இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ

Music Life Series Of Tamil Cinema Music Article by Writer S.V. Venugopalan. Book day website is Branch of Bharathi Puthakalayamஎஸ் வி வேணுகோபாலன்

ந்த வாரக் கட்டுரை உள்ளபடியே, ஜூன் 16 இரவு கிட்டத்தட்ட ஒரு மூச்சில் எழுதி முடிக்க இருந்தேன், நேரம் நள்ளிரவைக் கடந்திருக்க, ஏன் இந்தத் தொடர் அத்துமீறல் (தொடர் என்பதில் சிலேடை தானாக வந்திருக்கிறது) என்று அப்படியே நிறுத்திவிட்டு உறங்கப் போய்விட்டேன், காலைப் பொழுது, வேறு ஒரு செய்தியை அதிரடியாகக் கொண்டு இறக்காமல் (இதிலும் இரண்டு பொருள்!), ஏழரைக்கு ஒரு முன் தகவல், எட்டு மணிக்கு உளவியல் தயாரிப்பு, எட்டு ஐம்பதுக்கு அந்த இறுதிச் செய்தி வந்தே விட்டது

என் வாழ்க்கையின் மகத்தான மனிதரை இழந்தேன், அர்த்தமுள்ள வாழ்க்கையை ஆர்ப்பாட்டமின்றி, வலியின்றி நிறைவு செய்து விடை பெற்றார் அப்பாபரந்த உலக நோக்கு, விரிந்த சமூகப் பார்வை, திறந்த மனம், அசாத்திய கேள்வி ஞானம், அன்பின் பேருரு, திருத்தும் நோக்கிலான கண்டிப்பு, காந்தப் புலமான பெரு வாழ்க்கை

அப்பா சிறப்பான குரலில் பாடுவார், எல்லா நாளுமல்ல. வருவாய்த் துறையில் அரசுப் பணியின் நேரம் காலமற்ற ஓட்டத்தில், அவர் ராக ஆலாபனை போல் பல பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இயங்கிக் கொண்டிருந்த நாட்கள், வானொலியில் தொலைக்காட்சியில் இசைப்பாடல்களைப்  பேரானந்தக் களிப்போடு ரசித்துத் தலையாட்டிக் கொண்டாடிய பொழுதுகள் மறக்காது

1960களில் சென்னை மயிலையில் வசித்த காலத்தில், கொத்தமங்கலம் சுப்பு அவர்களது வில்லிசைக் கச்சேரிக்கு அழைத்துச் சென்றார், ‘பாவி டயர் செய்த பஞ்சாப் படுகொலைஎன்ற வரியை, அப்பா அப்படி லயித்துப் பாடுவார். எம்பார் விஜயராகவாச்சாரியார் இசையில் அத்தனை ஆர்வம் அவருக்கு. பித்துக்குளி முருகதாஸ் பாடல்களை அவரைப் போலவே ஏற்ற இறக்கங்களோடு பாடி நகைத்துக் கொண்டிருப்பார்திரை நட்சத்திரங்கள் யாரையும் அபிநய சரஸ்வதி, நாட்டிய பேரொளி என்று பட்டப்பெயர்கள் இல்லாமல் சொல்ல மாட்டார். வேலூரில் இருக்கையில் பத்மினி அவர்களது தசாவதாரம் நாட்டிய நாடகத்திற்கு அழைத்துச் சென்று அருகே அமர்ந்து விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்டெபுடி கலெக்டர் பொறுப்பில் பணி நிறைவு செய்தபின் முத்தமிழுக்குக் கண்ணும் காதுகளும் வழங்கும் வாய்ப்பைப் பெருக்கிக் கொண்டார்.

கிருஷ்ண ஜெயந்தி நாளில், கிருஷ்ணர் வருகிறாரோ இல்லையோ, எம் கே டி பாகவதர் எங்கள் வீட்டுக்கு ஆண்டு தவறாமல் எழுந்தருளுவது வழக்கம். ‘கிருஷ்ணா முகுந்தா முராரே‘, என் தந்தை எஸ் ஆர் வரதாச்சாரி அவர்களுக்கு இஷ்ட கானம்அசாத்திய சங்கதிகள், தாளக்கட்டின் லயம், தாளக்கருவிகள் அற்று தொகையறா போல இடையே இடையே பாடல் வரிகள் என்று தியாகராஜ பாகவதர் அசத்தி இருப்பார். ‘கருணா சாகர கமலா நாயகஎன்ற வரிகளுக்கு அடுத்தடுத்து அவர் அழகூட்டும் கலையே அம்சமாக இருக்கும். ‘கனகாம்பர தாரிஎன்று இடத்தின் ராக வாசம் அமர்க்களமாக இருக்கும். ‘குடில குண்டலம்….’ என்ற இடத்தில் உள்ளத்தைக் கவரும் வசீகர பாதையில் எடுக்கும் அவரது அபார குரலினிமையில் புகழ் பெற்ற பாடல் இது.   

முறைப்படி சங்கீதம் கற்காமல், கேள்வி ஞானத்தில் இந்தப் பாடலை அசாத்திய சுவை சொட்டும்படி பாட அறிந்திருந்த அன்புத் தந்தை எஸ் ஆர் வரதாச்சாரி அவர்களது புகழ் மிக்க நினைவுகளுக்கு

வ்வொரு செவ்வாய்க்கிழமை மாலை ஏழு மணிக்கு என்று நினைவு. சென்னை தூர்தர்ஷன் மட்டும் இருந்த எண்பதுகளின் இறுதியில் அந்த நிகழ்ச்சி பெயர் நாதானுபங்கி என்பதா என்று சட்டென்று சொல்ல முடியவில்லை. இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் கூட அந்த நேரத்தில் வந்து சேர முடியாமல் அரையும் குறையுமாகப் பார்த்ததில், கம்பீரமாக நினைவில் நிற்பவர் டி வி கோபாலகிருஷ்ணன் அவர்கள்தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் வாரம் ஓர் இசைக்கருவி, அதன் தயாரிப்பிலிருந்து வாசிப்பு வரை அழகான காட்சிப்படுத்தலோடு இணைந்த விளக்க சொற்சித்திரம் என்று நினைவு

உங்களால் பேச முடியும் என்றால், பாடவும் முடியும்என்ற தலைப்பைப் பார்த்ததுமே, தோழர் ராஜி அசந்துபோய் வாசித்துக் கொண்டு வந்து கொடுத்தார். தி இந்து ஆங்கில நாளேட்டின் வெள்ளிக்கிழமை சிறப்புப் பக்கங்களில், இந்த ஜூன் 11 அன்று தமது 90வது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் அந்த  அற்புத இசை மேதையைப் பற்றி வாசிக்கையில் அத்தனை இன்பமாக இருக்கிறது.  

இசையின் ஜனநாயகம் பற்றி அவரது அழுத்தமான குரல் முக்கியமானது. குரலுரிமை என்பது பேச்சுக்கும் பாட்டுக்கும் இரண்டுக்குமே உண்டு என்ற டிவிஜி அவர்களது வாதம் எத்தனை சுவாரசியமானது.

https://www.thehindu.com/entertainment/music/if-you-can-speak-you-should-sing-says-tv-gopalakrishnan/article34784145.ece

கர்நாடக இசைக்கலைஞர் டி வி ஜி அவர்களது முதல் அரங்கேற்றம் எந்த வயதில், யாருக்காக என்பது சிலிர்க்க வைப்பது

இராமனை அழைத்துச் செல்ல விசுவாமித்திரன் கேட்டபோது, ‘அவன் சிறுவன், அடர்ந்த காட்டில் நீங்கள் விரும்பும் பணியை முடிக்க அவன் ஏற்ற வயதினன் அல்லன்‘ என்று தசரதன் சொல்வதை கம்பர் காட்டியிருப்பார். 1940ல் கேரளத்தில் தனது கச்சேரியில் பக்க வாத்தியம் வாசிக்க அவரை, இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதர் அழைத்தபோது, திருப்புனித்துறா விசுவநாதன் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஏழு வயது. தந்தைக்கு அத்தனை விருப்பமில்லையாம், ஆனால், செம்பை விடவில்லையாம். கச்சேரியில் அனுபவமிக்க மற்றுமொரு மிருதங்க வித்வான் மேடையில் இருந்திருக்கிறார், ஆனால், முதல் பல்லவி தொடங்கியதுமே, செம்பை, டி வி ஜி பக்கம் சைகை காட்டி, ‘நீ வாசிஎன்று சொல்லியிருக்கிறார்இப்போது வயது 89!

இசைக்கான கணிதம் பற்றிய பேச்சு வருகையில், அவர் சொல்வதை அவரது முக்கிய மாணவரான கடம் சுரேஷ் கூறுகிறார், ஒரு நடை வாசிக்கும்போது, அந்த இசை எதிரே கேட்டுக் கொண்டிருப்பவரோடு உணர்ச்சி பூர்வமான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு விடுகிறது, இந்தத் தொடர்ச்சியே ஓர் உண்மையான இசைக் கலைஞரை உருவாக்குகிறது! அதனால் தான், இந்த அரிய இசைக் கலைஞர் தாம் அமைத்திருக்கும் டிவிஜி அகாதமியில் மிக முக்கியமாக எந்த வசதியும், ஆதரவுமற்ற மாணவர்களுக்கு இசைப் பயிற்சி அளித்து வருகிறார்.

 ‘புவியில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் அவர் வாழ்க்கையில் இசைக்கு இடம் இருக்கத் தான் செய்கிறது, உங்களால் பேச முடியுமானால், பாடவும் முடிய வேண்டும்என்கிறார்பேசும் திறனற்றவராக இருந்தாலும், இசைக்கருவிகள் மூலம் பேச முடியும் யாராலும் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.

டிவிஜி என்றால், அந்தி மழை பொழிகிறது என்ற அற்புதப் பாடல் தான் நினைவுக்கு வரும். ராஜாவின் அபார இசையமைப்பில், அந்தப் பாடலில்  அவரது ஆலாபனை அசாத்திய இன்பம் ஊட்டுவது.

இளையராஜா பற்றிய தமது தொடரில், வெ சந்திரமோகன், தமிழ் இந்து நாளிதழ் இணைப்பில், அந்தி மழை பொழிகிறது பாடலை மிகவும் ரசித்து ரசித்து எழுதி இருந்தார். படத்தின் எல்லாப் பாடல்களையும் குறித்த அருமையான கட்டுரை அது.   (https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/59873-24-1.html)

ந்தி மழை பொழிகிறது என்பது மற்றுமொரு திரைப்பாடல் அல்ல. அது ஒரு மென்காதல் பிரகடனம். இரவு நேரத்தில், ஓசைப்படாமல் இளைய இதயங்களுக்குள் சரசரவென்று பற்ற வைக்கப்பட்ட காதல் திரி. காதலுக்காகத் தனது விரிந்த மடியைத் தந்து தாலாட்டுகிறது ராஜாவின் இசை. காதல் உணர்வின் கதகதப்பு மட்டுமல்ல, ஏக்கத்தின் தவிப்பு மட்டிலுமல்ல, உலகெங்கும் முகிழ்க்கும் காதல் உணர்வுகள் அனைத்துக்குமான படையல் போல், இசை வழி கசியும் கண்ணீர்த் துளி இந்தப் பாடல்!

மெல்ல அழைக்கிறது மிருதங்கம்….பப் பப் பப் பப் பபாப்பா..என்று காதலுக்குத் தூது செல்லும் தோழியர் சேர்ந்திசை இசைத்துக் கிளர்த்துகின்றனர் பாடலுக்கான சூழலைமிருதங்கம் பெருமையோடு தட்டிக் கொடுத்து உடனழைத்துக் கொண்டு பரவசமான பல்லவியை நோக்கி விரைகிறது. காதலுக்கான ஈர முத்தமிட்டுச் சொற்களை நேரடியாக இதயத்திற்குப் பரிமாறும் ஒரு குரலில், அந்தி மழை பொழிகிறது என்று எடுக்கிறார் எஸ் பி பி. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்பது, ஓர் எஸ் முத்திரை போல் வந்து விழுகிறது. ‘இந்திரன் தோட்டத்து முந்திரியேஎன்பதில் அந்த இந்திரன், காதல் மந்திரம் போல் ஒலிக்கிறது. மன்மத நாட்டுக்கு மாதிரியே என்ற இழைப்பிலிருந்து பல்லவிக்கு வேகமாக நகரும் பாதை, காதல் போதை

அதைக் கைமாற்றி வாங்கிக் கொள்ளும் வயலின், காதல் தவிப்பை வாசித்துக் காட்டுகிறது. குழலிசை அந்த இதயங்களை வருடிக் கொடுத்து இதம் கொள்ளக் கேட்டுக் கொள்கிறது. பியானோ துளிகள் தெறிக்க, முதல் சரணத்திற்கான இடைவெளியைக் காதல் புல்வெளியாக மாற்றிப் பசுமை பூக்கவைக்கிறது டி வி கோபாலகிருஷ்ணன் அவர்களது ஆலாபனை. தங்கை படத்தில் வரும் பாடல் ஒன்றின் பல்லவியில் கண்ணதாசன் எழுதி இருப்பார்,  ‘சுகம், சுகம், அது துன்பமான இன்பமானதுஎன்று! அத்தகைய நுண் உணர்வுகளின் அவஸ்தையை உருக்கி வார்க்கிறார் டி வி கோபாலகிருஷ்ணன். அவரது ஆலாபனை, சரணங்களின் ஊடாகவும் பாடகர்கள் வரிகளை இசைக்கையில் இணைப்புக் கோவையாகப் பின்னிப் பிணைந்து வருவது கூடுதல் இன்பம்.

முதல் சரணத்தில்தான் எஸ் ஜானகி பாடலில் வந்து இணைகிறார், ‘தேனில் வண்டு மூழ்கும்போதுஎன்பது, ஓடியோடி வந்து கால்களைத் தழுவுகிற கடலலை போன்ற கதியில் நெளிந்து நெளிந்து வந்து உள்ளத்தைச் சூழ்கிற குரல். அந்தக் காதல் வெப்பத்தை அப்படியே டிவி கோபாலகிருஷ்ணன், வாங்கி ஆலாபனை செய்து ஆற்றி ஆற்றி மேலும் சூடேற்றி விடுகிறார்.   அதை மீண்டும் பெற்றுக்கொண்டு அடுத்தடுத்த வரிகளுக்குப் போகிறார் ஜானகி. ‘நெஞ்சுக்குள் தீயை வைத்துஎன்ற இடத்தில் மேலும் பற்றும் நெருப்பு, ‘தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம்என்கிற இடத்தில் மேலும் பரவிவிட, அந்த வெப்பத்தில் உருகி இளகிக் கரைந்தபடி, ‘தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலேஎன்று போகிறது எஸ் பி பி குரல். ‘கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இளமயிலேஎன்பதை ஏதோ மந்திர உச்சாடனம் போல் இசைக்கிறார் பாலு. அந்தவெறுமையிலேசொல்லின் உச்சரிப்பில் எத்தனை வெறுமையின் துயரம்

அடுத்த சரணத்தை நோக்கிய திசையில் பியானோவும், கோரஸ் ஆலாபனையும், கிண் கிண் என்று ஒலிக்கும் மிருதங்கமும் உயர்த்தும் காதல் கிறக்கத்தின் பெருமூச்சில் இழைக்கும் வயலின் இசையுமாக, வசீகர மயக்க ஓசையோடு ஒரு புத்துலகின் திறப்பான இசைக்குள், ‘தேகம் யாவும் தீயின் தாகம்என்று எடுக்கிறார் எஸ் பி பி. அதே வேக வேகக் கடலலை தான் இம்முறையும் கால்களைத் தழுவி இன்புற வைப்பது

மீண்டும் டி வி கோபாலகிருஷ்ணன் அவர்களது அபாரமான ஆலாபனை தான் இம்முறையும். ‘தாகம் தீர நீதான் மேகம்‘ என்பதையடுத்து, ‘கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?’ என்ற வரியைக் காதல் துடிப்பின் நெருப்பைக் கிள்ளி வைத்துப் பாடும் பாலு,  ‘தண்ணீரில் நிற்கும் போதேஎன்பதில், கேட்போரை நீரில் இறக்கிக் குள்ளக் குளிரக் குடைந்து நீராட வைத்துவிடுகிறார். அந்தவேர்க்கின்றதே‘, கேட்போருக்கும் சேர்த்துத் தான்.. 

நெஞ்சு பொறு கொஞ்சம் இருஎன்ற வரியிலும், ‘தாவணி விசிறிகள் வீசுகிறேன்என்பதிலும் எத்தனை ரகசிய பரிமாற்றங்கள் நிகழ்கின்றன ஜானகி குரலில்சரணத்தின் நிறைவான வரி, ‘சந்தனமாய் எனைப் பூசுகிறேன்என்பதில் காதலர்களை வேறொரு கனவு உலகத்திற்குள் கொண்டுபோய்க் குடி வைத்துவிடுகிறது. கவிஞர் வைரமுத்து எழுதுகையில் ஏற்பட்டிருக்கக் கூடிய கற்பனையை, பன்மடங்கு கூட்டும் இளையராஜாவின் இசையில் நனையும் எஸ் பி பிஜானகி குரல்கள் மகத்துவம் பெற வைத்துவிடுகின்றன

ழுபதுகளில் வானொலியில் திரும்பத் திரும்ப ஒலித்த ஒரு பாடல், ‘ஏடி பூங்கொடி‘.  மறுபிறவி படத்திற்காக அந்த அருமையான பாடலை இசைத்தவர் எம் ஆர் விஜயா. கண்ணதாசன் அவர்களது தேர்ச்சியான சொற்களில் ஓடும் பாடலுக்கு இசை அமைத்தவர், தனிப்பாடல்கள், பக்திப்பாடல்கள் என வானொலி ரசிகர்கள் அதிகம் அறிந்திருந்த  டி ஆர் பாப்பா அவர்கள். மிகச் சிறந்த வயலின் கலைஞரான அவர், பின்னாளில் இசைக் கல்லூரியின் முதல்வராகவும் இருந்தார் என்ற குறிப்புகளோடு, சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது முத்திரை பாடல்களில் ஒன்றானசின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடையுடுத்திபாடலுக்கு அவர் இசையமைத்ததும் கொண்டாடப்படுவது

பாடலின் தொடக்கத்தில் மெல்லிய இழையில் ராகத்தை வாசிக்கிறது புல்லாங்குழல், அதிலிருந்து ஆலாபனையை உள்ளத்தைத் தொடும் வண்ணம் அத்தனை அழகாக எடுக்கிறார் எம் ஆர் விஜயா. ‘ஏடி பூங்கொடிஎன்று தொடங்குகிற பல்லவியின் முதல் சொல்லின் கவித்துவமே ரசிகரைக் கொள்ளை கொண்டுவிடுகிறது. மனத்திற்கு மிகவும் நெருக்கமான தோழியோடு அல்லது கண்ணாடிக்கு முன் நின்றவாறு காதல் உணர்வைக் கடத்தும் உரையாடலுக்கு ஏடி என்ற விளி எத்தனை சுவையானது. ‘ஏடி பூங்கொடிஎன்ற விளிப்பு முடியவும் குழலிசை வரவேற்பு.  ‘ஏன் இந்த பார்வைஎன்பது விஜயாவின் குரலில் சிறப்பான விசாரிப்பு. ‘கோடி கோடியோ நீ கொண்ட ஆசைஎன்பதில் ஓர் இளநகை குரலில்.  ‘தேடி வந்த தெய்வம் யாரடி?’ என்ற கேள்வியில், காதல் பாய்கிறது

சரணங்களைக் குழலும், வயலினும் வழி நடத்த, இரண்டு அடிகள் முன்னாடி வேகமாகச் சென்று நாணத்தோடு மறைந்து கொள்ளப் பார்க்கும் தோழியை அதைவிட வேகமாகப் போய்ப் பற்றி நிறுத்தி முகத்தைத் திருப்பிக் கேட்பது போல் பாடுகிறார் விஜயா. ‘ஆடாத தோகை இசை பாடாத தேனீஎன்ற ஒயிலான தடத்திலிருந்து, ‘சுவை தேன் இல்லாத மலர் பூமி எங்கும் இலையேஎன்ற வரியும் தாளக்கட்டில் மேலும் அழகாக நடந்து, ‘அடி கண்ணே கதை என்னஎன்று நிறைவு பெறுகிறது. இந்தக் கடைசி வரி எல்லாச் சரணங்களிலும் இடம் பெறுவதும், அந்தக்கதைஎனும் சொல்லை அத்தனை ரகசியக் குரலில் விஜயா இசைப்பதும் சுவையைக் கூட்டுகிறது.

இரண்டாம் சரணத்தில்,  ‘ஓரக்கண்ணில் ஒரு ஜாடை செய்வதொரு அழகோஎன்று வேகமெடுக்கிறார் விஜயா. அந்த வரியைத் திரும்ப இசைக்கையில், அழகோவுக்கு எத்தனை அழகு சேர்க்கும் சங்கதிகள் ! ‘காளிதாசன் உன்னைக் காண வேண்டுமடி கண்ணே கதை என்னஎன்ற முடிப்பு மேலும் அழகூட்டி விடுகிறது

மூன்றாம் சரணம், ‘யாரோடு யாரோ மலர் யார் சூடுவாரோஎன்பதன் இசையார்ந்த சொற்கள் கண்ணதாசனைக் கொண்டாட வைக்கின்றன. ‘அதை சொர்க்கம் என்ற இடம் நிச்சயிப்பதென்னவோஎன்ற வரியில் கொஞ்சலும், கிண்டலும் பரிமாறுகிறார் விஜயா. இந்தச் சரணத்தில் மீண்டும் அதே கடைசி வரி தான் என்றாலும், ‘அடி கண்ணே கதை என்னஎன்பது வேறொரு தளத்தில் கொண்டு நிறுத்துகிறது பாடலை

சில குரல்களை எப்போதும் கேட்டுக் கொண்டாடுகிறோம். சில குரல்களை எப்போதோ கேட்கும் போது இன்னும் கொண்டாடுகிறோம். தமிழ்த் திரைப் பாடகர்கள் பலருக்கும் அருமையான பாடல்கள் வழங்கிய மேதை டி ஆர் பாப்பா.  

றைந்த என் தந்தை எஸ் ஆர் வி அவர்கள், கோபம் மிகும்போது கூட கோப்புகளில் எழுதும்போது கவிதை வரிகளால் தான்தவறுகளைத் திருத்திக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்துவார். உரத்துக் கேட்கும் ஓசையை விட, வாசிப்பில் ஒலிக்கும் இசை, கீழ்நிலை பணியாளர்கள் நொந்து கொள்ளாமல் தங்களை உயர்த்திக் கொண்டு கோப்புகள் தயாரிக்க உதவியிருக்கிறது. இசை அவர்களை ஈர்க்காத போது, அவரது ஓசை தான் அடுத்து அவர்களுக்கு வாய்க்கக் காத்திருந்தது.  

குழந்தைகளைக் கொண்டாடும் அவரது அழைப்பு, அரவணைப்பு எல்லாமே இசை கூட்டும் சொற்களாக இயல்பாகத் தெறித்து விழும். ஈதல், இசை எல்லோர் மீதும் பட வாழ்தல் என்பது அவரைக் குறித்த சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புஅவர் நினைவில் சுழல்கின்றது இந்த வார இசைத்தட்டு

(இசைத்தட்டு சுழலும் ….)

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]முந்தைய கட்டுரைகள் படிக்க: 

இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.