இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்



கொரோனா இரண்டாம் அலை, கடந்த ஆண்டு காட்டிய ஆட்டத்தை விடவும் கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அன்பின் அன்பான பலரை இழந்து கொண்டிருக்கின்றனர் மக்கள். இளைஞர்கள் மறைவு நெஞ்சு அதிர வைக்கிறது. வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சிலர் வாடிக்கையாளர் சேவைக்கான பணியில் தங்கள் இன்னுயிர் இழக்க நேரிடுவது அதிகரித்து வருவது வேதனைக்குரிய செய்தி. எல்லோரும் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டியது இப்போதைய காலத்தின் கட்டாயம்.

திரையுலகில் அண்மைக் காலத்தில் எத்தனை அருமையான திரைக் கலைஞர்களைப் பறிகொடுத்துவிட்டோம். நகைச்சுவை நடிகர் பாண்டு, நடிகர் செல்லத்துரை, டி கே எஸ் நடராஜன்ஆகியோர் மறைந்துவிட்டனர். ஒவ்வொருவரும் தமது சிறந்த பங்களிப்பைத் திரைப்படங்களில் வழங்கியவர்கள். பாண்டு, அசாத்திய உடல் மொழியும், குரலும், பேசும் கண்களும் பெற்றிருந்தவர். சில பத்தாண்டுகளுக்கு முன், தொலைக்காட்சியில் வந்த ‘எமலோகத்தில் கம்ப்யூட்டர்’ என்ற தொடரில் அவர் எமனாகக் கலக்கி இருந்தது மறக்க முடியாதது. தமிழ்ப்படத்தில் கஷ்டத்தில் தத்தளிக்கும் ஓர் எளிய மனிதரின் முகத்தை செல்லத்துரை அபாரமாகத் திரையில் கொண்டுவந்தவர். ‘என்னடி முனியம்மா’ பாடல் புகழ் டி கே எஸ் நடராஜன் நிறைய நடிக்கவும் செய்தவர்.

சிறந்த புகைப்படக் கலைஞராக இருந்து திரை இயக்குநராக மலர்ந்த கே வி ஆனந்த் அவர்களும் கொரோனா தொற்றுக்கு பலியாகி விட்டார். கவண் திரைப்படம் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியான படமல்ல என்றாலும், கே வி ஆனந்த் நிச்சயம் மாற்றத்தை சிந்தித்தவர் தான். மக்களோடு உரையாட வேண்டும் என்று உண்மையான ஆர்வம் செலுத்துபவர்கள் ஒரு கட்டத்தில் காட்சி ஊடகத்தில் உருப்படியான படைப்பை வழங்க முடியும். அவரது மறைவு, சில முன்னேற்றமான பரிசோதனைகளுக்கான வாய்ப்பை ரசிகர்களுக்கு மறுத்துவிட்டது.

கே வி ஆனந்த் இயக்கத்தில் ‘அயன்’ படம் பெரிதும் பேசப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பு, படத்தின் முக்கிய அம்சம். ‘விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்’ என்ற நா முத்துக்குமார் அவர்களது பாடல், கார்த்திக் குரலில் அதிக ஆர்ப்பாட்டமற்று அமைந்த சிறப்பான பாடல். பல்லவியில், ‘தனியாகப் பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே’ என்ற இரண்டாவது வரியில் நிறைய சிறுகதைகளும், உளவியல் கூறுகளும் இருக்கின்றன. தனியாகப் பேசுவதை அடுத்தவர்கள் தான் எப்படியெப்படியோ அர்த்தப்படுத்திக் கொள்கிறோம், அந்த அவஸ்தை, அப்படி பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு இல்லை என்கிறது இந்த வரி. காதலில் பித்துப் பிடித்துத் தனக்குத் தானே பேசிக்கொண்டிருப்பவனின் பெருமிதம் பேசுகிறது அந்த வரி.



https://www.youtube.com/watch?v=ZZnbsNa3eUU



இரண்டாவது சரணத்தில், ‘ஆசை என்னும் தூண்டில் முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்’ என்று சொல்லும் முத்துக்குமார், அடுத்து, ‘மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்’ என்று எழுதுகிறார். மிக எளிய எண்ணங்களால் நிரம்பிய பாடல் தான் என்றாலும், ஒரு பட்டாம்பூச்சியின் மென் சிறகடிப்பாகத் துடிக்கும் பாடல்.

அப்பாவி முகத்தோடு சூர்யாவும், குறும்பு பேசும் கண்களோடு தமன்னாவுமாக அந்தக் காதலின் முகவரியைப் பாடலில் எழுதும் அவர்களது நடிப்பு.

உரத்துப் பேசாமல் உள்ளத்தோடு நிகழ்த்தும் உரையாடல் போல் ஒலிக்கும் பாடலை அழகான விசிலோசை நிறைவு செய்கிறது. மேற்கத்திய இசைக்கருவிகள் உள்ளுக்குள் கடத்தும் காதல் உணர்வுகளை பத்திரமாகக் கொண்டு சேர்க்கின்றன சேர வேண்டிய இடத்தில்!

இசைக்கும் ஓசைக்கும் மிகச் சிறிய இடைவெளிதான் என்று சொல்கிறார் பிரபல மிருதங்க வித்வான் திரு உமையாள்புரம் கே சிவராமன் (தி இந்து ஆங்கில நாளேட்டின் வெள்ளிக்கிழமை இணைப்பு: 07 05 2021). 86 வயது நிறைவு செய்திருக்கும் இந்த அற்புத இசை மேதையின் மிருதங்க வாசிப்புக்கு 75 வயது என்பது மலைக்க வைக்கிறது. ஒட்டுமொத்த நேர்காணல் மூன்று மணி நேரம் என்று சொல்லும் வைஷ்ணா ராய், அதன் சுருக்கத்தையே பத்திரிகையில் எழுத முடிந்திருப்பதில், ஒவ்வொரு பதிலும் முக்கியமானது.

அப்படியானால், இசைக்கருவிகளின் வாசிப்பு எத்தனை முக்கியமோ, இடையே அவற்றின் மௌனமும் முக்கியம் என்கிறார் உமையாள்புரம்.

கர்நாடக சங்கீத வித்வான் கே வி நாராயணசுவாமி அவர்களுக்கு ‘கிருஷ்ணா நீ பேகனே’ பாடலுக்கு அதற்குமுன் எத்தனையோ முறை பக்க வாத்தியம் இசைத்திருந்தாலும், ஒரு முறை மைசூரில் நடந்த கச்சேரியில் அத்தனை அமோகமான வரவேற்பு கிடைத்ததாம் பாட்டுக்கு. அன்றைக்கு சிவராமன் மனத்திற்குள் ஒரு புதிய சிந்தனை ஓடியதாம், பாடகரோ, கிருஷ்ணனின் சேஷ்டைகளை விவரிக்கப் போகிறார், அதற்கு எதற்கு மிகவும் சிக்கலான கணக்குகளில் நுட்பமான வலைப்பின்னலில் ஒரு தாளக்கட்டு என்று யோசித்து, தின் தா தா தின் …என்ற தாள லயத்திற்குள் வாசித்தாராம். பாடகருக்கு அதனால், தமது சுதந்திரத்திற்குப் பாட முடிந்திருக்கிறது. கச்சேரி முடிவில், அசந்து போன கே.வி.என், சிவராமனைப் பார்த்து, “நீங்கள் என்ன மாயம் செய்தீர்களோ, இன்றைய அனுபவம் மகத்தானதாக அமைந்தது எனக்கு” என்று சொன்னாராம்.

மிக அற்புதமான கர்நாடக இசைப் பாடகரான செம்மங்குடி சீனிவாச அய்யர் அவர்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, 48 ஆண்டுகள் மிருதங்கம் வாசித்திருக்கிறாராம் உமையாள்புரம். ஒரு நாள், செம்மங்குடி, மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் சிந்தியபடி சொன்னாராம், “அடுத்த ஜென்மம் ஒன்று வாய்த்தால், நான் அரியக்குடி (ராமானுஜ அய்யங்கார்) போலப் பாட முடியணும்” என்று. எப்பேற்பட்ட தன்னடக்கம் என்று கொண்டாடுகிறார் சிவராமன். நாத இன்பம் என்பது செருக்கற்ற ஞானம் அல்லவா. (https://www.thehindu.com/entertainment/music/i-have-not-even-touched-the-tip-of-the-iceberg/article34500073.ece ).

திரைப்பாடல்கள் சிலவற்றில் அமர்க்களமான மிருதங்க வாசிப்பைக் கேட்கிறோம், இந்தத் தொடரில் கூட ஒன்றிரண்டு பாடல்கள் பார்த்துள்ளோம். அவற்றை யார் வாசிப்பார்கள் என்ற கேள்வி எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். இணையத்தில் பார்க்கையில், ஜி ராமநாதன் காலத்திலிருந்து ஏ ஆர் ரஹ்மான் வரை வாசித்த ஓர் அற்புதக் கலைஞர் பெயர் தற்செயலாகக் கிடைத்தது.



‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற மகத்தான பாடலில் சிவாஜி கணேசன் அமர்க்களமான பாவங்களோடு நடித்த காட்சியில் அந்த மிருதங்க வாசிப்பு இந்த அற்புதக் கலைஞர் தான். தில்லானா மோகனாம்பாள் படத்தின் அசத்தல் பாடலான ‘மறைந்திருந்து பார்க்கும்’ பாடலில் ஒலித்த மிருதங்கமும் அவரது வாசிப்பு தான். இரண்டுமே திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் அவர்களது மாயா ஜால இசையமைப்பு. இளையராஜாவின், மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் இடம்பெறும் ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ தொடக்கத்தில் கிண்ணென்று ஒலிக்கும் மிருதங்க இசையும் இந்த மந்திரக்காரரின் கைப்பக்குவம் தான்! ராஜாவின் ‘ஹவ் டு நேம் இட்’ என்ற ஆல்பத்திலும் அவரேதான்!

தில்லானாக்கள், வர்ணங்களும் எழுதிய இந்த இசைமேதை மதுரை ஜோசியர் திருவேங்கடத்து அய்யங்கார் மகன் ஆவார்! சோழவந்தான் சேஷ அய்யங்காரிடம் வாய்ப்பாட்டும், மிருதங்கமும் பாடம் கற்றுக்கொண்டவர். திரைத்துறைக்கு வாசிக்கப் போனது எதிர்பாராதது. ஆமாம், அவர் வாசித்த முதல் படம், சிவாஜியின் ‘எதிர்பாராதது’ தான்! டி வி ரத்னம், பி லீலா இவர்களுக்கு வாசிக்கையில், லீலாவின் தந்தை பெற்றுத் தந்த வாய்ப்பில் திரைப் பின்னணி இசை வாசிப்புக்கு வந்தவர் எம் எஸ் வி உள்பட பலரது இசையமைப்பில் வாசித்தவர். சிவாஜி கணேசனுக்காக உமையாள்புரம் சிவராமன் வாசித்த ‘மிருதங்க சக்ரவர்த்தி’ படத்தில் பிரபுவுக்காகத் தாம் வாசித்தார். உமையாள்புரம் இவரது அர்ப்பணிப்பு மிக்க வாசிப்பை மிகவும் சிலாகித்துச் சொல்லி இருக்கிறார். யார் இத்தனை புகழுக்கும் உரிய மிருதங்கக் கலைஞர்?

சீனாக் குட்டி இப்போது இல்லை! ஆம், மதுரை டி ஸ்ரீனிவாசன், திரைத்துறையில் சீனாக்குட்டி என்று தான் அறியப்பட்டவர். 2012ம் ஆண்டு தமது எண்பதாம் வயதில் மறைந்த அவரைக் குறித்து, திரு கோலப்பன் தி இந்து ஆங்கில ஏட்டில் அருமையான புகழஞ்சலி எழுதி இருக்கிறார். (https://www.thehindu.com/arts/artiste-cheena-kutty-no-more/article4048493.ece ).

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’, ஒரு நாட்டியக் காதல் கவிதை. டி ஆர் ராமச்சந்திரன், மிருதங்க வாசிப்பு அத்தனை அசலாக நடித்திருப்பார். வாசிக்கும்போது வாத்தியத்தை நகர்த்திக் கொள்வது, பக்குவம் பார்ப்பது, பாட்டுக்கேற்ற ரசனையோடு கைகள் வாத்தியத்தில் பேசிக்கொண்டிருப்பது எல்லாமே அத்தனை இயல்பாகக் கொணர்ந்திருப்பார் அவர். நட்டுவாங்கத்தில் வாங்கு வாங்கு என்று வாங்கிக் கொண்டிருப்பார் கே ஏ தங்கவேலு. மிருதங்கத்திற்குப் பக்கத்திலிருப்பவருக்கும் இரண்டு பக்கமும் இடி.

‘முகத்தில் நவரசமும்’ என்ற இடத்தில் அந்த ரசங்களை மிகவேகமாகக் கொண்டு வருவதிலிருந்து பாடல் முழுக்கவும் பத்மினி அமர்க்களமாக நடித்திருப்பார். ஷண்முகா என்ற விளிக்கு ஒரு பொய்க்கோபத்தோடு பல்லைக் கடித்து மிரட்டும் காதல் நடிப்பில் சிவாஜி கணேசன் இன்னும் தலைமுறைகள் வாழ்ந்துகொண்டிருப்பார். சேஷ்டையில் சிறக்கும் டி எஸ் பாலையாவைச் சொல்லாமல் எப்படி இந்தக் காட்சியில்! சரணங்களில், சில வரிகள் இரண்டாம் முறை வருகையில் கூடவே நட்டுவாங்க ஜதிகளும் உடன் ஒலிப்பதை, பட ஆக்கத்தில் கவனத்தோடு தங்கவேலுவை அப்போது மறவாமல் காட்டும் இடத்தில் நிற்கிறார் ஏ பி நாகராஜன்!



https://www.youtube.com/watch?v=cXHg55VCwKQ



கண்ணதாசன் ஓர் அசுர கவி என்பதைச் சொல்லும் பல நூறு பாடல்களில் ஒன்று இது, வேறென்ன சொல்ல…. பி சுசீலாவின் இனிமை கொஞ்சும் குரலின் பன்முக பரிமாணங்கள் பாடல் முழுக்க வெளிப்படுவது தனி ரசனைக்குரியது.

முதல் சரணத்தில், ‘எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்’ என்பது ஒரு காதல் சீண்டல் எனில், ‘உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்’ என்பது காதல் தூண்டல். அதே சீராக அடுத்த இரு வரிகளில், ‘பாவையென் பதம் காண நாணமா, உந்தன் பாட்டுக்கு நானாட வேண்டாமா என்று போகிறது பாடல்! மாலவா, வேலவா, எனையாளும் ஷண்முகா வா என்ற இடத்தில் மொத்தக் காதலையும் திரட்டி வழங்கி விடுகிறார் சுசீலா.

இரண்டாம் சரணம், ‘நாதத்திலே என்னை நான் மறந்தேன்’ என்ற உருக்கச் சுவை! முதல் இரண்டு வரிகளில் ஒலிக்கும் சங்கதிகளும், ஜதிகளுக்கேற்ப அதிரும் குரலும் அபாரம். அடுத்து, ‘மோகத்திலே என்னை மூழ்க வைத்து….’ என்பதிலிருந்து சரணத்தை நிறைவு செய்வது வரையான துள்ளல் அத்தனை சிறப்பானது.

மூன்றாவது சரணம், ஓட்ட நடை. ‘மானாட மலராட’ என்பதிலிருந்து, ரசிகர்களும் சேர்ந்தாடும் தாளக்கட்டு. அதன் உச்சத்தில், தூயனே என்ற விளிப்பு, மாலவா, மாயனே வேலவா, எனையாளும் ஷண்முகா வா என்று போய் நிறுத்தும் இடம் பரவசமூட்டும். இத்தனை விமரிசையான இசையில், மிருதங்கம் வாசித்த சீனாக்குட்டியை இப்போது நினைத்துக் கொள்ளுங்கள்.

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் வரவை, வேகமாக அறிவித்துச் சென்றது, ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல். இளையராஜாவின் காதல் ததும்பும் மெட்டுக்களில் மலர்ந்த மொட்டுகளில் ஒன்று.

மிருதங்கத்தை காதல் பிரகடனமாக முதலில் ஒலிக்கவைக்கிறார் ராஜா. பாடல் நெடுக அந்தக் காதலைப் பேசிக்கொண்டே செல்கிறது மிருதங்கம். ஷெனாய் இசையோடு, இனிய புல்லாங்குழலோடு, இழைக்கும் வயலினோடு நடைபோட்டுக் கொண்டே மிருதங்கம் பேசும் காதல், குழுவினரின் கோரஸ் குரலோடும் இழையோடும் ரசமே ரசம்.

எஸ் பி பி – எஸ் ஜானகி இருவரது குரல்களில் காதல் அமுதம், ‘பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ என்றபடி பொங்கி வழிந்து கொண்டிருக்கும் பாடல் முழுவதும். கவிஞர் வைரமுத்து புனைந்த பாடலின் சொற்களுக்கு அத்தனை சொக்கிச் சொக்கி ஈர்க்கும் உச்சரிப்பு அம்சமானது.

முதல் சரணத்தை நோக்கிய பயணத்தில் மிருதங்க வாசிப்பு ஒரு திருமண ஊர்வலத்திற்கான வாசிப்பு போல் எனில், இரண்டாவது சரணத்தில் காதலர்களுக்கு இடையே நடப்பதுபோலவே வயலின் இசையோடு மிருதங்க வாசிப்பின் உரையாடல்.





பாடலில் இருவரது ஹம்மிங் ஏற்படுத்தும் கிறக்கம் பற்றித் தனியே எழுதவேண்டும். ‘ஓ…ஓ…ஓஹோஹோ…கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே’ என்று சரணத்தை எடுக்குமிடத்திலேயே எஸ் பி பி காதல் இதயங்களின் துடிப்புகளைப் பன்மடங்கு கூட்டியிருப்பார். அதை வழிமொழிந்து தொடங்கும் இடத்தில் எஸ் ஜானகி துடிக்கும் காதல் நெஞ்சங்களின் ஈரப்பதத்தை மேலும் அதிகரித்திருப்பார்.

‘அடிக்கடி தாகம் வந்து ஆளைக்குடிக்கும்’ என்று வெப்பம் கூடிவிடும் கதிக்குப் போகும் பாடல், ‘காதல் பாரம் இரு தோளில் ஏறும்’ என்று வலுவையும் கூட்டுகிறது.

பாடலின் நிறைவில், பல்லவி வரிகளை குழுவினர் இசைக்க, தத்தகாரத்தில் அதை ஜானகி வாங்கி, அப்புறம் தான் பல்லவியை இசைக்குமிடம் அத்தனை பேரின்பமாக நிறைவு பெறுகிறது காதல் நீராட்டு. காதலின் இதயத் துடிப்பு தான் முழுப்பாடலும். இதயத் துடிப்பின் லக் பக், லக் பக் வேறென்ன, எல்லாம் சீனாக்குட்டியின் வாசிப்பு தான்.

இசைக்கும் ஓசைக்குமான இடைவெளி மிக நுண்ணியது என்றாரே உமையாள்புரம், உண்மையான காதலுக்கும், காதலென்ற பெயரில் ஆதிக்க உணர்வோடு ‘தனக்கு இல்லாவிட்டால் வேறு யாருக்கும் இல்லை’ என்று அந்தப் பெண் மீதே அமிலத்தையும், கத்தியையும் வீசும் வன்முறைக்கும் இடைவெளி கூட சமூகத்தில் சட்டென்று பிடிபடுவதில்லை. உள்ளன்பு அற்ற காதல், வெறும் ஓசை, நாராசமான ஓசை.

அந்த நேர்காணலில், சாதீய உணர்வுக்கு அப்பாற்பட்ட இசையே தம்முடையது என்றும் அருமையாகச் சொல்கிறார் உமையாள்புரம் கே சிவராமன்.

சீனாக்குட்டி எனும் மதுரை டி ஸ்ரீனிவாசன் அவர்களது இசை வாழ்க்கையும் சாதி, மத, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்ட அன்பின் மலர்ச்சியான பெருவெளி என்று சொல்கிறது அவரது பேரன் ராஜீவ் நாகராஜன் எழுதி இருக்கும் வலைப்பூ கட்டுரை ஒன்று.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் இசை. சாதீய இழிவுப் பார்வை வசை. சமூகத்தைப் பிளக்கும் ஓசை. இசைபட அமையட்டும் நம் வாழ்க்கை.

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]



இசை வாழ்க்கை 40: என் பாடல் கண்மணி – எஸ் வி வேணுகோபாலன்



இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது  – எஸ் வி வேணுகோபாலன் 



Show 5 Comments

5 Comments

  1. Dinesh

    SVV Sir first enjoys it and then he starts writing it. Without enjoying a thing, it cannot be expressed in such a beautiful way. It is his speciality.👌👌💐

    • சுந்தரமூர்த்தி.தி

      Well said👍💐

  2. Raju K

    இசையை இப்படியெல்லாம் கூட ரசிக்கலாமா? எஸ்விவி அற்புதமான ரசனைக்குச் சொந்தக்காரர். தன் ரசனையை எழுத்திலும் அப்படியே வடித்துத் தரும் சாகசச்சாரர். பாராட்டுக்ள்..
    கே.ராஜு

    • சுந்தரமூர்த்தி தி

      இவ்வளவு குறுகிய காலத்தில் இசைக் கட்டுரை 43ஐஎட்டியது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது, மனமார்ந்த வாழ்த்துக்கள்!
      முதற்கட்டுரை எழுதிய அதே முனைப்போடு,துடிப்போடு இசையுடன் தொடர்புடைய இசைக்கருவிகள்
      வாசிக்கும் வித்வான்கள்,கர்நாடக இசைப்பாடகர்கள்,இசைஅமைப்பாளர்கள்,பாடல்ஆசிரியர்கள், பாடகர்கள், நடிகர்கள், திரைப்படங்கள், என அனைத்தையும் திறம்பட உணர்ந்து சுவைத்து, கட்டுரைவடிவில் வெளிபடுத்தும் தனித்தன்மை வாய்ந்தவர் எஸ்விவி என்பதை வாசகர்கள் நன்கறிவர்.
      தற்போதைய இக்கட்டான சூழலில் எண்ணற்ற மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர்,பிற முன்களப்பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள், இசைத்துறையினர்,திரைக்கலைஞர்கள்,வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், உறவினர்கள், நண்பர்கள்,பிற உயிரினங்கள் என எண்ணில் அடங்கா உயிரை இழந்து வாடும் நெஞ்சங்களுக்கு மஞ்சமாக சாதீய உணர்வுக்கு அப்பாற்பட்டு கொத்துமலர் அமுதம் கொட்ட தனியாக பாட சந்தோஷம் பெற இசைத்தொடர் தொடர
      தங்களுக்கும்,வெளியிடும் புக் டே நண்பர்களுக்கும் நன்றி பாராட்டி மகிழ்கிறோம். வணக்கம்

  3. ந மனோகரன்

    என்னே ஒரு அற்புதமான பதிவு. இசைத்துறையில இல்லாமலேயே அந்தத் துறை ஆண்களுக்கே பாடம் நடத்தும் எஸ் வி சார் பாராட்டுவதில் லை. வணங்குகிறேன் உமது வார்த்தை மற்றும் அறிய சுவைக்கு. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *