சைத்திரு உயிர்த்திருஎன்ற தலைப்பில் அக்டோபர் மாதத்தில், இலக்கிய ஆர்வலர் தங்கம் சுதர்சனம் அவர்களது அழைப்பில்கடலூர் திருவள்ளுவர் தமிழ்ச் சங்க நிகழ்வில் இணைய வழியில் பங்கேற்றுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் திரை இசைப் பாடல்களும், ஒரு சில தனிப்பாடல்களும் தொட்டுப் பேசிய நிகழ்வின் நிறைவில், எழுத்தாளர் வளவ துரையன் அவர்கள் அருமையான கருத்து தெரிவித்திருந்தார். தமிழிசைப் பாடல்கள் பக்கம் செல்லாதது ஒரு குறை தான்.  எத்தனை எத்தனை கொட்டிக் கிடக்கின்றன…..

இந்தக் கொரோனா காலத்தில், வீட்டில் முடங்கிக் கிடந்த வருத்தம் ஒரு புறம். உற்ற மனிதர்கள் சிலரைப் பறி கொடுக்க நேர்ந்த சோகமும், அவர்கள் முகத்தைப் பார்க்கச் செல்ல இயலாத பெருந்துயரமும் இந்தத் தொடரோடு முன்னும் பின்னும் தொடர்வது இன்னொரு புறம்உறவும், நட்பும் வேறுவேறாகத் தெரியாது ஒத்திசைந்து உருவகமாகி நிற்கும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் வாய்ப்பது இயற்கையின் அருள் தான். ‘எடுப்பதூஉம்என்பதை மழை அதிகாரத்தில் குறளின் பின்பகுதியில் வைத்து, ‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குஎன்பதை முதலடியில் வைத்தார் வள்ளுவர். அன்பிற்கு இனிய உறவுகளைக் கொடுக்கும் இயற்கை, வாழ்வின் வேறொரு கட்டத்தில் எடுக்கும் வேலையையும் செய்து வாட்டி எடுத்து விடுகிறது. ஒருவர் சித்தி மகன். மற்ற இருவரும் இரண்டு அத்தைகளின் மகன்கள். மிகக் குறுகிய கால இடைவெளியில், எதிர்பாராத உடல் நலமின்மை இவர்களைப் பறித்துச் சென்ற பெருந்துன்பம் சொற்களுக்கு அகப்படாது

இளம்பருவத்தில் வாய்த்திருந்த வாழ்க்கை முறை, உறவுகளை நட்பைப் போல் பிணைத்திருந்தது. நட்பு உறவு போல் தழைத்திருந்தது. ராஜூ, கேசவன், ரவி என்பவை வெறும் பெயர்கள் அல்ல. அந்தப் பாலகப் பருவம் ஒரு கொண்டாட்ட காலம். விதையூன்றி, மண்ணுக்குச் செறிவூட்டி, நீர் வார்த்துச் செடியின் பசுமையைப் பார்த்தவர்கள், பின்னொரு காலத்தில் மரத்தைப் பார்க்கும்போதும் செடியைத் தான் கண்ணுறுவார்கள்பெருமழையில், புயலில், இயற்கையின் சீற்றத்தில் மரம் வீழக் கண்டவர்கள் பச்சிளம் இலைகளும், பூக்களுமாகச் சிரித்த செடியை நினைத்தே அதிகம் வெடித்தழுவார்கள்



குடும்ப சங்கம நேரங்களில் திரைப்பட வசனங்களும், இசைப்பாடல்களும், நடிப்புமாகக் களைகட்டி இருந்த பொழுதுகளின் நினைவுகள் துயர நேரத்தில் பொங்கிப்பொங்கி எழுகின்றன. கல்யாணராமன் படத்தில் மனோரமா, தேங்காய் சீனிவாசன் இருவரும் சென்னை பாஷையில் அனாயசமாக வெளுத்து வாங்கும் மனோகரா வசனத்தை  அப்படியே பேசிக் காட்டுவான் ராஜூ

அத்தை வசித்து வந்த ஊட்டி மலைக்குக் கோடை விடுமுறைக்குச் செல்கையில் மலர்க்கண்காட்சி நேரத்தில், இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சீட்டு வாங்காமலே எப்படியோ அரங்கிற்குள் அழைத்துச் சென்று உடன் அமர்ந்து ரசித்து அங்கே கவிஞர் வாலி உரையாற்றவும், அவரை எப்படியும் நேரில் சந்திக்கவேண்டும் என்று கேட்ட எனக்காக அலைந்து திரிந்து பார்த்து முடியாமல் வந்து உதடுகளைப் பிரித்துத் தவித்தவன் கேசவன்

பழைய திரைப்படமாகப் பார்த்து அழைத்துச் செல்லவே வந்ததுபோல் வேலூரிலும், ஆரணியிலும் வசித்த காலங்களில் விடுமுறைக்கு வந்து போய்க் கொண்டிருந்தவன் ரவி.  

ராஜூவின் மறைவுச் செய்தி பார்த்ததும், இயற்கை எத்தனை கொடூரமாக இருக்கிறது என்று பதில் போட்டிருந்தான் கேசவன். கேசவன் போய்விட்டானா என்று நம்ப மறுத்துக் கேட்டிருந்தான் ரவிநுட்பமாக அள்ளிப் பருகி இளைப்பாறும் இசைப் பாடல் கொண்டாடிகள் மூவருமேஇசைத்தட்டுகள் சுழன்று முடித்துவிட்டாலும், பாடல் அறிந்தவர்கள் உள்ளத்தில் இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது.



துன்பம் நேர்கையில் என்ன செய்வது, இசை பொய்த்துவிடுமா அப்போது? இல்லை, இசையில் கரைபவர்கள் தங்கள் துயரத்தை அதில் கரைக்கப் பார்க்கின்றனர். ஆனால், சமயங்களில், அதன் நுரை பொங்குகிறது. அப்போது கண்ணீர் போய்க் கலந்து நுரையைக் கரையோரம் ஒதுக்கப் பார்க்கிறது. பின்னர் நுரையைச் சுழித்தபடி ஓடுகிறது ஆறு. கரைய வைக்கும் இசை அப்போது கரையில் இருந்தவாறு ஆறு, ஆறு என்று மனத்தை ஆற்றுப் படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுக்கிறது.

இந்த நாட்களில் அப்படியாகக் கரைய வைத்த தமிழிசைப் பாடலுக்கு, அற்புத பாடகர் சஞ்சய் சுப்பிரமணியனுக்கு வணக்கம் போட வேண்டும். உள்ளபடியே, பாவேந்தருக்குச் சூட்ட வேண்டும் புகழ்மாலையை, அவரது பாடல் அது! சொல்லப்போனால், முதலில் ஒரு திரைப்படத்தில் (1951ல்) பயன்படுத்தப்பட்டது!

தமது பாடல் வரிகளைத் தமது அனுமதி இல்லாமல் மாற்றிவிட்டனர் என்று ஏற்கெனவே திரையுலக அனுபவத்தின் கசப்பில் கோபித்து வெளியேறிய பாவேந்தர், அண்ணாமலை பல்கலையில் இருக்க நேர்ந்த ஒரு தருணத்தில் அவரது நண்பர் இசைவாணர் தண்டபாணி தேசிகர் தான், பாரதிதாசனின் இரண்டு பாடல்களை எடுத்து மெட்டுப் போட்டு உரிய ராகத்தில் பாடினால் எப்படி இருக்கும் என்று இசைத்துக் காட்டி அசத்தியவர். அவர் இசையமைத்த அதே தேஷ் ராகத்தில் திரையிலும் ஒலிக்கும் என்ற உறுதிமொழியோடு தான் துன்பம் நேர்கையில் பாடல் இடம்பெற இசைந்தாராம் பாவேந்தர்

ஓர் இரவு நாடகத்தைப் பார்த்த எழுத்தாளர் கல்கி, அறிஞர் அண்ணாவை, தென்னாட்டு பெர்னாட்ஷா என்று வருணித்தாராம். அந்த நாடகம் அண்ணாவின் ஆக்கத்திலேயே திரையில் வெளியான போது, அதில் மகாகவி மற்றும் பாவேந்தர் பாடல்கள் இடம் பெற்றது சிறப்பம்சம்அற்புதமான இசையமைப்பாளர் ஆர் சுதர்சனம், இந்தப் படத்திற்காக வழங்கி இருக்கும்  பாடல்கள் என்றும் இனிப்பவை.  வழுவூர் ராமையா அவர்கள் நாட்டிய பயிற்சி அளித்தது கூடுதல் சிறப்பு. எம் எஸ் ராஜேஸ்வரி, வி ஜே வர்மா இருவரும் பாடி இருக்கும், ‘துன்பம் நேர்கையில்‘, பாவேந்தரின் அற்புதமான இசைப்பாடல்திருவாங்கூர் சகோதரிகள் மூவரில் ஒருவரான லலிதா, நாகேஸ்வர ராவோடு இணைந்து நடித்த இந்தப் பாடல் காட்சியில் நடனமும் நிகழ்த்தி இருப்பார்





எம் எஸ் ராஜேஸ்வரி, வி ஜே வர்மா இருவரும் பாடி இருக்கும், ‘துன்பம் நேர்கையில்‘, பாவேந்தரின் அற்புதமான இசைப்பாடல்.  எத்தனை இனிமையாகப் பாடி இருப்பார்  ராஜேஸ்வரி…  அதிலும், ‘மாட்டாயாஎன்ற பதத்தின் சங்கதியில்  வர்மா நிகழ்த்தும் உரையாடலும், ‘கண்ணேஎன்ற இடத்தில், ஆஹாஅந்த இடம் தான் அற்புதமானது என்று காதல் ததும்பத் தொடர்வதுமாகப் பாடல்  அருமையாக ஒலிப்பது. ‘வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலேஎன்றெடுத்து, ‘வாழ்வின் உணர்வு சேர்க்கஎன்ற கட்டத்தை அடைந்து, ‘நீ அன்றை நற்றமிழ்என்று அருமையான உச்சரிப்பில் அமுதம் பொழிந்து, ‘கூத்தின் முறையினால்என்று வகைப்படுத்தி, ‘ஆடிக்காட்ட மாட்டாயாஎன்று ஏக்கம் தெறிக்க என்னமாகப் பாடுகிறார் ராஜேஸ்வரி…..

ப்போது, சஞ்சய் சுப்பிரமணியன் கச்சேரிக்குச் செல்வோம்தமிழிசை வரிசையில் அருமையான பாடல்கள் சிலவற்றை, சஞ்சய் பாடுவது, நெஞ்சை வருடிக் கொடுக்கிறது

ஊசி வழி செலுத்தப்படும் மருந்து, நெருப்பு போல பற்றிக்கொண்டு பின்னர் சீராக நரம்புகளில் பரவி உட்புகுந்து இலேசான மயக்கத்தில் ஆழ்த்தியவாறு வலியைத் தணித்து எழுந்து உட்கார வைத்துச் சுற்றி இருக்கும் சொந்தங்களிடம், ‘ஒன்றுமில்லை எனக்கு, இப்போது பரவாயில்லை, கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்கிறேன், போய் உங்கள் வேலையைப் பாருங்கள், எனக்கு இப்போதைக்கு எவ்வளவோ தேவலைஎன்று சொல்லத் தோன்றுவது இல்லையா, பின்னர் எல்லோரும் நகர்ந்த பிறகு, அந்த அன்பை நினைந்து, தன்னை மறந்து கண்ணீர் பெருகுவது இல்லையா….என்ன வந்தாலும் சரி, பார்த்துக் கொள்ளலாம் என்று இந்த வாழ்க்கையின் மீது மீண்டும் காதல் தொடர்வது இல்லையாஅப்போது வெளிப்படும் கண்ணீரின் தன்மை வேறு அல்லவா…. அப்படி உணரவைத்தது, சஞ்சய் அவர்களது துன்பம் நேர்கையில்திரும்பத் திரும்பக் கேட்கும் போது….





ஒரு விவசாயி பயிரிட்டு அறுவடை செய்து அம்பாரமாகக் கொட்டிக் காய்ச்சல் பார்த்துக் கையள்ளி ஒரு சேர அதைக் குமுக்கி உமி அகற்றி ஊதி அரிசியைச் சுவைத்து உற்சாகமாகத் தலையை ஆட்டுவது போல், சஞ்சய் அவர்கள்பாவேந்தர் தமிழைக் கொண்டாடிக் கொண்டாடித் தமது தொண்டையில் அள்ளியள்ளிப் போட்டு உதடுகளால் ரசித்து ரசித்துப் பரிமாறும் அழகு என்னவோ செய்கிறது

ஒவ்வொரு முறையும் சங்கதிகளால் சொற்களின் அழகை விரித்துக் கொண்டு போய், அதன் கம்பீரத்திற்கு ஏற்பத் தமது உடல் மொழியும் இன்னொரு பக்கவாத்தியமாக இயங்க, அருகே மிருதங்கக் கலைஞரிடமும், வயலின் கலைஞரிடமும் புன்னகை ததும்பும் கண்களால் உரையாடல் நிகழ்த்தியபடி இந்தப் பாடலை அவர் இசைக்கும் விதம்…..ஆஹாஆஹா… 

தமிழ் இறையனாரின் திருக்குறள்‘ என்ற இடத்தில், சாட்சாத் வள்ளுவர் அருகே வந்து அமர்ந்து கேட்டாற்போல் தெறித்தது. அந்தக் ‘கண்ணேமாத்திரம் என்னவாம்ஆஹா….கண்ணுக்குக் கண்ணாக அதனைப் பொன்னாக மாற்றித் தகத்தகாயம் செய்துவிடுகிறார் சஞ்சய். அப்புறம் அந்த ஸ்வர சஞ்சாரத்தில், அவர் கொடுக்கவயலின் கலைஞர் அப்படியே வாங்கித் திரும்பி மறுமொழி கொடுக்கவிட்ட இடத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து பல்லவியில் கொண்டு முடித்துக் கண்ணே என்று உச்சத்தில் முடிக்கும் இடம், ஆஹா….  தொடக்கத்தில் பூத்த புன்னகை மலர்ந்தது மலர்ந்த வண்ணம் நிறைவு செய்யவும், அவரை வந்தடையும் உரத்த பாராட்டுக் கரவொலியை மெலிய கூச்சம் நிறைந்த முறுவலோடு ஏற்றுக் கொள்ளும் இடத்தில்….என்ன சொல்ல!

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா‘ என்ற வரிகளை எப்படித்தான் எழுதினாரோ கனக சுப்புரத்தினம்? பாடல் முழுவதுமே தமிழுக்கும் அமுதென்று பேர் என்று உணரவைக்கும்!

பாடல் வரிகளும், இசையும், குரலுமாக ஒரு சேர ரசித்துக் கேட்கும் அனுபவங்கள் இப்போதும் தொடரவே செய்கின்றன

கவிஞர் தாமரையின் பாடல்கள், அவற்றின் இலக்கிய சொற்களுக்காக எப்போதும் தனி கவனம் பெறுபவை. தர்புகா சிவா எனும் புதியவர் இசையில் உருவான ஒரு பாடல் (எனை நோக்கிப் பாயும் தோட்டா), புல்லாங்குழலில் எழுதப்பட்ட கவிதை. மிக வித்தியாசமான குரலினிமையில் ரசிகரைக் கவரும் சித் ஸ்ரீராம் அந்த இசைமீது ஒரு கொடி போலப் படர விடுகிறார் குரலை.





பல்லவியின் முதல் சொல்லே பாடல் புனைவில் செலுத்தப்பட்டிருக்கும் படைப்பு மனத்தை எடுத்து வைக்கிறது. காதல் குழைவை இன்னும் எப்படியெல்லாம் சொற்களுக்கு அப்பால் காட்சிப்படுத்துவது என்ற தேடலில் விளையும் சொற்களில் உருகி ஓடுகிறது பாடல். அதை ஏந்திக்கொண்டு அதற்கு முன்பாக விரைகிறது குழலிசை. அதனோடு  நெருக்கமான கோட்டில் பாகாய் இளகி மின்னி வருகிறது பாடகர் குரல்

மறுவார்த்தை பேசாதேஎனும் காதலன் அடுத்துமடி மீது நீ தூங்கிடுஎன்று தாலாட்டும் இடத்தில் தொடங்கும் அதே கதியில், அதே தளத்தில் அதிராத வகையில் சுழலத் தொடங்குகிறது பாடல்

மனப்பாடமாய் உரையாடல் நிகழும்‘ , ‘பிரிந்தாலும் என் அன்பு பொய் இல்லையே‘, ‘விழியோரம் தானே மறைந்தாய்போன்ற சிறப்பான வரிகள் பாடல் முழுவதும் !  ‘பிடிவாதம் பிடி, சினம் தீரும் அடிபோன்ற இடங்கள் பரஸ்பர புரிதலின்  ருசியான பிரதிபலிப்புகள்

ஆற்றுப்படுத்தும் தருணங்களில் காதல் தோற்றுவிடாது மேலும் ஆழப்படுத்திக் கொள்கிறது அன்பை. மறுவாசிப்பு போல பின்னோக்கி சரிபார்த்துக் கொள்ளும் மனங்கள் பேச முடியாத போது, ‘இமை தாண்டக்கூடாதென விழி நீர் வீணாகி விடாது கண்ணுக்குள் கடலாக‘ சேகரமாகி விடுகிறது. அந்தக் கண்ணீர் பளிங்காகத் துடைத்து விடுகிறது சோர்வான மனங்களைகுழலைக் கேட்கையில் குரலாகவும், குரல் ஒலிக்கையில் குழலிசையாகவும் பரவும் ராக ஆலாபனை, பாடல் முடிந்தபின்னும் ஒலிக்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறது

ஆர் ரஹ்மான் இசையில் முதல் வாய்ப்பாகப் பின்னணிக் குரலாக அறிமுகமாகிஇளம் தலைமுறை ரசிகர்களை ஈர்த்துவரும் சித் ஸ்ரீராம், இளையராஜாவின் இசையில் பாட வேண்டும், கூத்துப் பாட்டு ஒன்று பாடவேண்டும் என்றெல்லாம் விருப்பம் தெரிவிப்பது அருமையான விஷயம். சிறப்பான பாடல்களை வழங்கிக் கொண்டிருக்கும் அவர் கேரளத்தில் கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தச் சென்ற நேரத்தில் அவரோடு நடத்திய உரையாடலை தி இந்து ஆங்கில பத்திரிகையாளர் எழுத்தில் இங்கே வாசிக்கலாம். (https://www.thehindu.com/entertainment/music/sid-sriram-on-his-music/article24592537.ece )

மாற்றங்களில் பயணம் செய்ய மனம் எப்போதும் தயங்கும். 1957க்கு அப்புறம் எஸ் எஸ் எல் சி தரமே போய் விட்டது என்று சொல்வார்கள் மூத்தவர்கள். அது சொந்தப் பெருமை இல்லை. அவர்கள் வேண்டுமென்றே அடுத்தடுத்த தலைமுறையை இகழ்வதுமில்லைநல்ல பரிச்சயமான விஷயங்களில் மெல்ல மெல்ல ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மனிதர்களுக்கு இனம் புரியாத அவஸ்தையை உள்ளூர ஏற்படுத்துகிறது. இது எல்லாக் காலங்களுக்கும் பொதுவான அம்சம் தான்

பரணில் இருப்பவை எல்லாம் பொருள்கள் அல்ல, பழைய வாழ்க்கையை எப்போதாவது மறுவாசிப்பு செய்ய வேண்டுமென்ற உள்ளார்ந்த விருப்பம். தாங்கள் வசித்த வீட்டை விற்றுவிட்டார்கள், வாங்கியவர்கள் இடிக்கப் போகிறார்கள் என்றறிந்து தொலை தூர நகரில் இருந்து ஓடோடி வரும் ஒரு பெண், அவசர அவசரமாக நுழைந்து மொட்டை மாடிக்குப் போய் எங்கோ மூலைச்சுவர் ஒன்றில் ஒரு ஜோடி பெயர்கள் கிறுக்கலாக எழுதி வட்டம் போட்டுவைத்த இடத்தைத் தொட்டுத் தேம்பித் தேம்பி அழுதுவிட்டு வெளியே வருவதை சுஜாதாவின் சிறுகதையில் வாசித்திருப்பீர்கள்



பழைய பாடல், பழைய படம், பழைய குரல்களில் அவரவருக்கான சொந்த அடையாளங்களும் முத்திரை குத்தி வைக்கப்பட்டிருக்கும்இப்போதும் ஒரு நடை அங்கே போய் உட்கார்ந்து பார்த்துவிட்டு வரும் மனங்களுக்கு அவை அந்தந்த காலத்து வாழ்க்கையின் இசைஒரு பெருமூச்சு விடுகிறீர்களா அப்போது ? அது அந்தப் பாடலின் சுருதியாக இருக்கவும் வாய்ப்பு உண்டுகொஞ்சம் திரும்பி நிகழ் காலத்திற்கு வந்துவிட்டால், இப்போதைய பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருப்பதும் கேட்கும். அதை நோக்கி நகர முடியுமானால்இப்போதைய இசைக்கு மட்டுமல்ல, அதன் கொண்டாட்டத்தில் இருக்கும் இளைய ரசிகர்களது உள்ளங்களையும் நெருங்கிச்  சென்றடைந்திருப்போம்.

(இசைத்தட்டு சுழலும்……)

 



தொடர் 1 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – வாசிக்க

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – வாசிக்க

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

தொடர் 8 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-8-venugopalan-sv/



தொடர் 9 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-9-venugopalan-sv/

தொடர் 10 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-10-venugopalan-sv/

தொடர் 11 – வாசிக்க..

https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/

தொடர் 12 – வாசிக்க..

http://music-life-series-12-venugopalan-sv

தொடர் 13 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-13-venugopalan-sv/

தொடர் 14 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-14-venugopalan-sv/

தொடர் 15 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-15-venugopalan-sv/

தொடர் 16 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-16-venugopalan-sv/

தொடர் 17 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-17-venugopalan-sv/

தொடர் 18 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-18-venugopalan-sv/

தொடர் 19 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-19-venugopalan-sv/

தொடர் 20 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-20-venugopalan-sv/

தொடர் 21 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-21-venugopalan-sv/

தொடர் 22 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-22-venugopalan-sv/

தொடர் 23 – வாசிக்க..

https://bookday.in/isai-vazhkai-23-isai-vandhu-theendum-bodhu-enna-inbamo-by-s-v-venugopalan/



6 thoughts on “இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. அற்புதம்.

    சஞ்சய் சுப்ரமணியன் அவர்களின் சிரிக்கும் கண்களும் இதழோரப் புன்னகையும் பாடலின் ஏற்ற இறக்கங்களில் தோளைத் தூக்கி இறக்கும் உடல் மொழியும் அவரது குரலுக்கு அணி சேர்ப்பவை.

    சித் ஸ்ரீராமிற்கு நீங்கள் வைத்துள்ள கோரிக்கையை அவர் காதில் கொண்டு சேர்க்க வேண்டுமே.

  2. ஒவ்வொரு முறையும் சங்கதிகளால் சொற்களின் அழகை விரித்துக் கொண்டு போய், அதன் கம்பீரத்திற்கு ஏற்பத் தமது உடல் மொழியும் இன்னொரு பக்கவாத்தியமாக இயங்க, அருகே மிருதங்கக் கலைஞரிடமும், வயலின் கலைஞரிடமும் புன்னகை ததும்பும் கண்களால் உரையாடல் நிகழ்த்தியபடி இந்தப் பாடலை அவர் இசைக்கும் விதம்…..ஆஹா…ஆஹா…

    உண்மை
    உண்மை
    சஞ்சய் சுப்ரமணியன் அவர்களின் பாடலைத் தங்களால் கேட்டு மகிழ்ந்தேன்.
    பாடலை அவர் இசைக்கும் விதத்தைத் தாங்கள் தங்களின் எழுத்தின் வலிமையால் காட்சியாக்கி காட்டியதையும் ரசித்து மகிழ்ந்தேன்.
    நன்றி ஐயா

  3. பாட்டுக்கொரு புலவன் பாரதியடா. அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா.. அதைக் கேட்டுக் கிறுகிறுத்து போனேனடா..அந்தக் கிறுக்கில் உளறும் மொழி பொறுப்பாயடா… கவிமணி இன்றிருந்தால் பாட்டைப் பண்ணோடு ஒருவர் எழுதவும் முடியுமா என்று வியந்திருப்பார். அப்படி இருந்தது Sir கட்டுரை. ஒவ்வொரு வரியும் அருமை. மிக்க நன்றி.

  4. ‘இசைத்திரு உயிர்த்திரு‘ என்ற தலைப்பில் கடலூர் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இணைய வழி உரையைக் காணும் வாய்ப்பு கிடைக்க கண்டு மகிழ்ந்தேன். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமானவர்கள் நிறைவில் பாராட்டி நெகிழ்ந்தது நிகழ்ச்சியின் சிறப்பிற்கு மெருகூட்டியது.
    “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா…எனக்கின்பம் சேர்க்க மாட்டாயா “.. பாவேந்தரின் ஆர் சுதர்சனம் இசையில் எம் எஸ் ராஜேஸ்வரி, வி ஜே வர்மா பாட லலிதா, நாகேஸ்வர ராவ் நடிப்பில் வெளியான ஓர் இரவு திரைப்படத்தை
    சஞ்சய் சுப்பிரமணியன் அவர்கள் கச்சேரி கண் முன் நிறுத்தியது. முன்னிலைப் பாடகர்கள் பலராலும் பாடப்பட்ட இப்பாடல்
    தங்கள் உறவினர்கள் மூவரது இழப்பின் துக்கத்திற்கு சிறந்த மருந்தாக அமைந்திருந்திருக்கலாம்.
    தமிழில் எழுதப்படிக்கத் தெரியாத சித் ஸ்ரீராம் தனது இனிய குரலில் பாடிய “மறுவார்த்தை பேசாதே”எனும் பாடலும் பிற பாடல்களும் அற்புதம்.
    பழைய பாடல் பழைய படம், பழைய குரலில் பழகிய மனம்
    மாற்றங்களில் பயணம் செய்ய
    என்னைப்போன்றோர்கள் தயங்கும் வேளையில் அனைத்து காலத்தவருக்கும் ஏற்ப பாடல்களை அலசி ஆராய்ந்து கொணர்ந்திருப்பது இசையின்பால் தாங்கள் கொண்ட காதலை வெளிப்படுத்துகிறது,முக்கியமாக இளைஞர்களை நோக்கிய பயணம். இவ்வளவு துயரநிகழ்வுகளுக்குப் பின்னரும் இசைத்தட்டுகள் தொடர்ந்து முழங்கி குறுகிய காலத்தில் வெள்ளி விழா காண இருப்பது வியப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தங்களுக்கும் புக்டே. இன்.கோ அன்பர்களுக்கும்.நன்றி

  5. இசைத்திரு , உயிர்த்திரு , இப்பகுதியில் இறந்த இசைக்காதலர்களுக்கும்,, பாடலை எழுதியோர், உணர்வோடு பாடியோருக்கும் புகழ்மாலை சூட்டியிருக்கிறார் தோழர் வேணுகோபாலன். இத்தொடரை வாசிப்போர் உருகாதிருக்க இயலாது காரணம் அவர் தேர்ந்தெடுத்த சொற்களால் சூழலையும், பாடல்களின் மெய்ப்பாடும் , பாடும் பாடகரின் மெய்- பாடும் குறித்து எடுத்துரைப்பும் அருமை. வாழ்த்துகள் இசைஞர் எஸ்.வி.வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *