இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்நூறைத் தொட இருந்த ஓர் ஓட்டம் நின்றுவிட்டது. நிறை வாழ்வு முற்றுப் பெற்றது. ஒரு குடும்பத்தின் சுடர் அல்ல, ஒரு ஜனத் திரள் வாழ்க்கையை உலகமயப் படுத்திய இலக்கிய உலகின் மணி தீபம். தீபங்கள் ஒருபோதும் அணைந்துவிடுவதில்லை, திரி ஓய்வெடுத்துக் கொள்ளலாம், சுடரிலிருந்து ஒளியைத் தொட்டுத் தொட்டுத் தங்களைப் பற்றிக் கொண்டவை, அடுத்தது, அடுத்தடுத்த அடுத்ததுசிறுசோ, பெரிசோ எங்கோ ஓரிடத்தில் எப்போதும்  இருளகற்றிக் கொண்டிருக்கும், அவர் பெயரைச் சொல்லியபடி

கரிசல் காட்டு அஞ்சல்காரர் கடைசி கடுதாசி போட்டுவிட்டுப் போய்விட்டார் என்றாலும், கையெழுத்து மறையும் நேரத்திற்கு அப்புறமும் ஒளிரும் எழுத்துகள் அவருடையவை.  

அவரோடு ஒரு நாளின் முக்கால் பங்கு உடன் செலவழிக்க மிகவும் எதிர்பாராத வாய்ப்பு கிடைத்தது, புதுவை லாஸ்பேட்டை பள்ளி ஒன்றில், ஒரு குழந்தைகள் தின கொண்டாட்ட நாளில். தனிப்பட்ட உரையாடலில் ( அதாவது அவர் உரையாட, ஆனந்தமாக நான் கேட்டிருக்க), அன்று பகிர்ந்து கொண்ட சுவாரசியமான செய்திகளில் ஒன்று வில்லடி பிச்சுக்குட்டி பற்றித் தான்.  

அண்மையில் மறைந்த இலக்கிய நேயர், பாரத ஸ்டேட் வங்கி தோழர் பால் வண்ணம் அவர்களுக்கான இணைய வழி நினைவேந்தல் கூட்டத்தில் எழுத்தாளர் நாறும்பூநாதன் சுவாரசியமான விஷயம் ஒன்று சொன்னார், எண்பதுகளில் வங்கிக் கிளைக்குள் பிரச்சனை ஒன்றிற்காக ஊழியரைத் திரட்டி மேலாளர் அறைக்குள் முறையீடு செய்கையில் பால் வண்ணம் கையிலேந்தி இருந்த புத்தகம், முரட்டு பிடிவாதக்காரராகப் புதிதாகக் கிளைக்கு வந்திருந்த 

இராமமூர்த்தி அவர்கள் போக்கைத் தலைகீழாக மாற்றிவிட்டிருக்கிறது.  

கையைக் கையை ஆட்டிப் பேசிக் கொண்டிருந்த பால் வண்ணத்தின் புகாரைத் தவிர்த்து மேலாளர் பார்வை, அந்தக் கையோடு மேலும் கீழும் போய்க் கொண்டிருந்த புத்தகத்தில் விழவும், அதென்ன புத்தகம் என்று கேட்டிருக்கிறார். கி.ராவின் பிஞ்சுகள் புத்தகம் அது என்றதும், கி ராவைப் பார்க்க முடியுமா என்று பால் வண்ணத்திடம் கேட்க, அதன்பின் ஊழியர்மேலாளர் உறவுமுறையே ஆரோக்கியமாக மாறிப் போயிருக்கிறது கிளையில்!  

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா மறைவு - அரசியல் தலைவர்கள், கலைஞர்கள்  இரங்கல் | Aran Sei

பின்னாளில், கி ராவை வைத்துக் கிளையில் ஒரு கூட்டமே நடத்த மேலாளர் விரும்பவும், ‘பால் வண்ணம் தலைமை தாங்கட்டும்’ என்றாராம் கி.ரா. பால் வண்ணம் இல்லை, கி ராவும் இல்லாது போனார், இதெல்லாம் சொல்லி ரசிக்க….

அது மட்டுமல்ல, கி ரா அவர்களுக்கான புகழஞ்சலி கட்டுரையில், தோழர் ச தமிழ்ச்செல்வன், ‘இசையில் அவருக்கு ஈடுபாடு அதிகம். நாதஸ்வரக் கலைஞர் குருமலை பொன்னுச்சாமி பிள்ளையிடம் முறையாகச் சங்கீதம் கற்றவர். மட்டுமின்றி அன்று அவரது சமகாலத்தில் வாழ்ந்த இசைமகா சமுத்திரம் விளாத்திகுளம் சாமிகள், காருக்குறிச்சி அருணாசலம், கம்யூனிஸ்ட் மேடைகளில் கொடிகட்டிப் பறந்த வில்லிசைக் கலைஞர் சாத்தூர் பிச்சக்குட்டி ஆகியோருடன் நெருக்கம் கொண்டிருந்தவர். இதையெல்லாம் விட முக்கியமானது பெரிதும் வெளிச்சம் பெறாத கலைஞர்களை அவர் கொண்டாடியதுதான்’ என்கிறார்.

மண்ணை நேசிப்பவர்கள், மனிதர்களோடு நெருங்கி உரையாடுபவர்கள், வரலாற்றுத் தொடர்ச்சியில் நூற்றாண்டுகளுக்கு முன்னும் பின்னும் பயணம் போகும் கலையறிந்திருப்பவர்கள், பெரும்பாலும், அசாத்திய இசை நுகர்வு கொண்டவர்களாக இருக்கவே செய்கின்றனர்இசையிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்த கி. ரா, நைனா என்று எப்படியெல்லாமும் கொண்டாடப்பட்ட கி ராஜநாராயணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியே தொடங்குகிறது இந்த வார இசை வாழ்க்கை.   

ள்ளம் கவர்ந்த பாடல்கள் ஓடுமட்டும் எழுதிக் கொண்டிருங்கள் என்றார்கள் அன்பர்கள் சிலர். அப்படியான பாடல்கள், எண்ணில் அடங்காதவை. என்னில் மட்டும் அடங்கவா போகின்றன !  

கவர்தல் என்பது எத்தனை அழகான சொல். கால காலமாகக் காதலில் இந்தக் கவர்தல், கள்ளப் பார்வை, உள்ளம் திருடுதல் எத்தனை எத்தனை விதமாக எல்லாம் ரசித்து ரசித்து எழுதி, ரசித்து ரசித்து இசையில் அமர்த்தி ரசித்து ரசித்துப் பாடப்பட்டு வருகிறது….

களவு போன பொருள் ஒன்றை அதே வழியில் மீட்க விரும்பும் ஒருவனின் பரிதவிப்பு, உள்ளபடியே நிலவோடு அவன் நடத்தும் உரையாடல் வழி பேசப்படுகிறதுஎப்போதும் விழிப்போடு இருக்கும் தோழியரோடு இருக்கும் பெண் அவள். அடையாளம், காதலன் கன்னத்தில் கிள்ளிய காயம். வயது, நிலவுக்கு இளையவள்.  ஆனாலும், தூது அனுப்பும்போது வசப்படுத்துவதற்காகஒரு வேளை உன்னைவிட மூத்தவளாகவும் இருக்கலாம் என்று சொல்லி அனுப்புகிறான் காதலன் !

காதலை ஒரு கம்யூனிஸ்ட் போல் இந்தப் புவியில் வேறு யார் அழகாக சொல்லக்கூடும் என்பதுபோல் எழுதி இருக்கிறார் இந்தப் பாடலை, பொதுவுடைமைக் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ன்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே‘  பாடல் வரிகள், பட்டுக்கோட்டையின் பாடல் தொகுப்பில் இருப்பதை விட, அந்நாளைய தமிழ்த் திரை ரசிகர்கள் அத்தனை பேர் டயரியிலும் அதிகம் இருந்திருக்கும் என்றே படுகிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1960) படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல், எல்லோரும் இந்நாட்டுக் காதலர்கள் என்று நிறுவி விட்டது.

நாகஸ்வர இசை, நாபிக் கமலத்தில் இருந்து புறப்பட்டு வருவது போல, ஒரு காதல் பாட்டுக்கான குரல், இசைக்கான (இசை கான) இதயத்தில் இருந்தே புறப்படுகிறது டி எம் சவுந்திரராஜனுக்கு.  

நிலவை முதலில் அருகே அழைத்து, என் கதையை எப்படி தொடங்கட்டும் என்பது மாதிரியாக பல்லவியை தொகையறா போல இழுத்து, ‘என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே….’ என்று இழுத்து, ‘நீஎன்ற தனிச்சொல்லைக் கூடுதல் கால அவகாசம் கொடுத்து முன்னிலைப்படுத்தி, இளையவளா என்று ஆசை காட்டி, இல்லை மூத்தவளா என்று ஏங்க வைத்து, எங்கே நிலவு கோபித்துக் கொள்ளுமோ என்று அதை வசியப்படுத்த, தாளக்கட்டு சேர்த்துக் கொண்டு பல்லவியை இசையோடு பாடத் தொடங்கி விடுகிறார் டி எம் எஸ்

நமக்கு ஒரு வேலை ஆகவேண்டுமெனில் யாரை அழைக்கிறோமோ அவர்களை நலம் விசாரித்தல் தான் முதல் கடமை. முதல் சரணம் அதைத் தான் செய்கிறது. நிலவைச் சுற்றி இருக்கும் தாரகையர் எல்லாம் தோழிகளோ என்று பெருமிதம் பொங்கக் கேட்டுவிட்டு, ‘கன்னத்தில் காயம் என்ன வெண்ணிலாவே, உன் காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே’ என்று புதிய புனைவைச் செய்துவிடுகிறார் பட்டுக்கோட்டை. அதை, அத்தனை இதம் பதமான குரலில் விசாரிப்பது போலவே இருக்கும் டி எம் எஸ் எடுக்கும் குரல்.

அடுத்த சரணத்தில், பறிகொடுத்தவனின் புகார். ‘என் மேல் ஒன்றும் தவறில்லை, நான் அப்பாவி, ஏமாற்றி விட்டார்கள்’ என்று தான் இழப்பை சந்திக்கும் யாருமே புகார்க் கடிதம் எழுதுவோம், இந்த உளவியலை, அத்தனை இளம் வயதில் எப்படி கற்றார் பட்டுக்கோட்டை என்பது அசாத்திய வியப்பு தருவது

 ‘கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே…’ என்று சொல்வதோடு மட்டுமல்ல, எடுத்தவருக்குத் திருட்டுப் பட்டம் கொடுப்பது அடுத்த அம்சம், ‘ஒரு கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவேஎன்று சொல்கிறான் காதலன்அந்தஇருக்குதடிஎன்பது தான் இந்த மொத்தப் பாடலில் முதலில், மிகவும் உரிமை எடுத்து நிலவிடம் நெருக்கமான உறவு சொல்லிப் பேசும் இடம். அடுத்த இரு வரிகள், எடுத்துப் போனவளை நீ அறிவாய், வாங்கி வந்து கொடுத்து விடு என்று சொல்வது. எங்கள் இருவருக்கும் பரிச்சயமானது வெண்ணிலா என்பதில் எத்தனை காதல் தழைக்கிறது….அந்தக் குளிர்ச்சியை அப்படியே குழைக்கிறார் குரலில் டி எம் எஸ்

மூன்றாவது சரணம், தாக்கல் கொடுத்து அனுப்பும்போது ஆளுக்கு எச்சரிக்கை சொல்லி அனுப்பும் வழக்கத்தில் இயங்குகிறது. ‘கெஞ்சினாள் தரமாட்டாள்என்பது தான் இந்தப் பாடலின் அசத்தல் காதல் உச்சம். டி ஜி லிங்கப்பா, அங்கே ராக இழைப்பை இழைத்துச் செதுக்கிப் பாட வைத்திருக்கிறார் சவுந்திரராஜனை.  ‘நீ கேளாமல் பறித்து விடு வெண்ணிலாவேஎன்பதில் மேலும் ஒரு படிக்கட்டு மேலேறி நின்று குரல் கொடுக்கிறான் காதலன் நிலவைப்பார்த்து. அது எப்படி சாத்தியம் என்று வெண்ணிலா திருப்பிக் கேட்டுவிடக் கூடாது என்று அதே வேகத்தில், நிலவுக்கு சமாதான வார்த்தை சொல்வதாக அமைகிறது, ‘அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே, இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவேஎனும்போது, அந்தப் ‘பாடமடிஎன்ற சொல்லில் பரிமாறப்படும் நேயத்தை விவரிக்க சொற்கள் இல்லை

இதயம் பறிகொடுத்தவன் எப்படி இப்படிப் பாடுகிறான் என்று யாரும் கேட்க முடியாது, ‘இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்என்றாரே கம்பன், அப்படியாக நிகழ்ந்திருக்கும் காதலின் மாயம் இது.

திருடியே காதலியாக வாய்த்த கதையில் பிறந்த பாடல் ஒன்று. அதே நிலவில் தான் தொடங்குகிறது. காதல் ஏக்கம் போதையூறிக் கிறங்கிப் போகும் உணர்ச்சி நிலையிலான ஒரு சூழலுக்கு பி சுசீலா, எஸ் பி பாலசுப்பிரமணியன் இருவரும் மெல்லிசை மன்னரின் இனிய இசையமைப்பில் வழங்கி இருக்கும் சிறப்பான பாடல் இது.

‘நிலவு வந்து வானத்தைத் திருடிக் கொண்டது’ என்ற பல்லவியிலேயே கண்ணதாசன் கற்பனை மேலே பறக்கத் தொடங்குகிறது. அந்த வானத்தின் எல்லையற்ற விரிவை, சுசீலா ஒவ்வொரு முறை பாடும்போதும் அந்த பதத்தை விரித்தெடுக்கும் எழிலடுக்குகளில் உணர முடியும். முதல் இரண்டு வரிகளை அவர் பாடி முடிக்கவும், ‘மனது கொஞ்சம் உறங்கும்போது கனவு வந்தது…’ என்று நுழையும் எஸ் பி பி, அத்தனை ரகசியக் குரலெடுத்து வருகிறார். ‘அது மலர்ந்த போது உன்னைப் பற்றி நினைவு வந்ததுஎன்ற அடுத்த வரியில், மலர்ந்த என்ற உச்சரிப்பில் காதல் பூவை அரும்ப வைக்கும் துடிப்பு தெரியும் அவர் குரலில்.

திருடியானவள் மேகம் கடலைத் திருடியதையும், மழையை பூமி திருடிக் கொண்டதையும் புகாராக வைக்கும் அழகே அழகு. முதல் சரணத்தில், சுசீலா, ‘மின்னாமல் வந்த மேகம்என்ற வருணனைக்குக் குரலில் கொடுக்கும் சொடுக்கு அபாரம், அடுத்து, ‘பூமி தந்த மழையினையோஎன்ற இழுப்பில் அடுத்த சொடுக்கு. அதற்கான காதல் பதிலை, ‘பெண்ணாகப் பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வதுஎன்று தொடங்கி, ‘இந்நாளில் மட்டுமல்ல எந்நாளும் உள்ளதுஎன்று காதல் ததும்பத் ததும்ப இசைக்கும் எஸ் பி பி, இன்னும் நூற்றாண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பார்

இரண்டாம் சரணத்தில், தன்னைக் காக்கை என்று தன்னடக்கமாகச் சொல்லி அவனைச் சீண்டுகிறாள், அய்யோ, என்ன உவமை இது, நீ பச்சைக் கிளி என்கிறான் அவன்பி சுசீலா, ‘காக்கை போல் இருந்த ஒன்று குயிலைப் போல வந்ததுஎன்று அழுத்தம் கொடுத்துப் பாடி, அடுத்த வரியில், ‘கண்ணாளன் தலையிலேறி கூடு கட்டிக் கொண்டதுஎன்று நெஞ்சம் வருடிப் பாடும் இடம் அத்தனை சுவாரசியமானது.  ‘பொல்லாத உவமை உன்னைக் காக்கை என்று சொல்வதுஎன்று இழைத்துவிட்டு, ‘என் பொன்னான பச்சைக் கிளிஎன்று மேலே ஒரு தூக்கல் கொடுத்து, ‘என்னைத் தேடி வந்ததுஎன்று தரையிறங்கும் இடத்தில் அரவணைப்பின் கதகதப்பைப் பரிமாறுகிறது எஸ் பி பியின் குரல்

மூன்றாவது சரணம், காதலின் சரணாகதி, கடல் ஆழம் சிறியது, பெண் மனது பெரியது என்று முடிக்கிறான் அவன்

பாடலின் தொடக்கமே மெல்லிசை மன்னரின் இசை மீதான காதலின் இன்னொரு பிரதியாகத் தொடங்கும். வயலின் இழைக்க, புல்லாங்குழல் குழைக்கும் முன்னுரையில் தான் பி சுசீலாஎஸ் பி பி தொடங்குகின்றனர் காதல் சிறுகதையைபாடல் நெடுக அமுது பொழியும் குழலிசை, இரண்டாம் சரணத்தின் தொடக்கத்தில் அழகான ஆலாபனைக்கு எழில் சேர்ப்பதோடு, குயிலைப் போல வந்தது என்ற இடத்தில் கூவவும் செய்கிறது. தாளக்கட்டு, காதலின் ஜோடிக்கட்டு இந்தப் பாடலில்!

ருக்கும் நேரத்தில் திருடித் திருடியே எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு இந்தக் காதல் களவுப் பாடல்கள் மீது திருப்பம் ஏற்படக் காரணம்இரண்டு நாட்கள் முன்பு பண்பலையில் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த இக்காலத்திய பாடல் ஒன்று தான்

காலை நேர வீட்டு வேலைகளின் ஊடே பதட்டம் தணித்துக் கொண்டிருக்கும் எங்கள் கூட்டு இசை ரசனையில், என் வாழ்க்கை இணையர் தோழர் ராஜேஸ்வரிதான், ‘கேளுங்கப்பா அருமையான பாட்டுஎன்று கவனம் ஈர்த்தது. ஒவ்வொன்றாய்க் கேட்டுக் கொண்டிருந்த பாடல்களில், ஒவ்வொன்றாய்த் திருடுதல் குறித்த பாடல்

காதலர்கள் நெருக்கம் கூடக்கூட இந்தத் திருடுதல் குறித்த புகார் தான் அதன் முதல் அறிவிப்பாகவே அமைகிறது. வசந்த மாளிகை படத்தில் ஒரு வசனம் வரும், கடைசி கட்டத்தில் உடல் நலம் சோர்ந்து கிடக்கும் நிலையில் தன்னைக் காணவரும் காதலியின் தம்பியிடம், ‘லதா வரல?’ என்று கேட்கும் சிவாஜி, ‘அவ வர மாட்டா, ஏன்னா அவள நான் திருடின்னு சொல்லிட்டேன்என்று சொல்லி இருமிவிட்டு, ‘இப்பவும் கேக்கறேன், ஏன் திருடினா…’ என்று இழுத்து, ‘என் உள்ளத்த?’  என்று நிறுத்துவார்

ஒரேயடியாகத் திருடாமல், ‘ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய், திருடுகிறாய்என்ற பட்டியல், எத்தனை ரசமாக ஒலிக்கிறது, கார்த்திக், பவ்யா பண்டிட் இணை குரல்களில், டி இமான் இசையில் மலர்ந்த கவிஞர் வைரமுத்து அவர்களது இனிமையான பாடல்.

காதல் ஓர் அவஸ்தை. காதல் ஒரு பொய்க்கோபம். காதல் ஒரு பாசாங்கு சண்டை. காதல் ஓர் உடன்பட்ட மனத்தின் முரண்பட்ட சொல்லாடல். கண்ணெதிரே எடுத்துக் கொள் எடுத்துக் கொள் என்று விட்டுக்கொடுப்பதைத் தான் களவு போனதாகச் சும்மாக் கதை விடுகிறார்கள் காதலர்கள். ஒரு வேளை இன்னும் எடுத்துக் கொள்ளவில்லையே என்ற நினைவூட்டலாகவும் இருக்கக் கூடும்.

கண்களை, இதயத்தைத் திருடியதை அடுத்து, முத்தத்தைத் திருடியதாய்ப் புகார்திருடிய பார்வைக்குப் பார்வையைத் திரும்பத் தந்துதான்  ஆகவேண்டும். இதயத்தைத் திருடினால், இதயத்தை எடுத்துத் தந்தே தீர வேண்டும். முத்தம் மட்டுமென்ன, வட்டி போட்டுத் திருப்பித் தரத் தானே வேண்டும்

அவளோ, பொய்களைத் திருடுகிறாய், பின்னர் கைகளை, அப்புறம், வெட்கத்தை என்று வெட்கம் உதறிச் சிரித்துச் சொல்லி விடுகிறாள்..  காதலுக்கும் காமத்திற்குமான தூரத்தைப் பாடலில் கடக்கத் துடிக்கும் பருவத்தின் பாடல் இது

மித வேகத்தில் இணையோட்டம் பழகும் காதலர் ஓட்டத்திற்கான கதியில் இமான் அமைத்திருக்கும் இசையமைப்பில்பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் காதல் தூண்டலை இரண்டு பாடகர்களும் சிறப்பாகப் பாடியுள்ளனர்.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், அன்றாடம் சமூக ஊடகங்களில், வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளும், புகைப்படங்களும், தொடர் இரங்கல் மொழியும் சுவாரசியமாக இல்லை. இழப்புகளைத் தடுத்து நிறுத்த தொற்றுப்பரவல் சங்கிலித் தொடரை முறிக்க நாமும் பங்களிப்பு செய்வோம். பத்திரமாக இருப்போம், நம் பாட்டுக்களோடு.

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது  – எஸ் வி வேணுகோபாலன் இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்