இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 



ங்கிலத்தில் உள்ள ஒரு பழமொழியைத்தான் சொல்லிக் கொள்ள வேண்டியது, இந்த கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில்: வராத செய்தி, நல்ல செய்தி

கடந்த ஒரு வாரம் புரட்டிப் போட்டுவிட்டது  ஒரு வாரம் என்பது காலப் பிழை. சில வாரங்கள் என்று மாற்றி, இல்லை, மாதங்கள் என்றும் மாற்றி வாசிக்க வேண்டும். புரட்டிப் புரட்டிப் போடும் இழப்புகள்

கண்ணுக்குப் புலனாகாத வேட்டைக்காரன் அதிர்வில்லாமல் காலடி எடுத்து வைத்துக் காடு முழுக்க நடத்திக் கொண்டே இருக்கிறான் வேட்டையைஎந்தப் பறவை, எந்தப் பறவையின் குஞ்சுப்பறவை, எந்தப் பெரிய விலங்கு, எந்த இளங்கன்று குறி வைக்கப்படுமோ என்பதறியாமல் பரிதவிப்பில் உயிர்கள் அலைமோதுகின்றனவேட்டைக்காரனை வேட்டையாட முற்படுவதைவிட, அவன் பார்வைக்கு அகப்படாமல் தற்காத்துக் கொள்ளும் வழி கற்போம்இரை சிக்காது சோர்வடைய வைப்பது தான் அவனைக் காட்டைவிட்டு வெளியேற்றும் ஆகச் சிறந்த வழி

ல்லோருக்குள்ளும் ஒரு கவிஞரும், ஓர் இசைக் கலைஞரும், ஒரு கதாசிரியரும், படைப்பாளியும் இருக்கவே செய்கின்றனர். அண்மையில் பார்த்த ஒரு ஒரு பழைய படத்தின் நகைச்சுவை காட்சியில் செந்திலும், ஜனகராஜும் பெண் ஒன்று கண்டேன்’ பாடலைப் பாடுவதைக் கேட்கையில், எப்போதோ இளவயதில் தொற்றிக்கொண்ட ஆர்வமும், திறனும் அதில் தெறிக்கவே செய்தது. கற்றுக் கொள்ளும் ஆர்வம் இளவயதில் ஏற்படுவதை எல்லாப் பருவத்திலும் தக்கவைத்துக் கொள்ளும் மனிதர்கள் வரம் பெற்றவர்கள்

அண்மையில், நிறைய வாட்ஸ் அப் குழுக்களில் வலம் வந்து கொண்டிருந்தது, ஆர்மோனியப் பெட்டி வைத்துப் பாடும் தந்தையைப் பார்த்து, ராக ஆலாபனைகளை அசாத்திய சுருதி சுத்தமாக அதே உடல் மொழியோடு ரசித்துப் போட்டுப் பாட்டும் பாடும் ஒரு பொடிப்பயல் அசர வைக்கிறான் எல்லோரையும்.  





யா நவ நவல நயனோத்சவாஎன்ற அந்தப் பாடல், மராத்தி மொழி கீதம் போலிருக்கிறதுசூரத் நகரைச் சார்ந்த தானாஜி ஜாதவ், ஸ்ரீ எனும் தனது மூன்று வயது மகனுக்கு ஹார்மோனியம் இசைத்தபடி பாட்டு சொல்லிக் கொடுப்பதை, மகள் ஸ்ரேயா அலைபேசியில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து. அது வெகு வேகமாகப் பரவி, அமிதாப் பச்சன் அவர்களது டுவீட்டரில் பாராட்டோடு இடம் பெற்றது அதை இன்னும் பல மடங்கு அதிகமானோர் பார்க்க வழி வகுத்திருக்கிறது

அந்தக் காணொளிப் பதிவில் அழகு, பாட்டை அந்தச் சிறுவன் அந்த வயதில் பாடுகிறானே என்பது கூட அல்ல. அப்பா பாடுவதை, அவரது உடல் மொழியை, கண்களை இறுக மூடி ஆழ்ந்து ஸ்வரங்களை அசாத்திய உடல் மொழியில் எப்படி இசைக்கிறார் என்பதை, தனக்காகத்தான் அவர் மெனக்கெட்டு பாடிக் கொண்டிருக்கிறார் என்பதை எல்லாம் எப்படி கூர்ந்து கவனிக்கிறான் என்பது தான் அழகுபயிற்சி முடிந்ததும், ஓர் இளநகையோடு அவன் நன்றி பாராட்டும் அழகு தனித்துவமானது.

அந்தக் காட்சி உடனே சங்கராபரணத்தைத் தான் நினைவுக்கு எடுத்து வந்து கொடுத்தது. ப்ரோச்சேவா பாடல் தான், வேறென்ன…. 

சோமயாஜுலு அவர்கள் முன் அமர்ந்து அந்தக் குழந்தை கற்றுக் கொள்ளும் காட்சி, அவர் பாட ஆரம்பித்ததும் ஓடிப்போய் தம்பூரா எடுத்துக் கொடுப்பது, அவரைப் பார்த்தே பாட்டு பயில்வது, அவர் பாடுவதன் ரசத்தை அகன்ற கண்களால் திகட்டத் திகட்டப் பருகுவது, ஓடிப்போய் ஸ்வரங்களை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வாங்கிக் கொள்வது….அடடா..அடடா…. பின்னர், சாஸ்திரிகள் நிதான கதியில் இசைத்த ஸ்வரங்களை, தொடரும் சரணத்தில் வேக கதியில் பிறழாது இசைப்பது என்று காட்சியமைப்பு அபாரமாக அமைந்திருக்கும்

இசை, வாழ்க்கையின் உயிர்த் துளி அல்லவாஅல்லது, உயிர்ச் சுடர்!!  சிறு துளி பெருவெள்ளம். பொந்தினில் வைத்து, காடு முழுக்க வெந்து தணியும் அக்கினிக் குஞ்சு தான் இசையோ!

ஜூன் 4, எஸ் பி பி அவர்களது பிறந்த நாள். 75வது பிறந்த நாள்! அவரிருந்தால் எத்தனை கோலாகலமாக ஒரு குழந்தை போல் அடுத்தவர்களைக் கொண்டாடி இருப்பார் தமது பிறந்த நாளில்!  

திரை இசைத் திலகம் மகாதேவன் உன்னால் முடியும், உன்னால் முடியும், உன்னால் முடியும் என்று அத்தனை அழுத்தமாகச் சொல்லித்தான், கர்நாடக இசை வித்வான் சங்கர சாஸ்திரி கதாபாத்திரத்திற்கு எஸ் பி பி அவர்களைப் பாட சம்மதிக்க வைத்தார்முடியவே முடியாது என்று மறுத்த எஸ் பி பிக்கு அடுத்த அதிர்ச்சி, அவர் கற்றுக் கொடுக்கும் சிறுவன் பாத்திரத்திற்கு வாணி ஜெயராம் பின்னணிக் குரல் கொடுப்பார் என்பது. இந்த ஆட்டத்திற்கு நான் வரவே மாட்டேன் என்று அப்படி துடித்துப் போயிருக்கிறார் மனிதர். முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளாத நான் எப்படி, இசை வாணிக்கு பாட்டு கற்றுக் கொடுப்பது போல் பாடுவது என்றுபணியுமாம் என்று பெருமை என்று சும்மாவா எழுதி வைத்தார் வள்ளுவர்! எப்போது பாடுவதற்கு ஒரு மேடையேறினாலும், அவையோர்க்கு மட்டுமல்ல இசைக் கலைஞர்கள் எல்லோருக்கும் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்தி விட்டுத் தான் பாடவே தொடங்கும் பண்பாக்கம் அவரது



https://www.youtube.com/watch?v=WBCBtSJVtdY



அந்தப் படத்தில் இந்த இருவரது இணைகுரல்களில் நிறைய பாடல்கள் உண்டு. ஆனால், ப்ரோச்சேவா தனித்துவ சுவை மிக்கது. கண்களின் பேச்சு அதிகம் அதன் காட்சிப் படுத்தலில். கனிவின் மழை அந்தப் பாடல் முழுவதும். முதல் சரணம் சங்கீதம். இரண்டாம் சரணம் நாட்டியம். இசைக்கும் நாட்டியத்திற்குமான உறவை இரண்டாம் சரணத்தில் எடுத்துக் கொடுக்கும் வண்ணம் கே வி மகாதேவன் அசாத்தியமாக இசையமைத்திருப்பார்

முதல் சரணத்தில் எஸ் பி பி, ஸ்வர பிரஸ்தாரங்களை அத்தனை காதலுற, கேட்போர் கண்ணில் நீர்த் துளிர்க்க இசைப்பார். இரண்டாம் சரணத்தை, ‘சீதா பதே’ என்று தொடங்கி வாணி ஜெயராம் நடன அடவுகளுக்கேற்ப தாள கதியில் அசத்தலாக பாடி இருப்பார். இடையே, ஓரிடத்தில் சாஸ்திரிகளை நினைவு கொள்ளுமிடத்திற்காக, எஸ் பி பி பாடும் இடம் அத்தனை இன்பம் அள்ளும், அங்கிருந்து மீண்டும் வாணி ஜெயராம் கைமாற்றி வாங்கிக்கொண்டு வேகவேகமாக ஸ்வரங்கள் உருட்டியுருட்டி எடுத்துப் பல்லவியை வந்தடையும்போது பள்ளிக்கூடத்திலிருந்து புறப்பட்டு மழை பிடிப்பதற்குள் வீட்டைச் சேர்ந்துவிடலாம் என்று ஓட்டமும் நடையுமாக வாசல் வந்தடைந்து அம்மா என்று குரல் கொடுத்து அவள் வந்து திறப்பதற்குள் ஒரு அடி அடித்து உடல் முழுக்க நனைத்தெடுக்கும் மழையை ரசித்து முகத்திலிருந்து நீரைத் திரும்பத்திரும்ப வழித்தெடுத்தபடி வீட்டினுள் நுழைவது போலிருக்கும்.

உடையார் முன் இல்லார் போல்நின்று கற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார் குறளாசான்.  ‘அங்கங்கே கலைகள் தேறும் அறிவன்என்கிறார் பரஞ்சோதி முனிவர். கற்றலின் சுவைதான் கல்வியின் இன்பம்ஆசிரியன், மாணவன் என்றதும் இந்தப் பாடலும் நினைவில் தட்டியது.

மெல்லிசை மன்னர், எஸ் பி பியை எத்தனை நேசித்தார் என்பதைஎனக்கொரு காதலி இருக்கின்றாள்பாடல் ஒன்றைக் கேட்டாலே போதும், உணர்ந்து கொண்டுவிட முடியும்முத்தான முத்தல்லவோ படத்தின் அந்தப் பாடலில் தேங்காய் சீனிவாசன், ஜெய்கணேஷ் உண்மையிலேயே பாடலுக்கான நியாயம் சிறப்பாகச் செய்திருப்பார்கள்





இரண்டு ஓவியர்கள் இரு வேறு தூரிகைகளில் வண்ணங்கள் தொட்டு ஒரே கான்வாஸ் மீது தீட்டக் கிடைக்கும் எழில் சித்திரம் போலும்எனக்கொரு காதலிபாடல்!

எனக்கொரு காதலி இருக்கின்றாள் என்பது பல்லவியின் முதல் வரி. காதலி என்றால் கேட்க வேண்டுமாகாஆஅதலி  என்று தான் மெட்டில் கொணர்ந்திருப்பார் எம் எஸ் வி.  ‘அவள், ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்’, அடுத்த வரி. அந்த சிரிப்பை, ஸ்வரங்களில் கொணர்வார் அடுத்துபல்லவி முழுக்க அவரது குரலின் கம்பீரம் சுழன்று சுழன்று ஒலிக்கும். பாடலைத் தொடங்கி வைக்கும் பியானோ, வழிப்பயணத்தில் தொடர் தோழனாக ஒலித்துக் கொண்டே இருக்கும். இதயத்தைத் திறந்து காட்டும் வயலின், உள்ளத்தை நெகிழ்த்திக் கொண்டே இருக்கும் பாடல் முழுவதும்

முத்தான முத்தல்லவோ படத்திற்கான இந்தப் பாடல் எழுதியவர் வாலி என்பதால், பஞ்சமம், தெய்வதம், மோகனம் எல்லாம் வரும் பாடலில், இசையின் காதலர்கள் இசைக்காக உருகி உருகிப் போகும் பாடலின் ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு சுவையில் அமைந்திருக்கும். எம் எஸ் வி குரலின் தனித்துவமும், எஸ் பி பி குரலின் இனித்துவமும் குழைத்துவரும் சரணங்கள் அவை

‘பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்’ என்பதில், பேசும் என்பதையும் இரண்டும் என்பதையும் ராக அலைவரிசைக்கேற்ப நீட்டி இசைக்கும் போதும், ‘பஞ்சணை போடும் எனக்காக’ என்பதில் அந்த எனக்காக என்பதன் பெருமிதத் துள்ளலிலும் எம் எஸ் வி மின்னி ஒளிர்வார். சரணத்தின் முடிவில், ‘இனிதாக’ என்பதன் கால அளவை அவர் விரித்துக் கொண்டு போகும் சுகம் அலாதியானது

‘என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்’ என்று வரும் இரண்டாம் சரணம், எஸ் பி பி அவர்களின் அறுதிப் பெரும்பான்மை ஆட்சியில் அமைந்திருப்பது. வாழும், ஜீவன் என்பதன் விரிப்பை அவர் தமது பாணியில் இழைத்து நீட்டுவது உள்ளத்தில் மழை வருவிப்பது. சரணத்தின் நிறைவு வரியான, ‘கைவசம் ஆகும் எதிர்காலம்’ என்பதையும், எதிர்காலம் என்பதை இழைப்பதும் எதிரே பாடல் கேட்டிருப்போர் தலைகளில் கையை மேடையிலிருந்து நீட்டிப் பன்னீர் தெளிப்பது போல் சிறப்பாகச் சிதறி விழும்

‘தேன்சுவை கிண்ணம்’ எனும் மூன்றாவது சரணம், எம் எஸ் வியின் இசை பக்திக்கான சமர்ப்பணம் போல் நிறைவு பெறும்.   அதன்பின், பியானோவும், வயலினும் இரு குரல்களின் உருவகங்களாக மாறி, ஓடிப்பிடித்து விளையாடிக் கட்டித் தழுவி நிறைவடையும் பாடல், இரவுகளில் உறவுகளைப் பூக்க வைக்க வல்லது

சையின் இன்னொரு தோழமை கீதம் தான், ‘எடுத்து நான் விடவா என் பாட்டை…’. ஒரு பாடலின் தாளக்கட்டு, ரிதம், ஆலாபனை எல்லாம் எடுத்து விடவா என்று ராஜா கேட்பது போலவே வழங்கிய பாடல் தான் அது

இளையராஜா, எஸ் பி பி அசாத்திய இணை குரல்களில் பாடல் அமர்க்களமான தாளக்கட்டில் அமைந்திருக்கும்.   தோழா தோழா என்பதற்கு சோடா சோடா என்று சந்தம் போட்டு எழுத வாலியால் தான் முடியும்தாளக்கட்டுக்குள் திக்குவார் ராஜா. தாளக்கட்டுக்குள், இந்தாடா சோடா என்று சொல்வார் எஸ் பி பி



https://www.youtube.com/watch?v=76gi_AYVn_o



பல்லவியே அமர்க்களப்படுத்தி இருப்பார் ராஜா. ‘எட்டுக் கட்டை நான் எட்டுவேன் வர்ண மெட்டு தான் கட்டுவேன் இன்ப 

வெள்ளமாய்க் கொட்டுவேன்  ரசிகர் நெஞ்சிலே ஒட்டுவேன்என்பது ஓர் இசை பிரகடனம் போல் ஒலிக்கும்அப்புறம் சரணங்களில் கேட்கவேண்டுமா!

நான் பாட..’ என்று ராஜா தொடங்கும் முதல் சரணத்தில், ‘என் பாடல் இனித்திடும் தேன் தேன், தென் பாண்டி குயிலினம் நான்‘  என்ற வரிகளை அத்தனை ரசமாக வார்த்திருப்பார்தொடரும் எஸ் பி பி, ‘நான் பாட ஏழு சுரங்களும் தான் தாவிடும் மேவிடும்……..’ அத்தனை இன்பமாய் ஒலிக்கும். ‘என் இசையைக் கேட்டாலே வெண்ணிலா வாராதா நள்ளிரவில் நான் கொஞ்சத்  தன்னையே தாராதாஎன்று கேட்டால், கண்ணீர் பூக்கிறது இப்போது, எஸ் பி பி பாடினால் தாரகைகள் எல்லாமே தங்களைத் தந்துவிடாதா என்று தான் பாடத்தோன்றுகிறதுராஜா அதற்கு, ஆஹா என்றும், ச்ச்ச்ச்சு போட்டு ரசிப்பதும் அத்தனை அமுதமாகப் பாயும்.

இரண்டாம் சரணத்தை நோக்கிய துள்ளாட்டத்தில், தத்தா தகிட பதங்கள், ரொம்பத் தான் திக்குதா என்று எஸ் பி பி கேட்பது போல் கொணர்ந்திருப்பார் ராஜா. ராக ஆலாபனையை சிரிப்பில் இழைத்திருப்பார் ராஜா.  திக்கித் திக்கிப் பாடுவதைக் கூடப் பாடலின் அழகாகவே மாற்றும் நயங்கள் பாடல் முழுவதும் பரவி விரவி வரும்

இரண்டாம் சரணம் முழுக்க எஸ் பி பி, தாளக்கட்டின் மீது நர்த்தனம் செய்வதுபோலவே அசாத்திய ஒயிலுடன் இசைக்கும் வரிகள் அத்தனை அம்சமாய் இருக்கும்.  ‘பத்துவிரல் நான் தீண்ட சித்திரம் வாராதா, பட்டு உடல் நான் வேண்ட சம்மதம் தாராதாஎன்ற வரிகளில் அவர் பரிமாறும் சுவாரசியமான சுவை விவரிப்புக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு சொல்லுக்கும் சரிகை கட்டி விட்டதுபோல் ஜொலிக்க வைப்பார் பதங்களை.



ட்டுரை நிறைவு செய்கையில், வீட்டு வாசலில் வேப்ப மரத்துக் குயிலோசை அந்தி கருக்கலின் வரவை அறிவிப்பது போல் ஒலித்தது. ஒற்றைக் குயில். கருங்குயில். பச்சை இளந்தளிர்கள் அடர்ந்த மரக்கிளையில் அந்தக் கருங்குயில் இடைவெளி கொடுத்துக் கொடுத்து எடுத்த ஓசை, நடப்பு காலத்துத் தொடர் சோகத்தின் பின்னணி இசை போல் தான் ஒலித்துக் கொண்டே இருக்கிறது உள்ளத்தில். ஒன்பதே நாள் இடைவெளியில் வாழ்க்கைத் துணையையும், ஆருயிர் மகனையும் கொரோனா கொடுந்தொற்றுக்குப் பறிகொடுத்துவிட்ட அன்புத் தோழர் ஒருவரது அகக் குரல் போல் தான் வாட்டி எடுக்கிறதுயாரோ அனுப்பி வைத்த துயரக் கவிதையை அந்தத் தோழர் சற்றுமுன் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டதால் கூட இருக்கக் கூடும்.

ஆனாலும், சட்டென்று சரிந்துவிழ முடியாத வாழ்க்கைப் பொறுப்புகள்தான் மனிதர்களை இறுகப் பற்றிக் காலூன்றி நிற்கச் செய்கின்றன. எல்லாம் பொய்த்தது போன்ற நெருப்புத் தருணங்களைக் காலம் தான் மெல்ல மெல்லக் குளிர்வித்து நிறைவு செய்தாக வேண்டிய பணிகளை நோக்கித் திசை திருப்புகிறது. காலத்தின் அந்தப் பெருஞ்சுமையை இசை தான் இலேசாக்கி அருள்கிறது

அண்மையில், நண்பர் ஒருவர் மறைவில் அவருக்குப் பிடித்தமான இளையராஜா இசையில் எஸ் பி பி அவர்களது இளமை எனும் பூங்காற்று இசைத்தபடியே வழியனுப்பி வைத்த அன்பர்களின் நேயத்தைக் காணொளிப் பதிவில் பலரும் பகிர்ந்து கொண்டிருந்தனர்எஸ் பி பி இல்லாத நேரத்து அவரது பிறந்த நாளையும் அவரது பாடல்கள் தான் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. இசையின் ஜனநாயகம் அது. இசையால் இசைக்காக இசையே ஆளும் இசைநாயகம் அது.

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]



இசை வாழ்க்கை 40: என் பாடல் கண்மணி – எஸ் வி வேணுகோபாலன்



இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது  – எஸ் வி வேணுகோபாலன் 



இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்



இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

 



இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம்  – எஸ் வி வேணுகோபாலன் 



Show 3 Comments

3 Comments

  1. Manoharan Barathi

    அருமை அய்யா. நல்ல பதிவு. மிகவும் பிரமாதமா அமைந்துள்ளது. நன்றி சார் ❤️

  2. எல்லாம் பொய்த்தது போன்ற நெருப்புத் தருணங்களைக் காலம் தான் மெல்ல மெல்லக் குளிர்வித்து நிறைவு செய்தாக வேண்டிய பணிகளை நோக்கித் திசை திருப்புகிறது. காலத்தின் அந்தப் பெருஞ்சுமையை இசை தான் இலேசாக்கி அருள்கிறது.
    உண்மை ஐயா.
    பிறப்பு முதல் இறப்புவரை உடன் வருவது இசைதானே

  3. Dinesh

    Nice as usual. In this article, one word is there.. PIRAZHADHU, . I tried to pronounce it several times, I failed to pronounce it correctly. It must be difficult word for almost all our younger generation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *