சை வாழ்க்கை தொடரின் 25வது கட்டுரையை, வெள்ளிவிழா என்று வரவேற்று அன்பர்கள் பலர் பாராட்டி உள்ளனர். எண்ணற்ற வாசகர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். வயதில் மூத்தவர்களும், இளையவர்களும் விரும்பி வாசிக்கும் தொடராக இது உருப்பெற்று வந்திருப்பதில், அள்ளியள்ளி வழங்கியுள்ள இசை மேதைகள், அருமையான பாடகர்கள், அர்ப்பணிப்பு மிக்க இசைக் கலைஞர்கள், திரையுலக படைப்பாளிகள் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டிய புகழ் அது

கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள், ‘சொல்வதற்கு நிறைய இருக்கிறது என்றே தெரிகிறது, தொடரைச் சட்டென்று நிறைவு செய்துவிடாதீர்கள்என்று ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லி இருந்தார். தொகுப்பு கொண்டு வாருங்கள் என்பது அவரது அடுத்த அறிவுரை. அன்பர்கள் பலரும் இதே விஷயத்தைத் தத்தமது மொழியில் சொல்லி வந்திருக்கிறீர்கள்

உற்சாகமான செய்திகள் இரண்டு சொல்ல வேண்டும். முதல் 25 கட்டுரைகளும் நூலாக்கம் பெற உள்ளது. இப்போதைய காலச்சூழல் அனுமதிப்பது பொறுத்து அதற்கான காலம் எடுக்கும். காத்திருங்கள். இரண்டாவது விஷயம், இசை வாழ்க்கை தொடரும் தொடரும். (இரண்டு முறை சொல்வதாகவும் கொள்ளலாம், தொடர், தொடர உள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம்).



தீபாவளியை ஒட்டி முன்னும் பின்னுமாக நிறைய மழை. திடீர் என்று பெய்யத் தொடங்குகிறது. பளீர் என்று வெயில் காய்கிறது. ‘நாங்கள் எங்கும் போய்விடவில்லைகீச் கீச்என்று மாமரத்தில் தங்கள்கிளைக்’ கூட்டம் ஒன்றை நடத்தி விட்டுப் பறந்து போய்க் கொண்டிருக்கின்றன விதவிதமான பறவைகள். ‘மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள்கூவிக் கொண்டிருக்கின்றனஅணில்கள் ஏதோ உரையாடல் நடத்திக் கொண்டே இருக்கின்றன. அவசர அவசரமாகக் குடியிருப்புகளை இடமாற்றிக் கொண்டு சாரை சாரையாக எறும்புகளும் தங்கள் ஓட்டத்தில்

தாள கதி பிசகாத இவற்றின் வாழ்க்கையிலும் தான் எத்தனை இசை கலந்திருக்கிறது. அவரவர் மொழியில் இசை. மொழி கடந்த இசை. மொழியைக் கடத்தும் இசை அல்லது இசையைக் கடத்தும் மொழி அல்லது இசை தான் மொழி !

உணர்ச்சிமயமான நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை, இணைய வழியில், கண்ணுறும் வாய்ப்பு, நவம்பர் 16 அன்று காலை கிடைத்தது. இசையருவி என்று அழைக்கப்பட்ட குமரி அபுபக்கர் அவர்களது மறைவுச் செய்தி அறிந்திருப்பீர்கள். நாற்பதாம் நாள் நினைவை, அவரைக் குறித்த புகழஞ்சலி செலுத்தி அனுசரித்தனர்

குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களை வானொலியில் கேட்டவர்கள் அபுபக்கர் குரலை அறிந்திருப்பார்கள். மிக எளிய மனிதர் அவர். சீறாப் புராணச் செய்யுள்களை இசை வடிவத்தில்கேட்போர் கரைந்துருகப் பாடும் ஆற்றல் பெற்றிருந்தவர். இன்னுமின்னும் நிறைய….

தமிழிசையில் இஸ்லாமியர் ஆற்றியுள்ள பங்களிப்பை, இந்த நினைவேந்தலில் நினைவு கூர்ந்த ஒருவர், “எஸ் ஜி கிட்டப்பாவும், அவரது சகோதரர் காசி அய்யரும் நாகூர் சென்று தாவூத் மியான் என்பவரிடம் இசை பயின்றனர், கிட்டப்பா பாடுகையில் இந்துஸ்தானி சாயை அதில் இருந்தது என்று குறிப்பிடுவார்கள்” என்றார்



டி எம் கிருஷ்ணா பேசிய சுருக்கமான உரை, இசையையும் பாடகரையும் தொட்டுச் சுழன்ற விதம் நெகிழ்ச்சியுற வைத்தது. மொழி என்பது அடிப்படையில் ஓசை தானே, சுத்தமாக மொழியை ஒலிக்கும் எல்லோராலும் பாட முடியாத போது, பாடகர் அதே மொழியைத் தானே எடுக்கிறார், எப்படி நிகழ்கிறது அந்த மந்திர ஜாலம் என்ற கேள்வியை  சுவாரசியமாக எழுப்பி, அதற்கான விடையை அதைவிடவும் சுவாரசியமாகக் கண்டடைய வைத்தார். கல்லில் இருந்து அழகான உருவத்தைச் செதுக்கி எடுக்கும் சிற்பியைப் போலவோ, மொழியிலிருந்து இசையை வடித்துத் தரும்  ஓர் இசைப்பாடகர் என்று தோன்றியது !  

கிருஷ்ணா வேறொன்றும் குறிப்பிட்டார்,  ‘அபுபக்கர் இறை பக்தி கொண்டிருந்தது மட்டுமல்ல, இந்தோளத்தில், சக்கரவாகத்தில், காம்போஜியில் கொண்டிருந்த பக்தியையும் கவனிக்கவேண்டும். இரண்டும் இணையும் புள்ளியில் பிறக்கும் அவரது இசையில் ஒன்றை எடுத்துவிட்டிருந்தாலும் அந்த இசை விளைந்திருக்காது

‘அதே நேரத்தில், கர்நாடக சங்கீதத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக, பாடகர்கள் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த பாடல்களே அதிகம் பாடி வந்துள்ளனர் என்பது நிஜம். ஆனால், இந்து மதம் சார்ந்த பாடல்கள் மட்டுமல்ல, கிறித்துவ மதம் சார்ந்த, இஸ்லாமிய மதம் சார்ந்த பாடல்கள், ஏன் மதம் கடந்த அல்லது மதமே இல்லை என்று சொல்கிற பாடல்கள் உள்பட இங்கே பாடப்பட்டுள்ளன. எல்லாமும் அங்கீகாரம் பெற வேண்டும். அபுபக்கர் அவர்களை வித்வான் என்று தான் அழைக்க விரும்புவேன். இசையுலகில் மிகவும் மேன்மையான ஒருவருக்கு வழங்கப்படும் பட்டம் அது. அந்த முறையில் அவரை அப்படித் தான் அழைப்பேன்’  என்றார் கிருஷ்ணா.

இசையை அன்றாட வாழ்க்கையாகக் கொண்டு, கேட்போருக்கு எல்லையற்று வழங்கும் மிக உன்னத பண்பு உள்ளவராக குமரி அபுபக்கர் திகழ்ந்ததால், கேட்போரைக் கரையவைக்கும் பேரனுபவத்தைத் தர முடிந்தது என்ற செய்தி உள்ளத்தைத் தொடுவது. இன்னும் நிறைய செய்திகள், புகழுரைகளை இந்த இணைப்பில் நீங்கள் கேட்க முடியும்: https://www.facebook.com/QIAMSMEDIA/videos/581898315931424/

புபக்கர் பெருமைகளைப் பேசுகையில், அவரோடு இணைந்து ஊர் ஊராகச் சென்று தாம் சீறாப்புராண விளக்க சொற்பொழிவை ஆற்ற, இவர் தொடர்ந்து பாடவுமாக அருமையான பங்களிப்பு செய்தவர் வேறு யாருமல்ல, கவி கா மு ஷெரிஃப் அவர்கள் தான்! கதாகாலட்சேப முறையில் 1970களில் பல மையங்களில் நிகழ்ந்த இசைத்தமிழ் விளைச்சல் அது





பார்க்க பல விதமாய்…..கண்ணே ரகுமானேஎன்ற குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல் நிச்சயம் பலரும் வானொலியில் கேட்டிருப்பீர்கள். இஸ்லாமிய பக்தி கீதங்கள் மட்டிலுமல்ல, பல சமயப் பெருவெள்ளமான இசையனுபவத்தில் திளைத்த வாழ்க்கையை வாழ்ந்தவர் அபுபக்கர். அடைக்கும் தாழ் அற்ற அன்பின் கண்ணீர் பெருக்கும் இசை வாழ்க்கை அவருடையது

ழுத்தாளர் லட்சுமண பெருமாள் இசை வாழ்க்கை கட்டுரைகள் பற்றி ஒருமுறை பேசிக் கொண்டிருக்கையில், ஒரு பாடலைக் கேட்டு மெய் மறந்து நடந்ததைச் சொன்னார். வெளியூர்ப் பயணத்திற்காக ஊரிலிருந்து சென்று கொண்டிருக்கையில், மெல்லிய ஆடை பறந்து வருவதுபோல் காற்றோடு வந்து அவரைத் தழுவிய ஒரு பாடல் வந்த திசையை நோக்கி நடந்த கதை அது. வயல் வரப்புகளின் குறுக்கே நடக்க நேரே ஒரு மாதா கோவில் வாசலைத் தொட்ட பாதையின் முடிவில் கேட்டிருக்கிறார், நிரந்தரமான ஒரு பாடலை! நீயே நிரந்தரம் என்பது தான் அந்தப் பாடல்!!





அது ஒரு குறிப்பிட்ட மதத்தார் தங்கள் இறை வழிபாட்டுக்காக உருகிக் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் தான். ஆனால், அந்தக் குரல், அந்த இசை, உடன்பாடு முரண்பாடு எதுவானாலும் அந்தப் பாடலின் வரிகளை அந்த அற்புதமான பாடகி ஒலித்துள்ள விதம்….ஏதோ ஓர் உணர்வைக் கடத்திக் கொண்டே இருக்கிறதே. அந்த மொழிஓசை எப்படி இசையாகிறது

இறை நம்பிக்கை அற்ற எத்தனையோ பேரையும் கேட்டுருக வைக்கும் அந்தக் குரலுக்கானவர் திரும்பத் திரும்ப ஒலிக்கும் பல்லவியின் அந்த வரிகளை என்னமாக இசைத்தார்….’நான் மாண்ட பின்னும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்என்று எப்படி பாடி விட்டுப் பறந்தும் சென்று விட்டார்.பேதங்களைக் கடந்து கண்ணீர் உகுக்க வைக்கும் இப்படியான பாடல்களில் தழைக்கிறதா, முடிந்து போக முடியாத ஓர் இசை வாழ்க்கை!

ஸ்வர்ணலதா, திரை இசையில் வித்தியாசமான குரலுக்குரியவராக இருந்தவர். அந்த மூச்சுக் காற்றின் காப்பகத்தில் ஏற்பட்ட சிக்கலில் 37 வயதிலேயே விடைபெற்றுச் சென்றுவிட்டார். ஆறாயிரம் பாடல்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, இந்தி மட்டுமல்ல படகர் மொழியிலும் பாடி இருக்கும் அவரது எந்தப் பாடலையும் இப்போது கண்ணீர் சிந்தாமல் அருந்த முடிவதில்லை. போறாளே பொன்னுத் தாயி பாடல் பதிவின் போது அவரே உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கிறார் எனில், கேட்போர் நிலை சொல்லவேண்டியது இல்லை. கவிஞர் வைரமுத்து அவர்களது அச்சு அசலான கிராமத்து மொழியில் சோகத்தைப் பிழியும் ஒரு ராகத்தில் அவரது பாவத்தை விவரிக்க சொற்கள் இல்லை





தொடக்க ஆலாபனையே கேட்பவரை திரைக்கதையின் அந்தக் குறிப்பிட்ட இடத்தின் அதிர்ச்சியை நெஞ்சில் ஓர் அடியாய் வாங்கிக் கொள்ளச் செய்யும்படி இழைத்திருப்பார் ஸ்வர்ணலதாதாள மாட்டாத துயரத்தில், ‘பொதி மாட்டு வண்டி மேல போட்டு வச்ச மூட்ட போலபோய்க் கொண்டிருக்கும் கருத்தம்மாவைக் காணவும்கண்ணீர் பொங்கப் பார்வையாளரும் பின்தொடர்ந்து போக வைக்கும் குரல் அது

முதல் சரணத்தில், ‘ஊமையும் ஊமையும் பேசிய பாஷையடிஎன்ற வரியில் எத்தனை விம்மல். ‘கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடிஎன்ற இடத்தில் எத்தனை ஆற்றாமை. இரண்டாம் சரணத்தில், ‘ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதம்மாவில் எத்தனை துன்பத் ததும்பல்

தேசிய விருது பெற்றுத் தந்த இந்தப்  பாடலுக்கு, ஆர் ரஹ்மான் அசாத்திய கற்பனையோடும், கதையில் ஒன்றிய உளவியல் பார்வையோடும் அமைத்திருக்கும் இசை எப்போது கேட்கும்போதும் உயிரைப் பிசைந்துவிடுகிறது.

எதையோ தேடிக் கொண்டிருக்கையில், தற்செயலாக, யூகி சேதுவின் நிகழ்ச்சியில் ஸ்வர்ணலதா உரையாடியதைப் பார்க்க நேர்ந்தது. எத்தனை தன்னடக்கமும், இசையின் தாகமும், வெகுளித் தனமும் அவர் கண்களில் சுடர் விட்டுக் கொண்டிருந்தது! அதில்தான் எத்தனை கனவுகள் குடியிருந்தது ! எந்தப் பாடலைக் கேட்டாலும், தயக்கமின்றிக் குழந்தையைப் போல் சட்டென்று, எந்த வரியும் பிசகாமல் அதே பாவத்தோடு பாட முடிந்தது அவருக்கு. எத்தனையோ பிரபலங்களை அநியாயத்திற்கு நையாண்டி வம்பு செய்யும் சேது, அன்றென்னவோ வழக்கமான குறும்பை வெகுவாகக் குறைத்துக் கொண்டு, திறமை மிக்க பாடகியைக் கொண்டாடியபடியே பேசிக் கொண்டும், பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டும் இருந்ததைக் கண்ணீர் திரையிடாமல் பார்க்க முடியவில்லை

நேயர் விருப்பமாக அன்றைய நிகழ்வில் யூகி கேட்ட பாடலைக் கடைசியாக அவர் பாடியது ஓர் இன்பியல் பாடல் தான். அமர்க்களமான துள்ளல் கொண்டாட்டமாக ஓர் இளம் பெண் தனக்குப் பிடித்த குடும்பத்தில் தன் மனத்திற்குப் பிடித்தமானவனைக் கைப்பிடிக்கப் போகும் பேரானந்தம் கொஞ்சமும் மறைத்துக் கொள்ளாத உற்சாகத்தில் இசைக்கும் பாடல் அது. பூவெல்லாம் உன் வாசம் தான் அப்புறம்!





‘திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியைத்  தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே……’

எத்தனை அழகுணர்ச்சியோடு வந்து விழுந்திருக்கும் பல்லவி. வித்யாசாகர்வைரமுத்து  கூட்டியக்கத்தில் உருவான அருமையான பாடல் அது

பரவசமாகப் பொங்கியெழும் குரலில் ஸ்வர்ணலதா பூஞ்சோலையை, கனிதரும் மரங்களடர்ந்த வனத்தை, அருவியை, மலைச்சாரலைக் கொண்டு நிறுத்தி விடுகிறார் !  அவர் கேட்கும்போது மலர்கள் சொரியக் காத்திருக்கும் நந்தவனங்கள். அவர் குரலுக்குக் கனிகளைக் கொட்டித் தீர்க்கும் பழமரங்கள்.  

சாத்தியமாகும் கனவுக் காதலைத் தானே ஊஞ்சலில் வைத்துச் சீராட்டிச் சீராட்டித் தானே அதில் ஆடும் தாள கதியில்  இயங்கும் இந்தப் பாடல், ஊஞ்சல் போலவே உயரம் தொட்டும், தரையில் காலைப் பதமாகத் தொட்டுக் கொண்டும், மிதமான வேகத்தில் குரலை என்னமாக வளைத்து நெளித்துச் சிலிர்க்க வைக்கிறார் ஸ்வர்ணா. அதிலும், ‘புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லைஎன்ற இடமும், ‘மழை நின்ற மலரைப் போலப் பதமானவன்என்ற இடமும் உயரம் தொட்ட வேகத்தில் ஊஞ்சல் இறங்கி வரும் இதமும் பதமும் அம்மம்மா…..ஸ்வர்ணலதாவின் பாட்டைச் சிந்தாமல் சிதறாமல் பெற்றுக்கொண்டு ஜோதிகா தனது பங்கிற்குப் பாடலை மேலும் சிறப்பாக்கி விடுகிறார். சூழல் மொத்தமும் பாடலுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டுவிடுகிறது படத்தில்.



https://www.youtube.com/watch?v=hI60d51cylk



நேர்காணல் முடிவில், கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு, அகக்கண் திறப்பில்இந்தப் பாடலின் பல்லவியைப் பாடிக் காண்பிக்கிறார் ஸ்வர்ணா. உடனே, சேது, எனக்குப் பிடித்த வரிகள் சரணத்தில் இருக்கின்றன என்று சொல்லவும், சரணத்தையும் சட்டென்று பாடுகிறார். ‘கண்ணோடு குற்றாலம் பாய்வதுண்டுஎன்பதில்தான்  எத்தனை வெளிப்பாடுகள்…. இன்னும் பத்தாயிரம் பாடல்கள் பாட வேண்டும் என்று சேது வாழ்த்தவும் விடை பெறுகிறார் ஸ்வர்ணா. திரும்ப வந்து எதிரே உட்கார்ந்து பாடிக் கொண்டே இருக்க மாட்டாரா, வேறு யாரோ சிறப்பாகப் பாடிய பாடலை எங்கோ கேட்டுத் தான் பாடுவது போன்ற வெள்ளந்திச் சிரிப்போடு இசைத்துக் கொண்டே இருக்க மாட்டாரா என்று தோன்றியது.

எந்த எதிர்பார்ப்பும் இன்றியும், ‘நான் வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறேன், எல்லாம் கேட்போருக்காகவே’  என்று வள்ளல் தன்மையோடும் இசையை வழங்கிக் கொண்டிருப்போர் யாராயினும் வணக்கத்திற்கு உரியவர்களே

வெனிஸ் நகரத்து வணிகன் நாடகத்தில்இரக்கத்தைப் பற்றிய மகத்துவமான தமது கவிதை வரிகளில் ஷேக்ஸ்பியர் பிழிந்திருப்பதை, காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கையில் தலைமை ஆசிரியர் திரு பு மனோகரன் அவர்கள் உணர்ச்சிபூர்வமாக அழுத்திச் சொல்லியது, அதே சொற்களில் இல்லையெனினும், பொருள் இன்னும் நினைவில் நிற்கிறது: “கருணையின் பண்பு என்னவெனில் அது சொர்க்கத்திலிருந்து மண்ணகத்தில் பொழியும் மழையைப் போன்றது; இரட்டை ஆசீர்வாதங்களை உள்ளடக்கியது; இரக்கம் என்பது அதை வழங்குபவர், பெறுபவர் இருவரையும் ஆசீர்வதிக்கிறது!” 

இசை அப்படியான அன்பின் பெருமழை அன்றி வேறென்ன….வழங்குபவரையும், வாங்கிக் கொள்பவரையும் ஒன்றுபோல் அது தன்னுள் அரவணைத்துக் கொண்டாடுவதை வேறெப்படி விவரிப்பது!

 

(இசைத்தட்டு சுழலும்……)



தொடர் 1 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – வாசிக்க

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – வாசிக்க

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

தொடர் 8 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-8-venugopalan-sv/



தொடர் 9 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-9-venugopalan-sv/

தொடர் 10 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-10-venugopalan-sv/

தொடர் 11 – வாசிக்க..

https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/

தொடர் 12 – வாசிக்க..

http://music-life-series-12-venugopalan-sv

தொடர் 13 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-13-venugopalan-sv/

தொடர் 14 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-14-venugopalan-sv/

தொடர் 15 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-15-venugopalan-sv/

தொடர் 16 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-16-venugopalan-sv/

தொடர் 17 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-17-venugopalan-sv/



தொடர் 18 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-18-venugopalan-sv/

தொடர் 19 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-19-venugopalan-sv/

தொடர் 20 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-20-venugopalan-sv/

தொடர் 21 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-21-venugopalan-sv/

தொடர் 22 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-22-venugopalan-sv/

தொடர் 23 – வாசிக்க..

https://bookday.in/isai-vazhkai-23-isai-vandhu-theendum-bodhu-enna-inbamo-by-s-v-venugopalan/

தொடர் 24 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-24-venugopalan-sv/

தொடர் 25 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-25-venugopalan-sv/



6 thoughts on “இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. வாழ்த்துக்கள். ஸ்வர்ணலதா வீட்டறுகில் நானும் வசித்தேன் என்பதை தவிர வேறென்ன சொல்ல. அருமையான பாடல்களை வழங்கிய பாடகி. நினைவு படுத்தியதற்கு நன்றி.

  2. இறை நம்பிக்கை அற்ற எத்தனையோ பேரையும் கேட்டுருக வைக்கும் பாடல்களில் தழைக்கிறது, முடிந்து போக முடியாத ஓர் இசை வாழ்க்கை!

  3. 25 வாரங்கள் ஆயிற்றே. இன்னும் சுவர்ணலதா பற்றி இந்தத் தொடரில் பேசவில்லையே என்ற ஏக்கத்தைத் தீர்த்துவிட்டீர்கள்.

    தொடரும் தொடரும் என்ற இசையாய்ப் பொழியும் தகவலுக்கு நன்றி.

    நூலிலும் இதில் வரும் இணைப்புகளுக்கான சுட்டியை அடிக்குறிப்பில் தந்தால் இசை ரசிகர்கள் பயன்பெறுவோம்.

  4. கண்ணே ரகுமானே , நீயே நிரந்தரம், போறாளே பொன்னுத்தாயி, பூவெல்லாம் உன் வாசம் என்று இசை மழையில் நனைய வைத்தது மட்டுமின்றி எவ்வளவு அரிய தகவல்களை அறியக் கொடுக்கிறார். இசையில் இப்படித் தோய்ந்தமனம் வாய்ந்தவரால்தான் இப்படியொரு எழுத்துச் சிற்பம் செதுக்க முடியும். நடமாடும் கணினிபோல ஞாபகச் சிற்பங்களையும் நினைவுப் பாறைகளில் நிரந்தரமாகச் செதுக்குகிறார். கண்களும் காதுகளும்தாம் நாம் கைக்கொள்ள வேண்டிய கருவிகள்…. நிறைய நிறைய நிரப்பி அனுப்புவார் நிச்சயம். நன்றி எஸ் வி வி.

  5. என்ன ஒரு அற்புதமான நினைவாற்றல். சங்கதிகளும் ஏராளம். அபூர்வமான எழுத்தாளர்.ஸ்வர்ணலதாவைப்பற்றி நூறு கோடு அறிந்து இருந்தேன். அத்தியாயமே தந்துவிட்டார். நன்றி.

  6. ஸ்வர்ணலதா – யூகி சேது உரையாடல் இசை வாழ்க்கை 26இன் உச்சம். அப்பா என்னவொரு குரல் வளம்! இந்தக் குயில் ஏன் இவ்வளவு அற்ப ஆயுளில் பறந்தது. குயில் என்பதாலா? கருத்தம்மா படத்தின் ” போறாளே பொன்னுத்தாயி” பாடும்போது அவர் அழுதுவிட்டார் என்றபோது நம் நெஞ்சைப் பிழிகிறது. இசையால் எங்களை வென்றுவிட்டீர்கள் வேணுகோபால். தொடருட்டும் நம் இசை வாழ்க்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *