தந்தையைப் பற்றிய இசை நினைவலைகள் வாசித்த என் மைத்துனியின் கணவர் தோழர் நடராஜன், ‘உங்கள் அப்பா பாடல் பாடிய ஆடியோ கிடைக்குமா?’ என்று வாட்ஸ் அப்பில் கேட்டிருந்தார். சட்டென்று பதில் சொல்ல இயலாத ஏக்கம் சூழ்ந்தது. அப்போது அந்த சாத்தியங்கள் இல்லாதிருந்தது.
என் இளவயதிலிருந்து ஒலித்த அவரது பேச்சொலி, பாடும் குரல், அன்பின் அழைப்பு, அக்கறை மிகுந்த கண்டிப்பு… எல்லாம் இன்னொரு பிரதி எடுத்து யாருக்கும் பகிர்ந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளே ஒரு முடிவற்ற இசைத் தட்டாகச் சுழன்று கொண்டிருக்கிறது. என்ன பதில் சொல்ல…தமது மறைவை அடுத்துத் தமது மகன்கள், மகள்களுக்கு வழங்க, 90வது வயது நிறைவு நிகழ்ச்சியில் எடுத்திருந்த புகைப்படத்தை அவரே தேர்வு செய்து சொல்லிச் சென்றிருக்கிறார். உயிரோட்டமான அந்தப் புகைப்படத்தின் வழி அவரது குரலும் கேட்டுக் கொண்டிருக்கிறது, பாடல்களும்!
புகைப்படம் மட்டுமல்ல, ஐஸ் பெட்டிக்குச் சொல்ல வேண்டும் என்பதில் தொடங்கி, தாம் மறைந்தவுடன் குடும்பத்தினர் அதிர்ந்து போகாமல் அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டும், தகவல்கள் கொடுக்க வேண்டும், துணிமணிகள், தானங்கள், இறுதி காரியங்கள் செய்ய வேண்டிய முறைமைகள், பதின்மூன்றாம் நாள் வரை செய்ய வேண்டிய விஷயங்கள் எல்லாம், இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு நோட்டுப்புத்தகத்தில் தாம் சொல்லச் சொல்ல திருத்தமாக பத்து, பன்னிரெண்டு பக்கங்களுக்கு என் சகோதரர்களை எழுத வைத்துவிட்டிருக்கிறார் அவர் ! மிகுந்த மன நிறைவோடு, சக உயிர்கள் பால் பேதங்களற்று அன்பு கொண்டாடிய தமது வாழ்க்கையை, அமைதியாக நிறைவு செய்யவும் வாய்த்தது அவருக்கு.
இசை வாழ்க்கை கட்டுரை வாசித்த புதிய நேயர் ஒருவர் அன்போடு கேட்ட கேள்வி ஒன்றிற்கு நான் பூஜ்யம் மதிப்பெண் பெற்றுக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. ‘நீங்கள் இசை குறித்து எழுதிக் கொண்டிருப்பதால் உங்களைக் கேட்கிறேன்‘ என்று தொடங்கியது அந்தப் பெண்மணியின் ஆடியோ செய்தி. ‘குறிப்பிட்ட ராகம் எந்த உணர்வுகளுக்கு ஏற்ற பாடல்களுக்குப் பொருத்தமானது?’ என்று ஒரு ராகத்தின் பெயரைச் சொல்லிக் கேட்டார். உண்மையைச் சொல்லி விட்டேன், நேர்மையாக!
2004ல், பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி எனும் மாத இதழில், ஓமியோபதி மருத்துவர் பி வி வெங்கட்ராமன் எனும் அருமையான நண்பர் கொடுத்த டாக்டர் பி எம் ஹெக்டே அவர்களது நூலின் முதல் கட்டுரையை அடிப்படையாக வைத்து, ‘சிரித்து வாழ வேண்டும்‘ என்ற உடல் நலக் கட்டுரை எழுதி இருந்தேன், அதன் சுவாரசியத்தில், பிவிவி அழைத்துச் சொன்ன மருத்துவ ஆலோசனைக் குறிப்புகள் முன்வைத்து மேலும் இரண்டு கட்டுரைகள் வந்தன. பாரதி புத்தகாலயத்தின் மேலாளர் தோழர் நாகராஜன், உடல் நலக்குறிப்புகள் கட்டுரைகளை நூலாக்கம் செய்யலாமே என்று கேட்க, மருத்துவர் பிவிவி அவர்களோடு உரையாடல் நடத்தி, ‘நலம் நலமறிய ஆவல்‘ எனும் நூல் கொண்டுவந்தோம். அந்த நூல் இன்னமும் மகத்தான வரவேற்பு பெற்று வருகிறது. உடல் நலக் கட்டுரைகள் வரிசையில்,மேற்கொண்டு மூன்று புத்தகங்களும் வெளிவந்துள்ளன. அவையும் வாசகர் நன்மதிப்பைப் பெற்று வருகின்றன.
ஒரு நாள், நண்பர் ஒருவர் தமது கால் வீக்கம், வலிக்கு என்ன செய்யலாம் என்று கேட்டார், உரிய மருத்துவரிடம் போய்க் கேளுங்கள் என்றேன், நீங்கள் தான் உடல் நலக் கட்டுரைகள் எழுதுபவர் ஆயிற்றே, சொல்ல வேண்டியதுதானே என்று நையாண்டி செய்யத் தொடங்கிவிட்டார்.
இசை வாழ்க்கை கட்டுரைகள் எழுதத் தொடங்கும்போதே இப்படியான அச்சம் இருந்தது. காதலிக்க நேரமில்லை படத்தில், ஓகோ ப்ரொடொக்ஷன் டைரக்டர் செல்லப்பாவிடம், நடிகையின் அப்பா, ‘என் பொண்ணை வச்சுப் படம் எடுக்கறேன்னியே, ஃபோட்டோவாவது எடுத்தியா‘ என்று கேட்பார். என் இசை ஞானம் கிட்டத்தட்ட அந்த அளவு தான்.
பழைய நகைச்சுவை துணுக்கு நினைவுக்கு வருகிறது, மாப்பிளை வீட்டார், ‘பெண் வீணை வாசிப்பாளா?’ என்று கேட்பார்கள். அதற்கு, பெண் வீட்டார், ‘வீணை என்று எழுதினால் வாசிப்பாள்‘ என்று பதில் சொல்வார்கள். என் கதையும் அது தான்!
ஆனால், இசையோடு தானே நகர்கிறது வாழ்க்கை. ‘இன்பமும் துன்பமும் ஏற்றுக் கொண்டே நம்மைச் சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்‘ இசையெனும் தாய் தானே!
எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதை ஒன்றில் கண் பார்வையற்ற புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஒருவரைப் பற்றிய விவரிப்பு வரும். அவர் உலகில், வண்ணங்களைக் கூட அவர் ஸ்வரங்களாகப் பிரித்துப் புரிந்து கொள்வேன் என்பார். மஞ்சளுக்கு ஒரு ஸ்வரம். நீலத்திற்கு இன்னொன்று. மஞ்சளும் நீலமும் கலந்தால், பச்சை வருமல்லவா, இரண்டையும் சேர்த்த ஸ்வரம், ஸப, எனக்கு பச்சையை உணர்த்தும் என்பார். உலகத்தை இசையின் வழி பார்க்கும் அசாத்திய பார்வை மிகுந்த அவரை, உலகம் பார்வையற்றவராகப் பார்க்கும்.
தாவரங்களின் உலகம், பறவைகள், விலங்குகளின் உலகம் எல்லாமே இசையால் ஆனதாகப் பார்க்கிறவர்கள் உண்டு. மனிதர்கள் மட்டுமென்ன, இசையால் ஆனவர்களே. ஜலதரங்க இசைக் கருவியில் வெவ்வேறு அளவுகளில் தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கும் வரிசையான பாத்திரங்களைத் தேர்ச்சியாக இசைக்க வைக்கும் கலைஞர்கள் அருமையான இசையை வழங்க முடிகிறது. மனிதர்கள் உள்ளும் அதைப்போலவே அவரவர் வாழ்க்கைக் காலத்தில் வெவ்வேறு பொழுதுகளில் வெவ்வேறு உணர்வுகள் நிரம்பியிருக்க அதற்கேற்ப இசை ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஜலதரங்கம் என்றதும், சில ஆண்டுகளுக்குமுன் வாசித்த கட்டுரை நினைவுக்கு வந்தது. 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிண்ணங்கள், சீனக் களிமண் கிண்ணங்கள். இரண்டு தலைமுறைகளாக பத்திரமாக வைத்திருந்து, 85 வயதிலும் அமர்க்களமாக ஜலதரங்கம் வாசிக்கும் அய்யம்பட்டி எஸ் கணேசன் அவர்களைப் பற்றிய கட்டுரை அது. அவருடைய தகப்பனார் சுப்பையர், மைசூர் அரண்மனையில் வாசித்த அதே இசைக்கருவி. அவருக்கு அதை 1890ம் ஆண்டில் வழங்கியவர் அவரது குரு குன்றக்குடி கிருஷ்ண அய்யர்.
கர்நாடக சங்கீதத்தை ஜலதரங்கத்தில் வாசிக்கத் தெரிந்த இந்தியாவின் மூவரே மூவரில் ஒருவர் அய்யம்பட்டி கணேசன் என்கிறது கட்டுரை. இந்துஸ்தானியிலும் வாசிக்கும் மேதைகள் உள்ளனர். பார்க்க இலகுவானது, ஆனால், பராமரித்து வைத்து, உரிய அளவுகளில் தண்ணீர் நிரப்பி ஸ்வரங்கள் சரியாகப் பிடிபட்டு வாசிக்க வேண்டுமானால், சங்கீதம் முறைப்படி கற்று வாய்ப்பாட்டுக்காரர் ஆக ஓரளவு திறன் பெற்றிருந்தால் தான் இந்தக் கருவியை சிறப்பாக இசைக்க முடியும் என்கிறார் திரு கணேசன்.
உதகையில் ஒரு முறை கச்சேரிக்குச் சென்றபோது, அவர் எதிர்பார்த்த இசை புறப்படவில்லை கிண்ணங்களில் இருந்து! குளிர்ந்த நீர் விடுத்த சவால் அது என்று புரிந்ததும், வெந்நீர் தருவித்து நிரப்பி கச்சேரி நிகழ்த்தி அசத்தி இருக்கிறார் கணேசன். (https://www.thehindu.com/entertainment/music/tamil-nadus-lone-jalatharangam-artiste-anayamapatti-s-ganesan-talks-about-the-art-of-creating-music-with-water-filled-bowls/article24772039.ece ).
தேவேந்திர சிவாச்சாரியர், வானொலி நிலைய வித்வான் ஆகத் திகழ்ந்த ஜலதரங்க இசைக் கலைஞர். எத்தனையோ விருதுகள் பெற்றபோதும், சிங்கப்பூர் ரசிகர்கள் வழங்கிய நீரிசை வேந்தர் என்ற விருதை மிகவும் சிலாகிக்கிறார், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் 15 ஆண்டுகள் கச்சேரிகள் நிகழ்த்திவிட்டு 1978ல் தாயகம் திரும்பியிருக்கும் சிவாச்சாரியர். அவரது தந்தை, இவர் இளவயதில் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட போதும், இவரது தமக்கை செல்லம்மாளுக்குத் தான் ஜலதரங்கம் வாசிக்கக் கற்பித்தாராம். வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டிருந்த இவர் பத்து வயது நிறைவடையும் போது அக்காவிடம் எப்படியோ குழைந்து பேசிக் கற்றுக் கொண்டு சிறப்பான ஜலதரங்க இசைக் கலைஞராக பரிணமித்திருக்கிறார். கும்பகோணத்துப் பாத்திரங்களில் முதலில் வாசித்தவர்கள், பின்னர் சீனக் களிமண்ணால் ஆன கிண்ணங்களைப் பொருத்தமாகக் கண்டடைந்துள்ளனர். ( https://www.thehindu.com/news/national/tamil-nadu/a-master-of-jaltarang/article7160817.ece )
14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு பெண்மணி, அந்தக் காலத்தில் தமது இசையார்வத்தைத் தெரிவிக்க, அவருடைய அன்புக் கணவர் மியூசிக் அகாதமியில் பதிவு பெற வைத்து, அவருடைய திறமையை மேலும் வளர்த்தெடுக்க உறுதுணையாய் நின்றிருக்கிறார் என்பது எத்தனை மகத்தான விஷயம். ஜலதரங்க இசைக் கலைஞராக மியூசிக் அகாதமியின் முதல் தங்க மெடல் விருது பெற்ற அவர், மடிசார் மாமி என்ற பட்டப்பெயரோடு திகழ்ந்த சீதா துரைசாமி அய்யர்.
2014ல் வெளியான திருமணம் என்னும் நிக்கா திரைப்பட டைட்டில்களில், அமரர் சீதம்மாள் துரைசாமி அய்யர் எனும் இவருக்கும் படத்தில் பங்களிப்பு செய்த வேறு சில இசைக் கலைஞர்களோடு சேர்த்து நன்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஜிப்ரான் அவர்களது அருமையான இசையமைப்பில் படத்தில் இடம் பெற்ற சுவையான பாடல்களில் சீதா அவர்களது சிறப்பான ஜலதரங்க இசையோடு தொடங்கும் ‘கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்‘ கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்.
பாடலை முதன்முதல் தொலைக்காட்சியில் பார்த்தபோதே, கொலு வைக்கும் காட்சி, புராண பாத்திர வேடங்களில் சிறுவர்கள், நாட்டியம் பயிலும் சிறுமிகள், குறுக்கும் நெடுக்கும் வந்து போய்க்கொண்டிருக்கும் எல்லோரும் பாடலில் எங்காவது கலந்து விடும் பாங்கு, கதாநாயகன் – நாயகி ஜெய், நஸ்ரியா நசீம் நடிப்பு, வண்ணக்கலவை ஓவியங்களின் பின்னணி என்று பாடல் கூடுதல் கவன ஈர்ப்பாக அமைந்துவிட்டது. பாடல் ஆசிரியர் பார்வதி மிகுந்த பாராட்டுக்கு உரியவர்.
ஜலதரங்க இசையோடு தான் பாடல் திறக்கிறது. ‘கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் என் செல்லக் கண்ணனே வா‘ என்பது அழகான பல்லவி. ‘தி(த்)தி(த்)த தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா‘ அடுத்த வரி. அப்போது கடம் வாசிப்பில் தாளக்கட்டு, ஆஹா…ஆஹா… ‘அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட, இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட‘ என்று நடன அசைவுக்கான பதங்களில் நறுக் நறுக் என்று தெரிகின்றன அடுத்த வரிகள் இரண்டும். ‘என் கண்ணனே வாடா வா‘ என்ற கெஞ்சுதல் அடுத்து, ‘விஷமக் கண்ணனே வாடா வா‘ என்ற கொஞ்சுதல். பல்லவிக்குள்ளேயே உச்சரிப்பில் அத்தனை வேலைப்பாடுகள், இழைத்தல், குழைதல் எல்லாம் உள்ளத்திற்கு நெருக்கமாக இசை வார்க்கின்றன. கண்ணனை அழைத்தபின் புல்லாங்குழலைத் தனியே அழைக்க வேண்டுமா என்ன, குழலிசை அப்படி வருடிக் கொண்டே இருக்கிறது பாடல் முழுவதும்.
ஜலதரங்கம் வழி நடத்திப் போகத் திறக்கும் முதல் சரணத்தின் தொடக்க வரிகள் உயர்ந்த ஸ்தாயிக்கு அமைக்கப்பட்டிருப்பது ரசனையைக் கூட்டுகிறது எனில், காதலனும், காதலியும் போட்டி போட்டுக்கொண்டு உரையாடுவதன் ஜதியில் பாடல் வரிகள் நகர்கின்றன. தாளக்கட்டில் நடக்கும் நடையில், அத்தனை அம்சமாக நிறைவு பெறுகிறது சரணம்.
இரண்டாம் சரணத்தின் வழியில் குழலின் பொழிவு. இப்போது தொடக்க வரிகள் சாதாரண கதியில் அமைய, அடுத்த வரிகளில் ஸ்தாயி உயர்த்தி அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சுவை. பாடகர் விஜய் பிரகாஷ் அவர்களுக்கு ஏற்ப அப்படி அமைந்தாற்போல் தோன்றுகிறது.
சாருலதா மணி, சாதனா சர்க்கம், டாக்டர் கணேஷ், விஜய் பிரகாஷ் நால்வரும் பாராட்டுக்குரியவர்கள். கற்பனை மிகுந்த காட்சி அமைப்புக்கான இசைப்பாடல் அத்தனை ரசமாகப் படைக்கப்பட்டிருப்பது ஜிப்ரான் இசையமைப்பு. ‘உன் சிரிப்பு சரத்தில் மகிழ மரத்தில் பூ தைக்கிறேன்‘ என்ற சரணத்தின் கடைசி வரி வித்தியாசமாக வந்திருக்கிறது. சீதா அம்மாள் ஜலதரங்கம் பாடல் நிறைவிலும் நெஞ்சில் நிற்பது.
அண்மைக் காலங்களில் பண்பலையில் அதிகம் ஒலித்துக் கொண்டிருக்கும் காதல் பாடல்களில், ‘ஆஹா காதல் ‘ உள்ளத்தில் சுழன்று கொண்டிருப்பது. மறைந்த அன்புக் கவிஞர் நா முத்துக்குமார் அவர்களது சிறப்பான பாடல்களில் ஒன்று. யுவன் சங்கர் ராஜாவின் அருமையான இசையில் உருவான ‘மூன்று பேர் மூன்று காதல்‘ படத்தின் பாடல்கள் யாவும் அவர் எழுதியது தான்.
நந்தினி ஸ்ரீகர் அவர்களது மென்குரலில் காதல் சிறகடிக்கும் பாடல் வரிகளில் முத்துக்குமாரின் கற்பனையும், சொல் தேர்ச்சியும் மீண்டும் அவர் இழப்பை உணர்த்திக் கொண்டிருக்கிறது. வயலினும், குழலும் காதல் ஈரத்தை அம்சமாகக் கடத்திக் கொண்டு வந்து சேர்க்கிறது.
‘ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே‘ என்ற முதல் வரியை அடுத்து, ‘ஆளை மிரட்டிக் கள்ளத்தனம் காட்டுதே‘ என்ற இடத்திற்கு மாறுவது எத்தனை அழகாய் ஒலிக்கிறது. பல்லவியின் கடைசி வரி, ‘வினாத் தாளில் வெற்றிடம் திண்டாடுதே காதல் கேட்கும் கேள்வியால்‘ என்பது தனிச்சுவை.
சரணங்களில் முத்துக்குமாரின் கொண்டாட்டக் காதல், சரளமாகச் சொற்பூக்களைக் கொட்டி ஆசீர்வதிக்கிறது. முதல் இரண்டு வரிகளின் குழைவான மெட்டில் ததும்பும் காதல், அடுத்து, ‘தனனன னானா தனனன னானா‘ என்ற சந்தத்திற்கு, ‘விழுந்தது நானா எழுந்திடுவேனா எழுந்திடும் போதே விழுந்திடுவேனா‘ என்ற உள்மனக் கேள்வியில் பூரிப்பு அடைகிறது. ‘உன்னைப் பார்ப்பதை நானறியேன்‘ என்பது சங்க இலக்கியக் காதலின் நீட்சி தான், ஆனால், ‘பார்க்கிறேன் வேறறியேன்‘ என்பது கவிஞரின் முத்திரை. இப்போது ‘தன்னன னானா தன்னன னானா‘ சந்தங்களில் மீண்டும் உள்மனக் கேள்விகளின் பூரிப்பு. அதிலிருந்து நழுவி நழுவிச் சுழலும் சொற்களில் பல்லவியைச் சென்று தொடுமிடத்தில் நந்தினியின் குரலினிமை எங்கோ கொண்டு செல்கிறது.
இரண்டாவது சரணத்தின் தொடக்க வரிகளில் காதலின் முகவரி சொல்லப்படுகிறது. அடுத்து, தனனன னானா தனனன னானா சந்தத்தில், ‘தொலைந்தது நானா கிடைத்திடுவேனா, கிடைத்திடும் போதே தொலைந்திடுவேனா‘ ! ‘பெண்கள் மனம், ஊஞ்சல் இல்லை, ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை‘ என்ற வரிகள் கவன ஈர்ப்பு. ஊஞ்சல் இல்லை என்பதில் போடும் சங்கதியும் இழைப்பும் ஆஹா….. மீண்டும் உள்மனக் கேள்விகளின் பூரிப்பில் வரிகள். ‘காதலின் பொன்னூஞ்சலில் அசைவது சுகம் சுகம்‘ என்று நிறைவடையும் சரணம், ஆஹா காதல் என்று பல்லவியைச் சென்றடைகையில் ரசிகரும் சேர்ந்து கரைகிறார் காதலில்.
ரசனையில் தான் தழைக்கின்றன கலைகள். கலைகள் வாழ்க்கைக்குப் பொருள் சேர்க்கின்றன. இசை இதில் முக்கிய இடத்தில் இருக்கிறது. கதையை, கவிதையை, ஓவியத்தை, நாடகத்தை எல்லாம் இசை வருவித்துத் தருகிறது ஒரு மாய மந்திர ஜாலம் போல! இசையின் மடியில் ஆற்றிக் கொள்வோம், தேற்றிக் கொள்வோம் எந்தத் துயரையும்!
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]
முந்தைய கட்டுரைகள் படிக்க:
இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள் – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
///புகைப்படம் மட்டுமல்ல, ஐஸ் பெட்டிக்குச் சொல்ல வேண்டும் என்பதில் தொடங்கி, தாம் மறைந்தவுடன் குடும்பத்தினர் அதிர்ந்து போகாமல் அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டும், தகவல்கள் கொடுக்க வேண்டும், துணிமணிகள், தானங்கள், இறுதி காரியங்கள் செய்ய வேண்டிய முறைமைகள், பதின்மூன்றாம் நாள் வரை செய்ய வேண்டிய விஷயங்கள் எல்லாம், இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு நோட்டுப்புத்தகத்தில் தாம் சொல்லச் சொல்ல திருத்தமாக பத்து, பன்னிரெண்டு பக்கங்களுக்கு என் சகோதரர்களை எழுத வைத்துவிட்டிருக்கிறார் அவர் !///
வியப்பாக இருக்கிறது ஐயா
அரிதினும் அரிதான மனிதர் தங்கள் தந்தையார்.
மன உறுதியும், வாழ்ந்த வாழ்வில் மன நிறைவும் பெற்ற அற்புத மனிதர்.
வணங்குகிறேன்.
அபூர்வமான அன்பு மற்றும் நட்பிற்க்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய மாமனிதர். அம்மனிதனின் மகன் இசைப்பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
Your father had been the sincere follower of Bhagavad Gita. That is the secret of his success.
You are also making journey in the same in path. All the best 💐🙏.
Please delete in
கண்ணுக்குள் பொத்திக்கொள்ள. மட்டுமல்ல நெஞ்சுக்குள் பொத்திவைக்கத் தக்க பாடலை யும் இசைக்கோர்ப்பின் சிறப்புகளையும் பதிவிட்ட தோழர் வேணுகோபாலன் இந்தப்பத்தியில் மேற்குறித்த. இசைச்சித்திரத்தின் அத்தனை நேர்த்திகளையும் வாழ்வில் அனாசயமாக அமைத்துக் கொண்ட வேணுகோபாலனின் தந்தையாரின் படத்தையும் வெளியிட்டு இருந்தால் தந்தையாரையும் நெஞ்சுக்குள் பொத்திவைக்க ஏதுவாக இருக்கும். நெருக்கடி மிகுந்த வாழ்வைக் கடக்க. இசையின் சக்கரங்கள் சுழலட்டும்.வாழ்த்துகள்.