இசை வாழ்க்கை 35: இசையின் அலையில் தினமும் அலையும் குமிழி  | எஸ் வி வேணுகோபாலன்நாட்டிய வேட்கையை அதிகப்படுத்தியது சலங்கை ஒலி என்பதை தம்பி எஸ் வி வீரராகவன் மிகச் சரியாகச் சுட்டிக் காட்டி பதில் போட்டிருந்தார். தொடக்க காலத் தொழிற்சங்க அறிமுகத்தை அடுத்து தோழர் சி பி சந்திரசேகரன் அவர்களை சந்திக்க காஞ்சிபுரம் சென்றபோது தான் அந்தத் திரைப்படத்தை அங்கிருந்த புதிய நண்பர்களோடு போய்ப் பார்த்ததுஏற்கெனவே நடனத்தில் பேரார்வம் பொங்கிக் கொண்டிருந்த இதயத்தில் இப்போது சலங்கை ஒலி உரத்துக் கேட்கத் தொடங்கி விட்டிருந்தது

சும்மா நடந்து போகும்போது கூட காதில் ஜதி கேட்டுக் கொண்டிருந்த காலம் அது. தெலுங்கில் முதலில் எடுத்து அப்படியே தமிழில் டப் செய்திருந்ததால் சில இடங்களில் உதட்டு அசைவுகளுக்கு வெளியே ஒலிக்கும் வசனங்களால் ஏற்பட்ட சலிப்பையும் மீறி, படத்தின் பாடல்களும், இளையராஜா இசையும், நடன காட்சிகளும் உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் அதுவாக மாறி உள்ளிறங்கி விட்டிருந்தது. படத்தில் நடனத்தோடு இயைந்த மற்ற பாடல்களைவிட, ‘பால கனக மய‘ அப்படி பித்தனாக்கி இருந்தது அப்போது

தொடக்கத்தில் இடம் பெறும், ‘ஓம் நமசிவாயபாடல் திரும்பத் திரும்ப வானொலியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அமர்க்களமான பாடல். எஸ் ஜானகி அவர்களது அசாத்திய கற்பனையின் வீச்சு பாடல் நெடுக வெளிப்படும்

பாடலின் தொடக்கத்தில் ….ம் என்ற ஓங்கார ரீங்காரத்திலிருந்து, பல்லவியே தனி அழகில் லயிக்க வைக்கும். பின், பஞ்ச பூதங்களும் என்று தொடங்கும் சரணமும், மூன்று காலங்களும் என்ற இரண்டாவது சரணமும் பாதங்களைத் தாமறியாமலே தாளமிட வைக்கும்

முதல் சரணத்தில், ‘மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்கஎன்ற அடியை, நடனமிடுபவர் எடுத்து வைக்கும் அடியாகப் பாடும் ஜானகி, ‘ஏழு அடிகளும் சுரங்கள் படிக்கஎன்ற இடத்தில் மிக விரைவாகப் படிகள் ஏறி இறங்கி, ஸ்வரங்களை அசாத்திய சுவையில் வழங்கி, ‘கங்கையின் மணவாளாஎன்ற வரியில் தொடுக்கும்  சுவாரசியமான ஆலாபனையும், அதில் ஒரு சிறு இடைவெளி கொடுத்து, ‘உன் மௌனமே….’ என்று எடுக்கும் இடத்தின் பொருள்விளக்க வெளிப்பாடுமாக உறைய வைத்து விடுவார்இரண்டாவது சரணம் வேறொரு சுவையில் நிறைவு பெறும். பல்லவியிலிருந்து முதல் சரணத்திற்கான பாதையில் வீணை நாதம் மலர் தூவிக்கொண்டே செல்ல, உரிய இடத்தில் கைலாகு கொடுத்து வாங்கிக்கொள்ளும் புல்லாங்குழல் ஒரு வெளிச்சப் பந்தினை உருட்டி விட்டாற்போலும் வேகச் சுழற்சியில் பளிச்சென்ற இடத்தில் பாடகியின் குரலை அழைத்துக் கொள்ளும்

மொத்தப் பாடல் காட்சியும், நடனம் ஆடும் எஸ் பி ஷைலஜாவிமர்சகர் கமல் ஹாசன் இருவரின் முக பாவங்கள், உடல் மொழி முக்கிய கவன ஈர்ப்பாக இருக்கும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றில் அவரை நடனம் ஆடச் சொல்லிக் கேட்கும்போது, தெரியாமல் ஒரு படத்தில் தோன்றிவிட்டேன், என்னை விட்டுவிடுங்கள் என்று சொல்லி மறுத்துவிட்டார் ஷைலஜா, ஆனால், மிகவும் சிறப்பாக நடித்திருப்பார் படத்தில். பாடலின் இடையே வரும் இசைத் துணுக்குகளுக்கு ஏற்ப பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்கும் பத்திரிகையாளர் பாத்திரத்தில்கமல் காது குடைந்து கொள்வதும், அசிரத்தையாக பார்ப்பதும், வெறுப்போடு விமர்சனம் எழுதுவதுமாக சிறப்பாக நடித்திருப்பார்.

மௌனமான நேரம்பாடல் ஒரு மெல்லிசைக் கவிதைஉடலியலில் இயங்கும் காதல் குழைவின் மென் சிறகடிப்பும், அந்தரங்க உணர்வுகளின் பரிபாஷையும், கனவுகளின் நீட்சியுமாக உருக்கொண்ட பாடலுக்கான உயிரை எஸ் பி பாலசுப்பிரமணியன்எஸ் ஜானகி இணை குரல்கள் காதல் தேவதைக்கு  செய்யும் அர்ப்பணிப்பு போல் வழங்கி இருக்கும்

அருகருகே சேர்ந்துவிட்ட மனங்களுக்கு இடையேயான உரையாடலுக்கு உரத்த குரல்கள் தேவைப்படாது என்பதால், உள் மனத்தின் ஈரத்தோடு ரகசிய அலைவரிசையில் தொடங்கும் ஜானகியின் இசையில் புறப்படும் பல்லவியை ஒரு குயில் போலவும், கிளி போலவும் கைமாற்றி ஏந்திக் கொண்டு வழிநடக்கும் புல்லாங்குழல் இன்னும் சன்னமான காதல் குரலெடுக்கும் எஸ் பி பி யிடம் சரணத்தைக் கொடுத்துவிட்டு, அவரது வரிக்கு வரி அடிக்கு அடிக்கோடு போட்டவாறு காதலைப் பேசிக்கொண்டே உடன் நடக்கிறது. துணைக்குச் சட்டென்று ஜானகியை அழைத்துக் கொள்கிறது. மொத்தப் பாடலையும் தபலா தாளக்கட்டு, தாய்மாமன் சீர் போலத் தாங்கி குஷிப்படுத்தி வழி நடத்தி முடிக்கிறது.  சீரான மழைச் சாரலை ஒரு பாறை இடுக்கில் நின்றவாறு பார்த்தும் கேட்டும் ரசிக்கும் உணர்வில் காதல் ததும்பும் இசையை வழங்கி விடுகிறார் ராஜா.  

‘கூதலான மார்கழி நீளமான ராத்திரி’ என்ற வரியும், ‘பாதை தேடியே பாதம் போகுமோ’ என்ற இடமும் பாலு பாடப் பாடக் கேட்டுக் கொண்டே கிறங்க முடியும். நிறைவில்மௌனமான’ என்ற சொல்லை ஒரு செல்லப் புன்னகை ததும்ப உச்சரிக்கும் அழகு அவரது முத்திரை. ஜானகியின் குரல் இன்னோர் இசைக்கருவி போலவே இழைந்திருக்கும் பாடலில், ‘கொதிக்கும் நீர்த்துளி’ என்ற வரியும், ‘காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ’ என்ற வரியும் ஏற்படுத்தும் சிலிர்ப்புகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை.  திரைப்படத்தில் பாடலின்  தொடக்கத்தில் இரவின் குறைந்த வெளிச்சத்தில் கம்பீரமாக பளபளத்துத் தெரியும் தேர், பாடலுக்கான மொத்த உருவகமாகி நிற்கும்.

படத்தில் மூன்று பாடல்கள் எஸ் பி ஷைலஜா பாடியவை. என்ன வேடிக்கை எனில், அவற்றில் இரண்டு பாடல்கள் ஜெயபிரதாவுக்காகக் குரல் கொடுத்தது, ஒன்றுதான் தனது நடனத்திற்கு

வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனேபாடலை எஸ் பி பி.யோடு இணைந்து ஒரு கொஞ்சும் குரலில் அருமையாகப் பாடி இருப்பார் ஷைலஜா. ராக ஆலாபனையின் அழகும், மித வேகமான தாளக்கட்டும், புல்லாங்குழலின் (கோபாலன் என்று எழுதியபிறகு குழலிசை இல்லாமல் எப்படி?) கச்சிதமான வாசிப்பும் சிறப்பாக அமைந்திருக்கும். அதிலும், பல்லவியின் தொடக்கச் சொல்லை, பறவை சிறகடித்துக் கொண்டு பறப்பது போல ஓர் ஆலாபனை கொடுத்துவான் போலே’ என்று எடுக்கும் விதங்களில் இருவருமே சொக்க வைத்திருப்பார்கள்

நாத விநோதங்கள்பாடல், எஸ் பி பி – ஷைலஜா குரல்களில் அதன் அம்சமான இசைக்கும், காட்சிப்படுத்தலுக்கும், குரலினிமைக்கும் கொண்டாடப்படும் பாடல்களில் ஒன்று

ஸ்வரங்களை, ஜதிகளை இருவரும் இசைக்கும் பாங்கும், தாள கதிக்கேற்ற வேகமும் சுழன்றாட வைத்துவிடும். இந்தப் பாடலிலும் புல்லாங்குழலின் சுவாரசியமான ஓட்டம் கதையோட்டத்தோடு அபாரமாகப் பொருந்தி இருக்கும்

இடையே, படத்தின் முக்கியமான காட்சி ஒன்றைப் பேசியே ஆக வேண்டி இருக்கிறது. நடராஜருக்கு தலைவலி என்று தலைப்பு போட்டு, ஷைலஜா நடனத்தை வெட்டிக் கூறு போட்டு, கமல் எழுதி இருக்கும் கலைவிமர்சனம் பார்த்துக் கொதித்து அவரும், அவருடைய காதலரும் பத்திரிகை அலுவலகத்தில் வந்து ரகளை செய்யும் இடம்

‘பஞ்ச பூதங்களும் முக வடிவாகும்’ என்ற சரணத்தைத் திரும்பத் திரும்ப காஸெட்டில் ஒலிக்கவைத்து, முதலில் ஷைலஜாவும், பின்னர் வெவ்வேறு நடன பாணியில் கமலும் ஆடும் காட்சியில், பாடலின் முக்கிய வலுவாக ரீங்கரிக்கும் புல்லாங்குழலிசை இப்போது கேட்கும்போதும் அத்தனை பரவசமூட்டுகிறது. கமல் செய்யும் அட்டகாசத்தால், நண்பர் சரத் பாபுவுக்கும் சேர்த்து பத்திரிகை அலுவலகத்தில் வேலை போய்விடும் காட்சிக்குப் பின்கமல் இசைக்கும் நட்பு பற்றிய கவிதை அத்தனை உருக்கமாக ஒலிக்கும்.

படத்தின் நிறைவான பாடல், வேதம், எஸ் பி பிஎஸ் பி ஷைலஜா குரல்களில் காட்சியின் உணர்ச்சிமய தன்மைக்கேற்ற இசையில் உள்ளம் நெகிழ வைக்கும். எஸ் பி பி தொடங்கி வைக்கும் ஸ்வர ஆலாபனை வேறோர் உலகத்திலிருந்து ஒலிப்பது போல் நெஞ்சைத் தொடும், பின்னர் பல்லவியை வேகமாக எடுப்பார் அவர்

வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் அந்தப் பாத்திரம், தனது கலையை எத்தனைக்கெத்தனை வேகமாகக் கைமாற்றிக் கொடுக்க முடியுமோ அத்தனைக்கத்தனை வேகமாகப் பரிமாறும் அவசரத்தின் கணங்களைக் குரலில் கொணர்ந்திருப்பார் எஸ்பிபி. முக பாவத்தில் கொண்டுவரும் உணர்ச்சிகளின் குழப்பத்தை ஷைலஜா பாடல் முழுக்க அப்படியே வார்த்திருப்பார். கலையின் உன்னதம் தொடும் நோக்கில் புனையப்பட்ட கதைக்கான நிறைவை நோக்கி நகரும் நாட்டியமும், இசையும் ஸ்வரங்கள் தொடங்கிய உலகத்திலேயே போய் நிறைவடைந்துவிடும்.

சலங்கை ஒலி படத்தில் கமல் நடனத்தின் முக்கிய காட்சியாகப் பேசப்படுவது அவர் கிணற்று  மேடையில் அபாயகர விளிம்பில் நின்றவாறு ஆடும், ‘தகிட ததிமி தகிட ததிமி தந்தானா ‘ பாடல். எஸ் பி பாலசுப்பிரமணியன் அவர்களது மிக மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் இடம் பெற வேண்டியது

ஒரு பாடலுக்கான காட்சியை இயக்குனர் விவரிக்க, இசையமைப்பாளர் ஆழும் கற்பனைக்குள் பிறக்கும் இசைக்கோவையின் ஊற்றில் திளைத்துத் தமது கற்பனையின் ஆழத்திலிருந்து குரலெடுக்கும் அசாத்திய இசைப் பாடகர் எஸ்பிபி, இந்தப் பாடலை இதயக் குமுறலின் இசை வடிவமாகவே விரித்தெடுப்பார். அந்தக் கதறலின் சொற்களைப் புல்லாங்குழல் பகிர்ந்து கொள்ளும், தாளக்கருவிகள் நெஞ்சத்து அதிர்வைப் போலவே வலியைக் கடத்தும். பாடலின் சொற்களை வசப்படுத்திக்கொண்டு பாலு அவற்றை உச்சரிக்கும் விதங்களில் உணர்ச்சிகளைக் கலந்திருப்பார். ‘இரவு தோறும் அழுதுஎன்பதில் அந்தஅழுது‘ ஒரு  விரக்தி சிரிப்போடு வந்து விழும்.   பல்லவியில்என்பேனா‘ என்ற சொல்லை மடக்கணியாக (இரு வேறு முறையில் பிரித்துப் பயன்படுத்துவது) என் பேனா என்று அடுத்த வரியில் பயன்படுத்தி இருப்பார் கவிஞர் வைரமுத்து. பாடலின் நிறைவில் எஸ்பிபி துயரத்தை ஆலாபனையாக வழங்குவது கேட்போரை அதே துயர உணர்வுகளுக்கு ஆட்படுத்தும் வல்லமையோடு அமைந்திருக்கும்இசை ஞானியின் ஆற்றல் வியக்கவைக்கும்

இத்தனை பேசியபிறகும், ‘பால கனகமயபாடல் ஆர்ப்பரித்துக் கொண்டே நிற்கிறது நெஞ்சில். படத்தைப் பார்க்கும்போதே பதிந்திருக்கக் கூடும். எஸ் ஜானகி, அந்தப் பாடலில் இழைக்கும் பாவங்கள் அசாதாரண சுவையில் அமைந்திருக்கும். பாடல் காட்சியில், திருமண இல்லத்தில் மேடையில் மஞ்சு பார்கவி ஆடிக்கொண்டிருக்க, மகத்தான கலையறிந்த ஓர் எளிய வாலிபன் சமையற்கட்டில் அம்மாவுக்கு உதவியாக இருக்க வேண்டிய இடத்தில் அதே நடனத்தை நிகழ்த்தும் தாக்கம் மிகவும் முக்கியமானது. மேடையில் மகனைக் கற்பனை செய்து கொண்டிருக்கிறாள் தாய், அந்தக் காட்சியில், மகனோ, இருக்குமிடத்தை நாட்டியக்கூடம் ஆக்கி, நிஜ வாழ்க்கையோடு ஒரு சமரசத்தைஅம்மாவின் மனம் நொந்துவிடக் கூடாத உளவியல் புரிதலை செயல்படுத்திக் கொண்டிருக்கும் நுட்பத்தையும் பார்க்க முடியும்


ரா ராஎன்ற விளியை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய் ஜானகி குழைத்துக் குழைத்து, மேற்படியேறிப் போய்நீ நா தய ராது’ என்ற இடத்தைச் சுற்றியே பாடலைச் செதுக்கிக் கொண்டு போய் முடிப்பது கேட்டுக் கேட்டு உருகிப் போகவேண்டிய ரசங்கள் நிறைந்தது. கம்பீர மிகுந்த ஜதிகளும், கரைய வைக்கும் ஸ்வரங்களுமாக உள்ளே சுழன்று கொண்டே இருக்கும் இசை இந்தப் பாடல்

அணுவிலும் ஒரு நாதம் என்றுவருகிறது வேதம் பாடலில். அணுவின் உட்கருவில் இருக்கும் புரோட்டான் நேர்மறை மின்சக்தி. வெளியே அதை நேர் செய்யும் எலெக்ட்ரான் எதிர்மறை சக்தி. எலெக்ட்ரான் ஒரு துகள் என்ற கோட்பாடு பின்னாளில், இல்லை, அது ஓரிடத்தில் நிலைத்து இருப்பதில்லை, இங்குமங்கும் அலைபாயும் தன்மை கொண்டிருப்பது என்று கண்டறியப்பட்டது.  

இசைப்பாடல்கள் ஓரிடத்தில் நிலைத்து விடுவதில்லை. அவற்றின் சுழற்சி காற்றில் மட்டுமல்ல, உள்ளத்திலும் அலையலையாகப் பரவிக் கொண்டே இருக்கின்றன. அந்த அலைகள், உணர்வில் கலக்கவும், உணர்வில் வெளிப்படவும் செய்கின்றன. நுரையீரலில் நிறையும் காற்று போல, உள்ளத்தில் நிறைகிறது இசையலை. மூச்சுப் பயிற்சி நுரையீரலைத் தூய்மைப் படுத்திக் காப்பதுபோலவே, இசை நுகர்வு உள்ளத்தை இலேசாக்கி நேயத்தில் நனைய விடுகிறது. இன்பியலோ துன்பியலோ வாழ்வியலின் இசை மனிதர்களை வாழவே தூண்டுகிறது. வாழ்க்கை பொருளடர்த்தி மிக்கதாகிறது.

(இசைத்தட்டு சுழலும் ….)

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]

தொடர் 1 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 2 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 3 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 4 – ஐ வாசிக்க…

இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 5 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்தொடர் 6 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 7 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 8 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன் தொடர் 9 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 10 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 11 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 12 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் தொடர் 13 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 14 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 15 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 16 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 17 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் தொடர் 18 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 19 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 20 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும்  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 21 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 22 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன் தொடர் 23 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 24 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 25 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 26– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் தொடர் 27– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 28– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 29– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன் தொடர் 30– ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 31 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்

தொடர் 32 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 32: இசையில வாங்கினேன் எடுத்துப் போடல… – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 33 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 33: இசையிருக்கும் நெஞ்சிருக்கும் வரை இசைத்தே தீருவோம் – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 34 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்