இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

 

பதினைந்தாவது கட்டுரைக்கு 15 பேர், இணைய தளத்திலேயே கட்டுரையின் நிறைவில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு எப்படி நன்றி சொல்ல…. கட்டுரையை அனுப்பியதும் அடுத்த சில நிமிடங்களில் ஆர்வத்தோடு வாசித்து உடனுக்குடன் தங்கள் உற்சாகமான மறுமொழியை அனுப்பி வருவோர்க்கும் நன்றி என்ற சொல் போதாது!

என் அண்ணன் முரளி, அக்காலத்திய நினைவுகளை மீட்டெடுத்தது பற்றி உணர்ச்சிகரமான பதிவுகளை கடந்த வாரத்திய கட்டுரையை அடுத்து இணையதளத்தில் எழுதி இருக்கிறார். பள்ளி செல்லும் பருவத்தில் பாட்டி வீட்டில் அவரோடு இருந்த காலங்கள் மறக்க இயலாதவை. பேசத் தக்க இசை வாழ்க்கையின் உணர்வுபூர்வமான பகுதிகள் இன்னும் உண்டு.

கடந்த சில வாரங்களாக, கட்டுரையில் இடம் பெறும் சில பாடல்களை ஒலிக்கச் செய்து கேட்க இணைப்புகள் வழங்கி வந்தாலும், போன வாரம் அது மேலும் பளிச்சென்று இணைக்கப்பட்டிருந்தது, அதிகமான நேயர்களை உடனுக்குடன் ‘பட்டனைத் தட்டி விட்டால் இசைத் தட்டிலே பாட்டு வரும்’ என பரவசமூட்டியது. என் தொல்லைகளை சகித்துக் கொண்டு இரவு தாமதமாக அனுப்பினாலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்து, முந்தைய கட்டுரைகளையும் வாசிக்க இணைப்பு தந்து, இப்படி பாடல்களைக் கண்டு கேட்டு மகிழும் வடிவமைப்பும் செய்து வரும் தோழர் சுரேஷ் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.

உள்ளபடியே இந்தக் காலம் கொஞ்சம் துயரங்கள் சூழ்ந்த ஒன்றாகக் கடந்து கொண்டிருக்கிறது. இதோ இந்தக் கட்டுரை கூட, நெருக்கமாகப் பழகிய ஓர் அன்புத் தோழனை கொரோனா தொற்று பறித்துச் சென்ற செய்தியின் கண்ணீரில் நனைந்தே தன்னை எழுதிக் கொண்டிருக்கிறது.

இந்தியன் வங்கியில் அவர் எழுத்தராக சேர்ந்த தருணமுதல், அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று அர்ப்பணிப்போடு இயங்கி வர, அருகிருந்து பார்த்துக் கொண்டிருந்த மனசு, தோழர் பத்மநாபன் மறைவை ஏற்றுக் கொள்ள இயலாது துடித்துக் கொண்டிருக்கிறது. புன்முறுவல் வற்றாது சுரந்து கொண்டே இருக்கும் முகம், யார்க்கும் உதவும் உள்ளம், நட்பு இதயம், நகைச்சுவை ரசனையில் நாட்டம் எல்லாம் ஒருமித்த உருவம் அவர்.

எத்தனை அலுவல்கள், இடையறாத அலுவலக வேலைகள் இருந்தாலும், வீட்டில் இருக்கும் நேரத்தில் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்த எல்லா படைப்புகளையும் அவ்வப்பொழுது படித்து பதில்களும், வாழ்த்தும் போட்டுக் கொண்டிருந்தவர், இந்த ஜூன் மாதம் இளையராஜா பிறந்த நாள் அன்று தனியே எழுதிய சிறப்புக் கட்டுரைக்குப் பரிசாக ஓர் அருமையான பாடலை அனுப்பி இருந்தார். அலைபேசியில் இடம் பற்றாத கொடுமையில் அதை நீக்கி விட்டிருக்கிறேன் போலும், இப்போது அங்கே போய் அந்தப் பாடலைக் கேட்க அழுத்தும்போது, ‘டவுன்லோட் செய்ய முடியவில்லை, பிராஜெக்ட் ஆஃபீஸ் பத்மநாபனை திரும்ப அனுப்ப சொல்லுங்கள்’ என்கிறது அலைபேசி. அவரையே திரும்பக் கேட்டு அழுது கொண்டிருக்கிறேன் நான்.

இந்தக் காலத்தில் யாருக்குத் தான் இப்படியான நெருக்கமான நண்பர், உறவினர், தோழரைக் குறித்த செய்தி வரவில்லை? அவர் பெயரை எடுத்துவிட்டு வேறொரு பெயர் எழுதி வாசித்தால் அது வேறொருவருக்கு நெருக்கமான பெயராக இருக்கக்கூடும். இது போன்ற நேரத்தில் வெடித்துச் சிதறும் நெஞ்சை அப்படியே இறுகப்பற்றி ஆறுதல் சொல்லித் தேற்ற யாருக்கு சாத்தியம்….

‘அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும்’ என்றானே கவிஞன்…..என்ன வரிகள் அவை…. ‘தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது, தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும் பொழுது’ என்றானே கவிஞன்….என்ன வாழ்க்கையின் தரிசனம்….அளவில்லாத வெள்ளம் வந்தால் அலைமோதும் ஓடம், அமைதியான நதி இருக்கும்போது தானே ஓட முடிகிறது?

ஆண்டவன் கட்டளையின் இந்தப் பாடல் உங்களுக்கும் பிடிக்கும் தானே சார் என்று கேட்டார் அற்புதமான மருத்துவர் ஆர் சுரேந்திரன். “நெறியுள்ள மருத்துவராக விளங்க வேண்டும் என்று ஓயாமல் சொல்லி வருகிறீர்களே, எத்திக்ஸ் என்றால் என்ன என்று பலரும் கேட்கின்றனர். அதற்கான பதில் எளிமையானது, உங்கள் அப்பாவுக்கோ, சகோதரனுக்கோ, உறவினருக்கோ நோய் என்றால் எப்படி கவனிப்பீர்கள், அப்படித்தான் உங்களிடம் வருகிற ஒவ்வொரு நோயாளியையும் கவனிக்க வேண்டும். இது தான் அறம் சார்ந்த மருத்துவம்” என்று ஒரு நேர்காணலில் விளக்கி இருந்தார் அவர். ‘காற்றடித்தால் சாய்வதில்லை, கனிந்த மனம் வீழ்வதில்லை’ என்றானே கவிஞன் !

விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் மகத்தான கூட்டுத் தருணம் ஒன்றில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் ‘அமைதியான நதியினிலே ஓடும்’ பாடலுக்கான இசை. தனன னான தனன னான தான என்றால் இந்தத் தேர்ச்சியான சொற்களை எடுத்துக் கொடுத்த கண்ணதாசன் அவர்களை என்ன சொல்வது….

ஒரு நீர்நிலைக்கு நம்மை காமிரா இட்டுச் செல்லுமுன், வீணையின் முத்துக்கள் சிதறித் தெறிக்க மெல்ல மெல்ல மனத்தை ஈரப்படுத்தி ஒரு குளிர் காற்று வீசுவதாகப் புறப்படும் குழலிசையை ஒரு கட்டத்தில் வாங்கிக்கொண்டு இழையும் வயலின் இசையை மீண்டும் வீணையின் முத்துகள் முத்தமிடும்போது நாம் அமைதியான நதியினிலே ஓடும் ஓடத்தில் ஏறி இருப்பதை உணர்கிறோம். தென்னை இளங் கீற்றைத் தென்றல் வந்து தாலாட்டுமுன், தென்னை இளங்கீற்றினிலே…. ஏ… ஏ…. என்று ஓர் அரைவட்டம் இழுத்து, டி எம் எஸ் அவர்களின் ஆலாபனை தாலாட்டிக் கொடுக்கிறதே…. ஆஹா..

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவற்றை பாரம்பரிய கவிகள் கடந்து வரவே மாட்டார்கள்…..ஆனால், அதை எழுத கண்ணதாசனுக்கு வாய்க்கும் வரிகளும், நாணலிலே காலெடுத்து நடந்து வந்த மென்மையிது என்ற அந்த சொற்களை விடவும் மென்மையான குரலெடுத்து, நாணம் என்ற தென்றலிலே பி சுசீலா தனது குரலினிமையால் கட்டி ஆடவிடும் பாட்டுத் தொட்டிலும்…ஆஹா..

‘காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்’ என்ற சொற்களை அந்தப் பாடலின் உயிர், உணர்வு, காட்சியின் பொருத்தம் உணர்ந்த மெல்லிசை மன்னர்கள் அப்படியே அமைதியான தாளக்கட்டிலேயே ஓடவிட்டிருக்கும் பாந்தம் அசாத்தியமானது. அதீத ஒலிகள் ஏதும் பின்னணியில் ஒலிக்காமல் ‘கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…ஹோய் ஹோய்’ என்ற தத்துவத்தை நோக்கிய துடுப்பை, பாடகர்கள் அழகாகச் செலுத்திக் கொண்டு சேர்க்கின்றனர்.

பல்லவியிலிருந்து சரணத்தை நோக்கிய திசையில், அந்த அமைதியான நீர்நிலை மீது உற்சாகமாகப் பறக்கும் பறவைகள் போல் குழலும், வயலினும் சிறகடிக்க, வீணையின் நாதம், நீர்நிலையில் நீந்தும் மீன்களைப் போல் கொஞ்சுகிறது. பாடலை அடுத்த படிக்கு உயர்த்தும் சிவாஜியின் உயிர்ப்பான பாவங்களும், தேவிகாவின் நெகிழ்வான நடிப்பும்.

படத்தின் கதைக்கருவை ஒட்டிய காட்சிப்படுத்தலையும், தலைமுறைகளையும் கடந்து இப்போது கேட்டாலும் , துயருற்றிருக்கும் மனத்தை ஆற்றுப்படுத்தும் அமைதியான இசையினிலே ஓடும் பாட்டு அது.

ஓடத்தையும், வாழ்க்கையையும் இணைத்த பாடல்கள் தமிழ்த் திரையில் இன்னும் இன்னும் உண்டு. மாமா என்று செல்லம் கொண்டாடப்பட்ட திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் அவர்களது இசையில் மிதந்த ஓடம் அது. தனித்துவமான குரலாளர் திருச்சி லோகநாதன் ஆசையே அலை போலே ஒலித்த பாடல் அது.

கையில் பிடிபடாது, கால்களிடையே நழுவிப் போகும் வாழ்க்கையைப் பிடிக்க மனிதர்கள் படும் பாடுகளை அலையாக அடையாளப்படுத்தி ஒரு ஞானப் பார்வையில் பார்க்கும் நோக்கில் கண்ணதாசன் எழுதியது….அந்த வகைப் பாடல்கள் தலைவருக்கு மிக அனாயசமாக எழுத வரும் அல்லவா? இதில் கூடுதல் சிறப்பு இந்தப் பார்வை பரிமாறப்படும் விதம்.

‘பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே’ என்ற வரியிலேயே சொக்கி நிற்போரை அப்படியே அவர்கள் பாதையில் செல்வது போல் கொண்டு போய், கடைசி வரியில் துடுப்பை மாற்றிப் போடுவார், ‘நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்’ என்று!

இரண்டாம் சரணத்தில் முதியவர்களை எடுத்துக் கொள்ளும் கவிஞர் ‘இளமை மீண்டும் வருமா, மணம் பெறுமா’ என்று கேள்விகளை எழுப்பி, ‘முதுமையே சுகமா’ என்று ஒரு வளைவு வளைத்துவிடுவார். ஆத்தாடி, மூன்று வரிகள், ஏழே சொற்கள்…அதற்குள் எத்தனை அடுக்குகளில் பாய்கிறது கற்பனை…. இளமைக் காலத்திற்குத் திரும்பிப் போய் அதே பாடுகளை அனுபவிக்கணுமா, இல்ல இருக்கற பாடே பரவாயில்லையா என்று ஓடக்காரன் நிகழ்த்தும் உரையாடலில் எத்தனை எத்தனை கோடி கண்ணீர்க் கதைகள் வெடிக்கக் காத்திருக்கின்றன… முதுமையிலிருந்து இளமையைப் பார்க்கவும், அதே மூச்சில் முதுமையை நினைக்கவுமான வீச்சில் அல்லவா வீசுகிறார் துடுப்பை?

அடுத்த சரணம் இன்னும் சுத்தம், ‘சூறைக் காற்று வீசினால் தோணி வாழ்க்கை மேவுமா’, அட்றா அட்றா…ஒரே ஒரு திருமணம் செய்து பார்த்தால் வீடு விலைக்குப் போய்விடுகிறது, மருத்துவமனைக்குள் நுழைகையில் வயல் பத்திரம் கை மாறிவிடுகிறது ! அதற்கு அடுத்து, அக்கவுண்டன்சியைத் தலை கீழாக மாற்றி எழுதுகிறார் கவிஞர், வாழ்வில் துன்பம் வரவு, சுகம் செலவு! கழித்துப் பார்த்தால், மீதி இருப்பது கனவு! இது யார் வகுத்த கணக்கு, வேறு யார் காலம் தான் என்கிறார் கவிஞர்.

ஒவ்வொரு சரணத்திலும், யார் காணுவார் என்றே வரும் கடைசி சொற்களை கவிஞர் எழுதியிருக்க, தான் பாடுவதற்காகவே எழுதியதாக திருச்சி லோகநாதன் அத்தனை ரசமாகப் பாடுவார். வீட்டுப் பெரியவர் ராச்சாப்பாடு முடித்துக் கொண்டு கோடை காலத்தில் வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுக்கையைத் தயார் பண்ணிவிட்டு, வரிசையாக அடுத்தடுத்த திண்ணைகளில் இருக்கும் சேக்காளிகள் காதில் விழும்படியும், வீட்டுக்குள் இருக்கும் இளசுகள் கேட்கும்படியுமான ஒரு குரலில் நிதானமாக ரசித்து, அதுவும் கடைசி சரணத்தில் சூறைக்காற்று வீசினால்…வரியில் அழகான ஆலாபனை செய்தும், நிறைவில் ஹம்மிங் கொடுத்தும் முடித்திருப்பார். இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் புத்துணர்வு பொங்கும் முகத்தோடு நடித்திருப்பார்.

நிலையாமை பற்றிய பாடல்களையே தத்துவப் பாடலாகப் பார்க்கும் பார்வை சமூகத்தில் ஊடாடி இருக்கிறது. ‘காயமே இது பொய்யடா’ என்ற பார்வையே தத்துவம் என்று! ஆனால், தத்துவம் என்பது பொதுவான சொல். வாழ்க்கையை வெவ்வேறு கோணங்களில் அலசுவதும், சமூகத்தைப் பகுத்து ஆய்வதும், மனித குல வரலாற்றை எடுத்துச் சொல்வதும் தத்துவங்களே. அப்படியான தத்துவங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையை ஒவ்வொரு பார்வையில் பார்க்கும். வெவ்வேறு தத்துவங்களில் ஒன்றுதான் இந்த உலகம் நிலையற்றது, எல்லாம் மாயை என்று சொல்வது. காயமே இது மெய்யடா, இதில் கண்ணும் கருத்தையும் வையடா என்பதும் ஒரு தத்துவப் பார்வை தான்! இந்த விவாதங்கள் பலவும் திரை இசையில் நடந்திருப்பவை ரசிகர்களுக்கு வாய்த்த செல்வங்கள்.

‘வாழ்வே மாயம்’ என்ற குரல் ஒரு பக்கம் ஒலித்த திரை இசையில், ‘வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும்’, ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்று வேறு பக்கம் முழக்கமிட்ட பாடல்களும் உண்டு. ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என்ற இசையில் உருகும் ரசிகர், ‘என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே’ என்ற இசைக்கு மயங்கவும் செய்கிறார்.

துயர வேளையில் ஆறுதல் மொழிக்கு, நிலையாமை பற்றிய சொல் மரபாகி விட்டிருக்கிறது. ஆனாலும், கேள்விகள் அடங்க மறுக்கும் உள்ளத்தில் சிந்தனைகள் பெருகும்போது, தத்துவப் பார்வையில் சுவாரசியமான மாற்று வந்து விழுகிறது. மாயை என்பதைக் கேள்விக்கு உட்படுத்தும் அற்புதமான கவிதையை மகாகவி படைத்ததும், அதை இசை ஞானி அவருக்கான அர்ப்பணிப்பில் உருவான படத்திற்காக இசையில் வழங்கியதும் அருமையான அனுபவமானது.

‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே’ பாடல், கானகத்தில், நீர்ச்சுனையில், பாறைகளின் மடியில் ஆதாரங்களோடு நின்று செடிகொடிகளையும், பறவைகளையும் சாட்சியாக்கி நீங்கள் எல்லாம் உண்மை தானே, இதில் மாயை எங்கே வந்தது என்று நெஞ்சு நிமிர்த்திக் கேட்கிறது.

‘இந்த உலகமே பொய் என்று ஒரு சாஸ்திரம் சொல்கிறது, அதை ஓயாமல் சந்நியாசிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர், போகட்டும்’ என்று சொல்லும் மகாகவி, இவையெல்லாம் குடும்பம் நடத்துபவர்களுக்கு எப்படி பொருந்தும், தங்கச் சிலை போல நிற்கிறாள் மனைவி, நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந்தாள், நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள், நமது குழந்தைகளை வளர்த்தாள், அவள் பொய்யா, குழந்தைகளும் பொய்தானோ? என்று கேட்கிறார். நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்கும் என்கிறார். இவை மட்டுமல்ல, இந்தக் கவிதைக்குப் பின்னுரையில், தேள் மட்டும் தான் பொய்யா, அது கொட்டுவதும் பொய்தானா என்று எள்ளல் தொனியில் பேசுகிறார்.

‘சொப்பனம் தானோ, பல தோற்ற மயக்கங்களோ, அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ, கானலின் நீரோ, காட்சிப் பிழை தானோ…’ என்பன எல்லாம் எப்படி வந்து விழுகின்றன, அதனால் தான் அவர் மகாகவி! ‘நானும் ஓர் கனவோ, இந்த ஞாலமும் பொய்தானோ’ என்பது உச்சம்! சாஸ்திரம் சொல்வோரைப் பார்த்து, ‘உங்களோடு என்ன பேச்சு, நான் அவங்க கிட்ட நேரே பேசிக்கிறேன்…வாங்கப்பா… ஒவ்வொரு ஆளா சொல்லுங்க..தயக்கமில்லாம உண்மைய சொல்லுங்க, நான் பாத்துக்கறேன்…’ என்கிற மாதிரியான உரையாடல் இந்தப் பாடல். வானகமே இளவெயிலே மரச்செறிவே என இயற்கையை நோக்கிய அந்த அன்பின் அழைப்பை ஹரீஷ் ராகவேந்தர் பாடும் ரசனைக் குரலுக்காகவே கேட்டுக் கொண்டிருக்கத் தோன்றும்.

மனித வாழ்க்கையை, இந்தப் பூவுலகின் உயிர்கள் குறித்த பார்வைகளை மிக எளிதான படைப்புகளில் வடிக்கின்ற கவிகளும், அவற்றை உயிரோட்டமான இசைக்குள் குடியமர்த்திக் காலகாலத்திற்குமான பாடல்களாகத் தொடுக்கின்ற இசையமைப்பாளர்களும், அவற்றின் இருப்பைத் தமது பொறுப்பாகக் கருதி அவற்றைத் தங்களது கற்பனையும், விஷய ஞானமும், குரல் வளமும் ஒன்று சேர வார்க்கின்ற பாடகர்களும் எத்தனை கொண்டாட்டத்திற்கு உரியவர்கள்.

இன்ப நேரத்தில் வாரிக் கொஞ்சவும், துன்ப வேளையில் தோளைத் தொட்டு ஆறுதல் சொல்லவுமாக இசை வாழ்க்கை நம்மை மனிதர்களாகத் தக்க வைக்கிறது. பொங்கும் இன்பத்தை மட்டின்றி வெளிப்படுத்தவும், விம்மும் துயரத்தைக் கண்ணீரால் கடந்து போகவும், இசை, விட்டுக்கொடுக்காத நட்புறவாக உடன் இருக்கிறது.

இசையில் அவரவர் அனுபவங்கள் வேறானவை. வெளிப்பாடுகள் மனிதருக்கு மனிதர் மாறுபடுகின்றன. ஆனால், ரசனையில் ஒன்றுபட்டு விடுகின்றன. இந்த சுவாரசியமும், சுவையும் வாழ்க்கையை மேலும் பொருள் உள்ளதாக மாற்றிக் கொடுக்கின்றன. இசையே வாழி நீ!

(இசைத்தட்டு சுழலும் ….)

தொடர் 1 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – ஐ வாசிக்க…

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – ஐ வாசிக்க…

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

தொடர் 8 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-8-venugopalan-sv/

தொடர் 9 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-9-venugopalan-sv/

தொடர் 10 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-10-venugopalan-sv/

தொடர் 11 – ஐ வாசிக்க..

https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/

தொடர் 12 – ஐ வாசிக்க..

http://music-life-series-12-venugopalan-sv

தொடர் 13 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-13-venugopalan-sv/

தொடர் 14 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-14-venugopalan-sv/

தொடர் 15 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-15-venugopalan-sv/