இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்



வாழ்க்கையில் செய்த இரண்டு நல்ல விஷயங்கள் உண்டு. ஒன்று நடனம், மற்றொன்று இசை. இளவயதிலிருந்தே நாட்டியத்தில் அத்தனை மோகம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடன நிகழ்ச்சி, இசை கச்சேரி தேடிப் போய் அமர்ந்து ரசித்ததுண்டு. நடனம் கற்பது, இசை பயிற்சி எடுப்பது என்பது இளமைக்காலக் கனவு. சொந்தமாக வருவாய் ஈட்டும்போது இவற்றில் இறங்குவது என்பது உள்ளாக இருந்திருக்கும் போலிருக்கிறது. இரண்டையும் கற்றுக் கொண்டது பற்றிய சுவாரசியமான செய்தி அறியக் கொஞ்சம் காத்திருங்கள்.

திரையிசைப் பாடல் என்றாலும், ராக ஆலாபனை மற்றும் ஸ்வரங்கள் அமைந்திருக்கும் பாடல்களில் அதிகம் உயிர் வைத்துக் கேட்பதுண்டு. நடனத்தோடு இயைந்த பாடல்களில் மேலதிகம் உயிர்!

கோவையில் முது நிலை படிப்புக்குப் போயிருந்த சமயம், எண்பதுகளின் தொடக்கத்தில், மணி மேல்நிலைப் பள்ளியில் வைத்துப் பார்த்த நினைவு, பத்மா சுப்பிரமணியம் அவர்களது பரத நிருத்தியம். தீம் தீம் கிட, திமி கிட திமி கிட தீம் தீம் கிட …..தலைக்குள் இராப்பகலாக ஒலித்துக் கொண்டே இருந்தது வாரக்கணக்கில். வேலூரில் பள்ளிப்படிப்பு காலத்தில், அப்பா நிறைய நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் அழைத்துச் செல்வதுண்டு, பத்மினி அவர்களது தசாவதாரம் நிகழ்ச்சி மிக மிக மங்கலாக நினைவில் இருக்கிறது.

தெருக்கூத்து மீது இருந்த காதல் இன்னும் தனித்துவமானது. விடுமுறைக்கு லலிதா சித்தி வீட்டுக்குப் போவது மாதிரி ஒரு சொர்க்கம் கிடையாது. வடாற்காடு மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே வாங்கூர் எனும் சிற்றூரில் அவர்கள் வசித்தபோது மகாபாரதக் கூத்து ஒரு நாள் பார்க்க முடிந்தது.
கட்டியக்காரன் அன்று அதகளம் செய்து கொண்டிருந்தார். சகுனியை அழைக்கவேண்டிய இடத்தில், ‘மாமா இங்கே வாரும், என் மயிரை சித்த பாரும்’ என்று அவர் இசைத்ததும் (கையால் தலை முடியைப் பிரித்து வேறு காட்டுவார்), மாமாவுக்கு மகா கோபம் வந்துவிடும், கட்டியக்காரனை அடிப்பதுபோல் நெருங்கிப்போய், என்ன மரியாதையில்லாமல் என்னென்னவோ உளறுகிறாய் என்று கேட்க, கட்டியக்காரன், ‘போங்க மாமா, உங்களுக்கு வயசு ரொம்ப கூடிப்போச்சு, காது சுத்தமா கேக்கறது இல்ல, கோபம் மட்டும் வருது’ என்று நையாண்டி செய்துவிட்டு, அதே மெட்டில் வரிகளை மாற்றிப் பாடுவார். ‘மாமா இங்கே வாரும், இந்த மயிலாசனத்தில் அமரும்’ என்று தானே சொன்னேன் என்பார். கூட்டத்தில் அதிரடி கைதட்டல் கேட்கும்.

ஆய்வாளர் – பேராசிரியர் கி பார்த்திபராஜா (அவரது ‘காயாத கானகத்தே’ தொகுப்பு பற்றி இந்தத் தொடரில் ஏற்கெனவே வாசித்திருப்பீர்கள்), ‘பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி’ இதழின் இம்மாத விருந்தினர் வரிசையில் ஆசிரியர் குழு கூட்டத்தில் ஆற்றிய உரை சுவாரசியமானது. காஞ்சியை அடுத்த குண்டையார் தண்டலம் தட்சிணாமூர்த்தி வாத்தியார் பற்றி அத்தனை அருமையாக அதில் பதிவு செய்திருந்தார்.

அண்ணனும், தம்பியும் பாரதக் கூத்தில் துரியன் – வீமனாக மகாபாரதக் கூத்தில் நடிக்கையில், பதினெட்டாம் நாள் கடைசி கூத்து, படுகளம் முடியுமுன், பகல் வேளையில் கூத்து நடக்கும் ஊரில் இரண்டு பாத்திரங்களும் முழு வேடம் தரித்து வாத பிரதிவாதங்கள் நடத்தி வர, நாடக சபையார் குறுக்கே பெரிய சேலை பிடித்து பொதுமக்கள் அன்போடு வாரி இறைக்கும் தானியங்களும், பொருள்களும், பணம், காசும் சேகரித்துக் கொண்டு வருவார்களாம். அப்போது அண்ணனைக் கண்ட மேனிக்குக் கொச்சையும் பச்சையுமாக ஏசி வரும் தம்பி, கூத்து நடக்காத நேரத்தில், அண்ணன் எதிரில் தேநீர் குடிக்கவோ, பீடி வலிக்கவோ மாட்டாராம், அத்தனை மரியாதை காப்பாராம் என்று தெரிவித்தார்.

அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை புத்தகக் கண்காட்சியினுள் இருக்கையில், தட்சிணாமூர்த்தி குழுவினரின் நாடகம் மேடையில் நடந்து கொண்டிருப்பதாக அறிவிப்பு காதில் விழவும், ஜிவ்வென்று உணர்ச்சி மேலிட்டது. புத்தகக் கடையிலிருந்து ஓடோடிப் போய் நிற்கவும்,
‘உரிக்க உரிக்க சேலை வளருதே’ என்று போகிறது பாடல். துயிலுரிதல் கட்சி. பாஞ்சாலி சபதம் நாடகம் போய்க் கொண்டிருக்கிறது. கடைசி கட்டம். துச்சாதனன் சொல்கிறான், ‘மன்னா, என் அண்ணா, மணலை எடுத்து மொத்தமும் கயிறாகத் திரிக்கச் சொல், செய்கிறேன், கடல் நீர் மொத்தமும் ஒரே மூச்சில் குடிக்கச் சொல் குடித்துவிடுகிறேன், ஆனால், இந்தப் பாஞ்சாலியைத் துகிலுரிப்பது முடியாத காரியம்’ என்று மயங்கி வீழ்ந்துவிடுகிறான். பின்னர், சிறிது நேரத்தில் குழுவினர் மங்களம் பாடி முடித்துவிட்டனர்.



பாஞ்சாலி சபதம் செய்யாமலே ஏன் நாடகம் முடிக்கப்பட்டது என்பதை, குழுவின் பொறுப்பாளர் நன்றி தெரிவிக்கையில் குறிப்பிட்டார்: “சபதம் போட்டால் அதை பாஞ்சாலி நிறைவேற்றுவதையும் நடிக்காமல் முடிக்கக் கூடாது. அது எங்கள் கூத்து மரபு. ஆனால், எங்களுக்கு இந்தக் கண்காட்சியில் இன்று ஒரு நாள்மட்டுமே வாய்ப்பு என்பதால், சபதம் போடும் காட்சியை நாங்கள் தவிர்த்து விட்டோம், பெரியவர்கள் குழந்தைகள் எங்களை மன்னிக்க வேணும்”.
எத்தனை நுட்பமான இலக்கணங்கள், கட்டுக்கோப்புகள், விதிமுறைகள் எழுத்தில் இல்லாமல் கூடக் காலகாலமாக அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன.

இணையத்தில் தற்செயலாகத் தட்டிப்பார்த்தபோது,இன்ப அதிர்ச்சியாக, அந்தக் குழுவினர் பற்றி மின்னம்பலம் வலைத்தளத்தில் தொடர் கட்டுரைகள் சில கண்ணில் தட்டுப்பட்டன ( https://minnambalam.com/k/2018/01/07/66 ). சொற்ப வருவாய், தொடர் வாய்ப்பற்ற போராட்டங்களுக்கு நடுவே கலையைக் காத்து வாழையடி வாழையாக வளர்த்தெடுத்துவரும் மிக எளிய கலைஞர்கள் யாவரும் வணக்கத்திற்கு உரியவர்கள்.

தெருக்கூத்து பார்க்கையில், ஹார்மோனியம் வாசிப்பவர் பக்கமே பேராவல் கொண்டு பார்க்கத் தோன்றும். வெவ்வேறு குழுவில் வெவ்வேறு விதமாக ஹார்மோனியம் வாசிப்பவர் பக்குவங்கள் சுவாரசியமான தரிசனங்களாக மனப்பெட்டியில் நிறைந்திருக்கின்றன. கூத்துகளில் பின்பாட்டு எத்தனை அம்சமானது.
முப்பது ஆண்டுகளுக்குமுன், மார்கழி மாத இசை விழா சீசன் ஒன்றில், ராஜா அண்ணாமலை மன்றத்தில், முற்பகல் வேலையொன்றில், விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் குழுவினரது செயல் விளக்க நிகழ்வு ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மறக்க முடியாத அழகான காட்சி ஒன்றை அவர் விவரித்து, வாத்தியக்காரர்கள் வாசிக்க விளக்கியதும் அபாரமானது. பின்பாட்டுக்குப் போவதற்குமுன் இது.

தவில்காரர் வழக்கம்போல் ஆற்றங்கரைக்கு நேரமே சென்று விட்டு வீடு திரும்பி, வாய் முழுக்க தாம்பூலம் தரித்து, வாத்தியத்தை எடுத்து வைத்துக்கொண்டு சாதகம் செய்து கொண்டிருக்கிறார் என்பது தான் காட்சி. அவருடைய மனைவி குடத்தை எடுத்துக் கொண்டு புறப்படும் வேளையில் தான் இவருக்கு ஒரு விஷயம் கவனத்திற்கு வருகிறது, ஆனால், வாய் திறந்து பேச முடியாது; வெற்றிலை குதப்பிக்கொண்டிருக்கிறார், அதை வீண் செய்ய முடியாது, ஆனால் செய்தியை அவளுக்குச் சொல்லியும் ஆகவேண்டும், உடனே தவிலில் குறிப்பாக வாசித்துக் காட்டுகிறார், அவள் கச்சிதமாகப் புரிந்து கொண்டு, ஆற்றங்கரைக்குப் போய் அவர் விட்டுவிட்டு வந்த பொருளும் எடுத்துக் கொண்டுவந்து கொடுத்து விடுகிறாள்.

அப்படி என்ன வாசித்தார் என்றால், ‘வயிரக் கடுக்கன வச்சுப்புட்டு வந்துட்டேன், வர்றப்ப எடுத்து வாடி சொர்ணம்….’ இதில், வர்றப்ப என்பதையும், சொர்ணம் என்பதையும் வாசிப்பதே தனி அழகு…சொர்……………..ஒரு இழுப்பு, அப்புறம் …………..ணம் ஒரு இழுப்பு.
தவில் பேசுகிறது, குழல் பேசுகிறது. வீணை பேசுகிறது. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களது வயலின் பேசிக்கொண்டே இருந்தது. ஹார்மோனியம் பேசுவது தனி சுகம். அதை வாசித்தபடி, பின்பாட்டுக்காரர் பாடுவது கூடுதல் சுகம்.

விஜயலட்சுமி அவர்கள் மேற்படி நிகழ்ச்சியிலேயே, பின்பாட்டுக்காரர் பாட்டை விரிவுபடுத்திக் கொண்டே செல்லும் கற்பனையை விளக்க இந்த வரியைப் பாடிக் காண்பித்தார். பின்னர் பின்பாட்டுக்காரர் எப்படி அதை வளர்த்தெடுப்பார் என்பதையும் விளக்கினார். காதுகள் அங்கே இருந்தாலும், உள்ளூர கற்பனையில் இந்தக் காட்சி இப்படி விரிந்தது:
‘ஒரு நாளும் இல்லாத திருநாளா இன்னிக்கு மத்தியானத் தூக்கம் வருகுதே’
கூத்தில் நடிப்பவர் இந்த ஒரு வரியை விமரிசையாக முழுவதும் ஒரே மூச்சில் பாடி நிறுத்துகிறார். உடனே பின்பாட்டுக்காரர் அதை அப்படியே கையில் அங்கவஸ்திரத்தில் வாங்கிக்கொள்வது போல் ஏந்திக் கொள்கிறார், அப்புறம் இலேசாகத் தொண்டை கமறல் செய்துவிட்டு,

‘ஒரு நாளும் இல்லாத திருநாளா இன்னிக்கு மத்தியானத் தூக்கம் வருகுதே’ என்று அதே போல் பாடிவிட்டுத் தனது ரசனை கலந்த குரலில், ‘ஒரு நாளும் இல்லாத ஒரு நாளும் இல்லாத ஒரு நா…………………………….ளும் இல்லாத, ஒரு நாளும் இல்லாத திருநாளா இன்னிக்கு மத்தியானத் தூக்கம் வருகுதே …மத்தி …யானத் தூக்கம் வருகுதே …வருகுதே ….வ்வ்வ்வருகுதே’ என்று ஒரு கொட்டாவியும் விடுவார்.



இசை எத்தனை கற்பனையும் உள்ளொளியும் நிறைந்து பெருகுகிறது. இந்த ஆர்வத்தில், வங்கிப் பணியில் வங்கனூரில் இருந்து சென்னைக்கு வார இறுதியில் வருகையில், நடன வகுப்புக்கும், இசை வகுப்புக்கும் எடுத்த முயற்சி இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

ஹார்மோனியம் வரைந்த பெயர்ப்பலகை எங்கே தட்டுப்பட்டாலும் உள்ளே போய், உங்கள் திரை இசைக் குழுவில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அலைந்த காலங்கள். அப்புறம், மேற்கு மாம்பலம் தம்பையா தெருவில் ஸத்குரு ஸங்கீத வித்யாலயா என்ற பெயரைப் பார்த்ததும், திரு நாராயணன் சார் அவர்களிடம் போய் எனக்கு சங்கீதம் கற்றுத் தர இயலுமா என்று கேட்டது, அவர் இதெல்லாம் தேறுமா என்கிற கதியில் உற்றுப் பார்த்துவிட்டு, ச ப ஸ பயிற்றுவித்தது. சுருதி பெட்டியை வைத்துக் கொண்டு, ச ரி க ம ப த நி ஸ கற்றுத் தர மெனக்கெட்டது, புத்தகம் கொடுத்துப் பயிற்சி எடுக்கச் சொன்னது எதுவும் மறக்கவில்லை. அந்த ‘ரி’ ஒழுங்காகச் சொல்ல முடியாமல் அவரைப் படுத்தி எடுத்த பாடு, அவர் பெட்டியைக் காட்டிக் காட்டி, ஸ்ருதி ஸ்ருதி என்று அதோடு லயிக்க வைக்க எடுத்த முயற்சி எல்லாம் சுவாரசியமான நினைவுகள்.

தி நகர் துரைசாமி சாலையில் இருந்த நாட்டிய இணையரை அணுகி, ஒரு சுப முகூர்த்தத்தில் தை தித்தித் தை, தித்தித் தை தை தை என்று அவர் தரையில் அமர்ந்து கைகளை வைத்துக் காட்டிச் சொல்லித் தந்ததை கால்களைக் கொண்டு வைக்கத் தொடங்கியது, அருகே கெஜ்ஜ பூஜா செய்யுமளவு கற்றுக்கொண்ட சிறுமி பட்டுப்பாவாடை சரசரக்க வந்து நின்றது. இப்படியாக ஒரு ஐந்தாறு வகுப்புகளோடு இசையும், அதற்கும் குறைவான வகுப்புகளோடு நாட்டியப் பயிற்சியும் முடித்துக் கொண்டது இந்த இரு துறைகளுக்கும் எளியேன் செய்த மிகப் பெரிய பங்களிப்பு.

ஆனாலும், இசையும், நாட்டியமும், நாடகமும் உள்ளே நிகழ்ந்து கொண்டே இருக்கத்தான் செய்கின்றன. நினைவில் காடுள்ள மிருகம் என்பது மலையாள கவிஞர் கே சச்சிதானந்தம் அவர்களது புகழ் பெற்ற ஒரு கவிதை. ‘நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது’ என்பது முதல் வரி. நினைவில் கவிதையும், இசையும், கலையும், கற்பனையும் சுமந்தே திரிகின்றனர் மனிதர்கள்.

அப்படி கவிதை வரிகளின் இனிமை, தேன் சொட்டும் இசை, நடனத்திற்கான மெட்டு கலந்த நேர்த்தியான திரைப்பாடல்கள் பலவும் உள்ளே நினைவில் சுழன்று கொண்டே இருப்பதில், இரு மலர்கள் படத்தின் ‘மாதவிப் பொன்மயிலாள்’ மறக்கவே முடியாத சுவை நிரம்பியது. மெல்லிசை மன்னரது அமர்க்களமான இசை. டி எம் சவுந்திரராஜனின் அற்புதக் குரலோசை. பத்மினியின் நடனமும், சிவாஜி கணேசனின் நடிப்புமாக வாலியின் புகழ் பெற்ற பாடல்களில் அவருக்கே மிகவும் பிடித்தமான ஒன்று அது.



https://youtu.be/H4RssATJLO0?list=RDH4RssATJLO0



மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், வீணை உள்ளிட்ட இசைக்கருவிகளின் அபார சங்கம வரவேற்பு, பாடலின் நுழைவாயில். ஒரே ஒரு சரணமும், சரணத்தின் நிறைவில் அருமையான ஸ்வர வரிசைகளின் தோரணமுமாக அமைந்திருக்கும் பாடலில், டி எம் எஸ் ரசித்து ரசித்து இசைக்கும் ஸ்வரங்களை முன்னதாகவே இசைக்கருவிகள் சிறப்பாக ஒலித்துத் தான் பாடலின் பல்லவி தொடங்கும். காதல் குழைவு மிளிரும்படியான பாடல் வரிகளை டி எம் எஸ் அத்தனை தேனாய் இசைத்திருப்பார். மாதவி பொன்மயிலாள் என்ற முதலடியின் முதல் சொல்லின் முதலெழுத்தை மா….தவி என்று அவர் இழைக்கையிலேயே இன்பத் தோகை விரித்துவிடும் மனம். அடுத்து, அந்த, மை இட்ட என்ற இரண்டு சொற்களை, ஒரு நடனக்காரர் எடுத்து வைக்கும் பாத அசைவுகளுக்கு ஏற்ற கதியில் அவர் எடுத்து வைக்கும் விதமும், கண் மலர்ந்து தூது விடுத்தாள் என்ற இடமும் கேட்பவரையே ஆடவைக்கும்.

‘வானில் விழும் வில் போல்’ என்ற சரணம் இசை ரசிகர்கள் சிலிர்த்துப் போகும்படி வந்திறங்கும். ‘கூனல் பிறை நெற்றியில்’ என்று சொல்லவும், குழல் (கூந்தல்) ஆடத் தொடங்கி விடும். ‘கலை மானின் இடம் கொடுத்த விழியாட’ என்ற வரிகளில் அந்த விழி வழி ஆசைகள் உண்மையிலேயே வழிந்தோடும். அந்தச் சரணம் முடியவும் தொடரும் ஸ்வர வரிசைகளும், ஜதிகளும் டி எம் சவுந்திரராஜன் தானே, இல்லை, சிவாஜியே தானா என்பதாக இழைக்கும் அசாத்திய இசை விருந்து.
‘காதல் மழை பொழியும் கார் முகிலாய்’ என்ற பதத்திற்கான அடவுகளை சிவாஜி மிகவும் தன்னியல்பாக ஒரு தேர்ச்சி மிக்க நாட்டியக்காரர் போலக் கொண்டு வருவதும், நாட்டியத்திற்கான பாடலில் கூட மிக இலகுவாகத் தமது நேர்த்தியான நடையசைவில், கம்பீரமிக்க முகப் பொலிவில், புருவங்களின் ஏற்ற இறக்கங்களில் அசர வைப்பதும், அந்த நாட்டியக்காட்சியின் ஊடே இணையாக ஓடும் உடல் மொழியில் நிகழும் பரஸ்பர உரையாடலில் மழையும் வெயிலும் கலந்தது போல் இசைப் பாட்டுக்கும், சிவாஜி படுத்தும் பாட்டுக்கும் சேர்த்த எதிர்வினைகளை பத்மினி விழிகளால் வெளிப்படுத்துவதும், அந்த மோதலையும் மீறிப் பொங்கும் காதலுமாக நிலைத்திருக்கிறது இந்த இசையும், பாட்டும்.

ரசனை உயிர்களின் ஆதி உணர்வு. காற்றுக்கு அசைந்து கொடுக்கிறது நெற்கதிர். வளைந்து தன்னைத் தொடும் புல்லுக்கு முத்தம் கொடுக்கிறது ஆற்று நீர். காற்று வெளியில் ஓர் ஓவிய வரைதல் போல் பறக்கின்றன புள்ளினங்கள். நீவிக் கொடுக்கும் ஒரு தாயின் கைகளில் தனது முகம் புதைத்துச் செல்லம் கொஞ்சுகிறது பசு. அப்போது வெளிப்படும் அதன் வெப்ப மூச்சிலும், மடித்துச் சுழன்று முதுகைத் தொட்டு உதறிக் கீழிறங்கி ஊஞ்சலாடும் அதன் வாலிலும் தெறிக்கிறது இசையும், நாட்டியமும்.

(இசைத்தட்டு சுழலும் ….)

மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

தொடர் 1 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 2 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 3 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 4 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 5 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்



தொடர் 6 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 7 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 8 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 9 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 10 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 11 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 12 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 13 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 14 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 15 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 16 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 17 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 18 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 19 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 20 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும்  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 21 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 22 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 23 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 24 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 25 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 26– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 27– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 28– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 29– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன் 



தொடர் 30– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 31 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 32:

இசை வாழ்க்கை 32: இசையில வாங்கினேன் எடுத்துப் போடல… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 33:

இசை வாழ்க்கை 33: இசையிருக்கும் நெஞ்சிருக்கும் வரை இசைத்தே தீருவோம் – எஸ் வி வேணுகோபாலன் 



Show 4 Comments

4 Comments

  1. VeeraRaghavan N

    ஆஹா!!!. இதுதான் எழுத்து ஓவியம்!. கண் முன்னே வந்து நாட்டியம் இசையோடு உள்ளம் கொள்ளை கொள்கிறது.

  2. Manoharan Barathi

    அருமையாக நாட்டியத்தையும் இசையையும் தேனமுதமாக ஊட்டிவிட்டுள்ளார். சிறப்பான கட்டுரைக்கு நன்றி.

  3. Karanthaijayakumar

    எத்ததுணை நுட்பமாக இலக்கணங்கள், கட்டுக்கோப்புகள், விதிமுறைகள் எழுத்தில் இல்லாமல் கூடக் காலகாலமாக அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன என்பதை அறியும்போது விரிப்பு மேலிடுகிறது ஐயா

  4. umamaheswaran

    தாமதத்திற்கு வருந்த வேண்டாம். ஆரம்பத்தில் தெருக் கூத்து பற்றிய பரிமாறல். சரணத்தில் மாதவி பொன் மயிலாளை வேறு அழைத்து வந்து விட்டீர்கள் படிப்பவர்களை மயக்க. தெளிந்த நீரோடையாக தமிழும் நடையும். அருமை.தொடருங்கள் உங்கள் எழுத்தோவிய சேவையை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *