குண்டு தனம் எங்கள் குடியிருப்புப் பகுதியின் வீட்டுப் பணிப்பெண்களில் ஒருவர். வெகுளி என்றால் அத்தனை வெகுளி. இளவயதில் கைம்பெண் ஆனவர், அந்தக் கஷ்டம், அவரது உருண்டை முகத்தில் எப்போதோ நிரந்தரமாகக் குடியிருக்கத் தொடங்கிவிட்டிருந்தது. நடக்க முடியாத அளவு உடல் பருமன், ஆனாலும் ஏதாவது வேலை கொடு என்று தெரிந்த வீடுகளில் போய்க்கேட்டு முடித்துவிட்டுப் போவார்கள்.  

என் அன்னை, வேலை ஏதும் தர வாய்ப்பு இல்லையென்றாலும், குரல் கேட்டால் அழைத்து சாப்பிட ஏதாவது கொடுத்து உட்கார வைத்து அவரது கதையைக் கேட்டு ஏதேனும் சமாதானம் சொல்லி அனுப்புவார்தனது சேலை, போர்வை இப்படி ஏதேனும் ஒன்றை அவருக்கு எடுத்துக் கொடுப்பார். பெற்றோர் அம்பத்தூர் போனபிறகு, என் வாழ்க்கை இணையருக்கு நெருக்கமானார் தனம்

சொந்த சிற்றூர் போன இடத்தில், காய்ச்சல் கண்டு சில ஆண்டுகளுக்குமுன் மரித்துப் போனார் தனம். என் அம்மாவிடம் தகவல் சொன்னதும், “உன்னைப் பாட்டுக்காரு என்று கூப்பிடுவாளே, ஞாபகம் இருக்கா?” என்று சொல்லி அழுதார்.   அவள் வாழ்க்கைப் பாட்டுக்குப் பொருள் தேடும் போக்கில், பாட்டுகள் எத்தனை பொருளாக இருந்திருக்கின்றன !

பாட்டுக்காரன் எப்பேற்பட்ட கம்பீர அடையாளம்வேறென்ன வேண்டும் இந்த வாழ்க்கைக்கு…. வீட்டுக் கிணற்றில் நீர் இறைக்கும்போது, அருகே உயரமான மேடை மீது வாகாக அமைக்கப்பட்டிருந்த கருங்கல்லில் துணி துவைக்கும் போது, வீட்டினுள் ஏதோ தேடும்போது கூட வாய் சும்மா இராது எதையோ பாடிக்கொண்டு தான் இருக்கும்

மகத்தான தோழர் மைதிலி சிவராமன் அண்மையில் மறைந்தார். அற்புத மனுஷி அவர். அன்றெல்லாம் அந்தத் துயரத்தை மேலும் உள்ளே வார்த்துக் கொண்டிருந்தது, ஓர் இசைப்பாடல். ‘காடுகளில் ஓலமிடும் உப்பிரியேஎன்ற அந்தப் பாடல், தமது சுப்பம்மா என்கிற சுப்புலட்சுமி பாட்டியின் குறிப்புகள் திரட்டி, மைதிலி அவர்கள் வழங்கி இருந்த அருமையான புத்தகமான வாழ்க்கைத் துகள்களின் கதை மீதான உமா சக்கரவர்த்தி அவர்களது ஆவணப் படத்தில் ஒலித்த பாடல். சுப்பம்மா தமது அருமைக் குழந்தையை இழந்த சோகத்தில் இருப்பதை விவரிக்கும் காட்சியில், இழந்த மகவை உயிர்ப்பிக்கக்  கேட்டு புத்தரிடம் நிற்கும் பெண்ணொருத்தியின் கதை சார்ந்த துயர கீதம் அந்தப் பாடல். ஜீவா ஜீவா என அழைக்கும் என்ற இடத்தில் உயிர் அப்படியே போய்த் திரும்பி வரும் அளவு உருக்கும் பாடல் அது

ரணமற்ற இல்லம் எங்கே என்று புத்தர் கேட்டது போல், இசையற்ற வாழ்க்கை எது என்று கேட்கத் தோன்றுகிறது

எம் எஸ் வி அவர்களது ரிதம் பற்றி, தாளக்கட்டு அழகு பற்றி அப்படி கொண்டாடி எம் எஸ் சேகர் என்பவர் பேசும் காணொளிப் பதிவு வங்கிப்பணியில் ஓய்வு பெற்ற உதவி பொது மேலாளர் கிருஷ்ணன் அவர்கள்  அனுப்பி இருந்தார். தாளத்தோடு எடுக்கும் பல்லவி, பல்லவியைக் கொஞ்சம் ஓடவிட்டுப் பின்னாலே சென்று பற்றிக் கொள்ளும் தாளக்கட்டு, முதல் முறை பாடும்போது ஒருவிதம், இரண்டாவது முறை அதே வரி பாடுகையில் புரட்டியெடுக்கும் வேறுவகை தாளக்கட்டு என்று மெல்லிசை மன்னரின் அசாத்திய மேதைமையை விவரித்தார்https://www.youtube.com/watch?v=Tll4DKgCnYsஅதே வேகத்தில், நீண்ட காலம், அவருடைய உதவியாளராக இருந்த இசைப்பாடகர் அனந்து என்னவெல்லாம் தொட்டுக் காட்டுவார் என்று அலைபாய்ந்ததில் அசர வைத்தார் மனிதர்அனந்து அவர்கள் எம் எஸ் வி போலவே முக பாவம், கண் பார்வை, குரல் ஒலித்தல், அவரைப் போலவே பாடுதல் எல்லாம் வல்லவர் என்பதை நிகழ்ச்சிகளில் அவரைப் பார்த்தவர்கள் அறிந்திருப்பார்கள். அனந்துவும், டி எஸ் பத்மநாபனும் உரையாடுவது நான்கு பகுதிகள் ஓடுகின்றன அடடாஉரையாடலா அது, உரைப்பாடல் ! மெட்டுக்குள் சொல்லை எடுத்து வருவதல்ல, சொற்களுக்குள் இசையிருப்பதை மெட்டுக்கு எடுத்து வரணும் என்பாராம் எம் எஸ் வி. அடடா, வெறும் காசுக்காக, பிழைப்புக்காக, பெயருக்காக, புகழுக்காக அமைத்த இசையா அதெல்லாம்…..

பாரதி கண்ணம்மா என்ற பாட்டு இருக்கிறதே, ஆஹாநினைத்தாலே இனிக்கும் படத்திற்கே தேனிசை மழை என்று அறிவிப்பு செய்திருந்தார் இயக்குனர் கே பாலசந்தர். எஸ் பி பிவாணி ஜெயராம் இணை குரல்களில் பொங்கும் காதல் இருக்கிறதேரசத்தை இலையில் ஊற்றுகையில் உள்ளங்கையைத் தொன்னை போலாக்கி ஏந்தி ஏந்திப் பருகிய சுவை போதாதென்று அருகே கிண்ணத்திலும் நிறைத்து வைத்துக் கொண்டு கொண்டாடுவார்களே சிலர், அப்படியான ஒரு காதல் ரசம் தான் இந்தப் பாடல்.

பல அடுக்கு கட்டிடமொன்றின் மேல் தளத்தில் ஒரு பந்தல் அமைக்கப் போகிறவர் போன்ற குஷியில் வாணி தொடங்குகிறார் ஆலாபனையை. காற்றில் பறக்கத் துடிக்கும் அந்தப் பந்தலை நாலாப்புறமும் நிலை நிறுத்தி இப்போது பார் என்று மெல்லத் தணியும் குரலில் அந்த ஆலாபனையை நிறைவு செய்கிறார் பாலு. ‘பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மாஎன்ற பல்லவியை கவிஞர் கண்ணதாசன் வழங்கிய அதே காதலோடு இசைக்கிறார் எஸ் பி பி. கண்ணம்மா என்று அழைக்கும் காதலனை கண்ணையா என்று விளிக்கிறாள் காதலி, எனவே பாரதி கண்ணையா நீயே சின்னையா கேள் இதைப் பொன்னையா என்று வாணி சிலிர்க்க வைக்கும் குரலில் பல்லவியை இசைக்கிறார்.  

அதிசயம் மலர் முகம் தினசரி பல ரகம்  ஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மாஎன்ற வரியில் மட்டும் எத்தனை சித்து வேலைகள் என்பதை அனந்து கண்களில் இன்பம் பொங்க விவரிக்கிறார். பந்தல் கால் ஒவ்வொன்றிலும் வண்ண வண்ணத் துணிகளை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழற்றுவதைப் போன்ற சுவாரசியம் தென்படுகிறது….பாலு ஒரு விதமாகச் சுழற்றுவார் எனில் வாணி அவரது தனித்துவத்தில் அதை உருட்டிக் கொடுப்பார்

கண்ணம்மாவும் கண்ணையாவும் காதலிக்கும் போது குழலிசை தானே அந்தக் காதலில் பொங்கும். பல்லவியை ஒவ்வொரு முறை காதலர்கள் எடுக்கும்போதும், ஒவ்வொரு வரியின் நிறைவிலும் உள்ளக் குதூகலக் கூவுதலைக் குழலில் கொண்டு வர வைத்திருப்பார் எம் எஸ் விசரணத்தை நோக்கிய பயணம், தனி சுவாரசியம் என்று ரிதம் கொண்டாடி சேகர் சொல்லக் கேட்க வேண்டும், பல்லவியில் தபலா கிடையாது, ஒரே ராகங்களில் என்று சரணத்தை வாணி எடுப்பதற்குச் சற்று முன்னதாக, நான் வந்துவிட்டேன் என்று சொன்னபடி முடிச்சுகள் போட்டு அறிவித்து தபலா வாசிப்பு தொடங்குவதை அருகே உற்றுக் கேட்கையில் பெருகும் ஆனந்தம் சொல்லி மாளாதுஅதன் வேறொரு மாறிய தன்மையில், இரண்டாம் சரணத்தின் முன்பாகவும் கொண்டு வந்திருப்பார் எம் எஸ் வி (புகழ் மிக்க தபலா கலைஞர் பிரசாத் வாழ்க!).

சரணங்கள் இரண்டுமே போதை கிறக்கத்தை மேலும் ஊட்டுபவை. ‘ஒரே ராகம் தனைப் பாடும் விதம் மாறும் தினம் மாறும்என்பதில் வாணியின் குரல் வளத்தில் அந்த மாறும் எப்படியெல்லாம் மாறும் என்பதன் சுவை அலாதி. ‘நிலாக்காலங்களில் சோலைகளில்என்று தொடங்கி அடுத்தடுத்து அந்தப் பதங்களை எஸ் பி பி எப்படியெல்லாம் அழகு படுத்துவார் என்பது அசாத்திய ருசி

இரண்டாம் சரணத்தில், ‘விழாக் காலங்களில் கோவில் சிலைஎன்பதில் வாணி நிகழ்த்தும் ஜாலங்கள் ஒரு பக்கம் எனில், ‘அலை மோதும் படி ஓடும் நதிஎன்று தொடக்கி பாலு பாடப்பாட இதயத்தை எடுத்து அருகே வைத்துவிட்டு வந்துவிடலாம் போல் நிறையும் மனம் முழுக்க. வழி நெடுக வயலின் வாசிப்பும், சிதார் சிந்தும் சிலிர்ப்பும், குழலுமாகப் பாடலைத் தேன் சொட்டச் சொட்ட அல்லவா வழங்கி இருக்கிறார் எம் எஸ் வி.

ன்பே ஆருயிரே படத்தின்மல்லிகை முல்லை பூப்பந்தல்பாடல், வாணி ஜெயராம் குரலினிமை, நுணுக்கம், ஞானம் எல்லாவற்றுக்குமான ஓர் அடையாள அட்டை போன்றதொரு பாடல். திருமண நிகழ்வு குறித்த மங்கை ஒருத்தியின் உள்ளக் கிளர்ச்சி ததும்பிப் பெருகும் பாடலை கவிஞர் வாலியிடம் ஒரே ஒரு சொல் சொல்லிவிட்டால் போதாதா, அப்புறம் கேட்கவா வேண்டும்! பல்லவியை, தாளக்கட்டு உடன் வராது, திருமண வீட்டில் ஜமக்காள விரிப்பு போல் மெல்ல எடுத்து வைப்பார் நான்கு வரிகளையும் வாணி, அப்போதே எங்கிருந்து எங்கு வரை தொட்டுத் திரும்புவோம் என்ற கணக்கு அதிலேயே வெளிப்படுமாறு அமைத்திருப்பார் எம் எஸ் வி. பின்னர் பாடல் முழுக்க தபலா திருவிழா தான்

மஞ்சள் நீரினில் காலையில் குளித்துஎன்ற முதல் சரணத்தின் வரிகளில் சங்கதிகளில் முழுக்காட்டுவார் வாணிஅந்தக்காலையில்இரண்டாம் முறை பாடுகையில் அடடா, குயில் கூவுவது போல் ஒலிக்கும் வாணியின் குரல். பட்டுச் சேலையும் மெட்டியும் அணிந்து என்று தொடங்கி வரும் இரு வரிகளிலும் மணப்பெண்ணின் எத்தனை கனவுகளைத் தெளிப்பார் வாணி.  ‘மந்திரம் சொல்லும் மேடையிலேஎன்ற இடம் திருமண மண்டபத்தை மனக்கண் முன் கொண்டுவரும் வரிகளும், நாதஸ்வர தவில் இசையும்

இரண்டாம் சரணம், கொஞ்சலும் குழைவும் கொண்டாட்டமும் மிகுந்த ஒன்று. ‘அந்தி மாலையில் சாந்தி முகூர்த்தம்என்பதில், இரண்டாம் முறை முகூர்த்தம் என்ற சொல்லில் எத்தனை சங்கதிகள் தொடுத்து சொக்கவைப்பார் வாணி. வண்ணப் பூவினில் ஆனந்தக் கோலம் என்பதில் எத்தனை எத்தனை அழகுகள். அடுத்த இரு வரிகளில், ‘(அச்சம்) நாணத்தில் நான் வரும் நேரம் (அன்பு) நாடகம் ஆரம்பம் ஆகும்’ என்ற இரு வரிகளில் அடுத்தடுத்த மூன்று சொற்களை நெடில் எழுத்துகளில் தொடங்கி எழுதி இருக்கும் வாலி அவர்களது மேதைமை ஒரு கணம் அசர வைக்கிறது வாணியின் தனித்துவ உச்சரிப்புகளில்பஞ்சணை பைங்கிளி என்ற சொற்களில், அந்தப் பைங்கிளிக்குத் தான் எத்தனை வண்ணங்கள் வாணியின் குரலில். ‘வெள்ளி முளைக்கும் வேளைவரை சொல்லிமுடிப்போம் காதல் கதைஎன்ற வரி காதலின் உன்னத ஆராதனை. கதையென்றால் (இசையின்) சங்கதிகள் இல்லாமலா

பாடல் முழுக்கஎல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காகஎன்பது தான் தீம் வரிகள். அடடா, அடடா, வாணி ஒளிமயப்படுத்துவார் இந்த சொற்களை. பாடல் நிறைவில், அதற்காக என்பதன் நீட்சியும் நிறைவும் அத்தனை அம்சமாக வந்து விழுகிறது.

ழுபதுகளின் இறுதியில், எண்பதுகளில் அற்புதமான பாடல்கள் பல வழங்கினார் வாணி ஜெயராம். ‘அன்பு மேகமே இங்கு ஓடி வாபோன்ற டூயட் பாடல்கள் பாலுவோடு சிறப்பாக ஒலித்த காலங்கள் இசை ரசிகர்களது காதல் களியாட்டப் பொழுதுகள். இளையராஜா இசையில், ‘இளமை ஊஞ்சலாடுகிறதுபடத்தில் அவர் தனித்தும், பாலுவோடும் பாடிய பாடல்கள் ரசனை மிக்கவை. ஜெயசந்திரன் ஹம்மிங், ஜதிகள் ஒலிக்க, வாணி ஜெயராம் பாடிய புன்னகை மன்னன் படத்தின் ‘கவிதை கேளுங்கள்‘, முற்றிலும் வேறு தளத்தில் இயங்குவது. ஓர் அதிரடி அதகள கானம் அது.  தனிக்கட்டுரை எழுத வேண்டும் அந்த ஒற்றைப் பாடலுக்கு

ழகே உன்னை ஆராதிக்கிறேன்‘ படத்தின், ‘நானே நானா பாடல் இருக்கிறதே‘, ஆஹா….ஆஹா! உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், பருவத்தின் பரிதவிப்பில் பொங்கும் பாடல் வரிகளை வாலி படைத்திருந்தார். ராஜா கலக்கி இருந்தார்உணர்வுகளின் தீப்பற்றுதல் என்று தலைப்பிடலாம் இந்தப் பாடலுக்கு. எத்தனை இதமான கிடார் இசையில், ஆர்கெஸ்ட்ரா அரவணைப்பில் நானே நானா என்று தொடங்குகிறார் வாணி

அந்தப் பல்லவி நுழைதலில் தாளக்கட்டு, கல்லூரி மாணவர்கள் ரயிலில், பேருந்தில் ஐந்தாறு தப்படிகள் வேகமாகத் தரையில் போட்டபடி ஓடிச் சட்டென்று வண்டியில் தாவியேறும் ஜோர் போல பாடலைப் பற்றிக் கொள்ளும் வசீகரம் ஒவ்வொரு முறையும் நிகழும்படி அமைத்திருப்பார் ராஜாஅந்தத் தாளத் தப்படிகள் இராது அந்தப் பல்லவியை யோசிக்கவே முடியாது பாட்டைக் கேட்ட யாருக்கும்.  

சின்னச் சின்ன சொற்களை தத்தகாரத்திற்கேற்ப அடுக்கி இருப்பார் வாலி. அவற்றை ஒவ்வொரு சொல்லாக ரசித்து ரசித்து ரசிகர்களுக்குப் பரிமாறுவார் வாணி.  ‘தன்னைத் தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்‘ …என்னமாக வந்து விழுந்திருக்கும் சொற்கள். சரணங்கள் எல்லாம் கேட்டுக் கேட்டு அனுபவிக்க வேண்டியவை. ‘ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்கஎன்றால் இதயத்தை உருகவும், துடிக்கவும் வைத்துவிடும் பாவங்களை அப்படி குழைத்திருப்பார் வாணி

 ‘உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள் எதோ படிக்க‘  என்பது பெண்ணின் அகக்குரலாக எழும் அசாத்திய வரி. அடுத்த வரிகளில் ஒரு சுழல் மாடியில் லாவகமாக இறங்குவது போல் வாணியின் குரலில் இறங்கி வரும் வரிகள் அபாரம். அதுவும் சரணம் சரணம் என்ற இரண்டு சொற்கள் ஆழமிக்க பொருளோடு வலுவாக வந்து விழுபவை

பிறையில் வளர்வதும்என்று தொடங்கும் இரண்டாவது சரணம், காதல் தவிப்பின் தத்துவார்த்தப் படிநிலையில் இயங்கும் வரிகளில் வளர்வது. ‘ஒரே நிலவு‘, ‘ஒரே மனதுஎன்ற பதங்களை வாணி அத்தனை குமுறல் வெடிக்கப் பாடுவார். அடுத்த வரிகள், முதல் சரணத்தின் அகக்குரல், புறத்தே வெடித்தெழும் வலிகளில் உயிர்த்தெழுபவை. ‘இரவும் பகலும் விரகம் நரகம்‘ என்பவை சந்த அழகிற்காக எழுதப்பட்டவை என்று கடந்து போய்விட முடியாதவை. இந்தச் சரணமும், ‘சரணம் சரணம்என்ற சொற்களிலேயே நிறைவு பெற்று, மீண்டும் பல்லவிக்குச் செல்லுமிடம் இரவுகளில் கேட்கையில் இதயங்களை உருக்கி வார்க்கும்கிடாரும், குழலும், வயலினும் இடையே சாக்ஸபோன் சாரலும் மென் தப்படிகளான தாளக்கட்டுமாக இசையார்ந்த பாடல்

சையும், பாடலும், குரல்களும் எந்தப் புள்ளிகளில் தமக்குள் ஓர் உறவைச் செம்மையாகக் கட்டமைத்துக் கொண்டு விடுகின்றனவோ அங்கே ரசிகர்களுக்கான மகத்தான அனுபவம் உருவாக்கி விடுகிறது. பின்னர் நிலைக்கவும் செய்துவிடுகிறது. மறு வாசிப்பு போல், மறு ரசிப்பு நடக்க நடக்க அந்த அனுபவங்கள் அந்தந்த தருணத்திற்கேற்பப் புதிய புதிய உணர்வு நிலைக்கு ரசிகர்களை உயர்த்தவும் செய்து கொடுக்கிறது. அங்கே பெருகும் கண்ணீர் துயரங்களை அணைக்கவும், நிம்மதியைப் பெருக்கவும், சக உயிர்களை நேசிக்கவும் மனிதர்களுக்கு வரமளிக்கிறது. ஒரு பாட்டுக்காரர்  இப்படித் தான் உருவாகிறார்.

 

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 94452 59691

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]இசை வாழ்க்கை 40: என் பாடல் கண்மணி – எஸ் வி வேணுகோபாலன்இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது  – எஸ் வி வேணுகோபாலன் இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

 இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம்  – எஸ் வி வேணுகோபாலன் 

 இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 


2 thoughts on “இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. மெட்டுக்குள் சொல்லை எடுத்து வருவதல்ல, சொற்களுக்குள் இசையிருப்பதை மெட்டுக்கு எடுத்து வரணும்

    அற்புத வரிகள் ஐயா

  2. கேட்டு கடந்த பாடல்கள் இன்று தங்களின் கட்டுரையோடு கேட்கும் போது பாடல்கள் தேன் அமுதமாக இசைக்கிறது சார். வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *