இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

 

ந்த வாரக் கட்டுரை, அற்புதமான பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களது உடல் நலம் விரைந்து குணமாக வேண்டும் என்ற எண்ணற்ற ரசிகர்களது முழுமூச்சான எதிர்பார்ப்புகளோடு தொடங்குகிறது. இசை உலகத்தில் இருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இசை நுரையீரல்கள் யாவும் பாலு பாலு என்றே சுவாசித்துக் கொண்டிருக்கின்றன இந்நாட்களில். மொழியைக் கடந்த இசை, எல்லைகளைக் கடந்த அன்பில் ததும்பும் இதயங்கள் அவருக்காக வேண்டுதலை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அவரது மகன் சரண் மூலம் அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நம்பிக்கையின் சைகை மொழியின் ஆறுதலில் விடிகிறது இந்த நாள்

எஸ் பி பி கொண்டாடப்படுவது அவரது அசாத்திய பாடல் திறமைக்காக மட்டுமல்ல, அசாத்திய பண்பாக்கங்கள், அன்புள்ளம், இனிய உளவாக இன்னாத கூறாத கனிந்த உள்ளம், ஆர்வத்தோடு இளம் பாடகர்களைக் கொண்டாடி ஊக்கப்படுத்தும் பாங்கு, தனது பாடலுக்காகக் கிடைக்கும் பாராட்டுதலை அதில் இன்னின்ன கருவிகளை இன்னின்னார் இசைத்தார் என்று பொதுவாக காமிரா முன் அறியப்படாத கலைஞர்களை அந்தப் புகழுக்கு உரியவர்கள் ஆக்கி மகிழ்வது, இசையமைத்த ஜாம்பவான்களை இடையறாது நினைவுக்குக் கொண்டுவந்து நெகிழ்வது, சின்னச் சின்ன செய்திகளால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இசைப்பாடல்கள் வரலாற்றைத் தாமறியாமல் நெய்து கொண்டே ரசனையில் திளைப்பது, ‘என்னை விட பிரமாதமா பாடிட்டேஎன்று வளரும் பாடகரை அன்பால் திணறடித்து ஊக்கப்படுத்தி அந்தப் பெருமழையில் தானும் நனைந்து சிலிர்க்க வைப்பது, பேச சொற்களற்ற போது, இயற்கை அமைத்திருக்கும் வடிகால் கண்ணீர் என்று எந்திரத்தனமான மனிதர்களையும் உணர்ச்சிப் பெருக்குக்குள் குளிப்பாட்டுவது, குழந்தையைப் போல் சிரிப்பது, நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பது   …..இன்ன பிற அரிய வண்ணங்களால்  விரிகிறது அவரது சித்திரம்நலம் வாழ எந்நாளும் நல் வாழ்த்துகள்!

டந்த வாரம் கட்டுரையை வாசித்து நிறைய அன்பர்கள் மின்னஞ்சல் மூலமும் வாட்ஸ் அப் மூலமும் குதூகலம் பொங்க (வீட்டில் குக்கர் பொங்குவது போல) அடித்த விசில் சத்தம் விவரிப்புக்கு அப்பாற்பட்டதுவிசில் அடித்து வகுப்பில் மாட்டிக் கொண்ட கதைகளும் அதில் சேர்ந்து ஒலித்தது. ‘நம் இளமைப்பருவத்தில் திட்டு வாங்கிவிட்டு, இப்போது பிள்ளைகள் தியேட்டரில் நமது அனுமதியோடு விசில் அடிப்பதை தேமே என்று பார்க்கும் அனுபவமும் உண்டுஎன்கிறார் சேலம் தோழர் கருப்பையா.   திரையில் நாயகன் நுழையும்போது ரசிகன் விசில் அடிப்பதுபோல், இசை வாழ்க்கைக்கு வாசகனாக ஒரு விசில் அடிப்போம் என்று எழுதி இருக்கும் எழுத்தாளர் மொசைக் குமார்  அவர்களுக்கு நன்றி. (அசல் பாட்டாளியாகக் கட்டுமானத் தொழிலில் இருந்தவாறே அருமையான சிறுகதைகள் எழுதிக் கொண்டிருப்பவர்).

எஸ்.பி.பி.க்கு சிகிச்சையளிக்கும் ...

மறைந்த தோழர் ஜனா அவர்களுக்கான மகத்தான அஞ்சலியைத் தெரிவித்தவர்களுக்கு அவரது குடும்பத்தினர், இயக்கத்தினர் சார்பில் நன்றி தெரிவிக்க வேண்டும்அவரோடு நெருங்கிப் பழகிய மூத்த தோழர், மார்க்சிய சிந்தனையாளர் வி மீனாட்சிசுந்தரம் அவர்கள்,’ஜனாவும் நானும்  இசை பற்றி அதிகம் பேசி இருக்கிறோம்‘ என்று குறிப்பிட்டார். ஜனாவை அறியாதவரையும் நேசிக்க வைத்து விட்டீர்கள் என்று எழுதியிருக்கும் நண்பர்கள் வணக்கத்திற்குரியவர்கள்.

விசில் பாடல்கள் இன்னும் இன்னும் உண்டு. நம் ஆஸ்தானக் குழலிசைக் கலைஞர் லிங்கராசு அவர்கள், ஆர் ரஹ்மான் விசில் ஒலியை மிகவும் அருமையாகப் பயன்படுத்தி இருக்கும்தொடத் தொட மலர்ந்ததென்ன‘ (இந்திரா) பாடலை நினைவுபடுத்தினார்

Thoda Thoda Song | Indira Tamil Movie Songs | Arvind Swamy, Anu ...

https://www.youtube.com/watch?v=CgkSNkZhxCQ

அந்தப் பாடலே நந்தவனத்தில் பூக்களுடன் எஸ் பி பியும் சித்ராவும் நிகழ்த்திய உரையாடல் போலிருக்கும். அதிலும், ‘பார்வைகள் புதிதா, ஸ்பரிசங்கள் புதிதா‘ என்ற வரியில் ஒலிக்கும் தாபமும், ‘மழை வர பூமி‘ என்பதில் அந்த பூமியைச் சந்திரன் சுற்றி வரும் அளவு இழுத்து, ‘மறுப்பதென்ன‘ என்பதில் இழையும் ஏக்கமும் தானே காதலின் இசை அல்லது இசையின் காதல் !

எந்தப் பகிர்வை வாசிக்கும்போதும், தமது சொந்த அனுபவங்களின் தெறிப்பில் அருமையான கடந்த கால வரலாற்று செய்திகளை மின்னஞ்சலில் தெரிவிப்பதில் கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன் அவர்களுக்கு இணை அவர்தான். விசில் குறித்த அவரது பதிவில், இரண்டாம் உலகப் போரில்எம்டன் குண்டு போட்ட பிறகு சென்னை வாசிகள் பலரும் மாவட்டங்களை நோக்கி நகர்ந்ததில் (பாய்ந்ததில் என்றும் கூடச் சொல்ல முடியும்), “கோவைக்கு வந்த ஒரு மாணவர் விசில் மன்னர். அன்றைய பிரபலத் திரைப்படப் பாடல்களை விசிலடித்து எங்களைப் பரவசப்படுத்துவார். அதே போல மௌத் ஆர்கனிலும் வாசிப்பார்சினிமா நடிகர்கள் போல தலை வாரிக் கொண்டிருப்பார். இடைவேளையில் அவரைச் சுற்றி கூட்டமாகக் கூடியது வியப்பில்லை.” என்று எழுதி இருந்தார்துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஜி ஆர் தாமோதரன் அவர்களும் ஒரு விசிலர் தான்தனியாக இருக்கும் பொழுது கர்நாடக இசைப் பாடல்களை விசிலடித்துக் கொண்டிருப்பார் என்று சொல்லும் எஸ் எஸ் ஆர், சென்னை மாகாணத்தில் தாய்மொழி வழி கல்வி நடைமுறைப்படுத்திய தலைமையாசிரியரான தமது தந்தை ஸ்ரீனிவாசன் அவர்கள் விசிலடிப்பவன் ரௌடி  என்றே  எண்ணுவார்,  நல்ல அடி கிடைக்கும்.என்றும் முடித்திருந்தார்

ல்லாம் சரி, எம் எஸ் வி டீமில் விசில் வித்தகரான ராஜூ பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்று நியாயமான கேள்வி எழுப்பி இருந்தார் தஞ்சை தோழர் இளங்கோ. உண்மை தான். மாண்டலின் ராஜூ என்றும் அழைக்கப்பட்ட எம் எஸ் ராஜூ தான், எம் எஸ் வி பாடல்களாகக் கடந்த வாரத்தின் கட்டுரையில் பார்த்த பாடல்களின் விசில் நாயகர் ! 

அது மட்டுமல்ல, ‘வேயின் குழலோடு வீணை முதலா மனிதர் வாயாலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி‘ என்று மகாகவி குயில் பாட்டில் வரிசைப்படுத்தியது போல், வீணை, சந்தூர் போன்ற பல கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர் என்பதோடு கொன்னக்கோல் கலையிலும் கலக்கி இருப்பவர்.

 ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்‘ (பலே பாண்டியா) என்ற அற்புதமான பாடலை யார் தான் மறக்க முடியும், இன்றைய இளைய தலைமுறையினரும் பரவலாக அறிந்திருக்கும் பாடல் ஆயிற்றே!  (சூப்பர் சிங்கர்  இறுதிப்  போட்டியில்திவாகர் ஒரு கலக்கு கலக்கி மாமா மாப்ளே  மாமா மாப்ளே மாமா என்று முடிக்கையில், எஸ் ஜானகி அவர்கள் மேடைக்கே போய் அவரை ஆரத்தழுவி ஆசி வழங்கியதையும், மிருதங்கக் கலைஞர் உள்ளிட்டோரை வாழ்த்தியதையும் மறக்க முடியுமா?).

Neeye Unaku Endrum - Bale Pandiya Video Song | Sivaji Ganesan ...

https://www.youtube.com/watch?v=7rTcOW-Kmis

படத்தில் எம் ஆர் ராதா இஷ்டப்பட்ட மாப்பிள்ளைக்காகக் கஷ்டப்பட்டு முகத்தை அஷ்ட கோணலாக்கி உடலை முறுக்கிக் குரலைச் செம்மிச் செருமி இசைத்த ‘அய்யய்யய்ய ஜிவ்வுவ்வுசேஷ்டைகளோடு இசைத்த அந்த சொற்கட்டு எனும் கொன்னக்கோல், எம் எஸ் ராஜூ அவர்கள் வாயில் நிகழ்த்திய சதிர்

அது மட்டும் அல்ல, ‘மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்பாடலில் அசத்தலான எல் ஆர் ஈஸ்வரியின் குரலினோடே, டியூ டியூ,டியூ ஹு ஹு ஹு…. என்ற ஒலியில்  நாகேஷுக்காக சிறப்புக் குரல் கொடுத்திருப்பவர் ராஜூ. அப்படிப் பாடுவதை ‘யோடலிங்என்ற ஆங்கிலச் சொல்லில் குறிப்பிடுகின்றனர். இத்தனை தகவல்களும் பம்பாய் பேராசிரியர் கே ராமன் என்பவர், ஏப்ரல் 2007ல் மறைந்த ராஜூவின் நினைவிற்கு அர்ப்பணித்துள்ள குறுங்கட்டுரையில் கிடைத்ததுராஜூ அவர்கள் நினைவை இசை வாழ்க்கையும்  கொண்டாடுகிறதுகாதலிக்க நேரமில்லை படத்தின் அந்தப் பாடலில் சுழன்று சுழன்று உடலை வளைத்து ஒரு சீரான நடனத்தை ஆடுவார் நாகேஷ். அவருக்கும் ஒரு விசில்!

நடிகர் ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் சிறப்பாக விசில் அடிப்பவர் என்பதை நண்பர் திருமலை உள்பட சில அன்பர்கள் நினைவூட்டினர். திரை நட்சத்திரங்கள் வழங்கிய  சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில்நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா பாடலுக்கான விசில் ஒலியை அவர் அநாயசமாக எழுப்பியதை  முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மிகவும் ரசித்துப் பார்த்த அந்த நிகழ்வு இப்போதும் யூ டியூபில் பார்க்க முடியும்

எம் எஸ் வி குழுவில் சதன், சாய்பாபா போன்றோர் சிறப்பு ஒலிகளை எழுப்பிய  பாடல்கள் ஏராளம். மீனம்பாக்கம் எம் ஜெயின் கல்லூரியில் படிக்கையில் சக மாணவராக இருந்த சேகர், மிமிக்ரி எல்லாம் அசாத்தியமாக செய்வார். அவருடைய தந்தை ஸ்ரீனிவாசன் அவர்கள், சில பாடல்களில் இப்படியான சிறப்பு ஒலிகள் எழுப்புவார், ஆனால் அரசுப்பணியில் இருந்ததால், உடன் ஒலிகள் எழுப்பிய மற்றவர்கள் பெயர் வந்தாலும்அவருடைய பெயர் ரிக்கார்டில் வராது என்று ஒருமுறை என்னிடம் சொன்னார். அப்படியான ஓர் அருமையான பாடல், கடவுள் அமைத்து வைத்த மேடை

அவள் ஒரு தொடர்கதை படத்தில் வரும் முக்கிய பாத்திரங்களின் உணர்வுகளை உள்வாங்கிகண்ணதாசன் நேர்த்தியாகத் தொடுத்திருந்த அந்தப் பாடலை அப்படியே தமது குரலில் வார்த்திருப்பார் எஸ் பி பி.  

Kadavul Amaithu Vaitha Video Song | Aval Oru Thodarkathai | Kamal ...

https://www.youtube.com/watch?v=gJQ-grJjRgU

இன்னார்க்கு இன்னார் என்றுஎன அவர் எடுக்கும் இடமே தனி அழகு என்றால், அடுத்து , ‘எழுதி வைத்தானே தேவன் இன்று…’ என்று முடிக்கும் இடத்தை எப்படி வருணிக்க! கிளியும் கிணற்றுத் தவளையும் கன்றும் பசுவும் கான்வென்ட் முயலும் மான் சாஸ்திரிகளும் (மாங்கல்யம் தந்துனானேனயானையும் புகுந்து விளையாடிய பாடல் அது.

 ‘மகாராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி‘ (இரு மலர்கள்) போல எத்தனையோ பாடல்கள் உண்டு. கேட்போரை, முக்கியமாகக் குழந்தைகளை ஈர்க்கும் சுவையான இசை அனுபவங்கள் அவை. அவற்றின் சுவாரசியத்தைப் பின்னர் விவாதிப்போம்.

னா தோழரின் நினைவில் ஆழ்ந்த தோழர் குமாரதாசன், வறிய குடும்பத்தில் பிறந்து பள்ளிக்கல்வி கூடப் பெறாத தனது தாய், வாழ்க்கையில் எதிர்கொண்ட மேலும் சவாலான சூழலில் அலைக்கழிக்கப்பட்ட போதும், துணிச்சலாக முடிவுகள் எடுத்துத் தமது துயரங்களை எல்லாம் இசையின் வழித்துணையால் கடந்தவர் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்

திரைப்பாடல்கள் மட்டுமல்ல கீர்த்தனைகளும், கீதங்களும் அத்தனை அருமையாக ஜெயம்மாள் பாடுகிற போது, அப்போது வெறும் வயல்வெளியாகப் பசுமை போர்த்தியிருந்த சென்னை நங்கநல்லூரில் நடுவே ஒற்றை பங்களாவாக இருந்த பெரிய ஒண்டுக்குடித்தனமான ஜோதி கார்டனில் பஞ்சாபியர், கிறித்துவர், இஸ்லாமியர், ஆதி திராவிடர் என்று ஒன்று கலந்து வாழ்ந்த ஆரோக்கியமான வறுமைக் கூட்டணி வாழ்க்கையில் எல்லோரும் அருகமர்ந்து ரசிப்பதும், பாடுவதுமாக ஜமா களை கட்டுமாம். பாரத விலாஸ் தான் நினைவுக்கு வந்தது! ‘திசைக்கொரு துருக்கரும் என் தோழர், தேவன் இயேசுவும் என் கடவுள்‘, ‘எல்லா மதமும் என் மதமே எதுவும் எனக்கு சம்மதமே‘ என்பதுதான் மனிதகுலம் தெளிந்திருக்கும் இசைவாழ்க்கை

Pudhayal | Vinnodum Mugilodum song - YouTube

https://www.youtube.com/watch?v=V4Q84H6nVoY

அப்போது உடனிருந்து கேள்விஞானத்தில் கற்றுக் கொண்டும், சொந்த ஆர்வத்திலும் தானும் பாடல்களின் உலகத்தில் ஆழ்ந்திருப்பவன், எம் கே டி, கண்டசாலா, எம் ராஜா என்று சொந்த ரசிப்பின்  துள்ளலோடு சொன்ன குமாரதாசன் அவர்கள், ‘சி எஸ் ஜெயராமன் பாடல்களை எல்லாம் ரசித்துப் பாடுவேன்,  சி டி யு அகில இந்திய மாநாட்டிற்காக கல்கத்தா  மேடையிலேயே விண்ணோடும் முகிலொடும் விளையாடும் வெண்ணிலவே  பாடினேன்‘  என்று மொழி அறியாதவர்களும் பாராட்டியதைக் குறிப்பிட்டார். புதையல் போல் கிடைத்தது அவரது வாழ்க்கைக் குறிப்பு!

மாநாடுகளுக்குச் செல்லும் பயணங்களில் பாடல்கள் ஒலிக்காமல் இராதுகுறிப்பாக ரயில் பயணங்களில்! இதழாளர், நாடகாசிரியர் பரீக்ஷா ஞாநி அவர்கள், “ரயில் பயணங்களில் எப்போதும் பாடியபடியே செல்வோம். ஒரு முறை அப்படியான முற்போக்கான பாடல்களை தாள வாத்திய கருவிகளோடு பெட்டி பெட்டியாகச் சென்று பாடி விட்டு வந்தோம், ஆனால், சிக்கல் என்னன்னா,சில பேர் எங்களை வழக்கமாக ரயிலில் பாடி பிச்சை கேக்க வர்றவங்க என்று நினைத்துக் காசும் போட ஆரம்பித்து விட்டார்கள், மறுக்காமல் வாங்கிக்கொண்டு, வழியில் தட்டுப்பட்ட உண்மையான பிச்சைக்காரர்களுக்குப் போட்டு விட்டோம்என்று சிரித்துக்கொண்டே சொன்னார். பாட்டுன்னா அவன்கிட்ட பிச்சை வாங்கணும் என்பார்களே அது இது தானா!  

நாங்களும் மாநாடுகளுக்குச் செல்கையில் இப்படி சமூக விஷயங்கள் மீதான அருமையான பாடல்களைப் பாடுவது உண்டு, இந்தப் பாடல்கள் எல்லாம் எந்தப் படத்தில் வந்தது என்று சக பயணிகள் கேட்கும்போது, இதை இதை இதைத் தானே எதிர்பார்த்தோம்’ என்று பேசத் தொடங்கி விடுவோம்

யிலில் பாடுதல், ஒரு பெரிய அரங்கில் பாடுவதைக் காட்டிலும் நெருக்கமான உணர்வை ஊட்டுவது. பக்க வாத்தியங்களும் அமைந்துவிட்டால் கச்சேரி அமர்க்களமாகி விடும்

பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்…’.மாதிரி ஒரே ஒரு நாணயம் கையில் இருந்தால் போதும், அன்றாடச் சிறிய தொலைவிலான ரயில் பயணங்களில்  ரயிலின் சன்னலோர இருக்கையில் அமர்ந்தவாறே லயம் பிசகாத தாளத்தைமாயா ஜாலத்தை நிகழ்த்துபவர்கள் இருக்கிறார்கள்

ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகம் போல பக்தி பூர்வமாக உள்ளிருந்து எடுக்கும் நோட்டுப் புத்தகத்தில் அல்லது பழைய டயரியில் கையிட்டு எழுதி இருக்கும் எண்ணற்ற பாடல்களை இருக்கையில் இருந்தபடி அல்லது ஒயிலாக எழுந்து நின்றபடி ஒருவர்  அப்படியே புரட்டிப் புரட்டி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே வருவார்கூண்டிலிருந்து வெளியே வரும் கிளி தள்ளித் தள்ளிக் கொண்டே போய் பளீர் என்று எடுத்துக் கொடுக்கும் சீட்டு போல்  சட்டென்று ஒரு பாடலை எடுத்து, அந்த ரயில் பெட்டியில் அந்த கணத்தில் தானே டி எம் எஸ் ஆக, கே ஜே ஜேசுதாஸ் ஆக, பி பி ஸ்ரீனிவாஸ் ஆக, எஸ் பி பி ஆக மிகுந்த பெருமிதத்தோடு அவர் பாடத் தொடங்கும்போது, பூதக் கண்ணாடியைக் கையில் காட்டும் இடத்தில் சுள்ளென்று குறிவைத்துப் பாயும் சூரிய ஒளியைப் போல் அத்தனை கண்களும் அவர் பக்கம் பாயும்.

கடற்கரை நிலையம் வரை போகும் பல்லாவரம் ரிடர்ன் ரயில் எப்போது வரும், அய்யயோ போயிருச்சாஎன்று கோடம்பாக்கத்தில் காத்திருக்கும் பயணிக்கு ஏற்படும்  ஆதங்கம், உரிய நேரத்தில் அலுவலகம் போய்ச் சேருவது பற்றி மட்டுமல்ல, அந்த வண்டியின் குறிப்பிட்ட பெட்டியில் கடைசி வரிசையில் பயணம் செய்து கொண்டிருப்போர் அன்றாடம் கடத்திக் கொண்டிருக்கும் இசையை விட்டு விடுவோமோ என்பதும் தான்இப்போதைக்கு ரிடர்ன் இன்னும் பல்லாவரத்திலிருந்து புறப்படவில்லை. காத்திருப்போம்.

(இசைத்தட்டு சுழலும் ….)

தொடர் 1 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – ஐ வாசிக்க…

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – ஐ வாசிக்க…

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

தொடர் 8 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-8-venugopalan-sv/

தொடர் 9 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-9-venugopalan-sv/

தொடர் 10 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-10-venugopalan-sv/

தொடர் 11 – ஐ வாசிக்க..

https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/

தொடர் 12 – ஐ வாசிக்க..

http://music-life-series-12-venugopalan-sv