நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது

நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி 

அவர்களை நமக்கு நிகராகச் 

செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே 

நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும்

வேறு வழியில்லை.

 

நண்பர்  பரலி சு நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில் மகாகவி பாரதி 

காகவி குறித்த நினைவுகள் அடர்த்தியானவை. அவரது பாடல்கள் தொட்டு வந்த கடந்த வாரக் கட்டுரை மிகப் பெரிய கவனத்தை ஈர்த்ததில் வியப்பு இல்லை. ‘பார்மீது நான் சாகாதிருப்பேன்,காண்பீர்என்பது அவரது முத்திரை கவிதை வரி!

ட்டுரை வாசித்தபின் துயரச் செய்தி ஒன்றும் வந்தது, வீணையடி நீயெனக்கு பாட்டைநாம், பாரதி பிறந்த நாள் அன்றைக்குக்  கொண்டாடிக் கொண்டிருக்கையில், அதற்கு இரண்டு நாட்கள் முன்பு, பாடகி நீரஜா மறைந்து போயிருந்தார். தென்னகத்து பர்வீன் சுல்தானா என்று சங்கீத விமர்சகர் சுப்புடுவால் கொண்டாடப்பட்டு இருந்தவர், எம் பி சீனிவாசன் குழு உறுப்பினராக இருந்தவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றியவர், அடுத்த தலைமுறைக்கும் பாடல் பயிற்சி அளித்து வந்தவரைப் புற்று நோய் பலி கொண்டுவிட்ட சோகம் தாங்க முடியாதது. அவருக்கு நம் உள்ளார்ந்த அஞ்சலி உரித்தாகிறது.

Image
பாடகி நீரஜா

ஏழாவது மனிதன் திரைப்படத்தில் நடித்த அற்புதக் கலைஞர் ரகுவரன் அவர்களது பிறந்த நாளும், டிசம்பர் 11 தான் என்று நண்பர் சிலர் சுட்டிக் காட்டி இருந்தனர். மிகவும் வித்தியாசமான உடல் மொழியும், குரலும், நடிப்பும் நினைவில் நிற்க வைத்துவிட்டு வேகமாக விடை பெற்று விட்டவர்.

காகவியின் இறை பக்தி பாடல்கள் அவரது இன்னொரு பரிமாணம், அதைப் பற்றியும் எழுதுவாயா?’ என்று கேட்டிருந்தார் என் இளவல் எஸ் வி வீரராகவன்,  ரசனையும் தேடலும் உள்ள வாசகர்களுள் ஒருவர் அவர். டி கே பட்டம்மாள் பற்றிப் பேசவில்லையே, அடுத்த வாரம் வருமோ என்று கேட்டிருந்தார், வங்கி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கிளை கடந்த வாரம் நடத்திய பாரதியார் விழாவில் அருமையான இலக்கிய உரையாற்றிய எழுத்தாளர் நாறும்பூநாதன். மற்ற சிலரும் கேட்டிருக்கின்றனர்.   சுருக்கங்கள் நிறைந்திருந்த முதுமையில் கூட சுருக்க மாட்டாதபடி செழித்துப் புன்னகை பூத்த முகமாயிருந்து மறைந்த பட்டம்மாள், பாரதியின் பாடல்களுக்கு அகமாகவும் இருந்து ஒலித்தவர்தமிழ் உள்ளளவும், ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமேஎன்ற அவரது குரல் ஒலித்துக்கொண்டு தான் இருக்கும்

பாரதியார் பாடல் திரையில் ஒலித்தது இருக்கட்டும், தரையில் எல்லோர்க்கும் சொந்தமானது எப்படி என்பதே பெரிய வரலாறு. பட்டி தொட்டியெல்லாம் பாரதி கீதங்கள் ஒலிக்கத் துடித்த இதயங்கள் நாம் நினைவில் கொண்டாட வேண்டியவை.

பொதுவுடைமை இயக்கத் தோழர்தமிழ் ஆர்வலர் ஜீவானந்தம் (தனித்தமிழ் கொள்கைப்படி உயிரின்பன் என்று சில காலம் அறியப்பட்டவர்அவர்கள், மற்றும் டிப்தீரியா நோய் கண்டு இறக்கும் தறுவாயில் இருந்த நான்கு வயது ஒரே மகன் அருகே நிற்கொணாது (திரும்பி வருகையில் அவன் மாண்டு போயிருந்தான்), நாட்டுடைமையாக்க முயற்சிக்காக பாரதி குடும்பத்தைக் காண்பதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் விரைந்த பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன், அறிஞர் சீனிவாச ராகவன் உள்ளிட்டுப் பல அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டோர் மேற்கொண்ட முயற்சிகளின் வெற்றியே மகாகவி பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.  இந்த வாக்கியம் எழுத எடுத்துக்கொண்ட நேரத்தைப் போல் பன்மடங்கு காலம் அதற்கு ஆனது.

தனது பாடல்கள் மிகவும் மலிவாக மக்கள் மத்தியில் பரவலாகப் போய்ச்சேர வேண்டும் என்று விரும்பிய பாரதியின் பாடல்கள் யாரிடம் இருந்தன, என்னென்ன முயற்சிகள் அதை மீட்டன என்பது தனி விவாதத்திற்குரிய விஷயம். தனது பாடல்களின் உரிமையை, பாரதி தான் வாழ்ந்த காலத்திலேயே உற்ற நண்பர் பரலி சு நெல்லையப்பர் அவர்களுக்கு வழங்கியிருந்தார் என நீதிமன்றத்தின் முன் நெல்லையப்பர் அவர்களே சாட்சியம்  சொல்ல நேர்ந்ததற்கு, ஏவிஎம் நிறுவனம் தங்களது அனுமதி இல்லாது பில்ஹணன் படத்தில் பாரதி பாடல்கள் பயன்படுத்தினர் என டி கே எஸ் சகோதரர்கள் மீது தொடுத்திருந்த வழக்கு காரணம்கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உள்பட  திரு ஹரிகிருஷ்ணன் விரிவாக எழுதி இருப்பதை, அவரது வலைப்பூவில் காணலாம். ( பாரதிஏவிஎம் | ஹரிமொழி (wordpress.com) )

உலக இலக்கிய வரலாற்றிலேயே, ஒரு படைப்பாளியின் ஆக்கம், முதலில் அரசுடைமை ஆக்கப்பட்டுப் பின்னர் நாட்டுடைமையாக்கப்பட்டது தமிழகத்தில் தான் நடந்தது என்கிற சுவாரசியமான குறிப்புகளில் தொடங்கும் திரு மணிவண்ணன் அவர்களது கட்டுரை, ஆய்வாளர் இரா வேங்கடாசலபதி அவர்களதுபாரதி: கவிஞனும் காப்புரிமையும்எனும் நூலுக்கான விரிவான அறிமுகம் செய்கிறது. அந்தக் கட்டுரையின் கடைசி வரி, மேலே குறிப்பிட்டுள்ள, ஹரிகிருஷ்ணன் கட்டுரைகளையும் சேர்த்து வாசிக்கச் சொல்லி முடிகிறதுபாரதிகவிஞனும் காப்புரிமையும் (keetru.com). (இதில், கம்யூனிஸ்ட் தலைவர் எம் எஸ் நம்பூதிரிபாட் அவர்களது எழுத்துக்களின் காப்புரிமை, கட்சியிடம் உள்ளது என்ற குறிப்பு வருகிறது. எம் எஸ், அவர்கள் தமது சொத்து என கருதியது யாவையும் இயக்கத்திற்கு வழங்கிவிட்டவர்ஃபிரண்ட்லைன் இதழில் அவர் எழுதி வந்த கட்டுரைகளுக்கு, அந்த பத்திரிகை மதிப்பூதியம் வழங்க விரும்பியபோது, கட்சியின் பெயருக்கு அதைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்ட தோழர் அவர்). 

பாரதியார் பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமை பெற்றிருந்த  ஏவிஎம் நிறுவனம், 1947, 48, 49 ஆண்டுகளில் வெளியான தங்களது மூன்று முக்கிய படங்களிலும், சில பாடல்களை இணைத்திருந்தது. நாம் இருவர், வேதாள உலகம், வாழ்க்கை மூன்றுக்குமே அருமையாக இசை அமைத்திருந்தவர் ஆர் சுதர்சனம் அவர்கள். பேபி கமலா, லலிதா (பத்மினி) நாட்டியத்தில், வேதாள உலகம் படத்தில் இடம் பெற்றதீராத விளையாட்டுப் பிள்ளைபாடலை ரசிக்க ஒருவர் ஆத்திகராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. டி கே பட்டம்மாள் இப்போது நமக்காக மீண்டும் உயிர் பெற்று வந்து இசைப்பது போல் ஒலிக்கும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் நெகிழ்ச்சியுறாது இருக்க முடிவதில்லை





ஜதிகள் மெல்ல வேகம் பிடித்து, சுவாரசியமான அடவுகளோடு கமலா, கண்ணன் வரவைக் குறிப்பால் உணரும்படி, புல்லாங்குழலிசை புறப்படும் தருணம் கண்களில் வெளிப்படுத்தும் பாவங்கள், பாடல் முழுக்க இன்னும் பல்வேறு வண்ணங்களில் உடல் மொழியில் விரியும் நேரம், பாடலின் மீதான கவனத்தையும் கோரும் பட்டம்மாள் அவர்களது அமுதமாகப் பொழியும் குரல் !  

தின்னப்பழம் கொண்டு தருவான்எனில் வெவ்வேறு நாள் வெவ்வேறு பழம் கொண்டு வருவான் அல்லவா, அன்றாடம் நடக்கும் சேட்டை அல்லவா, அதற்கேற்ப இந்த அடியை ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதமாகக் கொண்டு வந்திருப்பார் டி கே

 ‘என்னப்பன் என்னையன்என்று கெஞ்ச வைக்கும் இடத்தில் கேட்பவரைக் கொஞ்ச வைக்கும் குரல் அது. ‘அழகுள்ள மலர் கொண்டு வந்தேஎன்ன அழகழகாக வந்து விழும் அந்த சொற்கள், அதற்கேற்ப மலர்களை எடுப்பதும், தொடுப்பதும், அள்ளியள்ளிக் கையால் பந்தாக விசையோடு உருட்டும் நாட்டிய அழகும், ‘அழ அழச் செய்துவிட்டுக் காட்டும் அழகுமாகக் குறும்புக்காரன் மீது அரும்பும் மோகத்தில் தொடரும் நடனம்

புல்லாங்குழல் கொண்டு வருவான்என்ற இடத்திற்கேற்ப மதுரமாகப் பொழியும் குழலிசை. ‘கள்ளால் மயங்குவது போலேஎன்ற இடத்தில் சொக்கவைக்கும் டி கே அவர்களது குரல் போலவே கமலாவின் பாவங்களும் கிறக்கத்தை வெளிப்படுத்தும்

தமது திறமை, பங்களிப்பு, சாதனைக்கு ஏற்ப அதிகம் பேசப்படாத பி ஆர் பந்துலு (அவரது நூற்றாண்டு கண்டுகொள்ளாமல் நழுவிப்போனது, தமிழகத்தில்) அவர்களது கப்பலோட்டிய தமிழன் படத்தில் இசை மேதை ஜி ராமநாதன் இசையமைப்பில் மகாகவி பாடல்களே முழுமையும் இடம்பெற்றன

சீர்காழி கோவிந்தராஜனும், திருச்சி லோகநாதனும் தங்கள் ஆவிசோர இழைத்துப் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் மகத்தானவை. ‘வந்தே மாதரம் என்போம்‘, ‘நெஞ்சில் உரமுமின்றி, ஓடி விளையாடு பாப்பாபோன்ற பாடல்களை சீர்காழி கோவிந்தராஜன்  தமது வெண்கலக் குரலில் அழியாப்புகழ் உடைத்தாகச் செய்தார். ‘உப்பென்றும் சீனியென்றும் உள்நாட்டுச் சேலை என்றும்என வரும் இடமும் சரி, ‘சொந்தச் சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும்என்று தொடங்கி வரும் பகுதியும் நெகிழ வைக்கும்.



தண்ணீர் விட்டோ வளர்த்தோம்‘, ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்‘  இரண்டும் திருச்சி லோகநாதன் குரலுக்கு என்றும் புகழ் சேர்ப்பவை. ‘என்றெம தன்னை கை விலங்குகள் போகும்என்று தொடுப்பும், ‘என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்என்ற முடிப்பும், லோகநாதன் குரலில் எப்போது கேட்டாலும் கரைய வைப்பவை பி லீலாவும் உருக வைப்பார்.

காற்று வெளியிடைக் கண்ணம்மா‘, பாரதியின் கண்ணன் பாடல்களில் அவனது தொடர் கவித்துவச் செறிவின் அசாத்திய புனைவுகளில் இனிமையாக ஒலிப்பதுபாடல் நெடுகநின்றன்‘, ‘என்றன்எனும் சொல்லாட்சி உள்ளூறும் காதலை இன்னும் ஆழமாகப் பரிமாற வைக்கிறது. ‘அமுதூற்றினையொத்த இதழ்களும், நிலவூறித் ததும்பும் விழிகளும்….’ ஆஹா.. ‘நீ எனது இன்னுயிர் கண்ணம்மாஎன்பதை விட காதலை வேறெப்படி சத்தியம் செய்ய? ‘துயர் போயின, போயின துன்பங்கள்என்பதை விட, அன்பினை வேறு எப்படி மெய்ப்பிக்க

பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசீலா குரல்கள் தான் இந்தப் பாடலுக்கு என்று சிந்தித்த ஜி ராமநாதன் அவர்களது மேதைமை எத்தனை போற்றுதற்கு உரியது. கண்ணம்மாவை நோக்கிய காதல் கவிதையை, ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் கொண்டாடிக் காதலிக்கும் இசைப் பாடலாக மலரச் செய்த இன்ப ரசனை அபாரமானது. அவனும், அவளும் காதல் இருவர் கருத்து ஒருமித்துக் களிப்புறும் காட்சி, காண்போர்க்கும் பற்றிக் கொள்ளும் ஒரு காதல் அக்கினிக் குஞ்சுஅதைத் தான்உயிர்த் தீஎன்று பாடலினுள் சொல்லி விட்டிருக்கிறான் போலும், மகாகவி!



https://www.youtube.com/watch?v=ZrQqnKNBkds



ஓர் அழகான ஹம்மிங் பரவுகிறது, பி சுசீலா குரலில்….அந்தக் காற்று வெளியிடையில் தான் அடுத்து காதல் உரையாடலே தொடங்குகிறதுரம்மியமான சூழலை உணர்த்தும் மெல்லிசையைத் தொடர்ந்து, ‘காற்று வெளியிடைக் கண்ணம்மா…’ என்ற பல்லவியை எடுக்கையில்பி பி ஸ்ரீனிவாஸ் பாடலை இசைப்பதில்லை, மெல்ல நடந்து சென்று காதல் இல்லத்தின், உள்ளத்தின் கதவை இலேசாகத் தட்டுகிறார், உடனே, பி சுசீலா, ஹா ஹாஹா என்று ராக ஆலாபனையில் ஏற்படுத்தும் திறப்பில், ‘நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்என்று முதல் தாக்கல் கொடுத்துவிடுகிறார். போதாதா,  பதில் காதலை சுசீலாஅதே சீட்டை வாங்கிப் பின்பக்கத்தில், அமுதூற்றினை ஒத்த இதழ்களும்என்று எழிலாக எழுதத் தொடங்க, பிபிஎஸ், ‘யானும் அவ்வண்ணமே கொஞ்சும்…’ என்று அதே வரிகளை இன்னும் இழைக்கிறார்

ஆனால், பி சுசீலா, ‘பத்து மாற்றுப் பொன்னொத்த மேனியும்என்று அந்தக் காதல் பரவசத்தை அடுத்தடுத்த படிநிலைக்கு உயர்த்திக் கொண்டுபோய் நிகழ்த்தும் ராக ஆலாபனை அந்தக் காதலை மேலும் கொண்டாடுகிறதுஅதற்கான பதிலை, பிபிஎஸ், அடுத்த சரணத்தில்நீ எனதின்னுயிர் கண்ணம்மாஎன்ற வரியில் கொடுப்பார். அதுவும் எப்படி, மென்மையின் மெல்லானது யாதெனின் மென்மையின் மென்மையே மெல்லானது என்று காதல் குறளைக் குரலில் ஆலாபனையாக எடுப்பார்.  

தொடர்ந்து, ‘எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்என்று அவர் உருகவும்அப்புறம் துயரோ, துன்பமோ எப்படி உறைய முடியும், ‘போயின போயின‘  என்று அழுத்தமாகச் சொல்கிறார் சுசீலாஅடுத்த வரிகள் காதலின் அடுத்த கட்டம்.   ‘கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்தினிலேஎன்னவெல்லாம் நிகழும் என்பதன் நெகிழ்ச்சி அது! அதெல்லாம் சொல்லில் வருமா, ‘கண்ணம்மாஎன்று அழைத்தால், ‘உம்என்ற ஒற்றைச் சொல்லன்றி வருவது வேறென்ன….வாய்ச்சொற்கள் என்ன பயனுமில அப்படியான காதலில், ஆனாலும், ததும்பிப் பொழிகிறார், பிபிஎஸ், என்றன் வாயினிலே அமுதூறுதே என்று!   அது தொடக்கத்திலேயே சொல்லப்பட்டு விட்ட முகவரி தானே!

ஜெமினி கணேசன், சாவித்திரி அந்தக் காட்சியில் இன்பம் பொங்க இழையோட விடும் காதலைப் பாழும் மனசு தான் வருத்தமும், கழிவிரக்கமும், கோபமும் இன்றிப் பார்க்கக் கற்கவில்லை.

டந்த வாரக் கட்டுரையை மிகத் தற்செயலாக, இதுவரை அறிமுகமற்ற ஒருவருக்கு அனுப்ப, வியப்புக்குரிய பதில் வந்தடைந்தது. இதே இணையதளத்தில், சிறுகதைகள் பகுதியில், மொழி பெயர்ப்பு சிறுகதைகள் அருமையாக எழுதி வரும் கார்குழலி அவர்களைப் பாராட்டி அனுப்பிய அஞ்சலைத் தொடர்ந்து, 29வது கட்டுரை வாசிக்கக் கேட்க, இசை மேதை எம் பி சீனிவாசன் அவர்கள் உருவாக்கத்தில், இப்போதும் இயங்கி வரும்  ‘சேர்ந்திசைக் குழுவில் தாமும் ஓர் உறுப்பினர் என்றும், மற்றவர்களுக்கும் இசை வாழ்க்கை இணைப்பைப் பகிர்ந்து கொண்டதாகவும் தமது நெகிழ்ச்சியைத் தெரிவித்தார்

Image
எம் பி சீனிவாசன்

எம் பி சீனிவாசன், தேச விடுதலை போராட்ட காலத்தில், காசி பல்கலைக் கழக மாணவராக ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அதை எப்போதும் பெருமையோடு நினைவு கூர்வார், 90 கடந்த நிலையிலும், வற்றாத நினைவாற்றல் மிக்க கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன். தீக்கதிர் ஏட்டிற்கு அவர் அனுப்பி இருந்த கடிதம் ஒன்றில் மிகச் செறிவாக அவர் வழங்கி இருக்கும் வரலாறு பாருங்கள்:  

எம் பி சீனிவாசன் அவர்களது  தாத்தா வேளாண்கல்லூரியின் முதல் இந்திய முதல்வராவார். எனது தந்தையின் உற்ற நண்பர். அவரது தந்தை   எம்.ஆர்.பாலகிருஷ்ணன் வேளாண் கல்லூரிப் பேராசிரியர், வேளாண் நூல்களை முதன்முதலாகத் தமிழில் கொணர்ந்தவர். தூதுவராக இருந்தது மற்றொரு சகோதரர். எனது அண்ணன் .சீ.கண்ணனை கம்யூனிஸ்ட் ஆக்கியவர் எம்.பி.எஸ். இருவரும்  (தேச விடுதலை போராட்ட காலத்தில்தலைமறைவு வாழ்க்கையில் இருந்துள்ளனர்எம்.பி.எஸ்ஸின் வாழ்க்கை இணையர் விடுதலை வீரர் சைஃபுதீன் கிச்சலுவின் மகள், அவர்களது காதல் திருமணம். கோவையில் எனது பள்ளிக்கு வந்து மாணவர்க்குச் சேர்ந்திசை பயிற்சி அளித்தார். அச்சமயம் இந்திரா காந்தி கொலையுண்ட நேரம்மத நல்லிணக்கம் போற்றி ஒரு பாடலையும் சேர்த்தார். மனிதநேயமிக்க சிறந்த சிந்தனையாளர்.”

அசாத்திய அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கை வாழ்ந்து மறைந்த இந்த மாமனிதர்களையெல்லாம் இப்போதைய சமூகம் எப்போது அறிந்து கொள்ளும், எப்போது கொண்டாடும்? மானாமதுரை பாலகிருஷ்ணன் சீனிவாசன் என்று எம் பி எஸ் பெயரை அடையாளப்படுத்தும் ஓர் எளிய வலைப்பூ பதிவில், மூத்த படைப்பாளி நாக்பூர் காஸ்யபன் அவர்கள் கண்ணீர் மல்கும்படி அவரது தியாக மனப்பான்மையை எழுத்தில் வடித்திருப்பார். ( kashyapan: பாம்புப் பிடரனும் எம்.பி.எஸ் அவர்களின் இசையும்—3 ). எம் பி எஸ் வரலாற்றை, அவரது ஆக்கத்தில் விளைந்த அற்புதமான அரிய இசைப் பாடல்களையும் சேர்த்து, மிகுந்த தேடலோடு ஒரு நூலாக்கத்திற்காக சிறப்பாகத் தொகுத்துக் கொண்டு வருகிறார் துடிப்பும், ரசனையும், ஆவேசமும் மிக்க படைப்பாளி முகமது இக்பால்!

லையாள திரையுலகில் அதிகம் அறியப்பட்டிருக்கும் எம் பி எஸ், இங்கே தமிழில் வழங்கிய அருமையான பாடல்கள் அக்காலத்தில் பேசப்பட்டவை. சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழு உருவாக்கம் அவரது அரிய பங்களிப்புபாரதியின் பாடல்களில், ‘நல்ல காலம் வருகுதுசேர்ந்திசையில் கேட்டவர்கள், குடுகுடுப்பைக்காரர் எதிரே இருப்பது போன்றே உணர்வார்கள், அந்த இசைக்கோவையில், குடுகுடுப்பையும் சேர்ந்து ஒலிக்கும் வாய்மொழியில்

பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் பாடலை,அத்தனை மிடுக்கோடு இசை அமைத்திருப்பார் எம் பி எஸ். அதன் தொடக்கமே, உற்சாகம் அள்ளும். ஒரு வரிசை பாடகர்கள் ஒரு வரியும், அடுத்த வரியை இரண்டாம் வரிசையில் உள்ளோருமாகப் பாடல் விரிந்து கொண்டே செல்லும், அதில்  ஹா.. என்ற அழுத்தம், நீண்டதொரு ஹம்மிங் அல்லது முன்னவர்கள் பாடியதையே வேறு ஒரு வழியில் இசைத்தல் என கற்பனையின் வீதிகளில் மகாகவியின் இந்த ஒப்பற்ற பாடலின் சுவையைக் கூட்டியிருப்பார் எம்பிஎஸ்.  

கடைசி பகுதிகளில், ‘ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்என்ற வரி, ஆயுதம் காகிதம் செய்வோம் செய்வோம் என்று அடுத்துப் பாடுகையில் அம்சமாக இருக்கும். அதே சரணத்தில், ‘ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்என்ற அடியின் உறுதியும், அதற்குமேல் சென்று, ‘உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்என்ற இடத்தில் நெஞ்சைத் தொட்டுக் கண்களைக் கலங்க வைத்துவிடும். ஒவ்வொரு சரண முடிவிலும் ஒலிக்கும் ஹா…. என்ற ஒற்றை உரத்த சொல், மகாகவியின் பாடலுக்கும் தலைப்பாகை கட்டிவிடும்.





சேர்ந்திசைப் பாடல்கள் வரிசையில்மற்ற மொழிகளில், தெலுங்குப் பாடலானபில்லல்லாராபாடல், எழுபது எண்பதுகளில் வானொலி கேட்டோர் மறந்திருக்க முடியாதது. அத்தனை உணர்ச்சிப் பெருக்கு அந்தப் பாடல். ‘இந்து தேஷ் கி நிவாஸிஎன்ற இந்திப் பாடலும் அப்படியே. சாதி, இன, மத, மொழி எல்லைகளுக்கு அப்பால் ஒருமைப்பாடு போதிக்கும் குழந்தைகளுக்கான கீதங்கள் அற்புதமாக இசையமைத்திருப்பார் எம் பி எஸ்.

எஸ் எஸ் ராஜகோபாலன் அவர்கள் குறிப்பிட்டிருந்த மத நல்லிணக்க சிறப்புப் பாடல், ‘அனுமதியோம் அனுமதியோம் நாட்டைத் துண்டாட அனுமதியோம்என்பது. மிக அதிகம் தொலைக்காட்சியிலும் ஒலித்த அருமையான ஆக்கம் அது. ஆனால், இன்றும் இரவுகளில் எப்போது நினைத்துக் கொண்டாலும் புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கும் பாடலை, இணையத்தில் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை. ஆனால், அந்த இசைத்தட்டு உள்ளே சுழல்வது நிற்கவில்லைஅடுத்த வாரம் வரை காத்திருப்போம் அதன் சிலிர்க்க வைக்கும் சில வரிகளை விவாதிக்க….





இணையத்தில் தற்செயலாக வேறொன்று கிடைத்ததுஎம் பி எஸ் அவர்கள் 1988ல் மறைந்த போது, அவரது நண்பரும் சிறந்த படைப்பாளியான கவிஞர் புவியரசு அவர்கள், ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரேஎன்ற எம் பி எஸ் அவர்களது புகழ் பெற்ற இசைப்பாடலின் மெட்டிலேயே எழுதிய அஞ்சலிப் பாடலான, ‘சங்கீதச் சோலையில் பூத்த மலரேஎனும் பாடல் மூலம், இந்த செப்டம்பர் மாதத்தில், கொரோனா கொடுமையால் நேரே இசைக்க இயலாமல் காணொளியில் அசாத்திய சேர்ந்திசை இசைத்து எம் பி சீனிவாசன் அவர்களுக்கு மீண்டும் வணக்கம் செலுத்தி உள்ளனர் சென்னை சேர்ந்திசைக் குழுவினர். அதன் சிறப்பம்சம், மூத்த கலைஞர்களும், இப்போது குழுவில் தொடரும் பாடகர்களும் ஒரு சேர இசைத்துள்ள பாடல் அது. இதயக் கனவுகள் ஈடேறும் சத்தியம் என்ற வரிகள் அதில் சிலிர்ப்பூட்டுபவை

எம் பி எஸ் அவர்களைப் பேசுகையில், அவரது மாணவி என்ற பெருமிதத்தோடு மகத்தான பங்களிப்பு தொடரும் ஆசிரியை ராஜராஜேஸ்வரி அவர்களைச் சொல்லாமல் எப்படி, வங்கி ஊழியர் கலைக்குழு பற்றிச் சொல்லாமல் எப்படி, அதன் இசைப்பயணத்தில் டி கே பட்டம்மாள் அவர்களே பார்த்துக் கேட்டு வாழ்த்தி ஆசி கூறிய உற்சாகக் கிளர்ச்சி கொள்ளும் தருணங்களை அசைபோடாமல் எப்படி…. காத்திருப்போம் அதற்கும்!

Image
M B S WITH WIFE ZAHIDA

உயிர்களிடத்து அன்பும், நேயமும், அறவழியும் உரத்து எடுத்துச் சொல்ல வேண்டிய காலம் இதுஇறை உணர்வை, உணவுப் பழக்கத்தை, மத நம்பிக்கையை எல்லாம் முன்வைத்து வெறுப்பு அரசியலுக்கு மிக எளிய மக்களைக் கூட இழுத்துக் கொள்ளத் தக்க சக்திகளின் கையோங்கி விடஅனுமதியோம் அனுமதியோம்என்று பாரதியின் பெயரால் (ஏனெனில் அவரையும் எடுத்துக் கொண்டு போகப் பார்க்கின்றனர்), மகத்தான இசைக் கலைஞர்களின் உன்னதமான பங்களிப்புகளின் பெயரால் உறுதி எடுக்க வேண்டிய நேரமும் கூட.

 

(இசைத்தட்டு சுழலும் ….)

தொடர் 1 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 2 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 3 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 4 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 5 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்



தொடர் 6 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 7 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 8 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 9 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 10 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 11 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 12 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 13 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 14 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 15 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 16 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 17 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 18 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 19 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 20 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும்  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 21 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 22 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 23 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 24 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 25 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 26– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 27– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 28– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 29– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன் 

 



3 thoughts on “இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. சக உயிர்களிடத்து அன்பும், நேயமும், அறவழியும் உரத்து எடுத்துச் சொல்ல வேண்டிய காலம் இது. இறை உணர்வை, உணவுப் பழக்கத்தை, மத நம்பிக்கையை எல்லாம் முன்வைத்து வெறுப்பு அரசியலுக்கு மிக எளிய மக்களைக் கூட இழுத்துக் கொள்ளத் தக்க சக்திகளின் கையோங்கி விட ‘அனுமதியோம் அனுமதியோம்‘ என்று பாரதியின் பெயரால் (ஏனெனில் அவரையும் எடுத்துக் கொண்டு போகப் பார்க்கின்றனர்), மகத்தான இசைக் கலைஞர்களின் உன்னதமான பங்களிப்புகளின் பெயரால் உறுதி எடுக்க வேண்டிய நேரமும் கூட.

    உண்மை
    உறுதி ஏற்போம்

  2. இம்முறை நீண்ட கட்டுரையானாலும் நிறைய விசயங்களை உள்ளடக்கியுள்ள நல்ல கட்டுரை. எவ்வளவு விசயங்களை தெரிவிக்கிறார் என்பதைவிட இவ்வளவு அபாரமா எழுதுவது மலைக்க
    வைக்கிறது. நன்றி

  3. இம்முறை நீண்ட கட்டுரையானாலும் நிறைய விசயங்களை உள்ளடக்கியுள்ள நல்ல கட்டுரை. எவ்வளவு விசயங்களை தெரிவிக்கிறார் என்பதைவிட இவ்வளவு அபாரமா எழுதுவது மலைக்க
    வைக்கிறது. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *