முதலில் சபையோர் எளியேனை மன்னிக்கணும். வாசிப்பில் பிரச்சனையில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். சொல்லில் தான் குற்றம்! அறிஞர்கள் சிலர் நாகஸ்வரம் என்று சொன்னதற்குப் பிறகும், கடந்த வாரக் கட்டுரையில் நாதஸ்வரம் என்றே எழுதி இருந்தேன். பழகிய சொற்கள் மக்கள் மத்தியில் இலகுவாகப் பழக்கத்தில் இருப்பதை எழுதுவது போலவே அதையும் எழுதியிருந்தேன்.

ஆனால், நாத இன்பம் குறித்த செய்திகள், பாடல்கள் ரசித்துத் தொடர்ந்து வாட்ஸ் அப்பிலும், மின்னஞ்சலிலும், புக் டே இணையதளத்திலும் வாழ்த்தியிருந்த அன்பர்களுக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகிறது. நாகஸ்வர இசை கலந்திருக்கும் பல திரைப் பாடல்களை அனுப்பிய வண்ணம் இருக்கும் நேயர்களுக்கும் நன்றி. அது ஒரு பெரிய பட்டியல்.

இன்னொன்றும் சொல்லிக்கணும், தில்லானா மோகனாம்பாள் படத்தில், உண்மையான தவில் கலைஞர்கள் போலவே அடித்து நொறுக்கிய டி எஸ் பாலையா, சாரங்கபாணி, நட்டு வாங்கு வாங்கு என்று வாங்கிப் பின்னியெடுத்த கே ஏ தங்கவேலு, கண்களிலேயே அன்பும், இரக்கமும், கரிசனமும் பொழிந்த டி ஆர் ராமச்சந்திரன் இவர்களைப் பற்றியெல்லாம் ஒற்றை வார்த்தை சொல்லி இருக்கப்படாதா என்று சிலர் கேட்டிருக்கின்றனர்!

சொற்குற்றம் பொருட்குற்றம் எக்குற்றம் இருப்பினும் …என்று நவராத்திரி கணேசன் தெருக்கூத்து தொடக்கத்தில் சொன்னது போலவே மன்னிக்க வேணும் சபையோர்களே! அவர்கள் மட்டுமல்ல, கருப்பாயி அலையஸ் ஜில் ஜில் ரமாமணி அலையஸ் ரோஜா ராணி மனோரமா, வடிவாம்பாள் புகழ் சி கே சரஸ்வதி, கலகலப்புக்கு வைத்தி என்கிற நாகேஷ் இவர்கள் இல்லாமலா அந்தப் படம்…. ஒட்டு மொத்தக் கலைஞர்கள் அசாத்திய நடிப்பில் ஒருங்கிணைத்து உருவாக்கிய இசை நாட்டியக் காவியம் அது.





இசையில், கலையில் கரைந்திருந்த இதயம் ஏ பி நாகராஜன் என்பதை மிக மிகத் தற்செயலாக ஒரு காணொளிப் பதிவில் பார்க்க நேர்ந்தது, காட்சி உருவாக்கத்தில், நடிகர்களுக்கு ஒப்பனை முதற்கொண்டு எத்தனை முக்கியம் என்பதும், தொடர்ச்சியான பணிகளின் களைப்பையும் புறந்தள்ளி விட்டு, நாகஸ்வர வாசிப்பின் தாளக்கட்டைத் தமது கைகளில் போட்டுக் காண்பித்து நடிகர்களுக்கு எப்போது எந்த நடிப்பு என்று ஏ பி என் விளக்குவதும், படத்தின் நடிகர்கள் உற்சாகமாகக் கூட்டாக இயங்குவதும் பார்க்க அத்தனை பரவசமூட்டும்.
இசையென்ற இன்ப வெள்ளத்தை ஊற்றெடுக்க வைத்த சங்கீத அருவி எப்போது கொட்டும் என்று நிறைய அன்பர்கள் கேட்டே விட்டனர். சிங்கார வேலனே தேவா, என்ன, மற்றுமொரு திரைப்பாடலா….அமரத்துவம் பெற்றுவிட்ட உயிரோசை அல்லவா?

தனது ராக ஆலாபனை கேட்டதும் நாகஸ்வர ஓசை தொடர, சட்டென்று சாவித்திரி நிறுத்தி விடுவதும், ‘சாந்தா, உட்கார், ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்’ என்று ஜெமினி கணேசன் கேட்பது சிங்கார வேலனின் சன்னதியில் சிந்தும் சிருங்கார ஏக்கம் அல்லவா…’என் இசை, உங்கள் நாதஸ்வரத்தின் முன்னால் .’ என்று அவர் கேட்க, இவர் உடனே ‘தேனோடு கலந்த தெள்ளமுது, கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல்’ என்று வருணித்துத் தொடரும் உரையாடலும், ‘உம் …நாங்களும் வந்தாச்சு, நடக்கட்டும்..’ என்று சாரங்கபாணி தவிலோடு நுழையவும் பாடல் தொடர்கிறது.

ஸ்வர வாசிப்பின் போது, தாமே பாடியது போன்ற பாவங்களும், நாகஸ்வர வாசிப்பின் நுட்ப சங்கதிகளின் போது சொடுக்கு போடுவதற்குள்ளான நேரத்தில் பிரமிப்பை வெளிப்படுத்தி அடுத்த ஸ்வர வரிசைக்கான வாயசைப்பும், சட்டென்று எழுந்துபோய் விளக்கில் திரியைத் தள்ளித் தூண்டி எரியவிட்டு நகரும் நடிப்புமாக நடிகையர் திலகம் அசாத்திய திறமையை தன்னியல்பாக வெளிப்படுத்தி இருப்பார். காதல் மன்னன் மட்டும் என்னவாம், வாசிப்பு அல்ல அது, நேசிப்பு. கு மா பாலசுப்பிரமணியன் அவர்களது அற்புதமான தமிழிசைப் பூங்கொத்து இந்தப் பாடல்.

ஆபேரி என்கிறார்கள் (ராகமறியேன், தாளமறியேன் சங்கீதம் தானறியேன்), ராக ஆலாபனையை கணீர் என்று எடுக்கிறது ஒரு குரல். உடனே அதே ஓசையில் ஒலிக்கிறது ஒரு நாகஸ்வரம். பல்லவியைக் குரல் எடுக்க, பின்னாடியே குழல் நடக்க, தவில் முழங்க, சரணங்களில் மென்மையாக ஓர் ஊஞ்சல், பின்னர் காற்றாட ஒரு நடை, அப்புறம் பல்லவிக்கே திரும்பி ஒரு புன்னகை, பின்னர் ஸ்வரங்கள்….ஆஹா…

மலைக்கோவிலுக்குச் செல்கையில், படிக்கட்டுகளில் ஒரு குழந்தை வேகமாக தாவித்தாவி ஏறி மேலிருந்து அடுத்த குழந்தையைப் பார்க்குமே அப்படி, உடனே அந்தக் குழந்தையும் அதே வேகத்தில் தாவித்தாவி ஏறிப்போய் சிறு நான்கு கால் மண்டபத்தில் வந்து நிற்குமே, உடனே முதல் குழந்தை அதற்கும் மேலே பத்துப் படி, அடுத்த குழந்தையும் அதே பத்துப் படி, இப்போது முதல் குழந்தை அடுத்தடுத்த படிக்கட்டுகளைக் குறுக்குக் கோடு போட்டாற்போல் தபதப என்று ஏற, அடுத்ததும் அதே போல் எட்டு வைத்து ஏறிக் காட்ட, முன்னது இடுப்பில் கைவைத்தபடி குதித்துக் குதித்து ஏற, பின்னதும் அதே வண்ணம் அபிநயம் பிடித்து ஏறிவிட, இப்போது வெகு வேகமாக இரண்டு குழந்தைகளும் ஒன்றேபோல் மலைக்கோவிலை நோக்கிக் கொஞ்சமும் இடறாது, ஒருவரை ஒருவர் இடித்துக் கொள்ளாது, எதிரே யாரோடும் மோதிக் கொள்ளாது, நிலைகுலைந்துவிடாது மேல் படிக்கட்டுகள் வரை அம்சமாகத் தாவி ஏறிப்போய் மலை உச்சியில் நின்ற மாத்திரத்தில் ஆனந்தக் கூத்தாடுவது போல், பாடகியும், நாகஸ்வரமும், சிங்காரவேலனே தேவா என்று நிறைவு செய்யும் இடம் இருக்கிறதே…..ஆஹா….ஆஹா…





கொஞ்சும் சலங்கை, படம். இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு. பாடகி எஸ் ஜானகி. நாகஸ்வரம், காருகுறிச்சி அருணாச்சலம் !

இதெல்லாம் முடிந்து எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு, மெல்லிசை மன்னர் எம் எஸ் வி, ஒரு சந்திப்பில் கேட்கிறார், அந்தப் பாட்டு ரொம்ப கஷ்டமான பாட்டு, ஆனா, நீங்க கஷ்டப்படாமல் பாடிய மாதிரி இருந்தது….சில இடங்கள்ல நாகஸ்வரமா, உங்க குரலான்னு பிரிக்க முடியாதபடி…” என்று கேட்கிறார். (எத்தனை தன்னடக்கமும், ஓர் இசைக்கலைஞர் மீதான கும்பிடத்தக்க மரியாதையும்!).

ஜானகி சிரித்தபடி சொல்கிறார்: ” ஆமா, வாத்தியங்கள்ல நாகஸ்வரம் எப்பவும் அதிக ஸ்தாயி, ரெண்டரை கட்டை… தனித்தனி டிராக் ”

“நாகஸ்வரம் வாசித்தவரை நான் பார்க்கவே இல்லை. முதலில் அவர் நாகஸ்வர வாசிப்பைப் பதிவு பண்ணிட்டாங்க. பாடகி யாருன்னு முடிவாகல, யார் யாரையோ முயற்சி செஞ்சு கேட்டிருக்காங்க, பம்பாய் வரை அனுப்பிப் பார்த்திருக்காங்க….பாடகி பி லீலா, அவங்களுக்குத்தான் நான் ரொம்ப நன்றி சொல்லணும், எப்பவும் சொல்லிட்டே இருப்பேன், அவங்க தான் சொல்லி இருக்காங்க, இந்தப் பாட்டை, இப்போ இருக்கற பெண் பாடகிகள்ல பாடக் கூடிய ஒரே நபர் ஜானகி தான்னு. ஒரு சின்ன ஸ்டுடியோவில் வச்சு சரியா வருதான்னு பாத்தாங்க, ரொம்ப பிரமாதம்னு சொல்லிட்டு, உடனே அருணாச்சலம் ஸ்டுடியோல பாட வச்சுப் பதிவு செஞ்சாங்க. எல்லாப் பெருமையும் ஜீவாவுக்கு. அவர் தான் நாகஸ்வர இசையையும், என் பாட்டையும் சரியாகக் கலந்து வழங்கினார், பாடல் மிகவும் பிரபலம் ஆயிருச்சு. நாலு வருஷம் பொறுத்து, பம்பாய் ஷண்முகானந்தா ஹாலில் நானும் பி பி ஸ்ரீனிவாஸ் சாரும் கச்சேரிக்குப் போயிருந்த இடத்தில் முதல் நாள் அவர் கச்சேரி, அங்கே தான் அவரைப் பார்த்தேன்” என்கிறார் ஜானகி.

‘காருகுறிச்சியின் நாத சுகம்’ என்ற கட்டுரையை (டாக்டர் எல் மகாதேவன்) சில ஆண்டுகளுக்குமுன் தமிழ் இந்து நாளிதழ் இணைப்பில் வாசித்த போது அறிய வந்த செய்திகள் அருமையானவை.

கட்டுரையில் வரும் முக்கிய இடம் பாருங்கள்: ‘ஒருமுறை காருக்குறிச்சியிலுள்ள ஒரு பண்ணையில் நாகஸ்வரம் வாசிக்க வந்திருந்தார் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. அவருடன் வாசித்து வந்த ‘கக்காயி’ நடராஜசுந்தரத்துக்கு உடல்நலமில்லை. “யாரேனுமொரு பையன், அவன் சும்மா சத்தம் கொடுத்தால் போதும். ஒத்தாசைக்குக் கிடைப்பானா?” என்று தம் நண்பர்களிடம் கேட்டார் திருவாவடுதுறையார். மணிசர்மா என்பவர் உடனே ஓடிச் சென்று அருணாசலத்தை அழைத்து வந்து அறிமுகம் செய்வித்தார். “பையன் தேவலாமே. இவன் சில காலம் என்னோடு இருக்கட்டும்” என்று ராஜரத்தினம் பிள்ளை கூறினார். இவ்வாறு 26.6.1935 அன்று ராஜரத்தினம் பிள்ளையின் சீடராக ஆனார் அருணாசலம்’.

அதற்குப்பின் 29 ஆண்டுகளே வாழ்ந்த குறுகிய காலத்தில் பெருகிய இசை தான் இன்னும் பேசப்பட்டுக் கொண்டிருப்பது! ஆனால், இதற்கு ஒரு முன் கதை சுருக்கம் உண்டு.

நெல் அளவைப் பணியாளராக இருந்த காருகுறிச்சியின் தந்தை பலவேசம், ஒரு முக்கிய நிகழ்வுக்குச் சென்றிருந்த நேரம், பண்ணையார் வீட்டு நிகழ்ச்சியே ஆனாலும், தமது வசதிப்படி வாசிக்க வந்த கூறைப்பட்டு நடேசப்பிள்ளை எனும் நாகஸ்வர வித்வானுக்கு இருந்த செல்வாக்கு பார்த்து அசந்து தாமும் அந்தக் கலையைக் கற்க முயன்று இயலாது போன சூழலில் தமது மகனை எப்படியும் ஒரு நாகஸ்வர வித்வானாகப் பார்க்க முடிவெடுத்த அந்தத் தருணத்தில் ஊன்றப்பட்டு விட்டன ஒரு மகத்தான கலைஞரின் உதயத்திற்கான விதைகள். வழக்கத்திற்கு மாறாக நள்ளிரவு 12 மணி வரை கூட காருகுறிச்சியாரின் கச்சேரியை நேரலையில் வழங்கியது அகில இந்திய வானொலி நிலையம் என்றால், இவன் தந்தை எந்நோற்றான் கொல் !

எத்தனையோ தேடிக் கேட்டு ரசிக்க முடியும், அவர் வாசிப்பை, என்றாலும், நகுமோமு ஒன்று கேளுங்கள், இப்போதைக்கு !





நாச்சியார்கோயில் ராகவ பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேசன், நீடாமங்கலம் சண்முகவடிவேல் பிள்ளை, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, அம்பாசமுத்திரம் குழந்தைவேல் போன்ற அருமையான கலைஞர்கள் காருகுறிச்சி அவர்களுக்கு தவில் வாசித்திருக்க, இவரோடு இணை பிரியாது நாகஸ்வரம் வாசித்தவர் எம் அருணாச்சலம் எனும் இசைக்கலைஞர். இருவரும் ஒருசேர வாசித்ததைக் கேட்டோர், ஒரே நாகஸ்வரம் ஒலிக்கக் கேட்டது போலவே உணர்ந்தனர் என்று சொல்லப்படுகிறது.

இரண்டில்லை ஒன்று என்று சொல்லத்தக்க அளவு வாசிப்பில் இயைபு அத்தனை சுத்தமாக மூச்சுக் காற்றே ஒன்றே போல் அனுபவித்து ரசித்துக் கொண்டாடி இருக்கின்றனர். காருகுறிச்சி அருணாச்சலம் அவர்கள் டி என் ராஜரத்தினம் பிள்ளையின் சீடர். அவரை நிழல் போல் தொடர்ந்து வாசிப்பைப் பற்றிக் கொண்டவர் எம் அருணாச்சலம். ஊர்க்காரர்கள் சொன்ன ஒரு சமயத்தில் சேர்ந்தார்ப் போல் வாசிக்கத் தொடங்கியவர்கள், பி அருணாச்சலம் 1964ல் மறைந்த வரை, ஒன்றே போல் சேர்ந்து வாசித்தவர்கள். அப்புறம் என்ன நிகழ்ந்தது ?

தில்லானா மோகனாம்பாள் படத்தில், சிக்கல் சண்முகசுந்தரத்தின் மீது கத்தி வீசப்பட்டு காயம் ஏற்பட்டு விட்டபின், கையை எடுக்க வேண்டி வரலாம் என்று உள்ளூர் மருத்துவர் சொல்லும்போது அலறும் ஏவிஎம் ராஜன், “அய்யா, அப்படியே எங்களுக்கும் ஏதாவது விஷம் கொடுத்துருங்க” என்று கதறி அழுவார். இணை பிரியாத கலைஞர்கள் குறித்த தேர்ச்சியான ஞானம்தான் கொத்தமங்கலம் சுப்பு அவர்களை இப்படி எழுத வைத்தது.

1964 ஏப்ரல் 8ம் தேதியன்று காருகுறிச்சி அருணாச்சலம் அவர்கள் மறைந்த செய்தி கிடைத்த அடுத்த நொடி, எம் அருணாச்சலம் இனி வாசிப்பு இல்லை என்று முடிவெடுத்து விட்டாராம். தமது நாகஸ்வரத்தை உறையில் இருந்து அவர் பின் ஒருபோதும் வெளியே எடுக்கவில்லை. பிரபல கிளாரினெட் வித்வான் ஏகேசி நடராஜன் எத்தனையோ ஆற்றுப்படுத்தி, ‘என்னோடு வந்து வாசியுங்கள்’ என்று கேட்டும் கூட, ‘அந்த ஒப்பற்ற இசைக் கலைஞரே மறைந்துவிட்டார், அவரோடு சேர்ந்து வாசித்தவன், இனி, தனியாகவோ, வேறு யாருடனோ நாகஸ்வரம் வாசிக்க மாட்டேன்’ என்று தீர்த்துச் சொல்லிவிட்டாராம். கண்ணீர் உகுக்கத்தக்க இப்படியான ஓர் இசை வாழ்க்கையை, ‘அன்றில் பறவைகள்’ என்று வருணித்து உருக்கமாக ஆங்கில இந்துவில் எழுதி இருந்தார், இதழாளரும், இசை ஞானமும், தமிழ் இலக்கியத் தேர்ச்சியான வாசிப்பும் மிக்க திரு ப கோலப்பன் (‘திரையில் மிளிரும் வரிகள்’ என்ற தொடரில், தமிழ் இந்து நாளிதழில் தமிழ்த் திரைப்பாடல்கள் சிலவற்றை அப்படி கொண்டாடி எழுதியவர்!).



டி என் ஆர் என்றால், உலக நாகஸ்வர சக்ரவர்த்தி. இல்லையில்லை, ஏக சக்ராதிபதி ! நாகஸ்வரத்தை ராஜ வாத்தியமாக உருப்பெற வைத்த டி என் ராஜரத்தினம் பிள்ளை. வழக்கமான அளவைத் தமது வாசிப்புக்கு ஏற்ப பெரிதுபடுத்திச் செய்யவைத்து (துமிரி என்ற நிலையில் இருந்து பாரி என்ற அளவிற்கு) வாசித்து, அந்த வாத்தியத்தின் சாத்தியங்களை எங்கோ கொண்டு சென்றுவிட்டவர். அவரைப் பற்றிய கதைகள் புராணக் கதைகள் போல ஒரு காலத்தில் ரசிகர்களைப் பித்தேற வைத்தவை. அத்தனை உயரிய இடத்தில் வைத்துக் கொண்டாடத்தக்க நாத அருவியைப் பொழிந்தது அவரது நாகஸ்வரம்.

எங்கிருந்து தான் அத்தனை கற்பனையும், ரசனையும், திறமையும் மிக்க வாசிப்பு அவருக்கு சாத்தியமாயிற்று என வியக்காதவர் இல்லை. அவரது காலத்திய இசை மேதைகளான செம்மங்குடி சீனிவாச அய்யர், எம் எஸ், எம் எல் வி எல்லோருமே நேரடியாக அவரது இசையைக் கேட்டு ரசித்தது மட்டுமின்றி, வாய்ப்பாட்டுக்கு உண்டான சுவாரசியமான ராக ஆலாபனையை, கற்பனையோட்டத்தை, இழைத்துக் குழைத்துச் செதுக்கி வழங்குதலை எப்படி அவரால் செய்ய முடிந்தது என்று வியந்து போவார்களாம். ராஜரத்தினம் பிள்ளை ஆகச் சிறந்த வாய்ப்பாட்டுகாரர், அதனால் அந்த சங்கீத மேதைமையைத் தமது இசைக்கருவியினுள் பரிமாறிப் பரிணமிக்க வைக்க முடிந்தது என்கிறார் திரைக்கலைஞர், இசை ஆர்வலர் ராஜீவ் மேனன்.

24 04 1948ல் கிருஷ்ண அய்யர் என்பவர் இசையாகவே பொழியும் ஆங்கில மொழியில் சொல்லுக்குச் சொல், எழுத்துக்கு எழுத்து டி என் ஆர் இசையைக் கொண்டாடி உருகி உருகி எழுதி இருப்பது எப்படியோ இணையத்தில் இப்போது பகிர்வில் வாய்த்தது வாசிக்க: https://dhvaniohio.org/wp-content/uploads/2015/08/Rajarathnam-Pillai.pdf

பாவேந்தர் பாரதிதாசன் திரைக்கதை எழுதிய காளமேகம் எனும் படத்தில் புகழ் பெற்ற எல்லீஸ் டங்கன் இயக்கத்தில் நடித்தார் ராஜரத்தினம் பிள்ளை. தாமே சிறப்பாக எழுதும் திறன் பெற்றிருந்த பிள்ளை, இசை குறித்த கட்டுரைகள் எழுதியுள்ளவரும் கூட.

நாகஸ்வர கலைஞர்கள், திருமணங்களில் கால் கடுக்க நின்றவாறே வாசிக்கும் நிலை மாற்றி, மேடை அமைத்து கலைஞர்களை வாசிக்க வைத்து மரியாதை செய்ய வைத்தவர் அவர் என்று சொல்லப்படுகிறது. நாகஸ்வர வாத்தியத்திற்கான இடத்தை இசையுலகில் பெறுவதற்கான அவரது போராட்டங்களின் விளைவாக இசைக் கலைஞர்களுக்கான உயரிய சங்கீத கலாநிதி விருது, திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது, ஆனால், வழங்கப்படுவதைப் பார்க்க, டி என் ஆர் இருக்கவில்லை.

நடையுடை பாவனையில், மிடுக்கில், பேச்சு மொழியில் ஒரு ராஜ கம்பீர வடிவில் வலம்வந்தவர் டி என் ஆர். ஆனால், இறுதிக் காலத்தில், மிகவும் வறுமையில் வாட நேர்ந்த வாழ்க்கை அவரது. டிசம்பர் 12, 1956 அன்று அவருக்கே உரித்தான தோடி ராகம் அவரது உயிர்க்காற்றில் இருந்து புறக் காற்றில் கலந்துவிட்டது. அதை மரணம் என்று ஏற்று விட முடியாது.கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், நடிகவேள் எம் ஆர் ராதா போன்றோர் தான் கடைசி நேரத்தில் உடனிருந்தனர், இறுதிச் சடங்குகளுக்கு உதவினர் என்ற செய்தியும் வாசித்ததுண்டு. டி என் ஆர் மறைவுச் செய்தி கேட்டு உடைந்து அழுதவாறு கவிஞர் கண்ணதாசன் எழுதிய இரங்கற்பாவில்,

‘என்னிவன் வளர்த்த பேறு ! எப்படிப் பயின்றான் இந்தச்
சின்னதோர் குழலுக்குள்ளே செகத்தையே உருட்டும் பாடம்’

என்ற வரிகளே பக்கம் பக்கமாகப் பேசுகின்றன ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் இசைப்புகழை!

முனைவர் திரு பி எம் சுந்தரம் என்பவரது தொலைக்காட்சி நேர்காணல் ஒரு பகுதி பார்க்கக் கிடைத்தது, எத்தனையோ அரிய செய்திகளை எடுத்துச் சொல்கிறது.





யாருக்கும் தலை வணங்காத ராஜகுமாரன் போன்ற இசை வாழ்க்கை அவரது. மங்கள வாத்தியம் என்று மட்டும் அறியப்பட்டிருந்த இசைக்கருவியை அதன் உன்னதமான பரிமாணத்திற்கு உயர்த்திய இந்த இசை மேதையின் வாசிப்பில்தான் சுதந்திர இந்தியாவின் விடியல் நிகழ்ந்தது. தலைநகரில் உணர்ச்சிப் பெருக்காகத் திரண்டிருந்த மக்களிடையே, பண்டித ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல் அரங்கிற்குள் நுழைகையில் தேச விடுதலையின் உற்சாகச் செய்தியை, டி என் ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வரம் தான் உலகுக்கே வாசித்துக் கொண்டிருந்தது. பத்து நிமிடங்கள் என்று சொல்லி இருந்தனராம், ஆனால், ஒரு மணி நேரத்தையும் கடந்த வாசிப்பு அன்று அவர் நிகழ்த்தியது என்கின்றனர்.

இந்த வார வாசிப்பு, உங்களுக்கும் கூடுதல் நேரம் எடுத்திருக்கும், சபையோர்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கை தான். இப்படியான மனிதர்களது பரவசமிக்க இசை வாழ்க்கை கேட்கையில், ‘மேனி சிலிர்க்குதடி’ என்றானே மகாகவி, அப்படித் தானே!

(இசைத்தட்டு சுழலும்……)

தொடர் 1 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 2 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 3 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 4 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 5 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்



தொடர் 6 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 7 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 8 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 9 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 10 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 11 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 12 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 13 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 14 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 15 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 16 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 17 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 18 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 19 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 20 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும்  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 21 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 22 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 23 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 24 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 25 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 26– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 27– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 



 

3 thoughts on “இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்”
  1. அருமையான நாகஸ்வர கச்சேரி கேட்டது போல் உள்ளது. நன்றி.

  2. ஆபேரி என்கிறார்கள் (ராகமறியேன், தாளமறியேன் சங்கீதம் தானறியேன்), ராக ஆலாபனையை கணீர் என்று எடுக்கிறது ஒரு குரல். உடனே அதே ஓசையில் ஒலிக்கிறது ஒரு நாகஸ்வரம். பல்லவியைக் குரல் எடுக்க, பின்னாடியே குழல் நடக்க, தவில் முழங்க, சரணங்களில் மென்மையாக ஓர் ஊஞ்சல், பின்னர் காற்றாட ஒரு நடை, அப்புறம் பல்லவிக்கே திரும்பி ஒரு புன்னகை, பின்னர் ஸ்வரங்கள்….ஆஹா…

    இசையை, இசையின் உணர்வை எழுத்துக்களால் வடித்து, இசை இன்பத்தினை உள்ளத்துள் ஊற வைக்கும் வல்லமை வாய்ந்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் ஐயா தாங்கள்

  3. இசை வாழ்க்கை 28 அருமையான கட்டுரை தோழர் வேணுகோபால்!
    அரிய செய்திகளைத் தாங்கி வந்துள்ளது. நாதஸ்வர வித்வான் மன்னிக்கவும் நாகஸ்வர வித்வான் ப.அருணாச்சலம் ஒரு happy accident ஆக டி.என்.ராஜரத்தினம் அவர்களின் சீடரான கதை ஆச்சரியப்பட வைக்கிறது. ப.அருணாச்சலம்/ எம்.அருணாச்சலம் இருவரிடையே நிலவிய நட்பு பற்றியும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். ஒருவர் இறந்ததும் மற்றவர் நாகஸ்வரம் வாசிக்க மறுத்து இறுதியுடன் நின்றது நெஞ்சை நெகிழச் செய்கிறது.
    நாகஸ்வர இசைக்கு மதிப்பையும் மரியாதையையும் டி.என்.ராஜரத்தினம் பெற்றுத் தந்த செய்தியும் மகிச்சி அளிக்கிறது. அதுவரை திருமண வீடுகளில் நின்று கொண்டு இசை அருளிய வித்வானகளை தனி மேடையில் அமரச் செய்த பெருமை டி.என்.ராஜரத்தினத்தையே சேரும் என்பது மனதுக்கு பெருமை கொள்ளத்தக்கது. தன்னுடைய இறுதிக் காலத்தில் டி.எம்.ராஜரத்தினம் அவர்கள் வறுமையில் உழன்றார் எனும் போது வேதனை அடைகிறோம். கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஒரு காலம் வரை வறுமையில் தான் உழன்றுள்ளார்கள். புதுமைப்பித்தனும். சி.சு.செல்லப்பாவும் சந்திக்காத வறுமையா. அந்த வகையில் இன்றைய கலைஞர்களின் நிலைமை நன்றாகவே இருக்கிறது. மொத்தத்தில் கட்டுரை 28 மனதுக்குப் பிடித்தமாக இருக்கிறது தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *