதில் அந்த யோ…அய்யோ, எத்தனை அழகாகத் தொடுப்பார், நடந்து என்பதில் அந்த உகரம் பல்லவியின் சிகரம், உண்மையில் மலையிலிருந்து ஒய்யாரமாக வேகத் தப்படிகள் போட்டுக் கீழிறங்கி வருவது போல் தான் இழைப்பார்கள் முதலில் சித்ராவும், பின் ஜேசுதாசும்!

முதல் சரணத்தை நோக்கிய ராஜ பாட்டையில், கோரஸ் ஒலிக்கிறது கண்ணா கண்ணா கண்ணா என்று உருக்கமாக! வீணை கனிவாகக் கொஞ்சம் நம்பிக்கை ஊட்டுகிறது, வயலின்களோ எச்சரிக்கையாக இரு, எச்சரிக்கையாக இரு என்று தேம்பித் துடிக்கின்றன. ஆவலுக்கும் கேவலுக்குமான உரையாடலாக இசைக்கருவிகள் இழைக்கும் காதல் நாடகத்தில், கண்ணன் வரவைப் புல்லாங்குழல் தான் மென்மையாக அறிவிக்கிறது. சுருளாகத் திரளும் கருமேகங்கள் போல் குழலிசை பரவ, காற்றில் பறக்கும் முடி கண்களில் பட்டுவிடாது, கைதொட்டு விலக்கி முகத்தை வருடிக் கொடுப்பது போன்ற மென்மையான ஹம்மிங் கொடுத்துச் சரணத்தைத் தொடங்கும் ஜேசுதாஸ், ‘நீல வானும் நிலமும் நீரும் நீயெனக் காண்கிறேன்’ என்பதில் காதலிக்கு சத்தியம் செய்து கொடுக்கும் காதலனின் மனத்தை பிரதியெடுக்கிறார் குரலில்!

‘உண்ணும்போதும் உறங்கும் போதும் உன்முகம் பார்க்கிறேன்’ என்ற இடத்தில் சித்ரா மீராவின் ஆற்றாமையை அழுத்தமாகப் பதிவிடுகிறார். வாலியின் சிருங்கார ரசனையில் எழுதப்பட்ட ‘கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்து போகும் பாற்கடல்’ என்ற வரியில் ததும்பும் காதல் உறவை ஜேசுதாஸ் பின்னிப் பிணையும் வண்ணம் பற்ற வைக்க, தன்னையே ஒப்புவிக்கக் காத்திருக்கும் மீராவின் விரகத்தை விவரிக்கும் ‘உன்னை இங்கு ஆடை போல ஏற்றுக் கொள்ளும் பூவுடல்’ வரியை சித்ரா எடுக்கிறார்.

அடுத்த இரு வரிகளில் இரண்டறக் கலக்கும் சங்கம அரங்கேற்றத்தில் காதலின் சங்கதிகளை இருவரையும் இசையின் சங்கதிகளாகச் சொல்ல வைக்கிறார் ராஜா, அதிலும், ‘சொர்க்கம் இதுவோ’ என்ற வரியில் தான் எத்தனை எத்தனை ரசவாதம்… ஜேசுதாஸ் இதயங்களைக் கரைத்துவிடுகிறார். அதுவும், ‘மீரா வருவாளா……’ என்று அவர் எடுக்கும் பல்லவியில் கண்ணனின் கள்ளக் குறும்பு நாடகமும் மனக்கண்களில் விரிகிறது.

இரண்டாவது சரணத்தை, சோகம் இழையோட ஒற்றை வயலினும், அதன் எதிரொலியாகக் கூட்டான வயலின்களும் மீண்டும் மீராவின் கலக்கங்களை பிரதிபலிக்க, வீணை ஒரு சமாதான சமரசத்தை எடுத்துப் பேசுகிறது. ஆனாலும், இதயத் துடிப்புகள் கூடி விடுகின்றன, சூழலின் பரிதவிப்பில். எனவே ராஜா தாளகதியை வேகப் படுத்த வேண்டி இருக்கிறது. தன்னன தன்னன தானத் தன்னன தன்னன தானத் தான தா….ன……னா என்ற மெட்டில் அமையும் இரண்டாம் சரணம், மஞ்சத்தில் கொஞ்சி மகிழ்ந்து குலாவும் இணைகளின் இன்ப விளையாட்டை வாலியின் துள்ளல் சந்தங்களில், சித்ராவும் ஜேசுதாசும் வழங்கும் ரசனை மிக்க குரல்களில் படைக்கிறது.

பாடலின் நிறைவுப் பகுதியில் உருளும் வேக தாபத்தை அன்று கோவை திருமண நிகழ்வில் ஜெயபிரகாஷ் இயன்றவரை நாதஸ்வரத்தில் வழங்க எடுத்த முயற்சி மறக்க முடியாதது.

ஜூன் 24, கவிஞருக்கும் மெல்லிசை மன்னருக்கும் பிறந்த நாள், என்ன கவித்துவ இசையான தற்செயல் ஒற்றுமை! சொற்களில் இருந்து இசை கிடைக்கிறது என்ற விஸ்வநாதன் அவர்களும், இசையாகவே கவிதை வார்த்துக் கொண்டிருந்த கண்ணதாசன் அவர்களும் தமிழ்த் திரை இசைக்கு வழங்கிச் சென்றுள்ள செல்வ நிதியம் அள்ள அள்ளக் குறையாதது.

ஏனோ கடந்த சில நாட்களாக, ‘கண்கள் எங்கே’ பாடலில் நெஞ்சம் கிறங்கிக் கிடக்கிறது. கர்ணன் படத்திற்கான இசையை மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் வி – டி கே ராமமூர்த்தி முற்றிலும் விரிந்த கற்பனை தளங்களுக்கு எடுத்துச் சென்று, காவிய முயற்சிக்கேற்ற இசைக்கருவிகளையும் வடக்கே இருந்து தருவித்து, இசைக்கலைஞர்களையும் வருவித்துப் படைத்திருக்கும் பாடல்கள் கால காலத்திற்குமானவை.

நாயகி, நாயகனை எண்ணி உருகுவது பற்றி இலக்கியங்களில் கொட்டிக் கொட்டி எழுதப்பட்டிருக்கிறது. தோழிகள் அவளைச் சீண்டி ரசித்துப் படுத்தும் பாடும், தோழிகள் அவளிடம் சிக்கிக் கொண்டு படும் பாடும் ஒரு வண்ணமயத் திரைச் சீலையில் மெல்லிசை மன்னர்களும், கவிஞரும் குழைத்துக் குழைத்துத் தீட்டிய சித்திரம் கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே….

யாருமறியாத அந்திப் பொழுதில் தனக்குத் தானே பேசிக் கொள்ளும் பாவனையில் மென்மையாகத் தொடங்கும் பாடல், ஒரு பெருங்குழாம் புடை சூழப் பின்னர் கொண்டாட்ட கதியில் இசைக்கருவிகளின் கொண்டாட்டத் திருவிழாவாக மாறி விடுகிறது.

எம் எஸ் வி டைம்ஸ் இணையதளத்தில், பி சுசீலா குரலினிமையோடு, கோரஸ் ஹம்மிங் ஆக ஹா……ஹ…ஹா…ஹ ….ஹா…ஹ…ஹா… ஹ ….ஹா…ஹ…ஹா…ஹ …. என்று பாடல் நெடுக மெல்லிசை மன்னர்கள் பயன்படுத்தி இருப்பதை அத்தனை சிலாகித்து ராமன் என்பவர் சிறப்பாக எழுதி இருப்பார். வத்சன் எனும் மற்றுமோர் அன்பர் அதே பக்கத்தில், தாளக்கருவிகள் இன்றி சுசீலா பல்லவியின் முதல் அடியைப் பாடியதும் சிதார், சைலோஃபோன் உள்ளிட்ட கருவிகள் ஒலிப்பதையும், வீணையின் நாதம் இணைவதையும் உருகி எழுதி இருப்பார்.

‘கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே, கண்ட போதே சென்றன அங்கே..’ என்ற பல்லவியை ஒரு கேள்வி பதிலாகத் தொடங்கும் நாயகி, சரணங்களிலும் தனக்குத் தெரிந்த கேள்விகளை எழுப்பித் தானே பதிலும் சொல்லியவாறு காதல் கொதிப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் வண்ணம் கவிஞர் புனைந்திருப்பார்.

இந்த அருமையான பாடலை பி சுசீலா தொடங்கும் இடத்தில், பூம்பாதங்கள் தரைக்கு வலிக்குமோ என்று நடப்பது போல அத்தனை மென்மையான தாளக்கட்டு ஒலித்தும் ஒலிக்காதது மாதிரி அமைத்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். பின்னர் தோழிகளின் ஹம்மிங் இணையவும் பாடலின் மொத்தத் தன்மையும் ஒரு கனவுலக நிகழ்வாகவே துள்ளாட்ட கதிக்கு மொழி பெயர்க்கப்பட்டுவிடும்.

பல்லவியில், ‘கால்கள் இங்கே மேனியும் இங்கே’ என்பதும் மெத்தென்ற குரலில் இசைக்கிறார் சுசீலா, ஆனால், அடுத்து, ‘காவலின்றி வந்தன இங்கே’ என்ற அடியில், கா என்ற நெடிலை நெடிதுயர்ந்து சங்கதிகள் இழைத்து மெருகூட்டி அந்த வரியின் தொடர்ச்சியில் ஒயிலான ஹம்மிங் சேர்த்து முடித்துப் பல்லவிக்குத் திரும்பும்போது பின்னணியில் கோரஸ் அபாரமாக வந்து கலந்து இழையோடி இன்பம் சேர்க்கிறது.

சரணங்களை நோக்கிய இசைக் கலவை ஒரு குதூகலக் காதல் களியாட்டத்திற்கான ஒத்திகை தான். அதிலும் கோரஸ் ஹம்மிங், இந்துஸ்தானி இசைக்கருவிகள் இணைந்து கிளர்த்தும் உணர்வுகள் மனத்தை வசப்படுத்தும். இரண்டாம் சரணத்திற்கு முன்பும் அதையே பயன்படுத்தி இருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள்.

சரணங்கள் இரண்டிலும் அருமையான வரிகளை லயத்தோடு தொடுத்திருப்பார் கவிஞர். அதிலும், முதல் சரணத்தில், ‘துணை கொள்ள அவனின்றித் தனியாகத் துடிக்கும், துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த மயக்கம்’ என்ற இடம் அபாரம். ஏன் இந்த மயக்கம் என்ற பதங்களை அத்தனை கிறக்கமாக இசைத்திருப்பார் சுசீலா. பாடல் முழுவதிலும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கும் தேவிகா இந்த வரிகளுக்கான பாவத்தை மிகவும் காத்திரமாகச் செய்திருப்பார். சரணத்தின் நிறைவிலும் சுசீலா ஹம்மிங் எடுத்து முடிக்க, கோரஸ் உடனே கலந்து விடுகின்றனர் அவரது பல்லவிக்கு ஈடு கொடுக்க!

இரண்டாவது சரணத்தில், ‘இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன்’ என்ற வரியில் அறியாமையும், ‘ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்’ என்பதில் வெகுளித்தனமும் தெளிவும் ஒரு தினுசாகக் கலந்த குரலில் எடுப்பார் சுசீலா. சரணத்தின் நிறைவில் கோலாகல கொண்டாட்ட கோரஸ் மீண்டும் வந்து இணைந்து விடுகிறது. பின்னர் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

சங்கதிகளும், ஏற்ற இறக்கங்களும், மென்மையும், அழுத்தமும் மாறி மாறி ஒலிப்பதுமான கடினமான பாடல் தான் இது, ஆனால் மிக இலேசாக இசைப்பது போல் வெளிப்படுத்தும் சுசீலா மொத்தப் பாடலையும் கட்டி ஆள்கிறார். பாடலுக்கான மொத்த உழைப்பையும் மேன்மைப்படுத்தும் வண்ணம் படமாக்கி இருப்பார் திரையுலக மேதை பி ஆர் பந்துலு.

கவிஞரும் மெல்லிசை மன்னர்களும் பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் அமர்ந்து மூன்றே நாட்களில் கர்ணன் படத்திற்கான பாடல்களுக்கான அடித்தளத்தை ஒருங்கிணைத்து முடித்தனர் என்று எழுதி இருந்தார் ஒருவர். இசை வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அது சாத்தியம் என்றே தோன்றுகிறது.

எண்ணற்ற எளிய மனிதர்களது வாழ்க்கையில் அவரவர் இன்ப துன்பத் தருணங்களில் எல்லாம் இசை நிறைந்திருக்கிறது. வெடிச்சிரிப்பிலும், மென் புன்னகையிலும் வெளிப்படும் இசை, கண்களில் திரையிடும் நீரிலும் கலந்திருக்கவே செய்கிறது. இசை, காற்றின் வடிவமும் வண்ணமுமாக உருவெடுக்கிறது. அதனால் தான் இசையே மூச்சாகிறது, இசை வாழ்க்கை வாழ்பவர்களுக்கு.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “இசை வாழ்க்கை 69 : இசையென்ன சுதியென்ன லயமென்ன அறியேன் – எஸ்.வி.வேணுகோபாலன்”
  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு இசை வாழ்க்கை தொடர்வது மகிழ்ச்சி. இது 100 வரைக்கும் வரட்டும். 50 க்கு புத்தகம் தயாரானால் மகிழ்வேன். இன்றைய இசை வாழ்க்கை மிக மிக அருமை. மெலடி கீதம் நன்றி🙏💕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *