இசைப் பயணத்தில் தாய்மொழி குறித்த பகிர்வுகள் பரலரையும் ஈர்த்தது நெகிழ வைக்கிறது. நண்பர் கோவை லிங்கராசு அவர்கள் ஒரு நினைவுப் பரிசு அனுப்பி இருந்தார். பி சுசீலா பாடியிருந்த பாவேந்தரின் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ இசைப்பாடலைத் தமது இனிமையான குழலிசையில் வாசித்துப் பகிர்ந்து கொண்டிருந்தார். முதல் சரணத்தின் ஆலாபனையும், சரணத்தின் முத்தான நிறைவையும் சிறப்பாக வாசித்திருந்தார். உள்ளம் மூச்சுக் காற்றில் ஓட்டும், மூச்சுக் காற்று குழலில் ஒட்டும் என்று சொன்னாரே மகாகவி, காற்றைப் பார்ப்பதில்லை, ஆனால் இசையைக் கேட்கிறோம். அமுதே தமிழே குழலிசைப் பொழிவே எமதுயிரே என்று தான் அவருக்குப் பதில் எழுதத் தோன்றியது.
உலகப் பெண்கள் தினம் நம்மைச் சூழ்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் ஆங்கிலக் கவிதை நூல் ஒன்று வாங்கியது நினைவுக்கு வருகிறது. ‘பெண் என்ற சொல்லை எழுத்துக் கூட்டிப் படிக்க ஒரு பயிற்சி நூல்‘ என்பது தான் அதன் தலைப்பு. A spelling guide for woman !
வுமன் என்ற சொல்லில் ஆணைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லும் அடக்கம். ஆனால், சமூகத்தில் ஆணிடம் தான் பெண் அடங்கி இருக்க வேண்டி இருக்கிறது. அந்த வுமன் என்ற சொல்லை மட்டுமே வைத்து ஆறேழு வரிகள், ஒவ்வொன்றிலும் இரட்டை இரட்டை சொற்கள் மட்டுமே, அந்த வுமன் என்பதை வெவ்வேறு விதமாகப் பிரித்துப் பெண்ணடிமை குறித்த காத்திரமான கேள்விகளை எழுப்பி இருந்தார் அந்த கவிஞர் சர்மினே டி சூசா. ‘ஆணை ஈர்க்கவா, ஆணைக் கருவில் சுமக்கவா, ஆணை எண்ணித் துயருறவா, ஆணின் ஆசைகளுக்கு ஆட்படவா, ஆணை இதப்படுத்தவா..’ என்று கேட்டு, இல்லை அவள் பெண் என்று முடியும் அந்தக் கவிதை.
‘பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா‘ என்றார் பாரதி. வாழ்த்த வேண்டாம், இழிவு செய்யாதிருந்தால் போதும் என்று உரக்க சொல்லத் தோன்றுகிறது.
மிக அண்மையில் உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி அவர்கள், பாலியல் வல்லுறவு செய்த குற்றத்தை விசாரிக்கும் வழக்கில், குற்றவாளியை நோக்கி, ‘அந்தப் பெண்ணை நீயே திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டிருப்பது பேரதிர்ச்சிக்குரிய நடப்பு. ஒன்பதாம் வகுப்பு மாணவியாக இருந்த அந்தச் சிறுமியிடம் தமது இச்சையைத் தீர்த்துக் கொள்ள பாலியல் வன்கொடுமை பெருங்குற்றத்தை இழைத்த அவனுக்குக் கடுமையான தண்டனை வழங்குவது பற்றி சிந்திக்காமல், அப்படியான கேள்வியை அவர் கேட்டது வலுவான கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கால காலமாகத் திரைப்படங்களில், கதாநாயகனின் தங்கையிடம் மோசமாக ஒருவன் நடந்து கொண்டால், எப்படியாவது வில்லனைத் தேடிப் பிடித்து அடித்து உதைத்து அந்தப் பெண்ணின் கழுத்தில் அவனையே தாலி கட்டவைத்து அவள் சிலிர்ப்போடு தனக்கு பாதகம் செய்த பாவியின் காலில் விழுந்து வணங்கித் தாலியைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் காட்சியைக் காட்டிக் கொண்டிருந்த காலம் திரையுலகில் மாறிக் கொண்டிருக்க, சமூகத்தின் முக்கிய பீடங்களில் இருப்போரது சிந்தனை இன்னும் முந்தைய நூற்றாண்டுகளில் இருப்பது தான் கசப்பான அதிர்ச்சி.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்‘ என்ற தமது கதையின் திரையாக்கத்தைச் செய்த எழுத்தாளர் ஜெயகாந்தன், பீம்சிங் அவர்கள் இயக்கத்தில் வெளியான படத்திற்குப் பாடல்களும் அவரே புனைந்தது முக்கியமானது. எம் எஸ் வி அவர்களது அற்புதமான பாடல் ஒன்று படத்தில் உண்டு. அதை வேறொரு தருணத்தில் எடுத்துக் கொள்ளலாம், இங்கே பொருத்தமானது, வாணி ஜெயராம் மிகச் சிறப்பாகக் குரல் கொடுத்திருக்கும், ‘வேறு இடம் தேடிப் போவாளோ இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ‘ என்ற அருமையான பாடல்.
வெளியான அந்த நாட்களில் அதிரடி விவாதத்திற்குள்ளான இந்தப் படத்தின் கதைச் சுருக்கத்தை, கங்காவின் வாழ்க்கையை, அந்தப் புதிரின் நுட்பங்களை எல்லாம், திரைப்பாடல்கள் எப்போதோ ஒரு முறை எழுதும் ஒருவரால் எப்படி எழுத முடிந்தது என்ற வியப்பு இந்தப் படத்தின் இந்த இரண்டு பாடல்களைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படுவதுண்டு.
‘வேறு இடம் தேடிப்போவாளோ ……’ மற்றுமொரு பாடல் அல்ல…அது ஓர் அனுபவத்தின் சூடான கண்ணீர்த் துளி. எழுபதுகளின் இறுதியில் எழுதி, நண்பர் அழகியசிங்கர் நடத்திய மலர்த்தும்பி இதழில் அவர் வெளியிட்ட கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன:
இருட்டில்
என்னருகே உனையுணர்ந்து
உன் முகத்தை நோக்கி
விரல்கள் உயர்த்தி நெருங்குகையில்
சுள்ளென ஒரு துளி முத்து
உன்
விழிகளினின்றும்
விழப் பெறுமானால்
விரல்கள் தாங்கலாம்
மனம்?
சாதாரண துயரம், சோகம் அல்ல, தனிப்பட்ட ஒரு பெண்ணின் சொந்த உணர்வுமல்ல, ஒரு சமூக சாபத்திலிருந்து எழும் ஓர் உணர்வின் பாடல் அது. அதற்கேற்ற குரலை எத்தனை அசாத்திய உள்ளுணர்வும், பயிற்சியும், கற்பனையும் உந்தித்தள்ள இசைத்திருக்கிறார் வாணி ஜெயராம். உள்ளத்தின் தடுமாற்றம் அல்ல, பாடல் விளக்க முயல்வது. கொதிநிலையைக் கடத்துகிறது ஜெயகாந்தன் எழுத்து.
வேறு இடம் தேடிப் போவாளோ என்பதை ஒரு பாத்திரம் பேசும் வசனமாக நினைத்துப் பாருங்கள். கொஞ்சம் கவலையோடு உச்சரித்துப் பாருங்கள். அதிர்ச்சியோடு சொல்லிப் பாருங்கள். கொஞ்சம் இசையூட்டி மெல்ல உள்ளூர யாரிடமோ கேளுங்கள் அந்தக் கேள்வியை. கேட்டுப் பார்த்தீர்களா, பரிசோதனை முடிந்தது. இப்போது, வாணி ஜெயராம் பாடுவதைக் கேளுங்கள். அதன் பின்னணியில் (மிருதங்கம் என்று தோன்றுகிறது) எம் எஸ் வி பொருத்தி இருக்கும் தாளக்கட்டில் இயைந்து வாணி ஜெயராம் பாடும்பொழுது, அந்தத் தாள ஓசை உள்ளத்தை அசைத்து நெகிழ்த்திக் கையில் இருக்கும் வேலையை உதறிப் போடவைத்துப் பாடலில் வாங்கி நிறுத்திக் கொள்கிறது கவனத்தை.
போவாளோ என்பது தான் பல்லவியின் உயிர்க் கேள்வி, அதற்கு உருப்படிகள் சேர்த்து சங்கதிகள் போட்டு ஒவ்வொரு முறையும் அதை விரித்து அதில் மேலும் கனத்தைக் கூட்டி இழைக்கும் இடத்தில் அந்த ‘ளோ‘ என்பது ஆதி சமூகத்திலிருந்து இன்றைய இந்தப் பொழுதுவரை அப்படியான சிக்கலுக்கு உட்பட்டிருக்கும் பெண்கள் அனைவருக்குமான ‘ளோ‘ வாக அது உரத்து ஒலித்துக் கரைக்கும் நெஞ்சை. ‘இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ‘ என்பதும் தனது வழியைத் தானே இனி துணிந்து தேடிக் கொள்ள வேண்டிய உரம் பெற்றவளாக பெண்ணை நிமிர்ந்து பார்க்கவைக்கும் ஒலிக்குறிப்பில் தான் சொற்களைத் தேர்வு செய்திருப்பார் ஜேகே.
‘நூறு முறை இவள் புறப்பட்டாள்‘ என்பதில் அந்த புறப்பாட்டாளில் குழைக்கும் குறும் ராக ஆலாபனையில், அந்தப் புறப்பாடு முழுமையாகாமல் சிறைப்பட்டுப் போனதன் பேராதங்கம் சொட்டும் வாணி ஜெயராம் குரலில். ‘விதி‘ என்று எடுத்து, நூலிழையில் இவள் அகப்பட்டாள் என்ற தெறிப்பு தமிழ்த் திரைப்பாடல்கள் வரிசையில் அசர வைக்கும் புனைவுப் பாடல்களின் வரிசையில் சேர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். எம் எஸ் வி மகா ரசிகர் ஒருவர், இந்த வரியின் அழகை நின்று ரசிப்பதற்காகவே, பாடலில் ஒரே ஒரு முறை தான் இந்த வரியை வாணி பாடுவதாக அமைத்திருப்பார் மெல்லிசை மன்னர் என்று எழுதி இருப்பதை வலைத்தளத்தில் ரசித்து வாசிக்கலாம்.
‘பருவமழை பொழியப் பொழிய’ என்ற முதல் சரணம், ‘பாலைவனம் ஆகியதே’ என்ற ஏக்கத்தில் நிலைகுத்தி நிற்கவைப்பது போலவே, இரண்டாம், மூன்றாம் சரணங்களிலும் கடைசி வரியின் அழுத்தங்கள் வாணி ஜெயராம் குரலில் அந்தப் பெண்ணின் உள்மன போராட்டங்களை பிரதிபலிக்கும். மறுபடியும் உயிர்ப்பாளோ, மலரெனவே முகிழ்ப்பாளோ …என்ன உயிரோட்டமான வரிகள் அவை…. பாடல் முழுக்க தாளக்கருவியின் இசை, எம் எஸ் வி அவர்களது மேதைமையை உணர்த்தும்.
விடுதலை குறித்த பாடல் என்று அதைக் கொள்ள முடியாது, ஆனால், தளைகளை உடைத்து வா என்று அழைத்த அரிய பாடல், ‘அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் ‘.
எதைப்பற்றியும் கவலைப்படாத சுதந்திர சிந்தனை குறித்த இயக்குநர் பாலச்சந்தர் அவர்களது கதாபாத்திரத்தின் உளவியலை, கண்ணதாசன் எப்படி கற்பனையில் பார்த்து எழுத முடிந்தது என்பது கவிஞரின் அபார ஆற்றலின் ஓர் எடுத்துக்காட்டு. முதல் சரணத்தின் ‘செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா, சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா‘ என்ற வரி, ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் கருவை ஒற்றை வரியில் கொண்டு வந்து நிறுத்திய கவிஞரது புலமையின் கம்பீரம். எதுகை மோனை நயத்திற்காக எழுதினாலும், அடுத்த வரியில் வரும் ‘கொக்கைப் பார்த்துக் கற்றுக்கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை’ என்ற வரிக்கு இசைவாக, கொத்தும்போது கொத்திக்கொண்டு போகவேண்டும் நல்லதை‘ என்ற முடிப்பு எத்தனை பளிச்சென்று பொருந்தி விடுகிறது.
எல் ஆர் ஈஸ்வரியின் தனித்துவக் குரலுக்காகவே அமைந்த பாடல் அது. பல்லவியை அவர் ஓர் அடி அடித்து, அடி என்னடி உலகம் என்று தொடங்குவதே அத்தனை மிடுக்காக ஒலிக்கும். அந்த முதல் வரியின் உலகம், அடுத்த வரியின் கலகம் இந்த இரண்டு சொற்களையும் அவர் இசைக்கும் தன்மையில், சமூகத்தைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கும் கதாபாத்திரத்தின் உளவியல் பார்வை அப்படி தெறித்து வந்து விழும். முதல் சரணத்திலேயே பாடலின் வேகம் மனோவேகத்தை மிஞ்சி கவனத்தை ஈர்க்கும்.
அடுத்த சரணத்தில், ‘கோடு வட்டம் என்பதெல்லாம்‘ பேசும் திசையில் சட்டென்று, ‘கொள்ளும் போது கொள்ளு, தாண்டிச் செல்லும் போது செல்லடி‘ என்ற வரி கூர்மையானது. மூன்றாம் சரணத்தைச் சென்றடையுமுன், அங்கே ஒலிக்கும் ராக ஆலாபனை, எல் ஆர் ஈஸ்வரியின் முத்திரை பாடல்களில் ஒன்றாக அமைந்தது.
ஒவ்வொரு சரணத்தின் நிறைவிலும், படாஃபட் என்ற கவலையற்ற மனிதரின் உளவியல் முக்கியமானது. ஒவ்வொரு சொல்லிலும் எல் ஆர் ஈஸ்வரியின் உச்சரிப்பின் சுகம் அனுபவிக்க முடியும். ஆர்கெஸ்டரா, டிரம்ப்பெட் உள்பட பாடல் உருவாக்கத்தில் அந்த மெட்டும், பாட்டும் கொண்டாட வைக்கும். ஒரே ஒரு சோகம், இந்தப் பாடல் காட்சியில் நடித்த திரைக்கலைஞர் ஜெயலட்சுமி இந்தத் துணிவை வரித்துக் கொள்ளாமல் தமது வாழ்வை இளவயதில் முடித்துக் கொண்டது துயரமிக்கது. இன்னும் தொடரும் அத்தகைய வேதனைக்குரிய நிகழ்வுகள் இனி நடவாதிருக்க விழிப்புணர்ச்சி பெருகட்டும்.
எண்பதுகளில் என்று நினைவு, கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் வி இசையமைக்க, எல் ஆர் ஈஸ்வரி, எஸ் பி பி உள்ளிட்டோர் பாடி (நடிகர் ராஜீவ் போன்றோர் நடிக்க) ஆல்பங்கள் போல பெண்ணுரிமை பேசும் சிறப்பான பாடல்கள் சென்னை தொலைக்காட்சியில் பார்த்தது. ஜன்னல் கம்பிகளை விரல்களில் பிடித்து ஏக்கப் பார்வை பார்க்கும் பெண்ணின் முகம் இன்னும் பளிச்சென்று நெஞ்சில் நிற்கிறது. எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் குரலில், பருவமடைவதே பெண் வாழ்வில் சாபமாக உருப்பெறுவதை கேள்விக்கு உள்ளாக்கும் அதிரடி பாடல் உள்பட வலைத்தளத்தில் தேடிப்பார்த்தால் சிக்கவில்லை. முயற்சி தொடர்கிறது. கிடைத்தால் உற்சாகமாகப் பகிர்ந்து கொள்ளவேண்டிய அருமையான பாடல்கள் அவை.
1966ல் வெளியான ‘சின்னஞ்சிறு உலகம்’ படத்திற்காக திரை இசைத்திலகம் கே வி மகாதேவன் அவர்களது அருமையான இசையமைப்பில் வாலி எழுதி இருந்த ‘புதுமைப் பெண்களடி‘ பாடல் அந்நாட்களில் பெரிதும் விரும்பிக் கேட்ட வரிசையில் வானொலியில் ஒலித்துக்கொண்டே இருந்த அருமையான பாடல். பி சுசீலா பாடலுக்கு அத்தனை கம்பீரம் சேர்த்திருப்பார்.
துள்ளல் கதியில் ஒரு பேண்ட் கோஷ்டியின் அணிவகுப்பு போன்ற உணர்வில் புறப்படும் இசையில் அசத்தலாக வந்து கலக்கும் பி சுசீலா குரல் பாடல் முழுவதும் அந்தப் பரவசத்தை ஒரு மத்தாப்பூ சிதறல் போல் தெளித்துக் கொண்டாடி நிறைவுறும். சைக்கிள் சிறகுகள் முளைத்து சாலையில் பறக்கும் பெண்கள் இசைப்பதாக படத்தில் வரும் காட்சியில் இடம்பெற்ற பாடல்.
வயலினும் அக்கார்டியன் இசையும், தபலா கட்டும் வெளுத்துக் கட்ட, மிக வேக தாள கதியில் அமைந்த அருமையான மெட்டு. முதல் சரணத்தில் பல்வேறு திறமைகளை வேகமாக – பதவிக்கும் உதவிக்கும் பட்டத்துக்கும் சட்டத்துக்கும் கவிதைக்கும் கணக்குக்கும் காதலுக்கும் கடமைக்கும்…என்று அடுக்கி, பெண்களா இல்ல, என்று கேட்டு, என்ன செய்யல பெண்கள் என்று பதிலும் சொல்லி, கவிக்குயில் சரோஜினி, கணக்குக்கு சகுந்தலா, ஐநா தலைமைப் பதவியிலே அமர்ந்தவள் விஜயலட்சுமி என்று மிகவும் அற்புதமாக சரணத்தை முடித்துப் புதுமைப் பெண்களடி என்று பல்லவிக்கு வருமிடத்தில் கலக்கி இருப்பார் சுசீலா.
கஸ்தூரிபாய் தியாகத்தைச் சொல்வதோடு நிற்காமல், ஜான்சி ராணி, வீர மங்கம்மா (அந்தப் பரம்பரை தான் எங்கம்மா என்றும்) கொண்டு வந்திருப்பார் வாலி. கவிதை, கணக்கு, காதல், கடமை எதில்தான் பெண்கள் இல்லை என்ற இடத்தில் சுடர் விடுகிறது அவரது எழுத்தாற்றல்.
‘கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ, பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர்’ என்ற மகாகவி வரிகளை இந்தப் பெண்கள் தினத்தன்று காலையில் பகிர்ந்து கொண்டார் திருச்சி தோழர் கே குருமூர்த்தி.
கிளாரா ஜெட்கின் 1908 – 10 ஆண்டுகளில் முன்னெடுத்த சமத்துவத்திற்கான முழக்கங்கள், முன்னதாக ரஷ்ய பெண்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்கள் இவற்றின் தொடர்ச்சியாக அடையாள உருப்பெற்ற மகளிர் தினக் கொண்டாட்டம் மேலும் வலுப்பெறட்டும். பாலின சமத்துவம் பொங்கட்டும். மானுட உணர்வுகளின் பெருமிதம் தழைக்கட்டும். அந்த இசை நம்மைச் சூழட்டும். எங்கும் பரவட்டும்.
(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]
தொடர் 1 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 2 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 3 – ஐ வாசிக்க…
இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 4 – ஐ வாசிக்க…
இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 5 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 6 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 7 – ஐ வாசிக்க..
தொடர் 8 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 9 – ஐ வாசிக்க..
தொடர் 10 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 11 – ஐ வாசிக்க..
தொடர் 12 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 13 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 14 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 15 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 16 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 17 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 18 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 19 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 20 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 21 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 22 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 23 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 24 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 25 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 26– ஐ வாசிக்க..
தொடர் 27– ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 28– ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 29– ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 30– ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 31 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 32 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 32: இசையில வாங்கினேன் எடுத்துப் போடல… – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 33 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 33: இசையிருக்கும் நெஞ்சிருக்கும் வரை இசைத்தே தீருவோம் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 34 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 35 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 35: இசையின் அலையில் தினமும் அலையும் குமிழி | எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 36 – ஐ வாசிக்க..
தொடர் 37 – ஐ வாசிக்க..
பாலின சமத்துவம் பொங்கவும்,. மானுட உணர்வுகளின் பெருமிதம் தழைக்கவும் இந்நாளில் உறுதிேற்போம்
… அருமை.. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
அருமையான பதிவு சார் ❤️ அடி என்னடி உலகம் நல்ல ரசனை எல்.ஆர் ஈசுவரி பாடியதை அழகாக வர்ணனை. நன்றி