முந்தைய கட்டுரையை, வீணை வித்வான் திரு பிச்சுமணி அய்யர் அவர்களது மகன் வாசித்தால் சிறப்பாக இருக்குமே என்று விரும்பி, எப்படியோ இணைய தளத்தில் வாசித்த கட்டுரைகளில் ஒன்றில் இருந்து அலைபேசி எண் தட்டுப்பட்டு, அதில் வாட்ஸ் அப் இருக்க இன்னும் ஆர்வத்தோடு புக் டே இணைப்பைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அடுத்த சில நிமிடங்களில் கட்டுரையைத் திறந்து பார்த்திருக்கின்றனர் என்பதும் பார்த்து அகமகிழ்ந்தேன்.
அவரை அழைத்துப் பேசுவோம் என்று அந்த நம்பரை டயல் செய்தேன், ஒரு பெண்மணியின் குரல் ஒலித்தது, மறுமுனையில் ! அறிமுகப்படுத்திக் கொண்டு, கட்டுரை பற்றிக் குறிப்பிடவும், ‘மிகவும் சிறப்பாக இருந்தது, எழுதியது நீங்கள் தானா, இசை பற்றியது என்றால் விரும்பிப் படிப்பேன், யாரோ அனுப்பி இருக்கிறார்களே என்று இணைப்பை கிளிக் செய்து பார்த்து, இசை பற்றியதாக இருக்கவே உடனே வாசித்தேன்‘ என்றார். நான் உடனே, ‘இது விஸ்வநாதன் சார் நம்பர் என்று கருதி அழைத்தேன், அவரது தந்தைக்கு ஓர் எளிய புகழஞ்சலி படைத்தது அவர் வாசிக்கட்டும் என்று…’ என இழுத்தேன். ‘இது அவரோட நம்பர் தான், நான் அவருடைய மனைவி, வசந்தா…. வசந்தா விஸ்வநாதன்‘ என்று சொல்லி நிறுத்தினார்.
‘அவர் கடந்த ஆண்டு, திடீர் என்று ஏற்பட்ட மாரடைப்பில் காலமாகி விட்டார்…’ என்று சொல்லவும், என்ன பதில் சொல்ல என்றறியாமல் கண்ணீர் மல்க தவித்தேன். ‘இப்போது மகள் வீட்டுக்கு வெல்லிங்டன் வந்திருக்கிறேன்‘ என்றார். பிறகு, தமது அன்புக் கணவர் பற்றியும், மகன் ஸ்ரீராம் தமிழிலும் இசையிலும் கொண்டிருக்கும் ஆர்வம் பற்றியும் நிறைய பகிர்ந்து கொண்டார்.
தமது ஏழாவது வயதில் மியூசிக் அகாதமி போட்டியொன்றில் பரிசு பெற்றவர் விஸ்வநாதன். வீணை கற்றுக் கொண்டது மட்டுமின்றி, யுவ வீணா என்ற புதிய பாணி இசைக்கருவியை வாசிப்பதில் அசாத்திய திறன் பெற்று விளங்கியவர். மறைவதற்கு மிகச் சிறிது நேரத்திற்கு முன்பாகக் கொண்டு தமது யுவ வீணா கையிலெடுத்து இசைத்துக் கொண்டிருந்தார் என்று சொன்னார் வசந்தா. அது வாழ்க்கையின் முற்றுப் புள்ளி அல்ல, உயிரிழையைப் பக்குவமாக இசையிழை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டுவிட்ட தருணம் அது என்று படுகிறது. காற்றில் கலக்கிறது காற்று. உயிர்க்காற்று தான் வாழ்வெனில், இசைக்காற்று பின் வேறென்ன, இசை வாழ்க்கை என்று வேறெதைப் பேசிக் கொண்டிருக்கிறோம்!
கடந்த வாரம், எங்கள் இல்லத் திருமணம் ஒன்று. என் வாழ்க்கை இணையர் தோழர் எம் ராஜேஸ்வரியுடைய தமக்கை கங்கா நடராஜன் மகனுக்குத் திருமணம். ஷிவ்ராம் – ஸ்வேதா சரஸ்வதி திருமணத்தில் அருமையான நாதஸ்வர கோஷ்டி – கூடுதல் சிறப்பு, சாக்ஸஃபோன்!
முதல் நாள் மாலை சில அருமையான பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன, திருமண வேலைகளின் ஓட்டத்தினோடே நேரம் சற்று திருடித்திருடி ரசித்து ஓடிக் கொண்டிருந்தோம். திருமண நாளன்று காலையில் மாடிப்படியேறி வருகையில் காதில் விழுந்த தவில் இசை, வித்தியாசமான துள்ளாட்டமாக ஒலித்தது. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் ஆஸ்தான இசைக்கலைஞர் கிருஷ்ணமூர்த்தி அவர் என்று பின்னர் அறிய முடிந்தது. முகூர்த்த நேரத்திற்கு முன்பும் பின்பும் பிளந்து கட்டினர்.
மணப்பெண் வீட்டாரில் ஒருவர் முதல் நாள் மாலையில் இருந்தே இசையின் துளிகள் ஒன்றுவிடாமல் வாங்கி உள்ளே நிரப்பி திக்குமுக்காடி ரசித்துக் கொண்டிருந்தார், அவரது பரந்த உள்ளம் போலவே அவர் திறந்த பர்ஸிலிருந்தும் எடுத்து வெகுமதி அளித்து அந்த எளிய கலைஞர்களை நெகிழ வைத்துக் கொண்டிருந்தார். வாத்திய கோஷ்டி அருகே அமர்ந்து அவர் தட்டுப்பாடின்றி ரசிக்க ஓர் இருக்கை நிலைநிறுத்தி இங்கே அமர்ந்து கேளுங்கள் அய்யா என்று கேட்டுக் கொண்டேன், அப்போது தெறித்த அவரது கண்களின் மின்னல் மறக்க முடியாதது, லட்சுமிநாராயணன் எனும் அந்தப் பெரியவர் பூனாவில் இருந்து வந்திருந்தார், திருமணத்திற்கு (பூனா லேனா என்று பெயர் வைத்துவிட்டேன் அவருக்கு) !
சாக்ஸஃபோன் கலைஞர் நாதஸ்வர இசையோடு கலந்து அமுதம் வழங்கிக் கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் தன்னிசையாகப் பொழிய ஆரம்பிக்கையில், ‘சின்னஞ்சிறு கிளியே‘ என்றெடுத்தார். ஆஹா….ஆஹா… ஒவ்வொரு சரணமாக வந்து கொண்டிருந்தார், லேனா சார் எங்கிருந்தோ கண்களால் நான் எங்கிருக்கிறேன் என்று என்னைத் தேடிக் கொண்டிருந்தார், அவர் தேடுவார் என்றறிந்து அதன் முன்பே அவரருகே சென்று நிற்கவும், கைகளால் அந்த ரசத்தின் ரசனையை எனக்குக் காற்றின் இடைவெளியில் கடத்தினார்.
நானோ, சாக்ஸஃபோன்காரர் எப்போது, ‘கன்னத்தில் முத்தமிட்டால்…’ வரிகளுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தேன், வந்தார், மகாகவியின் கவிதை வரிகளின் மீதான தமது காதலைத் தமது இசைக்கருவியில் வழிய விட்டார், தன்னன்ன தானன என்ற வாசிப்பிற்குப் பிறகு ஒரு விரற்கடை அளவு இழைப்பு கொடுத்து, மீண்டும் தன்னன்ன தானன என்று எதிர்பார்த்தபடியே எடுக்கிறார் மனிதர்….அப்புறம், ‘உள்ளம் தான்…..’ என்பதில் சங்கதிகள், ‘கள்வெறி கொள்ளுதடி‘ என்பதில் ஒரு குழைவு. அப்புறம் அடுத்தடுத்த வரிகளும் ! நிறைவாக ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்…’ அதில் உச்சமாக, ‘என் கண்ணில் பாவை அன்றோ…’ அருமை..அருமை…
திருமணத்திற்கு வருகை தந்தோருக்கு வழங்கிய ‘இசை வாழ்க்கை திறப்பு‘ எனும் எளிய நூலின் பிரதிகளை நாதஸ்வர இசைக்குழுவினருக்கும் கொண்டு கொடுத்தோம். தவில் கலைஞர் தான் குழுவின் அமைப்பாளர். அவரிடம் அன்று கேட்க முடியாதிருந்த ஒரு கேள்வியை இரண்டு நாட்களுக்குப் பிறகு அழைத்துக் கேட்டபோது அவருக்கு வியப்பாக இருந்திருக்கக் கூடும். என்ன கேள்வி அது?
முகூர்த்த நேரத்தில் தாலி கட்டி முடித்து கெட்டி மேளம் வாசித்துத் தணிந்து முடித்தபின், மெல்ல ஒரு பாடலை நாதஸ்வர கலைஞர் எடுக்க முற்படுகையில் தவில் கலைஞர் ஏதோ சைகையால் அதைத் தவிர்க்குமாறு காட்டியதை நான் கவனித்துவிட்டேன். அது ஓர் அருமையான இசைப்பாடலின் ஆரம்ப ஆலாபனை, ஏன் அந்தப் பாட்டை எடுக்கக் கூடாது என்று நாதஸ்வரக்காரர் யோசித்த மிக மிகச் சிறிய கால இடைவெளியை, இன்னொரு தவில்காரர் தமது வாத்திய இசையால் நிரப்பி, நிறுத்தி, நாதஸ்வரக்காரர் எடுத்த வேறு பாட்டுக்கு ஏற்ப தாளக்கட்டு வாசிக்கத் தொடர்ந்தது திருமண நாள் கச்சேரி. எஸ் ஜானகியின் புகழ் பெற்ற சிங்கார வேலனே பாட்டின் ஹம்மிங் தான் அவர் வாசிக்க முற்பட்டிருந்தார்.
‘ஏன் அதை நிறுத்தி விட்டீர்கள்?’ என்று அலைபேசியில் தவில்காரரை கேட்டபோது, ‘சில கல்யாண வீடுகள்ல, சட்டென்று சினிமா பாட்டு வாசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா என்று கேட்பார்கள், அதற்காகத் தான், ‘மாடு மேய்க்கும் கண்ணா‘ மாதிரி கொஞ்சம் பாடிட்டு – நீங்க கூட எதிர்த்தால நின்னு ரசிச்சுப் பார்த்தீங்களே – அப்புறம் திரைப்பாடல்கள் வரலாம்னு தான்‘ என்றார்.
அப்படியெல்லாம் இப்போதும் யாரும் பார்க்கிறார்களா என்ன என்று அவரைக் கேட்டேன். ஆனால், எத்தனை கவனமும், அக்கறையும் இந்தக் கலைஞர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது வியப்பானது. அடுத்து சின்னஞ்சிறு கிளியே வாசித்தவரை நினைத்துக் கொண்டேன்.
சாக்ஸஃபோன் கலைஞர் சுதாகர், நெல்லூரில் இருந்து வந்து வாசித்து விட்டுச் செல்பவர். அலைபேசியில் அழைத்துப் பேசவும் பேரானந்தம் கொண்டார். நாதஸ்வர இசையோடு கலந்து வாசிப்பதில் உள்ள நுட்பங்கள் பற்றிக் கேட்டேன், உண்மை தான், சிரமம் தான், அனுசரித்து வாசிக்க வேண்டும் என்று சொன்னார்.
உடனே, கணேசன் அனுப்பி வைத்த கட்டுரை நினைவில் தட்டுப்பட்டது. யார் கணேசன்? இணைய தளத்தில் தீக்கதிரில் வந்த கட்டுரை பார்த்து, நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு என்னைக் கண்டெடுத்த கல்லூரி வகுப்புத் தோழன், அவன் அனுப்பிய மெயிலில் வந்த கட்டுரையின் தலைப்பு, ‘பெண்களாலும் வாசிக்க முடியும்‘ என்பது.
தினமணி நாளேட்டின் ஞாயிறு கொண்டாட்டம் இணைப்பில் 2013ல் சி வ சு ஜெகஜோதி என்பவர் எழுதி இருந்த அருமையான குறுங்கட்டுரை. பாண்டிச்செல்வி எனும் பெண், மறைந்த தமது தந்தை கருப்பையா அவர்களது கனவை நிறைவேற்றும் வேட்கையோடு எல்லாத் தடைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு சாக்ஸஃபோன் கலைஞராக உருவெடுத்திருப்பவர்.
https://www.dinamani.com/weekly-supplements/sunday-kondattam/2013/oct/20/
கட்டுரையின் வரிகளைப் பாருங்கள், நாதஸ்வரத்தோடு சேர்ந்து சாக்ஸஃபோன் வாசிப்பது பற்றி சுதாகர் சொன்னதற்கு பதில் இதில் கிடைக்கிறது: சாக்ஸஃபோன் என்றால், எத்தனை எத்தனை இளங்கலைஞர்கள் வாசிக்கின்றனர், அன்பாக!
மிகப் பழைய படங்களிலேயே இசையமைப்பாளர்கள் இந்த ரசமான இசைக்கருவியை அம்சமாகப் பயன்படுத்தி இருப்பதைக் கேட்க முடியும். எம் எஸ் வி ரசிகர்களது இணையதளத்தில் பாடல்களின் பட்டியலே போட்டிருந்தார் அவரது ஆழ்ந்த பற்றாளர் ஒருவர். ‘முத்து நகையே உன்னை நானறிவேன்‘ (ஆஹா…ஓஹோ), ‘மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும்‘ என்று போகிறது அந்த வரிசை.
எனக்குத் தோன்றியது, சூரிய காந்தி படத்தின், ‘நான் என்றால் அது அவளும் நானும்‘ என்ற அருமையான பாடல். (பாடல் தான் அருமை, கருத்துகள், ஆணாதிக்க நெடி நெருடுபவை). எஸ் பி பி அவர்களின் ஒயிலான பாடல்களில் ஒன்று அது. ஒரு நிகழ்வில் நாம் நுழைந்து நமக்குத் தெரிந்தவர் யாராவது இருக்கின்றனரா என்று இங்குமங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கையில், சட்டென்று ஒரு பன்னீர் சோடா உடைத்து நம்மிடம் நீட்டுவதைப் போல, அந்தப் பாடலையே, சாக்ஸஃபோன் வைத்துத்தான் திறந்து கொடுக்கிறார் மெல்லிசை மன்னர். ஆஹா, அந்தத் திறப்பே அலாதியானது, பாடலுக்கான சூழலில் நம்மைக் கொண்டு இறக்கிவிடும். மேதைகளே உங்களுக்கு எத்தனை வணக்கங்களும் செலுத்தத் தகும்.
மேற்கத்திய இசைக்கருவிகளில் தமிழ்த் திரையருவியை விழச் செய்த பாடல்களில், சந்திரோதயம் படத்தின் பாடலை, மேற்சொன்ன சாக்ஸ் பட்டியலில் அந்த எம் எஸ் வி ரசிகர் குறிப்பிட்டிருந்தது மிகவும் பிடித்திருந்தது.
பாடகர்கள், காதலர்களின் மயக்க உணர்வுகளை அப்படி அபாரமாகப் பாடி இருக்க, அந்த மயக்கத்தின் கிறக்கத்தில் ரசிகர்களைத் தவிக்க விடுமாறு தேர்வு செய்திருப்பார் எம் எஸ் வி, இசைக்கருவிகளை. அய்…..யோ என்பார்களே சிலர், ஓராயிரம் அய்யோ போடவைக்கும் ரீங்கார இசைக்கோவை அந்தப்பாடல். இல்லாவிட்டால், ஆர் சிவகுமார் எனும் வாசகர் (அவர் யாரோ, அவருக்கும் சிறப்பு வணக்கம்), எம் எஸ் வி மறைந்த மறுநாள் தி இந்து ஆங்கில நாளேட்டில் ஆசிரியர்க்குக் கடிதங்கள் பகுதியில் கேட்க மிகவும் இனிமையான அவரது பாடல்களின் வரிசையில் இதைக் குறிப்பிட்டிருப்பாரா?
https://www.youtube.com/watch?v=YJ5-82jqN5A
காதலுக்கான மென் களத்தை, அதாவது, வாகாகத் துள்ளிவர ஏற்ற கம்பளத்தை வயலின்களும், எட்டியெட்டிப் பார்க்கும் அக்கார்டியன் துணுக்குகளும், பூத்தூவி வரவேற்கும் குழலிசையும் கொஞ்சிக்கொஞ்சி வளர்த்தெடுக்க, இதயத்தை ஈரப்படுத்தும் பன்னீர்த் துளிகள் போல் சிதார் சிந்தும் முத்துகளில் என்னமாகப் பல்லவியை எடுக்கிறார் பி சுசீலா!
‘எங்கிருந்தோ ஆசைகள், எண்ணத்திலே ஓசைகள்‘ என்ற முதலடியை எடுக்கும் போதே, இந்தப் பாடல் வரிகளில் சங்கதிகள் அநாயாசமாக தொடுத்துக் கொடுக்க இருப்பதன் முகவரியைத் தெரிவித்து விடுகிறது அவரது குரல். ‘என்னென்று சொல்லத் தெரியாமலே நான் ஏன் இன்று மாறினேன்?’ என்ற அவரது பதில் தெரிந்த கேள்வியை அணைத்துப் பெற்றுக் கொள்ளும் வயலின், அவரது குரலை ஒரு சுற்று சுற்றி அவரிடமே தருவது போலப் பெற்றுக் கொண்டு சுசீலா திரும்ப அந்த வரிகளை மேலும் சங்கதிகளோடு விவரிக்க, சிதார் தனது அன்பை மேலும் சிந்த, அந்த சுவாரசியமான இடத்தில் டி எம் சவுந்திரராஜன், ‘ஆசை வரும் வயது‘ என்று நுழையும் வருகை எத்தனை மெல்லுணர்வுகளின் கூட்டுச்சுவை, ‘அய்யோ‘ சொல்லாமல் எப்படி!
அதோடு போகிறதா, ‘ஆசை வரும் வயது, உந்தன் வயது‘ என்பதில் வயது எனும் இடத்தில் கொஞ்சம் அளவான இழைப்பு,’பேசும்..’ என இழுத்து, ‘இள மனது‘ என்று ஒரு மிக நுண்ணிய இடைவெளி கொடுத்து, ‘எந்தன் மனது‘ என்று விடுக்கும் இடத்தில் அந்த மனது கொள்ளும் ஆனந்தத்தை அளப்பது போன்ற சங்கதிகளில் விரித்து, அந்த இன்பத்தில் திளைக்கையிலேயே, ‘ஆடவன் பார்வையில் ஆயிரம் இருக்கும், மாதுளம் நாளொரு தூதுகள் அனுப்பும்… என்னென்ன சுகம் வருமோ?’ என்று மேலும் சுவை கூட்டிக் கொண்டு போய், நிறுத்தி, ‘தேவி‘ என்று செப்பும் விளி இருக்கிறதே, அய்யோ .சொல்லாமல் எப்படி?
அங்கிருந்து பல்லவிக்குச் செல்கிறார் டி எம் எஸ், கூடவே வயலின்களும், இன்ன பிற வார்த்தை சொல்லும் வாத்தியங்களும் உடன் வர, ‘நான் தான் உன்னை மாற்றினேன்‘ என்று . பல்லவியை அவர் முடிக்கவும், அதை அப்படியே பற்றிக் கொள்கிறது சாக்ஸஃபோன்… ஆஹா….ஒரு நூறு அய்யோ போடவேண்டிய இசைத்தூவல் அது. பாடகர்கள் பாடுவதன் இழைப்பை அந்தக் கருவி, மனச்சீலையில் தூரிகை தொட்டு வேகமாக வரைவது போலிருக்கிறது அழியாத சித்திரமாக! கச்சேரிகளில் டிரம்பெட் வாசிப்பைப் பார்க்கிறேன் அந்த இடத்தில், மெல்லிசை மன்னர் என்ன கருவியைப் பயன்படுத்தினார் என்று அறிந்தவர்கள் சொல்லவேண்டும்.
சுசீலா நுழைவு அந்த இடத்தில், அடுத்த அய்யோ போடவைக்கிறது. ‘மாலை வரும் மயக்கம்….’ அதோடு விடுவாரா, ‘என்ன மயக்கம்….’ என்று சங்கதிகளில் கேட்போரை மயக்குகிறார். ‘கா……லை‘ என்பதில் அவர் எடுக்கும் நீட்சி, நகராது வாட்டி எடுக்கும் நேரத்தின் காட்சி ! ‘வரும் ..வரைக்கும்.இல்லை உறக்கம்‘ என்பதிலும் கொஞ்சுகின்றன சங்கதிகள்.
அதன்பின், டி எம் எஸ், முந்தைய சரணத்தில் எடுத்த அதே மெட்டில், ‘பூவிதழ் மேலொரு பனித்துளி இருக்க, நானதைப் பார்க்கையில் நூலென இழைக்க‘ என்று காதலின் தவிப்பைப் படம்பிடிக்கும் விதத்தில் எங்கோ கொண்டு சென்று, ‘என்னென்ன அதிசயமோ?’ என்ற சொற்களை, பூப்பந்தைத் தரையில் வேகமாகத் தட்டித் தட்டி எடுத்துக் கொடுக்கும் சித்து விளையாட்டு போல் நடத்துகிறார். அந்த அதிசயமோ என்ற இடத்தில், திருமண பலகாரங்கள் செய்கையில் இத்தனை சுற்று முறுக்கு என்பார்களே, அப்படி அத்தனை வேகச் சுற்று திருத்தமான சங்கதிகள் போட்டு ஒரு குறு ஆலாபனையும் சேர்த்து வழங்கி இருப்பார்.
‘சந்தித்ததோ பார்வைகள் …’ என்று அத்தனை தாபத்தோடு டி எம் எஸ் குரலெடுத்து, ‘தித்தித்ததோ நினைவுகள்‘ என்று அதை இன்னும் மோகமயப்படுத்தி, ‘மையலைச் சொல்லத் தெரியாமலே ஏன் ஏன் இந்தக் கேள்விகள்‘ என்று கொண்டு வந்து நிறைவு செய்யுமிடத்தில் – அதுவும் அந்தத் ‘தெரியாமலே‘ என்ற இடம் இருக்கிறதே…. அய்யோ போட்டிருப்பீர்களே, நன்றி!
சாக்ஸஃபோன் செய்த சாகசத்தை இப்போது டி எம் எஸ் அவர்களோடு சேர்ந்து எடுக்கும் ஹம்மிங்கில் பின், தானே ஒரு காதல் துள்ளலோடு நிறைவு செய்துவிடுகிறார் சுசீலா! இசைக்கருவிகள் முற்றும் போடுவதைக் கூடக் கேட்க வைக்கிறார் மெல்லிசை மன்னர்.
இருங்கள், இன்னுமொரு முக்கிய அழகு இந்தப் பாடலில் சொல்லப்பட வேண்டியது உண்டு. சரணங்களில் உந்தன் வயது, எந்தன் மனது என்று டி எம் எஸ் முடிக்கும் இடங்களிலும், பி சுசீலா மயக்கம், உறக்கம் என்று பி சுசீலா முடிக்கும் இடங்களிலும், அந்த சொற்களை அப்படியே அரவணைத்துக் கொள்ளும் மென்மையான இசையை கவனித்திருப்பீர்களே, அடடா…எத்தனை ரசமான இடம் அது……எம் எஸ் வி அவர்களது இசைக்கோவையில், கவிஞர் வாலியின் அமர்க்களமான காதல் சொற்கள், பாடல் வரிகள்! டி எம் எஸ் – பி சுசீலா குரலினிமை, இரவுகளுக்காகவே, தனிமை ஏக்கங்களைத் தணிப்பதற்காகவே, இணை பறவைகளைப் பிணைப்பதற்காகவே உருவானது போல் வியக்கவைக்கும் பாடல்கள் தான் எத்தனை எத்தனை.
புறச்சூழலின் தட்ப வெப்பத்தைப் போலவே, அகச்சூழலின் வெப்பமாதல் தவிர்க்க, இசை கொண்டு கொஞ்சம் குளிர்வித்துக் கொள்ளலாம் அல்லவா !
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]
முந்தைய கட்டுரைகள் படிக்க:
இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள் – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
இசை மட்டுமல்ல,
தங்களின் எழுத்தும் எங்களை
குளிர்வித்துக் கொண்டே இருக்கிறது