வாசகர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் !

கடந்த வார விவாதப் பொருள் குறித்து நிறைய அன்பர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்

தகை மலைச் சாரலில் வசிப்பவர் ஒருவர், கண் பார்வை பாதிப்புக்குள்ளாவது எத்தனை வேதனையானது, அதுவும் ஒரு படைப்பாளிக்கு, ஆய்வாளருக்கு, தேடித் தேடி வாசிக்கத் துடிக்கும் வேட்கை ஊற்றெடுக்கும் ஓர் உள்ளத்திற்கு என்பது இன்னமும் துயரமானது. இத்தனையும் கடந்து, அண்மையில், ஓர் அருமையான நூலை மொழியாக்கம் செய்தவர் அவர். அப்படியான அறிஞர் எஸ் வி ராஜதுரை அவர்கள் உள்ளன்போடு வாசித்துதோழர் கே குணசேகரன் அவர்களையும், படைப்பாளி இன்குலாப் அவர்களையும் நினைவு கூர்ந்தது குறித்து  மிகவும் நெகிழ்ந்து உடனே பதிலும் அனுப்பி இருந்தார்.   

தோழர் எஸ் வி ஆர் மொழி பெயர்த்திருப்பது,  யானிஸ் வருஃபாகிஸ் எனும் கிரேக்க நாட்டின் முன்னாள் நிதியமைச்சர், பொருளாதாரம் பற்றி மகளுடன் ஓர் உரையாடல் என்று எழுதி இருந்த முக்கியமான புத்தகம். நவீன தாராளமயம் ஏற்றத்தாழ்வுகளை இன்னமும் ஈவிரக்கமின்றி எப்படி ஆழமாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை வாசகரின் மனத்திற்குப் பேசும் ஒரு பொருளாதார நூல் அது.  

தமிழ் பிரதி வருவது பற்றிய அறிவிப்பைப் பார்த்ததும், அதன் ஆங்கில நூல் பற்றி தி இந்து ஏட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜி சம்பத் அவர்கள் எழுதி இருந்த விமர்சனத்தை இணையத்தில் இருந்து எடுத்து இணைத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ளவும், அருமையான பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன், ‘எப்படி உடனே அதைத் தேடி எடுக்கத் தோன்றியது’ என்று கேட்டார்

Image
க்ரியா ராமகிருஷ்ணன்

அப்படித் தான் அவரோடு பேசியது. பரஸ்பரம் அறிமுகம் அற்றவர்கள், அதிலும், ஓர் எளிய வாசகரை அவர் அறிந்திருக்க முடியாது, ஆனாலும், ஒவ்வொரு புத்தகக் கண்காட்சி நேரத்திலும், க்ரியா ஸ்டால் உள்ளே சென்று வணக்கம் தெரிவித்து வருவது பல ஆண்டு நடைமுறை என்று சொல்லவும், மிகவும் காதலாகிப் போனார்எழுதுவது உண்டா என்று கேட்கவும், அடிப்படையில் இசை ஞானம் இல்லாமல் வெறும் ரசனை சார்ந்து எழுதி வரும் இந்த இசை வாழ்க்கை பற்றி குறிப்பிட, ஆஹா, நானும் அப்படித்தான், இசை ரசிப்பதில் பேரார்வம் உண்டு என்று கொண்டாடினார். அவர் மூலமே எஸ் வி ஆர் அவர்களிடம் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மிகச் சில மாதங்களுக்குள் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களைப் பிரிய நேர்ந்தது மிகுந்த துயர் அளித்ததுசெய்தி வந்ததும், உடனே எஸ் வி ஆர் அவர்களிடம் தான் பேசத் தோன்றியது.

எஸ் வி ஆர் மொழி பெயர்ப்பில், வருஃபாகிஸ்  அவர்களது நூலின் முதல் அத்தியாயம் இப்படி தொடங்குகிறது:  “எல்லாக் குழந்தைகளும் அம்மணமாகவே பிறக்கின்றன. ஆனால், சீக்கிரமே சில குழந்தைகளுக்கு அதி நவீன மோஸ்தர்களில் இருக்கும்  ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளில் வாங்கப்படும் விலை உயர்ந்த ஆடைகள் உடுத்தப்படுகின்றன. அதே வேளை, பெரும்பாலான குழந்தைகள் கிழிசலும்  கந்தலுமான ஆடைகளை  அணிகின்றன….”

குழந்தைகளுக்குப் புரியும் மொழியில் பேச வேண்டும் என்னும் கிரேக்க அறிஞரின் இதயத் துடிப்பு அது. அறிவார்ந்த விஷயங்களைக் கூட  உள்ளத்திற்குக் கடத்த வேண்டியது முக்கியமாகிறது. இல்லையெனில் யாருக்கான செய்தியும் உரியவர்களுக்குக் கேட்கமாலே போய்விடும்.

மக்சீம் கார்க்கியின் புகழ் பெற்ற தாய் நாவலின் நாயகன் பாவெல் விலாசவ், சதுப்புக் காசு போராட்டத்தில் தொழிலாளர் மத்தியில் ஆவேசமாகப் பேசி முடித்ததும், கரிய தாடியும், கருத்த கண்களும் கொண்ட பழுப்பு நிற முகத்தினன் ரீபின், “நீ நன்றாகத்தான் பேசுகிறாய், ஆனால், இதயத்தைத் தொடவில்லை. இதயத்தின் மத்தியிலே தான் தீப்பொறி விழ வேண்டும். மக்களை அறிவைக் கொண்டு வசப்படுத்த முடியாது…. இதயத்தோடு பேசுஎன்று சொல்லும் இடம் மிகவும் நுட்பமானது

இசை, இதயத்தோடு பேசுகிறது.  வர்க்க வேறுபாடுகளை மிக சாதாரண மொழியில் ஓர் இசைப்பாடல் தொட்டுக் காட்டிவிட சாத்தியமாகிறது.

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப் பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி, கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டுக் கலயங்கள் ஆடுது சோறின்றி, இதயங்கள் ஏங்குது வாழ்வின்றிஎன்ற வரிகளில் இரண்டு வெவ்வேறு உலகங்களின் வாழ்க்கையை –மலையாளப் பாடலைத் தழுவி, அருமையாக எழுதி இருப்பார் கண்ணதாசன்.  





தாய்மையின் கனிவில் இழையும் பி சுசீலாவின் குரல் எனில், உண்மையின் கசப்பில் வெளிப்படும் உள்ளத்தை எதிரொலிக்கும் டி எம் சவுந்திரராஜன் குரல்.  புகழ்பெற்ற தேவராஜன் மாஸ்டர் இசையில், துலாபாரம் திரைப்படத்தின் ‘பூஞ்சிட்டுக் கன்னங்கள்பாடல் எழுபது, எண்பதுகளில்   வானொலியில் அதிகம் ஒலித்த நினைவுகள் உண்டு

பொங்கல் பிறந்தாலும், தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலேஎன்ற எடுப்பில், டி எம் எஸ் கடத்தும் வெப்பம் நேர்கோட்டில் வந்து பாயும் எனில், ‘பொன்னுலகம் கண்ணில் காணும் வரை, கண்ணுறங்கு, கண்ணுறங்குஎன்ற இடத்தில் விம்மும் சுசீலாவின் குரல், அந்த ஒரே ஓர் இதயத்தின் கேவல் அல்ல. எண்ணற்ற பாட்டாளிகளின் குமுறல் தான் அந்தத் தாலாட்டு

இரும்புத் திரை‘ படத்தின் கையிலே வாங்கினேன் பாடல் பற்றிய விவரிப்பை வாசித்ததும், துலாபாரம் படத்தின் பாடல்களுக்குத் தாவிச்சென்று ஆழ்ந்து விட்டது மனம் என்று குறிப்பிட்டார் நண்பர் முகமது இக்பால்.  ‘இழந்து போவது விலங்குகளே, எதிரே உள்ளது பொன்னுலகம்என்று நேரடியாக கம்யூனிஸ்ட் அறிக்கை வாசகங்களை டி எம் சவுந்திரராஜன் உரத்து இசைத்த, ‘துடிக்கும் இரத்தம் பேசட்டும்பாடல் பற்றிய உணர்ச்சியில் ததும்பிய அவரிடம், ‘துயர முடிவான படமாயிற்றே அது’ என்று குறிப்பிடவும், ‘உண்மை தான்….தோப்பில் பாசி அவர்களது கதையை வைத்து எடுக்கப்பட்ட படம்’ என்றார் அவர்

தற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த உனக்காக நான் படத்திற்காக எழுதிய பாடலில் கண்ணதாசன், ‘இரு வேறுலகம் இது என்றால் இறைவன் என்பவன் எதற்காக ?’ என்று பல்லவியின் நிறைவில் கேட்டிருப்பார். இறைவனைக் கேள்விக்கு உட்படுத்தும் அவரது எத்தனையோ பாடல்கள் நினைவில் முட்டுகின்றன. இதே பாடலின் இன்னொரு சரணத்தில்,  ‘இரு வேறியக்கம் இது என்றால் இறைவன் என்பவன் எதற்காக?’ என்று  முடித்திருப்பார்





பொன் நகை அணிந்த மாளிகைகள், புன்னகை மறந்த மண்குடிசை, பசி வர அங்கே மாத்திரைகள்பட்டினியால் இங்கு யாத்திரைகள்என்று பொருளடர்த்தி மிக்க எளிய சொற்களின் கோவையாகப் போகும் அந்தப் பாடலை, எம் எஸ் விஸ்வநாதன் அவர்களது நேர்த்தியான இசையில் கே ஜே யேசுதாஸ் தமது உருக்கம் சுரக்கும் குரலில் சிறப்பாக இசைத்திருப்பார்.  ‘பட்டம் போல் அவர் பளபளப்பார், நூல் போலே இவர் இளைத்திருப்பார்என்ற வரியும் சிறப்பாக வந்திருக்கும்ஆனால், துயரமான காட்சிக்கான சோகத்தின் பிழிவாகவே அமைந்திருக்கும் இந்தப் பாடலும்.

சுய கழிவிரக்கம், பரிதாபம், துயரம் போன்றவற்றுக்கு அப்பால், மனித வாழ்க்கையின் தன்மையைக் கண்டுணர வேண்டி இருக்கிறது. ‘கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவைஎனும் அறிவோடு தேடிக் கண்டடைய வேண்டி இருக்கிறது

றுமைவேலை இல்லாத நிலையிலும் உற்சாக நண்பர்களாகத் திரியும் இளைஞர்களின் குரலாக, நெஞ்சிருக்கும் வரை படத்தின் பாடல் ஒன்று உண்டு. நம்பிக்கையின் சீட்டியடித்துக் கொண்டே மலரும் விசில் பாடல்களில் ஒன்று அது

நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்‘  என்பது ஒப்பற்ற ஒரு தன்னம்பிக்கை வரி. அது தான் பல்லவி. ‘துணிந்தால் தானே, எதுவும் முடிய, தொடர்ந்தால் தானே பாதை தெரிய…’ என்ற வரிகள் முக்கியமானவை. ‘சிரித்தால் தானே கவலை மறைய, சில நாள் தானே சுமைகள் குறையஎன்ற இடம் ஆகப்பெரும் ஊக்க மொழி!





எம் எஸ் வி அவர்களது குஷியும் குதூகலமும் பொங்கும் மெட்டு. அவரது அருமையான இசைக்கோவையில் இதமான ஒரு கதியில் நடைபோட்டுச்  செல்லும் பாடல் அது.

பாடல் முழுவதும் அதன் தாளகதிக்கேற்ற தடத்தில்  டி எம் சவுந்திரராஜன் தனது குரலை ஒலிக்க, ஹம்மிங் கொடுக்கவும், பதில்கள் விடுக்கவுமாக  எம் எஸ் ராஜா, சதன் குரல்கள் உடன் இழைக்க, உல்லாசத்தை வெளிச்சப்படுத்தும் இசைக்கருவியாக விசில் ஒலி பரவிவரஒரே  துள்ளல் ஓட்டமும், துடிப்பும் கொண்டாட்டமுமாக இருக்கும்.  

பொங்கல் நாள் காலையில் வழக்கம்போல் பூம் பூம் மாட்டுக்காரர் இசை வாத்திய ஒலி கேட்டது. ஓடோடிப் போய்ப் பார்க்க, தலைப்பாகை, நெற்றியில் நாமம், வண்ண வண்ண உடை, ஒரு கையில் வட்ட வடிவில் உலோகத் தட்டு மணியடிக்க, அப்புறம் ஒரு சால்வை, சிறு நாயன இசைக்கருவியோடு மாட்டுக்காரர் நின்றார், மாட்டைத் தான் காணோம். அவரைக் கேட்கத் தோன்றவில்லை, வழக்கம்போல் அவருக்கான மரியாதை செய்தாயிற்றுஇந்த கொரோனா காலத்தில் அவரவரைத் தற்காத்துக் கொள்ளவே இத்தகைய கலைஞர்கள் படாத பாடு படுகையில், வாயில்லா ஜீவனை வேறு வைத்துக் கொடுமைப்படுத்தி யார் படியளப்பதுதொகையறா போல ஒரு சுருக்கமான இசை வாசித்து விட்டு அகன்றார்

வேலூரில், காஞ்சியில் வாழ்ந்த காலங்களில், பூம் பூம் மாட்டுக்காரர்கள் வந்தால், விருப்பமான பாடல்கள் சிலவற்றை வாசிக்கச் சொல்லிக் கேட்டுவிட்டே காசு போடுவார்கள் சிலர். அமர்க்களமாக வாசிப்பார்கள் சில நேரம். காஞ்சியில், பத்தாணிப் பாட்டி மனசு நிறைய அரிசி கொண்டு வந்து அவரது தோளில் தொங்கி முடிவற்று நீண்டுபோய்க் கொண்டிருக்கும் பையில் போட்டுவிட்டுப் போவார்சில நேரம் அருமையான வாசிப்பைச் சடாரென்று நிறுத்திவிட்டு, மணியடித்துத் தனது வருகையைப் பதிவு செய்யத் தொடங்கி விடுவார்கள்.

இன்றும், பின்பக்கத் தெருவில் பூம் பூம் மாட்டுக்காரரின் அசாத்திய வாசிப்பு கேட்டது, ‘வாராயென் தோழி’ வாசித்துக் கொண்டிருந்தார், ஏதோ கொஞ்சம் போல வாசித்துவிட்டு நிறுத்திக் கொள்வார் என்று பார்த்தால், சரணம் மாற்றி சரணம் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். அதிசயமாக, சிறிது நேரம் பொறுத்துபழையபடி வீட்டு வாசலில் பூம் பூம் இசை கேட்க, காலையில் தென்பட்ட அதே மனிதர் ! ‘நீங்க தானே அந்தத் தெருவில் வாராயென் தோழி வாராயோ பாடியது?’ என்று கேட்டதும், ‘இல்ல, நான் இல்லஎன்று மறுத்துவிட்டார், மீண்டும் ஒரு தொகையறா வாசித்துக்கொண்டு காதில் இருந்து மறைந்துவிட்டார். ஏக்கத்தோடு உள்ளே திரும்ப வேண்டியதாயிற்று.

அதே கண்கள்படத்தில் வேதா இசையில் வரும்பூம் பூம் மாட்டுக்காரன்‘ பாடலும் ஒரு காலத்தில் விரும்பிக் கேட்டவை வரிசையில் வானொலியில் ஒலித்தது தான்சிரிப்பும், கேலியும், கேளிக்கையுமாக ஒலிக்கும் அந்தப் பாடல், பி சுசீலா மிடுக்கான குரலில் கலகலப்பாக இசைத்த ஒன்று



https://www.youtube.com/watch?v=SrGxCY1Ncyo



அந்த எளிய பாடலிலும், குச்சு வீட்டுப் பெண்ணை யார் மணமகளாக ஏற்றுக் கொள்வார் என்ற சங்கதி, அத்தனை ஓட்டத்தின் இடையேயும் ஒளிந்திருக்கிறது. அதைமாமா சொன்ன பேச்சுக்கெல்லாம் ஆமாம் போட்டாண்டி, வீட்டை மட்டும் ஓட்டையின்னு குத்தம் சொன்னாண்டிஎன்ற வரிகளில் சுசீலா  வெளிப்படுத்தும் விதமே அசாத்தியமாக இருக்கும். அடுத்த சரணத்தில், ‘குச்சு வீட்டை மச்சு வீடா மாத்துவோமடிஎன்ற வரியினும் அழகாக, ‘கவலைப்பட்ட பொண்ணு மனச தேத்துவோமடிஎன்ற வரி சிறப்பாக வந்து சேரும். ‘கல்யாணத்த முன்ன நின்னு நடத்துவோமடி, பொண்ணையும் பிள்ளையும் சேத்து வச்சு வாழ்த்துவோமடிஎன்று இன்பச் சொற்களால் நிறைவடையும்.

யார் எப்போது எந்த இசையை எப்படி கொண்டு வந்து நமக்கு சேர்க்கின்றனர் என்பது தான் வாழ்நாள் வியப்பாக உள்ளது. காற்று காத்திருக்கிறது, ஒரு வார்த்தை, என் காதில் போட்டால் நான் கொண்டு வந்து சேர்த்துவிட்டுப் போகிறேன் என்பது அதன் மொழி.  

வங்கனூரில் வங்கிப்பணி வாழ்க்கையில், அதே ஊரில் முதிய நெசவாளர் ஒருவரது சிறிய இல்லத்தின் முன்பக்க அறையில் வாடகைக்கு இருக்கையில், ஒரு நாள் மாலை உரத்த உரையாடல் பின்பக்கத்தில் இருந்து கேட்டது, யாரோ உறவுக்கார மனிதர் வந்திருந்தார், ஆந்திர மாநிலத்தை அடுத்து இருந்த அந்த சிற்றூரில் தமிழ் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும், வட்டார வழக்கில் மொழி உருமாறி ஒலிக்கும். அப்படியான மொழியில் பேசிக்கொண்டிருந்த அந்த நடுத்தர வயது மனிதரை, இந்தப் பெரியவர், ஏன் சாமி, பேச்செல்லாம் இருக்கட்டும், சித்த பாட்டு ஒண்ணு எடுத்துக் கொஞ்சம் பாடேன் என்று கேட்டுக் கொண்டார். ஆஹா, அடுத்த நொடியே, பேசிய பேச்சுக் குரல் மாறி என்னவோர் இனிமையான குரலில் எடுக்கிறார் ஒரு பாடலை: ‘பாட்டுவித்தால் நான் பாடுகிறேன், பணிவித்தால் பணிகின்றேன்…’  என்று தொடங்கி, பதியே என்ற இடத்தில் ஓர் அழுத்தம் பொங்கத் தொடர, ‘ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால் உறங்குகின்றேன்என்று போகிறது பாடல். (வள்ளலார் திருவருட்பா என்பது அப்போது தெரியாது). அசர வைத்த அந்தப் பாட்டுக்காரர் மிக எளிமையாகக் கடந்து போனார் பின்னர்.

இப்படி நினைவு அடுக்குகளில் இசையாய் நிறைந்திருக்கும் வாழ்க்கையின் துளிகள் எத்தனை காத்திரமாக இருந்தாலும், அடுத்தடுத்த துயரச் செய்திகள் சோதித்துக் கொண்டே இருக்கின்றன அவற்றின் ஆற்றுப்படுத்தும் ஆற்றலை

Image
எழுத்தாளர் காஸ்யபன்

ந்தப் பொங்கல் நாளின் விடியற்காலையில் கண் விழித்ததே, எழுத்தாளர் காஸ்யபன் அவர்களது மறைவுச் செய்தியில் தான். மிகச் சிறந்த  ரசனைமிக்க வாசிப்புக்கும், உரையாடலுக்கும், எழுத்துக்கும் புகழ் பெற்ற படைப்பு மனசு அவருக்கு. இந்த இசை வாழ்க்கை தொடரை நூலாக்கம் செய்ய அறிவுறுத்தியவருள் அவரும் ஒருவர்அடுத்தவரைப் பற்றிய பாராட்டைத் தமது தன்னடக்கப் பட்டுத் துணியில் வைத்தே அவர் வழங்குவதை எண்ணற்ற முறை பார்த்ததுண்டு. இது, அவரது பதிவுகளில் ஒன்று. இசை குறித்தும், இசை சார் உரிமைகள் குறித்துமான பதிவின் தொடக்கத்தில் ஒரு வரி இந்த இசை வாழ்க்கை தொடரைத் தொட்டுப் போகிறது, அதன் அடுத்த முனையில், எத்தனை பரவசமிக்க செய்திகள் இருக்கின்றன பாருங்கள்:

இசை பற்றி தோழர் வேணுகோபால் அவர்கள் எழுதிவருகிறார். இந்த மனுஷனுக்கு எங்கிருந்து தான்  இவ்வளவு விஷயங்களும் கிடைக்கிறதோ  என்று மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டேன். அதைவிட பொறாமைப் பட்டேன் என்பதுதான் சரியாக இருக்கும். என் தாயார் சங்கீதம் படித்தவர். என் மூத்த சகோதரி அரிகேசவநல்லூர் முத்தையா பாகவதரிடம் பயின்றவர். என் துணைவியார் முத்து மீனாட்சி என்கிற வசந்தா வீணை, புல்லாங்குழல் மற்றும் மேற்கத்திய வாத்தியங்களை வாசிக்கக்க்கூடியவர்என் மகள் ஹன்சா இசைக்கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்து இசை பற்றிய சட்ட உரிமைகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்தவர்இந்த பூக்களோடு  சேர்ந்த நாரான என்க்குக் கொஞ்சம் இசை ஞானம் உண்டு ….”

கடந்த காலங்களின் இசை குறித்து, இசைக் கருவிகள், இசை வாணர்கள், பாடகர்கள் குறித்தெல்லாம் நுட்பமான பார்வையும், விஷய ஞானமும் மிக்கவரான தோழர் காஸ்யபன் (சியாமளம், அவரது இயற்பெயர்) ஆயுள் காப்பீட்டு ஊழியராகப் பணியாற்றுகையில் தொழிற்சங்க மேடையிலிருந்து முற்போக்குக் கலை, இலக்கிய தளத்திற்கு இடம் பெயர்ந்தவர்ஏராளமான படைப்பாளிகளோடு நெருக்கமாகப் பழகி வந்தவர்சிறுகதை, நாடகம் இவற்றில் பேரார்வத்தோடு தொடர்ந்து இயங்கியும் வந்தவர்

கடந்த ஆண்டுதமது பிறந்த நாளான செப்டம்பர் 12 அன்று, ஆருயிர் மகனைப் பறிகொடுத்த புத்திர சோகத்தில் மெல்ல மெல்ல சுரம் குறைத்துக் கொண்டே வந்த அந்த இசைத்தட்டு நேற்றிரவு சுழற்சியை நிறைவு செய்து நின்றுவிட்டதுசமரசமற்ற அந்தப் போராளியின்  கம்பீரமான  நினைவுக்கு இசை வாழ்க்கை கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.  

துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம். வேறென்ன சொல்ல…..

 

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]



தொடர் 1 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 2 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 3 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 4 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 5 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்



தொடர் 6 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 7 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 8 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 9 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 10 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 11 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 12 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 13 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 14 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 15 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 16 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 17 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 18 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 19 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 20 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும்  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 21 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 22 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 23 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 24 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 25 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 26– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 27– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 28– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 29– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 30– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 31 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 32:

இசை வாழ்க்கை 32: இசையில வாங்கினேன் எடுத்துப் போடல… – எஸ் வி வேணுகோபாலன் 



4 thoughts on “இசை வாழ்க்கை 33: இசையிருக்கும் நெஞ்சிருக்கும் வரை இசைத்தே தீருவோம் – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் வேணுகோபாலனின் எழுத்துக்கள் பாடல்களின் காலத்திறகு நம்மை கடத்தி சென்று விடுகின்றன. அறபுதமான அனுபவம் இல்லையா?

  2. இசை பற்றி தோழர் வேணுகோபால் அவர்கள் எழுதிவருகிறார். இந்த மனுஷனுக்கு எங்கிருந்து தான் இவ்வளவு விஷயங்களும் கிடைக்கிறதோ என்று மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டேன். அதைவிட பொறாமைப் பட்டேன் என்பதுதான் சரியாக இருக்கும்.

    உண்மை
    உண்மை

  3. கொஞ்ச ம் நீளமாக இருந்தாலும் மறைந்தவர் களையும் நினைவுகூறி நெகிழ்வான தாக ஆக்கியுள்ளார். நன்றி

  4. அருமை.. அசத்தல்.. தொடரட்டும் உங்கள் இசை பயணம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *