இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன் 

 

முதலில் ஓர் உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்கவேண்டும்கடந்த வாரம் மூன்று நாட்கள் தாமதமாகத் தான் எழுத நேர்ந்தது. ஞாயிற்றுக் கிழமை வெளியாகிக் கொண்டிருந்த கட்டுரை, போன வாரம் செவ்வாய் அன்று தான் இணையதளத்தில் பதிவேற்றம் ஆனதுசில அன்பர்கள் இணையத்தில் தேடிப்பார்த்துக் கொண்டே இருந்து, இணைப்பு அனுப்புங்கள், 13வது கட்டுரை வாசிக்க இயலவில்லை என்றனர். பிழை என்னுடையது. அன்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். ‘சிறு தவறைத் தவறிச் செய்தேன் எனை மன்னிப்பாயா …’ என்று கேட்டுக் கொள்கிறேன் ஒவ்வொருவரிடமும். (எஸ் பி பி பாடல் தான் அதுமொழி படத்தின், கண்ணால் பேசும் பெண்ணே…) அவரது உடல் நலக் குறைவு குறித்த செய்திகள் மிகவும் வாட்டி எடுத்திருந்த நேரம், எழுதாமல் கடத்திக் கொண்டிருந்தேன், பின்னர் அவரைக் குறித்த அருமையான எண்ணங்கள் எழுத வைத்தன

கட்டுரையைப் பகிர்ந்த மாத்திரத்தில், வேகவேகமாக மறுமொழி வாட்ஸ் அப்பில் வரத்தொடங்கி விட்டது. எத்தனை உள்ளங்கள் அவரை நேசிக்கின்றனஅவர் மீண்டெழுவார், நம்பிக்கையோடு இருப்போம் என்று எழுதியதோடு கட்டுரை குறித்தும் அன்பர்கள் நிறைய பேர் மின்னஞ்சல் மூலமும் பதில் அனுப்பி இருந்தனர். என் இளவல் எஸ் வி வீரராகவன், முக நூலில் கட்டுரையைப் பகிர்ந்து அவர் குணம் பெற ஒரு வேண்டுதலை இணைத்திருந்தார்.

மன நல மருத்துவரும் இசை ஞானம் கொண்டவருமான நண்பர் ஜி ராமானுஜம் அவர்கள், ‘வான் நிலா நிலா அல்ல’ பாடலைத் தமது குழலிசையில் அருமையாக வார்த்து அனுப்பி இருந்தார். நிறைய பேச இருக்கிறது பன்முகத் திறமை கொண்ட நண்பரைப் பற்றி!

‘இன்னும் கூட எதிலும் மனம் ஒன்றவில்லை, ஒரு வாரமாக எதையும் படிக்க முடியவில்லை, தாமதமாகத் தான் வாசித்தேன், அவர் நல்லபடியாக மீண்டு வரவேண்டும்’ என்று எழுதி இருக்கிறார் வங்கி தோழர் ராமலட்சுமி. பொதுவாக மிகுந்த ஆர்வமும், வேகமும், ரசனையும் மிகுந்தவர் அவர்

ஒரு முறை எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில், என் வாழ்க்கை இணையர் ராஜி, செடியில் பூத்திருந்த மல்லிகை பூக்கள் பறித்துக் கொண்டிருந்த காட்சியைப் படமெடுத்து, பொத்தி வச்ச மல்லிகைஎன்று தலைப்பிட்டு அவருக்கு அனுப்பி இருந்தேன். ‘உங்க பொத்தி வச்ச மல்லிகை மொட்டுக்கு சார்’ என்று, எம்பார் கண்ணன், ரங்கப்பிரியா வாசித்திருக்கும் அற்புதமான வயலின் இசையை உடனே பரிசாக அனுப்பி வைத்தார்!   

Pothi Vecha Bass cover by H | Composer: Maestro Ilaiyaraaja ...

https://www.youtube.com/watch?v=_6sy61kuVv0

என்ன அற்புதமான வாசிப்பு…. குருவும் மாணவியுமாக இணையாகவும் ஒத்திசைவாகவும் இளையராஜாவின் அந்த அற்புதப் பாடலை அசாத்திய உணர்வூட்டும் வண்ணம் வயலினில் இசைத்திருக்கின்றனர்

பூக்களை மிகவும் ரசிக்கும் ராமலட்சுமி உடனே இதை அனுப்பியதில் வியப்பில்லை, ஏனெனில், எல் ராகவன் அவர்கள் மறைவின்போது எழுதிய கட்டுரையை வாசித்ததும், அவரை நினைக்கையில் எனக்கு தும்பைப் பூ நினைவில் வராமல் போகாது என்று எழுதி இருந்தார். இசை வாழ்க்கை அன்றி வேறென்ன!

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு (மண் வாசனை) பாடல், எஸ் பி பி குரலில் ரசிகருக்குக் கிடைக்கப்பெறும் அனுபவங்களுக்கு ஓர் அழகான எடுத்துக் காட்டான பாடல். பேசிப் பேசி ராசியானது…..என்று எஸ் ஜானகி (என்ன இழைப்பு) இழுத்து, மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆள் ஆனதே என்று கொண்டு சேர்க்கையில் ஆஹ..ன் என்று காதல் குறும்பில் ஒரு வினவல், ரொம்ப நாளானதே என்றதும் ம்ம்ம்என்று ஒரு கொஞ்சல்! சரணங்களில் எத்தனை வேலைப்பாடுகள். ‘மாலையிடக் காத்து அல்லி இருக்கு’ அடியின் இனிமையின் அடுத்த அடியில்தாலி’ என்பதன் உச்சரிப்பு எத்தனை பொருள் நயத்தோடு சொல்கிறார் மனிதர். பல்லவியைத் திரும்ப இசைக்கையில்பூத்திருக்கு வெக்கத்தை விட்டு’ என்பதில் இலேசான கிண்டல் புன்னகையும் சேர்த்துப் பூக்கிறது அவருக்கு. இரண்டாவது சரணம் கேட்கவே வேண்டாம், கொஞ்சம் மறைஞ்சு பார்க்கவா என்ற வரியில் எஸ்பிபி நிகழ்த்தும் குரல் ஜாலம்….அப்பப்பா….. எஸ் ஜானகி குரலினிமையும் சங்கதிகளும் பாடல் முழுவதன் இணை உயிர்ப்பு

பாடலை வயலின் இசையே தொடக்கி வைக்கிறது, பாடல் முழுக்க பரவி விரவிக் கலந்து பின்னணியில் நின்று நிறைவுரையும் வயலின் இசையே ஆற்றுகிறதுபல்லவி முடிந்து முதல் சரணத்தைச் சென்றடைய வேகமான வயலின் இசையும் உடன் பேசிக்கொண்டே புறப்படும் புல்லாங்குழலும் காதலர்களுக்கு உருவமாகவே ஆகிப் போகின்றன. இரண்டாவது சரணத்தை நோக்கிய பயணத்தில் புல்லாங்குழல் கூடுதல் சொற்கள் பேசிக் கொள்ள வயலின் பின்னொற்றி தத்தித் தத்தி வருகிறது. அப்புறம் சொல்லெடுத்துப் பாடுமாறு ஜானகியைக் கேட்டு அமையும் வயலின் சைகை என்ன சுவாரசியமான இடம்!

பாலு அவர்களது சிறப்பான நேர்காணல் பதிவுகள், பாடல் நிகழ்ச்சிகள் எல்லாம் நிறைய பகிர்ந்து கொண்டே இருக்கின்றனர் அன்பர்கள். மிக எளிய மேடை ஒன்றில், ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ தெலுங்குப் பாடலை மேடையில் இசைக்கிறார் அவர். நிறைய வியப்புகள் உள்ளடக்கிய நிகழ்ச்சி அது. ‘தாலி கட்டு சுப வேளா’ என்ற பல்லவியை உற்சாகமாகத் தொடங்கும் எஸ்பிபி, அதிக இசைக் கருவிகள் இல்லாத சூழலிலும் முழு நியாயம் செய்து பாடலை மகிழ்ச்சியோடு பாடுகிறார். பாடலின் இடையே வரும் அனைத்து சிறப்பு ஒலிகளையும் மிக நேர்த்தியாக அவரே எழுப்புகிறார்ஒரு குழந்தை போன்ற குதூகலத்தோடு! எதிரே முன் வரிசையில் அருகருகே அமர்ந்திருப்போர்  எம் எஸ் வி – இளையராஜா! எல்லாம் இன்ப மயம், வேறென்ன!

வரே தமது இசையால் மருத்துவம் செய்கிறார் என்பதால், மருத்துவமனையில் கூட அவர் கேட்பதற்காக, அவரது பாடல்களை ஒலிக்கச் செய்து வருவதாகச் செய்திகள் வந்தன. நார்மன் கசின்ஸ் என்ற அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் பற்றிய சுவாரசியமான குறிப்புகளில் ஒன்று, உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தபோது, அவரது நண்பர் நினைவு கூர்ந்த நகைச்சுவை துணுக்கு காரணமாக அசைவு ஏற்பட்டு, பின்னர் நகைச்சுவை திரைப்படங்களாகத் தேர்வு செய்து பார்க்க வைத்ததில் அசாத்தியமான முறையில் குணம் பெற்று மீண்டார் என்பது. இதைக் குறிப்பிட்டு சிரிப்பு சிகிச்சை (Laughter Therapy) பற்றியும், சிரிப்பு உணர்ச்சி எத்தனை வரமானது என்றும்  இருதய சிறப்பு மருத்துவர் பி எம் ஹெக்டே அவர்களது நூலில் வாசித்ததுண்டு. வசூல் ராஜா படத்தில் கேரம் போர்டு ஆட்டத்தின் ஓசையால் காகா ராதாகிருஷ்ணனுக்கு சிலிர்ப்பு ஏற்படுத்துவது போல!

Isai Kettal Puvi Asainthadum - YouTube

https://www.youtube.com/watch?v=_GBvM0Uxsvs

தான்சேன் இசையால் அக்பரின் மகளை உயிர்ப்புறச் செய்யும் அந்தப் பாடலை (தவப்புதல்வன்) எம் எஸ் வி, கண்ணதாசன், டி எம் எஸ் மூவரும் எத்தனை அற்புதமாக உருவாக்கி வழங்கினார்கள். என்ன ஓர் உள்ளத்தைத் தொடும் சுருக்கமான ஆலாபனையில் தனது பாட்டைத் தொடங்குகிறார் டி எம் எஸ்…. இசை கேட்டால் புவி அசைந்தாடும்

முதல் சரணத்தில்,  ‘என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்‘ என்பதில் இருந்துஎன் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்என்ற இடத்தை எப்படி எட்டுகிறான் கவிஞன்! நம்பிக்கையின் மிடுக்கிலும் ஓர் உருக்கமான தளத்தில் இயங்கும்  பாடலின் இரண்டாவது சரணம் எப்படி நிறைவு பெறுகிறதோ,… அப்படியே காத்திருக்கிறோம், கரைந்தோடும் நோயென்னும் பாபங்களே என்று!

மிகச் சிறந்த இலக்கிய சொற்பொழிவாளரான கீரன் அவர்கள் ஒருமுறை தம்மைவிட ஒரு பாடகருக்கு உள்ள சாதகமான விஷயம், சாதகம் செய்வது என்று பேச்சினிடையே குறிப்பிட்டார். “நான் அடுத்த நாள் நிகழ்த்த வேண்டிய உரையைத் தயார் பண்ணுகிறேன் என்று ரயில் பயணத்தில் இடையே எழுந்து நின்று பேசிக் கொண்டிருந்தால் எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று ஒரு மாதிரி நோக்குவார்கள் சக பயணிகள், இதே, மதுரை சோமு ஒரு ராகத்தை எடுத்து சஞ்சாரம் செய்து கொண்டிருந்தால், ஆஹா ஆஹா என்று ரசிக்கத் தொடங்கி விடுவார்கள்!ரயிலைப் போல ஓர் இயங்கும் மேடை வேறெங்கே வாய்க்கும்?

பல்லாவரம் ரிடர்ன் இப்போதைக்கு லாக் டவுனில் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது, புறநகர் ரயில்கள் எதுவும் ஓடவில்லை, ஆனால் உங்கள் பயணத்தை நீங்கள் நடத்த எந்தத் தடையுமில்லை என்றார் திரை இசை வாட்ஸ் அப் நண்பர் ரமேஷ்.  லாக் டவுனில் மோட்டார் சைக்கிளில் பாடிக்கொண்டு தான் அலுவலகம் போகிறார் தாள நாயகன் ஹரிஷங்கர்

பல்லாவரத்தில் வட்டம் பார்த்தேன், மன்னிக்கவும், ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ என்ற ஒற்றை நாணயத்தின் சொந்தக்காரர் அவர்முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த சென்னை கடற்கரை மார்க்க ரயில் பெட்டி பாடல் கோஷ்டியில் சாமிநாதன் என்பவர்தான் எப்போதும் பக்கவாத்தியம் இசைத்துவந்தவர். ஒரு நாள் அவர் வரவில்லை என்றதும், வேறு வழியில்லாமல் தொடங்கி, அப்போது கையில் எடுத்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துத் தான் இப்போது வரையிலும் ரயில் பெட்டியின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து அழகான தாளத்தை இசைத்துக் கொண்டிருக்கிறார் ஹரி.  

ஒரு ரூபாயை வைத்துக்கொண்டுசிவாஜி’ படத்தில் ரஜினி எத்தனை சாதித்தார், ஹரிஷங்கர் அத்தனை ஆயிரம் பாடல்களுக்கு வாசித்து வந்திருக்கிறார்! நாணயம் தேய்ந்தாலும், தேயாத இசையும், பாடல்களும், ரசனையும் ஓயாது தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பாட்டு புத்தகம், டயரி, சொந்த நோட்டுப் புத்தகம் என்பனவற்றின் பரிணாம வளர்ச்சியில் மொபைல் பார்த்து இப்போது பாடும் வரை போய்க்கொண்டே இருக்கிறது பாடலின் பயணங்கள்

பி பி ஸ்ரீநிவாஸ் பாட்டுன்னா ராகவன் சார், டி எம் எஸ் பொதுவாக ஸ்ரீனிவாசன், ஜெகன் தான் எஸ்பிபி, சதீஷ் கர்நாடக இசைப் பாடல் வித்தகர், மேடையில் நன்றாகப் பாடவும், பல குரல் பேச்சில் விளாசவும் அறியப்பட்ட சந்தானம் என்பவரும் அவ்வப்பொழுது வந்ததுண்டு” என்பதாக ஒரு கிறக்கமாக உலகம் அது

எங்களுக்காக இடம் போட்டு தாம்பரத்திலேயே உட்கார்ந்து வரும் அன்றாடப் பயணிகள் சிலர் பாடகர்கள் அடுத்தடுத்த ஸ்டேஷனில் ஏறிவரும் போது மதிப்போடு இடம் அளித்துவிட்டு எழுந்து நின்று ரசித்து வருவார்கள் சார், ரசிகர்கள் தானே முக்கியம்?” என்ற புளகாங்கிதம் ஒலிக்கிறது ஹரிஷங்கர் குரலில்

நவநீதம் சாராகத் தான் இருக்கும், வாகான பாடல்களைத் தேர்ந்தெடுத்து சொந்த ரசனையில் உருகி உருகி அவர் பாடுவது கண் கொள்ளாத காட்சி

Uththaman Tamil Movie : Padagu Padagu Video Song - YouTube

https://www.youtube.com/watch?v=l_XUncvVqB4

உத்தமன் படத்தின் படகு படகு ஆசைப் படகு என்ற பாட்டை எடுத்தார் ஒரு நாள். எஸ்பிபி – பி சுசீலா ஒரு கலக்கு கலக்கி இருக்கும் பாடல் அது

சலீம், சலீம், அனார் என்று காதலர்கள் பரஸ்பரம் அழைத்துக் கொள்ளும் ஏக்க விளிப்பைத் தொடரும் அனார் என்ற பெருமூச்சின் முகவரியைநவநீதம் சார்மானசீகமாக எஸ்பிபி யை நெஞ்சில் நிறுத்தி அவரும் அந்தக் கற்பனை காதலிக்காக (இங்கே எல்லாம் தீவிரமாக வேறு யோசனைகள் வரக்கூடாது) உருகிப் பாடுவார்அனார்..ர் என்றால் மாதுளம் ஆசை கொண்ட மாதுளம் என்று வடித்து (ஹரிஷங்கரின் பிசகாத காதல் தாளத்தில்), ‘சலீம் என்ற மன்னவன்சாதாரணமாகக் கடந்தாலும்ஸலாம்..மு வைத்தான் உன்னிடம்‘ என்பதில் அந்தக் கடைசி ம்….காதல் கூடுமோ கூடாதோ என்ற பரிதவிப்பில் வேகவேகமாக உருண்டோடிப் போகும் காதலியைத் தேடி

முதல் சரணத்தில்மணமகள் பல்லாக்கில் போவதும், மனத்தைக் கல்லாக்கிப் போவதும்இரண்டாம் சரணத்தில்காதல் எனும் கவிதை எல்லாம் கல்லறைக்கே போவதும்ஒரு ரயில் பெட்டியின் மொத்த பயணிகள் சாட்சியாக நிறைவேறி விடுமானால் என்ன செய்வது 

காதலின் அவஸ்தைகள், குறுக்கீடுகள் பற்றியெல்லாம் இசை எத்தனையோ பேசி இருக்கிறது. பார்ப்போம் பின்னர்.

ல்லாவரம் ரிடர்ன் மட்டுமல்ல, அதே கடற்கரை ரயில் நிலையம் நோக்கிய திசையில் வேறு நேரத்தில் வரும் ரயில்கள் சிலவற்றிலும் இப்படியான இசைக்குழுக்கள் இருப்பதையும் ரசிக்க வாய்த்ததுண்டு. தாளமிட்டபடி வெறித்தனமாகப் பாடும் அந்த மெலிந்த உடல், கறுத்த முகத்தில் துடிக்கும் வேர்வை, வேறு யார் பாடும்போதும் அதில் இழைகள் அறுபடாது தற்காத்து உடன்பாடிக்  கண்ணால் சிரிக்கும் சிரிப்பில் கரகரப்பான தொண்டைக்குரிய அந்தப் பாடகர் பெயர் அறியாமல் போனது வருத்தமானது

ஆனால், நம் குரலை வைத்தே ஆள் அடையாளம் கண்டுபிடித்துசார்என்று அன்பில் நெகிழவைக்கும் கண் பார்வையற்ற புல்லாங்குழல் கலைஞர் பெயரை அறியாதவர் இருக்க முடியாது. துளசிஅவர் வாசிப்பது குழல் அல்ல, உள்ளத்தின் குரல்அந்தக் குரலைப் பின்னர் விரிவாகக் காண்போம்

ஆனால், ஓர் அபார இசைத் திறன் மிக்க ஒருவரைத் தனது வாழ்வாதாரத்திற்குக் கையேந்த வைக்கும் அவலம் வலிகள் மிகுந்தது

எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களது  ‘புலிக்கலைஞன்சிறுகதையில், சினிமா கம்பெனியில் சான்ஸ் கேட்டு வரும் அந்த எளிய மனிதன், புலியின் முகமூடி அணிந்துகொண்டு  நொடி நேரத்தில் அவர்கள் அதிர்ந்து போகிற வகையில் புலியாகவே உருவெடுத்து அங்கும் இங்கும் தாவித் தனது உடல் மொழியால் திணறடித்து, வாய் பிளந்து கர்ஜனை செய்து அந்த அறையில் இருப்போரை மூச்சுப் பேச்சின்றி உறைய வைத்துவிடுகிறான்

எல்லாம் முடிந்தபின் கூனிக் குறுகி நின்று,” ஏதாவது ரோல் கொடுங்க எனக்கு” என்று கேட்பான். “நம்ம (என்சம்சாரம் வீட்டுப் பக்கம் வராதேன்னு சொல்லி இருக்குங்கஎன்பான், “நான் சம்பாரிச்சு எவ்வளவோ மாசமாகுதுங்கஅது தான் என்ன பண்ணும்? நாலு குழந்தைங்கஎல்லா சின்னச் சின்னதுஎன்று சொல்வான். அசோகமித்திரன் எழுதி இருப்பார், அவன் தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான் என்று!

ஆழ்வார்கள், நாயன்மார்கள் நேரில் சென்று பாடி வழிபட்ட கோயில்களைப் பாடல் பெற்ற தலம் என்பார்கள்.. பாடல் பெறாத தலங்கள்தான் அநேகம். நன்றாகப் பாடத் தெரிந்தும், தமக்கான பாடல்களைப் பெறாமல் போன இசைக் கலைஞர்களை, புலிக்கலைஞன் கதை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்

ரயில்கள் சென்னைக்கு மட்டுமா சொந்தம், ரயில் பாடகர்கள் இருப்புப் பாதை தடங்கள் தோறும் தங்கள் இருப்புக்கான பாதையைக் கண்டெடுத்துக் கொண்டிருக்கவே செய்வார்கள்எங்கிருந்தாலும் வாழ்க, இசைக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லோரும்!

(இசைத்தட்டு சுழலும் ….)

 

தொடர் 1 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – ஐ வாசிக்க…

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – ஐ வாசிக்க…

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

தொடர் 8 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-8-venugopalan-sv/

தொடர் 9 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-9-venugopalan-sv/

தொடர் 10 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-10-venugopalan-sv/

தொடர் 11 – ஐ வாசிக்க..

https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/

தொடர் 12 – ஐ வாசிக்க..

http://music-life-series-12-venugopalan-sv

தொடர் 13 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-13-venugopalan-sv/