இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்நடிகர் விவேக் மறைவு உள்ளபடியே எண்ணற்றோரை அதிர்ச்சியுற வைத்தது. வயது வித்தியாசமின்றி பரந்த அளவில் எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருந்தவர், இனியும் பேசப்படுவார். மரக்கன்றுகள் பார்க்கும்போதெல்லாம் நிழலாடும் அவர் நினைவுகள்.

சிறுகதை, கவிதை, வளமான தமிழில் உரைநடை எல்லாம் தேர்ச்சியான ரசனை கொண்டிருந்தவர் விவேக். நாகேஷ் ஒரு படத்தில், காதலியிடம் ‘முத்துக் குளிக்க வாரீயளா’ பாட்டைப் பாடிக் கொஞ்சுவார், அவரது குரலினிமை கேட்டபோது, அவரை ஏன் திரைப்படங்களில் பாடவைக்கவில்லை என்று தோன்றும். (அனுபவி ராஜா அனுபவி படத்தில் அவருக்காக டி எம் எஸ் தான் பாடி இருந்தார் அந்தப் பாடலை!). விவேக், நிச்சயம் பாடி இருக்க முடியும். இசைப்பாடல் மீதான ஆர்வம் யாரையும் சும்மா இருக்கவிடாது.

தமிழறிஞர் வ சுப மாணிக்கனார் அவர்களைப் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள் மூத்த வாசகர்கள். துணை வேந்தராக இருந்த அவரது பிறந்த நாளும், நினைவு தினமும் இந்த ஏப்ரல் மாதமே சூழ்கிறது.

1984ம் ஆண்டு திரு ஏ சுப்பிரமணியன் எனும் அருமையான மனிதர், அய்யா மாணிக்கனாரை வானொலிக்காக செய்த நேர்காணல் பதிவு ஒன்றை, திருச்சி நரம்பியல் சிறப்பு மருத்துவர் சுப திருப்பதி பகிர்ந்து கொண்டிருந்தார். பழந்தமிழ் நூல்கள் குறித்தெல்லாம் ஓடிக்கொண்டிருந்த உரையாடல் ஒரு கட்டத்தில் அய்யா அவர்களது நூல் திரட்டு பற்றிய கேள்வியைத் தொட்டபோது பட்டென்று ஒரு சுவாரசியமான செய்தி வாய்த்தது. பத்து பைசா கொடுத்து திரைப்படப் பாடல் புத்தகங்கள் வாங்கி வைத்ததும் சேர்ந்ததுதான் எனது வீட்டு நூலகம், நான் தற்காலத் தமிழிலும், புதுமையிலும் ஆர்வம் கொண்டிருப்பவன் என்கிறார் வ சுப மா.

திரைப்பாடல்கள் குறித்த ஆசை, அவருக்கு இளவயதில் ஏற்பட்டிருக்க வேண்டும், பள்ளிப்படிப்பு முடிக்காமல் பர்மாவுக்கு கணக்குப்பிள்ளை வேலைக்குப் போனவர், அங்கே வாய்மை அறம் சார்ந்து நின்றதால் பணியில் தொடர இயலாத நிலையில் தாயகம் மீண்டவர், தமது நேர்மைக்குத் தமிழ் இலக்கிய பற்றுதலே காரணம் என்று எடுத்துக்கொண்டு புலவர் வகுப்பில் சேர்ந்து மகத்தான ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்று ஆய்வுப்பணிகள் நிறைய மேற்கொள்ளுமளவு அறிவுக்கடலின் ஆழம் தேடியவர், திரைப்பாடல்களுக்குத் தமது வாழ்வில் இடமுண்டு என்று குறிப்பிட்டது அருமையான விஷயம்.
கல்லூரி நாட்களில் தமிழாசிரியர் வேணுகோபாலன் (வெண்ணிற ஆடை வேணுகோபாலன் என்று அறியப்பட்டவர்) வகுப்பில் ஒரு முறை கொச்சையான பாடல்கள் எழுதுகிறார் கண்ணதாசன் என்றார். ‘வாலி மட்டுமென்ன’ என்று வகுப்பு முடிந்ததும் வம்புக்குப் போய் நின்றேன் அவரிடம். நானும் அவரும் ஓர் அறையில் தங்கி இருந்தவர்கள், ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் என்றெழுதிய வாலி தான் இப்போது இப்படி, என்ன சொல்ல?’ என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.அற்புதமான அந்தப் பக்திப்பாடல் எழுதியவர் வாலி என்றறிந்து வியப்பாக இருந்தது. பின்னர் கேட்டறிந்த செய்தி, ஓர் அஞ்சலட்டையில் தான் அந்தப் பாடலை டி எம் எஸ் அவர்களுக்கு எழுதி அனுப்பினாராம் வாலி. மிகப் பெரிய வெற்றிப் பாடலாக அது உருப்பெற்றதும், சென்னைக்கு வா, நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவரை அழைத்தாராம் சவுந்திரராஜன். மீதி நடந்தது, வரலாறு என்பார்கள் ஆங்கிலத்தில்.

வங்கியில் வேலைக்கு வந்த புதிதில், கிளைக்குள் வேலை ஒரு பக்கம் ஓடிக்கொண்டே இருந்தாலும், இன்னொரு பக்கம் பாட்டுதான். முதல் மேலாளர் ஸ்ரீனிவாச மூர்த்தி, திரைப்பாடல்கள் பற்றி சரிக்கு சரி அமர்ந்து பேசுவார். என்ன வேணும்னா சொல்லுங்க, ‘கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா’ பாட்டு மாதிரி இன்னொன்று உண்டா, இந்தக் கேள்விகளில் எதற்காவது பதில் சொல்ல முடியுமா என்று ரசித்து ரசித்துக் கேட்பார். எனக்கு இசையில் இருக்கும் நாட்டத்தை வைத்து, பணியாற்றிய சிற்றூரில் அய்யப்ப பூசைக்கு உடன் அழைத்துச் சென்றுவிட்டார் மேலாளர். வங்கிக் கிளைக்கு வரும் மென்மையான ஒரு வாடிக்கையாளர் சுருதிப் பெட்டி போட்டுக்கொண்டு ‘பந்தளத்துப் பரம்பரையில் வந்துதித்த அய்யப்பா என் சிந்தையிலே குடிகொண்ட சிங்கார அய்யப்பா’ என்று அழகாக இசைத்த பாடல் இன்னும் மறக்க மாட்டேன் என்று சிந்தையிலே குடி கொண்டிருக்கிறது.

பக்திப் பாடல் பற்றியெல்லாம் நீ எழுத மாட்டாயா என்று என் இளவல் வீரராகவன் கேட்டிருந்தார். ஏப்ரல் 22, மாமேதை லெனின் பிறந்த நாள் வந்த ஓராண்டில் தான் முழுவதும் இறை நம்பிக்கையிலிருந்து விடுபட்டது. ஒரு நாளில் அந்த இடத்தை வந்தடையவில்லை. நீண்ட நெடிய விவாதங்கள், வாசிப்பு எல்லாம் முடிந்து அந்தத் தேதியில் சுற்றி இருந்தோருக்கு அறிவித்த நாள் அது. நாற்பதாவது ஆண்டு இது.

ஆனால், இசை மீதுள்ள பக்தி மாறாதது. அதில் பக்தி இசைக்கு விலக்கு நிச்சயம் இருக்காது. கிறித்துவ மத நம்பிக்கையுள்ள மளிகைக்கடை நண்பர், சிறுவயதிலிருந்து கேட்ட ‘செல்லாத்தா எங்க மாரியாத்தா’, ‘மாரியம்மா எங்கள் மாரியம்மா’ உள்ளிட்ட எல் ஆர் ஈஸ்வரி பாடல்கள் நெஞ்சை விட்டு நீங்காது என்பார். நாகூர் ஹனீபா பாடலை உருகிக் கேட்கும் ரசிகர்கள் அனைவரும் இஸ்லாமியராக இருப்பதில்லை. டி எம் எஸ் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும், அவர் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் பாடிய முருகர் பாடல்கள் தான் காலையில் வானொலி பண்பலையில் அன்றாடம் ஒலிக்கக் கேட்கிறோம். கண்ணதாசன், எம் எஸ் வி இணைந்து உருவாக்கிய கிருஷ்ண கானங்கள் ரசிக்க ஒருவர் ஆத்திகராக இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.

கடவுளைக் கேள்விக்கு உட்படுத்தும் பாடல்களை ஆத்திகர்களும் ரசிக்கவே செய்கின்றனர். தனக்கு மிகவும் வேண்டிய நெருக்கமான உறவுக்காரத் தம்பி அல்லது வகுப்புத் தோழன் மாதிரி கண்ணதாசன் இறைவனைக் கற்பித்துக் கொண்டு எழுதிய சில பாடல்கள் அபார ரசனைக்குரியவை. அதுவும் சுய கழிவிரக்க வரிசைப் பாடல்கள் வேறு யாரையும் விட அவரே அதிகம் எழுதி இருக்கக் கூடும். அவற்றில் தவறாமல் கடவுளை வம்புக்கிழுப்பதைக் கேட்க முடியும்.

‘கடவுள் என் வாழ்வில் கடன்காரன்’ என்ற வரியை, கவிஞர் நீதி படத்தின் பாடலுக்காக எப்படி வந்தடைந்தார் என்பது தெரியாது, பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் அவரும் பேசிக் கொண்டிருக்கையில், இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று எம் எஸ் வி சொல்ல, ‘இன்றைய குடியை எந்தக் குடிகாரனாவது இழப்பானா, உனக்கு எப்படி தெரியும்?’ என்று கவிஞர் சிரித்தபடி, நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று அமைத்தார் என்றும் அந்தக் காலத்திலேயே பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது.

பாடலின் தொடக்கத்திலும், இரண்டாவது சரணத்திற்கு முன்பாகவும் டி எம் சவுந்திரராஜன் அருமையாக ஹம்மிங் இழைத்து, போதையூறிய நிலையில் அறிவுக்கும் அன்புக்கும் நடக்கும் போராட்டத்தை வெளிப்படுத்தும் குரலில் சிறப்பாகப் பாடி இருப்பார். பல்லவியில், ‘இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்கவேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுமிடம் அத்தனை உருக்கம்.

ஒவ்வொரு சரணத்தின் நிறைவிலும், ‘போதை வந்தபோது புத்தி இல்லையே, புத்தி வந்த போது நண்பரில்லையே’ என்ற வரிகள் முக்கியமானவை. இந்த வரிகளுக்கு எப்படி நடிப்பு அமையும் என்று சிவாஜியை மானசீகமாக நினைத்தபடியே பாடி இருப்பார் டி எம் எஸ்.

முதல் சரணத்தின் விரிப்பில் ஒரு கட்டத்தில் ‘எது வந்த போதும் அவனோடு’ என்று கடவுளை சாட்சி வைத்துக் கொள்வார் கதாநாயகன். இரண்டாம் சரணம் இன்னும் அற்புதம். கடவுளுக்குப் பட்ட கடனை எப்படி அடைப்பது என்பதற்கு கவிஞரின் தத்துவ விசாரம் என்னவெனில், கஷ்டங்களை அனுபவித்து என்று! அதைச் சொல்வதோடு முடிகிறதா ஆற்றாமை, ஏழைகளை சோதிக்கும் கடவுளும் ஒரு குடிகாரனாகத் தான் இருக்கவேண்டும் என்று அலுத்துக் கொள்ளும் இடத்திற்கும் போகிறார் கவிஞர் ! அந்த நான்கு வரிகளும் அபாரமானவை:

கடவுள் என் வாழ்வில் கடன்காரன்
கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும்
ஏழையின் வாழ்வில் விளையாடும்
இறைவா நீ கூட குடிகாரன்’.

மொத்தப் பாடலும் அப்படி ரசித்தாலும், இந்த சரணத்தைக் கண்ணீர் சிந்தியபடி பள்ளிக்கூடக் காலத்தில் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டே இருந்த நினைவு இருக்கிறது. பாடல்களில் உள்ளம் நெகிழக் காணும் அனுபவம் வாழ்நாள் தொடர்கிறது.

‘வானம்பாடி’ படத்தின் ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்’ பாடல், எழுபது எண்பதுகளில் வானொலியில் மிக அதிகம் ஒலிபரப்பப்பட்ட பாடல்கள் வரிசையில் இருக்க வாய்ப்புண்டு. காதலில் சிக்குண்டு கண்ணீரில் தாக்குண்டு துடிக்கும் ஓர் ஆண், பெண்களைப் படைத்த கடவுளுக்கு சாபமும், தண்டனையும் வழங்கும் கற்பனைக் களம் அந்தப் பாடல். தண்டனை வழங்கும் நீதிபதி, குற்றவாளி அதை அனுபவிப்பதை அருகே இருந்து ரசிக்க விரும்பும் கூடுதல் சோகம் அந்தக் கற்பனையின் விரிவு.

எஸ் எஸ் ராஜேந்திரனுக்காக என்று இருந்தாலும், அறியாத ரசிகர்கள் இது சிவாஜி பாடலாகத் தான் இருக்கும் என்று திண்ணை உரையாடல்களில், கூட்டு நிகழ்வுகளில் பந்தயம் கட்டியதைப் பார்த்ததுண்டு.

இது, பெண்களை வெறுத்துக் கடவுளுக்கு எதிராக எழுதப்பட்ட பாடல் போல் தோன்றினாலும், காதலால் கைவிடப்பட்டவர்கள் கடவுளாலும் காப்பாற்ற முடியாதவர்கள் என்ற பார்வையில் தான் அதிகம் ஒலிக்கிறது. ‘எத்தனை பெண் படைத்தான் எல்லோர்க்கும் கண் படைத்தான்’ என்ற முதல் சரணத்தை டி எம் எஸ் பாடும் விதமே தனித்துவமானது. அந்த எல்லோர்க்கும் என்பதில் அழுத்தமுறும் அந்த ம், ஒரு வேளை தமிழ் இலக்கணத்தில் சொல்லப்படும் இழிவு சிறப்பு உம்மையாக இருக்கக்கூடும்.

அந்தச் சரணத்தின் நிறைவில் ‘ஊஞ்சலை ஆடவிட்டு உயரத்திலே தங்கிவிட்டான்’ என்ற இடம், வீட்டில் பெரியவர்களை உரிமையோடு கோபித்துக் கொள்ளும் வகையில் வந்து விழுந்திருக்கிறது கவிஞருக்கு.

அடுத்த சரணம், ‘அவனை அழைத்து வந்து’ என்ற வரியை இரண்டாம் முறை இழுக்கும் இழைப்பில், அத்தனை அத்தனை பழி வாங்கும் உணர்ச்சி கொப்புளிப்பது போல் தோன்றும், ஆனால், சொந்த வேதனை பெருகும் கழிவிரக்கத்தின் குரல் அது, தனது சோகத்தைத் தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது. முதல் சரணத்தில் ஊஞ்சலை ஆடவைக்கும் கடவுளை, இந்த சரணத்தில் காதலில் தோல்வியுற்றவன் ‘ஆடடா ஆடு என்று ஆடவைத்துப் பார்த்திருப்பேன்’ என்று பொருமுகிறான். ‘படுவான் துடித்திடுவான் பட்டதே போதுமென்பான்’ என்ற வரியை டி எம் எஸ் முதல் முறை ஒரு பாவத்திலும், இரண்டாம் முறை வேறு ஒரு சுவாரசிய உணர்ச்சியிலுமாகப் பாடி இருப்பார்.

‘பாவியவன் பெண்குலத்தைப் படைக்காமல் நிறுத்தி வைப்பான்’ என்ற முடிப்பும், குழந்தை கோபித்துக் கொண்டு ‘எனக்கு இந்தத் துணிமணி வேண்டாம், பலகாரம் வேண்டாம், ஊருக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டீங்க இல்ல, யாரும் பேசாதீங்க என் கூட’ என்று கதவை அறைந்து சாத்திக் கொண்டு விம்மிக் கொண்டிருக்குமே அப்படித் தான்.

கே வி மகாதேவன் இசையில் வானம்பாடி படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எல்லாமே ரசனைக்குரியவை. எல்லாமே அதிகமுறை வானொலியில் ஒலித்தவை. கடவுளோடு உரையாடும் இன்னொரு பாடலும் டி எம் எஸ் பாடியது தான்.

எல் ஆர் ஈஸ்வரி அவர்களது உயிர்ப்பான ஹம்மிங் உடன் இணைய, ‘ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதைச் சொல்லிவைத்தேன்’ என்ற பாடலை டி எம் சவுந்திரராஜன் அத்தனை உருக்கமாகவும் உள்ளத்திற்கு நெருக்கமாகவும் பாடி இருப்பார்.

திரைப்பாடல்கள் எல்லாம் கவிதை என்ற கணக்கில் வருமா என்று நண்பர்கள் வாட்ஸ் அப் குழுவில் ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. ‘திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று விரும்பி நானும் வந்தேனடா விண்வெளியில் மறைத்தாயடா’ என்ற இந்தப் பாடலின் சரணத்தில் கொஞ்சுகிறது கவிதை….. ‘காடு வெட்டித் தோட்டமிட்டேன் கண்ணீரால் கொடிவளர்த்தேன் தோட்டத்தை அழித்தாயடா, இறைவா, ஆட்டத்தை முடித்தாயடா’ என்பதில் விம்முகிறது கவிதை. இரண்டாம் சரணத்தின் ‘பருவத்தைக் கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக் கொண்டாய் தருமத்தின் தலைவன் அல்லவா சாகசக் கலைஞன் அல்லவா!’ என்பதில் கதறுகிறது கவிதை.

பாடல்கள் அற்ற, இசை ஒலிக்காத ஓர் உலகை எப்படி கற்பனை செய்ய….எந்தச் சூழலுக்கும் இயல்பாகப் பொருந்தும் ஓர் இசை ஒலித்துக்கொண்டே இருக்கிறது, உள்ளும் புறமும்.

தசாவதாரம் படத்தில் பல்ராம் நாயுடு பாத்திரத்தில் வரும் கமல் ஹாஸன், நெருக்கடியான சூழலில் நிற்கும்போது கூட, மொபைலில் அழைப்பு வரும்போது, ரிங் டோன் ஆக வைத்திருக்கும் ஸ்ரீமந்துடு படத்தில் வரும் ‘எந்தோ சின்னதி ஜீவிதம்’ என்ற தெலுங்குப் பாடலின் இசைக்கேற்ப இலேசாக ஆட ஆரம்பிப்பதை ரசிகர்கள் நிச்சயம் கவனிப்பார்கள். நிஜ வாழ்க்கையில் எங்கேனும் பார்த்த மனிதர்களைத் தான் இப்படியான வேடங்களில் சித்தப்பா கொண்டு வந்துவிடுவார் என்று சுஹாசினி ஒரு நேர்காணலில் சொல்லி இருந்தார்.

இரண்டாம் அலை கிருமித் தொற்று பரவலாக எச்சரிக்கையோடு இருக்க வேண்டியதை வலியுறுத்துகிறது. அச்சம் இருக்குமிடத்தில் அன்பை, கரிசனத்தை, நம்பிக்கையை நிரப்ப வேண்டிய நேரம் இது. எந்த நெருக்கடி நேரத்திலும் நம்மை இதப்படுத்தும் இசை இந்த நேரத்திலும் மனத்தை இலேசாக்கி அருளட்டும்.

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]இசை வாழ்க்கை 37: அழகிய இசையே எனதுயிரே – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 38 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 38: வேறு இசை தேடிப் போவாளோ ? – எஸ் வி வேணுகோபாலன் 

தொடர் 39 – ஐ வாசிக்க..

இசை வாழ்க்கை 39: பாடல் விட்டுப் பாடல் போவேன் – எஸ் வி வேணுகோபாலன்தொடர் 40 ஐ வாசிக்க

இசை வாழ்க்கை 40: என் பாடல் கண்மணி – எஸ் வி வேணுகோபாலன்

 

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)