ஏர் முனையின் ஏற்றம் அதைப் பாடுவோம்
நாம் பாடுவோம்
கொண்டாடுவோம் – எங்கும்
இன்மை நீங்கி இன்பம் பொங்கத்
தேடுவோம்
வழி கூறுவோம்
பார் முழுதும் போற்றும் இந்த நாட்டிலே
நம்ம நாட்டிலே – பசி
பஞ்சம் என்றிரப்பதுவோ ரோட்டிலே
நடு ரோட்டிலே
பெரிய ரோட்டிலே !
பொன்னை நம்பி வாழ்வதுவே போதுமா
வாழப் போதுமா –
குறை நீங்குமா – பூமி
தன்னை நம்ப வில்லை எனில் தீருமா
பசி தீருமா
இன்பம் சேருமா !
எண்ணற்ற அன்பர்களது வாழ்க்கையில் இசை எத்தனை இன்பம் ஊட்டுகிறது என்பதன் திறப்புகள் இந்த இசை வாழ்க்கை எழுதத் தொடங்கியபின் வாராவாரம் புதிது புதிதாக, தினுசு தினுசாக தெரியவரும் போது ஏற்படும் சிலிர்ப்பைச் சொற்களால் விவரிக்க முடியாது.
‘அமைதியான நதியினிலே‘ பாடல் குறித்த எழுத்தை வாசித்துவிட்டு, ஒரு மாலை நேரத்தில் மூத்த மனிதர் ஒருவர் அழைத்து, “என்னால் பேசவே முடியவில்லை…..என்ன சொல்ல என்ன சொல்ல” என்று நாத் தழுதழுக்கப் பேசியது கட்டுரைக்கான சிலிர்ப்பு என்பதை விட, நம் இசை மேதைகளது ஞானம் குறித்தும், தலைமுறைகளைக் கடந்து உயிரோட்டமாக உலவும் அவர்களது கொடையான பாடல்கள் பற்றியதுமான சிலிர்ப்பு என்றே கொள்ளவேண்டும்.
அமைதியான நதியினிலே பாடலில் சந்தூர் எனும் கருவி பயன்படுத்தப்பட்டது பற்றி குழலிசை கலைஞர் லிங்கராசு எழுதி இருந்தார். என் அறியாமையை அவரிடம் உளப்பூர்வமாக ஒப்புக்கொண்டேன். அதற்குப்பின், மெல்லிசை மன்னர்கள் அந்தப் பாடலில் பயன்படுத்திய கருவிகள் குறித்த புளகாங்கிதம் நிறைந்த ஆங்கிலக் கட்டுரை ஒன்றை இணையத்தில் கண்டெடுத்து அசந்து போனேன்… இசைக் கருவிகள், ஸ்வரங்கள், ராகங்கள் குறித்த ஞானம் இருந்தால் ரசிப்பின் திளைப்பு இன்னும் கூடும் அல்லவா…
இந்த இடத்தில்தான் மன நல மருத்துவர் ஜி ராமானுஜம் அவர்கள், தமிழ் இந்து நாளிதழில் இளையராஜா குறித்த தமது தொடரில் குறிப்பிட்ட ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. பாடலில் எந்தக் கருவி பொருத்தமோ அதைத் தேர்வு செய்து, ஆனால் வேறொரு கருவியை வைத்து பரிசோதனை செய்து மேலும் ரசத்தைக் கூட்டுவார் ராசா என்று எழுதி இருந்தார். ராக யாத்திரை தொடரில் ஒவ்வொரு வாரமும் நிறைவாக அவர் எழுப்பும் கேள்விகளுக்குப் பொருத்தமான பதிலை வாசகர் பலர் அவருக்கு எழுதி வந்தனர்.
மகாகவி நினைவு நாளுக்குச் சற்றுமுன்பு வெளியான கடந்த வாரக் கட்டுரையில் அவரது ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே‘ பாடலைக் குறிப்பிட்டது தற்செயலானது. ஆனால், அப்புறம் வாரம் முழுவதும் அகலாமல் அகத்தினுள் அமர்ந்து விட்டார் அவர். எத்தனை எத்தனை விஷயங்களைக் கிளர்த்தியது அவர் நினைவு. பாவை விளக்கு படத்தில் இடம் பெற்ற மங்கியதோர் நிலவினிலே பாடலை நினைவூட்டினார் தோழர் பாலா. பொருளடர்த்தி மிக்க பாரதியின் சொல்லாடல் குறித்த வியப்பை அவர் வெளிப்படுத்திய பரவசம் அபாரம். வெளிச்சம் அவ்வளவாக இராத இருள் பரவும் பொழுதை, மங்கியதோர் நிலவினிலே என்று எந்தக் கணத்தில் யாத்திருப்பான் மகாகவி?
இந்தப் பாடலுக்கு என்ன சிறப்பு எனில், ஜி ராமநாதன் இசை அமைப்பில் திருமணம் படத்திற்காக டி எம் எஸ் பாடியிருக்கிறார். பாவை விளக்கு படத்தில் கே வி மகாதேவன் இசையில் சி எஸ் ஜெயராமன்! அதோடு நிற்கவில்லை, இந்தப் பாடலை எஸ் பி பி அவர்களும் பாடி இருக்கிறார். தேவநாராயணன் அவர்கள் பாடி இருக்கிறார். ஒவ்வொரு குரலும் ஒரு ருசி. ஒரு பாவம்.
மங்கியதோர் நிலவினிலே பாடல், மகாகவியின் வேதாந்தப் பாடல்கள் வரிசையில் உள்ளது, மூன்று விருத்தங்கள், அதில் முதலாவது மட்டுமே இசையில் இத்தனை பேர் பாடி இருக்கின்றனர். கனவில் இது கண்டேன் என்னும் பாரதி, ‘வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை‘ என்று சொல்லும் இடத்தை சி எஸ் ஜெயராமன் பாடிக் கேட்டிருக்க வேண்டும்!
கனவில் பாரதியை ஏந்தியே இந்தப் பாடலை அவர் பாடி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ‘பொங்கி வரும் பெரும் நிலவு போன்ற ஒளிமுகம்‘ என்ற வருணனை தொட்டு அடுத்தடுத்து இந்தக் கவிதையின் உயிரை அத்தனை உயிர்ப்போடு வடம் பிடித்துத் தேரை இழுக்கும் பக்தியோடு பற்றிப் போகிறார் ஜெயராமன். ‘அங்கதனில் கண் விழித்தேன்‘ என்ற சொற்களை அவர் உச்சரிக்கும் நேர்த்தியும், அடுத்து, அடடா…ஓ அடடா என்ற வியப்பை அவர் வெளிப்படுத்தும் திகைப்பும், ‘அழகெனும் தெய்வம் தான் அதுவென்றே அறிந்தேன்‘ எனும் பதங்களை தாளக்கட்டுக்குள் நிறைவாக வழங்கி விட்டு மீண்டும் பல்லவிக்கு அவர் மீளும் பாங்கும், அடடாவோ அடடா போட வைக்கும்.
வாழ்க்கையில் இசை எப்போதிலிருந்து என்று கேட்டால், எப்போது இல்லாதிருந்தது என்பதே பதிலாக இருக்க முடியும்! ‘ஏர் முனையின் ஏற்றம் அதைப் பாடுவோம்‘ என்ற ஓர் இசைப்பாடலை எழுதி என்னையும் வேறொரு வகுப்பு மாணவரையும் உயர்நிலைப் பள்ளி வாராந்திர அசெம்பிளி கூட்டத்தில் பாட வைத்த ஆசிரியர் எனக்கு அத்தனை பரிச்சயம் உள்ளவர் அல்ல. திரு இராமலிங்கம் என்று அவர் பெயர் மங்கியதோர் நினைவில் ஓடுகிறது, உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவர் என்னை அழைத்ததற்கு என்ன காரணம் என்பது இசையின் இன்னொரு கதை, அது பிறகு.
இந்த ஆசிரியர் பொங்கல் திருநாள் ஒட்டி வேளாண் சிறப்பைச் சொல்ல இதை எழுதி இருந்தாரா, என்ன பின்னணி என்று நினைவில்லை. முதல் நாள் மாலை எங்கள் இருவரையும் அழைத்து, ஒரு மெட்டில் அவரே பாடிக் காட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போது அவரது இடது கையில் கறுப்புநிற தோல் பையொன்று இருந்தது உள்பட நினைவில் நிற்கிறது! அந்தப் பாடலில் தனிச் சொல்லாக வரும் இடத்தில் கொடுக்க வேண்டிய அழுத்தம், பசி பஞ்சம் என்று இரப்பதுவோ என்ற இடத்தில் செய்ய வேண்டிய கூடுதல் இழைப்பு (டேய், இறப்பதுவோ இல்லடா, அழுத்திராத ரொம்ப, இரப்பதுவோ என்று தான் எழுதி இருக்கேன், பிச்சை எடுக்கணுமா என்று பொருள்) என்று சொல்லிக் கொடுத்து, மேடையில் நாங்கள் பாடும் போது அவரும் உடன் வந்து நின்றார். தலைமை ஆசிரியர் பாராட்டும்படி பாடி முடித்து விட்டு வகுப்புக்குள் ஓடிவிட்டோம். கவிதைகளில் இருந்த நாட்டம், இசைப்பாடல்கள் மீதும் அதிகம் ஊறத் தொடங்கியது. சமூகப் பார்வையும் படர ஆரம்பித்தது.
‘இவன் பாட்டுக்காரன்‘ என்ற கலகத்தை டிசிபி என்னும் நல்லாசிரியர் தான் ஏற்படுத்தி வைத்திருக்கவேண்டும். ஒன்பதாம் வகுப்பில் பார்த்த டிசிபி வேறு. அவர் வகுப்புக்குள் நுழைந்தால் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையாக இருப்போம். ‘டிசிபி என்றால் என்ன‘ என்று கேட்டார், எவனோ ஒருவன் எழுந்து நின்று, ‘டி கிறிஸ்டோஃபர் பத்ம சிங்‘ என்று அவர் பெயரைச் சொல்லி விட்டான், கிடையாது என்று சொல்லிவிட்டார். என்னடா இது என்று குழம்பி இருக்கையில், டிசிபி என்றால் டிசிப்ளின் என்று முகத்தை மேலும் இறுக்கமாக வைத்துக் கொண்டு சொன்னார். ஆனால், பத்தாம் வகுப்பு போகையில் நடந்த பாட்டு போட்டிக்கு நடுவரில் ஒருவராக நடுவே இவர் வந்து அமர்ந்து கொண்டிருந்தார். உயிரே போயிற்று எனக்கு. ஆனால், பாடி விட்டேன் என் பாட்டை!
மறு நாள் வகுப்பில், எல்லோர் எதிரிலும், “கருடா, இங்கே வா” என்றார். எல்லோரும் சிரித்தனர். வகுப்பில் யாருக்குமே தெரியாது முதல் நாள் போட்டியில் நான் கலந்து கொண்டது. சிரித்தவர்களில் ஒருவனைப் பார்த்து, “ஏண்டா நான் அப்படி கூப்பிட்டேன் அவனை?” என்று கேட்டார். “ஏன்னா அவன் மூக்கு கருடன் மாதிரி இருக்கு சார்” என்றான் அவன். மீண்டும் சிரிப்பு வகுப்பில்.
“ஏண்டா, நீ கருடனையும் சரியா பார்க்கல, இவனையும் பார்க்கல” என்று சிரித்து விட்டு, “நேற்று போட்டியில் பரம சிவன் கழுத்தில் இருந்து‘ பாட்டு பாடினான், மூன்றாம் பரிசு” என்று அறிவித்தார். “உனக்கு கிடைக்க வேண்டியது எப்படியோ தப்பிப் போயிருச்சு, அடுத்த வருஷமும் பாடு, உனக்கு முதல் பரிசு தான் கிடைக்கணும்” என்றார். அடுத்த ஆண்டில்,முதல் பரிசு பெற்றுத் தந்த பாடலின் கதை, அப்புறம்! அதற்கிடையே, டிசிபி அவரது பாடல் கோஷ்டியில் என்னைச் சேர்த்து விட்டிருந்தார். இறுக்கமான தோற்றத்தின் உள்ளே, இசையால் ஆன இதயத்தின் சுரம் கேட்டது.
https://youtu.be/CUarA-ienGk
கவிஞரின் எண்ணற்ற பாடல்களை அற்புதமாகப் பாடிய டி எம் சவுந்திரராஜன், கவிஞருக்குக் குரல் கொடுத்த பாடல்களில் சூரிய காந்தி படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் மிகவும் அருமையானது. இதுவும் வயலினும் குழலும் பேசிக்கொண்டே புறப்படும் பாடல் தான். சிக்கன சொற்செட்டு, தாளக்கட்டு அதற்குள் கதையின் முக்கிய அம்சத்தைப் பாடலில் கொண்டு வரவேண்டும் என்ற விஷயங்களை கண்ணதாசன் அநாயசமாகக் கொண்டுவரும் ஆற்றல் பெற்றிருந்ததன் எடுத்துக்காட்டுகளில் முக்கிய பாடல் இது.
பாடலின் அடிப்படையை ‘இன்னார் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது‘ என்று அருமையாக அமைத்துக்கொண்டு, ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா சவுக்கியமா‘ என்று கேட்டு, ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது‘ என்று அருமையாக பல்லவியை எழுதிக் கொண்டார். ஓர் உரையாடலை எழுதும் போது இப்படியெல்லாம் இவர் கேட்டார், அதற்கு அவர் அப்படி சொன்னார் என்றெல்லாம் வரும். சிரமங்களை அப்படியே வெட்டி எறிந்து பாம்பு கேட்டது, கருடன் சொன்னது என்று பிடித்த பிடிமானம் தான் அசாத்திய அனுபவம். அவ்வை சொன்னது, கணவன் சொன்னது என்று முதல் மற்றும் மூன்றாவது சரணத்தில் போட்டுக் கொண்ட கவிஞர், இரண்டாம் சரணத்தில் அந்த வரிகளுக்கு ஏற்ப ‘அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது‘ என்று தக்கபடி வைத்துவிட்டதும் கவனிக்கத்தகுந்தது.
டி எம் எஸ் இந்தப் பாடலுக்கான குரலை மட்டுமா கொடுத்தார், உணர்ச்சிகளையும், உணர்வுகளையும், எதிர்விளைவுகளை ஊகிக்கும் அளவு கேட்பவர் நெஞ்சில் கற்பனை ஊறும் வண்ணம் அனுபவமும் சேர்த்தே வழங்கி இருந்தார். ஒவ்வொரு சரணத்திலும் முதல் சொற்களை அவர், ‘உயர்ந்த இடத்தில்‘, ‘வண்டி ஓட‘ , ‘நீயும் நானும்‘ என்று எடுக்கும் வீச்சு அழகோ அழகு. கடைசி சரணத்தில் ‘நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே‘ என்ற குழைவில் அந்தக் கதாபாத்திரத்தின் தாழ்வுணர்ச்சி உளவியலை அப்படியே கொட்டிக் கொடுத்திருப்பார் டி எம் எஸ். ‘என்னுள்ளம் எனைப்பார்த்து கேலி செய்யும் போது இல்லாதான் இல் வாழ்வில் நிம்மதி ஏது‘ என்ற பிடிமானத்தைக் கவிஞர் தொட்டதை டி எம் எஸ் என்னமாகப் பரிமாறுவார்!
தனது சமையலைத் தானே ருசிப்பவர் மாதிரி படத்தில் தாமே தோன்றிப் பாடும் அந்தக் காட்சியில் உருவத்தால் மட்டுமல்ல, எல்லா விதங்களிலும் உயர்ந்து நிற்பார் கண்ணதாசன்…அதுவும் கழுத்தை வெட்டி வெட்டிக் கண்ணை இலேசாகச் சிமிட்டியபடி புன்னகையோடு அவர் வாயசைக்கும் காட்சி மறவாது எப்போதும்.
டிசிபி சார் ஒரு வாரம் கழித்து எங்கள் வீட்டருகே இருக்கும் ஒரு சிறிய மையத்திற்கு வரும்படி பணித்தார். எங்கள் பள்ளிக்கூட டயரி புத்தகம் கொடுத்து பள்ளிக்கூடப் பாடல் தெரியுமா என்று கேட்டார். “வரும் விழாவில் அதை இசையோடு பாடப்போகிறோம், இன்னும் கொஞ்சம் பசங்கள பிடிச்சிட்டு வா” என்று ஆணையிட்டார். பல ஆண்டுகளாக எழுத்து வடிவில் இருந்த பச்சையப்பன் பள்ளி வாழ்த்துப் பாடலை இசையில் யாரேனும் பாடுவார்கள் என்று ஒரு போதும் சிந்தித்தது கிடையாது.
‘வாழிய வாழிய வாழியவே வளமுடன் நம் பள்ளி வாழியவே‘ என்பது அதன் தொடக்க அடிகள். ‘வானகம் புவியும் வாழ்வது போல் வான் புகழ் வீசி வாழியவே‘ என்பது அடுத்த வரிகள். சட்டென்று டிசிபி சார், ஓர் இசைக் கருவியை எடுத்துப் பட்டைகளைத் தோள்பட்டைகளில் பொருத்திக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தார்…அது புத்தகத்தின் பக்கங்கள் போல் ஒரு கையில் விரிந்து கொண்டிருக்க இன்னொரு கையால் ஹார்மோனியம் போல் காட்சியளித்த ஆனால் செங்குத்தாக அமைந்திருந்த கருப்பு வெள்ளை கட்டைகளை அழுத்தி இசைக்கத் தொடங்கினார். அக்கார்டியன் என்று அறிமுகப்படுத்தினார்.
அவர் மெட்டமைத்த பாணி, கிறித்துவ தேவாலயங்களில் ஒலிக்கும் கீதங்களின் சுவையில் இருந்தது. ‘தமிழகம் தழைத்திடப் பணிபுரிந்த தனிப்பெரும் வள்ளலாம் பச்சையப்பர்‘ என்ற அடியில், பச்சையப்பரை அத்தனை ஒயிலாக அவர் மாற்றியது அப்படித் தான் ஒலித்தது. வான் புகழ் வீசி வாழியவே என்ற வரியைச் சற்று வெட்டி, வான் புகழ் வீசிடவே என்று பாடினார். அப்போதுதான் தாளத்திற்குள் வரும் என்றார், ‘ஏன் ஒப்புக்கொள்ள மாட்டியா‘ என்று கேட்டார். பாட்டை இசை வழி கொண்டு போகும் பயணத்தில் அவர், ‘பாட்டு முடியும்போது, இப்படி டியூன் கொடுப்பேன், நீங்களும் ஹம்மிங் கொடுக்கணும்‘ என்று சொல்லிவிட்டு, ‘சச்சா மம்மா சச்சா மம்மா ரா….’ என்று சொல்லி, கருவியில் அதை வாசித்தும் காட்ட, ஒன் டூ த்ரீ சொல்லி, மேடையில் அதை நாங்கள் பாடிய போது, எங்கோ பறந்தது மனம்.

அதற்குப் பிறகு எந்த மேடைக் கச்சேரியைக் கடந்து செல்லும்போதும், திரைப்படங்களிலும் அக்கார்டியன் கருவியோடு யாராவது தென்படுகிறார்களா என்று பார்க்கத் தோன்றும். அவர்கள் எத்தனை உயரம் இருந்தாலும், குள்ளமான, கருத்த மேனியில் பளிச்சென்று உடை அணிந்து புன்னகை பூத்துத் தலையை ஆட்டியபடியே வாசிக்கும் டிசிபி சார் தான் கண்முன் நிற்பார்.
எல்லோரது இளமைக்கால வாழ்க்கைக்கும் ஏதோ ஒரு விதத்தில் பின்னணி இசை இருந்திருக்கும், அது, இப்போதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும். நின்று கேட்க நாம் தான் நேரம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.அதில் கனவுகளும், கற்பனைகளும் அலைமோதி இருக்கும். கஷ்டங்களும், கண்ணீரும் கூடக் கலந்திருக்கும். இனிப்பு மட்டுமல்ல வேர்வையின் உப்பும் சேர்ந்திருக்கும். அலை நீளம் தட்டுப்படும் போது, சட்டென்று அந்தப் பாடல்கள் கேட்கத் தொடங்கி விடும். விரிந்த பார்வையின் சிறகுகளை அதில் மீட்டெடுக்க முடியும். தனிமையின் வெளி என்றாலும் சோர்வுற்று இருளில் அமர்ந்து விடாமல், வெளிச்சத்தில் உயரே பறந்து பார்த்து நம் தெளிவான மன உலகுக்கு மீண்டு விட முடியும்.
(இசைத்தட்டு சுழலும் ….)
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]
தொடர் 1 – ஐ வாசிக்க..
https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/
தொடர் 2 – ஐ வாசிக்க..
https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/
தொடர் 3 – ஐ வாசிக்க…
https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/
தொடர் 4 – ஐ வாசிக்க…
https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/
தொடர் 5 – ஐ வாசிக்க..
https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/
தொடர் 6 – ஐ வாசிக்க..
தொடர் 7 – ஐ வாசிக்க..
தொடர் 8 – ஐ வாசிக்க..
தொடர் 9 – ஐ வாசிக்க..
தொடர் 10 – ஐ வாசிக்க..
தொடர் 11 – ஐ வாசிக்க..
https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/
தொடர் 12 – ஐ வாசிக்க..
தொடர் 13 – ஐ வாசிக்க..
தொடர் 14 – ஐ வாசிக்க..
தொடர் 15 – ஐ வாசிக்க..
தொடர் 16 – ஐ வாசிக்க..
அருமை Sir. தங்களுக்கு இசைப்பார்வையும் சமூகப்பார்வையும் எப்படி வந்தது என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள். Sir. பூமி தன்னை நம்ப வில்லை மாறுமா பசி தீருமா.. அற்பதம். பரமசிவன் கழுத்திலிருந்து.. பாடலை ரசித்தவிதம் அருமை. முக்கியமாக கட்டுரையின் கடைசிப்பத்தி.. மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றியது. மிக்க நன்றி. Sir.
பரமசிவன் கழுத்திலிருந்து பாடல் மனதில் அலையாய் ஓட விட்டீர்கள். அற்புதம். உங்கள் பள்ளி பாடல் அனுபவங்கள் புதிதான ஆச்சர்யம்.
டி.எம்.எஸ்., அவர்களின் ரசிகன் தான் நான். ஆனாலும் தாங்கள் குறிப்பிடும், உணர்வு. உணர்ச்சி, குழைவு என ஒவ்வொரு சொல்லையும் குறிப்பிட்டுத் தாங்கள் சுட்டிக்காட்டியவுடன், மனதிலே அந்தப் பாடல் புதிய பரிணாமம் அடைந்து, முன்னிலும் இனிமையாய் தென்றலாய் வருடுகிறது.
நன்றி ஐயா
சட்டென அருவியாக விரைவாக
விழுந்து ஒட்டமெடுக்கிறது இசைத் தட்டிலிருந்து சுழலும் வேணுகானம். எழுதுபவரின் படிமங்கள் வேறிருந்தாலும்…வாசகனின் மனதில் வேறு வடிவங்கள் படைக்கின்றன வேணுவின் எழுத்துக்கள். அக்கார்டியன் பற்றி படிக்கும்போது அக்கார்டியனோடு மேடையில் தோன்றிய பேராசிரியர் லெஸ்லீ இப்போதும் மனம் நிறைந்து விட்டார் வேணுவின் இசைமிகு ஓசையில்…
ஒவ்வொரு பாடல்களின் பிண்ணூட்டங்களும் அருமை. பரமசிவன் ….பாடல் இல்லாமல் இன்னிசை குழுவே. கிடையாது. எளிமையும் அர்த்தமும் பாட்டும் பாடல் வரிகளும் ஒவ்வொன்றும் ஒன்றை மிஞ்சும். நம் நண்பர் மனோகர் (Ho/hrm) மிக அருமையாக இப்பாடலை பாடுவார் .
As I said earlier in my comment, your thinking is beyond that of the singers or musicians. May be the lyricist have that kind of feelings or thoughts. I believe that you are in the same wavelength as that of the lyricist. Also the final touches in this Isai Payanam is really marvelous.
ஏர் முனையின் ஏற்றம்,பாடுவோம்,
கொண்டாடுவோம்,இன்மை நீங்கி இன்பம் பொங்கத்
தேடுவோம்,வழி
கூறுவோம்,
பொன்னை நம்பி
வாழ்வதுவே போதுமா,
வாழப் போதுமா,
பூமி தன்னை
நம்ப வில்லை
எனில் பசி தீருமா,
இன்பம் சேருமா என எழுப்பும் கேள்விகளின் விளக்கங்களே
வாழ்வியல் தத்துவங்கள்.
தோழர் பாலா நினைவுறுத்திய நினைவில் நின்ற மகாகவியின்
‘மங்கியதோர் நிலவினிலே’ பாடல்
பலரால் பாடப்பட்ட விவரங்கள் பலரும் அறியாததே.தங்கள் ஆசிரியர் இராமலிங்கம் அவர்களையும் நினைவுறுத்தியது அப்பாடல் நன்றி.
ஆம், தலைமுறைகளைக் கடந்து உயிரோட்டமாக உலவும் ‘அமைதியான நதியினிலே‘ பாடல் எங்கே நிம்மதி என்று தேடுபவர்களுக்கு அருமருந்தல்லவா?
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்புகேட்டது, கருடா செளக்கியமா‘ பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
வள்ளல் பச்சையப்பர் புகழ்
வாழிய!வாழிய!
வாழியவே!
பாடல் பாடி முதல் பரிசு பெற தூண்டிய தங்களது ஆசிரியர்
டிசிபி அவர்களை நினைவில் நிறுத்துவதும் இசைதானே.
சரியாகச் சொன்னீர்கள் “அலை நீளம் தட்டுப்படும் போது” அவரவர் சூழ்நிலைக்கேற்றபாடல்கள் கேட்கத் தொடங்கி விடும். அனைவருக்கும் நன்றி கூறி எஸ் வி வி அவர்களின் இசை ஆராய்ச்சி பயணம் தொடர நல்வாழ்த்துக்கள்.
குறித்த விவரங்கள் பாடியவர்கள் புதிது,தங்கள் ஆசிரியர்
ஏர் முனையின் ஏற்றம்,பாடுவோம்,
கொண்டாடுவோம்,இன்மை நீங்கி இன்பம் பொங்கத்
தேடுவோம்,வழி
கூறுவோம்,
பொன்னை நம்பி
வாழ்வதுவே போதுமா,
வாழப் போதுமா,
பூமி தன்னை
நம்ப வில்லை
எனில் பசி தீருமா,
இன்பம் சேருமா என எழுப்பும் கேள்விகள் வாழ்வியல் விளக்கங்கள் அன்றோ?
தோழர் பாலா நினைவுறுத்திய நினைவில் நின்ற மகாகவியின்
‘மங்கியதோர் நிலவினிலே’
பாடலை பல பெரும் பாடகர்கள் பாடிய விவரங்கள் பலருக்கும் புதிது,தங்கள் ஆசிரியர் இராமலிங்கம் அவர்களை நினைவுறுத்திய இசைக்கு நன்றி.
ஆம், தலைமுறைகளைக் கடந்து உயிரோட்டமாக உலவும் ‘அமைதியான நதியினிலே‘ பாடல் எங்கே நிம்மதி என்று தேடுபவர்களுக்கு அருமருந்தல்லவா?
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்புகேட்டது, கருடா சௌக்கியமா‘ பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
வள்ளல் பச்சையப்பர்‘ புகழ்
வாழிய!வாழிய!
வாழியவே!
சரியாகச் சொன்னீர்கள் “அலை நீளம் தட்டுப்படும் போது” அவரவர் சூழ்நிலைக்கேற்ற
பாடல்கள் கேட்கத் தொடங்கி விடும். அனைவருக்கும் நன்றி கூறி,எஸ் வி வி அவர்களின் இசை ஆராய்ச்சி பயணம் தொடர நல்வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு வாரமும் நம் இளமைக்கால பாடல்களுடன் இவ்வளவு ஞாபகமாக எப்படி அய்யா எழுதுகிறீர்கள். பரமசிவன் கழுத்தில்… பாடலுக்கு விளக்கம் அருமையிலும் அருமை.
Good
உங்கள் கட்டுரையைப் படிக்க வேண்டும். பிறகு பாடல்களைக் கேட்க வேண்டும். மீண்டும் உங்கள் கட்டுரைக்கு மீண்டும் வரவேண்டும் என்று நினைப்பேன். முதல் இரண்டும் நடக்கும். மூன்றாவது நடக்காது. உங்கள் பள்ளிப் பாடல் எங்கள் சாத்தூர் ஆ.வை.உயர்நிலைப்பள்ளிப் பாடலை நினைவு படுத்திவிட்டது. வைப்பாற்றின் வடகரை சோலை அதில் வைகின்றதெங்கள் பாடசாலை என்று ராகமாகப் பாடுவோம். அதேபோல் ‘வாழிய வாழிய நற்றமிழர்’ என்ற பாடலையும் நினைவுபடுத்துகிறது. முழுப்பாடலும் தெரியவில்லை.
இசைக் கருவிகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது இசை அமைப்பாளர்களின் திறமையாகும்.
சலீல் சௌத்திரி என்ற வங்காள இசைஅமைப்பாளர் பாடல்களுக்கு இசை அமைப்பதில் அதிகம் மெனக்கெடுவாராம்.
’நெல்லு’ மலையாளப் படத்தில் வரும் ஒரு பாடலுக்கு இசை அமைத்திட மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
பழங்குடி மக்கள் யானையை விரட்டிட மரத்தின் மீதமர்ந்து இசையுடன் (டிரம்) கூடிய ஒரு பாட்டுப் பாடுவார்களாம்.
இதனை நேரில் கேட்க வேண்டும் என்பதற்காக சலீல் சௌத்திரி காட்டிற்குள் மூன்று இரவுகள் காத்திருந்தாராம்.
சலீல் சௌத்திரி போன்ற இசை அமைப்பாளர்களின் அர்ப்பணிப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
நீங்கள் எழுதிவருவது போல் இசை எனும் இன்ப வெள்ளத்தில் நாம் நீந்தி மகிழலாம்.
ஆனால் அதற்காக இசை அமைப்பாளர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடும், ஆர்வமும் அளப்பரியது.
தொடருங்கள் தோழரே! உங்களின் அற்புதமான கட்டுரைத் தொடரை. இசையால் இணைவோம்!
மிக அருமை