இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

 

இரண்டு வாரங்களுக்குமுன் இந்தத் தொடரில் தமது வாழ்க்கைத் துளிகள் குறிப்பிடப்பட்டதில் நெகிழ்ந்து போனார் எளிய மனிதரான தோழர் குமாரதாசன். கல் குவாரி தொழிலாளர் முதற்கொண்டு ஏராளமான பாட்டாளிகளின் உரிமைக்கான களத்தில் நின்றவர் அவர்.

பல்லாவரம் ரிடர்ன் ரயில் பாடகர்கள் குழுவில் உள்ள அனைவர்க்கும், தாளகர்த்தா ஹரிஷங்கர் கடந்த வாரக் கட்டுரையை அனுப்பியதில் அவர்கள் திக்குமுக்காடிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ‘பக்க வாத்தியம் மட்டுமல்ல பக்கா வாத்தியக்காரர்’ என்று ஒரு பாடகரால் வருணிக்கப்படும் ஹரிஷங்கர், தாமே மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அனுப்பி வைத்த ஆடியோ செய்தியில், இனியும் தொடர்ந்து கட்டுரைகள் வாசிக்கக் காத்திருப்பதாக ஹரி சொல்லி இருப்பது, உலகின் எந்தப் பெரிய விருதினும் உயர்வானது – கண்ணீர் மல்க வைப்பது!

அலுவலகப் பணி காரணமாகச் சில நாட்கள் முன்னதாகவே புறப்பட்டுச் செல்ல நேரும் நாட்களில், தமக்குப் பதிலாக ராயப்பா எனும் அன்பர் வாசிப்பது வழக்கம் என்று நினைவு கூர்ந்த ஹரி, பாடலுக்கு ஒத்திசைவான தாளக்கட்டு அமையாத போது ராயப்பா தமக்கு எப்படி அமைய வேண்டும் என்று தாமே அடித்துக் காட்டியும், பல்வேறு தாள லயங்களைக் கற்பிக்கும் ஆசிரியராகவும் விளங்குபவர் என்றார். வாழ்க்கையிலும் அப்படியான நட்பு சாத்தியமாகிற போது அந்த வாழ்க்கையும் சுருதி, லயம் பிசகாது சிறக்கிறது.

தாளம் தாளம் தாளம்,
தாளத்திற்கே ஓர் தடை உண்டாயின்
கூளம் கூளம் கூளம்
என்று குயில் பாட்டில் எழுதுகிறான் மகாகவி. அது வாழ்க்கைக்குமான சூத்திரம் தான்.

‘ரயில் பாட்டு என்றதும் எனக்கு ராஜபார்ட் ரங்கதுரை நினைவுக்கு வந்துவிட்டது, தம்பி’ என்று எழுதி இருந்தார் நெல்லை கோமதி அவர்கள். கிரேசி மோகன் அவர்களது வெண்பா பகிர்வு மின்னஞ்சல் வட்டத்தில் அறிமுகமான கோமதி அக்கா, நேரில் பார்க்காது வாய்த்துவரும் எண்ணற்ற தோழமை உள்ளங்களில் ஒருவர். மிகுந்த ரசனை மிக்க வாசகர், இதழ்களில் எழுதியும் வருபவர்.

அம்மம்மா தம்பி என்று நம்பி. என்ற பாடல் அந்நாளில் ஒலிக்காத நாள் இராது.

https://www.youtube.com/watch?v=_l5g8oxZGlc

‘கையில் வைத்துக் காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு’ என்ற வரியைப் பாடுகையில் (அந்த நாய்கள் என்ற இடம்…) சிவாஜியின் முகபாவம் எப்படி இருக்கும் என்று மனக்கண்ணில் முன்பாகவே வரவழைத்துப் பார்த்து அதற்கேற்ற பாவத்தில் டி எம் எஸ் பாடிய அந்தப் பாடல், கதையின் முன்பகுதியில் ரயிலில் தம்பி தங்கையை வைத்துக் கொண்டு பிச்சை கேட்கும் சிறுவனுக்காக ஒலிக்கும்போது வறுமையில் ஒலிக்கும் தேச பக்தி கீதமாக அமைந்திருக்கும். அப்போது தாளத்திற்குப் பயன்படுத்தும் சிறு கட்டைகள், பின்னர், டேபிள் டென்னிஸ் மட்டைகளை வைத்துக் கொண்டும் பாட முடியும் என்பதாக அமைந்திருக்கும் காட்சி! இரண்டாவது சரணத்தின் நிறைவில், ‘அவன் ராஜாதி ராஜனுக்குப் பிள்ளை அல்லவோ, இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழை அல்லவா’ என்ற இடத்தில் சட்டென்று முற்றுப் பெறுகையில் அத்தனை சோகத்தை வரவழைத்துவிடும்.

தொழிற்சங்க மாநாடுகளுக்காக ரயில் பயணம் செல்கையில் திரைப்படப் பாடல்களுக்கு அப்பால், தனிப்பாடல்கள் சிலவற்றைப் பாடுகையில் ஏற்படும் வரவேற்பும், கவன ஈர்ப்பும் தனித்துவமானது. உயிரை உருக்கும் அப்படியான ஒரு பாடல் உண்டு. ‘ஊரடங்கும் சாமத்திலே நா ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்…ஊர்க்கோடி ஓரத்துல ஒன் நெனப்புல படுத்திருந்தேன், காத்தடிச்சு சலசலக்கும் ஓலையெல்லாம் ஒஞ் சிரிப்பு, பொறண்டு படுத்தாலும் பாவி மகென் ஒன் நெனப்பு….’ என்ற பல்லவியிலேயே பிடித்திழுக்கும் பாடலின் சரணங்கள், ‘வெள்ளியிலே தீப்பெட்டியாம் மச்சானுக்கு வெதவெதமா பீடிக்கட்டாம்’ என்று முதலில் காதல் இன்பத்தையும் சோகத்தின் சுவையில் சொல்லிக்கொண்டே போய், அதற்கான காரணத்தைக் கடைசியில் வைக்கும்.

அற்புதமான நாடகங்களை வழங்கியுள்ள நாடகாசிரியர் தோழர் பிரளயன் அவர்கள் எழுதிய அற்புதமான அந்தப் பாடலை கரிசல் குயில் கிருஷ்ணசாமி பாடவும் எத்தனை எத்தனை ஆயிரம்பேர் கேட்டுக் கரைந்து போயிருப்பர் !

‘சும்மாக் கெடந்த போதே துள்ளுகிற சாதிக்காரென் சங்கமாச் சேர்ந்திருக்கான் வம்பு பண்ணக் காத்திருக்கான், என்ன பண்ணப் போறானோ ஏது செய்யப் போறானோ …’ என்ற வரிகள் இப்போதும் சமூகக் களத்தில் கதிகலங்க வைக்கும் நிகழ்வுகளை பிரதிபலிப்பவை.

‘யாரு வந்து தடுத்தாலும் சாதி சொல்லிப் பிரிச்சாலும் ஒன்னையே சேருவேன்னு துண்டு போட்டுத் தாண்டினியே’ என்ற வரியின் இழுப்பில் இருந்து வேகமாக, ‘அந்த வார்த்தையிலே நானிருக்கேன்’ என்று ஓர் ஏக்கப் பெருமூச்சின் குறிப்போடு, ‘வாக்கப்படக் காத்திருக்கேன்’ என்ற அடுத்த முக்கிய வரியை இணைத்துப் பின் அந்த இரண்டையும் மீண்டும் வேகமாக இசைக்கும்போது கேட்கும் எந்த இதயம் தான் விசும்பாது?

தருமபுரியில் நடந்த கொடுமையைக் கிட்டத்தட்ட நேரில் பார்ப்பதுபோல் முகத்தில் வந்து அறைந்தது ஒரு கதை. தமது ‘பெத்தவன்’ கதையில் அதே மாதிரியான ஒரு வன்முறைக்கான முஸ்தீபுகளை, சாதீய வசவுகளை அத்தனை அதிர்ச்சியாய் வடித்திருப்பார் எழுத்தாளர் இமையம். ஒரே ஒரு காதல் எதிர்கொண்ட எதிர்ப்பு, அதையும் தாண்டிப் புனிதமான ஒன்றைக் காப்பதற்காக எரித்த மூன்று ஊர்களையும் பின்னர் சென்று பார்க்க நேர்ந்த அனுபவம் இன்னும் கொடுமையானது. கௌரவக் கொலை என்ற மொழி பெயர்ப்பை உடைத்து, ஆணவக் கொலை என்று சொல்லும்போதுதான் வன்மத்தோடு நிகழ்த்தப்படும் செயல்களின் கொடூரம் விரிகிறது.
கல்லூரிப் படிப்புக்குத் தாய்மாமன் குடியிருந்த வீட்டில் தங்கிப் படிக்கையில், பாடாத பாடல்கள் இல்லை. விவித்பாரதி ஒலிபரப்பில் தேன்கிண்ணம் கேட்காத இரவு இருக்காது. அப்படியான நாள் ஒன்றில், ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ (நெஞ்சிருக்கும் வரை) என்ற அருமையான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

எத்தனை நேர்த்தியாக உருவாக்கம் பெற்ற பாடல். இன்றுவரை எந்தத் திருமண பத்திரிகை வாசிக்கும்போதும், தங்கள் நல்வரவை விரும்பும் ரகுராமன், ரகுராமன், ரகுராமன் என்ற அந்த அழகான குரல் பின்னணியில் இப்போதுவரை ஓடிக் கொண்டே இருக்கும். ஆனால், என் மாமி, ‘இந்தப் பாட்டைக் கேட்க முடியாதுடா, அத்தனை கஷ்டமாக இருக்கு’ என்றார். சட்டென்று கண்களில் நீர் சேகரமாயிருந்ததை கவனிக்க முடிந்தது.

கதையில் சிவாஜி, தான் காதலித்த பெண் வேறொருவரை விரும்புகிறார் என்றதும் தானே எல்லா ஏற்பாடுகளும் செய்துகொண்டே பாடும் பாடல் என்பதற்காக இத்தனை சோகமா ? திருமண பத்திரிகையை ராகத்தில் டி எம் சவுந்திரராஜன் வாசிக்கும் அழகான பகுதிதான் அவருக்குத் தெரிந்த பழைய சோகக் கதையை நினைவூட்டுகிறது என்று துருவித் துருவிக் கேட்டபோது அறிந்துகொள்ள முடிந்தது.

நிகழும் பார்த்திப ஆண்டு
ஆவணித் திங்கள் இருபதாம் நாள்…
திருவளர் செல்வன் சிவராமனுக்கும்
திருவளர் செல்வி ராஜேஸ்வரிக்கும்
நடைபெறும் திருமணத்திற்குச்
சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்
தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன் ரகுராமன் ரகுராமன்……

மாலதி மாமி என் சித்தப்பா மகள் என்பதால் எனக்கு அக்கா முறை. அவருடைய அண்ணன் முரளியின் வகுப்பில் படித்தவள் ராஜேஸ்வரி. அந்தப் பள்ளியின் இளம் ஆசிரியர் சிவராமன் அசலூர்க்காரர். இருவருக்குமிடையே நேசம் அரும்பி இருக்கிறது. அது ஏன் ஊராரின் எதிர்ப்பை சந்தித்தது என்கிற காரணமெல்லாம் அந்த வயதில் மாமிக்குத் தெரிந்திருக்கவில்லை. வழக்கமாக அதிகாலை அந்த ஊருக்கு வந்து போகும் பேருந்தில் ஒருநாள் விபத்தில் சிக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட போது, தனக்கு உள்ளபடியே என்ன நேர்ந்தது என்று சொல்ல முடியாமல் சவமாகக் கிடந்தான் அந்த இளம் ஆசிரியன்.

பேதங்களைக் கடந்தது காதல் என்று சிந்திக்கும் போதெல்லாம், நா முத்துக்குமார் பாடலை நினைக்காமல் கடந்து போக முடியாது.

இசையோட்டமும், காட்சிப்படுத்தலும் பார்வையாளரைப் புரட்டிப் போடும் ‘உனக்கென இருப்பேன்’ (காதல்) என்ற அசாத்தியமான திரைப்பாடலின் முதல் சரணத்தில்,

கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்….
என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா
மின்சாரக் கம்பிகள் மீதும் மைனாக்கள் கூடுகட்டும்…..
நம் காதல் தடைகளைத் தாண்டும்

என்ற வரிகளை ஹரிசரண் அப்படி உயிராகப் பாடி இருப்பார்.
சமூக பாகுபாடுகள், வேறுபாடுகளை இத்தனை இலக்கியமாகக் கொண்டு வந்து இழைத்த அந்த அற்புதக் கவிஞர் நம்மை அத்தனை வேகமாகப் பிரிந்த சோகம், அவரது எந்தப் பாடலைக் கேட்கும்போதும் நெஞ்சில் பரவி, ‘பாவி பாவி’ என்று அரற்றும். ஆகஸ்ட் 14 அன்று அவரது நினைவு நாள் கடந்த போது மீண்டும் கனமானது மனம்.

இன்பமான பாடல்களில் பொங்கும் உள்ளம், துயரமான பாடல்கள் கேட்கையில் அதே உணர்வில் ஆழ்ந்து விம்முகிறது. உள்ளத்தைத் தொடும் இசையும், உணர்வுகளைத் தீண்டும் பாடல் வரியும், உணர்ச்சிவசப்படுத்தும் குரல்களும் இணைகையில் நாமறியாமல் இத்தனை வினைகளும் நிகழ்ந்துவிடுகின்றன. அதேபோல் நகைச்சுவை உணர்வும் வாழ்க்கைக்கு முக்கியமானதாகிறது.

சில ஆண்டுகளுக்குமுன் விகடன் சொல்வனம் பகுதியில் வாசித்த நினைவில் இருக்கும் கவிதையில் தேவதையிடம் வரம் கேட்கிறான் ஒருவன். அவள் அவனிடம் ‘நான் கொடுக்கும் பொருள்களை வார இறுதிக்குள் செலவு செய்துவிடு, வந்து பார்ப்பேன், அப்போது வரம் தருகிறேன்’ என்று சொல்லிச் சென்றுவிடுகிறாள். அவள் அளித்தவை சில புன்னகைகள். அதுவரை பார்த்து சிரிக்காத அஞ்சல்காரர், வழியில் பார்க்கும் குழந்தைகள் எல்லோர்க்கும் கையளிக்கிறான் அந்தப் புன்னகையை. ஆனால், அவர்கள் பதிலுக்குத் தங்கள் பங்குக்கு சில புன்னகைகள் வழங்கிப் போகின்றனர். இப்படியான வாழ்க்கையில் தினந்தோறும் எண்ணிப் பார்க்கையில் கைவசம் புன்னகை கூடிக் கொண்டே போகிறது (அருணாச்சலம் படத்தில் ரஜினியால் செலவழிக்க முடியாமல் பெருகும் பணத்தைப் போல!). வார இறுதியில் வரும் தேவதை, இத்தனை இத்தனை புன்னகையா, இதைவிட வேறென்ன வரம் வேண்டும் என்று கேட்டுச் சென்று விடுகிறது.

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்களது நினைவு நாளும் (ஆகஸ்ட் 30, 1957) கடந்து செல்கிறது. அற்புதமான நகைச்சுவை ரசனையில் கருத்தாழமிக்க பாடல்களைப் பாடிச் சென்றவர் அவர். எத்தனை எத்தனை நகைச்சுவைப் பாடல்கள்!

முதல் தேதி படத்தின் ‘ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம்’ ஒன்று போதாதா…. ‘தென்பழநி திருப்பதிக்கும் சீரங்கம் போவதற்கும் சில்லறையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணுலே, அன்புடனே போட்டுவைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம் அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொண்ணிலே ‘, ‘தம்பிகளின் வாடகை சைக்கிள் ஓட்டம் ஒண்ணிலே, பின்பு தரையில் நடந்து போவார் இருபத்தொண்ணிலே’ (அதுக்கு ஒரு டிய்யாங்..டிய்யாங்…என கிண்டல் ஒலி வேறு!), ‘சினிமா டிராமா காட்சிகளுக்கு டிக்கெட் கிடைக்காது ஒண்ணிலே தியேட்டர் காலி ஆள் இருக்காது தேதி இருபத்தொண்ணிலே’ …. எல்லாம் என்ன வரிகளா, வாழ்க்கை விமர்சனங்களா? கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு கும்மாளம் போடுவது ஒண்ணிலே, அவர் கூச்சல் கிளப்பிக்கிட்டு குஸ்திகளும் போட்டுக்கிட்டு (முகம்) கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே என்பது அதன் உச்சம்.

என் எஸ் கே நூற்றாண்டு நேரத்தில், அற்புதமான பாடகர் ஒருவரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சென்னைக்கு அழைத்திருந்தனர். பெரம்பூரில் நடந்த எளிய நிகழ்ச்சியில், தபலா வாசித்தபடி அமர்க்களமாகப் பாடிக்கொண்டே இருந்தார் அந்த உன்னத கலைஞர். கலைவாணரின் பாடல்களை அத்தனை அருமையாகப் பாடிய அவரைச் சிறப்பித்தபின், மிகுந்த பணிவுமிக்க ஏற்புரையில் அந்த எளிய மனிதர், “நான் கூட அய்யா பாட்டெல்லாம் எளிமையான மெட்டுக்கள், சாதாரணமாகப் பாடிவிடலாம் என்று நினைத்து விட்டேன், இந்த நிகழ்ச்சிக்காக அமர்ந்து பயிற்சி எடுக்கும்போதுதான் அந்த மாமனிதனின் மேதைமை தெரிந்தது. இங்கே இத்தனை கொண்டாடி என்னைப் பாராட்டியதற்கு நன்றி, ஆனால், என்னால் 70 சதவீதம் கூட அவரை நெருங்க முடியவில்லை என்பதே உண்மை” என்றார்.

கரிசல் திருவுடையான் -தனித்த குரலும், தாளமிடும் விரலும்!

கோவில்பட்டி மக்கள் பிரதிநிதியாக நகராட்சி மன்றத்தில் உழைத்த களச்செயல்பாட்டாளருமான அந்த அருமையான இசைக் கலைஞரையும் சில ஆண்டுகளுக்குமுன் ஒரு சாலை விபத்து தான் பறித்துக் கொண்டது. என் எஸ் கே பாடல்களை, திருவுடையான் அவர்களை நினைக்காமல் இனி ஒருபோதும் கேட்க முடியாது. அழகான தமிழ் உச்சரிப்பும், முன்னோடிகளின் பாடல்கள் மீதான வேட்கையும், முற்போக்குக் கருத்தாக்கங்கள் மீதான காதலும், உயிர்த்துடிப்பான குரலுமாக வாழ்ந்த இசை வாழ்க்கை தான் அவருடையதும்.

இந்தத் தொடரை வானொலி பண்பலை அன்பர்கள் யாரேனும் வாசிக்கிறார்களா, தற்செயல் நிகழ்வா தெரியாது, கடந்த சில வாரங்களில் இங்கே எடுத்துக் கொண்ட பாடல்கள் கிட்டத்தட்ட அதே வரிசையில் சென்னை 93.5 பண்பலையில் இரவு நேரத்தில் தற்செயலாகக் கேட்க நேர்ந்தபோது அத்தனை சிலிர்ப்புற வைத்தது. நிச்சயம் தற்செயலானது தான். ஆனாலும் அவர்களுக்கு நன்றி.

என் எழுத்துகளின் முதல் வாசகி, என் மாமியார் கோமதி அம்மாள். தற்சமயம், பெங்களூரில் மகன் வீட்டில் இருக்கிறார். தனது சிரமங்கள், கடுமையான தோள்பட்டை வலிகள் எல்லாம் ஒரு புன்னகையால் தாங்கிக்கொண்டு புத்தகங்களை எடுத்து வாசித்து விடுபவர். பேரக்குழந்தைகள் உதவியோடு இணையத்தில் வரும் இந்தத் தொடரையும் வாசித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் பேசுகையில் ‘இடையே சில வாரங்கள் டேப்லெட்டில் எடுத்து வாசிக்க விடுபட்டுப் போனது (கைவலி தான் காரணம் என்றாலும் அதைச் சொல்லாமல்), ஊர் உலகம் எல்லாம் படிக்கிற எழுத்தை நான் படிக்காமல் எப்படி என்று நேற்று அந்தக் கட்டுரைகளையும் தேடி எடுத்து வாசித்துவிட்டேன், அதைச் சொல்லத்தான் அழைத்தேன்’ என்று கொண்டாடிய அந்த அன்புக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்?

இசையின் சுவாரசியம் பகிர்தலில் பெருகும் இன்பம். ‘அடடே உங்களுக்கும் தென்காசியா’, ‘நீங்களும் திருச்சி நேஷனல் காலேஜா’, ‘உங்க மகளும் டான்சரா’ என்று ஒன்றுபடும் புள்ளிகளைக் காட்டிலும் ஒரு படி மேலே கொண்டு போகிறது, உங்களுக்கும் அந்தப் பாட்டுன்னா உயிரா, அவர் இசைன்னா ரொம்ப பிடிக்குமா, இவங்க குரல்தான் உங்களுக்கும் இஷ்டமோ….ச்ச்..ச்ச்…ச்ச்… என்ற சிலிர்ப்பு. வாழ்க்கையின் இசை அது.

(இசைத்தட்டு சுழலும்……)

தொடர் 1 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – ஐ வாசிக்க…

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – ஐ வாசிக்க…

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

தொடர் 8 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-8-venugopalan-sv/

தொடர் 9 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-9-venugopalan-sv/

தொடர் 10 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-10-venugopalan-sv/

தொடர் 11 – ஐ வாசிக்க..

https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/

தொடர் 12 – ஐ வாசிக்க..

http://music-life-series-12-venugopalan-sv

தொடர் 13 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-13-venugopalan-sv/

தொடர் 14 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-14-venugopalan-sv/