வேறெந்த இசைக் கருவியை விடவும் முதலில் பரிச்சயப் படுத்திக் கொண்டது நாதஸ்வரம் தான். ஒரு மங்கல நிகழ்வை மூளை சட்டென்று பிடித்துக் கொள்ளுமளவு பதிந்து போயிருப்பது நாதஸ்வர இசை தான்திருமண இல்லத்தில் பார்த்த அதே இசைக்கருவிகளை, கோயிலில் பார்க்க நேர்ந்த வயதில், ஈடுபாடு கூடிவிட்டது. எந்த வயதிலும் ஆகாய விமான ஓசை கேட்டால் ஓடிவந்து வானத்தைப் பார்ப்பது, மணியோசை கேட்டால் யானையைப் பார்க்க வாசலுக்கு ஓடுவது போல, நாதஸ்வர இசை, பண்பாட்டுச் சுவடுகளில் செம்புலப் பெயல் நீர் போலவே கலந்திருப்பது

சிறுவயது முதல் நாதஸ்வர கோஷ்டியைப் பார்த்ததும் கண்கள் முதலில் அந்தக் குழுவிலேயே வயது குறைந்தவர்கள் பக்கம் போகும். சிறுவன் யாராவது தான் தாளம் போட்டுக் கொண்டிருக்க, வேறொருவர் சுருதி பெட்டியோடு இருப்பார். நாதஸ்வரம் ஊதுபவர்கள் இரண்டு பேரில் முக்கியஸ்தர் ஒருவர், பின்பாட்டு இன்னொருவர் என்பது புரிய ஆரம்பித்தபோது, சீவாளிகள் பற்றியெல்லாம் தேடல் தொடங்கியது…. நாதஸ்வரத்தில் கொத்தாகத் தொங்கும் சீவாளிகளை அவர்கள் மாற்றி மாற்றிப் பொருத்துவது, தந்த நிறத்தில் இருக்கும் ஒரு துருவியால் அவர்கள் அதைத் தூய்மைப் படுத்துவது எல்லாம் மிக அருகே கவனிக்க திருமண வீடுகளில் வாய்ப்பு நெருக்கமாகக் கிட்டியது

பெரும்பாலும், நாயனக்காரர், தாளம் போடும் பையன் பக்கமே குறியாக இருப்பதும், சமயத்தில் இரண்டு குட்டு குட்டுவதும் கூட மிக அருகே சங்கடத்தோடு பார்க்க நேர்ந்ததுண்டு. அப்போதுதான் இன்னும் கூர்ந்து பார்த்து, அந்தத் தாள கதியைப் புரிந்து கொள்ள நேர்ந்தது.  ‘விரல் விட்டு எண்ணிவிடலாம்’ என்று அடிக்கடி பயன்படுத்துகிற சொல்லாடல் ஒன்று உண்டு. ஆனால், விரல் விட்டு எண்ணி, தாளக்கருவியை இசைக்கும் பணி அது ! ஆனால், ஜால்றா அடிக்காதே, சைன் சொப் போடாதே, சிங்க் சா சிங்க் சா வேலையெல்லாம் வேண்டாம் என்று புழக்கத்தில் வந்துவிட்டது கஷ்டமாகத் தான் இருக்கிறது

இரட்டை தவில் இருக்கும் குழுவில், ஒருவர் வாசிக்கும்போது, அடுத்தவர், தவில் மேலேயே இரண்டு கைகளையும் பக்குவமாக ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எடுத்துக் கொடுத்தும், வாங்கியும், உள்ளே எடுத்து வைத்தும், வெளியே காற்றுக்குக் கொடுத்துமாகத் தாள அளவை அனுசரிப்பது சுகமான காட்சியாக இருக்கும்

எதிரே இருப்பவர் வாசிப்பை நிறுத்தி இவர் அதைச் சட்டென்று பற்றிக் கொள்ளுமுன் தயாரிப்பில் இதமாக வாசிக்கும் வட்டப் பகுதியைத் தடவித் தடவி, மடியிலேயே தவிலை ஓர் உருட்டு உருட்டிக் கொண்டு, உடலை முன்னும் பின்னுமாக அசைந்து கொடுத்துக் கொண்டு, தலையையும் ஆட்டியவாறு வாசிக்கத் தொடங்கும்போது கணீர் கணீர் என்று கேட்கும் நாத இன்பம் கோடி பெறும். (திருவிளையாடல் படத்தில் மிருதங்க வாசிப்பில் சிவாஜி அந்த பாவங்களைக் கொணர்ந்திருப்பார், பாட்டும் நானே பாடலில்). 

தவில்காரர்கள் தனி ஆவர்த்தனத்தில் இருக்கையில், நாதஸ்வரக்காரர் தமது இசைக்கருவியைச் செங்குத்தாக ஓய்வில் நிறுத்தி, இரண்டு கைகளில் தாளத்தை அவர்கள் பங்குக்கு எடுத்துக் கொடுத்து ரசித்து, உரிய நேரத்தில், தங்கள் வாசிப்பைச் சரியான தாளக்கட்டில் எடுக்கும்போது, ஆஹா..ஆஹா.. எத்தனை பேரின்பம்.

பெயர் தெரிந்த நாதஸ்வரக்காரர், அப்பாயி. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஆஸ்தான நாயனக்காரர். எட்டாம் வகுப்பு படிக்கையில், கன நேரம் கழிந்தது கோயில் உட்பிரகாரத்தில், நூறு கால் மண்டபத்தில், அனந்த சரஸ் எனப்படும் குளத்தில், சக்கரத்தாழ்வார் சன்னதி ஒட்டிய பெரிய வெளி பிரகாரத்தில், உள்ளே கண்ணாடி அறையில் உற்சவ மூர்த்தி எழுந்தருளி இருக்க நடக்கும் திருமஞ்சனத்தில், 24 படிக்கட்டுகள் கொண்ட –  மலை என அழைக்கப்படும்மேல் தளத்தில் மூலவர் சன்னதியில், தங்க பல்லி, வெள்ளி பல்லி முதலான சிற்பங்களில், உள்ளே நுழையும்போதே மணம் வீசும் மஞ்சள் காப்பில் கொலுவிருக்கும் பெருந்தேவி தாயார் சன்னதியில், எங்கே நின்றாலும், நடந்தாலும் பெருமாள் புறப்பாடு எனில் முதலழைப்பாக நாதஸ்வரம் அப்போதே குடியிருந்தது நெஞ்சில். இன்னொரு நினைவு, ஸ்ரீதர், வகுப்புத் தோழன்.  பழகிய வேகத்தில் இதயத்தைப் பறிகொடுக்க, அவனது இதயத்தில் இருந்த பலவீனத்தில் அதைவிட வேகத்தில் நிகழ்ந்த  முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம் !



உள்ளூர்க்காரனாக இருந்த அவன்தான் அப்பாயி என்ற பெயரை முதலில் சொல்லி இருக்கவேண்டும். கறுத்து உயர்ந்த மெல்லிய உருவம். பளீர் என்ற திருமண.பளிச் என்ற வண்ணத்தில் ஒரு சால்வை. நாதஸ்வரத்தோடு நிற்பார் அப்பாயி

பல்லவ உற்சவத்தில் நூறு கால் மண்டபத்தில் படிப்படியாக உற்சவ மூர்த்தி இறங்கி வருகையில், ‘எச்சரிக்கை சுவாமி எச்சரிக்கை ராஜ ராஜாதி ராஜா எச்சரிக்கை தேவ தேவாதி தேவா எச்சரிக்கை ஜெய விஜயீ பவோ‘ என்று பாரம்பரியமாக வம்சாவழியாக ஒருவர் இசைக்குரலாக இந்த பாரா உஷார் வாசகங்கள் சொல்ல,  அப்பாயி வாசிக்கத் தொடங்குவார். பொட்டலத்தில் நூலைச் சுற்றிக் கட்டிக்கொண்டே வந்து சட்டென்று இழையை அறுக்கும் வேகம்போல அந்த வாசிப்பைச் சட்டென்று நிறுத்த, அடுத்தடுத்து திரை விலக்கப்படும்

பிரும்மோற்சவ காலத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு வெளியே நடக்கையில்கூட்ட நெரிசலில் அப்பாயி நாதஸ்வரத்தை உயரே உயர்த்திப்பிடித்தபடி ஓடோடி வரும் காட்சியும் கவித்துவமாக இருக்கும். .அந்த மொத்தக் குழுவின் உறுப்பினர் முகங்கள் ஒரு குழு புகைப்படம் போல் உள்ளே பதிவாகி இருக்கிறது. இசையால் இறைவனோடு உரையாடுபவராகவே அப்பாயி அந்தக் காலங்களில் தெரிந்தார்.

ண்ணன் ரங்கராஜன், முரளி இவர்களின் கல்லூரித் தோழன் ஆனைக்கட்டித் தெரு  ரவி தான், நாதஸ்வர இசையை இன்னும் உள்ளாழ்ந்து ரசிக்கக் கற்பித்தவர். அவர் ஒரு கவிதை ரசிகர். கண்ணதாசன், வாலி கவிதைகளை அவர் சொல்லக் கேட்க வேண்டும். அந்தக் குரலே வசீகரமாக, ரசனைக்கென்றே பிறப்பெடுத்த குரலாக இருக்கும்

அதற்குமுன் அந்தப் பாடலைக் கேட்டிருந்தாலும், பதினான்கு வயதில் அந்தக் காதல் பாடலை ஓர் இசைக்கவிதை வகுப்பு போல எனக்கு நடத்தினார் ரவிதிரைப்பாடல் எல்லாம் சும்மா கேட்டுவிட்டுப் போகவா, அதற்குள் எத்தனை புதையல்கள், எத்தனை அற்புதங்கள், எத்தனை அதிசயங்கள் என்று தேடல் தொடங்கிய தருணமாக அது இருந்திருக்கக் கூடும்

டி எம் சவுந்திரராஜன், பி சுசீலா எனும் அற்புதமான பாடகர்கள் குரல்களின் இனிமையை, பாடல்களுக்கு வழங்கும் அழகை, இசையோடு இயைந்து எங்கோ நினைவுகளை, கனவுகளை, கற்பனைகளை நோக்கி உந்தித் தள்ளும் நுட்பங்களை அதற்குப் பிறகு எண்ணற்ற பாடல்களில் அனுபவிக்கத் தொடங்கிய காலம் அது.





நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடம் ஆடுகின்றாள்….’ (பூவும் பொட்டும் ) என்பது மற்றுமொரு பாடலா என்ன? கோவர்த்தனம் இசையில், கண்ணதாசன் வழங்கிய பாடல் அது.  

திருமண இல்லத்தில் வரவேற்பது போலவே பாடலிலும் தொடக்க இசைத் துடிப்புகளைத் தொடர்ந்து நாதஸ்வரம் அழைக்கிறது பாடலுக்குள்ளே. பல்லவியை எத்தனை அனுபவித்துப் பாடத் தொடங்குகிறார் டி எம் எஸ்அந்தப் பாடுகின்றான், ஆடுகின்றாள் இரண்டுமே, கிறு, கின்று, ஆநின்று  என நிகழ்கால இடைநிலை கற்றுத்தந்த வகுப்பில் கேள்விப்பட்ட ருசியில் பார்க்கையில், அந்த சொற்களை அவர் என்னமாக சங்கதிகள் சேர்த்து அலங்கரித்து வழங்குகின்றார்

பல்லவி நிறைவுப் பகுதியை இசைக்கருவிக்குக் கொடுத்துவிடாமல், தமது இதமான ஆலாபனையில் வாங்கிக் கொள்ளும் பி சுசீலா, ‘கோலமிட்ட மணவறையில் குங்குமத்தில் சங்கமத்தில்என்று சந்தங்கள் கொஞ்சும் தமிழை இன்னும் உயிராக வார்த்தெடுக்கிறார். அதிலும், ‘ஊரார்கள் வாழ்த்துரைக்கஎன்ற வரியில் ஊரார் அனைவரையும் வரவழைத்து விடுகிறார்

அடுத்த சரணத்தில், ‘மை வடித்த கண்ணிரண்டும்என்று எடுக்கும் டி எம் எஸ், ‘மண் பார்க்கும் பாவனையில் வரும் பாவனைக்கு எத்தனை பாவங்கள் தந்துவிடுகிறார்! ‘மெய்சிலிர்த்து முகம் சிவக்கும்என்ற இடம் அழகு அழகு அத்தனை அழகு. கடைசி சரணத்தில் வரும்பத்தினியைக் காவல் கொண்டுஎன்ற இடமும் சரி பேரழகுஅந்த ராகத்தின் முகவரி போல் அமைந்து விடுகிறது. இருவருமே பல்லவியைத் தொடும் ஒவ்வொரு முறையும் கேட்போரை நெகிழவைத்து விடுவர்.  

வி எம் ராஜனும், காதல் சுடர்விடும் கண்களோடு பாரதியும் நடித்திருந்தாலும், ஆனைக்கட்டி ரவி தான் கண்முன் இப்போதும் நிற்கிறார். அவரே எழுதி அவரே நடித்துப் பாடியது போன்ற பதிவாகி நிறைந்திருக்கிறார்



இது ஒரு காதல் இன்பப் பாடல் என்றாலும், ஈடேறாது போய்விடுமோ என்ற ஏக்கமோ, இலேசான சோக உணர்ச்சியின் சாயலோ பாடல் நெடுக ஒலித்துக் கொண்டிருப்பது போலவே கேட்கும். அது அந்த ராகத்தின் சிறப்பம்சமாக இருக்கக் கூடும். நாதஸ்வரம், புல்லாங்குழல், கிளாரினெட் எல்லாம் பாடலை எங்கோ கொண்டு செல்லும். சரணங்களுக்கு இடையே சித்தார் ஒலிக்கிறது

கோவர்த்தனம் எனும் மேதையின் ஞானம் வியக்கவைப்பது. மிக அதிக படத்திற்கு இசையமைக்காத அவர், சிறார் பருவத்திலேயே தோடி என் ராஜரத்தினம் பிள்ளை முன்பாகவே நின்று அவர் தோடி வாசிக்க அந்த ஸ்வர கோவையை உடனே எழுதிக் கொடுத்து அசத்தியவராம். அவரை அங்கே கொண்டு நிறுத்திய அவர் அண்ணன், இசையமைப்பாளர் ஆர் சுதர்சனம்

பாட்டுக்குத் தான் மெட்டு போடுவேன் என்பாராம் கோவர்த்தனம். பட்டணத்தில் பூதம் படத்திற்காக, இயக்குநர் கேட்டு மெட்டுக்கு எழுத உட்கார்ந்து, கடைசியில் கண்ணதாசன் எழுதிய பாடலின் அழகில் சொக்கி, இயக்குநர் இசைவோடு டியூன் மாற்றி இசையமைத்து வெற்றி பெற்ற பாடல், ‘சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி !’ என்று கூட சொல்லப்படுவது உண்டு. (இந்தப் பாடல், மீண்டும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர விரும்பிய  கண்ணதாசன்காமராசருக்கு விட்ட பாடல் தூது என்றும் ரசமாக சொல்லப்படுவது உண்டு!)  

ண்மையில், இலக்கிய விமர்சகர் மறைந்த திகசி அவர்களது அன்பிற்கு ஆட்பட்டிருந்த நெல்லை ஓவியர்இலக்கிய நேயர் பொன் வள்ளிநாயகம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில், சட்டென்று ஏதோ ஒரு பேச்சுக்குறிப்பு அவரது நினைவடுக்குகளில் இருந்து நாதஸ்வரக்காரர் ஒருவரை எடுத்து அறிமுகம் செய்யவைத்தது.

வீரவ நல்லூரில் சூர சம்ஹாரத் திருவிழா கனஜோராகப் போய்க் கொண்டிருந்தது. ஒவ்வொரு மையத்தில் ஒவ்வொரு சூரனை முருகன் அழித்து வர, உற்சாக ஆரவாரத்தோடு புறப்பாடும், மக்கள் திரளும் முன்னேறிக் கொண்டே சென்று கொண்டிருந்ததாம். முக்கிய களத்தில்முருகனின் வேலை மார்பில் வாங்கி மரணத்தை எய்ய, சூரபத்மன் தயார் நிலையில் காத்திருக்க, ஜனம் அலைமோதிக் கொண்டிருந்ததாம், முருகனைக் காணாமல் !   முருகனாக வேலேந்தி சளைக்காது வதம் செய்தபடி நடந்து போய்க் கொண்டிருந்தவர், சற்றே களைப்பாற்றிக் கொள்ள, ஒரு தேநீர்க் கடை பக்கம் ஒதுங்கி இருக்க, எங்கே எங்கே எங்கே என்று முருகனை அன்பர்கள் கூட்டம் தேடிக் கொண்டிருந்ததாம். நாதஸ்வரம் வாசித்துவந்த கம்பர், தாம் வாசித்து வந்த பாட்டை ஒரு கணம் அப்படியே நிறுத்தி, சூழலுக்கு ஏற்ற ஒரு பாடலை வாசிக்க, கூட்டம் அப்படியே ஆர்ப்பரித்து கரகோஷம் எழுப்பி அவரைக் கொண்டாடத் தொடங்கி விட்டதாம். அதற்குள் இந்தப் பாட்டைக் கேட்ட முருகரும் வேலோடு ஓடோடி வந்து சூரசம்ஹாரம் முடித்து வைத்தாராம்



https://www.youtube.com/watch?v=7JHOprzVCek



வேறென்ன, அற்புத பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது புகழ் பெற்றஎங்கெல்லாம் தேடுவதோ…..முருகா..’ ( சீர்காழி அவர்களின் அபார இசை பற்றித் தனியே எழுத வேண்டும்).

ந்தக் குறும்பான நாதஸ்வரக் கம்பரின் பெயர் சட்டென்று நழுவிப் போய்விட்டது, ‘சூரியா சீனியாஎன்று எவ்வளவோ யோசித்துப் பார்த்தார் வள்ளிநாயகம். எங்கேனும் திருமண இல்லத்தில் வாசிப்பு போய்க் கொண்டிருக்கையில், தெரிந்த மனிதர்கள் நுழையும்போது, தாம் வாசித்துக் கொண்டிருக்கும் பாட்டை அப்படியே நிறுத்திஅவர்கள் பெயரைத் தொட்டு ஒரு பாட்டைச் சடாலென்று எடுத்து வாசித்து இடத்தையே கலகலக்க வைப்பாராம் அந்தக் கம்பர். ஏட்டய்யா கணபதி உள்ளே நுழைகையில், ‘கணபதியே வருவாய்‘ ! அதே போலவே, என்னடா, கம்பர் திடீர் என்றுஜானகி தேவி ராமனைத் தேடி இரு விழி வாசல்..’ வாசிக்கிறாரே என்றால், அந்தப் பெயருடைய பெண் கடந்து உள்ளே போய்க் கொண்டிருப்பாராம். பாட்டுக்காரர்கள் சிலர் சேட்டைக்காரர்களாகவும் இருக்கத்தானே செய்கிறார்கள்!

ஆனால், கச்சேரிகளோ, கோயில் அல்லது திருமண விழாக்களோ, உண்மையான ரசிகர்கள் கொஞ்சம் பேர் உற்று கவனித்துக் கேட்டுக் கொண்டிருப்பதை அத்தனை ஆனந்தமாகத் தாங்களும் ரசித்தபடி நாதஸ்வர கோஷ்டியினர் தங்கள் இசையைத் தொடர்வதைத் தனியே ரசிக்க முடியும். நாதஸ்வரக்காரர்கள் கண்கள் தனியே பேசும். தாளம் போடுபவர் பக்கம், சக நாயனக்காரர் பக்கம், தவில்காரர் பக்கம், அப்படியே ரசிகர்கள் பக்கம் என்று அந்தக் கண்களின் பார்வை மொழி நேரத்திற்கேற்ப, ஆளுக்கேற்ப மாறிக் கொண்டிருக்கும்

ங்கள் உயிர்க் காற்றை அல்லவா இசையாகப் பொழிகின்றனர். நாதஸ்வரத்தின் கண்களில் விரல்களை மாற்றி மாற்றி ராகத்தையும்பாடல் சொற்களையம் திருத்தமாக எடுக்க அவர்களை விசையாக இயக்கிக் கொண்டிருப்பது எதுநாதஸ்வரத்தின் அடுத்த முனையில் உருகி வெளியே கசிவது, வாய்ப்பட்டு வெளிப்பட்டு வரும் வெறும் நீரா, வாய்ப்பாட்டு போலவே வாசிக்கத் துடிக்கும் நெஞ்சத்து நெகிழ்ச்சியின் சாரலா ?





உங்க நாயனத்துல தே  இந்த சத்தம் வருதா, ஊருல எல்லா நாயனத்துலயும் இந்த சத்தம் வருதாஎன்று மனோரமா, சிவாஜியைக் கேட்கும் அமர்க்களமான காட்சியை, தில்லானா மோகனாம்பாள் பார்த்த யார்தான் மறக்க முடியும்….’நாபிக் கமலத்தில் இருந்து நாம் கொடுக்கும் சத்தமும் தெய்வ அனுக்கிரகமும் தான் காரணம்என்பார் சிக்கல் சண்முகசுந்தரம். அதாவது சிரத்தையான வாசிப்பு என்பது பொருள்மனோரமாவே நாதஸ்வரத்தை எடுக்க, ‘ ஜில்லு..என்னைக் கொல்லாதே ..எனக்கு நாதஸ்வரமே மறந்துரும் போல இருக்கு…’ என்று கணேசன் சிரிப்பை அடக்கமாட்டாதபடி சொல்ல முடியும் காட்சி.

எம் பி என் சேதுராமன், எம் பி என் பொன்னுசாமி வாசிப்பைப் பார்த்து, இவர்கள் தான் படத்திற்கான பின்னணி வாசிப்பு என்று பி நாகராஜன் தேர்வு செய்தாராம். ஆனால், அவர்கள் வாசிப்பைப் பதிவு செய்கையில் தாம் அருகே இருந்து பார்க்கவேண்டும் என்று கணேசன் சொல்லிவிட்டாராம். வாசிக்கும்போது நாயனக்காரர்கள் உடல் மொழி முழுவதையும் தமது படைப்பூக்க செயல்பாட்டில் உள்வாங்கிக் கொண்டு, கழுத்து நரம்பு புடைக்க வாசிப்பவராக அவர் நடித்த நடிப்பைப் பின்னர் படத்தில் பார்த்து அவர்கள் ஆடிப்போய் விட்டனராம்,   ”நீங்க தான் அசல், வாசித்த நாங்கள் நகல்னு சொல்ற அளவுக்கு நீங்க நடிச்சிட்டீங்கஎன்று அவரிடமே சொல்லி மகிழ்ந்திருக்கின்றனர்அற்புத கலைஞர் டி எஸ் பாலையா, அந்தக் குழுவின் கலைஞரிடம் தவில் வாசிக்கக் கற்றுக் கொண்டே விட்டாராம்! தொழில்முறை நடிப்பைக் கடந்த கலை தாகம் என்று கொண்டாட வேண்டுமல்லவா !



https://www.youtube.com/watch?v=uDntM8Xgk80



நலந்தானாபாடல், சேர விடாது தடுக்கப்படும் காதலர்கள் கலையின் நிமித்தம் சந்திக்க நேரும் தருணத்தில் நிகழ்த்தும் காதல் உரையாடல் அன்றி வேறென்ன! கே வி மகாதேவன் இசையில் பி சுசீலாவின் குரலில் எத்தனை ஆற்றாமையும், ஏக்கமும், கரிசனமும், கண்ணீரும்!  

கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நான் அறியேன், புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் இந்தப் பெண் பட்ட பாட்டை யார் அறிவார்என்ற வரிகள், வெறும் எதுகை மோனை என்று கடந்து விட முடியுமா? அருமையான இந்தப் பாடல் புனைவில் கண்ணதாசன், மகாகவியின் பாஞ்சாலி சபதத்தில் அருச்சுனன் வீமனிடம் சொல்லும், ‘கட்டுண்டோம் பொறுத்திருப்போம், காலம் மாறும்என்ற அற்புதமான கவிதை வரியை நிறைவுப் பகுதியில் இணைத்திருப்பார்

நாம் நடக்க நடக்கப் பின் தொடரும் நிழல், திடீர் என்று எதிர்ப்புறம் நடக்கையில் நம் முன்பு நடந்து போய்க் கொண்டிருப்பது போலவே, சுசீலாவின் குரலும், நாதஸ்வர இசையும் முன்னும் பின்னும் நடந்து படைக்கும் அசாத்திய சுவை. பாடல் காட்சியில் நாயனம்  வாசிக்கும்போது கையில் கட்டுப்போட்ட இடத்திலிருந்து பூத்துப் புறப்படும் குருதியைப் போலவே, ரசிகர்கள் நெஞ்சில் உணர்ச்சிகளை கொப்புளிக்க வைப்பது.

நாதஸ்வர இசையோடு பரவிய பாடல்கள் தனி ரசனைக்குரியவை. யாரைக் குறிச்சி பேசினாலும், காருகுறிச்சி பற்றிப் பேசாமல் எப்படி, ஆனால், அதற்கு நிச்சயம் அடுத்த வாரம் வரை காத்திருக்கத் தான் வேண்டும். சிஷ்யரைப் பற்றி மட்டுமல்ல, அவரது குருவையும் அல்லவா வணங்கித் தொடங்க வேண்டும்? குருவாகப் பட்டவர், தோடி புகழ் நாதஸ்வர கலைஞர், வாசிக்க மட்டுமல்ல, திரையில் நடிக்கவும் செய்தவர்! வாழ்க்கை இசையாக இருந்தாலும், அசையாமல் அமர வைத்துவிட்ட காலத்தையும் சில கலைஞர்கள் வாழ்க்கையில் தொட்டுப் போய்விடுகிறது. ஆனாலும், இசை ஓங்கி நின்றுவிடுகிறது

நிவார் புயல் கரையைக் கடந்திருக்கிறது. ஆனால், கவலைகள் கடந்து போய்விடவில்லை. வலுவிழந்தது புயல் என்று சொன்னாலும், அதைவிடவும் வலுவிழந்து நிற்கிறது குறிப்பிட்ட மாவட்டங்களில் தவிக்கும் வேளாண் சமூகமும், தண்ணீர் நடுவே தவிக்கும் மக்கள் திரளும். கஷ்ட காலத்தில் சூழும் ஞானம், இயல்பு நிலைக்கு மீளுகையில் நழுவிப் போய்விடுகிறது. வாக்குறுதிகளும் அப்படியே

இயற்கையின் சீற்றம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வாழ்க்கையில் அறச்சீற்றம் அப்படியே பொங்குமாயின், ஆக்க பூர்வமான மாற்றங்கள் சாத்தியமாகும். பேரிடர் எதிர்கொள்ளும் வலு அப்போது கூடியிருக்கும். பின்னணி இசை நிச்சயம் அப்போது வேறாக ஒலிக்கும். கட்டுண்டோம், பொறுத்திருப்போம். செயலாற்றுவோம். காலம் மாறும்.

 

(இசைத்தட்டு சுழலும்……)

தொடர் 1 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 2 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 3 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 4 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 5 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்



தொடர் 6 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 7 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 8 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 9 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 10 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 11 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 12 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 13 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 14 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 15 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 16 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 17 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 18 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 19 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 20 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும்  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 21 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 22 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 23 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 24 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 25 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 26– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் 

 



7 thoughts on “இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. இரண்டு நாட்களாக வீட்டருகே மிகச் சிறிய அளவில் ஆன கல்யாண ஊர்வலத்தில் நாதஸ்வரம். எவ்வளவோ நாட்களுக்கு பின் கேட்டேன். இதமாக இருந்தது. இனம் புரியாத மகிழ்ச்சி. இப்போதோ உங்கள் கட்டுரையில் நீங்கள் வரைந்துள்ள விரிந்துள்ள ஒலி ஒளி ஓவியங்கள் என்னை சிறுவயது திருவண்ணாமலை கோவிலுக்கு அழைத்துச் சென்றன. தில்லானா மோகனாம்பாள் மனத்திரையில் ஓடியது. ‘நாதஸ்வர ஓசையும் சீர்காழியும் ‘ நேரத்தை மறுபடி எடுத்துக் கொண்டனர். அருமை …..அருமை.

    1. ஒவ்வொரு வாரமும் தூள் கிளப்பும் எஸ்விவி மிகச்சிறந்த இசை ஆளுமை என்றால் அது மிகையில்லை. நன்று நன்றி

  2. நாம் நடக்க நடக்கப் பின் தொடரும் நிழல், திடீர் என்று எதிர்ப்புறம் நடக்கையில் நம் முன்பு நடந்து போய்க் கொண்டிருப்பது போலவே, சுசீலாவின் குரலும், நாதஸ்வர இசையும் முன்னும் பின்னும் நடந்து படைக்கும் அதே அசாத்திய சுவையை, தங்கள் எழுத்தும், எழுத்தினுள் ஒளிந்திருக்கும் இசை உள்ளமும் வழங்குகின்றன

  3. இசை வாழ்க்கை 27 நாதஸ்வரம் இசையில் நனைந்து மகிழச் செய்கிறது. திருமண வீடுகளில் நாதஸ்வரம் கலைஞர்களின் இசையை அனுபவிப்பவர்கள் மிகச் சிலரே. இருப்பினும் கலைஞர்கள் லயித்து வாசிப்பார்கள். நாதஸ்வரம் கலைஞர்களின் வாசிப்பில் நான் கேட்க விரும்பும் பாடல் ” அலை பாயுதே! கண்ணா! மனமிகு அலைபாயுதே! எல்லா திருமண வீடுகளிலும் இப்பாடலைப் பாடச்சொல்லிக் கேட்பேன். இப்பாடலை நாதஸ்வரம் வழிக் கேட்பதில் தனி இன்பம்! இசை வாழ்க்கை 28 எப்ப வரும்? காருக்குறிச்சி பற்றி என்று சொல்லிவிட்டீர்கள். காத்திருக்கிறோம்.

  4. ஒளிமயமான எதிர்காலம் பாட்டுக்கு முன்னதாக வரும் நாதஸ்வரம், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாட்டில் வரும் நாதஸ்வரம் கூட பாட்டைத் தூக்கிவிடும். ஆர்க்காடு கஸ்பாவில் எங்கள் குடும்ப விசேஷங்களுக்கு அங்கேயே இருந்த நாதஸ்வர கோஷ்டி வரும். அவர்கள் வந்தாலே என் அம்மா, பிருந்தாவனமும் நந்த குமாரனும் வாசிங்கோ என்று கேட்பார். எல்லார் மனமும் குளிர அவர்கள் கேட்கும் பாடல்களையெல்லாம் சளைக்காமல் அதே ச மயம் இனிமையாக வாசிப்பார்கள். திருமண விருந்தோடு இசை விருந்தை வயது பால் அந்தஸ்து வித்தியா;சமில்லாமல் ரசித்த காலம் அது. அவர்கள் அனைவரும் இப்போது கந்தர்வ லோகத்தில் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் வாசித்துக் கொண்டிருப்பார்கள். மி்க்க மகிழ்ச்சி வேணு – வேணுகானத்தை மட்டுமல்ல நாத கானத்தையும் கேட்கும் கோபாலன் நீங்கள்.
    வ. ரங்காசாாரி.

  5. அருமை. திருமணம் மற்றும் கோயில்களில் வாசிக்கும் நாதஸ்வர இசைக்கு நானும் ஒரு அடிமை. அற்புதமான சொல்லாற்றலில் மிளிர்கிறது தங்களின் இசை நயம்.

  6. வானொலி நிகழ்ச்சிகள் தொடக்கத்திலும்,
    திரைப்படங்கள் பலவற்றில் இறுதியிலும் ஒலிக்கும் மங்கல இசையில் ஓங்கி நிற்கும் நாதஸ்வர இசையை அலசி ஆய்ந்து,இசை நிகழ்ச்சியில் கலைஞர்களுக்கு இடையே நிகழும் சம்பவங்களை,செயல்களை,சம்பாஷணைகளை உன்னிப்பாக கவனித்து அற்புதமாக எடுத்துரைத்து நாதஸ்வர இசையை சுவைப்பவர்களை அவ்விசையின்பால் மேலும் மேலும் ஈர்ப்புடன் இசை இன்பத்தை அனுபவிக்க தூண்டுகிறது தங்கள் கட்டுரை.
    எங்கெங்கோ தேடி
    ‘நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்துபாடுகின்றான் சேர்ந்து வரும்மேளத்திலே தேவி நடம்ஆடுகின்றாள்’ பாடல் மற்றும்
    எம் பி என் சேதுராமன், எம் பி என்பொன்னுசாமி இவர்களின் பிண்ணனி வசிப்பில் நலம்தானா பாடல்,சீர்காழிஅவர்களின் பக்தி பாடல் என அனைத்தும் அருமை.
    ‘நலந்தானா‘ பாடலில் கண்ணதாசன் படைப்புடன் மகாகவியின் பாஞ்சாலி சபதத்தில் அருச்சுனன் வீமனிடம் சொல்லும், ‘கட்டுண்டோம் பொறுத்திருப்போம்’… என்பதை ஒப்பிட்டு இணையில்லா படைப்பை கொணர்ந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.
    விரல் விட்டு எண்ணி தாளக்கருவியை இசைக்கும் பணியை செவ்வனே செய்யும் கலைஞரை, ஜால்றா அடிக்காதே போன்ற ஒவ்வாத சொற்கள் ஏற்படுத்தும் வருத்தம் இசையின் பால் தாங்கள் கொண்ட காதலால் அகலும்.நாதஸ்வரம் நம் எல்லோரையும் பரிச்சயப் படுத்திக்கொண்ட ஓர் உன்னத இசை என்பதால்
    காருகுறிச்சி பற்றிப் பேசும்போது எப்படியும்’சிங்கார வேலனே தேவா'(கொஞ்சும் சலங்கை) பாடல், காருகுறிச்சி அவர்களின் குரு மற்றும்(பிறமதம் சார்ந்த பெண்கள் உட்பட) சக நாதஸ்வர வித்துவான்கள் பலரது சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவரும் என்பதால் அடுத்த இசைத்தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.படைக்கும்
    தங்களுக்கும் பகிரும் புக் டே.கோ.இன் தோழர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *