புத்தகக் கண்காட்சி நீடூழி வாழ்கசென்னை புத்தகக் கண்காட்சியே இன்னுமொரு நூற்றாண்டு இரும் என்று வாழ்த்திக் கொண்டாடிக் கூத்தாடுகிறோம்இருங்கள், சொல்கிறேன், சொல்லி விடுகிறேன்இந்தப் பேரானந்த வெளிப்பாட்டுக்கு என்ன காரணம் என்று சொல்லாமலா போய்விடுவேன்!

ஒரு புத்தகக் கண்காட்சிக்கு மனிதர்கள் பல்வேறு காரணங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகளோடு செல்கின்றனர். எந்தத் திட்டமிடுதல் இல்லாமலும் போய்வருகின்றனர். இன்னின்ன புத்தகம் தேடுவோர் மட்டுமல்ல, இன்னின்னாரை அங்கே பார்த்துவிட வேண்டும் என்றும் உள்ளே நுழைகின்றனர். பல காலம் தேடி அலைந்து கிடைக்காத புத்தகத்தைப் பார்த்த மாத்திரத்தில் அப்படியே உற்சாகக் கிளர்ச்சியில் திணறிப்போகும் இன்பம் வேறு காரணத்தாலும் விளையும் இடம் தான் ஒரு புத்தகக் கண்காட்சி. வேறு கற்பனைக்குச் சென்றுவிட வேண்டாம். 1975ல் எஸ் எஸ் எல் சி தேர்வுக்குப் பின்னர் பள்ளிக்கூடத் தோழனை மிக தற்செயலாகப் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்,  ‘பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி, பேச மறந்து சிலையாய் இருந்தால் …’ என்பது காதலுக்கு மட்டும் தானா, நட்புக்கும் இலக்கணம் தானே!

Image
என் வகுப்புத் தோழன் ரவி

ரவிக்கும் அப்படித் தான் மகிழ்ச்சி பொங்கியது, பச்சையப்பன் பள்ளியில் பயின்று பிரிந்தவர் கூடினால், பேசவும் வேண்டுமா என்று அப்போது உணர்ந்த புளகாங்கிதம் அவருக்கு, இசை வாழ்க்கை 17 வாசித்ததும் பன்மடங்கு ஆகியிருந்தது அவரது அழைப்பில் தெறித்தது. கிறிஸ்டோஃபர் பத்மசிங் அவர்கள் பெயரைப் பார்த்ததும், அவருக்குப் பள்ளி வாழ்க்கையின் ஏராளமான செய்திகள் நினைவுக்கு வரத்தொடங்கிய தருணம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. வரிசையாக எத்தனை எத்தனை ஆசிரியர்களது பெயர்கள், அவர்களது தனித்துவ குணாதிசயங்கள் எல்லாம் திணறத் திணற சொல்லிக் கொண்டே சென்றார். அந்த அலைநீளம் அவருக்குத் தட்டுப்பட்டு விட்டது, அவருக்குப் பிடித்தமான பாடல்கள் அவருக்குள் ஒலிக்கத் தொடங்கி விட்டிருந்தனஅது தான் வாழ்க்கையின் பெருங்கருணை

வித்துவான் சம்பந்த முதலியார், மேசையின் மீதேறி அமர்ந்து கொண்டு பாடம் நடத்துவார், நாற்காலியில் அல்ல. வெண் கதரில் சட்டை, வேட்டி, மேலே வெள்ளை அங்கவஸ்திரம் கழுத்தைச் சுற்றிச் சுழல அந்தத் தமிழாசிரியர் என் கதாநாயகர்களில் ஒருவர் அந்நாளில். சேக்கிழாரின், அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும் என்பெரும் உலகை எய்தி என்ற செய்யுளை இசைப் பாடலாக இழைத்துப் பாடியபடி, இரு நிதிக் கிழவன் தானே என்று இழுத்து, இரு நிதிக் கிழவன் யார் என்று வினவுவார், குபேரன் என்று பதில் சொன்னால், அதுதான் எப்படி என்று கேட்டுவிட்டு, சங்க நிதி, பதும நிதி என்று இரண்டு பெருங்குவியல் நிதிக்கு சொந்தக்காரக் கிழவன் தான் குபேரன் என்று கண்களில் மின்னல் தெறிக்க விளக்குவார், எப்படி அய்யா மறக்கும், அப்படியான வகுப்புகள்!

மதிவாணன் அவர்களும் சிலிர்ப்போடு அழைத்து, அதே பச்சையப்பன் பள்ளியின் மாணவன் நான், அது மட்டுமல்ல, பிறகு ஓராண்டு அதே பள்ளியில் பி.டி. உதவியாளராக ஆசிரியப் பணியும் மேற்கொண்ட பிறகே இந்தியன் வங்கியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றேன் என்றார். என்னின் சில ஆண்டுகள் மூத்தவர்டி சி பி அவர்களைக் குறித்த நினைவலைகள், இவரது வாழ்க்கையின் பின்னணி இசைக் கருவிகளை மீட்டி விட, மீட்டெடுத்து இன்புறுகிறார் தமது பள்ளிக்காலத்தை. அவரவர் பச்சையப்பர்களை நினைவில் கொண்டாடி மறுமொழி அனுப்பிய அன்பர்களுக்கும் சேர்த்தே இந்த இருவருக்குமான நன்றி பதிவாகிறது.

Genius Of MSV Part 1: Why Old Songs Will Melt Cold Hearts

ப்போது முதல் பரிசு கதைக்கு வருவோம். பதினோராம் வகுப்பில் பாட்டுப் போட்டியில் நமக்கான பரிசை எப்படியும் டி எம் எஸ் தான் வாங்கித் தர முடியும் என்பதால், சோதனையை எதிர்கொள்ள சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று அவரைத் தான் அழைக்க, தங்கப் பதக்கம் இல்லை என்றாலும் நெஞ்சில் தங்கும்  பதக்கமாக  முதல் பரிசு கிடைக்கவே செய்தது. மெல்லிசை மன்னர் மன்னர்தான். கவிஞர் கவிஞர்தான்!

சில பாடல்கள் எங்கோ கேட்கத் தொடங்கும்போதே அதன் உணர்வில், கதையின் தாக்கத்தில் சட்டென்று போய்ப் பொருந்திவிடுகிறது மனம். பிறகு அதன் கட்டுப்பாடு அந்தப் பாட்டிடம் போய்ச் சரண் அடைந்து விடுகிறது! அதன் இசையில், இசைக்கருவிகள் தூண்டிவிடும் விழி நீர்ப்பெருக்கில், பாடல் வரிகள் தன்வயமாகி அந்தக் காட்சிக்குரிய உணர்ச்சியில் ஊஞ்சலாடத் தொடங்குகிறது உள்ளம். சிவாஜியின் உருவம் மட்டுமா, புருவமும் உயர்ந்து நடிக்கிறது,  திருத்தமாகக் காட்சியளிக்கும் அந்த மிடுக்கான முகத்தில்!

கையறுநிலையை அசாத்தியமான துயரத்தில் தோய்த்தெடுத்துக் குரலில் அதை முழுமையாகக் கொண்டுவரும் பாங்கினை, டி எம் எஸ் எண்ணற்ற பாடல்களில் வெளிப்படுத்தியவர். ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே‘ (சதாரா) ஒன்று போதாதா…’, அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை‘ (அன்னையின் ஆணைபாடலின் தொகையறாவானபத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்‘ என்ற ஒற்றை வரி போதாதா, ‘தேவனே என்னைப் பாருங்கள்‘ என்ற ஞான ஒளி எத்தனை காலமாக வீசிக் கொண்டிருக்கிறது!

ஆனால், யாருக்கும் அசைந்து கொடுக்காத ஒரு காவல் துறை அதிகாரியின் சீருடையைப் பிடித்துச் சீண்டி விளையாடிவிடும் வாழ்க்கையின் போக்கில், சுமை தாங்கியே சாய்ந்து, மணி தீபமே ஓய்ந்து விட்டபிறகு உடைந்து நொறுங்கும் மனத்தின் சின்னச் சின்னத் துகள்களைக் கைகளால் தொட்டு உணர்ந்து கலங்கி வெடிக்கும் பாடல் தான் சோதனை மேல் சோதனைகம்பன் கவியில் உள்ளாழ்ந்து பெற்றுக்கொண்ட சந்தம் செலுத்துகிறது கண்ணதாசனின் எழுதுகோலை

https://www.youtube.com/watch?v=i2_uKP1KZ2A

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று மிகவும் சுயகழிவிரக்கத்திலிருந்து டி எம் எஸ் குரல் வெளிப்படும் அதே நேரத்தில், அதைக் கைத்தாங்கலாகப் பற்றிக் கொண்டு பரவும் வயலின் இசை அந்தத் துன்ப நதியில் வாகாக நடத்திச் செல்லத் தயாராக்குகிறது பாடுபவரையும், கேட்பவரையும் ! தபலாக்கட்டுகீழே விழாதபடி அரவணைத்துக் கொண்டு உடன் நடக்கிறது. புல்லாங்குழல் தலைக்கு மேலே தொடும் தூரத்தில் மென்மையாகச் சிறகடித்துப் பறந்து உடன் வருகிறது ஆதரவாக

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்லஎன்ற வரிக்கு அடுத்து, ‘நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்லஎன்று எடுக்கையில் சின்னதாக ஷெனாய் தான் ஒலிக்கிறது என்று தோன்றுகிறது. பரிகாரம், அதிகாரம் என்ற சொல்லடுக்குகள் எத்தனை பொருத்தமாக வந்து விழுகின்றன. ‘ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவன் அல்ல, அந்தத் திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்லஎன்று எத்தனை அநாயாசமாக கதைக்கருவை ஒரு கவிஞன் எழுத முடிகிறது

அடுத்த சரணத்திற்குமுன் மருமகள் பேசும் வசனம் பாடல் ரசிகர்கள் மறவாமல் கேட்டுக் கேட்டு உருகிய காலம் ஒன்றிருந்தது. எந்த நிலையிலும் உடையாத, இடியாத மனிதர்கள் சமூகத்தில் எல்லோரையும் ஆற்றுப்படுத்தும் வண்ணம் இப்போதும் வாழ்வதன் வெளிச்சம் அந்த வசனத்தில் வெளிப்படும்

அடுத்துப் புறப்படும்  ‘தானாடாவில்லையம்மா சதையாடுது, அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுதுஎன்ற மாத்திரத்தில் புறப்பட்டு அலை அலையாய் நெளியும் புல்லாங்குழல், அடுத்த வரிகளில் வரவிருக்கும் ‘பூவாக வைத்திருந்த மனத்தில் பூநாகம் புகுந்து கொண்டதைமுன் கூட்டியே உணர்த்துவதாக இசைக்கிறது. அடி தாங்குவதும், இடி வீழ்வதும், மடி ஓய்வதுமாகப் பாடல் சோகச் சுவையில்  இன்றும் கேட்போரை நெகிழ வைத்துக் கொண்டிருக்கிறது

தங்கப் பதக்கம் கதையை மறுவாசிப்பு செய்தால், ஒற்றைக் குழந்தையாக வளர்வதில் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இளவயதில் முரட்டுத் தனத்தை மென்மையாகத் திருத்தாமல் செலுத்தும் முரட்டுத்தனம், குடும்பத்திலிருந்து விலக்கி வைத்துத் திருத்தப் பார்த்தல், அதன் எதிர் உளவியல், எந்தப் பக்கமும் நிற்கமுடியாமல் திண்டாடும் தாய்மனம், பின்னர் மருமகள்ஒருபோதும்  யாருக்கும் நிம்மதியற்றே நகரும் வாழ்க்கை என்ற அனைத்தும் சமூகத்தின் பிரச்சனையாக இல்லாது தனி ஒரு குடும்பத்தின் பிரச்சனையாக, கடமை தவறாத அதிகாரி பாத்திரத்தை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்ட வலுவான திரைக்கதையின் (வேறு யார், பின்னர் திரையில் மேலும் சாதனைகள் படைத்த மகேந்திரன்!) தன்மை ரசிகர்களை மிக இலகுவாகக் கவ்விப்பிடித்து விட்டது. அதில் பின்னணி இசையும், பாடல்களும் ஆற்றியுள்ள பங்களிப்பு மகத்தானது.

Padmabhushan Dr.P.Susheela: பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய பாடல்கள்

சை, கதையை முன்னும் பின்னும் நகர்த்திக் கொண்டு போகிறது. பாடல்கள் ஒன்றரை பக்க வசனத்தில் சொல்லத்தக்க செய்திகளை ஒன்றிரண்டு வரிகளில் அசாதாரணமான வகையில் சொல்லிவிட்டுப் போய்விடுகின்றன. சில பாடல்கள் இசைத்தட்டு ஒலித்து ஓய்ந்தபின்னும் நமக்குள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. நம்மோடு உறங்கி நமக்குமுன் கண் விழித்து உட்கார்ந்து நம்மை எழுப்பியும் விடுகின்றன. பேஸ்ட் பிரஷ் எடுத்துக் கொண்டு வாய் கொப்புளிக்கத் தொடங்கும்போதே அந்தப் பாடலின் இசை தொடங்கி, அதே மெட்டில் நம்மைப் பல் தேய்க்க வைக்கவும் செய்கின்றன. நடன மெட்டுக்கள், குறிப்பாக உள்ளத்தில் மேடை போட்டு கதை மாந்தர்களை அரங்கேற்றி விட்டபின், அந்த நடனம் வாரம் முழுக்க நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

பி சுசீலாவும், எஸ் ஜானகியும் இணைந்து வழங்கி இருக்கும் சிறப்பான இசை சிற்பம் அந்தப் பாடல். கே வி மகாதேவன் அவர்களது கலைக்கூடத்தின் இசை நெசவு அது. ஆலாபனைகள், சங்கதிகள், மொழியின் அழகை மேலும் நளினமாக அழகூட்டும் வேலைப்பாடுகள் என காலத்தை வென்ற பாடல் அது. அடிமைப் பெண் படத்திற்கான அந்தப் பாடல், அவிநாசி மணி அவர்கள் அற்புதமாகப் புனைந்தது. தனது படத்திற்கான பாடல்கள் உருவாக்கத்தில் எம் ஜி ஆர் எத்தனை கவனம் செலுத்துவார் என்பது அதிகம் பேசப்பட்டிருப்பது. ஓயாமல் உழைப்பதில் சூரியன் நீ, ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ என்பது எத்தனை நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது! இன்னும் இன்னும் எத்தனையோ செய்திகள் பாடல் முழுவதும்…..

பாடலைப் பற்றி எழுத்துமுன் உண்மை ஒன்றைச் சொல்ல வேண்டியுள்ளது. வானொலியில் எத்தனையோ முறை கேட்டிருந்தாலும், மிக அண்மையில்திரை இசையோடு நாம்என்ற வாட்ஸ் அப் குழுவில், நண்பர் ரமேஷ் அவர்கள் பதிவிட்டதும் இதன் மீதான ஈர்ப்பு பன்மடங்கு கூடிவிட்டது. காரணம், அவர் பகிர்ந்தது, திரையில் வந்த பாடலை அல்ல, மேடையில் வேறு இருவர் பாடியதன் காணொளிக் காட்சிஉஷா ராஜ், ஜெயஸ்ரீ  என்ற இருவர் அத்தனை அசத்தலாகப் பாடிய இசை உள்ளும் புறமும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீஎன்ற பல்லவி எப்படி உருவானது தெரியாது, ஆனால், பாடல் முழுவதும் பல்லவி வரிகள் எத்தனை எத்தனை முறை திகட்டாமல் திரும்பத் திரும்ப இடம் பெறுகின்றன! ஒவ்வொரு முறையும் அதில் எத்தனை எத்தனை நகாசு வேலைகள், அந்தநீஎன்ற இழைப்புக்குள் மட்டுமே எத்தனை விதமான கனவுகளும் கற்பனைகளும் மிதக்கின்றன! வேதனை தீர்த்தவன், விழிகளில் நிறைந்தவன் என்று சம தளத்தில் நடைபோடும் பாடகியரின் குரல், வெற்றித் திருமகன் நீ என்னும்போது போடும் துள்ளல் திரை இசைத் திலகத்தின் முத்திரை இடம். ஒன்றா இரண்டா முத்திரைகள், பாடல் முழுவதும் கொட்டிக் கொட்டிக் கிடக்கின்றன.

நடந்தால் அதுவும் ராஜ நடைஎன்ற முதல் சரணம் இரண்டாம் முறை ஒலிக்கும்போது அந்தஅதுவும்‘ என்ற சொல்லின் கடைசி எழுத்தில் தெறிக்கும் அழுத்தம், ஆஹா என்றால், ‘போர்க்களத்தில் நீ கணையாவாய்என்ற வரியின் கணை, காதல் கணையாகக் கொஞ்சும்! ‘பூவைக்கு ஏற்ற துணையாவாய்என்பதை உச்சரிப்பதில்லை, மலராகப் பொழிவார் ஜானகி

பி.சுசீலா நலமுடன் இருப்பதாக தகவல் | தினகரன்

அவர் பல்லவியில் கொண்டு நிறுத்தும் அதே வேகத்தில் ஆலாபனையோடு வந்து இணையும் சுசீலா, ‘அழகாகஎன்று எடுக்கும் இரண்டாம் சரணம்  அமுதச் சுவை மிகுந்தது. ‘வேங்கையின் மைந்தனும் எனக்காகஎன்ற இரண்டாம் வரியை இரண்டாம் முறை பாடும்போது ‘எனக்காகஎன்ற சொல்லின் விரியும் சங்கதிகள்…. பின்னர் தொடரும் வரிகளில்சூரியன் நீ, சந்திரன் நீவந்து தெறிக்கும் சுகம், ஆஹாஆஹா… வேறொரு தளம்

விடுவாரா ஜானகிஅங்கிருந்து பற்றும் சுவாரசியமான ஆலாபனை, இலக்கு நோக்கி பந்தைத் தட்டித் தட்டிக் கொண்டே போய், ‘பாவாய்என்று தொடங்கும் சரணமும் சரி, அடுத்து, ‘சுடராகஎன்று தொடங்கும் நான்காவது சரணத்தின் தொடர்ச்சியில் விரியும் ‘தோளில் புகழ் மலைத் தொடராக, தோகையின் நெஞ்சம் மலராகஎன்ற வரிகள் நெடுக தீப்பொறி போல் பறக்கும்  சங்கதிகளும்  சரி, பாடலுக்கு வெளியே எந்த உலகை யார் இலவசமாகத் தந்தாலும் வேண்டாம் என்று மறுத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்க வைக்கும் இடங்கள் !  

மூன்றாம், நான்காம் சரணங்களில் சுசீலா வந்து இணையும் இடங்களில், அடுத்தடுத்த வரிகளில் அவரது தனித்துவக் குரலின் பரவசம் இன்னும் உயிர்ப்பாக்கும் பாடலை! நான்காம் சரணம் முடிந்து மீண்டும் பல்லவிக்கு வந்து விட்டால் ஆயிற்றா, பாடல் முடிந்து விடுமா என்ன, அங்கே தான் மாமா மகாதேவன் அவர்களது முத்திரைகள் மேலும் பளீர் பளீர் என்று தெறித்துக் கொண்டே இருக்கும்படியான விதத்தில் அற்புத பாடகியர் இருவரது வேகமான ஆலாபனை தொடங்கிச் சுழன்று சுழன்று மேலேறி உச்சத்தைத் தொடும் இடத்தில் பாடல் நிறைவுற்றாலும், நிறைந்து விடுகிறது உள்ளம் முழுவதும்!

பாடலில் இடம் பெற்ற முக்கியமான மூவருமே இப்போது இல்லை. மின்னல் வேகத்தில் பாடல் காட்சியில் நடித்த ஜெயலலிதா, ஜோதி லட்சுமி இருவருமே ஒரே ஆண்டில் (2016) மறைந்தனர்தன்னை முன்னிறுத்தும் பாடல் என்றாலும், எம் ஜி ஆர் பின்னணியில் குழந்தைகளோடும், தமது முத்திரை புன்னகையோடும் இருந்து கொண்டு பாடலின் வேகத்திற்கான நடனத்தையே முன்னிலைப்படுத்தி இருப்பது ஒரு படத்தின் உருவாக்கத்தில் கூட்டாக எடுத்துக் கொள்ளும் சீரிய முயற்சிகளை வெளிப்படுத்துகின்றன.

ந்தப் பாடலை உஷா, ஜெயஸ்ரீ இருவரும் பாடுகையில் என்ன கூடுதல் சிறப்பு என்பது, சொந்த ரசிப்பும், அடுத்தவர் பாடுவதில் லயிப்பும், ஒருமித்துப் பாடுவதில் திளைப்பும், பாடல் முழுவதைப் பாடி முடிக்கும்வரையிலும் இருவர் முகத்திலும் பொங்கும் சிரிப்பும்மூலப் பாடகியர் வழங்கிய பாடலைக் கொஞ்சமும் சிதைவுறாமல் அப்படியே மேடையில் இசைக்க அவர்கள் எடுத்திருக்கக்கூடிய பயிற்சியும்,   ரசனை மிக்க இசைக்கலைஞர்கள் கொண்டாட்டமாகப் பின்னணி இசையில் நிகழ்த்தும் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பும் தான்

இன்னார் இன்னாருக்குப் பாடுகிறார், நடிகர் வாய் அசைக்கிறார் என்பது உலக வழக்கு. பாடகர்களும் வெறும் வாயசைப்பு தான் செய்கின்றனர். அவர்கள் உள்ளத்தில் இருந்து தான் பாடல் ஒலிக்கிறது. உதடுகள் துடிக்கின்றன, ஆனால் அது உள்ளத்தின் துடிப்பு. குரல் நாண்கள் பொழியும் கீதத்தின் இனிமை உள்ளத்தில் நனைந்து புறப்பட்டு வந்தது. உடல் நலத்தைப் போலவே உள்ளத்தின் நலனும் உயிர்களுக்கு முக்கியமானது. உள்ளத்திற்கான மருத்துவர்களைத் தேட வேண்டியது இல்லை. அவர்கள் வெளியே இல்லை.

(இசைத்தட்டு சுழலும் ….)

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]

 

தொடர் 1 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – ஐ வாசிக்க…

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – ஐ வாசிக்க…

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

தொடர் 8 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-8-venugopalan-sv/

தொடர் 9 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-9-venugopalan-sv/

தொடர் 10 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-10-venugopalan-sv/

தொடர் 11 – ஐ வாசிக்க..

https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/

தொடர் 12 – ஐ வாசிக்க..

http://music-life-series-12-venugopalan-sv

தொடர் 13 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-13-venugopalan-sv/

தொடர் 14 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-14-venugopalan-sv/

தொடர் 15 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-15-venugopalan-sv/

தொடர் 16 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-16-venugopalan-sv/

தொடர் 17 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-17-venugopalan-sv/

14 thoughts on “இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்”
  1. பள்ளிக் கால நினைவுகளை அசைபோட்டு பார்ப்பதிலும், பள்ளிக் கால நட்புகளை, எதிர்பாரா விதமாய் சந்திப்பதிலும் உள்ள மகிழ்ச்சி இருக்கிறேதே, அம்மகிழ்ச்சியை , அவ்வுணர்வலைகளை தங்களின் எழுத்து, கண்முன் காட்டுகிறது. என் மனமும், என் இளமைக் கால நினைவைகளை நாடி ஓடுகிறது.

  2. நட்பில் தொடங்கி, இசையென்னும் இன்பக் கடலில் மூழ்க வைத்துவிட்டது உங்கள் எழுத்து … ருசித்து, இரசித்து, பகிர்ந்துள்ளீர்கள்.. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று.. உங்கள் இரசனை உணர்வுக்கு வணக்கங்கள்.

  3. தங்கப்பதக்கம் நாடகம் வேறு திரைப்படம் வேறு.நாடகத்தில் சிவாஜி அவர் மகன் பிறந்தநாளுக்கு ஆங்கில பாடல் பாடுவது நினைவுக்கு வருகிறது.திரைப்படத்தில் நல்லதொரு குடும்பம் பாடல்.புத்தககண்காட்சி மூலம் நண்பர் இணைந்தது அருமையான ஒன்று.

  4. எனக்கு ரசிக்க த் தான் தெரியும். அதனால் நன்றாக ரசித்தேன். சக்க போடு போடு ராஜா.

  5. பள்ளி என்பது எப்படி ஒரு மனிதனுக்கு சிறந்த அடிக்கல், அதில் ஆசிரியர்கள் சிறந்த கட்டிட கலைஞர்கள் என்று மிக அழகாக கல்வெட்டு போல் பதிவு செய்து உள்ளீர்கள். ‘சோதனை மேல் சோதனை’ பாடலை பற்றிய உங்கள் வர்ணனை அறுசுவை விருந்து என்றால், ‘காலத்தை வென்றவன் நீ’ பாடல் ஐஸ்கிரீம். பெரும்பான்மை மக்கள் மனதை படம் பிடித்துக் காட்டும் உமது எழுத்தும் இனி காலத்தை வெல்லும்.

  6. அருமை வேணு…உள்ளும் புறமும் இசையில் நனைந்து திளைக்கும் போது. மருத்துவம் எதற்கு? உங்கள் கட்டுரை அந்தப் பணியை செவ்வனே செய்கிறது எங்களை இசையில், அதன் பன்முகப் பரிமாணங்களில் திலைக்க வைத்து…
    நன்றி…

  7. அடே அப்பா….ரசனை என்பது ஒரு கொடுப்பினை. தான் அனுபவித்ததை மற்றவர்க்கும் பகிர்ந்தளிக்கும் எழுத்துக்கள் அடுத்த அற்புதமான வரம். பாடல் வரிகள் இசை கருவிகளென மிக ஆழமாகவே ரசித்திருக்கிறீர்கள். படிப்பவர் இரசனையையும் மேம்படுத்தும் விவரமான ரசனை…தட்டு சுழலட்டும்.

  8. என்ன அற்புதமாக இசையை நமக்கு கற்றுக் கொடுக்கிறார். இந்தக் குறிப்பிட்ட பாடல்களை மீண்டும் கேட்கவேண்டும் . பயன்படுத்திய கருவிகளை சொல்லியுள்ளதை கவனிக்க வேண்டும். அற்புதமான படைப்பு நன்றி

  9. வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ரசிப்பதற்கும் அதனை உயிரோட்டத்துடன் பகிர்வதற்கும் – மிகுந்த கலையுணர்வும், படைப்புத் திறனும் இன்றியமையாதன, பள்ளிப் பருவ நட்பு வட்டம், ஆசிரிய மாணவ உறவின் புனிதம், இயல்,இசை, நாடகம் நல்கும் பரவசம், புதுப்புனலின் எழுச்சி மிகு நடை என்ற பல பரிமாணங்களின் அதிர்வுகளை இசைவாழ்க்கை ஈந்தன தோழரே.

    துறவு நிலைக்குப் ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’.

    உறவுகளையும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் தருணத்தையும் ரசிக்க ‘பற்றுக பற்றுள்ளான் பற்றினை’.

    வனப்புமிகு வாழ்க்கைக்கு உங்கள் எழுத்துக்கள் அடிநாதம்.

    மா.பாரி

  10. இளமைப் பருவத்தில் அதுவும் பள்ளிப்பருவத்தில் அரும்பும் நட்புகள் இறுதிவரை நிலைத்திருக்கும்,எப்போதாவது சந்திக்கும் போது, அந்த நாட்கள் ஞாபகம்வர பள்ளி ஆசிரியர்கள் பற்றியும் சக நண்பர்களைப் பற்றியும் பசுமை நிறைந்த நிகழ்வுகள் நினைவுகள் வெளிப்படும் என்பதனை உறுதிப்படுத்துகிறது தாங்கள் நண்பருடன் எடுத்துக்கொண்ட இன்பம் பொங்கும் புகைப்படம்.
    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சம்பந்த முதலியார் போன்ற ஆசிரியப் பெருந்தகைகளை இசை வாழ்க்கையின் 
    பெருங்கருணையால் மீண்டும் மீண்டும் நினைவு கூறுவது ஆசிரியர்கள் பால் தாங்கள் கொண்டிருக்கும் மரியாதையின் வெளிப்பாடு. மதிவாணன் அவர்களும் தங்கள் இசை ஆசிரியர் டிசிபி குறித்து தகவல்களை பகிர்ந்தமை கூடுதல் மகிழ்ச்சி.
    பாட்டுப்போட்டியில்’ ‘சோதனை மேல் சோதனை போதுமடாசாமி’ பாடல் நெஞ்சில் தங்கும் தங்கப்பதக்கமாக   முதல்பரிசு பெற்று சாதனை புரிந்தது மகிழ்ச்சி,காலம் கடந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ‘ஒரு நாளும் நான் இதுபோல்அழுதவன் அல்ல, அந்தத் திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல‘ போன்ற வரிகள்
    கல்மனம் கொண்டாரையும் கரையச் செய்யும் என்று கூறி 
    பிள்ளைகளின் முரட்டுத் தனத்தைமென்மையாகத்திருத்த வேண்டும் என்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்தும் உங்கள் அணுகுமுறை போற்றுதற்குரியது.

    ‘நினைந்து நினைந்து நெஞ்சம்உருகுதே‘ இசைத்தட்டு முடிந்த பின்னும் திரைப்பட காட்சிகள் கண்முன்தோன்ற கலங்கும் மானிட கண்கள்.
     உஷா ராஜ், ஜெயஸ்ரீ இவர்கள் மேடையில் பாடிய ‘காலத்தை  வென்றவன் நீ காவியமானவன் நீ‘  பாடலை காணொளியில் ரமேஷ் அவர்கள் பார்க்க சரணம்,பல்லவி,சங்கதி, ஆலாபனையென பழுத்த இசைஞானம் கொண்டுஅலசி ஆராய என்னைப்போன்றவரும் ஏதாவது அறிந்து கொள்ள வேண்டும் என முயலச்
    செய்தமைக்கு நன்றி.
    பாடல்களை ரசித்து,சுவைத்து இன்புற்று பிறர்க்கு பகிர்ந்து வாழ்வியல் உளவியல் என வாழ்வியலுடன் ஒப்பிடும் தங்களது முற்போக்கு பார்வை வியப்பில் ஆழ்த்துகிறது,வாழ்க நிம் புலமை🙏
    விரைவில் இசை ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்👍💐🙏
    உடல் நலம் போல் உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாக தொடரட்டும் தங்கள் இசைத்தட்டு.

  11. அருமை Sir. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும். வாக்கில் மட்டுமல்ல. எழுத்திலும் தான். கட்டுரையைப் படித்தவுடன் ஒரு புத்துணர்ச்சி பரவியது போல இருந்தது. பள்ளித்தோழரை பார்த்த நிகழ்வும் பள்ளியில் பரிசு பெற்ற நிகழ்வும் கண் முன்னே தெரிகிறது. சோதனை மேல் சோதனை.., காலத்தை வென்றவன் நீ.. பாடல்களை ரசித்த விதம் அற்புதம். அதிலும் காலத்தை வென்றவன்.. மேடையில் இருவர் பாடிய காணொளியும் அதற்கான காரணமும் அருமையிலும் அருமை. Sir. மிக்க நன்றி.

  12. உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின்” கட்டுரையில் தாங்கள் எடுத்தாண்ட இரண்டு பாடல்கள் பற்றிய தங்களின் ரசனையை விவரித்த விதம் அருமை. ஆசிரியர் பற்றித் தாங்கள் குறிப்பிட்டது எனக்கு அகரம் கற்றுத் தந்த ஆசானை நினைவு படுத்தியது.

    காலை வேளையில்
    கல்விச் சாலையில்
    இவர் மட்டும்
    பூபாளம்
    வாசித்திராவிட்டால்
    நாங்கள் அத்தனைபேருமே
    முழுநேரமும்
    ‘முஹாரி’ மட்டுமே
    வாசிக்க நேர்ந்திருக்கும்.

    இந்த
    தென்றல் காற்று
    எங்கள்
    மூங்கில் மூளையை
    முத்தமிடாதிருந்திருந்தால்
    இந்தப்
    புல்லாங்குழல்கள்
    அடுப்பூதப்
    புறப்பட்டிருக்கும்.

    இந்த
    உயிரெழுத்து மட்டும்
    இங்கு
    உச்சரிக்கப்படாவிட்டால்
    இங்குள்ள
    அத்தனை
    மெய்யெழுத்துக்களுக்கும்
    அர்த்தமின்றிப்
    போயிருக்கும்.

    Thanks for the given
    Inspiration.

    அன்புடன்
    மும்மொழிக் கவிஞர் கு. பசுபதி
    ஈரோடு
    Mobile – 9442373590
    —————————————

  13. மலரும் நினைவுகளாய்…
    பாடசாலை நாட்களை
    மனதை நனைத்து தொடரும் தங்களின் எழுத்து வாழ்வில் சந்திக்கும் நிதர்சனங்களில் உடைந்து நொறுங்கும் மனத்தின் சின்னச் சின்னத் துகள்களைக் கைகளால் தொட்டு உணர்ந்து கலங்கி வெடிக்கும் பாடலை உள்வாங்கி வெளிப்படுத்தும் தங்களின் வரிகளில் புரியது வலியின் அடர்த்தி. மிக அருமை தங்களின் இசைத்தட்டு ரசனையாய் எங்களையும் சுழற்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *