வாணி ஜெயராம் அவர்கள் மறைந்த அன்று ஒரு கூட்டத்திற்குச் சென்று விட்டு இரவு திரும்புகையில், ‘தூரிகை எரிகின்ற போது’ என்ற வரியைக் கண்ணீரோடு பாடத் தொடங்கினேன். ஊபர் இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்த நண்பர், ஓர் இளைஞர். வாணியம்மா பாட்டு தானே சார் அது.. என்று கேட்டார். இரண்டு கிலோ மீட்டருக்குக் குறைந்த அந்தப் பயணத்தில் மேற்கொண்டு பத்துப் பாடல்களிலிருந்து வாணியின் சிறப்பு ஒலிக்குறிப்பை விளக்கும் இடங்கள் பாடிக் கொண்டு வந்தேன். தொடர்ந்த உரையாடலில், தாங்கள் கேட்க முடியாது இழந்த குரல் அது என்ற வருத்தம், சற்று கோபம் மேலோங்க ஒலித்தது அவரிடமிருந்து.
வாணி அவர்களைப் பற்றிய ஒரு தனிக் கட்டுரையை நண்பர் அழகிய சிங்கர், நவீன விருட்சம் மின்னிதழ் பக்கங்களில் உடனே வெளியிட்டிருந்தார், அண்மையில். ‘இன்னும் வாணியம்மா குரலிலிருந்து மீளவே முடியவில்லை, தோழர். அவர் குரலை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று எழுத்தாளர் – மொழி பெயர்ப்பாளர் கே வி ஜெயஸ்ரீ பதில் அஞ்சல் அனுப்பி இருக்கிறார். வாணி ஜெயராம் நினைவில் ஆழ்ந்து இருக்கும் பல அன்பர்கள் வாட்ஸ் அப்பில் பதில் போட்டுள்ளனர்.
வாணி ஜெயராமின் குரல் வளம், அவரது கற்பனைத் திறம், இசை பொழியவென்றே அவருக்கு வாய்த்திருந்த அசாத்திய குரல் நாண்கள் இவற்றை அபாரமாகப் பயன்படுத்திய இசை அமைப்பாளர்கள் என்றென்றும் பேசத்தக்க திரைப்பாடல்களை வழங்கியுள்ளனர்.
எம் எஸ் வி இசையில் அந்த 7 நாட்கள் படத்தில் மலேசியா வாசுதேவனோடு இணைந்து வாணி ஜெயராம் இசைத்த, ‘எண்ணி இருந்தது ஈடேற…’ பாடலின் சரணங்கள் காற்றில் மிதக்க வைப்பவை. காதல் ரசம் ததும்பும் ரகசிய பரிபாஷைகள் பரிமாறும் குரலில் வாசுதேவனும், நாயகனை வசீகரிக்கும் துள்ளல் நாயகிக்கான பாவங்களை வெளிப்படுத்தும் குரலில் வாணியும் சேர்ந்து வழங்கிய அந்தப் பாடல் எண்பதுகளில் வானொலியில் ஒலித்தபடி இருக்கும். ‘புதிய ராகம் கண்டு பிடிக்க ரெண்டு வருஷம் நினச்சேன்…உன் குரலைக் கேட்டபிறகு தானே ராகம் கண்டு பிடிச்சேன்’ என்ற வரியில், அந்த கண்டு பிடிக்க ரெண்டு வருஷம் எதுகை நயத்தின் அழுத்தம் பொங்க மலேசியாவும், ‘முந்தா நேத்து சாயங்காலம் முல்லப் பூவத் தொடுத்தேன்’ என்ற சுவாரசியமான வரியைப் பிடிக்கும் வாணி, ‘உன் பாட்ட கேட்டுக் கெறங்கிப் போயி நாரத் தானே முடிஞ்சேன்’ என்னும் வரியில், அவரின் குரலே கிறங்கடிக்கும்.
‘சாரல் மேகம் சரசம் பேசி மனச வந்து நனைக்கும்’ என்று வாணியின் குரலில் தொடங்கும் இரண்டாம் சரணம், மிகுந்த சிருங்காரம். ‘பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்’ என்ற இடத்தில் ஒரு மௌன சிரிப்பை அப்படி கொணர்ந்திருப்பார் வாணி. ‘நேரம் பார்த்து தேதி பார்த்து…’ என்று இணையும் மலேசியா வாசுதேவன், பாடல் முழுக்க காதல் பித்தேறிய மென்குரலில் அசத்தி இருப்பார். பாடல் நெடுக தாளக்கட்டு (தபலா பிரசாத் ஆக இருக்குமோ) அத்தனை சுகமாக ஒலிக்கும். அருமையான பாடல், கவிஞர் வைரமுத்துவின் ஆக்கம்.
தான் பாடிய பாடல்கள் அனைத்தும் அவரது உள்ளத்திற்கு இதமானவை தான். ‘நீராட நேரம் நல்ல நேரம்’ பாடலை அவர் அத்தனை நேசித்திருக்கிறார். நடனக் காட்சிக்காக அவர் பாடிய பாடல் அது. தயங்கித் தயங்கி அதைக் கேட்கிறார் நேர் காணல் செய்பவர். ஆனால், வாணி விகல்பமில்லாமல் பதில் சொல்கிறார். அந்தப் பாடல் பல்லவியை அத்தனை உற்சாகமாக இசைக்கும் அவர், ‘இந்தப் பாட்டில் சரணம் இன்னும் சிறப்பாக இருக்கும்…’ என்று அதையும் அற்புதமாக இசைக்கிறார்.
எம் எஸ் வி அபாரமாக இசையமைத்த அந்தப் பாடலில் வாணியின் இசை ஞானம் அசாத்திய வகையில் வெளிப்படும். அவரது ராக ஆலாபனையும், சங்கதிகளும், சொற்களின் உச்சரிப்பும் அதற்கு முழு இடமளித்து ஒலிக்கும் இசைக்கருவிகளுமாக தமிழ்த் திரையில் வித்தியாசமான பாடல்களில் ஒன்றாக அமைந்தது கவிஞர் கண்ணதாசன் புனைவில் உருவான அந்தப் பாடல்.
தூரிகை எரிகின்ற போது ….கட்டுரையை வாசித்துவிட்டு, அதில் தங்கள் மனத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று இடம் பெறவில்லையே என்று அஞ்சல் ஊழியர் இயக்கத்தின் தோழர் மோகனும், இந்தியன் வங்கி ஓய்வு பெற்ற உதவி பொது மேலாளர் கிருஷ்ணனும் மிகுந்த ஆதங்கத்தோடு கேட்ட பாடல், மதங்களைக் கடந்து ரசிகர்கள் உள்ளத்தில் இடம் பெற்ற ஒரு பக்திப் பாடல். அதுவும் எம் எஸ் வி இசையமைப்பில் விளைந்தது தான்.
‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்….’ என்ற பாடல் முற்றிலும் வேறு ஒரு தளத்தில் ரசிகரைக் கொண்டு குடியமர்த்தும் தன்மை மிக்கது. ஒட்டு மொத்தப் பாடலிலும் வாணி ஜெயராம் குரல், தேவாலய மணியின் ஓசை இன்பத்தின் இசை வடிவமாகவே ஒலிப்பதை உணர முடியும்.
பொதுவாக கோரஸ் இசைக்கு, தேவாலய இசைக் குழுவின் பாடகர்களை எம் எஸ் வி அழைத்துப் பாட வைப்பார் என்று சொல்வார்கள். இது தேவகுமாரன் பற்றிய பாடல். ஞான ஒளி உள்ளிட்ட படங்களில் செய்த பரிசோதனைகளுக்கும் அப்பாற்பட்டு இந்தப் பாடலை இன்னும் சிறப்பாக சிந்தித்திருக்கிறார் மெல்லிசை மன்னர் என்று தோன்றும்.
தொகையறா அமைக்கும் சமயங்களில் பாடலின் ஒட்டுமொத்த எல்லைகளை அது தொட்டுக் காட்டிவிடும் வண்ணம் தான் அமைப்பார்கள். அதில் எம் எஸ் வி அம்சமாக மெட்டமைத்துவிடுபவர். புனித அந்தோணியார் படத்தின், ‘மண்ணுலகில் இன்று தேவன்’ பாடலுக்கான தொகையறாவிலேயே எந்த உச்ச இடம் தொடப் போகிறோம் சரணங்களில் என்பதை வாணி அப்போதே ராக சித்திரமாகத் தீட்டிவிடுவார்.
வாணி ஜெயராம், பல்லவியை எடுக்கும் இடம், முற்றிலும் பரவசமிக்க ஒரு பயணத்தின் பிறப்பிடமாகத் தொடங்கும். ‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்….’ என்ற வரியில் எத்தனை உற்சாகப் பிழிவு…’நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறான்’ என்ற வரியில் எத்தனை கனிவு! ‘எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே…’ என்ற வரியில் அவர் வழங்கும் கருணையின் நீட்சி, ‘ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வன் ஆகிறான்’ என்ற தணிப்பில் அவர் பரிமாறும் காட்சி…கண்ணீர் பெருக்க வல்லது. வரிகளைத் திரும்ப இசைக்கையில் சரளமாகப் பெருகும் சங்கதிகள் உள்ளத்தைக் கரைப்பவை.
‘மழலை மொழிகள் கேட்கக் கேட்க…’ என்ற முதல் சரணத்தை அவர் கொண்டாட்டமாக எடுக்கிறார். ‘மனது கொள்ளாதோ…’ என்ற இரண்டு சொற்களுக்கு எத்தனை மந்திரம் போடுகிறது அவரது குரல்…மனம் கொள்ளாத இன்ப ஊற்று அது. ‘மடியில் வந்து அமரும் போது’ என்பதில் அந்தப் ‘போது’ எத்தனை தீர்மானமான அழுத்தம்! ‘மயக்கம் கொள்ளாதோ…’ என்பது ஒரு குழந்தைமை கொண்டாடும் குதூகலம் அன்றி வேறென்ன… ‘பார்வை பட்டால் போதும்….’ என்ற வரியின் ஆவேசம், ‘நம் பாவம் யாவும் தீரும்’ என்பதில் தானே அதைத் தணிக்கவும் செய்கிறது. ‘கைகள் பட்டால் போதும்…’ என்பதில் உருளும் சொற்கள், ‘கவலை எல்லாம் தீரும்’ என்ற பிடிமானத்தில் நிறைவு தந்து, பல்லவியை நோக்கி நகர்கிறது. தபேலா என்னமாக அங்கே குரலோடு பேசிக் கொண்டே ஜதி போட்டுச் செல்கிறது.
இரண்டாம் சரணம் நோக்கிய திசையில் இசைக்கருவிகள் வாணியின் குரல் பாங்கிற்கான கதியிலேயே துள்ளாட்டம் போட்டுப் போகின்றன. ‘அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை’ என்ற வரியை வாணி இழைக்கிறார். ‘அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை’ என்கிற இடம் நம்பிக்கையாளர்களை இன்னும் பரவசப்படுத்தும் இடம். ‘கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்…’ என்ற நீட்சியில் வாணியின் குரலினிமை முன்னுதாரணங்கள் அற்று ஒலிப்பது. ‘குலம் தழைக்கக் குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்’ என்ற நிறைவு கொண்டாடிக் கேட்க வேண்டியது. அங்கிருந்து பல்லவிக்கு தேவகுமாரனை வரவேற்று அழைத்துச் செல்வதுபோலவே தாளக்கட்டு அத்தனை அமர்க்களமாக வாணியின் குரலை உள்வாங்கிக் கொண்டு போய் நிறைவடைய வைக்கிறது. தஞ்சைவாணன் எழுதிய பாடலிது.
உலக வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கஷ்ட நஷ்டங்களுக்கு விடை தெரியாது தவிக்கும் பாமர மக்கள், இதயமற்ற உலகின் இதயமாக, ஆன்மா அற்ற உலகின் ஆன்மாகவாக, தங்களது ஏக்கப் பெருமூச்சாகப் பற்றிக் கொள்ளும் இடத்தில் மதத்தை அடையாளப்படுத்துகிறார் கார்ல் மார்க்ஸ்.
இலக்கியமும், இசையும், கலையும் உயிர் இன்பத்தை, உயிர்களின் தவிப்பை, உயிர்த் தேடலை, உயிராக மீண்டும் மனிதர்கள் முன் படைக்கின்றன. உயிர்ப்புள்ள கலைகள் மனிதர்களை அவர்தம் நெருக்கடிகளில் இருந்து சற்றே விலகி நின்று விடுவித்துக் கொள்ள ஓர் இளைப்பாறுதல் வழங்குகின்றன. இதில் இசை முக்கிய இடத்தைப் பெறுகிறது.
மறைந்துவிட்ட மனுஷியின் குரலை மறக்கவே முடியாது என்று போட்டி போட்டுக் கொண்டு வாணி ஜெயராம் பாடல்களை நோக்கிய தேடலில் இறங்கிக் களிப்புறுவது, அவரவர் குடும்ப முன்னோடிகளின் மடியில் மானசீகமாகக் கண்ணுறங்கத் துடிப்பது போலவே தோன்றுகிறது. இசையின் மாய மந்திர ஜாலம் அது.
(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மறைந்த பாடகி வாணி ஜெயராம் பற்றிய இக்கட்டுரை அவரின் சங்கீத ஆளுமையை மேலும் பொலிவடைய செய்கிறது.
Because of your article only, I could understand the greatness of Vaniji. Earlier, as a layman, I thought that only TMS, Susheela and SPB are legends. Heartfelt tributes to Vaniji by Isai vaizhkkai of you.👍👍💐
Because of your article only, I could understand the greatness of Vaniji. Earlier, as a layman, I thought that only TMS, Susheela and SPB are legends. Heartfelt tributes to Vaniji by Isai vaizhkkai of you.👍👍💐