அண்மையில் மறைந்த எழுத்தாளர், கள செயல்பாட்டாளர் தோழர் பா செயப்பிரகாசம் அவர்களை நினைக்கையில் கவிஞர் நா முத்துக்குமார் மறைந்த மறுநாள் தீக்கதிர் ஏட்டில் வந்திருந்த அஞ்சலி கட்டுரையை வாசித்துவிட்டு அவர் அழைத்து நெருக்கமாகப் பேசியது தான் உடனே நினைவுக்கு வந்தது. இசையின் பால், இசைப் பாடல்களின் பால் அவருக்கு இருந்த ஈடுபாடு என்னைக் கூடுதலாக ஈர்த்தது. தமிழின் முன்னோடி சிறுகதை ஆசிரியர்கள் பலருக்கும் இசையோடான இயைபு இருந்திருக்கிறது.
‘முதல் 50 ஆண்டுகள் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்று எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் (அவரது பாட்டனார் மதுர கவி பாஸ்கரதாஸ் தான் தமிழின் முதல் பேசும் படத்தில் பாடல் எழுதியவர், எம் எஸ் அவர்களுக்கு இசைப் பயிற்சி அளித்தவர்!) எழுதி பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக இப்போது வந்துள்ள புத்தகம், படைப்பாளிகளின் இசையார்வம் பற்றிச் சிறப்பாக ஆங்காங்கு தொட்டுச் செல்கிறது. 895 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்துக் கீழே வைக்காமல் படித்து முடிக்க முடியும் என்று ஊக்கப்படுத்திய நூல் அது.
தமிழின் முதல் சிறுகதை எது என்ற விவாதத்தில் அடிபடும் ஆறில் ஒரு பங்கு கதை எழுதியவர் சாட்சாத் மகாகவி சுப்பிரமணிய பாரதி, அவரை விடவா இசை ஞானமிக்க ஒருவர், தமது கவிதைகளை இன்ன தாளத்தில் இன்ன ராகத்தில் இசைக்கலாம் என்று சேர்த்து வெளியிட்டவர், தாமே குரலினிமை மிக்க பாடகர்.
புதுமைப்பித்தன் முதற்கொண்டு பங்காற்றிய மணிக்கொடி இதழில் படைப்புகளை வெளியிட்ட தி ஜானகிராமன், லா ச ராமாமிர்தம்….என்று இசையைக் கொண்டாடியவர்கள் நிறைய உண்டு. மணிக்கொடியில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் கவிதை எழுதி இருக்கிறார் என்று அந்தி மழை டிசம்பர் இதழில் எழுதியுள்ள கட்டுரையில் தோழர் ச தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகிறார். துன்பம் நேர்கையில் யாழ் பற்றி சிந்தித்தவர் ஆயிற்றே…
சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்று ஏ பி நாகராஜன் வசனம் எழுதியது எத்தனை உண்மையின் பிரதிபலிப்பு என்பதை, தமிழ்ச் சிறுகதை படைப்பாளிகள் வரலாற்றையும் சேர்த்துப் பேசும் தமிழ்ச்செல்வன் பக்கம் கண்ணீரோடு எழுதிச் செல்கிறது. ராஜமுக்தி திரைக்கதை எழுதிய புதுமைப்பித்தன் உடல் நலிவுற்றுத் தவித்தது பற்றி அந்தப் படத்தின் நாயகி இசை வாணி பி பானுமதி தாமதமாக அறிந்து உதவத் துடித்தது குறித்து, தி இந்து நாளிதழில் எழுதிய தொடரில் குறிப்பிட்டிருந்தார் தஞ்சாவூர் கவிராயர். ‘ஒரு நாள் கழிந்தது’ என்ற சிறுகதை, புதுமைப்பித்தனின் சொந்த வாழ்க்கை தரிசனம் அன்றி வேறென்ன…வயிற்றுப்பாட்டுக்குத் தவிக்கும்போதிலும் படைப்பூக்கம் நழுவ விட்டு விடாத அப்படியான படைப்பாளிகளில் இன்னொருவர் விந்தன்.
அருமையான எழுத்தாளர் என்பதோடு மற்ற படைப்பாளிகளை ஊக்குவித்த எளிய மனிதரான விந்தன், எப்போதும் மறையாத திரைப்பாடல்கள் சில வழங்கிச் சென்றுள்ளார் என்பது, முன்பே கேள்விப்பட்டிருந்தாலும், தமிழ்ச்செல்வன் தொகுப்பில் வாசித்தது இன்னும் நெருக்கமாக ஈர்த்தது. குலேபகாவலி படத்தில் இடம் பெற்ற மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ என்ற மகத்தான மெல்லிசை கீதத்தை, 5 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர் கடந்த சில ஆண்டுகளில் என்று சொல்கிறது யூ டியூப். நான் ஒரு மலையாளி, ஆனால் என் இதயம் கவர்ந்த பாடல் என்கிறது ஒரு குரல். எனது இசை திறமையை வெளிப்படுத்த கல்லூரியில் பெரும் வாய்ப்புகள் பின்னர் அமையக் காரணமாக அமைந்தது இந்தப் பாடலை ஒரு முறை மேடையில் பாடியது தான் என்கிறார் ஒருவர். எம் ஜி ஆர், ஜி வரலட்சுமி நடிப்பில் ஆழ்ந்து ரசிப்போரும் பாடலில் மனத்தைப் பறிகொடுத்துப் பதிவுகள் போட்டிருக்கின்றனர்.
பத்திரிகை அலுவலகத்தில் அச்சுக் கோக்கும் பணியில் இருக்கையில், அவருள் இருந்த படைப்பாளியை உணர்ந்து அவரைத் தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்தவர் எழுத்தாளர் கல்கி. அந்த விந்தன் எழுதிய பாடல் தான் அது. அந்தத் தேனமுதை, மெல்லிசை மன்னர்களின் இசையில் ஏ எம் ராஜா ஜிக்கி இணையர் அபாரமாக வழங்கி இருப்பது காலம் கடந்து பேசிக்கொண்டிருக்கிறது.
வடக்கே இருந்து வந்த ராகம் என்று குறிப்பிடும் இசைக் கலைஞர் சாருலதா மணி, பாகேஸ்ரீ ராகத்தில் சங்கீத மூலவர்களிடம் அதனால் தான் கீர்த்தனைகள் பிறக்கவில்லை, டைகர் வரதாச்சாரியின் சீடர் எம் டி ராமநாதன் புனைந்த பாட்டு தான் முதலாவதாகக் கிடைக்கிறது என்று தமிழிசையில் இந்த ராகத்தின் நுழைவைப் பேசிவிட்டு, திரை இசையில் அமைந்த முதல் பாடலாகக் குறிப்பிடும் பாடல் தான் மயக்கும் மாலைப் பொழுதே என்கிறார்.
https://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-bewitching-bhagesri/article3002530.ece
பின்னர் வந்த நிலவே என்னிடம்… பாடலையும் அவர் குறிப்பிடும் போது சங்கீதம் அறியாத எனக்கும் சட்டென்று பிடிபட்டது, குலேபகாவலி பாடலின் ஈர்ப்புமிக்க இடங்கள். அந்தப் பட்டியலில் அவர் தொட்டிருக்கும் பாடல்கள் எல்லாமே அமர்க்களம். அதில் ஒன்றை மற்றொரு தருணத்தில் இங்கே எடுத்துக் கொள்ளவேண்டும்.
மாலைப் பொழுதின் மயக்கத்தில் ஆர அமர ஆழ்ந்துவிட்டு, சரி போதும் நீ புறப்படலாம் என்று வழியனுப்பி, இரவைத் துணைக்கு அழைக்கும் காதல் உள்ளங்களின் கொண்டாட்ட இசை தான் பாடல். அந்த மயக்கத்தை ஜி வரலட்சுமி அபாரமாக புலப்படுத்துவதைக் காணும்போது, ஆரவல்லி படத்தின் நாயகியாக அவரது அதிகார மிடுக்கு மிக்க முகமும் நினைவுக்கு வந்தது. இந்த கர்ணனுக்கு மட்டுமென்ன இதயமில்லையா என்று எழுதினாரே கவிஞர், காதல் யாரைத் தான் விடும்!
காமிராவில் ஒரு காட்சி விரிந்து புறச்சூழலைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஜிக்கியின் தொடக்க ராக ஆலாபனை, படத்தைப் பாராமல் கூட அந்தி கருக்கும் பொழுதில் மனத்தைக் கொண்டு நிறுத்திவிடுகிறது. மயக்கும் மாலை என்று வருணித்து, நீ போ போ என்று வழியனுப்புவது, மறுநாளைக்கும் மயக்கம் வேண்டுமென்பதற்கு நைச்சியம் செய்து வைக்கும் உத்தி போல் படுகிறது. அந்த மாலை தங்களுக்குத் தேவைக்குமேல் நீண்டுவிட்டதுபோல் குற்றம் சாட்டுவது மாதிரி அந்த மாலையைக் கொஞ்சம் நீட்டித்து இசைக்கிறார் ஜிக்கி. அந்த போ போ என்பது கூட, யாரையும் விரட்டும்போது இரட்டிப்பு அழுத்தம் சொல்லித் தானே அனுப்பி வைப்பது மாதிரி தான்! ‘இனிக்கும் இன்ப இரவே நீ வா வா என்பதில் இரவுக்கு வரவேற்பும், நீ இடத்தைக் காலி செய் என்று மாலைக்கு மற்றுமொரு அழுத்தமும் சேர்ந்து ஒலிக்கிறது. இரவை வரவேற்பது எதற்காக….’இன்னலைத் தீர்க்க வா’ என்று அடுத்த அடியில் காரணமும் சொல்லப்பட்டு விடுகிறது. மூன்று வரிகளில் எத்தனை காவியம் புனைந்திருக்கிறார் விந்தன்.
ஜிக்கியின் காதல் அறையின் சாளரம் வழியே கசியும் இசை கேட்டு, ஏ எம் ராஜா நுழையும் இடம் துல்லியமான காதலை இத்தனை மெல்லியதாக எடுத்துச் சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கிறது. ‘பன்னீர் தெளிக்கப் பனி பெய்யுமே’ என்ற அனுபல்லவியில் எத்தனை சுகம்….’பசும்புல் படுக்கப் பாய் போடுமே’ என்ற அடுத்த வரியில் எத்தனை இதம்! இதிலிருந்து பல்லவிக்கு ராஜா புறப்படவும், அதன் நிறைவில் ஹம்மிங் எடுத்து, முதல் சரணத்திற்கு வருகிறார் ஜிக்கி.
‘பாலூட்டும் நிலவு தேனூட்டுமே…. பாடும் தென்றல் தாலாட்டுமே’ என்ற வரிகளை என்னமாக எடுக்கிறார் ஜிக்கி. இரவின் உணவையும் உறக்கத்தையும் இயற்கையின் மடியில் எடுத்துக் கொள்கின்றன காதல் இதயங்கள். ‘தேனூட்டுமே’ என்ற இடத்தில் அத்தனை ரசம் கொடுத்து இழைத்திருப்பார் ஜிக்கி. அதே போல், ‘தென்றல்’ எனும் வார்த்தையே நம்மை வருடுவது போல் இசைப்பார். அதிலிருந்து ‘புன்னை மலர்கள் அன்பினாலே’ என்ற வரிக்கு அவர் மாறும் விதமும், அந்த அன்பில் அவர் குழைக்கும் அன்பும் அபாரம். ‘போடும் போர்வை ….’ என்று வளர்த்து, ‘தன்னாலே’ என்று அதை நீட்டிக்கும் இடம் இன்னும் சொக்க வைக்கும். பல்லவியில் கொண்டு அவர் முடிக்க, இந்த முறை ஏ எம் ராஜா எடுக்கிறார் ஹம்மிங், தொடர்ந்து, இரண்டாவது சரணம்.
இரண்டாவது சரணம், சிருங்கார சுவாரசியம். ‘பாலூட்டும் நிலவு தேனூட்டுமே’ என்ற நாயகியின் குறிப்பில் இருந்து உரிமை எடுத்துக் கொள்கிறான் நாயகன், ‘கனியிதழ் காதல் பசி தீர்க்குமே ..’ என்பது அவனது தூண்டுதல். அதை அப்படி அனுபவித்து இசைப்பார் ராஜா. நாயகி ஏன் மறுக்கப் போகிறார், ‘காண்போம் பேரின்பமே’ என்கிறாள். அங்கிருந்து பாடலை எங்கோ கொண்டு செல்கிறார் விந்தன், ‘வானிலும் ஏது வாழ்விது போலே …’ என்ன கவித்துவக் காதல் வரி! மென்மையான குரலிலேயே உயர்த்திக் கொண்டு போகிறார் ராஜா அதை. ‘வசந்தமே இனி எந்நாளும்’ என்பது காதல் இன்ப வாழ்க்கையின் நிறைவுரை ஆக ஜிக்கியின் குரலிசையில் ஒலிக்கிறது.
ராக ஆலாபனைகளும், குரலினிமையும், தொடக்கமுதல் சீரான கதியில் இன்பியல் ரசனை தோய்ந்து வெளிப்படும் தன்மையும் பாடலை எப்போதும் கேட்கவைக்கிறது. சிதார் இசையும், பதமான தாளக்கட்டும் உள்ளுக்குள் ஒலித்தபடியே இருக்கிறது. வாழ்க்கைப் போராட்டங்களினூடே காதலைப் பேசியவர் விந்தன். புரட்சிகர இதயங்களில் காதல் பூத்துக் குலுங்கும் என்பதன் ஒரு வெளிப்பாடு தான் இந்த இசைப்பாடல்.
கருத்தொருமித்து வெளிப்படும் காதலின் இசை அது. எல்லோரும் இன்புற்று இருக்க நினைக்கும் இசை. வேறொன்று அறியாத இசை. மலர்ச்சி மிக்க புதிய சமூகத்திற்கான இசையும் அது.
(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
தேன் தோய்ந்த கருத்தாய்வு! வாசிக்கும் போதே பாடல் வரிகளைப் பாடிக் கொண்டே ரசிக்க முடிந்தது. காதில் பாடல் தானே ஒலித்தது!
என்ன ஒரு அற்புதமான வரிகள். சங்கீதம் தெரியாத என்று குறிப்பிட்டு 80 எபிசோடுகளில் எத்தனை எத்தனை சங்கீத ஆலாபனை நடத்தி ஆனந்தமாக்கியுள்ளார். நன்றி🙏💕 மகிழ்ச்சி🎄