இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்

பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான். 

குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா? 

பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா? 

அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.

உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை புரியாது. 

உள்ளம் குழலிலே ஒட்டாது. 

உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சு குழலிலே ஒட்டும். குழல் பாடும் 

– மகாகவி பாரதி (வசன கவிதை)

 

முதலில் எல்லோர்க்கும் (ஜூன் 21) உலக இசை தின வாழ்த்துக்கள் !

இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்தும், புதிதாக அறியவந்து முந்தைய கட்டுரைகளைத் தேடி எடுத்துப் படித்தும் அருமையான குறுஞ்செய்திகள் அனுப்பி வருவோர்க்கு எப்படி நன்றி சொல்ல….. “புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே…இதைத்தானே சொல்ல வருகிறீர்கள்?”  என்று சிலர் உடனே பதில் போட்டிருந்தனர்.

பாடப் புத்தகங்களும் பாட்டு புத்தகங்களும் என்ற பகுதியை வாசித்ததும்… ஆஹா….எத்தனை எத்தனை அனுபவங்கள் வாட்ஸ் அப்பில் வாசிக்கக் கிடைத்தன.  எழுத்தாளர் ஜனனி ரமேஷ் அவர்கள், பாட்டு புத்தகத்தில் முழு கதை இருக்காது, காதல் கல்யாணத்தில் முடிந்ததா, கதாநாயகன் உயிர் பிழைத்தானா, மீதி வெள்ளித் திரையில் என்று விட்டிருப்பார்கள் என்று அமர்க்களமாக நினைவூட்டினார். அது மட்டுமல்ல, அதே கண்கள் பாட்டு புத்தகத்தில், படத்தைப் பார்த்தவர்கள் தயவு செய்து முடிவை யாருக்கும் சொல்லாதீர்கள் என்று போட்டிருந்ததாக ஞாபகம் என்று மிகச் சரியாக எழுதி அனுப்பி இருந்தார்.

நானும் அந்தப் படத்தைப் பார்த்தவன் தான். அப்போது மூன்றாம் வகுப்பு மாணவன். நான் எங்கே முடிவை யாரிடமும் போய்ச் சொல்வது, அந்தக்  காலத்தின்  திகில் படமான அதைப் பார்த்தது தான் தெரியும், அடுத்து மூன்று நாள் காய்ச்சல் அடித்துக் கிடந்தேன்.

Thangai - Wikipedia

அதே கண்கள் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வருகையில் ஒரு காகிதம் கொடுத்ததும் நினைவில் இருக்கிறது, அது ஒரு போட்டி. ஐந்தோ என்னவோ கேள்விகளுக்கு பதில் சொன்னால் பரிசு. ‘லவ் லவ் எத்தனை அழகு இருபது வயதினிலே’ பாடல் காட்சியில் சுழன்றாடும் பெண்கள் எத்தனை பேர் என்ற கேள்வி ஒன்று. அதைக் கண்டுபிடிக்க இன்னொரு முறை செல்வீர்கள் அல்லவா, அதற்குத் தான்!  ‘பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாலும், டும்டும்டும் மேளம் கொட்டி சேதி சொன்னாலும்’ கூட உங்களால் கண்டுபிடிக்க முடியாது. ‘கண்ணுக்குத் தெரியாதா, பெண்ணுக்குப் புரியாதா’ என்றாலும் முடியாது, அந்தச் சுற்று சுற்றுவார்கள் நடனமாடும் பெண்கள்…

படத்தைப் பார்க்க வைப்பதற்காக எத்தனை எத்தனை ஈர்ப்புகள் அந்த நாட்களில்…

உறவினர் வீட்டுக்குச் சென்ற அதே சின்னஞ்சிறு  வயதில், பெரிய சைஸ் சீட்டுக்கட்டு வைத்து அடுக்கி அடுக்கி பார்த்துக் கொண்டிருந்தார் என் ஒன்றுவிட்ட பெரியப்பா. அப்படியே அவரை நைஸ் பண்ணி வாங்கிப் பார்த்தால், அது சீட்டுக் கட்டு அல்ல…பாட்டு புத்தகம். தங்கை படத்தின் கதையமைப்பை ஒட்டி, சீட்டுக் கட்டு போன்ற வடிவில் கொஞ்சம் அதிக விலையில் அச்சிடப்பட்ட புத்தகம். அப்புறம் உனக்கே உனக்கு தரேன் என்று திரும்ப வாங்கிக் கொண்டுவிட்ட பெரியப்பா இப்போது இல்லை. அந்தப் பாட்டு புத்தகம் அதே பளபளப்போடு உள்ளத்தில் பக்கம் பக்கமாகச் சீட்டுக் கட்டுபோல  இன்னும் விரிந்துகொண்டு தான் இருக்கிறது, அதைக்  ‘கேட்டவரெல்லாம் பாடலாம், என் பாட்டுக்குத் தாளம் போடலாம்’.

“பாட்டு புத்தகத்திற்கு எங்கே போகிறது, அப்பா விடுவாரா?” என்று தொடங்கும் இன்னொரு கடிதம் (ஆம், வாட்ஸ் அப்பில் எத்தனை உள்ளன்போடு பெரிய செய்தியை அனுப்பி இருக்கிறார் அந்த வாசகி), “அப்பா இல்லாத நேரத்தில், நானும் என் அண்ணனும் ரேடியோவில் சினிமா பாட்டு ஒலிக்கும் நேரம் நோட்டுப் புத்தகமும் கையுமாக அருகில் நின்று கேட்போம். பி பி ஸ்ரீனிவாஸ் பாட்டைக் கேட்க கிறுக்குப் பிடித்த அலைந்த காலம்…எனக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம், ஆனால், அவனுக்கு வேகமாக எழுத வராது, அதற்காக சமரசம் செய்து கொள்வான், நானும் அதை வைத்துக்  கொஞ்சம் சாதித்துக் கொள்வேன்….” என்று போகிறது.

ஆயிரம் பாட்டுக்குமேல் நானும் எழுதி வைத்திருந்தேன் தோழர் என்று இன்னோர் எழுத்தாளர் உற்சாகமாகப் பேசினார். பாட்டு புத்தகத்திற்கு அலைந்த கதை எல்லாம் மறக்க முடியுமா என்று நிறைய நண்பர்கள் நெக்குருகி செய்தி அனுப்பி இருக்கிறார்கள்.

50, 60 பாட்டு புத்தகங்கள் வைத்திருந்தேன், மலரும் நினைவுகளாக எல்லாம் தூண்டி விட்டீர்கள் என்று உருகி எழுதிய மற்றோர் அன்பர், விலை மதிப்பற்ற பரிசையும் அளித்தார். மூன்றாவது கட்டுரையில் இடம் பெற்றிருந்த ‘ஆஹா இன்ப நிலாவினிலே’ (மாயா பஜார்) பாடலை அவரே புல்லாங்குழலில் இசைத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொண்டார். என்ன ஓர் உள்ளம் தோய்ந்த வாசிப்பு.  கடந்த டிசம்பர் மாதம் அவரோடு வாய்த்த அற்புதமான நட்பு குறித்த சுவாரசியக் கதை பின்னர். (பாட்டுப் புத்தகத்திலேயே முழு கதை சொல்லாதபோது,  நாங்க மட்டும் சொல்லிருவோமா…). லிங்கராசு என்ற பெயர் மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  உலக இசை தின வாழ்த்துகளை இன்று காலையில் பரிமாறியவர் அவரே.

Ore Naal Unai Naan Song | Kamal | Sripriya | SPB, Vani Jayaram ...

‘அடடா, இந்தப் பாட்டு புத்தக சமாச்சாரம் என் வாழ்வில் எப்படி விட்டுப் போச்சு’ என்று – விருந்தில் ஐஸ் கிரீம் வைத்திருந்தார்களா, கண்ணில் படாமல் போச்சே என்று ஏமாந்தவர் போல வருந்தினார் புதிய வாசகர் ஒருவர்.  இருபது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எதிர்பாராத நாள் ஒன்றில் மீண்டும் ஒலித்த நட்பின் குரல் அது.  இதை சாத்தியமாக்கியது செல்லப்பா சார் என்ற கட்டுரை.    (இந்த மாதம் 10ம் தேதி அன்று மறைந்த அந்த மாமனிதர் செல்லப்பா, ஒரு சமையல் சக்கரவர்த்தி என்பதைவிடவும் சாமானிய மனிதராகத் தம்மைத் தக்கவைத்துக் கொண்டவர், ஓர் இசை ரசிகரும் கூட).  அதன்பின் இசை கட்டுரை தொடரையும் வாசித்த அந்த நண்பர், ஒரு தெருவைக் கடப்பது குறித்த சுந்தர்ஜி கவிதையில் தாமும் ஆழ்ந்து போனார்.  பாடல்களைக் கேட்பதும் அப்படித்தானே என்று வினவினார்.

ஆம், ஒரு பாடலைக் கேட்பது வெறும் பாடலை மட்டும் கேட்பது ஆகாது. அந்தப் பாடல் முதன்முதல் நம்மிடம் எப்படி வந்தடைந்தது என்பதில் இருந்து, அதை நாம் கடக்க நேரிட்ட வேறு ஒரு தருணத்தில் கூடவே நம்மைக் கடந்து சென்ற விஷயங்களையும் சேர்த்தே ஒலிக்கிறது நம்முள் சுழலும் அந்தந்தப் பாடலுக்கான இசைத்தட்டு.

Roja Poo (From "Oru Maanavi En Kaathali") by Malaysia Vasudevan ...

அந்த நண்பர் எழுதுகிறார்: “வேலையில் சேர்ந்த சமயம் மூன்றே நாட்கள் மட்டுமே கழித்த இடம். ஆனால்,  ‘ஒரே நாள் உனை நான் நிலாவில்’ (இளமை ஊஞ்சலாடுகிறது)  பாட்டைக் கேட்டால்….நினைவுச் சிறகுகள் பறந்து திருவெண்ணெய் நல்லூர் ரோடு ரயில்வே ஸ்டேஷன் சென்றுவிடும். பரந்து கிளைகள் விட்டு ஆடிக் கொண்டிருக்கும் மரங்கள்…ஆளரவமற்ற ஸ்டேஷன்..குவார்ட்டர்ஸ் என்று மூன்று ஓட்டு வீடுகள்… ரயில்வேக்கே உரிய வண்ணத்தில். இதுதான் ஞாபகம் வரும்”.

மனிதர்களது நினைவுகளும் கூட அப்படித்தான். அண்மையில் மலேசியா வாசுதேவன் அவர்களது பிறந்த நாள் கடந்து சென்றது. அவர் பெயரைக் கேட்டதும், சிலருக்குக் ‘கோடை காலக் காற்றே’ வந்து வீசும். அடுத்து, ‘வா வா வசந்தமே’ தானே! அப்புறம், ‘ஆனந்தத்  தேன்காற்று தாலாட்டுதே’ தான்….’ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு’ போன்றது அவரது நினைவு. முதல் மரியாதை படத்தின் வலுவான அம்சங்களுள் ஒன்று மலேசியாவின் குரல்.  எத்தனை எத்தனை தளங்களில் அமைந்தவை அவரது பாடல்கள். கிண்டல், கோபம், சவால், காதல், உருக்கம், கிறக்கம்  என எந்த பாவத்தையும் கொண்டுவரும் ஆற்றல் இருந்தது அவரது தொண்டைக்கு. எத்தனை மாறுபட்ட உணர்வுகளையும் அசாத்திய நேர்த்தியோடு ஒலித்தது அவரது குரல்.

மிக அண்மையில், அந்நாளைய அற்புத பாடகர் ஏ எல் ராகவன் மறைவு, அவரை ரசித்துக் கேட்டிருப்போரைத் துயரமடைய வைத்துவிட்டது. . ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று ரசிகர்களிடமிருந்து பகிர்வுகள் குவிந்தன. ‘அன்று ஊமைப் பெண்ணல்லோ’, ‘புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை’, ‘என்ன வேகம் சொல்லு பாமா’ என்று அவரது குரல் தனித்தும், இணைந்தும் ஒலித்த பாடல்கள் பலவும் காலத்தால் அழியாதவை. அவருக்கு நமது புகழஞ்சலி உரித்தாகிறது.  மென்குரலே நீ வாழ்க!

இசை வாழ்க்கை எனும்போது, வாழ்க்கை முழுவதும் இசையே உணவாய், உடையாய், உறைவிடமாய் வாழ்ந்த மனிதர்கள் இவர்கள். இந்த மனிதர்களது நினைவுகள் சூழும் போது, நமது உள்ளத்தில் இருக்கும் இசைப்பெட்டி அவரவர்க்கான பாடலை ஓடவிடுகிறது. அவரை முதலாவதாக எப்போது கவனித்துக் கேட்டோம், எந்தப் பாடலின் எந்த வரியில் அவர் நம்முள் குடியேறிவிட்டார் என்ற நினைவுக் குறிப்புகளும் சேர்ந்தே பதிவு செய்து வைக்கின்றன நமது நியூரான்கள். ஒரு பாடல் ஒலிக்கும்போது, ரேடியோவுக்கு வெளியேயும் கூடவே ஒலித்த குரல்களின் உற்சாகம் உள்பட பாட்டுக்கு ஒரு வரலாறு உருவாகி விடுகிறது.  அது வாட்டியும் எடுக்கிறது, இன்பத்தை ஊட்டியும் விடுகிறது. கண்டடைவோம் அந்த அனுபவங்களுக்கான பாடல்களை…

(இசைத்தட்டு சுழலும் ……)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: [email protected]

தொடர் 1 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – ஐ வாசிக்க…

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – ஐ வாசிக்க…

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/