குவிகம் இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர்கள் கிருபானந்தன், சுந்தரராஜன் இருவரும் அருமையான மனிதர்கள். அன்பு கொண்டாடிகள். கொரோனா ஊரடங்கு காலத்தில் உணர்வுகள் முடங்கிவிடாதிருக்க வாரம் தவறாமல் இணைய வழியில் சிறப்பான நிகழ்ச்சிகள் தொடங்கியது இப்போதும் தொடர்கிறது. டிசம்பர் 18 ஞாயிறு மாலை நிகழ்ச்சியில், திரைப்படப் பாடல்களை முன் வைத்து உரை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்றுக் கொண்டேன்.

அதற்குப் பிறகு அந்த நாளில் திருச்சியில் இருக்க வேண்டிய அலுவல் அமைந்துவிட்டது. அதனால் திருச்சியில் எந்த இடத்தில் அமர்ந்து சிக்கல் இராது இசைப்பாடல்கள் பற்றிப் பேசுவது என்று யோசிக்கவே தேவையின்றி பளிச்சென்று நினைவுக்கு வந்தார் நியூரோ மருத்துவர் – தமிழ் ஆர்வலர் – திருக்குறள் கொண்டாடி மருத்துவர் சுப திருப்பதி! மதுரை பல்கலை மேனாள் துணை வேந்தர் வ சுப மாணிக்கனார் அவர்களுடைய சகோதரர் பேரன் இவர். சில ஆண்டுகளுக்கு முன்பு தினமணிக் கதிரில் வந்த இவரது மனசாடுதல் என்ற சிறுகதை வாசித்துப் பாராட்டிப் பலரோடு பகிர்ந்தபோது, மருத்துவர் சுப்பிரமணியன் மூலம் இவரது அறிமுகம் வாய்த்தது. விஷயத்தைச் சொன்னதும், காத்திருப்பேன், அவசியம் எங்கள் இல்லத்திற்கு வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்.

கடந்த ஞாயிறு அவரது இல்லத்தில் நுழையும்போதே, அவருடைய தந்தையர் வெளியே வந்து, நீங்கள் இன்னார் தானே, அனுமானத்தில் கேட்டேன் என்று வரவேற்று அமர வைத்தார். ‘இரண்டு ஆண்டுகளுக்குமுன் மருதகாசி நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை தமிழ் இந்து நாளேட்டில் எழுதி இருந்தீர்கள், உங்கள் எண் கேட்டு வாங்கி அழைத்துப் பேசினேன், நினைவு இருக்கிறதா?’ என்று அசத்தினார். அடுத்தடுத்து அவரது கேள்விகளும், உரையாடல்களும் திரைக்கவிஞர்கள் பற்றியதும், அவரவர் முத்திரைப் பாடல்கள் பற்றியதுமாக அமைந்து அதிரவைத்தது. பெரியவரின் அபார நினைவாற்றல், இசையார்வம் குதூகலிக்க வைத்தது. அவரது அனுமதியோடு பின்னர் முதல் தளத்தில் மருத்துவர் ஏற்பாடு செய்திருந்த அறையில் கணினி முன்பு அமர்ந்து இணைய நிகழ்ச்சியில் இணைந்த அடுத்த ஒரு மணி நேரம் அருமையாக அமைந்தது.

கதை சொல்லும் பாடல்களும், பாடல்கள் சொல்லும் கதைகளும் கொட்டிக் கிடக்கின்றன திரைப்படங்களில்! 35 நிமிட உரைக்குப் பின் சுருக்கமாகப் பேசிய அன்பர்கள் பலரும் அவரவர் தேர்வுப் பாடல்கள் குறிப்பிட்டுச் சிறப்பாகத் தங்கள் கருத்துகள் பகிர்ந்தனர். வருகை தந்தோருக்கு மனநிறைவு தந்த நிகழ்ச்சி அது.

திரைப்பாடல்களில் படத்தின் கதையைச் சொல்லும் வழக்கம், கட்டியக்கார மரபிலும் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். ‘லவ குசா படத்தின் ஜெகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே, உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே’ என்ற பாடல் இளமைக் காலத்தில் மிகவும் ஈர்த்த ஒன்று. ஒட்டுமொத்த இராமாயணத்தை எப்படி ஓர் இசைப்பாடல் சொல்லிவிட முடியும் என்று பாடிக்கொண்டே இருந்த காலம் ஒன்று இருந்தது. ‘மந்தரையின் போதனையால் மனம் மாறி கைகேயி…என்று இழுக்கும் இடத்தில் மனம் மிகவும் வேதனைப்படும். தங்கையின் போதனையில் தசகண்ட ராவணன் ஜானகி தேவியைச் சிறையெடுத்தான்…என்று இடைவெளி விட்டு, ‘நெஞ்சம் கனலாகிக் கண்கள் குளமாகித் தம்பியுடன் தேவியைத் தேடிச் சென்றான்…இராமன் தேடிச் சென்றான்’ என்ற இடத்தில் அழுத நினைவு கூட உண்டு. அந்தத் துயரமெல்லாம் எப்போது பஞ்சாய்ப் பறக்குமெனில், ‘இராமசாமியின் தூதன் நானடா இராவணா’ என்றான் என்ற இடத்தில் தான்….அங்கே பிடிக்கும் வேகம், கலங்கிய மக்கள் மகிழ்ந்திட இராமன் அரசுரிமை கொண்டான்.. என்ற இடம் வரை ஓட்டம் தான்….அந்தப் பாடல் பிடிபட்டதற்கு முக்கிய காரணமான என் அன்புத் தமக்கை கீதாவின் நினைவுகளும் சூழ்கின்றன இப்போது அந்தப் பாடலை நினைக்கையில், கதைகளும் பாடல்களுமான இளமைக்கால வாழ்க்கையில் தம்பிகளுக்கு அப்படியான அக்கா வாய்ப்பது போல் வரமொன்று உண்டா !

அந்தப் பாடலை நிகழ்ச்சியில் குறிப்பிடவில்லை ! நிகழ்ச்சியில் பேசிய பாடல்களைக் கடந்தும் நிறைய நினைவில் இருக்கின்றன கதை சொல்லும் பாடல்கள்…. சொல்ல நேரம் காணாது! மிகக் குறைந்த வரிகளில் முழு திரைக்கதையை அடையாளப்படுத்தி விடும் பாடல்கள் உண்டு. ‘அய்யனுடன் கோயில் கொண்டாள் திருமகளாம் நங்கை, அடிவாரம் தனிலிருந்தாள் அலமேலு மங்கை’ என்ற அவள் ஒரு தொடர்கதை படத்தின் பாடல், படத்திற்கு அப்பாலும் உள்ள கதைகளையும் பேசிவிடும்.

கண்ணதாசன், எம் எஸ் வி அப்படியாக உருவாக்கிய சிறப்பான திரைப்பாடல்கள் வரிசையில் ஒன்று, படம் வந்த போதே கவனத்தை ஈர்த்தது. எஸ் பி பாலசுப்பிரமணியன் – வாணி ஜெயராம் இணைந்து பாடிய பாடல்கள் எல்லாமே தேன், இந்தப் பாடல் சற்று வித்தியாசமான சுவையில் அமைந்தது. ஈர்ப்பு இருந்தும் வலுக்கட்டாயமாக மறுத்துக் கொள்ளும் காதலை ஒரு கட்டத்தில் இறங்கிவந்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணின் உளவியல், அவளைச் சீண்டியபடியே அரவணைக்கக் காத்திருக்கும் காதலனின் கருத்தியல் இவற்றை முன்வைக்கும் பாடலில் வேறோர் உருக்கமான ஜோடியின் கதையும் பேசப்படுகிறது. இயற்கையின் வஞ்சனையில் செவிப்புலன் இழந்த தொழிலாளி அவன், அவளோ நம்பிக்கை துரோகத்தின் விளைவை வயிற்றில் சுமந்திருக்க வெளியேற்றப்பட்ட உழைப்பாளி!

கண்ணதாசனைத் தவிர யார் எழுதியிருக்க முடியும் அந்த வரிகளை….மெல்லிசை மன்னரின் மேதைமையை யார் மறுக்க முடியும் அந்தப் பாடலில்!

பல்லவியே அழகியல் கவிதை வரியில் தொடங்கி விரிவடைகிறது. அந்தப் பொருளடர்த்தி, பாடல் நெடுக பரவுகிறது. இரகசியக் குரலைப் போலவே கசியும் மென்மையான இசையில் எஸ் பி பி தொடங்குகிறார், இலக்கணம் மாறுதோ….என்று! அந்த வரியின் அழகில் சொக்கும்போதே, ஆலாபனையில் வளர்த்தெடுக்கிறார் அந்தக் கடைசிச் சொல்லை, அந்தக் கடைசி எழுத்தை….. காற்றில் சுழன்றுவரும் ஆடையைச் சட்டென்று கைகளால் பற்றி இறுகச் சுற்றித் தக்கவைத்துக் கொள்வதுபோல் அந்தத் தாளக்கட்டு (மிருதங்கமாக இருக்குமோ?) பரவசப்படுத்திப் பாடகரைப் பல்லவியை மீண்டும் பாடத் தூண்டுகிறது !

‘இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ’ என்பது பாடல் வருமுன்பே கால காலமாகக் கவியரங்குகளில், தமிழ் மன்றங்களில் சர்ச்சையில் இருந்த விவாத வரி. அதை நெகிழ்வுத் தன்மையைக் கொண்டாடும் காதல் வரியாகக் கட்டமைக்கிறார் கண்ணதாசன்!

பல்லவியில் அடுத்த வரி இன்னும் சிறப்பானது! ‘இது வரை நடித்தது அது என்ன வேடம்…இது என்ன பாடம்’ என்பது இன்னும் நெருக்கமான காதல் வரி! அதில், வேடத்தை நீட்டி இசைக்கும் எஸ் பி பி, பாடத்தைப் பதமாக முன்வைப்பதிலும் அத்தனை அழகு!

பல்லவியிலிருந்து வேக திசைக்கு நகரும் சரணத்தை நோக்கிய வழித்தடத்தை வயலின்களும், புல்லாங்குழலும் உடன்பட்டும் முரண்பட்டும் முன்மொழிந்தும் வழி மொழிந்துமாக அந்தக் காதல் இதயங்களை அப்படியே பிரதியெடுக்கும் மாயத்தை நிகழ்த்துகிறார் எம் எஸ் வி. பிடிவாதமான மனத்தை எப்படி நாயகி இளக வைத்துக் கொண்டு விட்டாள் … என்று வியப்பதுபோல் சீண்டுவதாக அமையும் முதல் சரணத்தின் வரிகளில் ரசிகர்கள் ஆழ்ந்து திளைத்திருந்த கல்லூரி நாட்கள் நினைவில் வந்து போகிறது!

‘கல்லான முல்லை, இன்றென்ன வாசம்?’ என்கிற முதலடியில் அந்த வாசம் பரவ வேண்டிய தொலைவுக்கு சங்கதிகள் போட்டு இசைப்பார் பாலு. ‘காற்றான ராகம்’ என்ற வரி மிகுந்த காற்றோட்டமான வெளியில் ஒலிக்கும். ‘ஏன் இந்த கானம்?’ என்கிற வீச்சு அம்சமானது. வெண்மேகம் கார்மேகமானதைக் கொஞ்சும் அடுத்த வரியைத் தொடர்ந்து, ‘மன்மதன் என்பவன் கண் திறந்தானோ’ என்ற வரி, மூத்த தலைமுறையினரின் பேச்சு மொழியின் கவிதை வடிவம். ‘பெண்மை தந்தானோ’ என்பது இயல்புணர்ச்சியைக் கூட ஆண் மேலாதிக்க நிலையிலிருந்து பார்க்கும் பிரயோகம். இந்தக் கொடுமையை, ‘கம்பன் ஏமாந்தான்’ என்ற மற்றபடி அருமையான பாடலிலும் கவிஞர் செய்திருப்பார். ‘யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று…’ எனும் இடத்தில் பாலுவின் முத்திரை சிரிப்பு.

பல்லவிக்கு மீளும் எஸ் பி பி அந்த முதல் வரி ஆலாபனையை இன்னும் சொக்கவைக்கும்படி மனத்தில் நிற்கவைக்கிறார். இரண்டாம் சரணம், நாயகியின் தன்னிலை விளக்கம். வாணி ஜெயராம் குரலினிமை மட்டுமல்ல, தன்னை நிறுவிக்கொள்ளும் பெண் மனத்தின் பிடிமானத்தை மொழியும் அவரது ஆற்றலும் துலங்குகிறது. ‘என் வாழ்க்கை நதியில் கரையொன்று கண்டேன்…உன் நெஞ்சில் ஏதோ….கறை ஒன்று கண்டேன்’ என்பதில் அந்த ‘ஏதோ’ எத்தனை கற்பனை விவரிப்புக்குள் நுழைந்து நுழைந்து வருகிறது! ‘புரியாததாலே திரை போட்டு வைத்தேன்’ என்பதில் அந்தப் ‘புரியாததாலே’ அத்தனை கிறக்கமூட்டும் சுயகழிவிரக்கம். ‘திரை போட்டபோதும் அணை போடவில்லை’ என்று கொண்டு வந்து நிறுத்துமிடம் அத்தனை அழகு. ‘மறைத்திடும் திரை தனை விலக்கி வைப்பாயோ, விளக்கி வைப்பாயோ’ என்பதில் சொற்ஜாலமும் செய்கிறார் கவிஞர்.

அங்கிருந்து, வேறு ஜோடியைப் பாட இருக்கும் சரணங்கள் என்பதால், பல்லவிக்குப் போகாமல் மூன்றாம் சரணத்தை நோக்கி வயலின்களும், குழலும் பேசிக்கொண்டே போக, டிரம்பெட் மொழியும், சிலிர்க்கவைக்கும் சிதார் சிற்றிசையும் தொட்டுக் கொடுக்க, ‘தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை’ என்று எடுக்கிறார் எஸ் பி பி. ‘தாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை; என்கிற வரியை, கவிஞர் எந்தத் தருணத்தில் எழுதியிருப்பார்! அதோடு மட்டுமா…. ‘தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்…பாடாமல் போனால் எது தெய்வம் ஆகும்’ என்ற வரியை லட்சக்கணக்கானோர் (இந்த எண்ணிக்கை குறைவோ!) கொண்டாடிய நாட்கள் நினைவில் இருக்கிறது. சரணம் முழுவதையும் ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவித்துச் சங்கதிகளோடு இழைத்து இழைத்துப் பாடி இருப்பார் பாலு.

அங்கிருந்து பல்லவிக்கு வராமல் நான்காவது சரணத்தை நோக்கிய இசையின் திசையில், தனக்கு உற்ற துணையான காது கேளாத துணை பாத்திரத்தை , ‘மணியோசை என்ன, இடியோசை என்ன…எது வந்த போதும் நீ கேட்டதில்லை’ என்று தொடங்குவது காத்திரமான விளக்கம். ‘நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் நிஜமாக வந்து எனைக் காக்கக் கண்டேன்’ என்பது பரவச அறிமுகம். சரணத்தின் நிறைவில் வாணி ஜெயராமின் ஹம்மிங், உருக்கமான சூழலின் உருவகமாக மலர்கிறது. பல்லவியில் அவர் நிறுத்தி நிறைவு செய்யுமிடம் இன்னும் அம்சமாக அமைகிறது.

தந்திக்கருவிகளும் குழலும் இன்ன பிற இசைக்கருவிகள் ஒரு புறம் இயங்க, தாளக்கருவிகளின் சுகமான வழிநடைப்பயணம் பாடலை இன்னும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கிறது. கமல், சுமித்ரா ஒரு பக்கமெனில், அனந்து, ஷோபா இன்னொரு பக்கம். அனந்துவின் வெகுளித் தன உடல் மொழியும், ஷோபாவின் குழந்தைமையும் மறக்க முடியாதது. பாடலை நினைக்கும்தோறும் ஷோபாவின் துயரமிக்க முடிவு நெஞ்சை அறுக்கவே செய்யும்

தனக்குத் தானே பேசிக்கொள்ளும் தாத்தா பாட்டிகளை யார் தான் பார்த்திருக்க மாட்டோம்! மனத்தின் குரலாக இசை மலர்கிறது, திரைப்படங்களில். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பதை வசனம் சொல்ல முடியாது, காட்சி மொழி தான் சொல்ல வேண்டும். அதன் சாத்தியங்களில் அதிகம் பயணப்படாத காலங்களில் இசைப்பாடல்கள் நிரப்பிக் கொண்டிருந்தன அந்த இடத்தை, வசனங்களைக் காட்டிலும் தூக்கலாகக் கூட! பாடல்கள் அற்ற படங்களும் பேசப்பட்டதுண்டு, ‘அந்த நாள்’ போல! ஆனால், பாடல்கள் பேசிக் கொண்டே இருக்கின்றன, நம்மோடு காலத்தைக் கடந்தும்! நமது நினைவுகள் ஒளி, ஒலி அலைகளால் நிரம்பி இருக்கின்றன! மின்னலைக் காணும்போதே இடியைக் கேட்கத் தயாராகிறது உள்ளம். இசையைக் கேட்கும்போதோ, கதைக்குத் தயாராகிறது உள்ளம்.

கதைக்குள் பாடலும், பாடல்களுக்குள் கதைகளும் நிலை பெற்றுவிட்டன, திரை இசையில்! இசையில் லயிக்கிற மனிதர்கள் வாழ்க்கையை ரசிக்கவும் சற்று எளிதாகிறது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். One thought on “இசை வாழ்க்கை 81: யார் சொல்லித் தந்தார் இசைக் காலம் என்று! – எஸ் வி வேணுகோபாலன்”
  1. சிறப்பாக உள்ளது. இசையில் எத்தனை எத்தனை உள்ளது அதன் ரசனையை அழகாக ஆலாபனை செய்கின்ற இன்பம் பாடல் கேட்பதை விட அருமை. நன்றி மகிழ்ச்சி🎄😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *