சை நாற்பது இந்த வாரம்! எத்தனை எத்தனை அன்பர்களது அனுபவ பகிர்வுகள்! வாசித்து வரும் அத்தனை பேருக்கும் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்இதுவரை இசை குறித்துப் பேச வாய்ப்பற்ற நண்பர்கள் தற்செயலாக இந்தக் கட்டுரைகள் பார்த்துப் பேசும்போது கிடைக்கும் இன்பங்களும் சேர்ந்ததுதான் இசை வாழ்க்கை!

பாலராஜ்மிகவும் மென்மையான தோழர். கோவையில் பணி நிறைவு செய்து வசித்து வரும் அவரோடு தற்செயலாக ஏதோ பேசிக் கொண்டிருக்கையில், எஸ் பி பி பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிவிட்டு நிறுத்தும்போது, பளீர் என்று ஒரு மின்னல் வெட்டுப் போல அவரிடமிருந்து பிறந்தது உற்சாகமான தகவல்கள்மகத்தான அந்தப் பாடகரை அருகே அமர்ந்து பாலராஜ் ரசித்த ஒரு காலம்அதுவும் சுடச்சுட பாடல்கள் பிறக்கும்போதே, அந்த முதல் நிமிடங்களிலேயே!

அவருடைய குடும்ப நண்பர் ஒருவர், பாடல் பதிவு நடக்கும் இடத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வந்தவராம்அவரிடம் ஒரு முறை கேட்டிருக்கிறார் பாலராஜ், அங்கேயெல்லாம் உள்ளே போய்ப் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா என்று, அவ்வளவு தான்வாசல் திறந்து கொடுத்துவிட்டது அந்த வேண்டுகோள்! பாலுவின் வளர்முக பயணத்தின் பாடல்கள் பலவற்றை  அங்கே அவர் வந்து பாடிப் பதிவு முடித்துக் கொடுத்துவிட்டுப் போன பரவசக் காட்சிகள் பலவற்றின் ரசனை மிக்க சாட்சியமாக ஓசைப்படாமல் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் பாலராஜ்

பாடல் பதிவு என்றதும் நினைவுகள் பின்னோக்கிப் போகின்றன. கொஞ்சம் சுவாரசியமும், பின்னர் துயரமானதுமான நினைவுகள்

சி செல்வராசு என்று தான் கையெழுத்திடுவார் தோழர் சி எஸ். மார்ச் 6, 1983 அன்று, ‘தி இந்துதொழிற்சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற இந்தியன் வங்கி ஊழியர் சிறப்பு மாநாட்டின் நிறைவில் முகிழ்த்த புதிய சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கனத்த கருப்பு ஃபிரேம் கண்ணாடியும், அதைவிட கனத்த குரலும், துணிவுமிக்க முழக்கமும் கொண்டிருந்த அவரை அன்று தான் முதன்முதல் பார்த்ததுஆசையாய் வைத்துக் கொண்டிருந்த ஒரு பேனாவை அப்போது அவரிடம் கொடுத்துவிட்டுப் பின்னர் திரும்ப வாங்க மறந்து வந்தபோது தெரியாது, ஓர் உள்ளன்புமிக்க தோழமை நெருக்கம் அவரோடு பின்னாளில் ஏற்படும் என்பது. பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி இதழின் முதல் ஆசிரியர் அவர்.

நேரடியாக வங்கி உயர் நிர்வாகிகள் முகத்தருகே கேள்விகள் எழுப்பும் ஆவேசத்தோடு எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தொழிற்சங்கத் தலைவரின் இதயத்திற்குள் கலை இலக்கிய உலகில் மாற்றத்திற்கான விதைகள் எப்படியாவது தூவிவிட வேண்டும் என்ற சிந்தனை பொங்கிக்கொண்டிருந்தது அப்போது தெரியாது. தொழிற்சங்க போராட்டங்கள், நிர்வாக விசாரணைகளில் உறுப்பினரைத் தற்காக்கும் வாதத் திறமையோடு ஓயாத பணிகள், இன்கிரிமெண்ட் வெட்டு என்று மட்டுமே போய்க் கொண்டிருந்த பயணம் அவருடையது என்று நம்பிக் கொண்டிருக்க, அவர் வேறு தேடலில் இருந்துகொண்டிருந்தார்.



ஆறு ஆண்டுகள் கடந்திருக்கும், கேட்டால், ‘முற்போக்கு திரை பிக்சர்ஸ்‘  உருவாக்கி விட்டிருந்தார், அதைச் சொல்லும்போதும் அவரது நகைச்சுவைக்கு ஒரு பங்கிருந்தது, முற்போக்கு என்று எழுதி வைத்த பெயர்ப்பலகைக்கே மஞ்சள், குங்குமம் பூசி அதற்கு ஒரு பூமாலை போட்டு கற்பூரம் கொளுத்தி ஒரு பூசணியும் உடைத்து விட்டார்கள், திரை உலகின் மூடநம்பிக்கைகளை அத்தனை சுலபமாக எப்படி தகர்ப்பது என்று சிரித்தார்!

சைதாப்பேட்டை பார்சன் அபார்ட்மெண்ட் குடியிருப்பில் வசித்து வந்த தோழர் சேகர் இல்லத்தில்தான் ஒரு நாள் மாலை புதிய படத்தின் பாடல் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார். பால்கி எனும் பாலகிருஷ்ணன் மற்றும் சிலர் உடனிருந்தோம். புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர்கள் மூவருள் ஒருவரான எல் வைத்தியநாதன் அவர்களை சந்தித்துத் தமது படத்தின் கதை சொல்லி, சிச்சுவேஷன் விவாதித்து, இசையமைக்க இசைய வைத்து, மெட்டுக்கள் உருவாக்கித் தரக் கேட்டு வாங்கியும் வந்திருந்தார் சி எஸ்.  

அதில் முதல் மெட்டு போட்டுக் காட்டினார். சிகரெட் புகைக்கும் காதலனை அந்தப் பழக்கத்தை விட்டுவிடு என்று நாயகி கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்அது திருமணத்திற்காக அவளது தாத்தா போட்டிருந்த முன் நிபந்தனை. நடிகர் விக்ரம் (அப்போது வினோத்) நடித்த முதல் படம் அது.  

தன்னா னானே தன்னனா தானே னானே தன்னனா….’ இது தான் மெட்டு.  ‘எங்கே எங்கே என்னுயிரே என்னை விட்டுப் போகாதேஎன்று தோழர் செல்வராஜ், தாமே முதல் இரண்டு வரிகள் எழுதி இருந்தார், என்னிடம் கொடுத்து, எழுதி முடிங்கள் என்றார். திரைப்படப் பாடல் அனுபவமற்ற ஒருவன் அதில் எப்படி துணிந்து இறங்க முடியும். காஸெட் ஓடிக்கொண்டே இருந்தது. அதை நிறுத்தினாலும், இன்றுவரை, எல் வி அவர்களது குரலில் அந்த மெட்டு  உள்ளே  ஓடிக் கொண்டுதான் இருக்கிறது

அவர் கொடுத்த பல்லவியை வளர்த்து, கடைசி வரியாக, ‘தானன தானன தானன தானனாஎன்ற மெட்டுக்கு,  ‘தேன் சிந்தும் உதடென்ன தீப்பந்தம் ஏந்தணுமாஎன்று ஒன்று, அப்புறம்  ‘மாலை நிலா வந்து வேடிக்கை பார்க்கிறதே‘  என்று இன்னொன்றும் எழுதி அவரிடம் காண்பிக்க, ‘இரண்டாவதாக  எழுதியது, நிலவை வைத்து அழகா, இலக்கியமா நல்லா வந்திருக்கு, பாட்டு முழுசும் நீரே எழுதும்யாஎன்றார் சி எஸ்

ஒரு திரைப்படம், முதல் கனவு முயற்சி, அமெச்சூர் ஆளை நம்பி இறங்கவேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொண்டோம். கவிஞர் வைரமுத்து அவர்களைப் போய்ப் பார்த்துப் பேசி, மொத்த பாடல்களையும் விரைந்து எழுதி வாங்கி வந்துவிட்டார் சி எஸ்எல்லாமே சிறப்பாக அமைந்தவை

பாடல் பதிவுக்கு, கோதண்டபாணி ஸ்டூடியோ சென்றிருந்தோம். அந்த முதல் மெட்டுக்கு,  ‘அய்யா கண்ணு போவதெங்கே அம்மா கண்ணு தேடுதிங்கே, மாலை சூடும் ராதை இங்கே, மாயக்கண்ணன் எங்கே, தலையென்ன மறையுது தவறென்ன புரியுது…’ என்று பல்லவி எழுதியிருந்தார் வைரமுத்துரிகர்சல் எல்லாம் முடிந்திருக்க, சித்ரா பாடவும், அந்த மாயக்கண்ணாடிக்கு வெளியே இருந்தபடி பாடல் பதிவைப் பார்த்துக் கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது.





அய்யா விட்ட புகைதான் மேகமாகிப் போச்சு, அய்யாவோட போட்டி போட்டு ரயிலும் தோத்துப் போச்சுஎன்று புறப்படும் முதல் சரணத்தில், ‘நீயென்ன அக்கினி புத்திரனா…’ என்று ராகம் இழுக்கும் இடத்தில் சிறப்பாக இசைத்திருப்பார் சித்ரா. அடுத்து, ‘ராவோடும் எரிகிற சூரியனாஎன்று வரும் இடமும், ‘கெட்டகுணம் விட்டுவிடு பெண்மனதைத் தொட்டுவிடுஎன்று சரணம் முடியுமிடத்தில் இழைப்பும் அருமையாக இருக்கும்.  

இரண்டாவது சரணத்தின் நிறைவில், ‘மன்னவனே மாறிவிடு, மல்லிகைக்கு மாலையிடு…’ என்று வரும் இடமும் சிறப்பாக இருக்கும். இரண்டாவது சரணத்திற்கான பாதையில் அம்சமாக மிருதங்க வாசிப்புபுல்லாங்குழலும், டிரம்ப்பெட்  இசையுமாக நல்ல வேக கதியில் அமைந்த பாடல் அது.

டேக் ஓகே ஆனதும், ‘நல்லா வந்திருக்கு எல் விஎன்று உற்சாகமாகச் சொன்னார் கவிஞர் வைரமுத்து. அந்தப் பாடல் தவிர, எஸ் பி பிசித்ரா குரல்களில் இரண்டும், எஸ் பி பி தனியாக ஒரு பாடல், கே ஜே யேசுதாஸ் தனியாக ஒரு பாடல் என மொத்தம் ஐந்து பாடல்கள்.

அடுத்தடுத்து மற்ற பாடல்களும் பதிவாக இருந்தனஆனால், அவற்றைப் பார்க்க அங்கே செல்ல முடியவில்லை. அதற்கு வேறு காரணமிருந்தது. பின்னர் பாடல்கள் பதிவான பிறகு எல்லாவற்றையும் காசெட்டில் கேட்கையில் எல்லாமே மிகவும் சிறப்பாக வந்திருந்தன. படத்தின் பெயர் என் காதல் கண்மணி. 

தையின் போக்கில், சிறு ஊடலுக்குப் பிந்தைய காட்சிக்கான பாடலாக வரும், ‘என்னை விட்டுப் பிரிவது நியாயம் ஆகுமாஎன்ற பாடலின் வரிகள் எளிமையாகவும், கதையமைப்புக்கான பொருளோடோடும் சிறப்பாக எழுதி இருப்பார் வைரமுத்து. பல்லவியின் தொடக்க இசைக்கோவையும், சித்ராவின் சிறப்பான குரலெடுப்பும், ‘காதல் என்பது பேதம் பார்க்குமாஎன்ற வரியை, இரண்டாகப் பகுத்து எல் வி அமைத்திருந்த மெட்டுக்கு ஏற்ப சிறப்பாக இசைக்கும் பாங்கும் இப்போது கேட்டாலும் புதிதாகத் தோன்றும் சுவை மிக்கது

பாடலுக்கான கோரஸ் முழுவதும் குழந்தைகளை வைத்துப் பாட வைத்திருப்பார் எல் விகுழந்தைகளோடு சித்ராவும் கலக்கும் ஹம்மிங் அருமையாக இருக்கும்





இரண்டாம் சரணத்திற்கு முந்தைய பல்லவி பாடுகையில் பாலுவின் ஹம்மிங் சேருமிடம் ஒரு சுவாரசியம் எனில், இரண்டு சரணங்களிலும் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்களை அவர் ஒலிக்கும் விதம் கூடுதல் சுவாரசியம். பாடல் முழுவதுமே தபலா தாளக்கட்டு, கேட்பவரைப் பாடலோடு இருத்தி, பொருத்தி, உருட்டி அழைத்துச் செல்வது தனி இன்பம்.

ஸ் பி பி தனியாக இசைக்கும், ‘என்னையே ஜெயிலுக்குள்ள போட்டுக்கிட்டேன், விலங்க வெல கொடுத்து மாட்டிக்கிட்டேன்பாடல், சுய கழிவிரக்க வகையைச் சார்ந்தது.  ‘கொள்ளிக்கட்டை எடுத்து நானும் தலை சொறிந்தேனேபோன்ற வரிகள் அபாரமாக இருக்கும்.  

முழுக்க முழுக்க ஒரு போதையூட்டும் குரலில் கிறக்கமாக அற்புதமாகப் பாடி இருப்பார் எஸ் பி பி. ‘போங்கடா என்னையும் வாழ விடுங்க‘ , ‘முழியா முழிச்சேனே தவியாய்த் தவிச்சேனேபோன்ற இடங்களை அசாத்திய சேஷ்டையில் இசைத்திருப்பார். இந்தப் பாடலுக்கான காட்சியில், முதல் படம் என்று சொல்லவே இயலாதபடிக்கு, அத்தனை சிறப்பாக முக பாவங்களும், உடல் மொழியும் கொண்டு வந்திருப்பார் நடிகர் விக்ரம்.





இந்த மூன்றுமே பிடித்தவை தான் என்றாலும், படத்தின் வேறு இரண்டு பாடல்கள் மிகவும் ஈர்த்தவைஒன்று இன்பியல் உற்சாகம். மற்றொன்று துன்பியல் போன்ற கதியில் அமைக்கப்பட்ட ஞானத்தின் குரல். ஒன்று இருவரின் இணை குரல்கள் கொண்டாட்டம். அடுத்தது தனிக்குரல் ஆசுவாசம். ஒன்று ஆனந்தப் பேரூற்று. மற்றது மௌனப் பெருமூச்சுஇரண்டிலும் கவிஞரது சொல்லாட்சி சிறப்பாகப் பொருந்தி இருந்தது முக்கியமானது.

நிக்கோட்டின் கமறலில் இருந்து விடுதலை பெறும் நுரையீரல், அதற்குப்பின் தான் உலகின் வாசனைகளை எல்லாம் உணர வைக்கிறதாம். ஓர் ஆங்கிலப் படத்தின் கதையைத் தழுவித்தான் இதை யோசித்திருந்தார் செல்வராஜ்

ஆங்கிலப்படத்தில், அந்த நாயகன், புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்தபின் தான், நறுமணம் என்றால் என்ன என்றே அறியத் தொடங்குவானாம். பூக்களை அதற்குமுன் அவன் அருகே முகர்ந்து அறிந்ததில்லை. ஒரு குட்டிக்குழந்தையை எடுத்து,  அதன் பிருஷ்ட பாகத்தை முகர்ந்து பார்க்கும் காட்சி கூட இருந்தது என்று சொன்னார் சி எஸ்.





இதுவரை வாசனை என்றால் என்னவென்று அறியாதவனின் மூக்குக்கு மணம் பிடிபட்டுவிடுவதன் குதூகலத்தை, ‘தா….னனா தா……னனா  தானே தா….னனாஎன்று மெட்டு போட்டுக் கொடுத்திருந்தார் எல் வைத்தியநாதன்.   ‘இன்று தான் முதல் முறை உலகைப் பார்க்கிறேன்என்று அந்தப் பாடலை அழகாக எழுதியிருந்தார் வைரமுத்து. ஒவ்வொரு முறையும் பாடலில், இன்று தான் என்பதில் வரும்  அந்ததான்‘ , ஒவ்வொரு விதமாக இழைத்திருப்பார்  எஸ் பி பி

மழை விழுந்த மண்வெளியில் வாசம் உள்ளதுஎன்பது முதல் சரணத்தின் முதல் வரி. அதை இரண்டாவது முறை இசைக்கையில், மண்வெளியை மனவெளியாக அழுத்தி இழுக்கும் பாலுவின் குரல் இப்போது நினைக்கையில் கண்ணீர் பெருக்குகிறது. ‘மங்கையிவள் கன்னங்களில் வாசம் உள்ளதுஎன்ற வரியில்கன்னங்களில்என்பதை ஒரு சங்கதி போட்டு இழைத்திருப்பார் சித்ராமென்மையான ஹம்மிங் பாடலின் ஊடாகவும், நிறைவாகவும் சிறப்பாகக் கொண்டு வந்திருப்பார் எஸ் பி பி ! சித்ராவின் குரலிலும் அதே குதூகலம், பரவசம் பற்றித் தொற்றிப் பரவி வருவதை இணையாக ரசிக்க முடியும்.

கே ஜே யேசுதாஸ் அவர்களது குரலில் உருக்கமான பல பாடல்கள் கேட்டிருக்கிறது ரசிகர்கள் உலகம்.  ‘கங்கை எப்போதும் காய்வதில்லைபாடல் அந்த வரிசையில் மிகவும் சிறப்பாக அமைந்த ஒன்று. அன்பின் அருள் தான் பாடலின் மொழி என்றாலும், ஒரு சோகச்சுவையில் அமைக்கப்பட்டிருந்த இசைக்கோவையில், யேசுதாஸ் அவர்களது குரலோடு வயலின் இசையும் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பாடல் நெடுகிலும்

பல்லவியில்,  ‘சட்டம் இட்டாலும் சிங்கம் நில்லாது, பாசம் கொண்டாலே ஒன்றும் செய்யாது‘  என்ற வரி முக்கியமானது





ஆண்ட்ரக்கிள் மற்றும் சிங்கம் என்ற கதையை இளமைப் பருவத்தில் கேட்காதவர் குறைவாகவே இருப்பர். தப்பியோடிச் செல்லும் அந்த அடிமை ஆண்ட்ரக்கிள், பின்னர் தேடிப் பிடிக்கப்பட்டதும் சிங்கத்திற்கு இரையாகப் படைக்கப்படுகிறான். கூண்டைத் திறந்ததும் கர்ஜித்துக் கொண்டே வரும் சிங்கம் அவனைக் கடிப்பதில்லை, மாறாக, அவனை நக்கிக் கொடுத்து அன்பு பாராட்டத் தொடங்கி விடுகிறது. அவன் இறப்பைப் பார்க்கக் கூடியிருந்த கூட்டம் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கூத்தாடுகிறது. தண்டனை வழங்கிய ஆண்டைக்கு மட்டும் என்ன நடக்கிறது என்பது பிடிபடுவதில்லை. அதற்கு ஒரு ஃபிளாஷ் பேக் கதை இருக்கிறது

ஆண்ட்ரக்கிள் காட்டில் திரிந்த நேரத்தில், இதே சிங்கம்முள்ளொன்று காலில் குத்திக்கொண்டு விடவே தாங்காத வேதனையில் துடிதுடித்துக் கொண்டிருந்த நேரத்தில், இவன் அதனிடம் அன்பு காட்டி, முள்ளைப் பக்குவமாகப் பிடுங்கி எறிந்துவிட்டு மூலிகைச் சாறு கொண்டு ரணத்திற்கு மருந்திட்டுத் தனது சட்டைத் துணியிலிருந்து கொஞ்சம் கிழித்துக் கட்டுப் போட்டிருப்பான்அது தான் அன்பின் மாயப் பிணைப்பு!எத்தனை கச்சிதமாக ரோமானிய அடிமையின் கதையை உரிய இடத்தில் ஒற்றை வரியில் நினைவூட்டி நெகிழ வைக்கிறது கவிஞரின் திரைப்பாடல் !

இரண்டாவது சரணத்தில், ‘சட்டம் என்ன வாழும், அன்பு தானே ஆளும், சட்டம் இட்டால் பூங்கொடி மொட்டு விடாதுஎன்று எழுதி இருப்பார் கவிஞர். பாடல் முழுவதுமே கவனித்துக் கேட்கத் தக்க வரிகள் நிறைந்திருக்கும்உள்ளத்தைத் தொடும் கருணை ததும்பும் குரலில் பாடலைப் பாடி இருப்பார்  யேசுதாஸ்.

ன் காதல் கண்மணி படத்தின் முதல் பாடலுக்குப் பிறகு மற்ற பாடல் பதிவுகளுக்குச் செல்ல முடியாமல் போனதற்குக் காரணம் இருந்தது. தோழர் சி எஸ், தமது கனவுகளின் துரத்தலில்ஓர் இலட்சியத் தேடலின் எளிய தொடக்கப் புள்ளியாக திரைத்துறையில் ஏதேனும் முயற்சிகள், பரிசோதனைகள் செய்ய விரும்பினார்

ஆனால், அதற்கான பணத்தேவைக்கு அலையத் தொடங்கிய கணத்தில் இருந்து, வேறேதும் சிந்திக்க முடியாத சோதனை அவரைச் சூழ்ந்தது. கதவுகளைத் தட்டிக் கொண்டே இருக்கவும், கொடுத்தவர்கள் திரும்ப எதிர்பார்க்கையில் வேறு கதவுகளைத் தேடவுமாக அதன் பாதிப்புகள் அவரை உடலியல், உளவியல் ரீதியாக மிகவும் சிக்கலுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தது



தாம் விரும்பிய அளவு படத்தில் கவனமும் செலுத்த முடியாது அலைந்து கொண்டிருந்தது மற்றுமொரு துயரம். படம் வெளிவந்ததுஅதற்குமேல் ஒன்றுமில்லை அவருக்கு சொல்லிக் கொள்ள. தோழமை வட்டத்தில் எப்போதும் யாருக்காவது பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய ஒரு கட்டத்தில் வெறுத்துப் போனார்

புரட்சிகரமான மாற்றம் ஒன்றிற்கான திறவுகோல் தம்மிடம் இருப்பதாக அவர் சலியாது நம்பிக்கொண்டிருந்தார். ‘பாடல் ஒரு கோடி செய்தேன், கேட்டவர்க்கு ஞானமில்லைஎன்பது மாதிரி தவித்துக் கொண்டிருந்தார்வங்கி வேலையையும் துறந்து வெளியேறினார்

எனக்கு திருமணமான மிகச் சில நாட்களுக்குப் பிறகு திடீர் என்று ஒரு நாள் நள்ளிரவைக் கடந்து சுமார் இரண்டு மணி போல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுத் திறந்து பார்க்கையில், சி எஸ் நின்று கொண்டிருந்தார். அந்த இரவு நெஞ்சை விட்டு நீங்கவே நீங்காது. சாப்பிட ஏதும் செய்து தரவா என்றால் வேண்டாம் என்றார். குடிக்கத் தண்ணீர் கூட மறுத்து விட்டார்

அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கி விட்டோம், ஒரு புலவர் பாடல் எழுதியே தீருவேன் என்று நட்பின் நிமித்தம் வம்பு செய்து கொண்டிருக்கிறார்,  அவரால் தாளக்கட்டுக்கு எழுத முடியவில்லை, எழுந்தும் போக மாட்டேன் என்கிறார்நீங்கள் நாளை காலையே வந்து உட்கார்ந்து பாடல்கள் எழுதிக் கொடுக்க வேண்டும். இந்தப் படம் என்னுடைய முழு உழைப்பில் வரப்போகிறதுஎன்று அந்த ஒற்றை வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார்

அவர் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டு, ‘வேண்டாம், அடுத்த முயற்சிகள் இப்போது வேண்டாம், கொஞ்சம் பேசுவோம், இரவு இங்கே உறங்குங்கள், விரிவாக நாளை விவாதிப்போம்என்று சொல்லவும், சட்டென்று எழுந்து விட்டார், ‘என்னால் வேறு யோசிக்கவே முடியாதுஎன்று அப்போதே வெளியே புறப்பட்டுப் போய்விட்டார்

நாள் கணக்கில் எத்தனையோ போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர், எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்டிருந்தவர், ‘புதிய விடியல்என்றுதான் தமது இல்லத்திற்கே பெயர் சூட்டி இருந்தவர் அவர். வங்கி சேர்மன் எதிரே நேருக்கு நேர் நின்று அடங்க மறுத்து வாதிட்ட கம்பீரமிக்க மனிதர் தானா இவர் என்று பார்த்துக் கொண்டே நின்ற இரவு அது. பின்னர் அதிகம் சந்திக்க முடியவில்லை



அது நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சங்க அலுவலகம் வந்த அவர், ‘நாளை மறுநாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று வீட்டுக்கு வாருங்கள்என தோழர் தபன் தாஸ் அவர்களை அழைத்துவிட்டுப் போனார்மாநாடு ஒன்றிற்காகச் சென்னை வந்திருந்தார் தோழர் தபன்

புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய நாள் மாலை, சாலையை வேகமாகக் கடக்கையில் மோசமான விபத்திற்கு உள்ளாகி நினைவில் மட்டுமே இருப்பவராகிப் போனார் சி எஸ். தமது அன்னையிடம் கொண்டு சேர்க்க அவர் வாங்கி வைத்திருந்த இனிப்புப் பொட்டலங்கள் சிதறிப் போயிருக்க, அவர் இனி வரமாட்டார் என்ற செய்தி மட்டுமே தாயிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.

ந்தத் தமிழ்ப் புத்தாண்டு, அவரது மறைவின் 25வது நினைவு நாள். வற்றாத நகைச்சுவை உணர்வும், சிரிப்பும், சோர்வற்ற நடையும், துணிவும் உருவகமாகி வாழ்ந்த அவரது வேகத்தில், முழக்கத்தில், உரையாடலில், பேச்சு வார்த்தைகளில் கூட இசை ஒலித்துக்கொண்டே இருக்கும் ! அவரது உடல் மொழியும், அறச்சீற்றத்தின் கனலும் கூட இசையாகவே உள்ளத்தில் இப்போதும் சுழன்று கொண்டிருக்கவே செய்கிறதுதுயரைப் பெருக்கும் இசை தான். ஆனால், மனத்தின் பாரத்தை இறக்கிவைக்க சில நேரம் கண்ணீர் தேவைப்படத்தான் செய்கிறது. கண்களிலிருந்து பொழிவதையும் சேர்த்தே, கங்கை எப்போதும் காய்வதில்லை, பாசம் எப்போதும் தோற்பதில்லை

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]



இசை வாழ்க்கை 37: அழகிய இசையே எனதுயிரே – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 38 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 38: வேறு இசை தேடிப் போவாளோ ? – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 39 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 39: பாடல் விட்டுப் பாடல் போவேன் – எஸ் வி வேணுகோபாலன்



3 thoughts on “இசை வாழ்க்கை 40: என் பாடல் கண்மணி – எஸ் வி வேணுகோபாலன்”
  1. இத்தொடரின் இப்பகுதி தோழர் சி.செல்வராசுக்கு மட்டுமல்ல எஸ்.பி.பி .க்கும் புகழஞ்சலியாக அமைந்துவிட்டது. தத்தகாரம் ஒலிச்சித்திரங்களாக உருமாறுவதை ரசனையுள்ள சுவைஞர் பார்க்கும் வாய்ப்பு அரிதாக. அமைவது. ஆனால் ஓர் இலட்சியவாதி உருப்பெறா தத்தகாரமாய் சிதைந்து போன துயரம் நெஞ்சை உருக்குகிறது. அழுதாலும் சிரித்தாலும் கண்ணீர் துளிர்ப்பது போல துயரத்தைபெருக்கவும் , துடைக்கவும் இசைக்கு இரட்டை ஆற்றலுண்டு. உருக்கமான பதிவு தோழர்.

  2. மனத்தின் பாரத்தை இறக்கிவைக்க சில நேரம் கண்ணீர் தேவைப்படத்தான் செய்கிறது
    ஆண்டுகள் பல கடந்தாலும் தோழர் சி.எஸ். அவர்களின் பிரிவு மனதை கனக்கத்தான் செய்கிறது

  3. தோழர் சி.எஸ். அவர்களுடனான நினைவுகள் அருமை. பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் உங்கள் நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது. கட்டுரை 40 வரை வந்துவிட்டீர்கள். தொடரட்டும் இந்தப் பயணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *