இசை வாழ்க்கை 39: பாடல் விட்டுப் பாடல் போவேன் – எஸ் வி வேணுகோபாலன்டந்த வாரக் கட்டுரையில் பாடல்களும், விவரிப்பும் அன்பர்கள் பலரையும் ஈர்த்திருந்தது. அவள் ஒரு தொடர்கதை படத்தின்,  ‘கண்ணிலே என்ன உண்டுபாடல் சட்டென்று மனத்தில் உதித்தது என்று எழுதி இருந்தார் நெல்லை கோமதி அவர்கள். அது அடுத்து ஒரு சமயத்தில் எழுத வேண்டியது என்று பதில் போட்டதும், ‘அவர்கள்‘ படத்தின்காற்றுக்கென்ன வேலிபாடலும் உங்கள் பட்டியலில் இருக்கட்டும் என்று அடுத்த செய்தி அவரிடமிருந்து

இரண்டுமே கவிஞர் கண்ணதாசன் பாடல்கள். எம் எஸ் வி இசை. எஸ் ஜானகியின் குரல். சுஜாதாவின் நடிப்பு. இரண்டு படங்களுமே கே பாலசந்தர் இயக்கியவை.

கடந்த வார விவாதத்தில் பொதுத் தன்மை தழுவிய பெண்ணியக் குரல்கள் கேட்டோம், பார்த்தோம். மேலே குறிப்பிட்டிருக்கும் இரண்டும், தனித்துவ உறுதியை வெளிப்படுத்துபவை.

ண்ணிலே என்ன உண்டு, கண்கள் தான் அறியும்என்பது கேட்க மிக எளிதான ஒரு வாக்கியம். ஆனால், அது ஒரு பெண் மனத்தின் தீர்மானமான பிரகடனமாக ஒலிக்கிறது, அதன் காரம், அடுத்த வரியில், ‘கல்லிலே ஈரம் உண்டு, கண்களா அறியும்?’ என்ற வினவலில் தெறிக்கும். மூன்றாவது வரி, இரண்டும் இரண்டும் நான்கு என்ற கூட்டல் தொகை தானே, ‘என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்குத் தெரியும்?’. ஆஹா….ஆஹாஎன்னமாக ஒரு பல்லவிஒவ்வொரு அடியின் முடிவிலும், ஜானகியின் அபாரமான குரலை ஏந்தி அடுத்த அடிக்கு மேலுயர்த்திக் கொடுப்பது போல சிதார் கொஞ்சுவது தனி அழகு.  


பாடல் தொடங்குமுன் அறிமுகவுரை நிகழ்த்தும் ஷெனாய் இசை, பின்னர் பல்லவியிலிருந்து சரணத்திற்கு அழைத்துச் செல்லவும் ஒயிலாக ஒலிக்கிறது. அப்போது சிதார் இசையோடு அது எட்டியிருக்கும் உடன்பாடு அபாரம்

நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும், நீர் என்று சொன்னால் நெருப்பிலும் வேகும்என்பதை எஸ் ஜானகி பாட வேண்டும், கேட்க வேண்டும். அடுத்த வரியில், ‘நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்புஎன்பது முதல் முறை பாடும் அழகும், இரண்டாவது முறை பாடுகையில் அந்தநெருப்புஎனும் சொல்லில் ஜானகி கொடுக்கும் அழுத்தத்தில் அது மேலும் சுடர் விட்டு ஒளிரும் பேரழகும், ‘யார் அணைப்பாரோ என்று ஒரு சின்னஞ்சிறு இடைவெளி கொடுத்து, இறைவனின் பொறுப்புஎன்று சரணத்தை நிறைவு செய்யும் அழகோ அழகும்……அம்மாடி

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனிஎன்று தொடங்கும் இரண்டாம் சரணம், தேன்பாகு. அதன் ருசி அலாதியானதுமுதல் இரண்டு அடிகளிலும் வரும்ஆடும்என்ற சொல்லை எத்தனை நர்த்தனம் ஆட வைக்கிறார் ஜானகி!  ‘நான் ஒரு ராணிஎன்ற இடம் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து சொடுக்கு போட்டுச் சொல்வது போன்ற சுகம் அளிப்பது

கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்என்ற மூன்றாவது சரணம், அப்பப்பா, இரண்டாம் சரணத்தில் ஞானியாகத் தனக்கு முடி சூட்டிக் கொண்ட பெண்ணின் தத்துவ விசாரம் போல் எழுதி இருப்பார் கவிஞர். அது வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டுப் போகும் தத்துவமல்ல, வாழத் துடிக்கும் தத்துவம்

படத்தில் அந்த கதாபாத்திரம், இறுக்கமான படைப்பாகவே எல்லோருக்கும் புலப்படும் நிலையில், தனக்குள்ளும் காதல் துளிர்க்கும், வாழ்க்கையின் வசந்த விருப்பம் தழைக்கும் என்பதை அவள் வெளிப்படுத்தும் இடம் அது. கோயில் சிலைக்கும் உயிர் வரக்கூடும் என்ற வரி எத்தனை நுட்பமான செய்தியைச் சொல்கிறது. ‘கல்லான முல்லை, இன்றென்ன வாசம்என்று இலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ பாடலில் கவிஞர் எழுதி இருப்பது நினைவுக்கு வருகிறதுஅசாத்திய துணிவுமிக்க கதாபாத்திரத்தின் உளவியலை இயக்குநர் பார்க்கும் அதே திசையில் பார்க்கத்தக்க ஆற்றல் பொருந்திய கவிஞரும், அதை இசையில் மொழி பெயர்க்கும் இசையமைப்பாளரும், குரலில் வெளிப்படுத்தும் திறன் படைத்த பாடகியாக அவள் ஒரு தொடர்கதை படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், பாலிவுட் இசையமைப்பாளர் எஸ் டி பர்மன் அவர்களைக் கவர்ந்திருந்ததில் வியப்பில்லை. எம் எஸ் வி அவர்கள் மறைவுக்குப் பிறகு, அவரது இசையில் எஸ் ஜானகி அவர்களது மிகச் சிறந்த பத்துப் பாடல்கள் என தொகுத்திருந்ததில், இந்தப் பாடல் இடம் பெற்றிருந்ததை (www.sjanakinet ) இணையதளம் ஒன்றில் தற்செயலாகப் பார்க்க முடிந்தது.  

அந்தப் பத்து பாடல்களில் அடுத்தது, அவர்கள் படத்தின்காற்றுக்கென்ன வேலிதான்!

குழந்தைகளுக்கான கதை புத்தகங்கள் என்றாலே பலவும் பரவசம் அளிப்பவை. அப்படியான அருமையான ஓர் ஆங்கிலப் புத்தகம் ஒன்றில் குழந்தைகளுக்கு எப்போதோ வாசித்துக் காட்டிய கதை ஒன்றில், சிறிய புழு ஒன்று வரும். சிட்டுக்குருவி அதைக் கொத்தித் தின்ன வரும். அந்தப் புழு, அலுத்துக் கொண்டு, ‘எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு, நாளை வந்து கொத்துஎன்று வேண்டுகோள் வைக்கிறது. குருவி வேறு இரை தேடிச் சென்று விடுகிறது. மறுநாளும், தனது உடல்வலியைச் சொல்லி, குருவியை விரட்டி விடுகிறது புழு. அது கோதுமை தானியம் பக்கம் பறந்து செல்கிறது. அதற்குள், புழு சற்று வளர்ந்து விடுகிறது, அதன் பழுப்பு நிறம் மாறி, வெவ்வேறு வண்ணங்களில் வேகமாக ஊர்ந்து செல்ல முடியாதபடிக்கு உடல் வலுத்தும் கொண்டிருக்கிறது. வழக்கம் போல் அன்றாடம் வரும் குருவி, ‘குட்டிப் புழுவே குட்டிப் புழுவே, இருக்கிறாயா நீஎன்று கேட்கும், புழு கெஞ்சிக் கேட்கும், மீண்டும் அதைத் தவிர்த்துவிட்டு வேறு பக்கம் போய்விடும் குருவி.

அப்புறம் சில நாட்கள் பொறுத்துத் தேடிவரும் குருவியின் கண்களுக்கு அந்தப் புழு தென்படுவதில்லை. ‘குட்டிப் புழுவே குட்டிப் புழுவே எங்கே நீஎன்று தொண்டை வரளக்  கத்திப் பார்த்துவிட்டு வேறு ஏதோ கொத்தித் தின்றுவிட்டுப் போகிறது குருவி. அதே இடத்தில்தான் ஒரு கூட்டுக்குள் தன்னை ஒளித்துவைத்துக் கொண்டிருக்கிறது அந்தப் புழு. சிறிது காலம் கடக்கிறது, இப்போது கூட்டை உடைத்துக் கொண்டு, பட்பட்டென்று இறக்கைகள் அடித்துக் கொண்டு வெளியேறி வரும் அது, குருவியை வம்புக்கு அழைக்கிறது, ‘ குருவி, வா என் கிட்டே, கொத்தித்தான் தின்னட்டும் என்னைஎன்கிறது….அடடா, நீ இப்போது ஒரு பூச்சியாக வடிவெடுத்து விட்டாயா, பிழைத்துப் போ, விட்டேன் உன்னை என்று சென்றுவிடுகிறது, குருவி. சுதந்திரமாகப் பறக்கிறது பட்டாம்பூச்சி

அது கூட்டை உடைக்கும் ஓசையில் இருந்து தொடங்குகிறார் இந்தப் பாடலை எம் எஸ் வி, வேறென்ன சொல்ல! காற்றுக்கென்ன வேலி பாடல் அல்ல, பரவசம் பொங்கித் ததும்பும் கோப்பை!

வயலின், கிடார், மிருதங்கம், கோரஸ் குழுவினர் எல்லோரும் ஆசை ஆசையாய்ப் பறந்தோடிப் போய் வரவேற்க, மெல்ல இறக்கை விரிக்கும் பட்டாம்பூச்சி ஒன்று எஸ் ஜானகியின் இரகசியமான குரலெடுத்து, ‘காற்றுக்கென்ன வேலிஎன்று கேட்கும் போது, ரசிகர்கள் உள்ளங்களுக்கும் சிறகடிக்கின்றன எண்ணற்ற பட்டாம்பூச்சிகள்

அதற்குமுன்பு, கோரஸ் எடுக்கும் ஹம்மிங், அதில் ஜானகி வேகவேகமாகப் போய்க் கலந்து ஸ்வரங்களுக்கான முன்னோட்ட ஆலாபனை நிகழ்த்த, அடர்த்தியான மரமொன்றின் கிளைகளுக்கருகே அந்தக் கூட்டின் தலைவாசலில் சட்டென்று மௌனமாக நம்மைக் கொண்டு நிறுத்திவிட்டுத் தான் எஸ் ஜானகியைப் பாட அழைக்கிறார் மெல்லிசை மன்னர்!

காற்றுக்கென்ன வேலி என்ற இழைப்பை அடுத்து, கடலுக்கென்ன மூடி என்பது அடுத்த கேள்வி. அந்தக் குரலில் இப்போது சுதந்திர சிந்தனையின் முறுக்கேறி, ‘ கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது, மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏதுஎன்ற வரியை எத்தனை அம்சமாக இசைப்பார் ஜானகி!

பல்லவியிலிருந்து வேகமாக நம்மை ஒரு ரங்கராட்டினத்தில் வைத்து சுற்றி இழைத்து இழைத்து இழுத்துச் செல்லும் வயலின் இசையின் சுகத்தோடு ஸ்வரங்கள் பற்றிக்கொண்டு வரும் குழுவினர் கைப்பிடித்துக் கொண்டு, சொக்கவைக்கும் ஓர் ஆலாபனை இசைத்து, ‘நான் வானிலே மேகம் போல் பாடுவேன் பாடல் ஒன்று, நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்றுஎன்ற வரியை வயலின் குழைத்துக் கொடுக்க இரண்டு முறை பாடிவிட்டு, ‘கன்றுக்குட்டி துள்ளும்போதுஎன்ற இடத்தில் ஜானகி குரலில் தான் எத்தனை துள்ளல்….. சரணத்தின் முடிவில் மீண்டும் பல்லவியை நோக்கிய வேகம் அபாரம்.

இரண்டாவது சரணத்தை நோக்கிய ஓட்டத்திலும் குழுவினர் ஹம்மிங், ஸ்வர ஆலாபனை அசத்தலாக இருக்கும். ‘தேர் கொண்டு வா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்‘, ‘சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன்என்ற வரிகளில் கவிஞரது மேதைமை மின்னும். ‘பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன், பேசிப்பேசிக் கிள்ளை ஆனேன்என்பதென்ன எதுகை மோனை சந்தம் போட்டு எழுதினால் வந்துவிடும் வெற்றுச் சொற்கோவையா? ‘கோயில் விட்டுக் கோயில் போவேன், குற்றம் என்ன ஏற்றுக் கொள்வேன்என்பதென்ன சாதாரண வரிகளா ?  

ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலர் அல்லவா, ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவாஎன்ற வரிகளைநெஞ்சிலோர் ஆலயம்படத்திற்காக எழுதிய அதே விரல்கள் தான் அவை. அந்தப் பாத்திரத்தின் குடும்பச் சூழல், சமூக வளர்ப்பு, இந்தப் பாத்திரத்தின் உருவாக்கத்திடையே கால மாற்றங்கள், விடுதலைக்கான குரல்கள், பெண்களுக்கு பொருளாதாரத் தற்சார்பிலிருந்து முளைக்கும் புதிய சிறகுகள்….. எப்படியான முறையில் பிரதிபலிக்கிறது கவிஞரது படைப்பாற்றல்!

வழக்கமான முறையில் படப்பிடிப்புக்கு முன்பாக அல்லாமல், தமது கற்பனையில் விரியும் காட்சிகள் எடுத்துத் தள்ளிய கேபி, பாடலை வழங்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், கவிஞரும் மெல்லிசை மன்னரும் கூட்டாக அமர்ந்து பார்த்து உள்வாங்கிக் கூட்டாக உருவாக்கி அசத்திய பாடல் இது என்றும் படம் வந்தபோது பேச்சு அடிபட்ட நினைவுசரணங்களில் அற்புதமான தாளக்கட்டு, மிருதங்கம் தான் என்று தோன்றுகிறது, பாடலுக்கான சிவப்புக் கம்பள விரிப்பு போல் விரிந்து கொண்டே செல்லும் அழகு தனியானது. குழுவினரின் ஒத்திசைவாக ஒற்றைக்குரல் போல் இயைந்து ஒலிக்கும் ஸ்வர வரிசையும், ஜானகி அவர்களது தனித்துவக் குரலில் பொங்கும்  ஹம்மிங்கும், ரயில் கடந்து போனபின்னும் கேட்டுக்கொண்டே இருக்கும் ஓசையைப் போலவே பாடலை நிறைவு செய்யும் தாள ஓசையும் பாடல் முடிந்து வெகுநேரத்திற்குப் பிறகும் உள்ளங்களில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.

ண்ணீர் தண்ணீர் படத்தில், ஊருக்குத் தண்ணீர் கொண்டுவந்து சேர்க்கும் வண்டியோட்டி வெள்ளைச்சாமிக்கு அங்கவஸ்திரம் போட்டு மரியாதையை செய்யும் வாத்தியார் ராமன், என்றைக்காவது இந்த ஊர் பள்ளிக்கூடத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர் வருவார், அன்றைக்குப் போட்டுக்கலாம் என்று பெட்டியில் மூடியே பல காலம் வைத்திருந்தேன், ஆனால், இந்தப் பாழாப்போன ஊருக்கு எவரும் வரல என்று சொல்லும் காட்சி வரும். அப்படி பெட்டியில் போட்டு மூடி வைத்து, ஆண்டுக்கு ஒரு முறை வெளியே எடுத்துப் பார்க்கும் அங்கவஸ்திரம் போல, மார்ச் 8 அன்று மட்டும் நினைவுப் பெட்டிகளில் இருந்து வெளியே எடுத்துக் கொண்டாடிவிட்டு, மீண்டும் உள்ளே வைத்து விடும் மகளிர் தினத்தைக் கடந்து, பெண் விடுதலைக்கான போராட்டம், ஒரு மனவெழுச்சியாக பாலினம் கடந்து எல்லோர் உள்ளங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்க வேண்டும், கேட்கக் கேட்க நம்மை ஆட்கொண்டுவிடும் இசையைப் போல!

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]இசை வாழ்க்கை 37: அழகிய இசையே எனதுயிரே – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 38 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 38: வேறு இசை தேடிப் போவாளோ ? – எஸ் வி வேணுகோபாலன்