தபலா பிரசாத் அவர்கள் வாசிப்பு உள்ளிட்ட விஷயங்கள் தாங்கிவந்த கடந்த வாரக்கட்டுரையை, அவருடைய மகன் தபலா ரமணா அவர்கள் வாசிக்க அனுப்பி வைக்க, ஆஹா, எதிர்பாராத அன்பின் பெருமழையாக அவரது உரையாடல் அமைந்தது. ‘அப்பாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்‘ என்ற ஒற்றை வாக்கியம், அத்தனை இன்பம் அளித்தது. வாத்தியங்களின் வாசிப்பைக் கொண்டாடுவது அந்தக் கலைஞர்களைச் சிறப்பிப்பது ஆகிறது!
கடந்த வாரக் கட்டுரையில் தேர்வு செய்திருந்த பாடல்கள் ரமணா அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் சொன்னேன், ‘எல்லோரும் உங்கள் தந்தையின் வாசிப்பு என்றால், பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா பாடலைத் தான் வாசிக்கும்படி அவரைக் கேட்கிறார்கள்‘ என்று. அதற்கு ரமணா சொன்ன பதில் சிலிர்க்க வைப்பது.
“நினைத்தாலே இனிக்கும் படம், அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு மட்டும் போட்டுக் காண்பிக்கப்பட்ட நேரத்தில் என்னை அப்பா அழைத்துப் போயிருந்தார், சின்ன வயசுதான் அப்ப எனக்கு ! வாஹினி ஸ்டூடியோ அரங்கில் படம் ஓடிக் கொண்டிருக்க, பாரதி கண்ணம்மா பாட்டு சீன்ல அந்த தபலா வாசிப்பு வர்றப்ப, பக்கவாட்டில் இருந்த வாசல் ஒன்றின் அருகே வந்து நின்றபடி, எம் எஸ் வி அண்ணன், ‘பிரசாத்….’ அப்படின்னு உணர்ச்சி வசப்பட்டு உரக்கக் குரல் கொடுத்தார் பாருங்க, அப்படியே சிலிர்த்துப் போயிருச்சு … மறக்கவே மறக்காது சார்…”
கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகுமா? இப்படியான பாராட்டு ஓர் உண்மையான கலைஞரின் வாழ்க்கையில் அவரது மகனால் இத்தனை நினைவு கூரப்படும் எனில், அவருக்குள் ஏற்பட்டிருக்கும் பரவசத்தை விவரிக்க வார்த்தை உண்டா, என்ன? அந்தக் காலத்தில் ஷொட்டு கொடுத்தார் என்று கதைகளில் எழுதி இருப்பார்கள்.
‘வார்த்தை சொல்லும் வாத்தியம்‘என்பாராம் மெல்லிசை மன்னர். இசைக்கருவிகளின் மீதான அவர் காதல் தான் எத்தனை அபாரமானது! எம் எஸ் வி அவர்கள் மறைந்த போது, தி இந்து ஆன் லைனில் ஒரு தொடர் உரையாடல், அவரது மேதைமை குறித்து
நிகழ்ந்ததைப் பார்க்க நேர்ந்தது.
https://www.thehindu.com/specials/live-chat/live-chat-msv-remembered/article7421855.ece
புகழ் பெற்ற வீணைக் கலைஞர் ரேவதி கிருஷ்ணா அப்போது அங்கே குறிப்பிட்டிருந்த விவரிப்பு தான் அது. பாச மலரின் நிகரற்ற பாடலான ‘மலர்ந்தும் மலராத‘ பாடலைத் தாம் வீணையில் வாசிக்கக் கேட்டுக் கண்ணீர் உகுத்து, தாம் அந்தப் பாடலுக்கு இசையமைக்கையில் என்ன பாவத்தை விரும்பி இருந்தாரோ, அது தமது வீணையிசையில் ஒலிக்கக் கேட்டேன் என்று நெகிழ்ந்து பாராட்டினார் என்று அந்த உரையாடலில் பதிவு செய்திருந்தார் ரேவதி கிருஷ்ணா.
2014ம் ஆண்டு ஜூலை 12 அன்று மாலை அவரைப் பார்த்திருக்கிறோம் – அல்ல, அவரது அபார வீணை வாசிப்பைக் கேட்டிருக்கிறோம் – அல்ல, அல்ல, இசை வனத்தில் எல்லாம் மறந்து இளைப்பாறி இருந்தோம்!
அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியதை, இப்போது மீண்டும் மெயிலில் இருந்து கண்டெடுத்து வாசிக்கையில், இசை வாழ்க்கையின் பகுதியாகவே உணர முடிந்தது. அதன் சில வரிகள் மட்டும் இங்கே:
மதிப்பிற்குரிய கலைமாமணி வீணை வாணி ரேவதி கிருஷ்ணா அவர்களுக்கு
ஆஹா… அடடா… அடேங்கப்பா… ஆத்தாடி… ஆத்தாடி…. என்னவென்று சொல்ல!
ஜூலை 12 அன்று திருமண வரவேற்பு என்று மட்டுமே தெரியும். திகட்டாத இசையமுது பருகும் ஓர் இனிய மாலையாக அது உருப்பெறும் என்பது உள்ளபடியே எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
நானும் என் வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரியும் விருப்பத்தோடு நாங்களாக இன்றைய மாலைப் பொழுதை எங்கள் குடும்ப நண்பர்கள் மருத்துவர்கள் பி வி வெங்கட்ராமன்–ஜெகதா தம்பதியினருடைய மூத்த மகள் நிரஞ்சனா பாரதி திருமண வரவேற்புக்கு வருகை தருவோரை வாசலில் நின்று வரவேற்று மகிழ்ந்திருந்தோம்.
அவ்வப்போது எங்கள் காதுகளைத் தீண்டிச் சீண்டிக் கொண்டிருந்த வீணை இசை இன்பத்தை ஒவ்வொரு அற்புதப் பாடல் முடிய முடிய இழந்து கொண்டிருக்கிறோம் என்பது எட்டு மணிக்கே உறைத்தாலும், எங்கள் பணியை விட்டு உள்ளே வர உள்ளம் இசையவில்லை.
ஒன்பதரைக்கு உள்ளே வந்தமர்ந்தோம்…அதற்குப் பிறகான ஒரு மணி நேரத்துக்கும் கொஞ்சம் கூடுதலான நேரம் உங்கள் பாடல்களை அப்படியே உருகி உருகிக் கேட்டிருந்தோம்…
தேன் சிந்தியது வானம், உங்கள் வீணையில் (பொண்ணுக்குத் தங்க மனசு)
விழி கதை எழுதியது, உங்கள் விரலசைவில் (உரிமைக் குரல்)
ஆகாய வெண்ணிலா தரைமீது வந்தது…(அரங்கேற்ற வேளை )
சஹானா சாரல் தூவ, சஹாரா பூக்கள் பூத்தது…(சிவாஜி)
மலரோடு தனியாக நின்றான் காதலன் (இரு வல்லவர்கள்)
திருத்தமான உச்சரிப்பு போல் உங்கள் வேக வாசிப்பில் வீணை பேசவும், பாடவும் செய்தது எங்களைக் கொண்டாடித் திளைக்க வைத்தது.
நன்றி..
உள்ளபடியே, அன்றைய நிகழ்ச்சியில் அப்படி வாசித்தார். இந்த மின்னஞ்சலை அவர் பார்த்திருப்பார் என்ற கால இடைவெளி கொடுத்து அவரை அழைத்தபோது, பேரானந்தம் கொண்டார்.
யூ டியூபில் அல்லது அவரது முக நூல் பக்கங்களில் ரேவதி கிருஷ்ணா வாசிப்பை எடுத்துக் கேட்டு ரசிக்கலாம்.
டி ஆர் மகாலிங்கம் அவர்களது ‘சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே‘ பாடலை (இசை வாழ்க்கை 21ல் பேசி இருந்தோம்), அந்தத் தொகையறா மட்டுமல்ல, சரணங்களில் வரும் ராக ஆலாபனை உள்பட வாய்ப்பாட்டுக்காரர் பாடுவது போலவே அசாத்தியமாக வாசிக்கிறார் ரேவதி கிருஷ்ணா.
பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களது மென்குரலை, ‘பொன் என்பேன்‘ பாடலில் அப்படி இதம் பதமாக வழங்க முடிவது வியக்க வைக்கிறது.
‘வார்த்தை பேசும் வாத்தியம்‘ என்று மெல்லிசை மன்னர் இப்படியான கருவிகளை ஏன் கொண்டாடினார் என்பதும் புரிகிறது. அடுத்தவர்களைப் பாராட்டும் வாழ்க்கை தான் இசை வாழ்க்கை என்பதும் புரிகிறது.
வீணை பேசுமா எனில், பாக்கிய லட்சுமி படத்தில் இடம் பெற்று, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடலைப் பாடி, அதனால் பி சுசீலாவுக்குப் பெரும் புகழ் கிடைக்கச் செய்த ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே…’ கேட்கவேண்டும்!
ஒரே ஒரு தடவை கேட்டால் போதும், அப்புறம், அதன் இசைத்தட்டு நம் உள்ளத்தில் சுழலத் தொடங்கிவிடும். அப்படியான ஓர் அசாத்திய அனுபவம் அது.
படத்தின் திரைக்கதையில் அந்த இடத்தில், ஓர் இளம் விதவை பாடுவது போன்ற இடத்திற்கான பாடலில், இனிப்பும் கசப்பும், இன்பமும் துன்பமும், வியப்பும் அதிர்ச்சியும் ஒரு சேரக் கலந்து வருவதன் வெளிப்பாட்டை, மெல்லிசை மன்னர்கள் வீணை, ஷெனாய், வயலின் இன்ன பிற வார்த்தை பேசும் வாத்தியங்கள் வைத்து இசைக்கோவை அமைத்திருந்த அசாத்திய பாடல் அது. அது மட்டுமா…முக்கியமான இன்னொரு கருவி, இருக்கட்டும், அதற்குப் பிறகு வருவோம்.
வீணை வாசித்தது யார், அவர் ஓர் அபாரமான இசைக்கலைஞர். அவரைப் பற்றிய செய்திகளுக்கும் பிறகு வருவோம். முதலில் பி சுசீலா!
முதலில் இதமான வீணையின் வாசிப்பு தொடங்குகிறது. துயரச் சாயலைக் கதையின் பின்புலத்தை இலேசாக ஒரு கவிதை போல் தீட்டுகிறது வயலின் இழைப்பு. பாடல் முழுவதுமே இந்த இலாகாவை வயலின் பொறுப்பில் தான் விட்டிருக்கின்றனர்.
வீணையும், வயலினும் சொல்ல வந்த முன்கதைச் சுருக்கத்தை முடிக்குமிடத்தில், ஒரு நேர்க்கோடு இழுப்பது போல், ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி‘ என்று கதையை விவரிக்க நுழையும் இடத்திலேயே சுசீலா கல்லையும் கரைத்துக் குழைக்கும் குரலில் எடுக்கிறார் பல்லவியை.
அதை அன்போடு ஆசீர்வதித்து, ‘மேலே சொல்லு‘ என்கிறது வீணை. ‘மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை, காரணம் ஏன் தோழி‘ என்று போகிற இடத்தில், அந்த ‘இல்லை‘ என்பதில் எத்தனை இருக்கிறது, சுசீலா அழுத்தும் விதத்தில்! அப்புறம், ‘காரணம் ஏன் தோழி?’ என்று இரண்டாம் முறை எடுப்பது, மனிதர்கள் உரையாடலில், வியப்போ, அதிர்ச்சியோ, துயரமோ இருந்தால் முதன்முறை வைக்கும் கேள்வியை மீண்டும் கேட்போமே அப்படியான கணக்கில் மெட்டு அமைத்ததில் சொற்களை வைத்தானே கவிஞன், அவருக்கும் அப்புறம் வருவோம், இப்போது சுசீலா தான்!
பல்லவி அங்கே முடிவதில்லை, வீணையின் மிகச் சிறு துணுக்கு வாசிப்பின் தூண்டலில், ‘இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்பவர் யார் தோழி?’ என்ற அபாரமான கேள்வியை அசாத்தியமான அழகில் இசைக்கிறார் சுசீலா, ‘இன்பம் கனவில் துன்பம் எதிரில், காண்பது ஏன் தோழி‘ என்று அதற்கான பதிலையும் தந்துவிட்டு, ‘காண்பது ஏன் தோழி‘யை இரண்டாம் முறையும் பாடுமிடத்தில் உள்ளத்தின் வலியை நெருக்கமான மருத்துவரிடத்தில் வைக்கும் கேள்வியைப் போல் எழுப்புகிறார். அதை ஓர் அளவான ஆலாபனையால் மேலும் கூர்மைப் படுத்துகிறார்.
இந்த ஆலாபனை அந்த இடத்தில் மட்டுமல்ல, பின்னர் சரணங்கள் நிறைவு பெறுமிடத்திலும், விம்மும் உள்ளத்தை வாகாகக் கரம் பற்றிப் பல்லவியில் கொண்டு சேர்த்து விடுகிறது.
பிறகு பல்லவியின் முதல் வரியைத் தொட்டு முடித்ததும், மீண்டும் பாடுகளைத் தான் வாங்கிக் கொள்கிறது வீணை, என்னமாகக் கதையைச் சொல்லிப் போகிற வாசிப்பு. ஓர் உற்ற தோழன் போலும் வயலின் கூடவே நடை போட்டுச் செல்கிறது.
‘மணமுடித்தவர் போல் அருகினில் ஓர் …’ என முதல் சரணத்தை, வீட்டு முற்றத்தில் அமர்ந்து லயித்துப் பூ தொடுக்கிற பெண் போலும் தொடங்குகிறார் சுசீலா. வடிவு கண்டேன் தோழியில், ஒரு சிறு ஏற்றத்தில் எத்தனை சுகம் வைக்கின்றனர் இசையமைப்பாளர்கள்.
அதே ரீதியில், ‘மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலை இட்டார் தோழி‘ என்று மேலும் அடுத்த உயரத்திற்குக் கொண்டு செல்ல, அந்த சுகத்தை அப்படியே பெற்றுக் கொள்ளும் ஷெனாய் அதை மேலும் விரிவாக்கி சுசீலாவிடமே திருப்பி வழங்கவும், அடுத்த வரிகள் எல்லாம்….ஆஹா…ஆஹா…. ‘வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்‘ என்றதும் கேட்போரே சாய்ந்து விடுவோம்! ‘மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்துவிட்டார் தோழி‘ பிறகு? ‘பறந்து விட்டார் தோழி‘ அந்த ஒயிலான அளவான ஆலாபனை, அப்புறம் பல்லவி.
இரண்டாம் சரணத்தை நோக்கிய திசையில் வீணை, வயலின் இசையோடு ஷெனாயும் சேர்ந்து கொள்வது, பாடலின் கருப்பொருளை மேலும் உள்ளத்திற்கு நெருக்கமாக்கி விடுகிறது. ‘கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி‘ அப்படியே முதல் சரணத்தின் அதே ஏற்றம் பெறுமிடம். ‘கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி‘ என்ற கேள்விக்கு ஷெனாய் பதில் சொல்கிறேன் என்று தொடங்கி, இழைத்து இழைத்து உருக வைத்து, ‘உனக்கே தெரியுமே, என்ன சொல்ல‘ என்கிற மாதிரி விக்கித்து நின்றுவிடுகிறது.
https://youtu.be/dCfjx50IXvg
அதையடுத்த வரிகளில் கவிஞன் ஆட்சி தான்: ‘இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம். தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்‘ என்ற இடத்தில், நெகிழ்த்திக் கண்களை ஈரப்படுத்தி விடுகிறார் சுசீலா. மயங்குது எதிர்காலம் இரண்டாம் தடவை பாடவும், அந்த அளவான அழகான ஆலாபனையின் கரம் பற்றிப் பல்லவி.
தோழி என்ற சொல் வரும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வகைகளில் அந்தச் சொல்லை சுசீலா உருமாற்றிக் கொடுத்துக் கொண்டே இருப்பார். பாடல் நிறைவு பெற்ற பின்னும் சிந்தும் வீணையின் முத்துகள் நெஞ்சை நிறைக்கின்றன.
என்ன சொற்கள்….என்ன சொற்கள்….’நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை‘ என்று எழுதிய வரிகள் செருக்கின் பாற்பட்டு வந்து விழுந்தவை அல்ல, எல்லாக் காலத்திற்குமான கவிதைத் தமிழ், இசைத் தமிழ் அவர் இசைத்த தமிழ். இந்தப் பாடல், கண்ணதாசனின் மகத்தான ஆக்கங்களில் ஒன்று.
பாடல் காட்சியில் சௌகார் ஜானகியின் முகபாவமும், புருவ அசைப்புகளும், உடல்மொழியும் அத்தனை அம்சமாக அமைந்திருக்கும் எனில், வீணை வாசிக்கும் ஈ வி சரோஜாவின் விழிகள் பேசிக்கொண்டே இருக்கும்.
இப்போது பாடலை மனத்தில் நினைத்துக் கொள்ளுங்கள், இரவு நேரமாக இருந்தால் மிக உகந்தது, பாடலை மெல்ல ஓடவிடுங்கள்…. அதாவது வீணையின் நாதம் தொடங்கிய மாத்திரத்திலிருந்து! அந்த மிருதங்க வாசிப்பு!
உறுத்தாது, மேல் சென்று ஒலித்துவிடாது, பாடலின் கதியைச் சற்றும் தான் உயர்வு நவிற்சி செய்துவிடாது, மென் பாதங்களின் நடைபோலும் அந்த மிருதங்க வாசிப்பு, பாடல் முழுக்க!
மெல்லிசை மன்னர்களே, இந்தப் பாட்டுக்கான தாளக்கருவியை எந்த கணத்தில், மிருதங்கம்தான் என்று தேர்வு செய்தீர்களோ, அந்த நேரப்பொழுதிற்கு என் முதல் வணக்கம்!
அப்படியானால், பாடல் முழுக்கப் பேசும் அந்த வீணையை வாசித்தது யார்? வித்வான் ஆர் பிச்சுமணி அய்யர்!
96 வயது நிறை வாழ்வு வாழ்ந்து அடுத்தடுத்த தலைமுறை ஆர்வலர்களுக்கு வீணை வாசிப்பு கற்பித்த சிறப்பான இசை மேதை ! நாகப்பட்டினத்தில் பிறந்தவர், இளவயதிலேயே, திருச்சி குப்பண்ணா எனும் புகழ்பெற்ற இசைக்கலைஞரிடம் கற்றுக் கொண்டு உயர்ந்த கலைமாமணி. தமது மனைவிக்கு வீணை வாசிப்பை அசாத்தியமாகப் பயிற்றுவிக்க வந்த அவரைக் கண்டெடுத்த திரையுலக ஜாம்பவான் கே சுப்பிரமணியம் அவர்கள், அவரைத் திரை இசையுலகிற்கு அறிமுகம் செய்வித்தாராம்.
பின்னாளில், அவருடைய பேரன் பி கண்ணனுக்கு வீணை இசை கற்பித்தவர் பிச்சுமணி அய்யர். ‘உன் பாட்டனார் என் மீது பொழிந்த அன்புக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன்‘ என்று நெஞ்சுருகச் சொல்வாராம்.
2020ல் அவரது நூற்றாண்டு சமயத்தில், புகழ் பெற்ற மிருதங்கக் கலைஞர் உமையாள்புரம் சிவராமன் அவர்கள், தஞ்சாவூர் பாணி வாசிப்புக்குப் பேர் போனபிச்சுமணி அய்யருக்குத் தாம் பக்கவாத்தியம் வாசித்த பெருமை மிக்க காலத்தை நினைவு கூர்ந்திருக்கிறார். லயம் பிசகாத சுநாதம் அவரது வாசிப்பு என்று புகழ்ந்திருக்கிறார். ‘சங்கீத கலா நிபுண‘ விருது உள்ளிட்டுப் பல விருதுகள் பெற்றவர் பிச்சுமணி அய்யர்.
மிகச் சிறந்த ஆசிரியர் என்று கொண்டாடுகின்றனர் அவர் சீடர்கள். ஒற்றை ஒற்றையாகத் தான் வகுப்பு, நேரடி கவனம், அசாத்திய பொறுமை, நேர்மையான நடத்தை, கலையின் மீதான அளப்பரிய விசுவாசம். அத்தனை விஷய ஞானம்.
சம்பூர்ண ராமாயணத்தில் வரும் ‘வீணைக் கொடியுடைய வேந்தனே‘, ‘இன்று போய் நாளை வாராய்‘ எனும் புகழ் பெற்ற பாடல்களில் மின்னும் வீணை இசை, பிச்சுமணி அய்யர் அவர்கள் வாசிப்பு தான்!
தன்னடக்கமாக வாழ்ந்த அந்த வீணை இசைக்கலைஞர் மறைந்தது ஜூன் 2015ல். ஒரு தற்செயல் ஒற்றுமை. அசாத்திய திறன் பெற்றிருந்தும் எளிமையாகவே வாழ்ந்த மெல்லிசை மன்னர் மறைந்தது ஜூலை 2015.
பாடல் நிறைவு பெற்றபின்னும் ஒலிக்கின்ற வீணைத் தந்திகள் போலவே, வாழ்ந்து மறைந்தபின்னும் பேச வைக்கிறது இசை. நமக்குள் நின்று பேசுகிறது. கவலைகள் கப்பிக்கிடக்கும் உள்ளறையில் கொஞ்சம் கண்ணீர் பெருக வைத்துத் தூய்மைப்படுத்திப் பளிங்காகத் துடைத்துக் கொடுக்கிறது. நல்ல விஷயங்களைக் கொண்டாடக் கற்பிக்கிறது. தத்தம் வாழ்க்கையை, சாப நிலையென்ற நினைப்பொழித்து வரமாக உணரவைத்துக் கொண்டாடப் பழக்குகிறது.
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]
முந்தைய கட்டுரைகள் படிக்க:
இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள் – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
உங்கள் கட்டுரை அழகிய வீணை இசை போல என் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்குறது. இசைக்கு இசைந்த இயல். அனுபவித்து வாசிக்க வைத்து விட்டீர்கள. நன்றி. மரு. ந. ஆ. ஜெயவேலன்.
உங்கள் கட்டுரை அழகிய வீணை இசை போல என் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்குறது. இசைக்கு இசைந்த இயல். அனுபவித்து வாசிக்க வைத்து விட்டீர்கள. நன்றி. மரு. ந. ஆ. ஜெயவேலன். அடுத்த கட்டுரையை ஆவலோடு எதுர்பார்க்கிறேன்.
சபாஷ் நன்று.
//ஒற்றை ஒற்றையாகத் தான் வகுப்பு, நேரடி கவனம், அசாத்திய பொறுமை, நேர்மையான நடத்தை, கலையின் மீதான அளப்பரிய விசுவாசம். அத்தனை விஷய ஞானம்.//
வணங்கத் தோன்றுகிறது ஐயா