இரண்டாம் கட்டுரையும் வாசகர் உள்ளத்தில் இசைத்தட்டாகச் சுழன்று கொண்டிருப்பது உண்மையில் நெகிழ வைக்கிறது. முதல் கட்டுரை எங்கே என்று கேட்டு வாங்கி அதையும் வாசித்து மேலும் ஆர்வத்தோடு ஊக்கப்படுத்திய நேயர்களுக்கு எப்படி நன்றி சொல்வது…. வண்ணக்கதிர் இணைப்புக்கு கட்டுரை எழுதித் தரும் சமயம் அது பிரசுரமாகும் போது நன்றி சொன்னால், பொறுப்பாசிரியராக இருந்த தோழர் அ குமரேசன், நன்றியை இன்னொரு கட்டுரை வடிவில் செலுத்தி விடுங்கள் என்று சுவாரசியமான மறுமொழி அனுப்பி வைப்பார். தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதற்கு கம்பெனி ஜவாப்தாரி அல்ல என்பதை இதனால் சகலமானவர்களும் அறிந்து கொள்ளவும்.
‘பாட்டொன்று கேட்டேன் பரவசம் ஆனேன், நான் அதைப் பாடவில்லை’ என்று ஒரு பாச மலர் சொன்னால் ஆயிற்றா….மனிதர்கள் விருப்பமாக ஒரு சிறுகதையை வாசிக்கும்போது, ஆர்வத்தோடு ஒரு நாடகத்தைப் பார்க்கும்போது, மனம் ஒன்றி ஒரு திரைப்படத்தில் ஆழும் போது அவர்கள் அடையும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் வேறானவை. பாடல் கேட்கும் அனுபவம் முற்றிலும் வேறானது.

ஒரு பாடலை முதன்முதல் கேட்கிறீர்கள், அதன் எடுப்பிலோ, தொடுப்பிலோ, முடிப்பிலோ எங்கோ ஈர்க்கப்பட்டு விடுகிறீர்கள். இரண்டாவது முறை, எதிர்பாராத இடத்தில் அதே பாடலைக் கேட்க நேர்கிறது. அப்புறம் அடுத்த முறை கேட்க உங்கள் காதுகள் காத்திருக்கின்றன. இல்லை, உங்கள் உள்ளம் உங்களிடம் கோரிக்கை வைக்கிறது. இல்லை. உங்கள் முழு உடலும் தயாராகிறது. மூன்றாவது முறை தானாக அந்தப் பாடல் எங்கோ ஒலிக்க, அப்படியே விரைகின்றன கால்கள், விடைக்கின்றன காதுகள், ஆனால், அந்தப் பாடல் எதிர்பாராத இடத்தில் நின்று போகிறது அல்லது வேறு ஏதோ குறுக்கீடு நடந்து விடுகிறது. முழு பாடல் உங்களுக்கு அன்றைக்கு வாய்க்கவில்லை. அடடா..அடடா…எத்தனை ஏமாற்றத்தில் ஆழும் நம் பாழும் மனம்!
டிரான்சிஸ்டர் வைத்துக் கொண்டு அலைந்த காலங்கள் …. எழுபதுகளில் 102 ரூபாய்க்கு ஓர் அருமையான டிரான்சிஸ்டர் அமோகமாக எங்கும் விற்பனைக்கு வந்தது. மிகவும் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த கன செவ்வகப் பெட்டியின் இதயத்தில் ஒரு வட்டம், அதன் குறுக்கே பவுடர் டப்பா மூடி மாதிரி ஒன்று. அதைச் சுழற்றி விரும்பும் ரேடியோ ஸ்டேஷன் அலைவரிசையைச் சென்றடைய முடியும். அதற்கு முன்பு இருக்கும் இடத்திலேயே இருந்த ரேடியோ பெட்டி. வீட்டின் இருட்டு அறை ஒன்றில் இந்தக் காலத் தொலைக்காட்சிப் பெட்டியை விடவும் பெரியதான ரேடியோ பெட்டி என்றால் அப்பாவுக்குத் தெரியாமல் அதனிடம் போய் நிற்க முடியாது. சினிமா பாட்டு ஒரு கேடா, யார் வச்சது இந்தக் கண்ராவி ஸ்டேஷன்லாம் என்ற சண்டையில் இருந்து விடுதலை. டிரான்சிஸ்டரை காதோடு காது வைத்தது மாதிரி வீட்டுக்குப் பின்புறம் கிணற்றடிக்கு, மொட்டை மாடிக்கு எங்கும் எடுத்துச் சென்று விட முடியும். பாக்கெட் டிரான்சிஸ்டர் கேட்கவே வேண்டாம், கேட்டுக் கொண்டே இருந்த காலங்கள்….

நம் வீட்டுத் திண்ணையில் இருந்து அடுத்த வீட்டுத் திண்ணைக்கு எகிறிக் குதித்துப் போய், பக்கத்து வீட்டு ஜன்னல் எதிலாவது நீங்கள் கேட்டவை ஒலிக்கிறதா, நேயர் விருப்பம் மணக்கிறதா, ஒரு படப்பாடல்கள் தலை காட்டுகிறதா என்று அரச கட்டளையை ஏற்று, வேட்டையாடி விளையாடி விருப்பம் போல உறவாடி வீரமாக நடையைப் போட்டு வந்த காலங்களும் சுவாரசியமானவை தான்….. சென்னை ஏ ஸ்டேஷனில் எப்போது திரைப்படப் பாடல்கள் போடுவார்கள், திருச்சி ஸ்டேஷனில் எப்போது, சிலோன் வானொலி எப்போது என்று எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்…. அதுவும், புதன்கிழமை பத்து மணி இராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்….இரவைக் கண்ணீரால் நனைக்கவோ, பன்னீரால் தெளிக்கவோ அவரவர் வாழ்க்கை அனுபவத்தைப் பாடல்கள் வழி நடத்தும்.
ரயில் பயணத்தில் யாரோ ஒரு பயணி செய்தித்தாளை எடுத்து விரிக்கிறார். அடுத்த இருக்கையில் இருப்பவரும் மெல்ல மெல்லக் கண்களைப் பெயர்த்து அதை வாசிக்கத் தலைப்படுகிறார். வாசிப்பவர் சட்டென்று நடுப் பக்கத்தை உருவி அவரிடம் கொடுத்தால் அது ஒரு வகை. முறைத்துப் பார்த்தால் வேறு வகை. ஆனால், எதிரே இருப்பவர் பாக்கெட் டிரான்சிஸ்டரை எடுத்துத் தனது இசையை மீட்டுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது காற்றில் ஏறிப் பயணம் செய்யப் பாதை அங்கே இருக்கும். பாடல் நம்மை வந்தடைந்து விடும். நமது முகத்தில் ஏற்படும் இன்ப உணர்ச்சியை ரேடியோ உரிமையாளர் ஏதோ அந்தப் படத்தின் விநியோகஸ்தர் போன்ற பரவச பெருமிதத்தோடு பார்ப்பார். நாமும் நமது சொத்தில் பாதியைப் பார்வையில் பங்கிட்டுக் கொடுத்துவிடும் தருணம் அது.
திரைப்படங்களின் பின்னணி இசை (பி ஜி எம்) படம் முழுக்க விரவி இருப்பது போல், சில பாடல்கள் கேட்ட மாத்திரத்திலிருந்து நம் கூடவே வாழத் தொடங்கி விடும். சில போது, காலையில் கேட்ட பாடல் அன்று நாள் முழுவதும் திரும்பத் திரும்ப உள்ளே ஒலித்துக் கொண்டிருக்கும். நம்மைக் கடந்து செல்லும் யாராவது முணுமுணுத்துச் செல்லும் ஒரு பாடல், அப்படியே நமக்குள் உறங்கிக் கிடக்கும் மத்தாப்பூ ஒன்றில் பொறியாய்த் தெறித்து நமக்குள் பூமழை கொட்டத்தொடங்கி விடும். சமயங்களில் அது மத்தாப்பூவாக இராது, சரவெடியாகவும் வெடிக்கும். ஒருவர் எங்கோ நழுவ விட்ட பாடல், இப்படியே பலரையும் மாறி மாறித் தொற்றி இரவு நேரத்தில் வேறெங்கோ போய்ச் சேர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும்.

ஜூன் முதல் வாரத்தில் இளையராஜா, எஸ் பி பாலசுப்பிரமணியன் இவர்களோடு தஞ்சை என் ராமையா தாஸ் அவர்களது பிறந்த தினங்களும் கடந்து போயிருக்கின்றன. என்ன ஓர் அருமையான விஷயம். ஒருவர் இசை அமைப்பாளர். அடுத்தவர் பாடகர். மூன்றாமவர் ஒரு பாடலாசிரியர். ஒரு திரைப்படப் பாடல் உருவாக்கத்தில் மூவரின் பங்களிப்பு எத்தனை முக்கியமானது. இதில் யார் பங்கு அதிகமானது?
‘ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா, இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?’ (கல்வியா செல்வமா வீரமா : சரஸ்வதி சபதம்). ‘ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது. இது ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது. ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது, இவை மூன்றும் ஓரிடத்தில் நின்றால் நிகரேது?’ ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா என்றார் கவிஞர். இசை, ஒருவரது கற்பனையில் உருவாகத் தொடங்கினாலும், பலரது கூட்டுத் துடிப்பினிலே பாடல் விளைகிறது. அதனால் தான், கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம் என்றாகிறது. ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜெகமே ஆடிடுதே ! (இரண்டு பாடல்களுமே மாயா பஜாரில் இடம் பெற்றவை. எல்லாப் பாடல்களும் தஞ்சை என் ராமையா தாஸ் எழுதியவை).
‘தனனா தனனா னான்ன ..’.என்கிறார் இசை அமைப்பவர். மழையும் வெயிலும் என்ன என்கிறார் கவிஞர். அந்த மழையையும், வெயிலையும் ரசிகரின் உள்ளத்தில் கொண்டு இறக்குகிறது பாடகர் குரல். என்ன ஒரு கூட்டு நிகழ்வு இது. என்ன ஒரு சமூக விளைவு இது. என்ன ஒரு கொண்டாட்ட நுகர்வு இது. அதனால் தான், சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி (வறுமையின் நிறம் சிகப்பு) போன்ற பாடல் தனித்துவம் பெற்று விடுகிறது. இது எம் எஸ் வி, கண்ணதாசன், எஸ் பி பி, எஸ் ஜானகி கூட்டணி. அதுவும் சரணத்தில், தனன னன்னா என்று ஜானகி சந்தம் கொடுக்கவும், கம் ஆன் ஸே இட் ஒன்ஸ் அகெய்ன் என்று திரும்பச் சொல்லக் கேட்கும்போது ஒரு கிண்டல் சிரிப்பில் நனைத்து அதே தனன னன்னாவை ஜானகி வழங்கும் இடமும், இரண்டாம் சரண முடிவில் தனன னான்ன தனன னான்ன னான என்ற பதங்களை எஸ் பி பி தாமே வேகமாகச் சொல்லிப் பார்த்து ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள் என்று மிதக்க வைக்கும் இடமும் இப்படி பாடல் முழுக்க நாம் கடந்து வரும் பல அற்புத அனுபவங்கள் எத்தனை சுகமானவை…..
வேறொரு பாடல். மாமரக் கிளியே என்று முடிகிறது பல்லவியின் முதல் அடி …. அதற்கு ஒத்திசைவாக இரண்டாம் அடியில் என்ன சொற்கள் கொண்டு முடிக்கலாம்… பூமரக் குயிலே, தாமரைக் குளமே,, பாய்மர நிலவே …..இப்படி எத்தனையோ யோசிக்கலாம்… கவிஞர் வேறு ஒன்றை எடுத்தார் பாருங்கள், நா மறக்கலியே ! முழு பல்லவியும் இப்போது கேளுங்கள், ஆமாம், வாசியுங்கள் என்று சொன்னாலும், தெரிந்த பாடலை நாம் சும்மா வாசிப்பதில்லை…நம் உதடுகள் வாசித்தாலும், உள்ளே அந்த இசைத் தட்டு சுழலத் தொடங்கி விடும் தானே, ‘அடட மாமரக் கிளியே ஒன்ன இன்னும் நா மறக்கலியே …ரெண்டு நாளா ஒன்ன எண்ணி பச்சத் தண்ணி குடிக்கலியே…அடட மாமரக் கிளியே’…(சிட்டுக்குருவி). இது இளையராஜா, வாலி, எஸ் ஜானகி கூட்டணி.

இசையோடு சேர்ந்து புறப்படும் பாடல்கள், இசையை மெல்ல நதிபோல் ஓடவிட்டு அதில் வாசம் பரப்பிச் சட்டென்று மிதந்து வரும் பூக்கள் போல் ஒலிக்கத் தொடங்கும் பாடல்கள்….ஆலாபனையில் சொக்கி இருக்கையில் பளிச்சென்று ஓரிடத்தில் தொடங்கும் பாடல்கள்….இசைக்கு இசையும் குரலும், குரலுக்குக் குரல் கொடுக்கும் இசையுமாய்…எத்தனை எத்தனை பாடல்கள்…..
இன்பமே உந்தன் பேர் என்று தொடங்கினாலும் பாட்டு. துன்பமாயிருக்கும் போதும் பாட்டு. அதிலும், ‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ எனக்கின்பம் சேர்க்க மாட்டாயா‘ என்பதை விடவா……பாவேந்தர் பாரதிதாசன் அவர்களது அற்புதக் கவிதை வரிகளை சுதர்சனம் இசையில் வர்மா, எம் எஸ் ராஜேஸ்வரி பாடிய பாடலுக்கு இப்போது 69 வயது! மன்னிக்கவும், பாடல் அப்படியே இளமையாகத் தான் இருக்கிறது, கேட்பவர்களுக்கும் தான்! பாடல் எழுதியது, இசை அமைத்தது, பாடியது எல்லாம் ஒரு காலக் கணக்கு. அதன் உயிரோட்டம் காலங்களை மீறிய கணக்கு. அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா என்ற கவிஞரது அற்புத வரி, இசையின் சாத்தியக் கூறுகளை எத்தனை சிலிர்ப்புற உணர்த்துகிறது.
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே என்று கோயில் புறா இசைக்க ஆரம்பித்தால், புலமைப்பித்தன் எழுத்தில் அதன் சரணத்தில் ‘என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணம் ஏது’ என்ற இடத்தைக் கண்டடைவோம். அந்தப் பெருவாழ்வின் நிறங்களை, மணங்களை மேலும் வேட்கையோடு அனுபவிப்போம்.
You have woken up the old memories!
Music by itself is a great Ocean. It has a great power to soften our mind. Your writings have brought that to the fore for the readers. Great.
அருமை…சிறப்பான பதிவு தோழர்…வாழ்த்துகள்..👍🌹💐
Excellent write up. Can be written only by a die hard music lover….you seem to flow like a stream….was able to relate to many instances of these hit songs… very interesting… congratulations
ஆஹா. ஆலாபனைக்கு மட்டுமல்ல, நடுவில் இழையோடும் வாத்திய இசைக்கும் இது பொருந்தும். இசையினுள்ளிருந்து எழுவதுபோல், வரிகள் மயக்கும் குரலில் வெளிப்படும் போது ஏற்படும் பரவசம். சொல்லில் வடிக்க இயலாது.