டந்த வாரம் நவீன விருட்சம் மின்னிதழில் பேயோன் (புனைபெயர்) என்பவரது கவிதைகள் வந்திருந்தன. இரண்டிரண்டு வரிகளில் முடிந்திருக்கும் கவிதைகள்… அதில் ஒன்று இது:

துன்பம் நேர்கையில்
அழுகிறதென் யாழ்.

படித்தவுடன் தைத்தது நெஞ்சில்! பாவேந்தரின் பிரபலமான கவிதை வரியைப் பகடி செய்யும் குறும்பான கவிதை என்று கடந்து விட முடியாது. இன்னும் விஷயங்கள் இருக்கின்றன இதில்.

‘எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது’ (புதிய பறவை) என்று எழுதிச் சென்றார் கவிஞர் கண்ணதாசன். துன்பத்திலிருந்து தப்ப முடியாது என்பது அவரது தத்துவம், ‘துன்பம் வரும் வேளையிலே சிரிங்க / என்று / சொல்லி வைத்தார் வள்ளுவர் சரிங்க, பாம்பு வந்து கடிக்கையில் / பாழும் உடல் துடிக்கையில் / யார் முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு?’ (ராஜபார்ட் ரங்கதுரை) என்கிற அவரது திரைப்பாடல் வரியும் பிரபலமானது தான்.

பாவேந்தர், அதனால் தான், ‘யாழ் எடுத்து நீ எனக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்று எழுதினார். யாழ் யாருடையது என்பதல்ல, யார் அதை வாசிப்பது என்பது தான் விஷயம். எனக்காக வாசியேன் என்று உற்ற தோழமை நெஞ்சத்தைக் கேட்டு, அவர்கள் வாசிக்க இன்பம் சூழும்! ‘துன்பம் நேர்கையில் அழுகிறதென் யாழ்’ என்ற கவிதை உள்ளபடியே அப்படியான தோழமை அருகே வாய்க்கவில்லை என்பதைத் தெரிவிக்கிறது.

இன்னொரு பார்வையும் சாத்தியம். துன்புற்ற நெஞ்சு, துன்பியல் இசை கேட்கும்போது அந்த நெகிழ்ச்சியில் தனது துயரிலிருந்து சற்று விடுவித்துக் கொள்ளவும் முடியும். அழுகிறது என் யாழ் என்பது, தன்னை வாசிப்பவர்பால் ஓர் இசைக்கருவி கொள்ளும் கரிசனத்தின் கண்ணீர் என்றாகிறது. இரவு நேரங்களில் அப்படியான பாடல்களைக் கேட்டுத் தங்களை மீட்டெடுத்துக் கொள்வோர் எண்ணற்றோர் உண்டு. தேடித் தேடி சோகப் பாடல்கள் தொகுப்பை வரிசையாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்கள் உண்டு. தாங்களே அந்தந்த பாத்திரங்களாக உருக்கொண்டு இவர்களும் கண்ணீர் பெருக்கியபடி கேட்டு உருகி உறங்கிப் போவோர் உண்டு.

ழுபதுகளில் அப்படி உருகியுருகிக் கேட்ட பாடல்களில் ஒன்று, ‘கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ’ ! மன்னாதி மன்னன் படத்தில் பதமினி தோன்றும் உருக்கமான கதைச் சூழலுக்கான அந்தப் பாடல், கவிஞர் கண்ணதாசனின் ஆக்கம். இசை மெல்லிசை மன்னர்கள். பி சுசீலாவின் அற்புதமான குரல். இரவு நேரத்தில் கேட்கையில் மனத்திற்கு மிக நெருக்கமாக ஒலிக்கும் இந்தப் பாடல், பகல் வேளையில் கேட்க நேர்ந்தாலும் இரவின் தனிமை நம்மைச் சூழவைத்துக் கேட்க வைக்க வல்லது. என் சித்தப்பா மகன் முரளி அண்ணன் தான் இந்தப் பாடல் கடத்தும் துயரப் பிழிவின் ரசனையில் மூழ்க வைத்தவர்.

வயலின்கள் கூட்டாக அதிவேகமாக இழைக்கும் இழைப்பிலும், வெகு வேகத் தாள கதியிலும் பாடல் எந்த மேற்பரப்பில் பயணப்பட உள்ளதென்று ரசிகர் தனது உணர்வுகளையும் திரட்டிக் கொண்டுவிடுவார். அந்த வேகத்தைச் சட்டென்று நிறுத்திப் பாடலுக்கு முன்னாக ஒரு தொகையறா வைக்கின்றனர் மெல்லிசை மன்னர்கள். ‘பதறிச் சிவந்ததே நெஞ்சம்’ என்ற அதன் முதல் வரியிலேயே சுசீலாவின் உச்ச கட்டக் குரல் பாடல் முழுவதும் உடைத்துத் தெறிக்கும் சோக வெடிப்பில் விளைய இருக்கிறது என்பதை உணர்த்தி விடுகிறது. தொகையறாவின் ஒவ்வொரு சொல்லிலும் சுசீலா வழங்கும் சங்கதிகளில் தெறிக்கும் துயரம் கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளைக் காட்சிப்படுத்தும் அளவு வலிமை கொண்டிருக்கிறது.

தொகையறா முடிந்ததும் பாடலுக்குப் போவதில்லை, பல்லவியை நோக்கி மீண்டும் வயலின்களின் அதிவேகப் புறப்பாடு நிகழ்கிறது. அதனோடு தாளக்கட்டு இணையுமிடம் மிக நுட்பமானது, பாடலின் உயிர் அதில் நிறைந்திருக்கிறது. உரிய இடத்தில் பி சுசீலா, ‘கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ’ என்று பல்லவியை எடுக்க இணையும்போது தாளக்கருவி அதிவேக இடைவெளி கொடுத்துப் பாடலைச் சட்டென்று உள்வாங்கிக் கொண்டு மீண்டும் வேக கதியில் தொடர்வது, வண்டியை நிறுத்தியும் நிறுத்தாமலும் பின்னால் ஓடோடி வரும் பயணியைச் சட்டென்று கைலாகு கொடுத்து ஏற்றிக்கொண்டு மீண்டும் விரைவது போலவே நிகழ்கிறது.

கண்கள் இரண்டும் என்பதில் அந்தக் கண்கள் என்ற சொல்லில் அந்த ‘ள்’ எனும் ஒற்றை எழுத்தில் எத்தனை அழுத்தம் கொடுக்கிறார் சுசீலா. பார்வையின் ஆழத்தையும் பரிதவிப்பின் சோகத்தையும் சொல்லிவிடுகிறது கண்கள் எனும் அந்த ஒற்றைச் சொல். அதனால் தான் பல்லவியின் முதல் வரியை ஒட்டி வயலின்கள் வாசித்து முடிக்கவும் தான் இரண்டாவது அடிக்குப் போகிறது பாடல். ‘காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ’ அடுத்த வரி. ‘இனிமேல்’ என்ற சொல்லில் எத்தனை சங்கதிகள்…. சேர்க்குமோ என்பதில் எத்தனை ஏக்கங்கள்…

பிரிவிற்குப் பின் பார்க்கும் கணத்தில் கண்களே முதலில் பேசும் என்பதில் எத்தனை இலக்கியத் தொடர்ச்சியான கவித்துவம். அதனால் தான் பல்லவியின் முதல் வரியே நெஞ்சத்தை நிரப்பி விடுகிறது. இரண்டாவது வரி, ததும்பி நிற்கும் உள்ளத்தை மேலும் தட்டி அடுத்த கேள்வியை வைக்கிற போது அது தாள மாட்டாது விம்முகிறது. சுசீலாவோ அதை இரண்டாவது அடியை இரண்டாவது முறையும் இசைத்து அந்தத் துயரத்தின் கனத்தை மேலும் கூட்டுகிறார்.

‘பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்’ என்கிற சரணத்தின் தொடக்க வரி, காதலன் எப்போதோ தன்னைக் கிளியாகக் கொஞ்சி இருந்திருக்கும் கணத்தின் இன்ப நினைவுகளை இந்தக் கணத்தின் துன்பியல் உணர்வுக்கு மொழி பெயர்த்து இசைப்பது போல் எழுதி இருக்கிறார் கவிஞர். கிளி, தென்றல், தேர் எல்லாமே அதன் தொடர்ச்சி தான். ‘பாடி வரும் தென்றல் தேர் ஏறி ஓடுவேன்’ என்பது மனத்தின் வேகத்திற்குப் பறந்து செல்ல முடியாது சிறைப்பட்டிருக்கும் சூழலைச் சுமந்து ஒலிக்கிறது சுசீலாவின் குரலில். ‘சென்ற இடம் காணேன்….சிந்தை வாடலானேன்’ எத்தனை அழகான சந்தச் சொற்கள்…. ‘சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன்’ என்பது அதன் அடுத்த மேற்படி. சரணத்தின் மிக அருமையான இந்த வரிகளை சுசீலா திரும்ப இசைக்கையில் ரசிகரும் அதே உள்ளத் தவிப்புக்கு உள்ளாகிறார்.

மீண்டும் பல்லவிக்குத் திரும்புகையில் தாளக்கட்டு, அதே போல் விரைந்து செல்லும் வண்டி ஓடோடி வரும் பயணியை ஏற்றிக் கொண்டு தொடரும் பயணம் போல் செம்மையாக ஒலிக்கிறது.

இரண்டாம் சரணம், ‘நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே’ என்பது மிக மிக நுட்பமான உளவியல் பொழிவு. ‘அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே’ என்பது அதன் நீட்சி. பாதிப்பில் பதறும் நெஞ்சத்தை பிரதிபலிக்கும் பாடல் வரிகளும், அதைக் காட்சிப்படுத்தும் குரல் வளமுமாக மேலும் சிறக்கிறது பாடல் இந்த இடத்தில். ‘கணையாழி இங்கே மணவாளன் அங்கே’ என்பது காவியச் சொற்கள் என்று பலராலும் கொண்டாடப்படும் இடம். ‘காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே’ என்ற முடிப்பு, சரணத்தை வேறெந்த விதத்தில் முடிக்கவும் இசைய முடியாது என்று அடித்துச் சொல்லுமளவு புனையப்பட்டிருக்கிறது. பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து எழுதப்பட்டிருக்கிறது.

பாடலின் வழி நெடுக ஒற்றை வயலின் பற்றிக் கொண்டே படர்கிறது. வீணையின் தந்திகள் எங்கெங்கே ஒத்தடம் கொடுக்க வேண்டுமோ அங்கே மென்மொழியால் நீவிக் கொடுக்கிறது. தலைமுறைகளைக் கடந்து பேசுகிறது பாடல். கண் மூடிக் கேட்டிருந்தாலும் பாடலுக்கேற்ற அபாரமான பாவங்களை வெளிப்படுத்தும் பத்மினியின் முகத்தையும் மனத்திரையில் தோன்ற வைத்துவிடுகிறது பி சுசீலாவின் குரல்.

துயரத்திலேயே தோய்ந்து விட வேண்டுமென்பதில்லை. இன்பியல் உணர்வுகளின் பகிர்வுகளிலும் இசை நெஞ்சத்தைத் திளைக்கவே வைக்கிறது. சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து பாடலைக் கடந்த கட்டுரை பேசியிருந்தது. உதகை கோத்தகிரி தேயிலை தோட்டத்துத் தொழிலாளி ரெஜினா லூகாஸ் என்பவர் தனது தேயிலை பறிக்கும் பணியினூடே அன்றாடம் தனக்குப் பிடித்த பழைய பாடல்களைப் பாடுபவர், புதிய பறவை படத்தின் அந்தப் பாடலை எத்தனை குரலினிமை பொங்கப் பாடுகிறார் என்பதை வாட்ஸ் அப் பகிர்வு ஒன்றில் அறியவந்த போது வியக்க வைத்தது.

இசையின் ஜனநாயகத் தன்மை இது. நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்பதில்லை, பாடும் உள்ளங்களுக்குப் பாட்டுடைமை ஆகி விடுகிறது. ‘பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்…’ என்றானே மகாகவி, தங்கள் பாடுகளைப் பாடல்களால் தணித்துக் கொண்டே வாழ்க்கையோடு போராடும் எண்ணற்றோரின் குரல் இது. இசையின் பெருநதி எந்த பேதமும் இன்றிப் பொங்கிப் பெருகிப் பாய்ந்து நிரப்பி ஓடிக்கொண்டே இருக்கிறது வெளியெங்கும்.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 2 thoughts on “இசை வாழ்க்கை 77: பறந்தேனும் பாடுவேன் – எஸ் வி வேணுகோபாலன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *